வளர்ந்த குதிரை (4)

This entry is part [part not set] of 39 in the series 20060526_Issue

கிருஷ்ணகுமார் வெங்கட்ராமா


பஜாஜ் சேடக் என்ற ஸ்கூட்டர் கூட நன்றாக உழைக்கும் தான். ஸ்கூட்டர் இருக்க ராணாவின் குதிரை நமக்கெதுக்கு ?. பள்ளங்கள் உள்ள ரோடுகளில், மண்மேடுகளில் பாய “சேடக் ஒன்று போதுமே ! சவாரி வேறு வேண்டாமே !”. பாடியவாறு காடு மேடுகளில் ஏறி இறங்குவதாய் கற்பனை கொள்கிறேன்.

“உங்களுக்காக குதிரை கூட ஓட்டுவேன் ! ஆனால் ஸ்கூட்டர் கிளட்ச் போட்டு கியர் மட்டும் மாற்றச் சொல்லாதீர்கள் !

வண்டி நின்று போய்விடும்.!

வேண்டுமென்றால் ஸ்கூட்டி, கைனடிக் ஹோண்டா போன்றவற்றை “முறுக்கி முறுக்கி” ஓட்டுகின்றேன் !” என்றுத் தமிழ் இளைஞர்கள் சில சமயம் பகருவது ( பேசுவது) ஆச்சரியமாக இருக்கின்றது.

“அமெரிக்காவில் காரெல்லாம் ஆட்டாமாடிக் கியர் தானா ? கிளட்ச் போட்டு கியர் போட மாட்டீர்களா ?” என்று கேலியும் கிண்டலுமாக ஐரோப்பாவிலும், இந்தியாவிலும் கார் ஓட்டுனர்கள் கூறுவதுண்டு.

கிளட்ச் போட்டு, கியர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரை போட்டு பஸ்ஸை ஓட்டினால் தான் பஸ் டிரைவர். இல்லையேல் ஏரோப்ளேன் டிரைவர் !

சாரி ! பைலட் !

காத்திவாரி என்ற சாதியைச் சேர்ந்த குதிரைகள் கம்பீரமானவை. இவையும் மார்வாரி இனத்தைச் சேர்ந்த குதிரைகளும் ராஜபுதன அரசர்களால், மொகலாயச் சக்கரவர்த்திகளால் 12 -16 வது நூற்றாண்டில் பராமரிக்கப்பட்டு போர்களில் ஈடுபடுத்தப்பட்டன. அக்பர் மட்டும் சுமார் 50,000 குதிரைகள் வைத்திருந்தாராம். ரத, கஜ, துரக, பதாதி என்ற நால்வகை சேனைகளில் “துரக” என்ற குதிரைப் படை நமது நாட்டு அரசர்களால் போற்றிப் பாதுகாக்கப்பட்டது.

என்னடா, கார், ஏரோப்ளேன் பற்றிக் கூறி விட்டு குதிரை, மொகலாயன் என்று கதை விடுகின்றானே என்று பார்க்காதீர்கள் ! எல்லாம் இலவசக் கலர் டிவியில் “மொகல் ஏ ஆஜம்” பார்த்து கற்றுக் கொண்டது தான் !

விசுவாசி !

ஒரு பெண்ணைக் கட்டி கொடுக்க அவள் அப்பா 20 குதிரைகள், 60 சவரன் நகை, இருபது வேலைக்காரர்கள், பத்து வேலைக்காரிகள் கொடுப்பது வழக்கமாம். இருபது குதிரையை மேய்க்க இருபது வேலைக்காரர்கள். ஒரு மனைவியைக் கட்டி மேய்க்க (பெண் அறிஞர்கள் மன்னிக்க !) நான் மட்டும் தான் அகப்பட்டேனா ?. செருப்படி படும்படி யோசித்தேன். .
“என் கணவர் போன்ற ஒரு கோவேறு கழுதையை மேய்க்க என்னால் தான் முடியும் என்று கையில் கசையுடன் என் மனைவி என்னருகே நிற்கின்றாள் . . .(ஆண் அறிஞர்கள் மன்னிக்க . . .). “எதுக்கெடுத்தாலும் குப்புற படுத்து தூங்குகின்றார். கேட்டால் இருப்பது போதுமென்கின்றார்! சொங்கிக் குதிரையக் கல்யாணம் பண்ணிக் கொண்டு அனுபவிப்பதை விட்டு ஓடும் குதிரைகள் தேவலையென்று ஓடிவிடலாம் என்று தோன்றுகிறது” அங்கலாய்க்கும் பெண்கள் கண்கள் முன்னால் வருகின்றார்கள்.

