வளரும் பயிர்…

This entry is part [part not set] of 40 in the series 20110206_Issue

ஸ்ரீஜா வெங்கடேஷ்



மனமும் உடலும் பதறியது உஷாவுக்கு. அவள் அருமை மகன் , ஒரே மகன் திருடி விட்டானாம். சற்று முன் தான் அவள் செல்போனில் தகவல் வந்தது. வந்த தகவல் உண்மையா இல்லை தான் காணும் ஒரு கெட்ட கனவா என்று புரியவில்லை அவளுக்கு. திருடி விட்டானா ? என் மகன் நிதீஷா? ஏன் திருட வேண்டும்? நிச்சயமாக அது பொய்த் தகவலாகத்தான் இருக்க வேண்டும் . யாரோ அவளுக்கு வேண்டாதவர்கள் தான் இப்படி ஒரு கொடூர விளையாட்டு விளையாடுகிறார்கள்.மனம் பலவாறு புலம்பியது. வந்த செய்தி பொய்யில்லை , கனவும் இல்லை என்பதற்கு ஆதாரமாக அவள் கணவனிடமிருந்து போன் வந்தது. ” நீ சீக்கிரம் புறப்பட்டு வா! அவங்க ப்ரின்ஸ்பல் ஸ்கூலுக்குக் கூப்பிட்டு இருக்காங்க. நான் அவன் ஸ்கூல்ல வெயிட் பண்றேன்” என்று கூறி போனைத் துண்டித்தான்.அதுவரை செய்வதறியாது உட்கார்ந்திருந்தவள் மளமளவென்று கிளம்பினாள். என்ன காரணம் சொல்லி மேனேஜரிடம் பெர்மிஷன் கேட்டாள் , எப்படி ஆட்டோ பிடித்தாள் என்பதெல்லாம் அவளுக்கே தெரியாது.மனசு மீண்டும் மீண்டும் நிதீஷ் திருடிட்டான் , நிதீஷ் திருடிட்டான் என்பதிலேயே சுற்றி சுற்றி வந்தது. ஏன் திருட வேண்டும்? அப்படி என்ன ஒன்பதாம் வகுப்புப் படிக்கும் பையனுக்கு பணத்தேவை இருக்க முடியும்?

உஷா அவளது செல்போனில் கேட்ட விஷயங்களை நினைவு கூர முயன்றாள். என்ன சொன்னார்கள்? நிதீஷுடைய ஸ்கூலிலிருந்து தான் யாரோ பேசினார்கள். ” உங்க பையன் நிதீஷ் ஸ்கூலுக்குப் பக்கத்துல இருக்கற ஒரு சின்ன அம்மன் கோயில்ல இருந்து அம்மன் தாலியத் திருடிட்டான்னு சொல்லி போலீஸ் அரெஸ்ட் பண்ணிட்டாங்க. அவன் எங்க ஸ்கூல் பையன்றதால் போலீஸ் எங்களுக்கு போன் பண்ணினாங்க எங்க மேடம் போய் அவங்க எல்லாரையும் அழைச்சுக்கிட்டு வந்துட்டாங்க. இப்ப நிதீஷும் அவன் ஃப்ரெண்ஸும் ஸ்கூல்லதான் இருக்காங்க. நீங்க கொஞ்சம் வரீங்களா? மேடம் உங்கட்ட பேசணும்னு விரும்பறாங்க” என்று ஓரே மூச்சில் பேசி விட்டு ரிசீவர் வைத்து விட்டார்கள்.

