வன மோகினி

This entry is part [part not set] of 28 in the series 20020518_Issue

கே.ஆர்.ஐயங்கார்


காற்றும் பெண்ணும் ஒன்று தானோ. உயிர்வாழ பிரபஞ்சத்திற்கு இன்றியமையாதது காற்று. பிரபஞ்சம் வாழ்வதற்கும் பல உயிர்களைப் பெற்றுக் காப்பதும் பெண்ணின் கையில் இருக்கிறது. பெண்மையின் பல குணங்கள் காற்றிற்கும் இருக்கின்றன. மனமகிழ்ந்து சிரிக்கும் சின்னப் பெண்ணைப் போல சில சமயங்களில் மென்மையாய் தென்றல் என்ற பெயரில் மனத்தை வருடுகிறது. அதுவே கோபங் கொண்ட பெண்ணாக மாறுகிறது புயல் என்ற பெயரில். இவ்வளவு என்ன, பெண்ணின் முக்கிய குணம் ஒன்று அதற்கு இருக்கிறதே. அதோ அந்த மரத்திடம், மரத்தின் இலைகளிடம், பூக்களிடம், புள்ளினங்களிடம்.. எல்லாவற்றிடமும் சளைக்காமல் பேசுகிறதே. என்ன கொஞ்சம் கூடுதல் உரிமை எடுத்துக் கொள்கிறது, எல்லாவற்றையும் தொட்டுத் தொட்டுப் பேசுகிறது.

இவ்வாறென்றில்லாமல் இன்னும் பல வித சிந்தனைகள் மனதில் அலைபாய, சற்றும் நகர முடியாமல், தோளில் இருந்து பட்ட காயத்தில் பெருக்கெடுத்த ரத்தம் காய்ந்து விட்டதாலும், காயத்தால் ஏற்பட்ட வலி கண்களைத் தாக்க மெல்லக் கண்களை நன்றாகத் திறந்தான் குலசேகரன். மாலை மங்கி இருள் பூரணமாக ஆக்கிரமித்தாலும், அங்கே, அந்த அழகர் மலைக் காட்டில் , அடர்ந்த மரங்களினிடையே மதி தன் நிலவினை(கிரணங்களை)ப் பாய்ச்சியவாறே இருந்ததால், அந்த அரச மரத்தடியில் சாய்ந்து படுத்திருந்த குலசேகரன் மீதும் வெளிச்சம் சற்றே விழுந்திருந்தது.அந்த வைகாசி மாதத்தில், பெளர்ணமி வருவதற்கு இரு தினங்கள் இருந்தாலும் கூட முழு நிலவின் வெளிச்சம் தெளிவாக இருந்தது.சற்றே சுரணை வர வர, வலி முழுவதுமாகத் தெரிய வந்தாலும் சற்றும் முனகினானில்லை. காயங்களினால் ஏற்பட்ட வலியை விட மனதில் ஏற்பட்டிருந்த வலியால் மிகவும் ஆயாசமாக இருந்தது குலசேகரனுக்கு.

அங்கு எவ்வண்ணம் வந்து சேர்ந்தோம் என யோசிக்கலானான் குல சேகரன். ‘ இந்தப் பாண்டிய நாட்டுக்குஎப்போது விடிவு காலம் வரும். எத்தனை காலந்தான் சோழர்களுக்கும் ஹொய்சளர்களுக்கும் அடிமைப் பட்டிருப்பது என நான் நினைத்துக் கொண்டிருந்தது உண்மை தான். ஆனால் அவர்களைத் தோற்கடிப்பதற்கான படை பலம் என்னிடம் இல்லையே. இப்போதும் கூட ஒழுங்காகத் தான் கப்பம் கட்டிக் கொண்டிருக்கிறோம். இருந்தாலும் எதற்காக சோழ அமைச்சர் அநிருத்தரின் ஒற்றர்கள் ரகசியமாக மதுரை வர வேண்டும். அவர்கள் வந்த தகவல் எனக்குக் கிடைக்க நானும் புறப்பட்டேன்.

தலைமை ஒற்றனை அவனறியாமல் நானே பின் தொடர்ந்தேன்.அவன் ரகசியமாக இந்த அழகர் மலைக் காட்டிற்குள் நுழைந்த பிறகு அவனைத் தொடர்ந்தால் சோழ வீரர்கள் பதின்மர் எங்கிருந்தோ வந்து என்னைச் சூழ்ந்து கொண்டனர்.

ஹீம் என்ன ஆயிற்று சொக்கா. என் வீரத்திற்கு. பத்துப் பேரில் ஒன்பது பேரைத் தான் பரலோகம் அனுப்ப முடிந்தது என் வாளினால். ஒருவன் தப்பி விட்டானே. அதுவும் வேலை என் தோளில் பாய்ச்சிவிட்டு.. ‘ எனப் பெருமூச்செறிந்தான்.

