வரவேற்பின்மை
Published October 9, 2008 • By
கோகுலன்
கோகுலன்
நீலக்குறிஞ்சிகள்
பூப்பதற்கென்றான இளவேனிற்காலம்
தோட்ட வாயிலில் காத்திருக்கிறது
மொழிகளற்ற ஊமைக்கனவுகள்
பூக்களில் வழியும் வர்ணங்கள் குழைத்து
தம்மை அலங்காரப்படுத்திக்கொள்கின்றன
புதிதாய் வெளிவந்த வண்ணத்துப்பூச்சிகள்
தம் சிறகுகளின் அடையாளங்கள்
அள்ளிப் போர்த்துகின்றன
பட்டுப்போன மரங்களின் வேர்கள்
இறுக்கங்கள் கலைத்து
ஈரத்தின் உறவுதேடி நீள்கின்றன
தூசுபடிந்த நகரை முழுவதுமாய்க்கழுவி
உலரவைத்திருக்கிறது முதல்மழை
பசுமையின் அடுத்த தலைமுறை
பஞ்சுகள் மேவிய விதைகளில்
நிரப்பப்பட்டு மிதந்துவருகிறது
குளிர்காய்தலின் பொருட்டு
அனைத்தையும் கொளுத்தும்
இக்கூட்டத்தின் முன்னால்
இவ்வசந்தம் அதிகநாள்
உயிரோடிருப்பது சாத்தியக்குறைவே!
கோகுலன்
gokulankannan@gmail.com