வயதானவர்களுக்கான தொழில்நுட்பக் கருவிகள்

This entry is part [part not set] of 27 in the series 20020819_Issue

ஜான் ஹார்னே


‘உன் அம்மா தன் ஞாபகத்தை இழந்து கொண்டிருக்கிறாள் ‘ என்று மருத்துவர் என்னிடம் சொன்னார். என் அம்மாவுக்கு 80வயது. அந்த வயதுக்கு அவள் ஆரோக்கியமாகவே இருந்தாள். ஆனால், சில வாத தாக்குதல்களால், அவளது மூளையில் தற்காலிக ஞாபகம் இருக்கும் பகுதி பழுதடைந்து விட்டது. இதனால் அவள் தொடர்ந்து நிலையற்றுப் போய்க்கொண்டிருந்தாள். மருந்து எடுக்கும் நேரங்கள் அவளுக்கு மறந்து கொண்டிருந்தது. அவள் முதிர்ந்தவர்கள் ஓய்வு இல்லங்களுக்கு அனுப்பப்படவேண்டும் என குடும்பம் முடிவெடுத்தது. ஆனால் அம்மா அதனை வெறுத்தாள்.

என் அம்மாவின் கதை பல கோடி வயது முதிர்ந்தவர்களின் கதை. வயது முதிர்ந்ததும், முதுமையே ஒரு நோயாகவும், இன்னும் பல நோய்களாலும் அவதிப்படும் கதை. பல பிள்ளைகளுக்கு தன் வாழ்க்கையை நடத்தவே போராடும் சூழ்நிலையில் தன் வயது முதிர்ந்த பெற்றோர்களை கவனிப்பது முடியாததாக இருக்கிறது.

டாக்டர் ராபின் ஃபெல்டர், விர்ஜினியா பல்கலைக்கழகத்தின் மருத்துவ தானியங்கி ஆராய்ச்சி மையத்தில் இயக்குனராக இருக்கிறார். இவரும் இவரது சகாக்களும் மூத்த குடிமக்கள் சுதந்திரமாகவும், வசதியாகவும் வாழ பல கருவிகளைக் கண்டுபிடிக்கும் வேலையில் இருக்கிறார்கள்.

கண்தெரியாதவர்களுக்கு கண்

கண்தெரியாதவர்களில் நான்கில் மூன்றுபேர் மூத்த குடிமக்கள். ஸ்மார்ட் வாக்கர் என பெயரிடப்பட்ட ஒரு கருவியை இவர்கல் கண்டுபிடித்துள்ளார்கள். இந்த கருவி மூன்று சக்கர வண்டியில் தானியங்கி லேசர் செயற்கைக் கண் பொருத்தப்பட்டது. இந்த கருவியில் இருக்கும் ஒரு மென்பொருள், தன் எதிரே இருக்கும் 180 டிகிரி வட்டத்துள் பொருள்களை பார்த்து சொல்லும். ஆனால், இதனை உபயோகிப்பவர்களை தானாக வழிநடத்தாது. தவறான திசைக்குச் சென்றால் மட்டும் நின்றுவிடும். உதாரணமாக நடுவே மேஜை இருந்தால் மேலும் செல்லாது. மற்றபடி அதனை செலுத்துபவர் திசையில் செல்லும்.

இந்த குழுவினர் இதனோடு உபயோகப்படுத்த இன்னொரு கருவியையும் கண்டுபிடித்துள்ளார்கள். அதாவது ஒரு வீட்டில் ஒரு முதியவர் வாழ்வதை கண்காணிக்கும் மென்பொருள். அவர் சாதாரணமாக செய்யும் சாப்பிடுதல், தூங்குதல் ஆகியவற்றை விட்டுவிட்டு, அவர் தொடர்ந்து நடக்காமலோ அசைவற்றோ இருந்தால் அதனை அறியும் மென்பொருள். உதாரணமாக, குளிக்கும்போது கீழே விழுந்துவிட்டு சுமார் 20 நிமிடம் அசைவற்று இருந்தால் உடனே, இதனை அறிந்து யாருக்காவது தெரிவிக்கும்.

தானாக உடல்நலத்தை பரிசோதிப்பது.

இந்த கண்காணிப்பு மென்பொருள்களை மேலும் அதிக வேலை செய்யவைக்க இந்த மருத்துவர் குழு உழைத்துவருகிறது. உதாரணமாக, கண்காணிக்கப்படுபவர் எப்படி நடக்கிறார் என்பதை இந்த மென்பொருள் கண்காணிக்கும். கால்வலி காரணாக இழுத்து இழுத்து நடக்க ஆரம்பித்தால் அதனை பதிவு செய்து தெரியப்படுத்தும். படுக்கை தானாக தூங்குபவரின் ரத்த அழுத்தத்தை அளக்கும் படி வடிவமைத்திருக்கிறார்கள். எவ்வாறு அவர் மூச்சு விடுகிறார் என்பதை கண்காணிக்கவும் இந்த படுக்கையை உருவாக்கி இருக்கிறார்கள். அதே போல கழிப்பறையில் தானாக கழிப்பை பரிசோதனை செய்து செய்தியாக பதிவு செய்து கொள்ளவும் வடிவமைத்து வருகிறார்கள்.

இந்த கருவிகள் எவராலும் உபயோகப்படுத்தக்கூடியவையாகவும் விலை மலிவானதாகவும் இவர்கள் வடிவமைத்துக்கொண்டிருக்கிறார்கள். அதிகமான அளவில் தயாரிக்கப்படும்போது, இந்த ஸ்மார்ட் வாக்கர் கருவியும், ஸ்மார்ட் இன்-ஹோம் மானிட்டர் அமைப்பும், சுமார் 300 அல்லது 400 அமெரிக்க டாலர்களே விலைபெறும் என மதிப்பிடுகிறார்கள்.

Series Navigation