மேலும் தொடர்ந்து சிந்திக்கலானான். ‘கொற்கையில் இருந்து முத்து வாணிபம் நன்கு தான் நடந்து கொண்டிருக்கிறது. இருப்பினும் முத்து வாணிபத்தின் கணக்கையும் தான் சோழர்களுக்கு மாதமொரு முறை அனுப்பிக் கொண்டிருக்கிறோமே. ஏன் பாண்டியர்களை முழுவதும் ஒழிக்க வேண்டுமென நினைத்து விட்டார்களா.இருப்பினும் இப்போதைக்கு என்னால் ஏதும் செய்ய இயலாதே. ஒவ்வொரு பாண்டிய வீரனும் பத்து சோழ வீரனுக்குச் சமமென்றாலும் அவர்களது பெரும் படை பலத்திற்கு முன்னால் நாம் போரிடுவது எங்ஙனம். என் காலத்திலும் இந்த அடிமைத் தனத்திற்கு விடுதலை கிடைக்காதா ‘

இவ்விதம் பலவாறாக மனதில் சிந்தனை அலைபாய இருந்த குலசேகரனின் காதில் மெல்லிய பாடல் ஒன்று ஒலித்தது. அந்த இனிய ஒலி அவன் இருந்த இடத்திலிருந்து சற்றே மேட்டிலிருந்து வந்தது. இரண்டாம் ஜாமம் ஆரம்பித்து சில நாழிகைகளே ஆயிருந்தாலும் கூட மரங்களின் அடர்த்தியினூடே புகுந்த நிலவொளியினாலும் கூட அந்தக் குரலுக்குரியவர் யாரென குலசேகரனால் கண்டுகொள்ள முடியவில்லை.

இனிமையான மலய மாருதத்தில் அந்தக் குரல் பாடிக் கொண்டிருந்தது அந்தக் காட்டினூடே, நிசப்தத்தைக் கலைத்து,மிக மெலியதான பாடலைக் கூட ஓசை மிகவைத்துக் கொண்டிருந்தது. அதுவும் பாடிய குரல் பெண்குரல் என்பதால் சற்றே யோசனையும் எழுந்ததுகுலசேகரனுக்கு. ‘ வனாந்திரத்தில் எல்லாம் மோகினிகள் நடமாடுவார்களாமே.என்றோ பாட்டியார் கூறியிருக்கிறார்கள். ஒரு வேளை மோகினியாக இருக்குமோ. ‘ எனத் தோன்றி ‘இருந்தால் என்ன அதையும் ஒரு கை பார்த்து விடலாம். ‘என நினைத்து தடுமாறி எழுந்து நிற்க முயன்று மீண்டும் கீழே விழுந்தான். அவ்வாறு விழுந்ததால் அங்கு இருந்த சிறு கற்கள் புரண்டு சரிவில் சர சரவென உருண்டோடின.

பாடல் சட்டென நிற்க, ‘யாரது ‘ என்றழைத்தவாறு அந்த மேட்டின் மேல் ஒரு பெண்ணுருவம் தோன்றியது. குலசேகரனின் எண்ணம் வலுப் பெற்றது. அந்தப் பெண் சிகப்புச்சேலையில் அந்த மதியொளியில் மோகினிபோலத் தான் தோன்றினாள். மேட்டில் முழுவதுமாக நின்றிருந்ததாலும், அவளது கூந்தல் சற்றே அவிழ்ந்து, பின் முழங்கால்கள் வரைக்கும் நீண்டு புரண்டிருந்தன. அதிலும் அந்த அயர்ச்சியிலும் அவளது முக அழகு குலசேகரனைக் கவர்ந்திழுத்தது. அந்தப் பெண் அழைத்தவண்ணம் நிற்காமல் அந்தச் சரிவில் இறங்கவும் முற்பட்டாள் வாய் திறந்து அழைக்கலாம் என நினைத்தாலும், நா வறண்டிருந்ததால் குரல் எழும்பவில்லை குலசேகரனுக்கு.

நடந்து வந்து கொண்டிருந்த பெண் சட்டென நின்றாள். அவள் கண்ணில் சில பொழுதிற்கு முன் குலசேகரன் தனது தோளிலிருந்து பிடுங்கிப் போட்டிருந்த ரத்தம் தோய்ந்த வேல் பட்டது தான் காரணம். மெல்ல அதை எடுக்காமல் உற்று நோக்கி விட்டு, தன் அழகிய விழிகளைச் சுற்றிலும் சுழல விட்டாள் அவள்.

‘வலையில் மீன்கள் சிக்கும் கேள்விப் பட்டிருக்கிறேன். இங்கு மீனே வலை வீசுகின்றதே ‘ என அவள் கண்களின் அழகைப் பற்றி நினைத்தான் குலசேகரன். அந்த கணத்தில் அவளது கண்களில் அவன் தட்டுப் பட்டு அவனை நோக்கி அவள் வர வர, குலசேகரன் தன்னையறியாமலே நினைவிழந்தான்.

****************

மீண்டும் கண்விழித்த போது, ஒரு விசாலமான அறையில் கட்டிலில் தான் படுக்கவைக்கப் பட்டிருப்பதை உணர்ந்தான். தேக்கு மரத்தில் செய்யப் பட்டிருந்த அந்தக் கட்டிலின் முகப்பில் பல்வேறு வேலைப் பாடுகள் இருந்தன. அறையின் மூலையில் தொங்க வைக்கப் பட்டிருந்த தூங்கா விளக்கில் இருந்து வந்த சிறு வெளிச்சம் அந்த அறையை வெளிப்படுத்திக் காட்டியது.