நிதீஷா திருடிவிட்டானா? கோயிலிலா? அதுவும் அம்மன் தாலியையா? நெஞ்சடைத்து கண்களில் இருந்து நீர் வழிந்தபடி இருந்தது. எல்லா தெய்வங்களையும் வேண்டிக்கொண்டாள். ” தாயே! கருமாரி! இது எல்லாம் பொய்யாப் போகட்டும் உனக்கு பொங்கல் வெக்கறேன் தாயே!” மனம் பாட்டுக்கு பிரார்த்தனைகளிலும் , வேண்டுதல்களிலும் ஈடுபட்டிருந்தாலும் இன்னொரு மனம் தன் போக்கில் கழிவிரக்கப் பட்டுக் கொண்டிருந்தது. “என்ன குறை வைத்தோம் அவனுக்கு? அவன் கேட்டு எந்தப் பொருளாவது வாங்கித் தராமல் இருந்ததுண்டா? மிக நன்றாகப் படிக்கும் பையனில்லை என்றாலும் சுமாராகப் படிப்பதே போதும் என்று அவனை படிப்பு விஷயமாகக் கூடத் திட்டியதில்லையே”. இரண்டு பேரும் வேலைக்குப் போவதால் வசதிக்குக் குறைவில்லை. சினிமா , டிராமா என்று அவன் எது கேட்டாலும் கிடைத்து விடும்.பிறகு இந்த திருட்டு எண்ணம் எப்படி அவனுக்குள் ஏற்பட்டது? “எல்லாம் அவனது நண்பர்கள் சொல்லிக் கொடுத்து தான் செய்திருப்பான். அவர்கள் மிரட்டியிருப்பார்கள். இல்லையென்றால் என் மகனுக்கு இது போன்ற எண்ணம் வருமா?” அவள் தாய் மனம் தன் மகனைக் குற்றத்திலிருந்து விலக்கிப் பார்க்க விரும்பியது.

உஷா , நிதீஷ் ஸ்கூலுக்குப் பக்கத்திலிருக்கும் அம்மன் கோயிலைப் பார்த்திருக்கிறாள். நடை பாதை ஓரமாக அமைந்த சிறு கோயில். ஒரே ஒரு ஆள் தான் உள்ளே நிற்க முடியும். சிலையும் சிறியது தான். பக்கத்திலேயே ஒரு பெண்மணி பூக்கட்டியபடி உட்கார்ந்திருப்பாள். அம்மன் சக்தி வாய்ந்த தெய்வம் என்று அந்த வட்டாரத்தில் இருக்கும் கீழ்த்தட்டு மக்கள் தாலி பாக்கியம் நிலைக்க வேண்டிக்கொண்டு அரை கிராம் முதல் ஒரு கிராம் வரை தாலி செய்து காணிக்கை போடுவார்கள். “அந்தத் தாலிகளில் ஒன்றையா நிதீஷ் திருடி விட்டான்.” மனம் ஏற்க மறுத்தது. ஆட்டோ வெகு நேரம் போவது போல்த் தோன்றியது உஷாவுக்கு. “பிரின்ஸ்பல் கூப்பிட்டிருக்காங்களே ஒருவேளை T.C. குடுத்துடுவாங்களோ? ஐயோ! அப்படீன்னா நிதீஷோட எதிர்காலம் என்னாகும்?நின்றிருந்த கண்ணீர் மீண்டும் முகத்தை நனைத்து. உலகத்தின் மேலே காரணமில்லாமல் கோபம் வந்தது. எல்லோரும் சந்தோஷமாக இருக்கத் தனக்கு மட்டும் ஏன் இப்படிக் கஷ்டங்கள் வருகிறது என்று தன்னிரக்கத்தில் குறுகிப் போனாள்.

உஷாவின் கணவர் பள்ளி வாசலிலேயே நின்றிருந்தார். ஆட்டோவைப் பார்த்து விட்டு ஓடிவந்து பணம் கொடுத்து ஆட்டோவை அனுப்பினார். சுற்றுமுற்றும் பார்த்தாள் உஷா. இன்னும் ஒரு சில பெற்றோர் நின்று கொண்டிருந்தனர். உஷாவின் கணவரின் முகத்தில் ஈயாடவில்லை. முகம் மிகவும் இறுக்கமாக இருந்தது. அவளுக்கு அதைப் பார்க்கவே பயமாக இருந்தது. வீட்டில் என்ன பூகம்பம் வெடிக்கப் போகிறதோ? என நினைத்தாள்.எதை நினைத்துக் கவலைப்படுவது? மகன் திருடிவிட்டானேயென்றா? அவன் எதிர்காலத்தை நினைத்தா? இல்லை அவன் செய்த தப்புக்காக அவனை அவன் அப்பா அடித்தே கொன்று விடாமல் இருக்க வேண்டுமே என்றா? ஒருத்தி எத்தனை கவலைகள் தான் பட முடியும்?

