வரலாற்றை எழுதுவதை முன்வைத்து

This entry is part [part not set] of 46 in the series 20060217_Issue

கற்பக விநாயகம்


ஒன்றாய் அமர்ந்து சாப்பிடுவதால் சாதி ஒழிந்து விடாது என்று முந்தைய கட்டுரையில் குறிப்பிட்டிருந்தேன். ஆனால் அதனைச் செய்வதற்கே கூட பெரிய பிரச்சினைகளை எல்லாம் சந்திக்க வேண்டி இருந்திருக்கிறது.

தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னர்களின் மோடி ஆவணங்களைத் தேடும்போது ஒரு குறிப்பு கிடைக்கிறது.

இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இச்சம்பவம் மூலம் சைவ மடங்கள் பற்றி அறிய முடிகின்றது.

திருவாவடுதுறை ஆதினத்தில் தினமும் அன்னதானம் அளிக்க தஞ்சை அரசு மானியமாய் நிலங்கள் விட்டிருந்தது.

அங்கு தினமும் மத்தியானவேளையில் பிராமண போஜனம் அளிக்கப்பட்டு வந்துள்ளது. அப்போது மடாதிபதிகளில் ஒருவர் பிராமணர் பந்தியில் தனக்கு பிடித்த சிஷ்யப் பிள்ளை (சைவ மடங்களில் தம்பிரான்களாக சற்சூத்திரரான சைவ வேளாளரே பிறப்பின் அடிப்படையில் வருவர். பின்னர் அவர்களுக்குப் பட்டம் கட்டப்படும்) ஒருவரை உட்கார வைக்க முயன்றார். கலகம் வெடித்திருக்கிறது. பிராமணர்கள் அது முதல் மத்தியானம் சாப்பிட வர மறுத்தனர். இதனால் மனம் வாடிய இளைய சன்னிதானம், ராஜாவுக்குப் பிராது கொடுத்தார். ராஜாவும் பிராமணதோசத்துக்குப் பயந்து வழமைகளை மீறக்கூடாது என்று மடாதிபதியிடம் வேண்டிக் கொண்டதன்பேரில் அவரும் சமபந்தி யோசனையைக் கைவிட்டுப் பிராமணர்களின் வெறுப்பில் இருந்து மீண்டிருக்கிறார்.

இது மாதிரியே 19ம் நூற்றாண்டு முழுக்க சிறியதும் பெரியதுமாய்ப் பல இடங்களில் சமத்துவம் வேண்டி கோவில் நுழைவு நடக்க முயற்சிகள் நடந்திருக்கின்றன.

பெரியாரின் போராட்டங்கள் இம்மரபின் தொடர்ச்சியே.

****

பெரியார் காங்கிரசை விட்டு விலகிய நாளில் இருந்து பதிவாகி உள்ள ஏடுகளின் செய்திகளைத் திரட்டினால், சமத்துவத்திற்கான அவருடைய குரல் எங்கெங்கும் பதிவாகி உள்ளன. 1926 ல் வெளியான குடியரசைப் பார்த்தால், அப்போது ஹோட்டல்களில், ரயில்வேயில் கடைப்பிடிக்கப்பட்டு வந்துள்ள தனித்தனி சாப்பாட்டுக் கூடங்களைப் பெரியார் கண்டித்துப் பேசி எழுதி வந்தமை புலனாகின்றது.

அவருடைய இடைவிடாத முயற்சியின் பலனாய் 1941 மார்ச் 21ம் தேதி ரயில்வே இலாகாவில் ‘பிராமணாள் ‘/ ‘இதராள் ‘ போர்டு சட்டப்படி ஒழிக்கப்பட்டுள்ளது. இதை எந்தவிதத்தில் துவேசமெனச் சொல்வார் ம.ம. ?

150 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் சாப்பாட்டை விற்பது என்பது தமிழ் நாட்டில் நடை முறையில் கிடையாது. முதன் முதலில் சாப்பாட்டை விற்கும் தொழிலை அறிமுகம் செய்தவர், தஞ்சை மன்னருக்கு சமையல் காரராய் இருந்த ஒரு பிராமணரே.

பிராமணர்கள்தான் இத்தொழிலில் முதலில் தைரியமாய் இறங்கினர். ஞானக்கூத்தன் கூட ஒரு பேட்டியில் இதை ‘படிப்பு ஏறாத பிராமணனுக்கு 19ம் நூற்றாண்டில் எதிர்காலம் பெரும் கேள்விக்குள்ளானபோது அவனுக்குக் கை கொடுத்தது இந்தத் தொழில் ‘ என்று பதிவு செய்துள்ளார். (சொன்னதன் கருத்தை எழுதி உள்ளேன். வார்த்தைகள் மாறி இருக்கலாம்)