மெல்ல எழலாம் என நினைத்துக் கையூன்றிய போது,தோளில் பலமாக பச்சிலைகளினால் கட்டுப் போட்டிருப்பதையும், மார்பு,முகத்தில் இருந்த சிறு சிறு வாட் காயங்களுக்கும் பச்சிலை தடவப் பட்டிருப்பதையும் கண்டான் குலசேகரன். தலை சற்றே கனக்க ஆரம்பிக்க காயத்தில் இருந்து ஏற்பட்ட வலியால் முகம் சுளிக்கையில் மெல்ல அறைக்கதவு திறந்தது. உள்ளே அவன் கானகத்தில் பார்த்த அந்த மோகினிப் பெண்ணும், உடன் ஒரு பெரியவரும் நுழைந்தனர்.

‘அடடே, நீங்கள் விழித்து விட்டார்களா. மெல்ல அப்படியே சாய்ந்து இருங்கள். கொடுத்த மூலிகை மருந்தினால் கொஞ்சம் தலையில் நோவு இருக்கும்.பின்னர் சரியாகிவிடும் ‘ என்று சொன்ன அந்தப் பெரியவர் அந்தப் பெண்ணைப் பார்த்து ‘பார்த்தாயா ரத்னா, நான் சொன்னேனே இன்று எப்படியும் கண்விழிப்பார் இவர் என்று ‘ என்று கூறினார்.

‘நீங்கள்.. ‘ என்று ஆரம்பித்த குலசேகரனை மேலும் பேசவிடவில்லை அவர். ‘நீங்கள் பேச வேண்டாம். நீங்கள் இங்கு வந்து இரு தினங்கள் ஆகின்றன. நான் இந்த கள்ளந்திரி கிராமத்த்திற்கும், சுற்றுப்பட்ட கிராமங்களுக்கும் இருக்கும் மருத்துவன். இவள் ரத்னா. இவள் யாரென்றால்… ‘ என ஏதோ சொல்ல முற்பட்ட பெரியவரைத் தடுத்துப் பேசினாள் ரத்னா. ‘நான் இந்த கிராமத் தலைவரின் பெண் என்பதைத் தவிர சொல்வதற்கு வேறு ஏதுமில்லை ‘ என்றாள். பெரியவரின் முகம் சற்றே மாறுதலடைந்து பின்னர் சரியானது.

‘அவள் இப்படிச் சொல்வதால் அவளைக் குறைத்து மதிப்பிட வேண்டாம்.இவள் இல்லையேல் தாங்கள் உயிருடன் இன்று இருக்க முடியாது. தங்களைக் கண்டதும் ஓடிவந்து எங்களிடம் சொன்னவள் இவள் தான். பிறகு நாங்கள் உங்களை இங்கு அழைத்து வந்தோம்.இந்த இரு நாட்களிலும் உங்களைப் பார்த்துக் கொண்டது இவள் தான் ‘ எனச் சொல்ல குலசேகரன் ஏதுமறியாமல் என்ன பேசுவது என்று அறியாமல் விழிக்க, ரத்னா கலகலவென நகைத்தாள்.

‘இப்படி தடாலென்று நடுவில் சொன்னால் இவருக்கு எப்படிப் புரியும். நாங்கள் கொஞ்சம் வன போஜனத்திற்காக சிலம்பாற்றிற்குச்* சென்றிருந்தோம். அங்கு இருந்த அருவியில் நீராடி, பிறகு அங்கேயே தங்கிவிட்டு, மறுநாள் தான் இங்கு வருவதாக இருந்தோம்.நான் என் வழக்கம் போலக் கொஞ்சம் கத்தி விட்டு வரலாம் என காட்டினுள் வந்தால் உங்களைக் கண்டேன். பிறகு இவர்களிடம் சொன்னேன். அவ்வளவு தான் ‘ என்றவள் ‘தாங்கள் யார். எப்படி அங்கு வந்தீர்கள். எப்படி இவ்வளவு காயமும் ஏற்பட்டது ‘ எனக் கேட்டாள்.

‘என் பெயர் குலசேகரன். மதுரை அரண்மனையில் வேலை செய்கிறேன். வெகு நாட்களாக வனத்தினுள் புகுந்து ஓரிரு இரவுகள் கழிக்க வேண்டுமென ஆவலிருந்தது. அன்று அவ்வண்ணம் நினைத்து அங்கு வந்தபோது சில கள்ளர்கள் சூழ்ந்து கொண்டனர். போராடி நான் மயக்கமுற்று விழவும் அவர்கள் ஓடிவிட்டனர் போலும் ‘ என்றான்.

‘என்னது மதுரையில் கள்ளர்களா.பாண்டிய அரசில் இப்படி எல்லாம் நடக்க வேண்டுமா என்ன. ஆனால் குலசேகரரே, தங்களது வாட் காயங்கள் கள்ளர்கள் விளைவித்தது போலத் தெரியவில்லையே ‘ என ஆரம்பித்த பெரியவரைத் தனது விழிகளினால் அடக்கிய ரத்னா ‘குலசேகரரே,உங்கள் காயம் ஆறுவதற்கு இன்னும் சில வாரங்களாவது ஆகலாம். ஆனால் இப்போதைக்கு நீங்கள் ஓய்வு எடுக்க வேண்டியது மிக அவசியம். இங்கேயே நீங்கள் தங்கிக் கொள்ளலாம். வேண்டுமானால் தங்களது மதுரை முகவரியைக் கூறினீர்களென்றால், இங்கிருந்து ஆள் அனுப்பி உங்கள் உறவினர்களை அழைத்து வரச் சொல்கிறேன் ‘ என்றாள்

‘தேவையில்லை ரத்னா. அரசாங்க அலுவலுக்காக செல்கிறேன் எனச் சொல்லியிருப்பதால் அவர்கள் என்னைத் தேட மாட்டார்கள். எனக்கு இருப்பது என் தாய் மட்டும் தான். அதுவும் வயதான காலத்தில் அவர்களைக் கவலைப் பட வைக்க வேண்டாம். நடக்க முடிந்தபின் நானே சென்று விடுகிறேன் ‘ என்றான்.