அவர்களை அழைப்பதற்கு கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் ஆகிவிட்டது. அது வரை இருவரும் வாய் திறந்து ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. நிதீஷையும் எங்கே வைத்திருக்கிறார்கள் எனத் தெரியவில்லை.உலகத்தின் மீதே வெறுப்பாக வந்தது உஷாவுக்கு. எந்தக் கடவுளாவது மந்திரக் கோலைச் சுழற்றி இந்த நாளை மாற்றி அமைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? ஹூம்! கண்ணீர் வராமல் இருக்க உஷா அரும்பாடு பட வேண்டியதாயிற்று. ஒரு வழியாக அவர்களை அழைத்த போது , பிரின்ஸ்பல் என்ன சொன்னாலும் சரி அவர்கள் காலில் கையில் விழுந்தாவது , இல்லை கேட்ட பணத்தைக் கொடுத்தாவது இதே ஸ்கூலில் இந்த வருடத்தை மட்டுமாவது முடிக்க அனுமதி வாங்கி விட வேண்டும் என்ற உறுதியோடு உள்ளே நுழைந்தாள் உஷா.

பிரின்ஸ்பல் வயதான பெண்மணி. இவர்கள் எதிர்பார்த்தது போலக் கோபமாக இல்லாமல் சாந்தமாகவும் அன்பாகவும் இவர்களை வரவேற்று அமரச் சொன்னார். “நீங்க தான் நிதீஷோட பேரண்ஸா?” என்றார். தலையசைத்து ஆமென்றனர். “சாதாரணமா இது வரை நான் கவனிச்சது வரைக்கும் அவன் நல்ல பையனாத்தான் இருந்திருக்கான்…” அவர்களை முடிக்க விடாமல் உஷா குறுக்கிட்டாள் . “ஆமா! மேடம் ! அவன் ரொம்ப நல்ல பையன் , யாரோ வேண்டாதவங்க பேச்சைக் கேட்டு அவன் இப்படி பண்ணிட்டான். மொதல்ல அவன் அப்படிப் பண்ணினான்னே எனக்கு சந்தேகமா இருக்கு” என்று முன்னுக்குப் பின் முரணாகப் பேசினாள். பிரின்ஸ்பல் தொடர்ந்தார். ” மொதல்ல நடந்த விஷயத்தை உங்க கிட்ட சொல்லிடறேன் , நிதீஷும் அவனோட மூணு ஃப்ரெண்ஸும் சேந்து ஸ்கூல் பிரேக் டயத்துல பக்கத்துல இருக்கற அம்மன் கோயிலுக்குப் போயிருக்காங்க. அங்க இருந்த பூக்காரம்மா ஏதோ பரீட்சை சமயம் அதான் பசங்க சாமி கும்புட வந்திருக்காங்கன்னு நெனெச்சிருக்காங்க.ஆனா இவங்க அம்மன் சிலை கிட்டப் போனதும் உஷாராகி கவனிச்சிருக்காங்க. இவங்க தாலிய எடுக்கறதப் பாத்துட்டு கூப்பிட்டு கண்டிச்சிருக்காங்க. பக்கத்துல இருந்த ஆட்டோ காரங்க எல்லாரும் சேர்ந்து இவங்கள போலீஸ்ல ஒப்படச்சுட்டாங்க.அப்புறம் நான் போயி கெஞ்சிக் கூத்தாடி ஸ்கூல் பேர் கெட்டுப் போறது மட்டுமில்லே , பசங்க எதிர்காலமும் பாழாப் போயிடும்னு எடுத்துச் சொல்லி இவங்களக் கூட்டிட்டு வந்தேன்”. என்றார்.