அவ்வாறு தொழில் நடத்தும்போது ஒரு நடைமுறைச்சிக்கல் வருகிறது. எல்லா வர்ணத்தாரும் சாப்பிட வருகின்றனர். எச்சில் இலையை எடுத்தால் குலதர்மம் கெட்டுவிடுமே எனக்கவலை. சூத்திர வாடிக்கையாளர்களுக்கு இலை பரப்பாமல் வெறும் பெஞ்சிலேயே இட்லி வடை பறிமாறி உள்ளனர். பின்னர் காலப்போக்கில் கண்டுபிடித்த முறைப்படி ‘அவரவர் சாப்பிட்ட எச்சில் இலைகளை அவரவரே எடுப்பது ‘ என்பதன் மூலமாய் ஆச்சாரத்தைக் காப்பாற்றி வந்திருக்கின்றனர். அப்போது பிராமணாள் சாப்பிடுவதை இதராள் பார்ப்பதும் தீட்டு எனும் கருத்து பிராமணாள் மத்தியில் நிலவியதால் ஓட்டல்களில் தனித்தனி சாப்பாடு பறிமாறும் இடங்கள் இருந்தன. (ஆதாரம் – சின்னக்குத்தூசியின் காலச்சுவடு நேர்காணல். அந்நேர்காணலில் ‘ஜஸ்டிஸ் கட்சி ஆட்சிக் காலத்தில் எல்லா சாதியாரும் பள்ளிக்கூடம் வர ஆரம்பித்தனர். ஆசிரியர்களோ பெரும்பாலும் ஆச்சாரப் பிராமணர்கள். மாணவனைக் கையால் அடித்தால் தீட்டாகி விடும் என்ற கவலையினால் பிரம்பை உபயோகிக்க ஆரம்பித்தனர் ‘ என்று அன்றுள்ள தஞ்சைச் சூழலை சின்னக் குத்தூசி விவரித்துள்ளார்.)

இவ்வழக்கங்களை சுய மரியாதை இயக்கம் கடுமையாகக் கண்டித்து வந்திருக்கிறது.

உடனே ஆதிக்க சக்திகள் ‘பாருங்க.. நாயக்கர் துவேசம் கிளப்புறார் ‘ எனப் பிளேட்டைத் திருப்பப் பார்த்தன. அதன் நீட்சிதான் ம.ம. அவதூறைக் கிளப்புவதும்.

****

1930 களில் தென் மாவட்டங்களில் டி வி எஸ் கம்பெனியார் பஸ் போக்குவரத்தை ஆரம்பித்து வெற்றிகரமாய் நடத்தி வந்தனர். அப்போது அப்பேருந்துகளில் பஞ்சமர்கள் சீட்டில் உட்காரக் கூடாது எனும் விதி நடைமுறையில் இருந்தது. (என் தாத்தாவின் வாழ்வில் நடந்த ஒரு சம்பவம். எட்டையபுரம் ஊரில் இருந்து தூத்துக்குடி நோக்கிப் பஸ் கிளம்பியது. சக்கிலியர் சாதியை சேர்ந்த ஒருவர் தாம் பஞ்சமர் அல்ல என்று பொய் சொல்லி சீட்டில் அமர்ந்து இருந்தார். கீழ ஈரால் எனும் ஊரில் பஸ்ஸில் அந்தப்பயணியின் சாதியை அறிந்திருந்த ஒரு மேல் சாதிக்காரர் ஏறிய உடனே பிரச்சினை ஆரம்பமானது. நடத்துநர் அந்தப் பஞ்சம சாதி ஆளை நடுக்காட்டில் கொஞ்சமும் இரக்கமில்லாமல் இறக்கி விட்டு விட பஸ்ஸின் பயணம் தொடர்ந்திருக்கிறது.) இச்சம்பவம் நடந்தபோது தேசிய இயக்கத்தினர் மேடைகளில் சுய ராஜ்ஜியம் கேட்டுக் கொண்டிருந்தனர்.

(தேசியவாதிகள் அப்போது மேடையில் எல்லாம் ‘தென் ஆப்பிரிக்காவிலே வெள்ளைக்காரர்கள் ‘இங்கே நாய்களும் கருப்பர்களும் நுழையக் கூடாது ‘ என்று போர்டு வைத்திருப்பதாய் வெள்ளையரின் நிற வெறியைத் தோலுரிப்பார்கள். ஆனால் உள்ளூரிலே தலித் ஒருவனைப் பொது இடங்களில் நுழையத் தடை விதித்திருப்பார்கள்.)

அப்போதுதான் சவுந்திர பாண்டியன், மதுரை ராமநாதபுரம் ஜில்லா போர்டு சேர்மனாகிறார். இவர் பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்தவர். (இவரின் நினைவாகவே சென்னை தியாகராய நகரில் பாண்டி பஜார் உள்ளது) அவர் ஒரு அரசாணை பிறப்பித்து இந்த அவல நிலையை ஒழித்தார் – இக்கொடுமை நடைமுறைப் படுத்தப்பட்டால் தாம் டி வி எஸ் அய்யங்கார் அன் சன்ஸ்-க்கு வழங்கப்பட்ட பஸ் ரூட்டை ரத்து செய்து விடுவேன் எனும் கண்டிப்புடன்.

பாண்டியனின் செயல், அன்றைக்கு ‘பிராமணத் துவேசம் ‘ என்றே விமர்சிக்கப்பட்டது.

