வண்ணநிலவனின் ‘எஸ்தர் ‘ இலக்கிய அனுபவம்

This entry is part 1 of 3 in the series 19991128_Issue

விக்கிரமாதித்யன்


தமிழில் நிறையவே சிறுகதைகள் வருகின்றன. இப்படிச்சொல்வது பத்திரிக்கைக் கதைகளை மனதில் கொண்டு இல்லை. இலக்கிய சிறுகதைகளையே குறிப்பிடுவதாம்.

இவ்வளவு காலத்துக்குப் பிறகு, நமது இலக்கிய சஞ்சிகைகளில் சம்பவக் கதைகள், நடைச் சித்திரக் கதைகள், இந்த இடத்தில் தொடங்கி இந்த இடத்தில் முடிகிற கதைகள், ஓ ஹென்றி முடிவுக் கதைகள், வட்டார இலக்கிய பம்மாத்துக் கதைகள், ஐரோப்பிய இலக்கியப் பாதிப்புக் கதைகள், (இப்போதெல்லாம் லத்தீன் அமெரிக்கப் பாதிப்புக் கதைகளுக்குத் தான் மவுசு) உள்ளூர் பாதிப்புக் கதைகள், போலி முற்போக்குக் கதைகள், ஆண்-பெண் சினேகக் கதைகள், வேலையில்லாத் திண்டாட்டக் கதைகள், வரதட்சிணைக் கொடுமைக் கதைகள், பெண்ணிணக் கதைகள், குடும்பக்கதைகள், கோபம் கொண்ட இளைஞர்களின் அபத்தக் கதைகள், நேர்கோட்டில் இல்லாதக் கதைகள் இப்படி இரண்டாயிரம் வருஷத்துக்கும் போதுமான சிறுகதைகள் தமிழில் வந்து குவிந்து விட்டன.

இவ்வளவு சிறுகதைகளுக்கும் மத்தியில் சுயம்புவான, கலாபூர்வமான ஆழமும் வீச்சும் கொண்ட படைப்புக்களை புதுமைப்பித்தன், கு.ப.ரா, மெளனி, சம்பத், நகுலன், அசோகமித்திரன், சார்வாகன், சுந்தர ராமசாமி, ஆர்.ராஜேந்திர சோழன், ந.முத்துசாமி, சா.கந்தசாமி, பிரபஞ்சன், கோணங்கி, ஜெயமோகன், வண்ணநிலவன் முதலானோர் எழுத்துக்களில் காணக்கிடைக்கின்றன. இலக்கிய உன்னதம், மொழி வளர்ச்சியெல்லாம் இத்தகைய எழுத்துக்கலைஞர்களையே சார்ந்திருக்கிறது. இவர்களே உண்மையில் படைப்பிலக்கிய வாதிகளாகவும் புதிது செய்து சாதிக்கிறவர்களாகவும் இருக்கிறார்கள்.

புதுமைப்பித்தனுக்குப் பிறகு சிறுகதையில் கணிசமான அளவு பங்களிப்புச் செய்திருப்பவர் வண்ணநிலவன் என்பதைத் தமிழ் இலக்கிய உலகம் நன்கு அறியும். எதார்த்தச் சிறுகதையில் தொடக்கம் பெற்று, வாழ்வின் நுட்பமான அம்சங்களைக் காண்பிக்கிறதாக ஆகி, சோதனை ரீதியான எழுத்து என்று தொடர்ந்த வளர்ச்சி கொண்டவை இவர் கதைகள். எஸ்தர் தொகுப்புக்கும் பாம்பும் பிடாரனும் தொகுப்புக்குமிடையே தெரியும் வித்தியாசம் நல்ல படைப்பாளியின் இயல்பான மாற்றம்.

எழுதுவது பெரிதில்லை. அது சிறுகதைக்கு வளம் சேர்ப்பதாக அமைவது முக்கியம். அதைச் சாதித்தவர்களில் முக்கியமான ஒருவர் வண்ணநிலவன். எஸ்தர், அழைக்கிறவர்கள், துக்கம், தருமம், அரெபியா, பிணத்துக்காரர்கள், பாம்பும் பிடாரனும் முதலான இவர் கதைகள் தமிழ்ச்சிறுகதையில் ஒரு தனி இடம் வகிப்பவை. இதுவரையுள்ள கதைபோல இல்லாதிருப்பதே ஒரு கதையின் விசேஷத் தகுதி, உயர்வு. இந்தக் கதையை இன்னொருவர் எழுதியிருக்க முடியாது என்று, நினைக்க வைக்கிற தனித்தன்மையே ஒரு படைப்பாளிக்குப் பெருமை. வண்ணநிலவன் கதைகள் அத்தகையவை.