“இவரைக் கட்டி மாரடிக்க வேண்டியிருக்கிறது” என்று கவிதை நயம் ததும்பச் சொல்வதும் கற்பனை பண்ண சுவாரசியமாக இருக்கிறது.

மார்வாரிக் குதிரையான நான் வாலாட்டிக் கொண்டு குனிந்து நிற்க வலுமையான என் காதுகளை எஜமான்(னி) திருகினான்(ள்). மார்வாரி காலியாணத்தில் பாருங்கள் ! குதிரைக்கும் மனிதருக்கும் உள்ள உறவு புரியும். முதலாளி, தொழிலாளி உறவைப் பற்றிச் சொன்னேன்.

குதிரையில் வந்தால் ராஜா ! இல்லையேல் கூஜா !

குதிரையில் போவதும், வாளை உருவதும் வெட்டிச் சாய்ப்பதுமே தொழிலாகக் கொண்டிருந்த போர் வீரர்கள் முதலாம் உலகப் போரின் சமயம் பெரிதும் மாறிப் போனார்கள். இதற்காக ஆறு மாதங்கள் நன்றாகத் தீனி போட்டு பயிற்சி கொடுத்து போரில் ஐந்து நிமிடங்களில் இறந்து போகும் வீரர்களை விட நூறு நூறாகக் குண்டுகளைக் கக்கும் பீரங்கிகள் எவ்வளவோ மேல் என்று ராணுவங்களுக்குத் தோன்ற ஆரம்பித்தது. இன்றும் 200 ஆண்டுகள் ஆகியும் கெட்டுப் போகாத பீரங்கிகள் எழும்பூர் மியூசியஹ்ட்திலும், சென்னை ஜார்ஜ் கோட்டையிலும் காணலாம்.

“எங்கள் கட்சியின் “சொற்போர் பீரங்கி” கேட்டதில்லை ?”

“என் மனைவியின் (கணவனின்) பெயர் கூடக் கத்தும் போது செல்லமாகப் “பீரங்கி” எனக் கூறுவர் !”

துப்பாக்கி, பீரங்கி, மெஷின் துப்பாக்கிகள், டாங்கிகள், ஜீப்கள் என்று மாறிக் குதிரையை ஓரமாகப் புல் மேய வைத்தனர். பக்கத்தில் குண்டு மழை பொழிய, குதிரைகள் சாதுவாய் முடங்கிப் போயின. புல் கட்டுக்களைத் திண்பதும், சாணம் கழிப்பதுமே தொழிலாயிருந்தன.

எவ்வளவு காலம் தான் இப்படியே மெஷின் போன்று வாழ்க்கை நடத்துவது ? போர்க் குதிரைகள் போன்று ஓடி களைத்தது போதுமே ! சிவனே ! என்று நமது நாட்டிற்குத் திரும்பிப் போய் புல் மேய்ந்து சாணம் மொழுகி வாழ்ந்தால் போதுமே ! அயல்நாட்டு ஸ்பானிய, தென் அமெரிக்க, ஐரோப்பியக் குதிரைகள் கப்பலிலிருந்து இறங்கி நம் மண்ணில் மீண்டும் காலடி வைத்தன. இங்கு வந்தாலும் தான் தின்ற புற்கள், மேய்ந்த மேடுகளைக் கனவு கண்டு கொண்டே, இறந்து போயின.

போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து !