****

தஞ்சாவூர் மகாராஜா 2 லட்சம் ரூபா நன்கொடையுடன் மாணவர்கள் தங்கிப் படிக்கும் பள்ளி ஒன்றை நடத்த அறக்கட்டளை விட்டிருந்தார். தேசியவாதியான எம்.கே.ராமானுஜாச்சாரியார் தஞ்சாவூர் ஜில்லா போர்டு சேர்மனாய் இருந்தபோது, அவ்விடுதியில் நடைமுறையில் பிராமண மாணவர்கள் மட்டுமே சாப்பாட்டுடன் தங்கிப் பயில அனுமதிக்கப்பட்டனர். இதை பி.டி.பன்னீர் செல்வம் (சுய மரியாதை இயக்கக் காரர். பின்னாளில் விமான விபத்தில் மாண்டவர்) மாற்றி, அனைத்துத் தரப்பு மாணவர்களும் ஒன்றாய்ப் பயில வகை செய்தார். இதற்காக பன்னீர் வாங்கிக் கட்டிக்கொண்ட வசவு கொஞ்ச நஞ்சமா ?

2003 ல் கூட காஞ்சி சங்கர மடம் நடத்தும் பல்கலைக்கழக ஆஸ்டலில் பிராமணாளுக்கும், இதராளுக்கும் எனத் தனித்தனி விடுதிகள் இருந்தனவே ?. அதைக் கண்டித்து பொதுவுடமை இயக்கமும் திராவிட இயக்கமும் போராடியது துவேசத்தின்பேரிலா ? சமத்துவத்தின் பேரிலா ?

****

1920, 30களில் ஆச்சாரம் கெட்டு விடாமல் இருக்க காங்கிரசு மாநாடுகளில் தனித் தனி சமையல்களும் தனித்தனி பந்திகளும் நடைமுறையில் இருந்தன. மாயவரம் காங்கிரசு மாநாட்டில் இதில் பிரச்சினை உருவாகி காந்தியின் மேலே கல்லடி விழுந்திருக்கிறது.

ஆனால் பெரியார் நடத்திய அக்காலகட்டத்து சுயமரியாதை மாநாடுகளில் ‘நாடார் சமையல் ‘ உண்டு என்று அறிவித்து (அப்போது நாடார்களை சமூகம் கீழாக நடத்தி வந்தது) அதை அனைத்து மக்களையும் சேர்ந்துண்ணச் செய்தார்.

****

காங்கிரசில் பெரியார் இருந்தபோது நடந்த ‘சேரன்மாதேவி ‘ விசயத்தில் யார் துவேசி என்பதைப் பார்ப்போமே!

வ.வே.சு. அய்யர் நடத்தி வந்த குருகுல ஆசிரமத்தில் பின்னாளில் சென்னை மாகாண முதலமைச்சராகப் பணிபுரிந்த ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாரின் மகனும் படித்து வந்தான். அவன் மூலமாகத்தான் அங்கு நடைபெற்று வந்த அக்கிரமம் வெளி உலகுக்குத்தெரிந்தது. காங்கிரசுக் கட்சியின் பொதுப்பணத்தில் நடத்தப்பட்டு வந்த அவ்வாசிரமத்தில் சாதி பேதம் கடைப்பிடிக்கப்பட்டு பிராமண மாணவர்களுக்குத் தனியாகவும், இதரருக்குத் தனியாகவும் உணவு பரிமாறப்பட்டது. இச்சம்பவத்தைப் பெரியார் கண்டித்தார். இவ்வழக்கம் நிறுத்தப்படாவிட்டால் காங்கிரசு பணம் தராது எனச் சொல்லி விட்டார். அப்போது பெரியார்தான் காங்கிரசின் தமிழ் நாட்டுச் செயலாளர். ஆனால் வ.வே.சு. அய்யர் சாதி பாகுபாட்டைத் தொடர்ந்தார். பெரியாருக்குத் தெரியாமல் காங்கிரசில் இருந்து பணத்தை முறைகேடாக பிராமணத்தலைவர் ஒருவர் அனுப்பி வைத்தார். இதில் பெரியார் துவேசம் காட்டினாரா ? வ.வே.சு. அய்யர் துவேசம் காட்டினாரா ?

****

ஜஸ்டிஸ் கட்சியின் ஆட்சிக்காலத்தில் மலையாளக்குடிவார மசோதா ஒன்றை சி.கிருஷ்ணன் நாயர் எனும் சட்டசபை உறுப்பினர் கொண்டுவர முயன்றார். இதனை ஆதரித்துப் பத்திரிக்கையில் தொடர்ந்து எழுதியவர் பெரியார். இந்த மசோதாவைப் பற்றி அறியும் முன் அக்காலத்திய கேரள நாயர் சமூகத்தின் நிலைமை எவ்வாறு இருந்தது என்பதை நினைத்துப் பார்க்கவேண்டும். அங்குள்ள நம்பூதிரிகளுக்கு வைப்பாடிகளாக நாயர் பெண்கள் இருக்க வேண்டும் எனும் நடைமுறை இருந்து வந்தது. இதனால் அப்பெண்களுக்குப் பிறக்கும் பிள்ளைகளின் அவல நிலை எவ்வாறு இருந்திருக்கும் என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும்.

