‘வண்ணநிலவனி’ன் கடல்புரத்தில் ஒரு பார்வை

This entry is part [part not set] of 21 in the series 20090122_Issue

வே. சபாநாயகம்


கடலோர மீனவர் வாழ்வை அசலாகச் சித்தரித்த ‘தகழி’யின் ‘செம்மீன்’ நாவலுக்குப் பிறகு அந்த வாழ்க்கையைச் சொல்லும் பல நாவல்கள் வந்திருந்தாலும் ‘வண்ணநிலவனி’ன் ‘கடல்புரத்தில்’ நாவலே என்னை வெகுவாகக் கவர்ந்த நாவல். ‘செம்மீனை’ப் போலவே- ஒரு அழகான காதல், சோகத்துடன் முடிவதுடன்
ஆசாபாசங்களும், நம்பிக்கைகளும், துரோகங்களும், போராட்டங்களும் நிறைந்த அவர்களது வாழ்வின் யதார்த்தமான, மிகைப்படுத்தாத சித்தரிப்புகள் நெஞ்சை உருக்குவதாகவும், நீண்ட நாட்கள் நெஞ்சில் அகலாமல் நிலைபெற்று நிற்பதாவும் உள்ளது.

‘தலித்தியம்’, ‘பெண்ணியம்’ ஆகியவற்றை அவர்கள்தான் அசலாக எழுத
முடியும் என்பதற்குச் சவாலாக, வண்ணநிலவன் இந்த நாவலில் பரதவர் வாழ்க்கையை அவரே அனுபவித்தது போல, கூடுவிட்டுக் கூடுபாயும் சித்தர் போல அவரே மானசீகமாய் பரதவராக வாழ்ந்து வாசகர்க்கும் அந்த அனுபவத்தை ஏற்படுத்துவதில் வெற்றி கண்டிருக்கிறார்.

நாவலின் அடிநாதம் அன்புதான். ‘மனிதர்களுக்கு அன்பு என்கிற பெரிய வஸ்து அளிக்கப்பட்டிருக்கிறது. மனிதனை நெருங்குவதற்கு எவ்விதத் தடையுமில்லை. எவ்வளவோ இழந்தாலும் பெறுகிறதற்கும் ஏதாவது இருந்துகொண்டேதான்
இருக்கிறது’ என்பதுதான் இந்த நாவலின் மூலம் அவர் சொல்லும் செய்தி எனலாம்.

கதை மெதுவாக, அவரைப் போலவே ஆரவாரமின்றி – ஆரம்பிக்கிறது. எல்லா இடங்களிலும் காலம் காலமாய் பூர்வீக சொத்தை விற்பதில் அப்பாவுக்கும் மகனுக்கும் ஏற்படுகிற உரசலோடு கதை தொடங்குகிறது. அப்பா குரூஸ் தன் பரம்பரைத் தொழிலான மீன்பிடித் தொழிலை விட்டு விட்டு, நகரத்தில் ஆசிரியராக வேலை செய்யும் மகன் செபஸ்தியுடன் செல்ல விரும்பவில்லை. அவன் சொல்கிறபடி பரம்பரைச் சொத்தான வள்ளத்தையும், வீட்டையும் விற்றுவிட்டு நகரத்தில் கடை வைத்துப் பிழைக்க மறுக்கிறான். அம்மா மரியம்மைக்கும் அவளது சினேகிதனான
வாத்தியைவிட்டு இடம் பெயர விரும்பவில்லை. தங்கை பிலோமிக்குட்டிக்கு அவளது
காதலன் சாமிதாஸோடு அங்கேயே தங்குவதற்குத்தான் விருப்பம். இதில் கசப்பும் மறுப்பும் அதிகமிருப்பினும் அவர்களுக்குள்ளான உறவு கசந்து விடுவதில்லை. நிறைய ஏமாற்றங்களும் இழப்புகளும் ஏற்படுகின்றன. சாமிதாஸிடம் தன்னை இழந்த பிலோமி அவன் வேறு திருமணம் செய்ததும் ஏமாற்றத்துக்குள்ளாகிறாள். அவளது அம்மா
மரியம்மை அதிகம் குடித்துவிட்டு இடறி விழுந்து இறக்கிறாள். மனைவியின் இழப்போடு, படகுக்காரர்களுக்கும் லாஞ்சுக்காரர்களுக்கும் எழும் பிரச்சினையால் மேலும் அங்கே தங்கி தொழிலை நடத்த முடியாத நிலையைப் புரிந்து கொண்ட குரூஸ், வீட்டையும் வள்ளத்தையும் விற்றுவிட்டு மகனுடன் செல்ல முடிவு செய்கிறான். ஆனால் வீட்டையும் வள்ளத்தையும் விற்றதிலும் ஏமாற்றம் ஏற்படுகிறது. புத்தி பிறழ்ந்தவனாய் குடித்துவிட்டுத் திண்ணையில் எப்போதும் விழுந்து கிடக்கிறான். பிலோமி சாமிதாஸின் துரோகத்தை
நினைத்து மறுகாமல், ஆதரவு காட்டிய அம்மாவின் சினேகிதன் வாத்தியின் வீட்டிலேயே தன் நினைவுகளுடன் வாழ்க்கையைத் தொடர்கிறாள் என்பதாகக் கதை முடிகிறது.