முதன் முதலாக அப்பா வாங்கிக் கொடுத்த ஆக்ஃபா காமிராவில் கறுப்பு வெள்ளை பிலிமில் சிதம்பரம் கோவிலை படமெடுக்க கற்தூண்களின் மேல் கால் வைத்து ஏறிப் போக கற்கள், குத்தி காலில் ரத்தம் வர படம் எடுத்தேன். எடுத்து பார்த்தால் புகையுடன் கறுபு வெள்ளை ஆவிகளுடன் கோபுரம் பின்புறம் தெரிந்தது. அது “ஆகாயத் தலமாமே !” அதனால் நடராஜர் அப்படி என் போட்டோவில் தோன்றியிருப்பார் என்று சமாதானம் சொல்லிக் கொண்டேன்.

மெக்கானஸ் கோல்டு படத்தில் கிரிகிரி பெக் ( க்ரிகாரி பெக் நமது மொழியில் கிரி கிரி பெக் ! கிர்க் டக்ளஸ் “கிறுக்கு டக்ளஸ்” ஆவதும் விந்தையே !), குதிரைகளுடன் பிரமாண்டமான தேவி தியேட்டர் ஸ்கிரீனில் பாய்ந்து போக, குதிரைகள் போகும் பாதைகளின் கற்கள் நம்மீது தெறிப்பதைப் போன்று காமிராக்கள் மிரட்டின.

நாம எப்போ இப்படி படம் எடுக்கப் போறோம் ?. பார்த்தார் காமிரா மேதை கர்ணன், இடுப்பில் காமிராக்கள் கட்டிக் கொண்டு குதிரைகளில் ஸ்டண்ட் ஆட்கள் (குளோசப்பில் ஜெய்சங்கர்) தொங்கக் குதிரைகளில் படமெடுத்து மக்களைத் திகைக்க வைத்தார். அவர் முயற்சியால் மற்றவர்களுக்கும் சாதிக்கணும் என்ற வெறி வந்து ஸ்டண்ட துறை மேலும் முன்னேறியது. காமிராத் துறையும் மேலும் முன்னேறியது.

ஓடணுமப்பா ! குதிரை போன்று !

பைத்தியம் பிடிக்கின்ற மாதிரி அயராது உழைக்க வேண்டும் ! உயர்ந்த இடத்திலிருக்கலாம். ரஜினியைப் போன்று ! விஜயகாந்தைப் போன்று !

எண்பது வயதிலும் உழைத்த மொரார்ஜி தேசாய், ராஜாஜி, பெரியார், இப்போது கலைஞர் இவர்களை நினைத்துப் பாருங்கள், தாமாகவே அனைவரும் இளைஞர்களாகி விடுவோம்.!

வாழும்போது ஒன்றும் கிடைக்கவில்லையென்றாலும், கல்லிலே சிலை வடிக்கலாம். அல்லது சிறைச் சாலையிலே கல் உடைக்கலாம். இதிலே கல்லிலே சிலை வைத்தவனை எவ்வளவோ மக்கள் நினைவு கூர்ந்து பாராட்டுகிறார்கள்.

“கல்லிலே சிலை வண்ணம் கண்டார்”, என்று கவிஞர்கள் பாடும் மகாபலிபுரத்திலும், மற்றும் பல கோவில்களிலலும் குதிரைகளை வனப்பாகச் செதுக்கியிருக்கின்றோம். தத்ரூபமாக கல்லிலே வடிக்கப்பட்டிருக்கும் குதிரைச்சிலைகளில், தொங்கும் மயிர்க்குஞ்சல்களும், அதன் மேலே வீற்றிருக்கும், அரசர்களும், கடவுள்களும் சரியான அளவில் இன்ச் பிசகாமல் வடிக்கப்பட்டிருக்கும் நேர்த்தி அறிவியலில், கலையில் நாம் தொட்டிருக்கும் எல்லைக் கோடுகள் ஏராளம். கலைக் குதிரைகளில் நாம் போன தூரம் மற்ற நாடுகள் அவ்வளவாகப் போனதில்லை.

