வருக… அடுத்த முதல்வர் டாக்டர் பாரதிராஜா அவர்களே…

This entry is part [part not set] of 35 in the series 20021022_Issue

இளமுருகு


அடுத்த முதல்வர் பதவிக்கு ஒரு பெரிய வரிசை காத்திருக்கிறது. ஜெயலலிதா, கருணாநிதி, ஸ்டாலின், ப.சிதம்பரம், ரஜினி, இளங்கோவன் என்று சாத்தியம் இருக்கிறதோ இல்லையோ வரிசையில் இருப்பவர் பலர். அதில் நான் என் பங்குக்கு பாரதிராஜாவையும் சேர்க்கிறேன். (என்னய்யா.. முதல் படம் வெளிவருவதற்கு முன்னரே கதாநாயகர்கள் ‘அடுத்த முதல்வர் ‘ போஸ்டர் அடிக்கும்போது, ஒரு பழம்பெரும் இயக்குனருக்கு நான் போஸ்டர் அடிக்கக்கூடாதா ?)

பாரதிராஜாவின் முதல்சாதனை ’16 வயதினிலே ‘ படத்தை எடுத்தது. அது முதன் முதலாக நிஜமான ஒரு கிராமத்தை கவித்துவமாகக் காட்டியது. கிராமத்தைப் புரிந்தவர் ஒருவர் முதல்வர் பதவியில் உட்கார்வது எவ்வளவு நல்ல விஷயம்.

இரண்டாவது சாதனை, இன்றைக்கு இருக்கும் பெரும்பாலான நடிகர்களுக்கு, நடிகைகளுக்கு பிள்ளையார் சுழி போட்டுவிட்டது. (கமல், ரஜினி, ராதிகா, நெப்போலியன் உட்பட). ஏராளமான ஹீரோக்களை உருவாக்கி ஏராளமான வருங்கால முதல்வர்களை உருவாக்கித் தந்திருக்கும் ஒரே காரணத்துக்காகவே அவருக்கு முதல்வர் பதவி கொடுக்கலாம்.

மூன்றாவது சாதனை, எல்லாக் கலைஞர்களையும் கூட்டிச் சென்று நெய்வேலியில் போராட்டம் நடத்தியது. ரஜினியைக் கூட்டிக்கொண்டு செல்ல முடியவில்லை என்பதை காரணமாகச் சொல்லாதீர்கள். ரஜினி ‘என் வழி தனிவழி.. ‘ என்று பேசுபவர். இரண்டாவது, காவிரிப் பிரச்னையில் கூட ஜெயலலிதாவுக்கு ஆதரவாகப் பேசிவிடக்கூடாது என்று முடிவு செய்த ப சிதம்பரம், கருணாநிதி வகையறாக்கள் நெய்வேலிக்கு மாற்றாக ரஜினி உண்ணாவிரததத்துக்கு ஆதரவளித்திருக்கிறார்கள். (ஸன் டிவியில் மாலனின் வர்ணனை…ச்சு..ச்சு… அடே அடேங்கப்பா. இன்னொரு எம்ஜியாரை உருவாக்கிவிட்டுவிட்டுத்தான் ஓய்வார்கள் போலிருக்கு)

பாரதிராஜா கேட்டாரே ஒரு கேள்வி… ‘நெய்வேலியில் போராட்டம் நடத்தினால் காவிரி தண்ணீர் வந்துவிடுமா என்று கேட்கிறார்கள். சென்னையில் உண்ணாவிரதம் இருந்தால் காவிரி தண்ணீர் வந்துவிடுமா ? ‘ இந்தக் கேள்விக்காகவே பாரதிராஜாவுக்கு முதல்வர் பதவி கொடுக்கலாம்.

***

பாரதிராஜா பத்தரை மாற்றுத் தங்கம்; அவருக்கு நிச்சயம் முதல்வர் பதவி கொடுக்கவேண்டும் என்று இதற்குள் புரிந்திருக்கும். ஏனென்றால், இதைவிட குறைவான தகுதி இருக்கும் பலர் ஏற்கெனவே முதல்வராக இருந்திருக்கிறார்கள் என்பதை கருத்தில் கொள்ளவேண்டும்.