ரத்னா சரியெனத் தலையசைத்தாள்.

**************

கள்ளந்திரி சிறிய கிராமம் என்றாலும் அழகில் நிறைந்திருந்தது. சுற்றிலும் பச்சைப்பசேல் வயல்வெளிகள். தென்னந்தோப்புக்கள், மாந்தோப்புக்கள்.

பலமுறை அந்தக் கிராமத்தின் வழியே சென்றது நினைவுக்கு வந்தது குலசேகரனுக்கு. கொஞ்சம் கொஞ்சமாகத் தான் அவனது காயம் ஆறிக் கொண்டிருந்தது. ரத்னா வந்து சென்ற மறு நாள் அவனுக்கு மறுபடியும் சுரம் வந்துவிட, வைத்தியர் மறுபடி பச்சிலைகள், கஷாயம் எனக் கலந்து கொடுத்ததில் மேலும் மூன்று தினங்கள் ஓடியிருந்தன. அன்று தான் கொஞ்சம் சற்றே தான் படுத்திருந்த அறையை விட்டு வெளி வர முடிந்தது அவனால்.

வந்த பிறகு தான் தெரிந்தது அவனுக்கு, தான் இருந்தது எட்டுக் கட்டுகள் கொண்ட ஒரு பெரிய வீட்டில் -அதுவும் ஏழாம் கட்டில். வேலையாட்கள் மூன்றோ நான்கோ தான் இருந்தார்கள். அவன் ஒவ்வொரு கட்டில் இருந்து வெளியேறும் போதும் புன்சிரித்தார்கள். எதுவும் பேசவில்லை. அவர்களது கண்களில் ஏதோ சோகம் பொதிந்திருந்தது போலத் தோன்றியது அவனுக்கு. ‘கிராமத் தலைவர் எங்கே ‘ எனக் கேட்டான். மெளனமாய் வெளியில் கை நீட்டினார்கள். ‘வெளியூர் போவ் விட்டாரா என்ன ? ‘. ஒரே ஒரு ஆள் மட்டும் ‘ஆமாம் ஐயா. உங்களுக்கு ஏதாவது வேண்டுமா. ‘

‘இல்லை. என் உடல் குணமாகி விட்டது. கிளம்பலாம் என நினைக்கிறேன். தலைவரின் மகள் ரத்னா எங்கே ‘

‘எசமானியம்மாவா..இதோ வந்து விடுவார்கள் ‘ எனச் சொல்லி முடித்த போதில் தடதடவென ஒரு வண்டி வந்து நின்றது. மாட்டு வண்டி. அதிலிருந்து குதித்தாள் ரத்னா. கொஞ்சம் விழிகள் கலங்கியிருந்தன..

‘என்ன இது. இங்கு வந்து நின்றிருக்கிறீர்கள். நீங்கள் இருந்த இருப்பென்ன. இப்போது கிளம்புகிறீர்களே… ‘

‘இல்லை பெண்ணே. எனக்கு கொஞ்சம் அலுவல்கள் இருக்கின்றன. பின்னொரு பொழுதில் நான் இங்கு சில நாட்கள் வந்து தங்குகிறேன் ‘

‘நான் இப்போது மதுரையிலிருந்து தான் வருகிறேன். இன்னும் இரு தினங்கள் ஓய்வெடுத்துக் கொண்டு புறப்படலாம் நீங்கள். அரண்மனையிலும் தகவல் சொல்லச் சொல்லி ஆள் அனுப்பியிருக்கிறேன் ‘ என்றவளைக் கூர்ந்து பார்த்தான் குல சேகரன்.

‘ஒரு வேளை தான் யார் என்று தெரிந்திருப்பாளோ ‘

கல்மிஷமில்லாமல் புன்னகைத்தாள் ரத்னா. ‘ரொம்ப யோசிக்க வேண்டாம் அன்பரே. நீங்கள் எங்கள் விருந்தாளி. அவ்வளவு தான். அறையில் அடைந்துகிடப்பது கொஞ்சம் சோம்பலாக இருந்தால் கொஞ்சம் பொறுங்கள். நான் நீராடி விட்டு வருகிறேன். ஊரைக் கொஞ்சம் சுற்றிப் பார்க்கலாம் ‘

சரி எனச் சில நாழிகைகள் காத்திருந்ததில் அவள் வந்தாள். அழகிய நீல வண்ணப் பருத்தியாடை அணிந்திருந்தாள். தலைக்கும் முழுகியிருந்தாள் போல. தலைமுடி சரிவரக் காயாததால் கொஞ்சம் ஒட்டினாற்போல் இருந்தாலும் அதுவே அவளது முகத்திற்குத் தனி அழகு கொடுத்தது. கண்கள் சிவந்திருந்தன. முகமும் சற்றே வீங்கினாற்போலத் தோன்றியது குலசேகரனுக்கு.

