வலங்கை மாலையும் சான்றோர் சமூகச் செப்பேடுகளும் – முன்னுரை

This entry is part [part not set] of 59 in the series 20050318_Issue

எஸ். இராமச்சந்திரன்


தென்னிந்தியச் சமூக வரலாற்று ஆய்வு என்பது மானிடவியல், சமூகவியலாளர்களின் ஏகபோகம் என்ற நிலை மாறிவருகிறது. அண்மைக் காலங்களில் தொல்லியல் – கல்வெட்டியல் ஆய்வாளர்கள், தாங்கள் கள ஆய்வில் கண்டறிந்த தரவுகளைச் சமூக வரலாற்றாய்வுக்குப் பயன்படுத்திப் புதிய விளக்கங்களை அளிக்கத் தொடங்கியுள்ளனர். இத்தகைய ஆய்வுக்கு, நாட்டுப் பாடல்கள் போன்ற வட்டாரத் தரவுகளைத் தீவிரமான, நடுநிலையான ஆய்வுக்கு உட்படுத்திப் பயன்படுத்தும் போக்கும் தொடங்கியுள்ளது. இவ்வாறு, வட்டாரத் தரவுகளைச் சமூக வரலாற்று ஆய்வுக்குப் பயன்படுத்துவது என்பது புகழ் பாடுதலில் சென்று முடிந்துவிடுகிற ஆபத்து உள்ளது என்பது உண்மையே. ஆனால் ஐரோப்பியக் காலனியாதிக்கத்தின்போது அறிமுகப்படுத்தப்பட்ட மானிடவியல் – சமூகவியல் துறைகளுக்கான ஆய்வு அளவுகோல்கள் அல்லது அலகுகள் நம் சமூகத்தைப் பற்றி நாமே மிகவும் தாழ்வாக மதிப்பிடச் செய்து, நம்மைத் தாழ்வு மனப்பான்மைக்கு இட்டுச் சென்றுவிடுகிற ஆபத்தை உள்ளடிக்கித்தானே இருக்கின்றன ? எனவே ஆய்வுக்குரிய அலகுகளைப் பயன்படுத்துகிற விதத்தில்தான், ஆய்வு ஏற்புடையதாக அமைகிறதே தவிர அலகுகளிலும் தரவுகளிலும் பிரச்சினை இல்லை.

தமிழகச் சான்றார் சமூகம் குறித்த வரலாற்று ஆய்வு, 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தொடங்கிற்று. தேசிய விடுதலை இயக்கத்தின் எழுச்சியால் உந்துதல் பெற்ற இந்திய வரலாற்று ஆய்வு போன்றே தமது அடிமைநிலை என்பது பாரம்பரியமாக வந்த இழிவன்று என்று தமக்குத் தாமே நிரூபித்துக் கொள்ளுகிற உத்வேகத்துடன் தமது இன அடையாளங்களை மீட்டெடுக்கிற ஒரு முயற்சியாக இது தொடங்கிற்று. ஆனால், புகழ்பாடுகிற நோக்கில் வெளிக்கொணரப்பட்ட பல தரவுகளை, அவை வெளிக்கொணரப்பட்ட நோக்கத்தின் மேல் உள்ள வெறுப்பினால் அல்லது உதாசீனத்தால், தரமான வரலாற்றாய்வை மேற்கொண்ட ஆய்வறிஞர்கள் கூடப் புறக்கணித்துவிட்டனர். இன்றைய நிலையில், எத்தகைய மனச்சாய்வும் இன்றி, அத்தரவுகளை ஆய்வுக்கு உட்படுத்தக்கூடிய சூழல் தோன்றியுள்ளதாக உணர்கிறேன். ‘வலங்கை மாலையும் சான்றோர் சமூகச் செப்பேடுகளும் ‘ என்ற தலைப்பில் அமைந்துள்ள இந்நூல், வட்டார இலக்கியத் தரவுகளையும் கல்வெட்டு – செப்பேட்டு ஆதாரங்களையும் ஆய்வு செய்து எழுதப்பட்டுள்ள நூலாகும். இதுவரை பதிப்பிக்கப்படாத இரண்டு செப்பேடுகள் இந்நூலில் பதிப்பிக்கப்படுகின்றன. நூலின் ஆய்வுப் பொருளோடு தொடர்புடைய மூன்று கட்டுரைகள் பின்னிணைப்பாகத் தரப்பட்டுள்ளன.

டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனார் அறக்கட்டளைச் சார்பில் சொற்பொழிவாற்றுவதற்கு என்னைத் தெரிவுசெய்த உலகத் தமிழாராய்ச்சி நிறுவன அறக்கட்டளைக் குழுவினர்க்கும் இச் சொற்பொழிவு நிகழ்த்துவதற்கு அனுமதி வழங்கிய தொல்லியல் துறைச் சிறப்பு ஆணையர் திரு. தி.ஸ்ரீ.ஸ்ரீதர் இ.ஆ.ப. அவர்களுக்கும், இச் சொற்பொழிவு நூல் வடிவில் வெளிவர உதவிய இவ் அறக்கட்டளைப் பொறுப்பாளரும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநருமாகிய முனைவர் சா. கிருட்டினமூர்த்தி அவர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

( ‘வலங்கை மாலையும் சான்றோர் சமூகச் செப்பேடுகளும் ‘ நூலாசிரியர் எஸ். இராமச்சந்திரன் அந்நூலுக்கு எழுதிய முன்னுரை)

வெளியீடு: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், இரண்டாவது முதன்மைச் சாலை, சி.ஐ.டி. வளாகம், தரமணி, சென்னை – 600113. விலை: ரூ. 70.

நூலாசிரியர் எஸ். இராமச்சந்திரன் பற்றி:

எஸ். இராமச்சந்திரன் தமிழில் முதுகலைப் பட்டமும் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறைக் கல்வெட்டுப் பயிற்சி நிறுவனத்தில் கல்வெட்டியல் – தொல்லியல் முதுகலைப் பட்டயச் சான்றிதழும் பெற்றவர். 1978 முதல் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையில் தரங்கம்பாடி, தஞ்சாவூர், கங்கைகொண்ட சோழபுரம், குற்றாலம், கொற்கை ஆகிய அகழ்வைப்பகங்களின் காப்பாட்சியராகப் பணிபுரிந்து, தற்போது சென்னையில் கல்வெட்டாய்வாளராகப் பணியாற்றி வருகிறார். லக்னோ தேசியப் பண்பாட்டுச் செல்வங்கள் பாதுகாப்பு ஆய்வுக்கூடத்தில் புத்தறிவுப் பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டு அருங்காட்சியக அரும் பொருள்கள் பாதுகாப்பில் பயிற்சியும் பெற்றுள்ளார்.

தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை அகழ்வைப்பகத்தில் காப்பாட்சியராகப் பணிபுரிந்தபோது நூற்றுக்கும் மேற்பட்ட டேனிஷ்-தமிழ் ஆவணங்கள், நூறு வகையான டேனிஷ்-தமிழ்க் காசுகள், கடலில் மூழ்கிய டேனிஷ் கப்பலின் நங்கூரம் முதலிய அரும் பொருள்களை அகழ்வைப்பகத்திற்காகச் சேகரித்தவர். ஐரோப்பியர் கால ஆவணங்களை ஆய்வுக்குக் கையாள்வதில் தேர்ச்சி பெற்றவர். தஞ்சை மராட்டியர் அரண்மனை அகழ்வைப்பக அமைப்புப் பணியிலும் அரும்பொருள் சேகரிப்புப் பணியிலும் முனைப்புடன் ஈடுபட்டவர். தஞ்சை மராட்டியர் கலைப் பாணியிலமைந்த ஓவியங்கள், கும்பகோணத்திலிருந்த சங்கராச்சாரியார் சாட்சிக் கையொப்பமிட்ட டபீர் பண்டிதர் குடும்ப ஓலைச் சுவடிகள் முதலிய அரும்பொருள்களை அரசுக்காகச் சேகரித்தவர். தூத்துக்குடி மாவட்டம் கொற்கையில் அகழ்வைப்பகக் காப்பாட்சியராகப் பணியாற்றியபோது ஐம்பதுக்கும் மேற்பட்ட பெருங்கற்படைக்காலப் பண்பாட்டு இடங்களைக் கண்டறிந்தவர்.

இந்தியக் கல்வெட்டியல் கழகம், இடப்பெயர் ஆய்வுக்கழகம், தென்னிந்திய நாணயவியல் கழகம் ஆகியவற்றின் வாழ்நாள் உறுப்பினர். வரலாற்று ஆய்வாளர் நெல்லை நெடுமாறனுடன் இணைந்தும் தனியாகவும் ஆய்வு மேற்கொண்டு நூற்றுக்கும் மேற்பட்ட கல்வெட்டுகளையும் செப்பேடுகளையும் கண்டுபிடித்து வாசித்து ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார். தொல்லியல் துறை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையம் முதலிய ஆய்வு நிறுவனங்களின் ஆய்விதழ்களில் இவருடைய பல கட்டுரைகள் வெளிவந்துள்ளன. தற்போது முனைவர் சு. இராசகோபால் வழிகாட்டுதலில் ‘வரலாறு, கலை, இலக்கியத்தில் விடங்கர் மரபு ‘ என்ற தலைப்பில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டுள்ளார்.

இவர்தம் நூல்கள்:

1. திருமழபாடி (1978)

2. மாசிமகமும் மங்கல நீர்விழாவும் (1992)

maanilavan@gmail.com

எஸ். இராமச்சந்திரன் படைப்புகள்

நெல்லை நெடுமாறன், எஸ். இராமச்சந்திரன் படைப்புகள்

Series Navigation

எஸ். இராமச்சந்திரன்

எஸ். இராமச்சந்திரன்