உஷாவும் , அவள் கணவரும் திக் பிரமை பிடித்துக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். முதலில் சுதாரித்துக் கொண்டது அவள் கணவர் தான் ” இவ்ளோ தூரம் நடந்த நெலையில நீங்க என்ன பண்ணப் போறீங்க மேடம்?” என்றார் பயத்துடன். ” இந்தக் கேள்வியத்தான் நான் உங்களைக் கேக்கணும்னு நெனச்சேன். உங்க பையன் பண்ணின வேலைக்கு நீங்க என்ன பண்ணப் போறீங்க? என்றார். உஷாவின் கணவர் “வீட்டுக்குக் கூட்டிட்டுப் போய் அடிக்கற அடியில அந்த மாதிரி பசங்களோட சேர்ரதையே மறந்திடுவான். அந்த அளவுக்கு அடிப்பேன் வேறே என்ன செய்ய முடியும் , பெத்துத் தொலச்சாச்சு வீட்டை விட்டா விரட்ட முடியும்?” என்றார் எரிச்சலுடன். பிரின்ஸ்பல் முகத்தில் சற்று கோபம் தெரிந்தது. “நீங்க ரெண்டு பேருமே மாறி மாறி அடுத்தவங்க மேல பழி போடுறீங்க! மத்த பேரண்ஸும் அப்படித்தான் நெனெப்பாங்க இல்லியா? சரி தப்பு மத்த பையங்க மேலேயேதான்னு ஒரு பேச்சுக்கு வெச்சுப்போம் , அப்படீன்னா அடுத்தவங்க சொன்னா நிதீஷ் எது வேணா செய்வானா? அவனுக்கு நல்லது கெட்டது தெரியாதா? அப்படியா அவனை வளத்துருக்கீங்க?அவன் ஏன் தன் ஃப்ரெண்ஸைத் தடுக்கலே? இல்ல அந்த எடத்த விட்டாவது போயிருக்கலாமில்லே? அப்படிச் செய்யாமே ஏன் அவன் திருட்டுக்கு உடந்தயாயிருந்தான்?” என்று கேட்டார் அவர்களை நோக்கி. அவரின் ஒவ்வொரு கேள்வியிலும் இருந்த உண்மை தீயாகச் சுட்டது.

இவர்களின் முகம் பார்த்து சற்றே கனிவானது பிரின்ஸ்பல் முகம் ” நீங்க பிரச்சனைய ஒப்புக்கொள்ளுங்க அப்பத்தான் அதுக்கு தீர்வு ஈசியா காண முடியும்” என்றார். காலையிலிருந்து முதல் முறையாக உண்மை அப்போது தான் அவர்கள் முகத்தில் அறைந்தது. அவர்கள் மகன் திருடன் தான். ஆனால் ஏன்? அவர்கள் முகத்தில் தெரிந்த கேள்வியைப் பார்த்து விட்டு அவரே தொடர்ந்தார் ” நிதீஷ் ஏன் திருடினான்னு உங்களுக்குத் தெரியுமா? ” சத்தியமாக இவர்களால் என்ன யோசித்தாலும் இந்தக் கேள்விக்கு மாத்திரம் விடை கண்டுபிடிக்க முடியாது. ” ஸ்கூல் விட்டதும் பக்கத்துல இருக்கற கடையில வீடியோ கேம்ஸ் ஆட பணம் வேணும், வீட்டுல கேட்டா குடுக்க மாட்டாங்க அதனால தான் இப்படி செஞ்சோம்னு நிதீஷ் சொல்றான்.” அவரின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் சாட்டையாக மாறி ரத்தம் வர வர அவர்களை அடித்துக் கொண்டிருந்தது. ” மேடம் ! அவனுக்கு வீட்டுலேயே எவ்வளவோ வீடியோ கேம்ஸ் வாங்கிக் குடுத்திருக்கோம். அதுவும் தவிர அவன் என்ன கேட்டாலும் ஒடனே வாங்கிக் கொடுத்திடுவோம் , அப்படியிருக்கறப்போ அவன் எதுக்காகப் போய் திருடணும்? என்றார் உஷாவின் கணவர். “சார் நான் சொல்றேனேன்னு தப்பா நெனைகாதீங்க . தப்பு உங்ககிட்டருந்துதான் ஆரம்பமாயிருக்கு.அவன் கேக்கறான் , உங்க கிட்ட வசதியும் இருக்குன்னு நீங்க பாட்டுக்கு வீடியோ கேம்ஸ் வாங்கிக் குடுத்துடறீங்க , அந்த இளம் மனசு அதுக்கு அடிமையாகிடுது. நண்பர்களோட சேந்து புதுசு புதுசா வெளயாடணும்னு நெனக்கும் போது காசு கொடுக்க மாட்டேங்கறீங்க அதான் அவன் இப்படி பண்ணியிருக்கான்” என்றார் பிரின்ஸ்பல். ” அப்டீன்னா அவன் கேக்கும் போதெல்லாம் பணம் குடுக்கணும்னா சொறீங்க?” என்றால் உஷா கோபமாக.