‘என்ன ரத்னா. அழுதாயா என்ன. ‘

‘ஒன்றுமில்லை. இரு நாட்கள் மதுரையில் இருந்தேன் அல்லவா. எங்களுக்கு வாணிபமும் உண்டு. அது விஷயமாக வியாபாரிகளைப் பார்த்து ப் பேசி, சில உறவினர்கள் வீட்டிற்குச் சென்று வந்ததில் சரிவரத் தூக்கமில்லை. அது தான் காரணம்.உறங்கி எழுந்தால் சரியாகி விடும். நாம் கிளம்பலாமா.. ‘ எனச்சொல்லவும், ஒரு வேலையாள் மாட்டுவண்டியை ஓட்டி வந்து அருகில் நிறுத்தினான்.

இருவரும் மெளனமாக ஏறிக்கொள்ள பயணம் தொடர்ந்தது. இரு நாழிகைகள் கழிந்தது ம் ஓரிடத்தில் நிற்க, இருவரும் இறங்கினர். இறங்கிய இடம் ஒரு பெரிய கிணற்றின் அருகாமை.

‘என்ன ரத்னா இது ‘

ரத்னா சிரித்தாள். தனது இடுப்பிலிருந்து சின்னச் சுருக்குப் பையை அவிழ்த்தாள். கையில் சில பொன் நாணயங்கள் இருந்தன.

‘இது என்ன தெரியுமா குலசேகரரே. சோழ நாணயங்கள். இது தான் நமது நாட்டில் இப்போது செல்லும். எப்போது நமது நாட்டுக்குச் சொந்தமாய் நாணயங்கள் வரும் ‘

‘இவ்வளவு தூரம் கூட்டி வந்தது அரசியல் பேசத் தானா ரத்னா ‘

‘இல்லை குலா.. அப்படியே கூப்பிடட்டுமா உங்களை..இல்லை அருள்மிகு குலசேகர பாண்டிய மன்னர் பிரானின் சமூகத்திற்கு.. இந்த சாதாரண கிராமத் தலைவரின் பெண்ணின் வணக்கங்கள் எனச் சொல்லவா.. ‘

‘ரத்னா.. ‘

‘மன்னவா.. எனக்கு உங்களைத் தெரியாது என நினைத்துக் கொண்டார்களா என்ன ‘

‘ரத்னா. நீ நிறைய சரித்திர நாடகங்கள் பார்த்துக் கெட்டுப்போய் விட்டாய். அதில் தான் இப்படி எல்லாம் வரும். நீ என்னைக் குலா என்றே கூப்பிடலாம் ‘

ரத்னா சிரித்தாள். பிறகு அவள் முகம் மாறியது. ஒருபக்கம் புலியும் ஒருபக்கம் சோழமன்னன் உருவமும் பதிக்கப் பட்ட அந்தக் காசை ஒருதரம் திருப்பிப் பார்த்தாள். உள்ளங்கையில் குவித்து வைத்துக் கொண்டாள். கண்களை மூடிக் கொண்டாள்.

குலசேகரன் அவளது செயல்களை வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தான்.

சற்று நேரம் கழித்து அந்தக் காசுகளை கிணற்றினுள் விட்டெறிந்தாள். ‘ப்ளக் ‘ என்ற சத்தத்துடன் அவை மூழ்கின.

‘வாருங்கள். கொஞ்சம் அமர்ந்து பேசலாம் ‘ என்றவாறே கிணற்றினுள் இறங்கினாள் ரத்னா. அவனும் கூடவே படிக்கட்டுகளில் இறங்க நடுப்படிக்கட்டில் அமர்ந்து கொண்டு, மேல் படிக்கட்டில் அவனை அமரச் சொன்னாள்.

‘சொல்லுங்கள் குலா ‘

‘நீ தான் சொல்லவேண்டும். பேசலாம் என்று சொன்னது நீ. ஆனால் உன் செயல்கள் வியப்பை அளிக்கின்றன ‘

‘குலசேகரரே, இந்தக் கிணற்றைக் காசுக் கிணறு எனச் சொல்வார்கள். இதில் தேவதைகள் இருப்பதாகவும், ஏதாவது வேண்டி, காசைப் போட்டால் அது நடக்கும் என நம்பிக்கை ‘

‘நல்ல நம்பிக்கை ‘ சிரித்தான் குலசேகரன். ‘என்ன வேண்டிக் கொண்டாய் ரத்னா ‘

ரத்னா நன்றாகத் திரும்பி அவனை நோக்கினாள். அவன் விழிகளுடன் அவள் விழிகள் கலந்தன. ‘என்ன வேண்டிக் கொண்டேன் என்பதைப் பிறகு சொல்கிறேன் அன்பரே. அழைத்த காரணம் உங்களுக்கு நான் மதுரை சென்றிருந்த போது கண்ட காட்சியைச் சொல்லத் தான். ‘

குலசேகரன் மெளனமாக இருக்க அவள் தொடர்ந்தாள்…

‘மடப்புரம் தெரியுமா உங்களுக்கு. மதுரையிலிருந்து சில காதத் தொலைவில் இருக்கிறது அந்த ஊர். அந்த ஊரில் என்ன விசேஷம் தெரியுமா… காளி அம்மன் கோவில். கோவில் என்றால் கற்றளி எல்லாம் இல்லை. வெட்டவெளியில் இரண்டு காளியின் வடிவங்கள் சமைக்கப் பட்ட பெரிய சிற்பங்கள் உண்டு. உக்கிரத்தைக் கண்ணிலேயே காட்டிக் கொண்டிருப்பாள் அவள். அங்கு சென்றிருந்தேன் நான்.

