வண்ணநிலவனின் நாவல் ‘ரெயினீஸ் ஐயர் தெரு’

This entry is part [part not set] of 26 in the series 20100115_Issue

வே.சபாநாயகம்


வண்ணநிலவனின் நாவல்களில் அதிகமும் கிறிஸ்தவர்களின் வாழ்க்கையைப் பின்னணியாகக் கொண்டதாய் இருக்கும். அவர் கிறிஸ்துவர் இல்லை என்றாலும் அவர்களோடு நெருக்கமான பழக்கம் இருந்ததாலும்,
கிறிஸ்துவ சூழ்நிலையில் வசிக்க நேர்ந்ததாலும் அவர்களது வாழ்வை ஈடுபாட்டோடு அவர் எழுதநேர்ந்திருக்கலாம். ‘கடல்புரத்தில்’ நாவலில் கிறிஸ்தவ மீனவர்களின் வாழ்க்கை அசலாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. இந்த ‘ரெயினீஸ் ஐயர் தெரு’ நாவலும் கிறிஸ்தவர்கள் வாழும் தெருவில் உள்ள மக்களைப் பற்றியதாகும். ‘ரெயினீஸ் ஐயர்’ என்பவரது கல்லறையை ஒட்டிய, அவர் பெயரால் வழங்கும் ஒரு சின்னத் தெருவில் உள்ள – இரு புறமும்
எதிரெதிரே அமைந்துள்ள ஆறே வீடுக¨ளைக் களமாகக் கொண்ட நாவல் இது. இவ்வீடுகளில் வாழும் எளிய
மனிதர்களைப் பாத்திரங்களாக்கி பிரமிப்பைத் தரும் படைப்பை உருவாகியுள்ளார் வண்ணநிலவன்.

ரெயினீஸ் ஐயர் தெரு பலவற்றிலும் புரிந்து கொள்ள வியலாத வினோதத் தோற்றம் கொண்டது. தெரு மிகவும் சின்னது. இரண்டே எட்டில் எதிர் வரிசை வீட்டின் வாசல்படிக் கல்லை மிதித்துவிடலாம். அதில் வாழும் மக்கள் அனைவரும் அன்புக்காக ஏங்குபவர்கள். எல்லோரும் எல்லோரையும் நேசிப்பவர்கள். அவரவர்கள்
போக்கில் ஒருவரை ஒருவர் வெறுக்கவும் செய்பவர்கள். அதே சமயம் பிரியத்தையும் காட்டுபவர்கள். இவ்வாறான – சாதாரண மக்களின் யதார்த்தமான மனநிலையை வண்ணநிலவன் அற்புதமாய் இந்நாவலில் படம் பிடித்துக்
காட்டுகிறார்.

டாரதி என்னும் சிறுமியின் சிந்தனை ஓட்டமாக நாவல் தொடங்குகிறது. முதல் வீடு அவளுடையது.
முன் வாசலில் தெரு நடையில் அமர்ந்து தெருவை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறாள். எதிர் வீட்டு இருதயத்து டீச்சர் வீட்டுக் கோழிக் குஞ்சுகள் தெரு முனையில் குனிந்து இரை பொறுக்கிக் கொண்டிருப் பதைப் பார்க்கிறாள். ஏதோ காரணத்தால் தாய்க்கோழியைப் பிரிந்திருக்கிற அக்குஞ்சுகளின் அநாதரவான
நிலைமை அவளுக்கு வருத்தத்தை உண்டாக்குகிறது. அந்த வருத்தம் தாயில்லாமல் பெரியம்மா வீட்டில் தங்கிஇருக்கிற தன்னுடைய நிலைமையை எண்ண வைக்கிறது. தொடர்ந்து சிறுமியின் நினைவோட்டம், வெகு இயல்பான – நாமே அருகிருந்து பார்க்கிற மாதிரி எளிமையாய், நினைவோடை உக்தியில் சொல்லப்படுகிறது.

இரண்டாவது வீடு இருதயத்து டீச்சரின் நாழி ஒடு போட்ட வீடு. டீச்சரின் புருஷன் சேசய்யா
பனிரெண்டு வருஷமாய் தொண்டைப் புகைச்சலில் கிடந்து உழன்று கொண்டிருப்பவன். ஒவ்வொரு வருஷமும் மழைக் காலத்தில் ‘இந்தா போயிருவான், அந்தா போயிருவான்’ என்று மூச்சு இழுத்துக் கொண்டிருக்கும். பிறகு பிழைத்துக் கொள்வான். அவன் இரும ஆரம்பித்தால் இருதயம் கைவேலையைப் போட்டுவிட்டு ஓடி வந்து அவனை மார்பில் சாய்த்துக் கொள்ளுவாள். கல்யாணமான புதிதில் தெருவாசிகள் கண் பட்டுவிடும்படி எவ்வளவோ சந்தோஷமாய் இருந்த அவளுடைய வாழ்வு இப்போது சீரழிந்து போய்விட்டிருக்கிறது.