ஏன் இன்றைக்கு இருக்கும் பல ‘எதிர்கால முதல்வர்கள் ‘ யாருமே சொந்தக் காலில் நின்று ஜெயிக்க இயலாதவர்கள் என்பதையும் பாருங்கள். எம்ஜியார் இல்லையென்றால் ஜெயலலிதா ‘நதியைத் தேடி வந்த கடல் ‘ திரைப்படத்துக்குப் பின், நடிகையைத் தேடி வந்த கடனை கணக்குப் போட்டுக்கொண்டிருப்பார். இன்றைக்கும் கருணாநிதியும், ப.சிதம்பரமும் ரஜினியின் தோளில் சவாரி செய்து முதலமைச்சர் பதவி பிடிக்க திட்டமிடுகின்றார்கள். ஸ்டாலினுக்கும் அதே கதி. அண்ணாதுரையும் காமராஜரும் கிராமம் கிராமமாகச் சென்று பேசி தனக்கும் தன் கொள்கைக்கும் ஓட்டுக்கேட்க வேண்டியதுதானே ? ரஜினியோ என்னையாரும் தொந்தரவு செய்யவில்லை என்றால் நான் யாரையும் தொந்தரவு செய்யமாட்டேன் என்ற அரசியல் கொள்கை உடையவர். பாரதிராஜா அப்படியல்ல. அவர் தன்னை ஒரு அரசியல்வாதியாக எந்தப்படத்திலும் காட்டிக்கொண்டதில்லை. சினிமாக்கவிஞராகத்தான் தன்னைக் காட்டிக்கொண்டிருக்கிறார். தமிழ் மக்களுக்கு ஒரு பிரச்னை என்று வரும்போது அதே கவிஞனின் உணர்ச்சி வேகத்தில் ஒரு போராட்டத்தை முயற்சி செய்திருக்கிறார். இன்றைக்கு ரஜினி எப்படி ஒரு ஸ்டெப்னி போல கருணாநிதியாலும் ப சிதம்பரத்தாலும் பார்க்கப்படுகிறாரோ அது போல, ஜெயலலிதாவும் பாரதிராஜாவை ஒரு ஸ்டெப்னி போலத்தான் உபயோகப்படுத்திக்கொண்டிருக்கிறார்.

ஆனால், இந்த ஸ்டெப்னிகளுக்கும் பதவி ஆசை உண்டு என்று எம்ஜியார் செய்ததிலிருந்தே புரிந்து கொண்டிருக்க வேண்டும்.

ஆக பாரதிராஜா ஜெயலலிதாவுக்கு ஸ்டெப்னியாக இருப்பதைவிட நேரடியாக முதலமைச்சர் பதவிக்கு போட்டி போடுவது பற்றி சிந்திக்க வேண்டும்.

வரவேண்டும் காவிரி, வளரவேண்டும் தமிழ், வாழ்க பாரதிராஜா.

***

நடுநிலையாக கட்டுரை எழுதவில்லை என்றால் திண்ணை ஆசிரியர் குழாம் வெட்டித்தள்ளினாலும் தள்ளிவிடுவார்கள் என்பதால் மீதி கட்டுரை.

***

என்ன பிரச்னை என்றால், நம் நாட்டுக்கு சுதந்திரம் வந்ததே உண்ணாவிரதம் இருந்துதான். சரி. சரி. நெய்வேலி பாணியிலும் போராட்டம் நடந்தது. என் உப்பை நானே எடுக்கிறேன் என்று நடந்த உப்புச் சத்தியாகிரகம், உன்னுடைய மில் துணையை உடுத்தாமல் நான் என்னுடைய ராட்டையிலேயே நெய்து உடுத்துக்கொள்கிறேன் என்று நடந்த போராட்டம், உனக்கு ஒத்துழைத்தால்தானே நீ என்னை ஆள முடியும், நான் ஒத்துழையாமை இயக்கம் செய்கிறேன் என்று நடந்தது எல்லாம் நெய்வேலி போராட்டம் போல என்று சொல்லலாம். அதைவிட முக்கியமான போராட்டம், நேதாஜி பண்ணியது. ஐ.என்.ஏ இல்லையென்றால், பிரிட்டிஷ் ராணுவத்தில் இருக்கும் இந்திய போர்வீரர்கள் எல்லோரும் கலகம் செய்யக்கூடும் என்று எண்ணம் பிரிட்டிஷ் ஆட்சியாளருக்கு வந்திருக்காது. அப்படி வரவில்லை என்றால், நமக்கு சுதந்திரமும் வந்திருக்காது என்று சமீபத்தில் சில வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். ஆக, நெய்வேலி போராட்டம், நம் மாநிலங்கள் ஒன்று கொடுத்து ஒன்றைப் பெற்றுக்கொள்கின்றன என்பதை மக்களுக்கும் ஆட்சியாளர்களுக்கும் உணர்த்துகின்றது.