வண்ணநிலவனின் கதைகளிலும் நாவல்களிலும் வரும் மாந்தர்கள் மறக்க முடியாதவர்கள். சா.கந்தசாமி குறிப்பிடுவதைப் போல் ‘இயல்பாக வளர்ந்து, இயல்பாகப் பேசி, இயல்பாகவே நம் மனதில் இடம் பிடித்துக் கொள்கிறார்கள்’. படித்த பின்னும்
நம் நெஞ்சைவிட்டு இறங்க மறுப்பவர்கள். அவரது பாத்திரப்படைப்பு அத்தகையது. இந்த நாவலிலும் அப்படி நம் நினைவில் நீங்கா இடம் பெறுபவர்கள் நாவலின் மையப்பாத்திரமான பிலோமிக்குட்டியும் அவளது அப்பா குரூஸ், அம்மா மரியம்மை, அவளது சினேகிதன் வாத்தி ஆகியோர்.

வண்ணநிலவன் படைக்கும் பெண்கள் மிகவும் வித்தியாசமானவர்கள். அவர்களது ஏமாற்றங்கள் நம்மையும் வருத்துபவை. ஆனால் அவர்கள் அதை இயல்பாய் எடுத்துக் கொள்பவர்களாக, வாழ்க்கையின யதார்த்தத்தை அதிர்ச்சி இன்றி ஏற்றுக்
கொள்பவர்களாக இருக்கிறார்கள்.

இந்நாவலில் வரும் பிலோமிக்குட்டி ஒரு அற்புதமான பாத்திரம். முதலில் அவளது மனித நேயத்தைக் குறிப்பிட வேண்டும். பரதவப் பெண்களின் பாவப்பட்ட
வாழ்க்கையை எண்ணி அவள் வருந்துகிறாள். பரிதாபத்துக்குரிய பெண் கேதரின் அவளது கணவனால் தினமும் அடித்துக் கொடுமைப் படுத்தப்படுவதை, அவளது பெண்மை அவமதிக்கப்படுவதை – காணும்போது, ‘இது எவ்வளவு பெரிய கொடுமை. இதையெல்லாம் அழிக்க முடியாமல் கடலம்மை பார்த்துக் கொண்டு சும்மாதானே இருக்கிறாள்?’ என்று மறுகுகிறாள். அடுத்து அனைவரிடமும் அவள் காட்டும் நேசம். குழந்தைகள் அவளிடம் ஒட்டிக் கொண்டு பிரிய மறுக்கின்றன. சிநேகிதிகளிடம் அவள் காட்டும் பிரியங்களும், அக்கறைகளும் பலனை எதிர்பாராதவை. அண்ணனால் வஞ்சிக் கப்பட்ட ரஞ்சியிடம் அவள் கொண்டுள்ள நட்பும், அவளது பிரசவத்துக்கு அருகிருந்து உதவுவதும் அவளது நேசத்துக்கு இன்னொரு சான்று. வாத்தியிடம் உறவு வைத்துக் கொண்டிருந்த அவளது அம்மாவையும் அவளால் நேசிக்க முடிகிறது. வாத்தியைப்
புரிந்து கொண்டு அவர் காட்டும் புதிரான அன்பை ஏற்றுக் கொள்ள முடிகிறது.
காதலன் சாமிதாஸைக் காண்பதே பெரிய இன்பமாகக் கருதும் அவள் அவனுடன் தனக்குத் திருமணம் நடக்காது என்று தெரிந்தவுடன் அதற்காக அதிர்ந்து போகாமல் அவனோடு உடலுறவு கொண்டதையே போதும் எனக் கொண்டு எல்லா இன்பங்களை யும் கண்டு தெளிந்தவளாகி விடுகிறாள். நிஜ வாழ்க்கையில் வெறும் உணர்ச்சிக்கு இடம் இல்லை என்பதை அவள் எப்படியோ தெரிந்து கொண்டு விட்டாள். வாழ்க்கையை உள்ளது உள்ளபடியே உணர முடிந்தது அவளால். வாழ்க்கை சந்தோஷமானதாக இல்லாவிட்டாலும் அது சந்தோஷமானதுதான் என்று நம்புவதற்குத் தயாராகி விட்டாள். அதன் பிறகு அவளது உலகம் எல்லோரையும் நேசிக்கும் உலகமாகி விடுகிறது.