மூன்றாவது வீடு ஹென்றி மருதநாயகம் பிள்ளை வீடு. அவரது மகள் – டாரதி போன்ற சிறுமி – அற்புத மேரியிடம் எதிர் வீட்டு இருதயம் டீச்சர் அவள் வீட்டுப் படியேறி வந்து பள்ளிக்கு விடுப்புக் கடிததத்தைக்
கொடுத்து விட்டுப் போனதில் அவளுக்கு மிகவும் பெருமை. அவள் வீட்டு குளிர்ச்சி மிகுந்த நடைக் கல்லில் உட்கார்ந்து தெருவில் நிறைந்து கிடக்கிற, நேரத்துக்கு ஒரு வாசனை தரும் வாகைப் பூக்களைப் பார்த்தபடி
டாரதி போல சிந்தனையில் ஆழ்ந்திருக்கிறாள். அவள் வீட்டில் யாருமே சரியில்லை. அவள் அப்பா மறைமுகமாகப் பல காரியங்களைச் செய்வதாக எல்லோரும் சொல்கிறார்கள். அவள் அண்ணன் சாம்ஸன் ஒருதடவை மோசமான செய்கை ஒன்றைச் செய்வதை அவள் நேரில் பார்த்து விட்டாள். அவன் எஸ்தர் சித்தியுடன் மாடியறையில் ஒரே படுக்கை விரிப்பில் விசித்திரமாய்க் கிடந்ததைப் பார்த்து வியர்த்துப் போய்விட்டாள். அதனால்தான் அவனையும் எல்லோரும் மோசமென்று எல்லோரும் சொல்கிறார்கள் என்று தோன்றியது.

நான்காவது வீடு ஆசீர்வாதம் பிள்ளையினுடையது. தெருவிலெயே வெகுவாகப் பாழ்பட்ட வீடாக அது இருந்தது. ஆசீர்வாதம் பிள்ளையும் அவருடைய மனைவி ரெபக்காள் மட்டுமே அதில் இருந்தனர். அந்தத் தெருவிலேயே முதன்முதலாக் மேஜை அடுப்புப் போட்டது அந்த வீட்டில்தான். மாதத்தில் ஏழு தேதியிலிருந்து பத்து தேதிக்குள் அவருக்கு மணியார்டர் கொண்டுவரும் தபால்காரரைத் தவிர வேறு யாரும் அந்த வீட்டுக்கு
வருவதில்லை. ஒவ்வொரு மழையின் போதும் வீட்டில் ஒரு அறை இடிந்து விழுந்து கொண்டிருந்தது. இப்போது மீத மிருப்பதுதான் அடுப்படியாகப் பயன் பட்டு வந்தது. கூரையெல்லாம் ஓடுகள் விழுந்து சரிந்து தொங்கின.
கஷ்டமும் துயரமும் நிரம்பிய அந்தத் தம்பதியரின் கடைசி நாட்களில் ஆஸ்பஸ்திரிக்குக் கூட்டிப் போக அவர்களுக்கு யாரும் உதவுவதில்லை. அவர்களுக்கு உதவக்கூடாது என்பதில்லை; அவரவர் வீட்டிலும் ஏதாவது ஒரு கஷ்டம். ஒரே ஒருவன் – குடிகாரன் என்று யாரும் கண்டுகொள்ளாத தியோடர் மட்டும் அவ்வப்போது
வந்து அவர்களுக்கு உதவுவான். அவர்களை ஆஸ்பத்திரிக்குக் கூட்டிச் செல்ல்லும்போது மட்டும் அவன் குடிக்க மாட்டான். அவர்களுக்கு உதவுவதில் அவனுக்கு ஒரு சந்தோஷம் இருந்தது. அடுத்த கன மழையில் அவர்களது
வீட்டின் சுவர் இடிந்து விழுந்தபோதும் தியோடர் தான் அவர்களுக்கு உதவி செய்தான்.

தெரு பிரிந்து வருகிற இடத்தில் இரு புறங்களிலும் திருவனந்தபுரம் ரோட்டைப் பார்க்க இரு பெரிய
வீடுகள் இருந்தன. ஒரு புறத்து வீட்டில் காளிமார்க் கம்பனி இருந்தது. மறுபுறத்து வீடு அடிக்கடி ஆட்கள்
வசிக்காமல் காலியாகக் கிடக்கும். இந்த வீடு ஜாஸ்மின் பிள்ளையினுடைய குடும்பத்தாருக்குச் சொந்தமானது.
ஜாஸ்மின் பிள்ளை இப்போது இல்லை. அவர் இறந்து போய் கொஞ்சகாலம் ஆகி இருந்தது. அவருக்கு வெள்ளைக்காரர்கள் மீது அளவற்ற மதிப்பு இருந்தது. அவர் இறந்தபோது தியோடர் தான் வந்திருந்து எல்லா காரியங்களையும் செய்தான்.