நான் சென்ற போது அங்கே கோவிலைச் சுற்றிலும் வட்டமாய் நின்று கொண்டிருந்தது கூட்டம். மேளங்கள் முழங்க, நாதஸ்வரம் ஒருபுறம் இசைத்துக் கொண்டிருக்க நடுவில் ஒரு வாலிபன். அப்போது தான் குளித்திருப்பான் போலும். இன்னும் ஈரம் காயவில்லை இடையாடையில். நெற்றியில் பளீரென விபூதி அணிந்திருந்தான். நடுவில் பெரியதாகக் குங்குமம். கூடவே கோயில் பூசாரியும். காளியைப் பற்றி உருக்கமாக பாடிக் கொண்டிருந்தான்.

வாலிபன் கண்கள் மூடிக் கிடந்தன. வாய் மட்டும் முணுமுணுத்துக் கொண்டிருந்தது. அவன் என்ன சொன்னான் தெரியுமா ? ‘

மேலும் அவளே தொடர்ந்தாள்..

‘காளீ, எங்கள் மன்னர் குலசேகர பாண்டியர் நோய் வாய்ப்பட்டிருப்பதாகத் தகவல் எனக்கு வந்திருக்கிறது. அவர் பூரண குணமடைய வேண்டும். பாண்டிய ராஜ்யத்த்தை மிகப் பெரிய சாம்ராஜ்யமாக விஸ்தரிக்க வேண்டும். அதற்குக் காணிக்கையாக என் உயிரைத் தருகிறேன் ‘ எனச் சொல்லி முடிக்கவும் மேளங்கள் உரத்து முழங்கவும் சரியாக இருந்தது. அந்த வாலிபன் குனிந்து கீழே இருந்த வாளை எடுத்துக் கொண்டான். வலது கையால் அதைப் பற்றி…… ‘

‘என்ன அவன் தலை துண்டாகிவிட்டதா ரத்னா.. ‘ பதட்டத்துடன் கேட்டான் குலசேகரன்.

‘இல்லை குலசேகரரே.. ‘ கண்களில் நீருடன் கூறினாள் ரத்னா.. ‘ அவன் செய்தது நவகண்டம்.. ‘

குலசேகரன் பேச்சிழந்தான்.

‘ஆம் குலா. நவகண்டம் தான். உடலில் எட்டு இடங்களில் தன் வாளாலேயே துண்டித்துக் கொண்டு, ஒன்பதாவது முறை தன் வலது கையினால் சிரமறுத்தல்.. அதையே அவனும் செய்ய ஆரம்பித்தான். நான் தவித்தேன். துடித்தேன். எந்தத் தங்கைக்குத் தான் துடிப்பிருக்காது. என்ன அண்ணா இது அநியாயம். ஏன் இப்படி நடந்துகொள்ள் வேண்டும். மன்னர் தான் குணமாகி விடுவாரே. பிறகு ஏன் இந்த வெறிச் செயல் ‘ எனக் கதறினேன். கூட்டத்தை விலக்கி அவனை முடிந்தவண்ணம் தடுக்கப் பார்த்தேன்… ‘

‘ரத்னா. நீ கூறுவது வாணவராயனைப் பற்றியா ? ‘ குலசேகரன் அதிர்ச்சியுடன் கேட்க அதே அதிர்ச்சியுடம் ரத்னாவும் அவனை நோக்கினாள்.

உங்களுக்கு எப்படித் தெரியும் நான் வாணவராயனின் தங்கை என்று ?

‘ரத்னா. நீ என்னை மன்னன் என்று அறிந்த போது – எனக்கு மட்டும் தெரியாதா என்ன. உன்னை முதன் முதலில் பார்த்த போதே நினைத்தேன். எனது உயிர்காக்கும் தென்னவன் ஆபத்துதவிகளின் உபதலைவன் வாணவராயன் சாயல் உனக்குத் தெரிகிறதே என்று. பாழாய்ப்போன எனது உடல்நிலை மேலும் மோசமடைந்திருந்ததால் அதைப் பற்றி உன்னிடம் கேட்க முடியவில்லை.. நீ சொல்வது உண்மையா.. வாணவ ராயன் உயிர்த் தியாகம் புரிந்தாரா ? ‘

‘உயிர்த் தியாகம்.. ‘ ரத்னா கசப்புடன் நகைத்தாள். ‘நீங்கள் என் இல்லம் வந்த முதல் நாளே அண்ணன் வந்து உங்களைப் பார்த்து விட்டார். நீங்கள் இருந்த இருப்பைப் பார்த்து வேண்டிக் கொண்டாராம்.. இது எல்லாம் உயிர்த்தியாகமா….. பார்த்துப் பார்த்து வளர்த்த தந்தை தாயையும், பாசம் மிகக் கொண்ட தங்கையையும் விட்டு விட்டு சொல்லச் சொல்லக் கேட்காமல் – அரசன் வாழ வேண்டும் என்று தன்னைத் தானே பலி கொடுத்துக் கொள்வது. போரில் வேண்டுமானால் பல எதிரிகளை மாய்த்து விட்டு வீரமரணம் எய்துவதை என்னால் ஒத்துக் கொள்ள முடியும் குலசேகரரே. இதை என்னால் ஒத்துக் கொள்ள முடியாது ‘