(ஒரு விசாரணையின் நூற்றாண்டு எனும் தலைப்பில் திண்ணையில் சுகுமாரன் எழுதிய கட்டுரையில் கேரள நம்பூதிரி சமூகம் குறித்து மேலும் பல விசயங்களை அறியலாம். அதில் எம் ஜி ஆரின் அப்பா பற்றிய சுவாரசியமான தகவலும் உள்ளது. http://www.thinnai.com/pl0826052.html)

இந்த வழக்கத்தை ஒழிக்கவே கிருஷ்ணன் நாயர் மலையாளக் குடிவார மசோதாவைக் கொண்டு வந்தார். இச்சட்ட முன்வரைவை எதிர்த்து சட்டசபையில் சிம்மக்குரல் எழுப்பியவர் யார் தெரியுமா ? பின்னாளில் திருவாங்கூருக்குத் திவானான சர் சி.பி.ராமசாமி அய்யர்.

(மலர் மன்னன், இவ்வழக்கம் ஒழிந்ததால் கஷ்டப்பட்ட நாயர் ஸ்திரீகளை எனக்குத் தெரியும் என்று அவ்வழக்கத்தை மீண்டும் நிறுவிட ஒரு கட்டுரை எழுத இந்நேரம் ஆயத்தமாகி இருப்பார்)

****

வைக்கம் சத்தியாக்கிரகம் நடந்து முடிந்த பிறகு பாலக்காடு ஜில்லாவிலுள்ள கல்பாத்தி எனும் ஊரில் கடைகள் உள்ள பொதுச் சாலையில் பஞ்சமர் நுழைய முயலும்போது பிராமணர்களால் கொடூரமாகத் தாக்கப்பட்டனர். அப்போது சென்னை சட்டசபையில் ‘எல்லாப் பொது ரஸ்தாவிலும் எல்லா சாதியினரும் போகலாம் ‘ எனத் தீர்மானம் வரும்போது சர் சிபி ராமசாமி அய்யர் ‘ஏதேனும் வேலை இருந்தால் மட்டும் செல்லலாம் ‘ எனக் குதர்க்கமாய் ஒரு வெட்டுத் தீர்மானம் கொண்டு வந்து அதனை நிறைவேற விடாமல் தடுத்தார்.

அப்போது பஞ்சம சாதியைச் சேர்ந்த சங்கரன் பத்திரப் பதிவு இலாக்காவின் குமாஸ்தாவாக இருந்தார். தாம், பஞ்சமராய் இருப்பதால்தானே இப்படிக் கொடுமை என்று கருதி ஆரிய சமாஜத்திற்கு மாறிவிட்டார். ஆரிய சமாஜி ஆகிய பிறகு கல்பாத்தித் தெருவில் சங்கரன் நடந்தார். பிராமணர்கள் பிராது கொடுக்கவே அது வழக்காகிப் பின் வழக்கு தள்ளுபடியாகித் தீர்ந்தது.

மீண்டும் ஒரு நாள் அரசு வேலை நிமித்தமாய் அவ்வீதியில் அவர் சென்றபோது அவ்வீதி தீட்டாகி விட்டது என்றும் அதை நிவர்த்தி செய்ய சங்கரனிடம் பிராமணர்கள் ரூபாய் 10 ஐ அபராதமாய் வேண்டி பிராமிசரி நோட் எழுதி வாங்கி அவரை விடுவித்தனர்.

இது 1926ல் நடந்திருக்கிறது. கல்பாத்திக்கு கதி மோட்சம் கேட்டு தமிழ் நாட்டில் ஒலித்த குரல் பெரியாருடையது. சிபி ராமசாமியோ குதர்க்கம் பேசிக் கொண்டிருந்தார். யார் துவேசி இதில் ?

****

வணங்கும் தெய்வத்தையே மொழித் துவேசத்தினால் பிரஷ்டம் செய்த வைதீகர்களின் வரலாறு ஒன்று 1926ல் தென்காசியில் பதிவாகி உள்ளது.

அவ்வூரின் சிவன் கோவிலுக்கு நியமனமான அற நிலையத்துறை அதிகாரி ஓர் உத்தரவு போட்டார். அதாவது தினமும் சமஸ்கிருதத்தில் வேத பாராயணம் முடித்த பிறகு தமிழ்த் தேவாரம் ஓதிய பிறகே கோவில் பிரசாதம் வழங்கப்படும் இனி என்பதே அவ்வுத்தரவு.

தென்காசி அந்தணர்கள் கொதித்து எழுந்தனர். எதற்கு ? தமிழில் ஓதிய பிறகு தரப்படும் விபூதி ஈறான பிரசாதங்கள் தீட்டாகி விடும் – நீச பாசையால் ஓதப்படுதலால்- ஆம் தமிழ் அவர்களுக்கு அவ்வாறே;- ஆகையால் அப்பிரசாதத்தை வாங்க மாட்டோம் எனப் பிடிவாதம் பிடித்தனர். அத்தோடு விடவில்லை அவர்கள். இந்த ஆணைக்குத் தடை உத்தரவை சங்கரன் கோவிலில் இருந்த ஜில்லா முன்சீப் கோர்ட்டில் பெற்றனர்.

அதற்கடுத்த வாரம் அந்தணர்கள் சமூகக் கட்டுப்பாடொன்றை விதித்தனர். அதாவது பிராமணர்கள், தென்காசிக் கோவில் சிவனை வணங்கிடவோ, அக்கோவிலுக்குச் செல்வதோ கூடாது. மேலும் கோவில் ஊர்வலம் அக்ரகாரத்துள் வருகையில் அவரவர்கள் கதவைத்தாளிட்டுக் கொள்ளவேண்டும். மீறினால் அவர்கள் பிராமணக்குடியில் இருந்து தள்ளி வைக்கப்படுவர்.