ஒரு சொட்டுத் தண்ணீர் கூட கொடுக்க மாட்டேன் என்று சொல்லும் கர்னாடகத்தை என்ன செய்ய முடியும் ? நீதி மன்றத் தீர்ப்பை மதிக்க மாட்டேன் என்று பேசும் முதல்வரை நீக்கச் சக்தியற்று இருக்கும் மத்திய அரசை என்ன செய்ய முடியும் ?

நெய்வேலிப் போராட்டத்தில் ஒரு சிக்கல் இருக்கிறது. ஆனால் நல்லவேளை கர்னாடக ஆட்கள் யாரும் அதனைப் பேசவில்லை. அது என்னவென்றால், மத்திய அரசாங்கம் நடத்தும் நெய்வேலி அனல் மின் நிலையத்தில் உற்பத்தியாகும் மின்சாரத்துக்குக் காசு கொடுத்து கர்னாடகம் பெற்றுக்கொள்கிறது. ஆனால், காவிரியில் வரும் தண்ணீருக்கு தமிழகம் காசு கொடுப்பதில்லை, கொடுக்கவும் முடியாது, கொடுத்தும் தீராது. கேட்டாலும் சரியாகாது. இரண்டையும் ஒன்று போலப் பாவித்தால் வரும் பிரச்னை இது.

காவிரி உரிமைப் பிரச்னை. நெய்வேலி பணப்பிரச்னை. எனக்கு நெய்வேலி மின்சாரம் வேண்டாம் என்று சொல்லிவிட்டு கர்னாடகம் இருந்துவிடலாம். ஒன்றும் குடி முழுகிப் போகாது. ஆனால், காவிரி தண்ணீர் இல்லையென்றால் தமிழகமே இல்லை. சரி உங்கள் மின்சாரம் எனக்கு வேண்டாம். ‘என் ‘ தண்ணீரை நீங்கள் கேட்காதீர்கள் என்று கர்னாடகம் சொன்னால் என்ன செய்வது ? ஆக, இது உணர்ச்சிவசப்பட்டு பேசுவதால் நடக்கக்கூடிய விஷயம் அல்ல. நம்மிடம் கர்னாடகத்துக்கு இன்றியமையாதது என்று ஒன்றும் இருப்பதாகத் தெரியவில்லை. (பெங்களூரில் கட்டிடம் கட்டும் பஞ்சம் பிழைக்கப்போகும் தமிழ்நாட்டு விவசாயிகள் தவிர)

காவிரித் தண்ணீர் பஞ்சம் இன்னும் கொஞ்சம் நாளைக்குத்தான். அடுத்த மழை கொட்டும்போது இதனையெல்லாம் பேசுபவர்களும், பேசக்கேட்பவர்களும் மறந்துவிடுவார்கள். இன்றைக்கு கருணாநிதிக்கு பெங்களூரில் சொத்து இருக்கின்றது என்று பேசுபவர்கள் (ஜெயலலிதாவுக்கும் ஹைதராபாத்தில் திராட்சைத் தோட்டங்களுடன் பங்களா இருக்கின்றது என்பது செளகரியமாக மறக்கப்படும் அந்தந்த ஆட்களால்) நாளைக்கு திமுக எம்.எல்.ஏ தொகுதி கேட்டு இதே அதிமுக ஆட்கள் கோபாலபுரம் வாசலில் நின்றாலும் நிற்பார்கள்.

***

ஆகவே அடுத்த போராட்டம் நெய்வேலியில் பண்ணலாமா , சென்னையில் பண்ணலாமா என்று யோசிப்பார்கள் சிலர். இதில் கலந்து கொள்ள டெல்லியிலிருந்து அனுமதி கேட்டு ஒரு கும்பல் ஓடும். சென்னை அம்மாவின் அனுமதி கேட்டு இயக்குனர்களும் நடிகர்களும் ஓடுவார்கள். அம்மா, எந்த வேலை செய்தால் எதிர்காலத்தில் நமக்கு பிரதமர் பதவி கிடைக்கும் என்று கணக்குப் போட்டுக்கொண்டிருப்பார். எந்த போராட்டத்தில் ஜெயலலிதா மூக்கை உடைக்கலாம் என்று கருணாநிதி திட்டம் போடுவார். என் வழி தனி வழி என்று ரஜினி விரலை ஆட்டிக்கொண்டிருப்பார்.