‘பின்னர் ‘

‘பின் என்ன ஆயிற்றா. முதல் வீச்சில் அவரது இடதுகை விரல்கள் துண்டிக்கப் பட்டதும் நான் மயங்கி விழுந்து விட்டேன். தந்தை தான் மனதைக் கல்லாக்கிக் கொண்டு மிச்சத்தையும் பார்த்து விட்டு உடலை அள்ளி வந்தாராம். அண்ணனை பொட்டலமாக்கிக் கொள்ளி போடுகையில் மயங்கி விழுந்தவர் இன்னும் எழுந்திருக்கவில்லை. வைத்தியர் தான் பார்த்துக் கொண்டிருக்கிறார். நான் உங்களை ஒன்று கேட்கட்டுமா.. ‘

‘சொல் ரத்னா ‘

‘இது போன்ற பழக்கங்கள் இருக்கக் கூடாது என்று சட்டம் நீஙக்ள் கொண்டு வர வேண்டும். இப்போது வேண்டுமானால் உங்களுக்குப் படைபலம் இல்லாதிருக்கலாம். பிற்காலத்தில் வரலாம் அல்லவா. உங்களுக்குத் தேவை இப்போது என்னவென்றால் படைபலமல்ல. மனோ பலம்.. ‘

‘நீ யாரிடம் பேசுகிறாய் எனத் தெரிந்து தான் பேசுகிறாயா பெண்ணே ‘

‘ஆம். நன்றாகத் தெரிந்து தான் பேசுகிறேன். சுரத்தில் நீங்கள் என்ன உளறினீர்கள். உங்களுக்கு எப்படித் தெரியும்.. ஆண்டவனே, நான் பாண்டிய நாட்டைக் கட்டிக் காப்பேனா … இப்படி எனது படைகள் குறைவாக இருக்கின்றதே.. பிரச்னை மேல் பிரச்னை வருகிறதே – இன்னும் என்னவெல்லாமோ அவ நம்பிக்கையாய்ப் புலம்பினீர்கள் அரசே… இருக்கும் படைகள் உங்கள் மீது உயிரையே வைத்திருக்கிறது என்பதை மறந்து விட்டார்கள். தோல்விகள் வரத் தான் வரும். ஆனால் தோல்வி தான் எப்போதுமே வரும் என நீங்கள் நினைக்கக் கூடாது…உங்களிடம் நான் இன்னொன்றும் கேட்க வேண்டும்.. ‘

‘சொல் ரத்னா ‘

‘தங்களுக்கு நாற்பது பிராயம் தாண்டி விட்டது எனச் சொல்வார்கள். தாங்கள் இன்னும் மணமுடிக்கவில்லை.. நாட்டை எப்படி விஸ்தரிப்பது என்ற கவலையினாலேயே வதுவை செய்து கொள்ளவில்லை எனக் கேள்விப் பட்டேன் ‘

‘ஆமாம் ‘

‘இந்தச் சிறு பெண் சொல்வதைத் தயை செய்து கேளுங்கள். இப்போது அநாவசியப் போர்கள் எதுவும் வேண்டாம். எதிரியின் பலத்தை நன்றாக ஊன்றிக் கவனித்தவண்ணம் இருங்கள். சிறுகச் சிறுக படைகளைச் சேருங்கள். அதற்கு முன் ஒரு திருமணம் செய்து கொள்ளுஙகள் ‘

‘ஏன் ‘

‘இது என்ன கேள்வி. ஒருவேளை பாண்டிய நாட்டை விரிவு படுத்துவது தங்கள் காலத்தில் நடக்கவில்லையென்றால் தங்கள் வாரிசின் காலத்தில் நடக்கட்டுமே. அது நடக்கலாம் அல்லவா… ‘ எனச் சொல்லிவிட்டு முழங்கால்களில் தலை புதைத்து குலுங்கிக் குலுங்கி அழ ஆரம்பித்தாள் ரத்னா.

அவள் அவ்வாறு அழுவதை சற்று நேரம் மெளனமாகப் பார்த்தவாறே இருந்த குலசேகரன், மெல்ல அவளருகில் சென்று தோளைத் தொட்டுத் தன்புறம் திருப்பினான். முதலில் அவளது சிவந்த விழிகள் அவனது கூரிய விழிகளுடன்

கலந்தன. பிறகு….

*************************

மதுரை அரண்மனையின் அந்தப் புரத்தில் தனது அறையில் குறுக்கும் நெடுக்கும் நடந்து கொண்டிருந்த மகாராணி புவன முழுதுடையாள் உள்ளே நுழைந்த குலசேகரனை வரவேற்றார்..