(இவை எல்லாம் 1920 களில் நடந்த சில உதாரணங்களே! இன்னமும் கோவிலில் தமிழ் ஓதப்படுவதைத் தடை செய்தே உள்ளனர்.

சமஸ்கிருதத்தில் மட்டுமே அர்ச்சனை நடக்கிறது. அர்ச்சனை முடிந்த பிறகு ‘தட்டில் காசு போடுங்க ‘ என்பதை மாத்திரம் மறக்காமல் தமிழில் சொல்கின்றனர்.)

தமிழைத் தீட்டான மொழி என இவர்கள் செய்துவரும் துவேசச் செயல்களுக்கு திருவையாறு தியாகராஜர் ஆராதனை விழாவே சான்று.

அங்கு மேடையில் தமிழில் பாடக்கூடாதாம். இதனை மீறி 1940களில் தமிழிசை அறிஞர் தண்டபாணித் தேசிகர் தமிழ்ப்பாடல் பாடி விட்டார். அவர் சென்ற உடன் அவர் உட்கார்ந்திருந்த இடத்தைச் சாணி போட்டு மெழுகினார்கள். (பசுவின் மலம் தீட்டைப் போக்குமாம்)

இது துவேசமா ? அல்லது அந்த மேடையில் தமிழில் பாடு எனக் குரல் கொடுப்பது துவேசமா ?

****

திருவல்லிக்கேணி முரளி கபேயில் பிராமணாள் ஹோட்டல் போர்டு மாற்றப் போராட்டம் என்பது வரலாற்று முக்கியத்துவம் உடையது. அதனைத் துவேசம் வளர்த்த செயல் என்பது ஏற்க முடியாத ஒன்றாகும். பெரியார் அதனை அறவழிப்போர் மூலமே நடத்தினார். முதலில் அறிக்கை ஒன்றின் வாயிலாக தமிழ் நாடெங்கும் சாதித் துவேசத்தின் அடையாளமான ‘பிராமணாள் ஹோட்டல் ‘ போர்டு நீக்கப்பட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். அவ்வேண்டுகோளை ஏற்றுப் பல ஊர்களில் போர்டை மாற்றி விட்டனர். மாற்றாது இருந்த சில இடங்களில் மறியல் நடந்தது. மறியலுக்குப் பின்னர் போர்டை மாற்றிக்கொண்டனர். முரளி கபே மட்டும் சற்றே பிடிவாதம் சாதித்தனர். அதன் பேரில் ரெண்டு மாதங்கள் வரை விட்டு விட்டு மறியல். ஆனால் ம.ம. குறிப்பிடுவது போல் தார் அழிப்பெல்லாம் பெரியார் செய்யவில்லை.

திடாரென ஒரு நாள் முரளி கபே முதலாள, ஒரு கூடை மாம்பழத்துடன் வந்து பெரியாரைச் சந்தித்து ‘செய்தது தவறென உணர்கிறேன். போர்டை மாற்றி விடுகிறேன் ‘ என்று உறுதி கூறினார். பெரியார் இதனை ஏற்றுக்கொண்டு இச்சந்திப்புக்குறித்து செய்தி வராமல் பார்த்துக் கொண்டார். ம.ம. வின் வரலாற்றுத் திரிப்பின் பேரில் இப்போது இச்செய்தி பதிவாகின்றது.

இந்நிகழ்ச்சியை ‘தனியார் ஒருவரின் சுதந்திரத்தில் தலையிடுவது ‘ என ம.ம. விமர்சித்திருந்தார். இதே விமர்சனம் அன்றும் வந்தது.

பெரியார் ஓர் உவமையுடன் இதைத் தெளிவுபடுத்தி இருக்கிறார். ‘பத்துப் பதினைந்து வீடுகள் இருக்கும் ஒரு தெருவில், ஒருவன் மாத்திரம் தனது வீட்டு சுவரில் ‘இது படிதாண்டாப் பத்தினிகள் வீடு ‘ என எழுதி வைப்பானானால், மற்ற வீட்டுக் காரர்கள் அது அவனுடைய சுதந்திரம் என விட்டு விட முடியுமா ? அப்படி எழுதுவதன் அர்த்தம் என்ன ? ‘.

****

ம.ம. சொல்லுகிறபடி முரளி கபே முதலாளி காஞ்சி மாமுனிவரிடம் ஆலோசனை கேட்டதாக சொல்கிறாரே, அம்முனிவரின் துவேசம் எப்படியானது தெரியுமா ?

மதுரை மீனாட்சி கோவில் தாழ்த்தப்பட்டோர் நுழைந்தபோது அதனைக் கண்டித்து 10 நாட்கள் மெளன விரதம் இருந்திருக்கிறார்.

தீண்டாமை ஒழிப்பினைப் பற்றி காந்தி பேசக்கூடாது எனக் கேட்டுக்கொள்வதற்காக காந்தியை அவர் சந்திக்க வேண்டி வந்தது. காந்தியை சந்திக்கையில் அவர் கடைப்பிடித்த அணுகுமுறை என்ன தெரியுமா ?