இதற்குள் வான் பொய்யினும் தான் பொய்யாக்காவிரியில் தண்ணீரே வந்தாலும் வந்துவிடும்.

***

ஆக, இந்த அரசியல்வாதிகளாலோ, போராட்டக்காரர்களாலோ ஆகப்போவது ஒன்றுமில்லை.

தமிழ்நாட்டில் மக்கள் குறைவாக இருந்த காலத்தில், பாசன நிலம் குறைவாக இருந்த காலத்தில் ஒரு வேளை காவிரி கனவு மயமாக இருந்திருக்கலாம்.

சுதந்திரத்துக்குப்பின்னர், தமிழகத்தின் மக்கள்தொகை சுமார் 3 மடங்காக ஆகிவிட்டது. 2 கோடி இருந்த மக்கள் தொகை இன்று 6 கோடிக்கும் மேல். (இந்தியாவின் மக்கள்தொகை 30 கோடியாக இருந்தது இன்று 100 கோடிக்கும் மேல்). எல்லோருக்கும் தண்ணீர் கிடைப்பது இனி பிரச்னையாகத்தான் இருக்கும். இதே விஷயம்தான் கர்னாடகத்திலும் நடந்து கொண்டிருக்கிறது. அங்கும் தண்ணீரை நம்பியிருக்கும் இன்றைய மக்கள்தொகை தமிழகத்தின் காவிரி நீரை நம்பியிருக்கும் மக்கள்தொகை அளவு வந்துவிட்டது. பற்றாக்குறை வர வர, பதட்டமும் அதிகரிக்கும். பதட்டம் அதிகரிக்க அதிகரிக்க உணர்ச்சிவேகத்தில் பேசுவதும், உண்மையான போராட்டங்களும் அதிகரிக்கும்.

100 வருடங்களுக்கு முன்னால் காவிரியில் வந்து கொண்டிருந்த தண்ணீரின் அளவை விட இன்று காவிரியில் வரும் தண்ணீரின் அளவு குறைவு. ஆனால், அந்தத் தண்ணீரை நம்பி இருப்பவர்களின் எண்ணிக்கை 4 மடங்காக அதிகரித்துவிட்டிருக்கிறது. காவிரியில் தண்ணீர் வராததால், ஏற்கெனவே, காவிரி கடலில் சேரும் இடங்களுக்குள் கடலின் உப்பு நீர் உள்ளே புகுந்து நிலங்கள் பாழ்பட்டுப் போய்க்கொண்டிருக்கின்றன. நிலத்தடி நீர் தொடர்ந்து அதிக அளவில் உபயோகப்படுத்தப்படுவதால், நிலத்தடி நீரின் அளவு வெகுவேகமாகக் குறைந்து கொண்டே போகிறது. காவிரிஆற்றில் மணல் தொடர்ந்து திருடப்படுவதால், நிலத்தடி நீரை அதிகரிக்கும் வழியின்றி தொடர்ந்து காய்கிறது. ஏரிகள் தூரப்பட்டு, அங்கு அபார்ட்மெண்ட் கட்டும் வேலைகள் பல ஊழல்வாதிகளால் தொடர்ந்து செய்யப்பட்டு வருகிறது. மழை பெய்யும்போது அங்கு தண்ணீர் தேங்கும்போது, பிரச்னையாகி வரப்புகள் உடைக்கப்படுகின்றன. குளங்கள், ஏரிகள், குட்டைகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து கொண்டே போகிறது. இது பற்றிய ஒரு பரந்த விழிப்புணர்வை கொண்டுவர வேண்டிய தமிழகப் பத்திரிக்கைகளோ, அடுத்த எம்ஜியார் யார் என்பதில் ஆர்வமுடன் இருக்கின்றன. இல்லையென்றால் இருக்கவே இருக்கிறது, மும்தாஜின் இடுப்பளவு.

***

இன்றைய முக்கியத்தேவை என்று வரிசை இட்டால்

1) மக்கள்தொகை கட்டுப்பாடு

2) தண்ணீர் சேமிப்பு முறைகளை அதிகரித்தல், அல்லது பரவலாக்குதல்

3) புதிய நீர் உருவாக்கும் முறைகளை கண்டறிதல். உதாரணமாக, கடல் நீரிலிருந்து சூரிய சக்தி மூலம் தண்ணீர் உற்பத்தி செய்து நாடெங்கும் வினியோகம் செய்வது

4) மழை நீர் சேமிப்புக்காக, ஏரிகள், குளங்கள் கட்டுவது. பழைய நீர்நிலைகளை மீட்பது

5) உணவு உற்பத்தி திறனை அதிகரித்து, குறைவான தண்ணீரில் அதிகமான விளைச்சலை கொண்டுவரும் முறைகளை பயன்படுத்துவது.