அதைப் பாருடா, ஆண் குதிரை, பெண் குதிரையென்று சிற்பங்களில் துல்லியமாகத் தெரிகின்றது ! எவ்வளவு உன்னிப்பு பார்வை நம் முன்னோர்களுக்கு !

ஸ்டாலியன் எனப்படும் ஆண்குதிரைகளுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட மேர்களுடன் (பெண் குதிரைகளுடன்) தொடர்பு வைத்துக் கொள்ளப் பிடிக்குமாம்.

மேய வேண்டியது. பிறகு குதிரைக் குட்டிகளைப் பெற்றுத் தள்ளுவது, என்று ஸ்டாலியன்களுக்கு கொண்டாட்டம் தான். ரேஸ் குதிரைகள் போன்று பெண்களைப் பெற்று வைத்திருக்கிறான்யா ! என்று சிலரை நாம் சிலாகிக்கிறோம். அவ்வளவு வனப்பாகவும், வாளிப்பாகவும், உயரமாக, திடமாக, இருப்பதை இவ்வாறு போற்றி வருகின்றோம். இப்பெண் குதிரைகளை அருகில் வைத்துக் கொண்டு அவர்களுக்கு கையில் இரு “கூலிங் கிளாஸ்” கொடுத்து விட்டு கிண்டியில், ஊட்டியில் என்று சுற்ற என்னைப் போன்ற ஸ்டாலியன்கள் “ரெடி !”.

“கமான் ! கமான் !” என்று ரேஸின் போது கத்துவதைப் பார்த்திருக்கிறீர்கள். கவுண்டரில் பணம் கட்டிய நம்பர் குதிரை அதன் மீது அமர்ந்திருக்கும் ஜாக்கியின் தூண்டுதலோடு விரைவாக விரையும். வெற்றி பெறும் கோட்டினைத் தொட பிரம்மப் பிரயத்தனம் செய்யும்.

நாம் பந்தயம் கட்டிய குதிரைகள் தொடர்ந்து வெற்றி பெற்றால் “ஜாக்பாட்” தான். குதிரைகளின் மீது பந்தயம் கட்டி பணம் தோற்று விட்டால், அருகே இருக்கும் பெண் குதிரைகள் அம்பேல் !

“நாக் அவுட் !”.

குதிரைகள் போன்றே நம் விளையாட்டு வீரர்கள். டோனி மீது செஞ்சுரி அடிப்பானென்று பெட் கட்டுவோம். அடுத்த நாள் முட்டையடித்து நம்மீது கரி பூசுவார். வளர்ந்த குதிரை, தேர்ந்த குதிரை என்போம் ! சட்டென்று யானை படுத்து குதிரை மட்டம் ஆகிவிடும் ! மன்னிக்கவும் ! குதிரை படுத்து கழுதையாகிவிடும்.

சாட்டை கையில் கொண்டு . . . ஓடுது பாரு ! நிக்குது பாரு ! இப்படி அப்படி பார்க்குது பாரு ! என்று குதிரை வண்டிக்காரன் மாதிரி நாமக் கத்தினாலும் ஓடாத குதிரைகள் உண்டு. (நம் பிள்ளைகள் போன்று).

எவ்வளவு காட்டுக் கத்து கத்தினாலும், முன்னேற, ஓடச் செல்லாமல் புற்களைத் தின்றுவிட்டு சாணம் போடும் குதிரைகளுக்குப் பதில் எனக்குப் பிடித்தவை மோட்டார் பைக் தான். சொற்படி வளைந்து கொடுக்கும் மோட்டார் பைக் வாங்கி ஓட்டினால் நாம் சொல்வதைக் கேட்டு சான்றோர் சென்ற இடமெல்லாம் சிறப்பினைக் கொடுக்கும்.