வண்ணநிலவனின் எஸ்தர் சிறுகதை தமிழ்ச்சிறுகதை இலக்கியத்திலேயே மிக முக்கியமான ஒன்று. கிறித்துவ வாழ்க்கைப் பின்புலத்தில் இலக்கியமாகி நிற்கிற எழுத்து.

‘முடிவாகப் பாட்டியையும் ஈசாக்கையும் விட்டுச் செல்வதென்று ஏற்பாடாயிற்று ‘

-கதையின் முதல்வாக்கியம்

‘வெகுகாலம் அந்தக் கண்களை அவள் மறக்காமல் இருந்தாள் ‘ -கடைசி வாசகம்.

இதற்கு நடுவே கதை. தென்கோடிக் கிராமம் ஒன்றில் மழை பொய்த்துப் போய் வறட்சியுண்டாகும் போது, ஒரு எளிய கிறித்தவக் குடும்பம் எதிர் கொள்ளும் வாழ்க்கைப் பிரச்சினையே கதையின் மையம்.

குறுநாவலாகத் தெரிகிற இதன் கதை வெளிப்படையானது. முடிவு தவிர்த்து. பாத்திரங்களைத் தன் போக்கில் காண்பித்துக் கொண்டு போவதும், அவர்கள் சம்பந்தப்பட்ட விவரங்களை விஸ்தாரமாக விவரிப்பதும், காட்சிகளை அடுத்தடுத்து சித்தரிப்பதுமாக வளர்கிறது கதை.

அந்தக் குடும்பம் இனிமேலும் ஊரில் இருக்க முடியாது என்கிற நிலைக்குள்ளாகும்போது, பஞ்சம் பிழைக்க வெளியேறிப் போக வேண்டியிருக்கிறது. நடமாட முடியாத, காது கேளாத, கண் சரியாகத் தெரியாத பாட்டியை என்ன செய்வது ? இதுதான் பிரச்சினை.

அகஸ்டின், டேவிட், பெரிய அமலம், சின்ன அமலம், ஈசாக், பாட்டி, எஸ்தர் – இவர்கள்தாம் கதை மாந்தர்.

அகஸ்டின் மூத்தவன். எதிலும் இவனை நம்பி எதுவும் செய்யமுடியாது. அமைதியானவன்போல எப்போதும் திண்ணையையே காத்துக் கிடப்பான். ஆனால் உள்ளூர அப்படியல்ல. சதா சஞ்சலப்பட்டவன்.

அடுத்து டேவிட்.

பெரிய அமலம் ஒரு பெரிய குடிம்பத்தின் முதல் பெண்ணாகப் பிறந்தவள். மிகவும் அப்பிராணி. அதிகம் பேசாதவள். தனக்கென எதையும் ஸ்தாபித்துக் கொள்ள வேண்டுமென்ற ஆசையில்லாதவள்.

சின்ன அமலம் இதற்கு எதிரிடையான குணமுடைய பெண்.

ஈசாக் விசுவாசமான ஊழியன். அவனுடைய உலகம் காடு. விளைகளில் விளைகிற பயிர்களுக்காகவும் ஆடு, மாடுகளுக்காகவுமே உலகத்தில் வாழ்கின்றவன்.

எஸ்தர் இவ்வளவு பெரிய குடும்பத்தை நிர்வகித்து வருகிறவள்.

பாட்டி ஒரு காலத்தில் எல்லோரையும் சீராட்டினவள். இப்போது உபயோகம் இல்லாதவள். பிழைக்கப்போகிற இடத்துக்குக் கூட்டிக் கொண்டு போக முடியாது இருப்பவள்.

முன்னெல்லாம் சாப்பாட்டு நேரம் அந்த வீட்டில் ஆனந்தமாக இருந்தது. இப்போது நெல் அரிசிச் சோறு கிடைக்கவில்லை. கம்பையும் கேப்பையும் கொண்டுதான் சமையல்.

பக்கத்து வீடுகளில் எல்லாம் ஊரை விட்டுக் கிளம்பிப் போய்விட்டார்கள். மேலத்தெருவில் ஆளே கிடையாது. இனிமேல் இந்த ஊரில் என்ன இருக்கிறது ? சாத்தாங்கோயில்விளையிலும் திட்டி விளையிலும் மாட்டைவிட்டு அழித்தாயிற்று. கூழ் காய்ச்சவும் வீட்டுச் செலவுக்கும் வரவரத் தண்ணீர் கிடைப்பது அருகிவிட்டது.

காடு மறைந்து கொண்டிருந்தது. விளைச்சலும் இறவைக் கிணறுகளில் மாடுகளின் கழுத்துச் சதங்கை சத்தமும் கண் முன்னாலேயே கொஞ்சகாலமாய் மறைந்துவிட்டன.