6) சொட்டு நீர்பாசனம் போன்ற முறைகளை பாலைவன பிரதேசங்களான ராமநாதபுரம் போன்ற இடங்களில் அறிமுகப்படுத்தி அதனை பரவலாக்குவது

சொல்லிக்கொண்டே போகலாம். யார் கவனிக்கிறார்கள். அரசாங்கத்துக்கு நள்ளிரவில் எதிர்க்கட்சியினரை கைது செய்யவும், மக்களுக்கு நெய்வேலி போராட்டம் போன்ற நாடகங்களைப் பார்க்கவுமே நேரம் போதவில்லை.

உண்மையில் நமக்கு வயிற்றுப் பிரச்னை வேறு, நம் தலைமைக்கு ஓட்டுப்போடுவது என்பது வேறு. எம்ஜியாருக்கு ஓட்டுப்போடுவது அவர் அழகாக இருக்கிறார், நன்றாக சினிமாவில் சண்டை போடுகிறார் என்பதற்காக. ஜெயலலிதாவுக்கு ஓட்டுப்போடுவது எம்ஜியாருடன் சேர்ந்து டூயட் ஆடினார் என்பதற்காக. கருணாநிதிக்கு ஓட்டுப்போடுவது அவர் அழகாகப் பேசுகிறார் என்பதற்காக. ரஜினிக்கு ஓட்டுப்போடுவது அவர் ‘சுத்திச் சுத்தி ‘ அடிக்கிறார் என்பதற்காக.

(நம் பிரச்னைக்கு பாவம் இந்த கலைஞர்கள் என்ன செய்வார்கள் ? கர்னாடகாகாரன் தண்ணி குடுக்க மாட்டேங்கிறான். அம்மா என்ன பண்ணும் பாவம் ? தேனெடுத்தவன் புறங்கையை நக்காம இருப்பானா ? பாவம் எம்ஜியாருக்கும் ஜெயலலிதாவுக்கும் நம்ம கஷ்டம் எப்படி புரியும். அதுக்காக அவங்களை எப்படி குத்தம் சொல்றது ? நம்ம விதி இப்படி. என்ன இருந்தாலும் மவராசி எப்படி செவசெவன்னு இருக்கு பாரு. எம்ஜியாரு அப்படி வந்து நின்னார்னா, பாக்கணும். அடேங்கப்பா.. அதுக்கே ஆயிரம் ஓட்டு போடணும். )

ஆகவே, இறுதியாக்கூறிக்கொள்கிறேன். என் எதிரிகளான ரஜினி ரசிகர்களே, இதனைப் புரிந்து கொள்ளுங்கள். பொன்மனச்கம்மல், தங்க மனசுக்காரன், ஏழையிடமும் பங்காளி சண்டை போடும் ஏழைப்பங்காளன், கிராம கவிஞன், சினிமாவின் சிகரம், நடிப்பு சிகரத்திற்கு முதல் மரியாதை அளித்த டைரக்டர் சிகரம், இனிய தமிழ் மக்களுக்கு ’16 வயதினிலே ‘, ‘ புதிய வார்ப்புகள் ‘ அளித்த கலைக் களஞ்சியம் பாரதிராஜாவுக்கு ஓட்டுப்போட்டால் போதும். பாரதிராஜாவின் பிரசினையும் அவரைச் சுற்றியுள்ளவர்கள் பிரசினையும் தீர்ந்துவிடும். உங்கள் பிரச்னைகளை எல்லாம் நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள். நடிகரை நம்பி ஏமாந்தீர்கள். மேடைப்பேச்சை நம்பி ஏமாந்தீர்கள். நடிகையை நம்பி ஏமாந்தீர்கள். நிலச்சுவான்தார்களை நம்பி ஏமாந்தீர்கள். கொஞ்ச நாள் பாரதிராஜா போன்ற டைரக்டரை நம்பி ஏமாறுங்களேன்.

***

வாழ்க ஆயிரம் ஆண்டு முதல்வர் டாக்டர் பாரதிராஜா!!!

Series Navigation