ஐம்பது குதிரைச் சக்தி என்று எனக்கு விற்கப்பட்ட கார் பாதியிலேயே பல்லிளந்து படுத்துப் போக டையர் வண்டி பூட்டிய மாட்டு வண்டி அந்தக் காரினை இழுத்துப் போக நேர்ந்தது. மூக்கு நீட்டியாக இருந்த அந்தக் காரை கடைசியில் மாட்டு விலை, ஆட்டு விலைக்கு விற்க நேரிட்டது. யானை விலை, குதிரை விலைக்கு வாங்கிய காருக்கு நேர்ந்த இந்த வளர்ச்சி மனிதர்களுக்கும் ஏற்படலாம்.

இம்மாதிரி தான் ஆப்ரிக்காவிலிருந்து வாங்கப்பட்ட மனிதர்களுக்கும் பற்கள் பார்க்கப்பட்டு யானை விலை, குதிரை விலை, மாட்டு விலை, ஆட்டு விலை நிர்ணயிக்கப்பட்டது. மனித நேயம் மிக்க அமெரிக்கா ( சிரிக்காதீர்கள் ! நான் தமிழ் அமெரிக்கனாகிவிட்டதால், நாங்கள் “மனித நேயம் மிக்கவர்கள்” தான் ! உலகில் யாரையும் “அடிமை” கொள்ளாதவர்கள் !).

குடிக்க தனி “ஃபவுண்டன்” !

கார்கள் பவனி வர ரோடுகள் போடப்பட்டன.

ஆனால் இடப்புறம் வெள்ளைக் குதிரைகளும், வலப் புறம் கறுப்புப் புரவிகளும், சாம்பல் புரவிகளும், மாநிறக் குதிரைகளும் நடை பயிலாயின.

சில வெள்ளைப் புரவிகள் இரண்டறக் கலக்கஆசைப்பட, மற்றும் சில வெள்ளைப் புரவிகள் முடியாது என்று வாளெடுக்க, புரவிகள் ஒன்றோடொன்று கனைத்து, கறுப்பு புரவிகள் பானெட் வைத்த துப்பாக்கிகளைத் தூக்க நாடே இரண்டாகச் சின்னா பின்னமாக ஆனது. செருப்புத் தொழிலாளியான ஆபிரகாம் லிங்கன் என்றக் குதிரை வந்து மெல்ல வளர்ந்து மேலும் வளர்ச்சிக்கு அனைத்துக் குதிரைகளும் சேர்ந்து ஓட வேண்டுமென்று வழிமுறைகள் கொண்டு வர மெதுவாக அனைத்துக் குதிரைகளும் ஒன்று சேர ஆரம்பித்தன. நூறு ஆண்டுகளாகியும், மெதுவாகவேச் சற்று முரண்டு பிடித்தாலும் பிடித்தும் பிடிக்காமலும் சேர ஆரம்பித்தன.

சிலவகை ரேஸ் குதிரைகள் தன்மீது மெலிதான ஆளைச் சுமந்து வேகமாக ஓடி ரேஸின் வெற்றிக் கோப்பையினைப் பத்து தடவை வாங்கிக் கொடுக்கும். ஒரே தடவை தோற்றதற்காக எஜமான் கையினால் சுடப்பட்டு இறக்கும். இன்றும் குதிரைகள் போட்டிகளில் கலந்து கொள்கின்றன. தங்கப் பதக்கங்கள் வாங்க ஒலிம்பிக்ஸில் ஒய்யார நடை நடந்து, தாண்டிக் குதித்து, எஜமானைப் புரிந்து கொண்டு, தனக்குப் பிடித்த மனிதர்கள் அருகே நின்றால் கனைத்துக் கொண்டு வலம் வருகின்றன. அலங்கார வண்டிகளிலே, ராணுவ மரியாதைகளில், சவ ஊர்வலங்களில், பெருமாள் பவனி வரும் ஊர்வலங்களில் அலங்கரிக்கப்பட்டு வருகின்றன.