வைசியரான காந்தியைக் கண்ணால் பார்த்து விட்டால் தீட்டாகி விடும் என்று கருதி, காந்தியை ஒரு மாட்டுத்தொழுவில் உட்கார வைத்துப் பார்த்துப் பேசினார். பசு மாடு இருப்பதால் தீட்டு விலகி விடுமாம்.

இந்து அறநிலையத்துறை தொடர்பான ஒரு பேச்சு வார்த்தையின்போது, தமிழக மந்திரி கக்கனை அவர் தலித் என்பதால் ஒரு பசு மாட்டுக்கு அந்தப்பக்கத்தில் நிறுத்தி வைத்துப் பேசினார்.

பிரதமர் இந்திராவை அவர் விதவை என்பதால் ஒரு கிணற்றுக்கு அப்பால் நிற்கச் செய்து பேட்டி கொடுத்தார். (கிணற்று நீர் தீட்டைப் போக்கி விடுமாம்). இதெல்லாம் துவேசம் இல்லைதானே ம.ம. ?

****

தூத்துக்குடியில் நடந்த தாக்குதல் குறித்து தி.க. மீது குற்றம் சாட்டும் ம.ம.வுக்கு ஒரு திருத்தம். குற்றம் சாட்டப்பட்டவர்கள் தி.மு.க. காரர்களே தவிர தி.க.வினர் அல்லர்.

இந்த ஒரு விசயத்தைப் பூதாகரமாக்கும் ம.ம. கீழ்க்கண்ட அன்பின் வெளிப்பாடுகளை துவேசம் என்றெல்லாம் சொல்ல மாட்டார் என எண்ணுகிறேன்.

1) 1926 ல் பனகல் அரசர் வீட்டின் மீது வைதீகர்கள் அடியாள் வைத்துக் கல்லால் தாக்கி கதவு ஜன்னல்களைப் பெயர்த்தது.

அவரின் மனைவி அக்காலிகளின் காலில் விழுந்து மாங்கல்யப் பிச்சை கேட்டபோதும் அந்த அம்மாளை தூய தமிழில் அர்ச்சித்தது. (ஆதாரம் – குடியரசு தொகுதி 3)

2) பாரதியாரின் நண்பரான, வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் பேசிய சுரேந்திரநாத் ஆர்யாவை 1926ல் அடியாள் வைத்து நய்யப் புடைத்தது.

3) 1946 மே 11ல் மதுரையில் கருஞ்சட்டைப் படை மாநாட்டுப் பந்தல் வைதீகர்களில் தூண்டுதலால் தீ வைத்துக் கொளுத்தப்பட்டது.

சென்னையில் ஜஸ்டிஸ் கட்சியார்கள் தேர்தல் பிரச்சாரத்திற்கென்று ஏற்பாடு செய்யும் கூட்டங்களில் எல்லாம் மயிலாப்பூர் பிராமணர்கள் கூலிக்கு ஆட்களைப் பிடித்து வந்து கலகம் செய்தது பற்றி 1926ல் சென்னை மாகாண கவர்னரிடம் மனுக் கொடுக்கப்பட்டுள்ளது. இதெல்லாம் துவேசமே இல்லாத அருஞ்செயல்கள்தானே ?

கும்பகோணத்தில் நடந்த ஒரு வைதீகர் கூட்டத்தில் தீரர் சத்திய மூர்த்தி அய்யர் ‘சர்வ கலா சாலைகளில் பரீட்சை கொடுக்கும் சூத்திர மாணவர்லாம் மக்குப் பசங்களாத்தான் இருக்காங்க. தப்பித் தவறி ஒருத்தன் சூட்டிப்பா இருக்கான்னா ஒன்னு அவன் அம்மா மட்டும் சூத்திரச்சியா இருப்பா. அவன் பிறப்பப் பத்தி நாம் சந்தேகந்தான் படணும் ‘ என்று பேசித் தமது பெருந்தன்மையை வரலாற்றில் இடம் பெறச்செய்திருக்கிறார். தெரியுமோ!

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குள் வழிபடச் சென்ற பிரதமர் இந்திராவை, அவர் ஒரு பார்சியைத் திருமணம் செய்த காரணத்தால், கோவிலில் மரியாதை தர மறுத்த தில்லை வாழ் அந்தணர்களின் செய்கை துவேசம் இல்லையா ?

திருவரங்கம் கோவில் கோபுரத்தைக் கட்ட இளையராஜாவின் பணம் மட்டும் வேண்டும். ஆனால் அவர் கோவிலுக்கு வந்து போன பிறகு தீட்டுக் கழிப்பு சடங்கு நடத்துவார்கள். இதெல்லாம் துவேசம் இல்லையா ?

****

மேலும் ம.ம. பெரியார் மீது சொல்லும் குற்றச்சாட்டு ‘பிராமணத் துவேசத்தை வளர்த்தவர் ‘ என்பது.

1926ல் கூட பெரியார் மீது இத்தகைய அவதூறு சுதேசமித்திரன் பத்திரிக்கையால் சுமத்தப்பட்டது. அதற்குப் பெரியார் கீழ்க்கண்டபடி பதில் தந்திருக்கிறார்.