‘நீயும் உனக்குப் பிரியமானவர்களும் இங்கிருந்து போவதைத் தவிர வேறே வழியென்ன ? இன்னும் மழைக்காகக் காத்திருந்து மடிவீர்களா ? ‘-எஸ்தர் சித்திக்கு இருட்டு சொன்னது.

யாருக்குமே பற்றாத சாப்பாட்டைத் தட்டுகளில் பறிமாறினாள் எஸ்தர் சித்தி. குழந்தைகளுக்கும் கூடப் போதாத சாப்பாடு.

‘நீங்க ரெண்டுபேரும் ஒங்க வீடுகளுக்குப் போய்க்கிங்க. புள்ளையளயுங் கூட்டிட்டுப் போங்க ‘ – பெரிய அமலத்தையும் சின்ன அமலத்தையும் பார்த்துச் சொல்கிறாள் எஸ்தர் சித்தி.

‘நீங்க ரெண்டுபேரும் எங்கூட வாங்க. மதுரையில போய்க் கொத்தவேல பார்ப்போம். மழை பெய்யுந்தன்னியும் எங்ஙனயாவது காலத்த ஓட்ட வேண்டியதுதானே! ஈசாக்கும் வரட்டும். ‘

‘பாட்டி இருக்காள ? ‘

– டேவிட் கேட்கிறான்.

பதிலே சொல்லவில்லை எஸ்தர்.

அன்றைக்கு ராத்திரியில் சுமார் ஒரு மணிக்கும் மேல் வறட்சியான காற்று வீச ஆரம்பித்தது. அப்போது நடுசீட்டில் குழந்தைகளிடத்தில் படுத்திருந்த எஸ்தர் சித்தி எழுந்து போய்ப் பாட்டியின் பக்கத்தில் படுத்துக்கொண்டாள்….

***

பாட்டியைக் கல்லறைத் தோட்டத்திற்குக் கொண்டு போகிறதுக்கு, பக்கத்து ஊரான குரும்பூரிலிருந்து ஒரு பழைய சவப்பெட்டியை மிகவும் சொல்பமான விலைக்கு, ஈசாக்கே தலைச்சுமையாக வாங்கிக் கொண்டு வந்தான்…

யாரும் அழவே இல்லை. மாறாகப் பயந்து போயிருந்ததை அவர்களுடைய கலவரமான முகங்கள் காட்டின…

எஸ்தர் சித்திக்கு மட்டும், பாட்டியின் ஈரம் நிரம்பிய கண்கள் கூரையைப் பார்த்து நிலைகுத்தி நின்றது அடிக்கடி ஞாபகத்துக்கு வந்து கொண்டே இருந்தது..

***

கண்களில் இமைகளைச் சுற்றி ஈரம் கசிந்து கொண்டிருந்தது பாட்டிக்கு. எஸ்தர் சித்தி வீட்டில் எல்லோரும் தூங்கியானபிறகு அடிக்கடி கைவிளக்கைத் தூண்டிக் கொண்டுவந்து பார்ப்பாள். அந்த வெளிச்சத்தில், அவள் கண்களின் ஈரத்துக்குப் பின்னே அழியாத நம்பிக்கை இருக்கும்…

இவ்வளவு தீவிரமாக நம்பிக்கைகொண்டு உறக்கமின்றிக் கூரையைப் பார்த்துக் கொண்டிருக்கிறவளை விட்டுவிட்டுப் போவதைத் தவிர வழி என்ன ? ஈசாக் துணையாக இருப்பானா ?

***

பாட்டியை என்ன செய்வதென்ற பிரச்சனையை எஸ்தர் சித்திதான் எதிர் கொள்ளவேண்டியிருக்கிறது. எதிர் கொள்கிறாள். தீர்த்து வைக்க வேண்டியதாக இருக்கிறது. தீர்த்து வைக்கிறாள். பாட்டியின் இருப்பு இவர்கள் பஞ்சம் பிழைக்கப் போகிறதற்கு முன் கேள்வியாகிறது. அதற்கு ஒரு விடை காண வேண்டியதிருக்கிறது. அந்தக் குடும்பத்தில் எஸ்தர் சித்தி ஒருத்திதான் இதை எதிர் கொண்டு சமாளிக்கத் திராணி கொண்டவளாக இருக்கிறாள். கடினச் சித்தம் கொண்டு பாட்டியின் இருப்பை முடித்து வைக்கும்படி ஆகிறது அவளுக்கு.

காலில் காயம்பட்டு ஓட முடியாத பந்தயக்குதிரை சுட்டுக் கொல்லப்படுகிறது. அதன் இருத்தல் அர்த்தமற்றதாகப் போகையில் இப்படி முடிவு நேர்கிறது. குணப்படுத்தமுடியாத நோயின் கொடுமைக்கு ஆளாகிற உயிர், போரில் குண்டடிபட்டு பிழைப்பது கஷ்டம் என்கிற அலவுக்குள்ளாகும் சிப்பாய் இவர்களுக்கெல்லாம் Mercy Killing இருக்கிறது. இதே போல பாட்டிக்கும்.

