வர்ணதேசம்

This entry is part [part not set] of 10 in the series 20000730_Issue



ருத்ரா

1
அன்பே !
இந்த பட்டாம்பூச்சியை
உனக்கு
தூது அனுப்புகின்றேன்.
தூது விட
ரவிவர்மா தூாிகையை
தூசு தட்டி
அன்னம் வரைந்ததில்
அந்த ‘பட்சி ‘ கிடைக்கவில்லை
இந்த பூச்சியே கிடைத்தது.

2

அந்த சிறகுகள்
துடிப்பதைப் பார்.
நம் துடிப்புகளை
மொழிகளாக்கி
சேதி சொல்ல
இதுவே
நம் கம்பியில்லா தந்தி.
தந்தியில்லமல்
நம் காதல் வீணையை
மீட்டலாம் வா!
துடிப்புகளை
துடுப்புகளாக்கி
வானக்கடல் நீந்தும்
இந்த வண்ணத்துப்பூச்சியிடம்
எண்ணத்தை
எழுதிவைப்போம் வா !
இந்த சிறகுகளின்
பிருந்தாவனத்தில்
வர்ணங்களின் சுவாசங்களே
நம் கனவுகளின் சுவாசங்கள்.

3

பட்டாம்பூச்சியே
பத்திரமாக
தூது செல் அவளிடம்.
அந்த அன்னத்தூவிக்கு
அன்னங்கள் கூட அந்நியம் தான்.
அதனால்
அவள் கனவு கலையாமல்
உன் மென்சிறகின்
சாமரம் கொண்டு
பூங்காற்றைத் தூவி விடு.
அதில்
என் காதல்
மகரந்தங்களையும்
விரவி விடு.
அவள் கனவில்
உன் வர்ணங்களைகொண்டு
என் உணர்ச்சியைக்
காட்டிவிடு.

4

மின்னலின் வெள்ளி விழுதுகள்
வானம் இறங்க பார்த்திருப்பாய்.
ஆனால்
கருப்பு மின்னல்
இழைகளாகி இனியதாய்
அருவிகொட்டும்
அற்புத அழகைப்
பருகியிருக்கிறாயா ?
நான் அவள் கூந்தலைத்தான்
குறிப்பிடுகின்றேன்.

5

அலை அலையாய்

அவள் கூந்தல் நெளிவுகளே
குற்றால நீர்வீழ்ச்சியாய்
அவளைக் குளிப்பாட்டும்
விந்தையைக்
கண்டிருக்கிறாயா நீ ?
ஈரக்கூந்தலின்
ஒவ்வொரு நுனியும்
நீர் முத்துக்களில்
உருண்டு திரண்டு உடையும்.
சரம் சரமாய் இறங்கி
‘சரவெடி ‘களாய்
என் நெஞ்சைப் பிளந்து
‘மெளனமாய் ‘ வெடிக்கும்.
உன் பூஞ்சிறகுகளில் கூட
அது எதிரொலித்து
உன்னை ‘பட்டாசு ‘பூச்சியாய்
சிதறடித்திருப்பதை
எப்போதேனும்
உணர்ந்திருக்கிறாய ?

6

ஒரு கோடு போதும்
‘பிக்காஸோவுக்கு ‘
அதை ‘பெண்ணாக்க ‘ !
உன் உயிரோடு
உன் துடிப்போடு
அந்த ‘பிக்காஸோவை ‘
சிறகாக்கிச்
சுமந்துகொண்டிருக்கும்
உனக்குத் தொியாதா
என் காதல்ரோஜாவை
என் கையில் கொண்டுவர ?
தூது போ பூச்சியே !
தூக்கம் தொலைத்த
எனக்கு
அந்த ரோஜா வரும் வரை
அதன் முள்ளே தான்
படுக்கை.