1) ‘பார்ப்பனர்கள் வைத்திருக்கும் ஒவ்வொரு காப்பிக் கடையிலும், சாப்பாட்டுக்கடையிலும், இரயில்வேக்களில் உள்ள காபி-சாப்பாட்டுக் கடைகளிலும், சத்திரம்-சாவடிகளிலும், கோயில்-குளங்களிலும், ‘இது பிராமணர்களுக்கு ‘, ‘இது சூத்திரருக்கு ‘, ‘பஞ்சமர்களுக்கும் முகமதியர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இங்கு சாப்பாடு, பலகாரம், தண்ணீர் வகையறா கொடுக்கப்பட மாட்டாது ‘, ‘இந்த இடத்தில் சூத்திரர் தண்ணீர் மொள்ளக்கூடாது ‘, ‘இந்த இடத்தில் சூத்திரர்கள் குளிக்கக் கூடாது ‘, ‘இந்தப் பள்ளிக்கூடத்தில் சூத்திரர்களைச் சேர்த்துக் கொள்ள முடியாது ‘, ‘சூத்திரர்கள் இந்த இடத்திற்கு மேல் போகக்கூடாது ‘, ‘இந்த வீதியில் சூத்திரர்கள் குடியிருக்கக் கூடாது ‘, ‘இந்தத் தெருவில் பஞ்சமர்கள் நடக்கக்கூடாது ‘ என்றும், இன்னும் பலவாறாக போர்டுகள் போட்டும் நிர்ப்பந்தங்கள் ஏற்படுத்தியும், பிரித்து வைத்தும், துவேஷத்தையும் வெறுப்பையும் இழிவையும் உண்டாக்கி வருவது நானா ? அல்லது பார்ப்பனர்களா ? ‘

2) ‘பெரீய தேசியவாதியான வி.கிருஷ்ணசாமி அய்யர்,மக்களின் பணத்தில் டிரஸ்ட் உண்டு பண்ணி நடத்தி வரும் தர்மப் பள்ளியில் பிராமணர் மட்டுமே படிக்கலாம்-மற்றவர்களுக்கு இடமில்லை என்பது துவேசமா ? அல்லது இதை எதிர்த்துக் கேள்வி கேட்பது துவேசமா ? ‘

3) ‘மக்கள் பிறவியில் வகுப்பு வித்தியாசம் இல்லை ‘ எனும் தீர்மானத்தைக் கங்கிரசில் கொண்டுவந்த எஸ்.ராமநாதனும், நானும் துவேசியா ? அத்தீர்மானத்தை எதிர்த்து காங்கிரசை விட்டு விலகிய எம் கே ஆச்சாரியார் துவேசியா ?

4) ‘ஒரு பிராமணக் குழந்தை சாப்பிடுவதை ஒரு சூத்திரக் குழந்தை பார்த்து விட்டால் ஒரு மாதம் பட்டினி கிடப்பேன் ‘ என்று சொன்ன எம் கே ஆச்சாரியார் துவேசியா ? அல்லது அதை எதிர்த்த முத்தையா முதலியார் துவேசியா ? ‘

****

தேசிய இயக்கத்தில் இருந்த தியாகி விசுவ நாத தாஸ் அவர்களின் நாடகத்தைப் பார்த்து விட்டு நள்ளிரவில் ரெண்டு சுதந்திரப் போராட்ட வீரர்கள் தங்கள் ஊருக்குப் போய்க் கொண்டிருக்கிறார்கள்.

‘விஸ்வ நாத தாஸ் ‘வெள்ளக் கொக்கு பறக்குது ‘ பாட்டை நைசா பாடிட்டாரு பாத்தியா. சி ஐ டி இருக்கான்னு பயமே இல்லாமப் பாடுராருயா அவரு. ‘

‘விசுவ நாத தாசு என்ன ஆளுங்கன்னு ஒனக்குத் தெரியுமாவே ? ‘

‘தெரியாதுவே ‘

‘நாசுவன் ‘ (*முடி திருத்தும் நாவிதர் – கரிசல் வட்டாரச் சொல்)

‘ஓகோ! அந்தச் சாதிப் பயலா!! ‘

சுதந்திர தாகம், தேசீய உணர்வெல்லாம்.. ஒரு செகண்டில் பறந்து போய் ‘அவர் ‘, ‘அந்தச் சாதிப் பயல் ‘ ஆன துவேச வரலாறு இங்கு இருந்தது.

(சுதந்திரப் போராட்டக்காலத்தில் வாழ்ந்த என் தாத்தா கூறக்கேட்ட செய்தி இது. இவ்வுரையாடலில் வரும் ‘வெள்ளைக் கொக்கு பறக்குது பாரீர் ‘ எனும் நாடக மேடைப் பாடல் மதுரகவி பாஸ்கரதாசால் இயற்றப்பட்டது. நாடகத்தந்தை சங்கரதாஸ் சுவாமிகளின் சீடர்களான பாஸ்கரதாசும், விஸ்வனாத தாசும் வள்ளி திருமண நாடகத்தில் கூட இடைச்செருகலாய் வெள்ளையர் எதிர்ப்பு, பகத்சிங் வாழ்த்துப் பாடலைப் பாடி தேசிய வேட்கையை ஊட்டி உள்ளனர்.