‘வா.குலசேகரா..எப்படி உள்ளது உடல் நிலை ‘

‘தேவலை அம்மா. நான் நுழைந்ததும் நீங்கள் சந்திக்க விரும்புவதாகச் சொன்னார்கள் ‘

‘ஆம் மகனே. இதோ இந்தச் சித்திரத்தைப் பார். இவள் சோழ மன்னனின் மூன்றாம் மனைவியின் மகள்.அமைச்சர் அநிருத்தர் ‘முதலில் இவளைத் திருமணம் செய்து கொண்டால் பின்னர் எதுவும் குழப்பம் எல்லாம் வராமல் சுமுகமாக வைத்துக் கொள்வதாக ‘ ஓலை அனுப்பியிருக்கிறார்… பார் மகனே. சும்மா சும்மா போர் வந்தால் நம்மால் என்ன செய்ய முடியும்.. சோழரிடமிருந்து சம்பந்தம் நமக்குக் கிடைக்க நாம் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.. ‘

குலசேகரனின் மனதில் பலவித எண்ணங்கள் அலைபாய -பிற்காலத்தில் மிகப் பெரிய பாண்டிய சாம்ராஜ்யத்தை நிறுவிய ஜடாவர்மன் சுந்தர பாண்டியனைப் பெற்றெடுக்கப் போகும் – சோழராஜகுமாரியின் சித்திரத்தைப் பார்த்த வண்ணம், ‘சரி அம்மா.. நீங்கள் சொல்வது போல் செய்கிறேன். இன்னொரு விஷயம். ஒரு வீரக் கல் நாட்ட வேண்டும் ‘ என்றான்

*********************************

பின்னுரை:

1. டாக்டர் ஜெயபாரதி தனது கட்டுரையில் இவ்வண்ணம் குறிப்பிட்டிருக்கிறார்.

www.geocities.com/vienna/choir//navakanta.html

The above is picture of a Virakkal dedicated to a warrior who performed self-sacrifice. He is wearing a scabbard in his waist. He is also wearing the ‘Vattudai ‘ a garment worn by warriors. He grabs his hair with his left-hand and smites his neck with a sword which is held with his right hand. This statue is found in the Puumaayi Amman Temple of Tiruppathur, Sivagangai District, TamilNadu, South India.

Description:

Self-sacrifice or Navakantam was an ancient practice among the Tamils in which a person sacrifices his own self with his own hands. It is a form of ritualistic suicide.

This custom was prevalent among the ancient Tamil warriors.

It was usually carried out as a fulfilment of a vow. There were various reasons for this.

Some examples:

Scenario 2: The ancient Tamil kings had personal body-guards. They were the ‘VeLaikkaarap padai ‘ of the Cholas and the ‘Thennavan AabaththudhavigaL ‘ of the Pandyas. The latter were more fiercesome. Marco Polo who met them calls them, the ‘ King ‘s Trusty Lieges ‘. The Pandya king is very ill. One of the body-guards makes a vow for his king ‘s recovery. He offers his own life in place of the king ‘s. The king recovers. So he gives his life as offering.

The Ritual:

There was another variety called NavaKantam. In this the sacrificer cuts off eight parts from his body. The ninth and last part to be cut off, is the head. Hence, the name, ‘NavaKantam ‘. In this ritual, the sacrificer has to do it unassisted. Since it is an elaborate rirual, it is time-consuming. So the whole process takes place slowly. The Zamorins-Saamudhiri Kings- of Calicut used to perform this.

Viirakkal:

The warriors are usually honoured with a Hero-stone called ‘Viirak Kal ‘.

References

Literary References:

This custom is mentioned in ancient Tamil literature like the Maduraik Kaanchi, Chilappadhikkaaram, alingaththup ParaNi, etc.

Foreign References:

Marco Polo who visited the Pandya country in the 13the century A.D., was an eye-witness to such an event. Friar Jordanus , Nicolas de Conti, and others have mentioned about it in their travellogues.

2.www.hindubooks.org/temples/tamilnadu/azharkoil

அழகர் கோயிலுக்கு மேலிருக்கும் அருவியின் பெயர் சிலம்பாறு என அந்தக் காலத்தில் வழங்கி வந்தார்களாம்

3. கள்ளந்திரி கிராமம் இப்போதும் இருக்கிறது. பச்சைப் பசேலென்றிருக்கும் கிராமம். சின்ன வயதில் அவ்வழியே சென்றிருக்கிறேன். அதில் காசுக் குளமோ, காசுக் கிணறோ இருக்கிறது என்று சில வருடங்களுக்கு முன்னால் படித்த ஜீனியர் விகடன் இதழில் குறிப்பிட்டிருந்தார்கள்

4. மடப் புரம் காளியம்மன் கோவில் பிரபலமான ஒன்று. அதில் இன்றும் விரோதிகள் அழியவேண்டுமானால் காசு வெட்டிப் போடுவது ஐதீகமாக இருந்து வருகிறது.

5. எழுத்தாளர் சாண்டில்யன் தனது ராஜமுத்திரை நாவலில் ‘கி.பி.1251 இல் இருளைக் கிழித்திடும் ஒளிபோல மாறவர்மன் சுந்தர பாண்டியன் தோன்றினான் ‘ என்று குறிப்பிடுகிறார். அதையே ஆதாரமாக வைத்து குலசேகரனைச் சிருஷ்டித்தேன்.

6. இந்தக் கதை முழுக்க முழுக்க எனது கற்பனையே.

***

Series Navigation