– இப்படி ஆறு வீடுகளுக்கும் நம்மைக் கையைப் பிடித்துக் கொண்டு போவதுபோல, வீடுவீடாய்ச்
சித்தரித்தும், அங்கு வாழும் மனிதர்களது வாழ்க்கை பற்றி விவரித்தும் நம் கண்முன்னே அவர்கள் தெரிவது போல் வண்ணநிலவன் படம் பிடித்திருப்பதைப் படிக்க நமக்கு ஆயாசமே ஏற்படவில்லை. இச்சித்தரிப்புகளில் கிறிஸ்துவ மக்களின் கலாச்சாரம் பண்பாடு, எளிமை, பழக்கவழக்கம் எல்லாம் சொல்லப் படுகிறது. அதோடு பருவகால
மாற்றத்தின்போது ரெயினீஸ் ஐயர் தெருவாசிகளின் மன நிலைமையும் ரசமாக வருணிக்கப் படுகிறது.

‘வேன காலம் புழுக்கமாக இருந்தாலும், ரெயினீஸ் ஐயர் தெருவிலும், தெருக்காரர்களுக்கும் வேன
காலமே அற்புதமான காலம். வேன காலத்தை ருசித்துப் பார்க்கவே வருஷத்தின் பன்னிரெண்டு மாதங்களில்
மற்ற பத்து மாதங்களும் வாழ்ந்தார்கள். வேன காலத்துக்காக ஏக்கத்துடன் காத்திருந்து வருஷா வருஷம்
வாழ்கிறார்கள்.’ இதே போல்தான் மழைக்காலம் பற்றியும் சொல்லப்படுகிறது. ‘ரெயினீஸ் ஐயர் தெரு மனுஷர்கள்
எல்லாருமே மழையின் அடிமைகள். மழை பெரும் துக்கத்தை அளிப்பது. ஆனாலும் மழையை விரும்பாமல் போய்
விடவில்லை. மழைக் காலத்தில் பயத்தோடும் ஆனந்தத்தோடும் வீடுகளுக்குள்ளிருந்து வேடிக்கை பார்த்தார்கள்.

வண்ணநிலவன் வருணனைகள் கலாரசனை மிக்கவை. நான்காவது வீடான ஆசீர்வாதம் பிள்ளையின் வீட்டை மிகவும் ரசித்து வருணிப்பார். அங்கிருந்த அறைகளின் வாசற்படிகளில் அமைக்கப்பட்டிருந்த கல்படிகளின்
வருணனை அத்தகையது. ‘நல்ல இரண்டு ஜாண் அகலமுடையதாக அக் கல்படிகள் ஒவ்வொன்றும் அமைந்திருந்தன. அப்படிகளில் கல்தச்சன் சில தாமரைப் பூக்களைச் செதுக்கி இருந்தான். அப்பூக்களைச் செதுக்கி
யிருந்த கல்தச்சன், ரசனை மிகுந்தவன். அக் கல்படிகளில் பிருஷ்டம் அழுந்த யார் உட்கார்ந்தாலும் அதை மறக்க முடியாது. கல் பூவின் அழுந்தல், உட்கார்ந்த இடத்தில் குளிர்ச்சியோடு படிந்து போகும். எத்தனை காலத்துக்கும் பின்னே அந்தக் கல்படி ஞாபகம் வந்தாலும், அக்குளிர்ச்சி நிரம்பிய, கல் தாமரைப் பூக்களிலிருந்து அப்போதுதான் உட்கார்ந்து எழுந்தது போல இருக்கும். வெறும்கல்லில் இத்தனை பெரிய காரியம் பண்ணி வைத்திருந்தான்
கல் தச்சன்’.