வண்ணநிலவன் அதிகமான அன்பை பிரசாரம் செய்பவர், பொதுவில். இங்கே இப்படியாக இருக்க நேரும் ‘அன்பு ‘. பாட்டியை என்ன செய்வது ? விட்டுவிட்டுப் போகவும் முடியாது. பிறகு என்ன செய்யலாம். ‘கருணைக் கொலை ‘தான் செய்யத் தோன்றுகிறது எஸ்தர் சித்திக்கு. வேறே வழியில்லை. அவள் பெரிய அமலத்தையும் சின்ன அமலத்தையும் அவர்கள் பிறந்த வீட்டுக்குப் போகச் சொல்லிவிடுகிறாள். அகஸ்டினையும் டேவிட்டையும் ஈசாக்கையும் பஞ்சம் பிழைக்கக் கூட்டிக்கொண்டு போக முடிவு செய்கிறாள். பாட்டியை என்ன செய்வாள் ?

பாட்டியின் முடிவு சூசகமாகத்தான் காண்பிக்கப் படுகிறது. சிலவற்றை பூடகமாகத்தான் பேச வேண்டியிருக்கிறது. அந்த உயிரின் ‘விடுதலை ‘ அப்படியானது.

படிக்காத பெண்ணின் ஜெபம், வாய்க்காலுக்கு அப்பால் வளராத ஊர், இளநீல வர்ணச் சுவர்கள், ஒரு வெள்ளை வெயில், உயிர் பெற்றுவிட்ட இருட்டு, ஆட்டுபிழுக்கை மணம் கலந்த காற்று, ரயில்வே ஸ்டெஷனில் தண்ணீர் பிடிப்பது, தண்டவாளத்தின் மீதேறி மந்தையாக கடந்து போகும் ஆடுகள் – காட்சிச் சித்தரிப்புகளெல்லாமே கதையம்சத்தில் கலந்திருப்பவை.

வழக்கமான கதையைக் காட்டிலும் இதில் விவரணங்கள், தகவல்கள் அதிகப்பங்கு வகிக்கின்றன. இவை கதையை தீவிர கதிக்கு இட்டுச் செல்வதாகவே அமைந்திருக்கின்றன.

நிறைய பாத்திரங்களும் அநேக விஷயங்களும் உள்ள இக்கதையின் உருவொழுங்கு சிதையாது, உருவ அமைதி கெடாது இருப்பது உண்டுபண்ணிக் கொண்டதாக இருக்க முடியாது. தன்னியல்பில் கூடிவந்ததாகவே இருக்கவேண்டும்.

இந்தக் கதையின் நடை ‘கடல்புரத்தில் ‘ போல பைபிள் நடையில்லை யெனினும் பெரிதும் அதன் சாயலினான அமைதியும் எளிமையும் உள்ளது. அவனூர், அண்டை வீட்டார் கதைகளைவிடவும் பைபிள் சாயல் குரைவு.

இல்லாமையில் நேர்கிற நொம்பலங்கள், வறுமை, தரித்திர நிலையில் இருக்கும்படியான வாழ்வு, இவற்றைச் சரியாகச் சொல்கிற படைப்புகள், தமிழில் மிகமிகச் சொற்பம். இவை கலை இலக்கியமாவது கஷ்டம் என்பதோடு, சரியாக எழுதுபர்கள் இல்லை என்பதும் இன்னொரு உண்மை. எஸ்தர் இலக்கியமாகியிருக்கிறது என்றால், இதன் பின்னணியில் இந்தக் கலைஞனுக்கு இருக்கும் இது போன்ற வாழ்பனுபவமே காரணம். அனுபவ வறுமை யுள்ளவன் ஒருநாளும் கலைஞனாக மாட்டான். நிறையச் செய்யலாம். செய்து ?

இலக்கியம் செய்வது இல்லை. படைப்பது. எஸ்தர் – படைப்பு. படைப்பாளிகளாக விரும்பும் இளைய தலைமுறையினர் தெரிந்து கொள்ளவேண்டிய படைப்பு.

***

பிரான்ஸிலிருந்து வெளிவரும் மெளனம்- கலை இலக்கிய இதழிலிருந்து. 1994

***

திண்ணை நவம்பர் 28, 1999

***

Thinnai 1999 December 3

திண்ணை

Series Navigationதாய்ப்பாலை என்று நிறுத்துவது என்பது பற்றி >>

விக்கிரமாதித்யன்

விக்கிரமாதித்யன்