மெதுவாகப் போகும் சில குதிரைகள் ஆயிரம் கிலோ கூட இழுத்துச் செல்லும்.
மதுரையில் செளராஷ்டிர வீட்டுப் பெண்கள் (சேட்டுப் பெண்கள் என்றும் கூறுவர்) மூவரை இட்டுச் செல்லும் ஒற்றை வண்டிக் குதிரையினை நான் பார்த்திருக்கின்றேன். ஒவ்வொருவரும் 333 1/3 கிலோ வெயிட் என்று கூறினால் அது மிகையல்ல.

ஒரு குதிரைச் சக்தி என்பது 33000 பவுண்டுகளை 1 அடிக்கு 1 நிமிடம் இழுத்துச் செல்லும் சக்தியாகும். ஜேம்ஸ் வாட் ( 60 வாட் பல்பில் “வாட்” என்பது இவரே தான்!) தோராயமாக சொன்ன கணக்கு தான் இது. இதை வைத்துக் கொண்டு என் கார் 50 குதிரைச் சக்தி கொண்டது என்று கார் தயாரிப்பாளர்கள் விற்க ஆரம்பித்தனர்.

அப்படி வாங்கிய “செவர்லேட்” காரில் சென்னையில் தாமஸ் மன்ரோவின் குதிரைச் சிலை அருகே செல்ல ஆரம்பித்தேன்.

“ஏதோ வெள்ளைக் காரராமே ! அவர் எதுக்கு இந்த வேகாத வெயிலில் நிற்கின்றாரோ தெரியவில்லை ! என்ன வெயில் ! என்ன வெயில் ! காரின் ஏசியை அதிகம் படுத்தினேன் !”

“கொஞ்சம் வெளியே இருந்தாலும் வியர்க்குதுப்பா ! ஏஸி போடுங்கள் !”

“மதியம் 1 மணிக்கு ! பவர் கட் ! ஏஸீ இல்லையா ! வியர்க்குது !”

“சரி ! மெரினாவிற்குப் போனேன். ரோடு போட்டுக் கொண்டிருந்தார்கள் !”

“எப்படி தான் இந்த வேகாத ரோடில் “தார் ரோடு” போடுகின்றார்களோ !”

“அப்ப தான் சாயங்காலம் ஜாலியாக நம்ம காரில் இரு ரவுண்டு வரலாம் !”

தாங்கும் சிலையாக மவுண்ட் ரோடில் குதிரைகள் நிற்க, “மொழுக்குச் சாலைகள்” கம்பீரமாக நாடு முழுவதும் பரவ ஆரம்பிக்க ஆட்டோக்களும், கார்களும், வேன் களும் அக்கம் பக்கத்தில் பவனி வர ஆரம்பித்தன.

இதற்கு மத்தியில் ராஜாவின் வண்டியைப் போன்று அலங்கரித்த விக்டோரியா காலத்து வண்டியை இழுத்த வண்ணம் குதிரைகள் ஓட ஆரம்பித்தன.

“இங்கேயிருந்து கண்ணகி சிலை போகணும் ! பீடத்தில் இடிக்காமல் போகணும் ! எவ்வளவு ?”

“ஐம்பது ரூபாய்!”

“யானை விலை ! குதிரை விலையா இருக்கே ?”

“விலைவாசி ஏறிக்கிண்ணு வருது சார் ! நாங்க வளரணும் குதிரைகள் அப்ப்றம் பிள்ளை குட்டி வளரணும்மில்ல ?”

ஏறி உட்கார, கடிவாளத்தைப் பற்றி இடுப்பில் உதை விட

ஓட ஆரம்பித்தேன் !

(இதற்கு மேல் ஓட முடியாமல் வாயில் நுரை தள்ளுவதால், இத்துடன் நிற்கிறேன் . . . மூச்சு வாங்கிக் கொள்ளுங்கள் !)

kkvshyam@yahoo.com
Reference:
Marwari Horse. Retrieved from “http://en.wikipedia.org/wiki/Marwari_horse” on May 15, 2006.
Chetak Horse. Retrieved on May 15, 2006 http://en.wikipedia.org/wiki/Chetak

Series Navigation

கிருஷ்ணகுமார் வெங்கட்ராமா

கிருஷ்ணகுமார் வெங்கட்ராமா