பாத்திரப் படைப்புகளும் அப்படியே கண்ணில் நிற்பவை. இருதயம் டீச்சரின் அத்தையம்மாளும் சேசய்யாவின் தாயாருமான இடிந்தகரையாளின் தோற்றமும் செயல்களும் பற்றி இப்படி எழுதுகிறார்: ‘இடிந்தகரையாளுக்கு அவளது நிஜப் பெயர் என்னவென்று அவளுக்கே கூட மறந்து போயிருக்கும். அவளுக்கு இடிந்தகரையாள் என்றுதான் அங்கே பேர் வழங்கி வருகிறது. இந்திய சர்க்காரின் சென்சஸ் குறிப்புகள், வோட்டர் ஜாபிதாக்களில்
கூட அந்தப் பெயர்தான் எப்படியோ இடம் பெற்று விட்டது. அதனால் என்ன? அவள் ஒரு இந்தியப் பெண்
பிரஜை என்பது போதாதா என்ன? அவளது கருத்த தோல் இனியும் சுருங்க வழியே கிடையாது. அவளது
மார்பெல்லாம் கருத்த கருப்பட்டிப் புகையிலைத் துண்டு தொங்குகிற மாதிரி சுருங்கித் தொங்க ஆரம்பித்துப் பலகாலமாகி விட்டது. இடிந்தகரையாளுக்கு சதாவும் காதில் கோழி இறகை வைத்துத் திரித்துக் குடைந்து
கொண்டே இருக்க வேண்டும். பெரிய சேவலுடைய இறகு, சின்னக் குஞ்சுகளுடைய இறகு, நன்கு விளைந்த கோழிகளுடைய இறகு என்று எல்லா தினுசு இறகுகளையும் தினுசு தினுசாகப் பிரித்துக் கட்டி வைத்திருப்பாள். அந்த இறகுக் கட்டுகள் அவளுடைய படுக்கைத் தலைமாட்டிலேயே பத்திரமாக இருக்கும். நன்றாக விளைந்து போன ஏழு எட்டு வயது சேவல்களுடைய இறகுகளின் பேரில் அவளுக்குத் தனிப் பிரியம் உண்டு. வயசான சேவல் யார் வீட்டில் செத்தாலும் அந்த இறகுகளை அந்த வீட்டுக் குழந்தைகள் கட்டாகக் கட்டிக் கொண்டு வந்து இடிந்தகரையாளிடம் கொடுத்து விடுவார்கள். அந்த இறகுகளைப் பார்த்து அவள் சந்தோஷப்படுகிறது போல யாராலும் அவ்வளவு சந்தோஷப்பட முடியாது. உலகமே தன்னுடைய கைக்குள் கோழி இறகாக ஆகி
விட்ட களிப்பு அவளுடைய சுருக்கம் விழுந்து போன முகத்தில் தெரியும்’. இப்படித்தான் எல்லா பாத்திரங்களும், கொஞ்சம் கூட மிகையாகத் தெரியாமல் அசலாக நாமே நேரில் கண்டு அனுபவிக்கிற மாதிரி சித்தரிக்கப் பட்டுள்ளன.

நடை ஒரு கூடுதல் கொடை வண்ணநிலவனுக்கு. அசோகமித்திரனின் நடை போல முன்னுதாரணம்
காட்ட முடியாத, அவருக்கேயான – இதமான வாசிப்பு சுகம் தரும் எளிய நடை. அலட்டல், சாமர்த்தியம்
காட்டல், அநாவசியமான அலங்காரம், வாசிப்பைத் தடைசெய்யும் சிடுக்கு-எதுவும் இல்லாத, வெகு எளிமையாய்
சாதாரண நாலு முழ வேட்டியும், அரைக்கைச் சட்டையும் உடுத்துக்கொண்டு நம் கண்முன்னே அமைதியாய்
நடந்து போகும் ஒரு சாமானியனைப் பார்ப்பது போன்று, எரிச்சலோ ஆயாசமோ தராத நடையானதால், வாசிப்பு இதமாக இருக்கிறது. ஒரே வாசிப்பில், கீழே வைத்து விட இடம் தராத ஓட்டமும், விறுவிறுப்பும் கொண்ட எழுத்து.

கதை என்று பார்க்கப் போனால், கேட்பவருக்கு எடுத்துச் சொல்கிற மாதிரியான – எடுப்பு, தொடுப்பு, முடிவு என்று இல்லைதான். ஒரு தனிப்பட்ட கதாநாயனோ, கதாநாயகியோ அவர்கªது சாகசங்களோ
கொண்டதில்லைதான். ஆனால், ஒரு வாழ்க்கைமுறையை உள்ளது உள்ளபடியே மிகையின்றி யதார்த்தமாகக் காட்சிப்படுத்தி இருப்பதுதான் இப்படைப்பின் சுவாரஸ்யத்துக்குக் காரணம். அளவில் சிறியதாக இருந்தாலும் இந்நாவல் வண்ணநிலவனின் படைப்புத் திறனுக்கு மேலும் ஒரு சான்றாக அமைந்துள்ளது எனலாம். 0

நூல்: ரெயினீஸ் ஐயர் தெரு.
ஆசிரியர்: வண்ணநிலவன்.
வெளியீடு: கிழக்கு பதிப்பகம், சென்னை.
விலை: ரூ.70/-

Series Navigation

வே.சபாநாயகம்

வே.சபாநாயகம்