பிரின்ஸ்பலின் முகம் சிறு கோபத்திற்குப் போய் பிறகு உடனே மாறி யதார்த்தத்துக்கு வந்தது. ” படிச்சு வேலை பாத்து இத்தனை வயசான நீங்களே நான் சொல்றதை தப்பாப் புரிஞ்சிக்கறீங்க. சின்னப் பசங்க நாம சொல்றதை உடனே புரிஞ்சிக்கணும்னு எதிர்பாக்கறது தப்பு” என்றவர் ” அவன் கேட்டப்போ எல்லாம் பணம் குடுக்கணும்னு நான் சொல்லல்லே. அவன் பணமே கேக்காம இருக்கும் படியா வளக்கணும்னு சொல்றேன்”. இவர்கள் புரியாமல் விழிக்கவும் மேலும் தொடர்ந்தார் “நீங்க ரொம்பப் பெருமையா சொன்னீங்க அவன் என்ன கேட்டாலும் ஒடனே வாங்கிக் குடுப்பேன்னு , அதுக்குப் பதிலா அவனுக்கு பணதோட அருமையையும் , உழைப்போட பெருமையையும் நீங்க புரிய வெச்சிருக்கலாம். அவன் கேட்ட தஒயெல்லாம் வாங்கிக் குடுக்கறதுக்குப் பதில் தேவையானதை மட்டும் வாங்கிக் குடுத்திருக்கலாம். வீடியோ கேம்ஸுக்குப் பதிலா நல்ல புத்தகங்களை அவனுக்கு அறிமுகப் படுத்தியிருக்கலாம் இல்லையா? குழந்தைகளை வெறும் களி மண்ணா கடவுள் பெற்றோ கிட்ட ஒப்படைக்கிறார் அதுல அவங்க என்ன வடிவம் ஒண்டு வராங்களோ அதுல தான் இருக்கு அவங்க சாமர்த்தியம்” அவர் சொன்னது மெதுவாக நிதீஷின் பெற்றோர்களுக்கு புரிய ஆரம்பித்தது.

“நடந்து முடிஞ்சு போனதப் பத்தி இனிமே எதுவும் பேச வேண்டாம். நிதீஷ் உங்களைப் பாக்க பயந்துகிட்டு உள்ள உக்காந்திருக்கான், அது அவன் ஒங்கமேல வெச்சிருக்கிற பாசத்தையும் , மரியாதையையும் காட்டுது. இப்ப அவன அடிச்சு , அந்த மரியாதையை தயவு செய்து இழந்துடாதீங்க! வாழ்க்கையில நாம எல்லாருமே சின்னச் சின்னத் தப்பு செஞ்சவங்கதான். நாம செஞ்சதைக் கண்டுக்க மாட்டோம். ஆனா பசங்க செய்யற சின்ன தப்பையும் பூதக்கண்ணாடி வெச்சுப் பாத்து அவங்கள தண்டிப்போம். அந்த பழக்கம் இனிமே வேண்டாம். நடந்த தவற நாங்க வெளியில யாருக்கும் சொல்லலே. அவன் பாட்டுக்கு இந்த ஸ்கூல்ல தொடர்ந்து படிக்கட்டும் நீங்க மட்டும் அவங்கிட்ட நல்லபடியா பேசுங்க.நல்லது கெட்டதப் புரிய வைங்க. தேவைப் பட்டா மாண்வர்களுக்கான கவுன்சிலிங் கூட்டிட்டுப் போங்க. ஆனா தயவு செய்து அவனை அடிக்க மட்டும் செய்யாதீங்க. அப்படி செய்தா தண்டனை மேல உள்ள பயம் தான் இருக்கும். ஒரு திரில்லுக்கு தப்பு செஞ்சு பாத்தாதான் என்ன அப்ப்டீங்கற எண்ணம் தோணும் ஏன்னா இந்த வயசு அப்படி” என்று பேசிக்கொண்டே போன பிரின்ஸ்பலை கை எடுத்துக் கும்பிட்டாள் உஷா.தாங்கள் செய்த தவறை திருத்திக் கொண்டு தன் மகனின் எதிர்கால வாழ்வுக்குஒரு வழிகாட்டியாக விளங்க வேண்டும் , மறு முறை பிரின்ஸ்பலை சந்திக்கும்போது நிதீஷ் பள்ளியின் சிறந்த மாணவன் என்று அவர்களை சொல்ல வைக்க வேண்டும் என்ற உறுதியோடு இருவரும் நிதீஷின் வரவுக்காகக் காத்திருந்தனர்.

Series Navigation