7

திரும்பி வருகையிலே
அவள் கண்களின்
அடி ஆழத்தில்
புதைந்து கிடக்கும்
கனவு ‘க்ராஃபிக்ஸை ‘
உன் சிறகு ப்ளாப்பிகளில்
பதித்து வந்து விடு.
எனக்காக
காற்றில் தந்த
அவள் முத்தங்களை
கவனமாய்
‘டிஜிட்டலில் ‘
ஒற்றியெடுத்து ஓடோடி வா!

8

மகரந்த மகுடம் சூட்டி
வர்ண ‘கவுன் ‘ தாித்து
பூக்களின் பல்கலைக்கழகத்தில்
ஓ ! பட்டாம்பூச்சியே !
உனக்கு
ஒரு பட்டமளிப்பு விழா !
நீ தூதாக பாிமாறிய
எங்கள்
காதல் ‘மின் அஞ்சல் ‘களின்
உன் கட்டுரைத் தொகுதிக்கு
ஒரு ‘டாக்டர் ‘ பட்டம்
காத்துக்கொண்டிருக்கிறது !

9

பிறக்கையிலும்
இறக்கையிலும்
இறக்கையே
உன் பிரபஞ்சம்.
பறந்து பறந்து
ஒரு பிரம்ம சூத்திரம்
புாிந்து கொண்டாய்.
உன் சிறகை
சுவராக்கி
சித்திரம் வரைந்தவன்
சூட்சுமமாய் சொன்னது
காதலெனும்
சுவாில்லாத
ஒரு சித்திரத்தைப்பற்றி தானே!

10

அன்பே !
பூஜ்யத்துக்குள்ளே
ஒரு ராஜ்யம் தான்
காதல்!
நீ யாரோ! நான் யாரோ!
என்று நாமும்
ஒரு பூஜ்யத்தில் தான்
இந்த ராஜ்யத்தைத்
தொடங்கினோம்.
ஒரு நாள்
கண்ணொடு கண் மோதி
பார்வைகளின் பாற்கடல்
கடைந்த பின்னே
‘நான்.. நீ ‘ யின்
நுரைகள் மறைந்து
திரைகள் விலகின.
இந்த பட்டாம்பூச்சியின்
ராஜ்யத்தில்
தினமும் உன் பட்டாபிஷேகம்.
இந்த
கனவுகளின் கும்பமேளாவில்
கால்வைக்க இடமில்லை.
சிறகுகளுக்கே
நுழைய இடமுண்டு.

11

காதல் எனும் தேசத்தில்
வசந்தமென்பது
எப்போதும்
ஒரு திறந்த புத்தகம்.
பேதங்களற்ற அன்பில்
புல்லும் கல்லும்
பூச்சியும் கூட
ஒரு காதலோடு
‘புருஷ சூக்தம் ‘ சொல்லும்.
மனிதர்களையும் தாண்டிய
மானுடம் இது.
மண்ணுக்கும் புாிகின்ற
காசு பணங்களற்ற
‘அர்த்த சாஸ்திரம் ‘.. இது.
கவலைகளின் அாிப்பில்
வாழ்க்கையின் சுவைகள்
நிறமிழந்த போது
நிறம் கூட்டும் தேசம் இது.

12

அன்பே !
இந்த பட்டாம்பூச்சியையே
பட்டம் விடுவோம் வா !
காதல் நினவுகளிலேயே
உண்டு உறங்கிக்
கிடக்கின்றோம்.
கூக்குரல்கள் இல்லாத
கூட்டுப்புழு தேசம் இது.
கூடு பிய்ந்து
அந்த ‘வர்ணச்சூாியன்கள் ‘
விழி திறக்கும் வரை
விழி மூடிக் கிடப்போம் வா !
குதறுகின்ற
‘வர்ணங்களற்ற ‘
வர்ணங்களின் தேசம் இது.
தேசிய கீதம் பாடி
ஒரு கொடியேற்றுவோம் வா!
ஆனால்
அது ஒரு அடிமைத்தனத்துக்கு
ஏங்கும் ‘சுதந்திர கீதம் ‘
உனக்கு நான் அடிமையாய்
எனக்கு நீ அடிமையாய்
பின்னிக்கிடக்கும்
காதலின் கீதம் அது.

Series Navigation