வண்ணம்

This entry is part [part not set] of 34 in the series 20030427_Issue

ஆதர்ஷ்


வண்ணங்கள் என்னைக் கொஞ்சம் பயமுறுத்தும்
நான் மறக்க நினைப்பதை நினைவுறுத்தும்

நிறங்கள் தொடர்புள்ள நிகழ்வுகள் நிழலாடும்
தூக்கம் கலைத்துபின் எள்ளி நகையாடும்

பேருந்து தாமதிக்காத ஒருவிநாடி நேரத்தில்
குறுக்கே பாய்ந்த காவிச்சட்டை வாலிபன்

வாழ்ந்து முடிந்தும் வெறியடங்காமல் ஆரஞ்சு
ஜ்வாலையில் தலைவனுக்காய் அவிந்த வயோதிகன்

நேற்று உண்டவர் வீட்டில் அரிவாளால்
இரத்தம் பார்த்த நடுத்தர வயதுக்காரன்

சிவப்பு என்றால் மங்கலமென்று எனக்கு
மட்டும் எதற்காகத் தோன்றவில்லை ?

எல்லா நிறத்திற்கும் நினைவொன்று இருக்கிறது
ஒன்றுகூட இதமான நிகழ்வுக்கு இல்லை

நிறத்திற்கு அர்த்தங்கள் மாற்றித்தரப் பார்த்தேன்
ஒன்றுகூட இயல்பாகப் பொருந்திவிடவில்லை

மனநலத்திற்கு ஆபத்தென்று மருத்துவரிடம் விரைந்தேன்
நிறங்கள் குறியீடென்று அவர் கூறக்கேட்டேன்

உதாரணமாக சிவப்பு, ‘இரத்தத்தை… ‘ என்று அவர்
ஆரம்பிக்க பரிதாபப் புன்னகையில் என்னிதழ் குவித்தேன்!

vrvrao@vsnl.net

Series Navigation