இதே சம்பவம் தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த (என் தாத்தாவிற்கு அடுத்த தலைமுறையைச் சேர்ந்தவர்) ஒருவராலும் கூறப்பட்டது.

அதில் உரையாடலில் வரும் ‘நாசுவன் ‘ எனும் சொல் தஞ்சை வட்டாரத்து சொல்லான ‘பரியாரி ‘யாக மாறி இருந்தது.

இதே மாதிரி வேறு ஒரு நாடகத்தில் ராஜ பார்ட்டாக நாவித சாதிக்காரர் நடித்திருக்கிறார். மந்திரியாக வந்தவர் ஆதிக்க சாதிக்காரர். தாம் போட்டிருப்பது ராஜா வேசமானதால் சற்றே துணிச்சலாய் ‘அடேய் மந்திரி! கப்பல் எல்லாம் வந்ததா ? கப்பல்ல என்ன என்ன வந்தது ? ‘ என்றிருக்கிறார். மந்திரியாய் வேசம் போட்டவருக்கு, ராஜா வேசம் போட்டவர் சொன்ன ‘அடேய் ‘ எனும் சொல், சாதிவெறியைக் கிளப்பி விட்டது. பதில் சொன்னாராம் ‘ஒரு கப்பல்ல தங்கம் வந்தது மன்னா! இன்னொரு கப்பல்ல வெள்ளி வந்தது மன்னா! மூணாவது கப்பல் ல ஒங்கப்பன் செரச்ச மயிரு வந்தது மன்னா! ‘ என்று.)

****

இதெல்லாம் பழைய கதை சார். இப்போல்லாம் யார் சார் சாதி பார்க்கிறா ? என்று அப்பாவியாகக் கேள்வி கேட்பவர்கள், மவுண்ட் ரோடு மகாவிஷ்ணுவான ஹிந்து பேப்பரின் ஞாயிற்றுக்கிழமை அனுபந்தங்களை ஒரு முறைக்கு இரு முறை வாசித்தால் நிறைய விசயங்கள் விளங்கும்.

வீடு வாடகைக்கு – ஒன்லி வெஜிடேரியன் – நீங்கள் சைவ உணவுப் பழக்கமுடையவராக இருந்து ஆனால் அ-பிராமணராய் இருப்பீராயின் விளம்பரத்தில் கொடுத்துள்ள தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொண்டவுடன், ‘ஒன்லி வெஜிடேரியனின் ‘ உண்மையான பொருளைத் தெரிந்து கொள்ளலாம்.

சிலர் இன்னும் வெளிப்படையாகவே ‘ஒன்லி பிராமின்ஸ் ‘ என்றும் விளம்பரம் செய்கிறார்கள்.

(இதற்கும் தென்னாப்பிரிக்காவில் இருந்ததாய் சொல்லப்பட்ட ‘நாய்களுக்கும், கருப்பர்களுக்கும் இங்கு இடமில்லை ‘ போர்டுக்கும் வித்யாசம் என்ன ?)

அப்புறம் இருக்கு.. மாற்றிமோனியல்…

..பெண்ணுக்கு வரன் தேவை.சாதி தடை இல்லை (எஸ் சி / எஸ் டி வேண்டாம்)… (என்னே பரந்த மனசு!!)

சென்னையில், வாடகைக்கு வீடு தேடி தலித் ஒருவன் அலைந்தால் அவன் எவ்வளவு பெரிய வேலையில் இருந்தாலும் அவ்வளவு சீக்கிரத்தில் வீடு வாடகைக்குத் தரமாட்டார்கள்..

இதெல்லாம்தான் துவேசம். மாறாக இந்த விசயத்தை நல்ல நோக்கத்தில் இங்கு அம்பலப்படுத்தும் என் செயல் நிச்சயமாய்த் துவேசம் இல்லை.

****

ம.ம. சொல்வது போல அன்பாக வேண்டுகோள் விடுத்தால் சில விசயங்களைச் சொல்லித் திருத்தி விடலாம் என்றால்,

ரெட்டைக்கிளாஸில் டா வழங்கும் 1500 கிராமங்களுக்கும் வி.இ.ப. மூலம் அன்புக்கட்டளை இடுங்க. என்ன நடக்குன்னு பாப்போம். (மாறாக டாக்கடை முன் மறியல் செய்பவர்கள் ம.ம.வால் துவேசி எனத் திட்டப்படுவர்)

கோவில் கருவறையில் அனைத்து இந்துக்களும் நுழையவும், கருவறையின் உள்ளே தமிழில் அர்ச்சனை செய்யவும், அன்பு வேண்டுகோள் விடுத்தால் தம்மைத் திருத்திக் கொண்டு கோவிலைத் திறந்து விடும் ஊரைச் சொல்லுங்கள் பார்ப்போம்.

எல்லாரும் இந்துக்கள்தானே என்று 1970 களில் கலைஞர் அரசு அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் எனச் சட்டம் போட்டது. அதை எதிர்த்து தில்லி உச்ச நீதி மன்றம் போய் அச்சட்டத்தை முறியடித்து வந்தவர்கள் யார் ? அச்செயல் பற்றி மலர் மன்னனின் கருத்து என்ன ?

****

vellaram@yahoo.com

Series Navigation