பிலோமிக்குட்டியின் அப்பா குரூஸ் மிக்கேலுக்கு கடல் அம்மையும் அதன் மச்சங்களும்தான் விசுவாசிகள். அவனது பிழைப்புக்கு உதவும் வள்ளம் அவன் அப்பன்
காலத்தது. அந்தமாதிரி ஜாதி மரமே கிடைக்காது என்பது அவனது தீர்மானமான எண்ணம். அந்த வள்ளம் தந்த மச்சங்களைக் கொண்டுதான் அவன் மகன் செபாஸ்தி
யான் படித்து வாத்தி வேலைக்குப் போனான். அந்த நன்றி விசுவாசமில்லாமல் அந்தப் பரம்பரைச் சொத்தை விற்கும்படி மகன் மல்லுக்கு நிற்பதை அவனால் சகித்துக்
கொள்ள முடியவில்லை. தான் பிறந்த மணப்பாடு வீட்டை விட்டுவிட்டு மகனுடன்
நகரத்துக்குப் போக அவனுக்க விருப்பமில்லை. மணப்பாட்டுக் கோயில் கல்லறைத்
தோட்டத்தில்தான் அவனது பிணத்தை அடக்கம் செய்யவேண்டும் என்பதில் அவன்
பிடிவாதமாக இருந்தான். பிறந்த மண்ணின்மீதான அவனது பாசம் அப்படி. மனைவி
மரியம்மையிடம் அளவுகடந்த ஆசை கொண்டிருந்தான். ஆனால், அவள் அவனுக்குத் துரோகம் செய்யாதுபோனாலும் வாத்தியோடு சினேகம் வைத்திருப்பதில் அவனுக்கு வெறுப்பு. சமயத் தில் அதற்காக அவளை அடித்து நொறுக்கி இருக்கிறான். ஆனாலும் அவளை ஒருநாளும் ஒதுக்க அவனால் முடியவில்லை. அவள் அதிகம் குடித்து விட்டு இடறி விழுந்து இறந்த போது அவனுக்குத் தாளவில்லை. அவன் அதிகமும் பாசம் வைத்திருந்த மகள் பிலோமியின் கல்யாணம் மட்டுமே எஞ்சியிருந்தது. ஆனால் அதை அவன் நிறைவேற்று முன் லாஞ்சிக்காரர்களுக்கும் படகுக்காரர்களுக்கும் ஏற்பட்ட
மோதலில் உயிர்ப்பலி விழவும் அவனுக்கு இனி அங்கு வாழ்க்கை சாத்தியமில்லை என உணர்ந்து தான் பிரிய மறுத்த வீட்டையும் வள்ளத்தையும் விற்றுவிட்டு மகனுடன் போக முடிவு செய்தபோது, வாங்கியவர்கள் பணம் தராது ஏமாற்றிவிட மனம் பிறழ்ந்தவனாய் மகளுக்குப் பாரமாகிப் போகிறான்.

மரியம்மையும், நாவலில் கொஞ்சமே வந்தாலும் மறக்க முடியாதவள். அவள் கணவனுக்குத் துரோகம் செய்யவில்லை என்றாலும் அவனுக்குக் கொஞ்சமும் பிடிக்காத வாத்தியுடனான உறவை அவள் சாகும்வரை விடவில்லை. ‘அவளது ஆசைகள் என்ன
தான் என்று குரூஸ் அறியான். ஒருவேளை இதுபற்றி அவளுடைய வாத்திக்குத் தெரிந்திருக்கலாம்’. அவளுக்கு, நகரத்துப் பெண்கள் மாதிரி புதுப்புது உடைகள் உடுத்தி
சிங்காரித்துக் கொண்டு கோயிலுக்கும், கடைகண்ணிக்கும் சினிமாவுக்கும் போவதை
விட்டுவிட்டு நாத்தம் பிடித்த மீன்களைத் தொட்டுக்கொண்டிருப்பதா என்று ஆதங்கம். அதனால் மகனுடன் நகரத்துக்குச் செல்லவே விரும்புகிறாள். ‘அவளது மரணம்தான் அவள் மீது மற்றவர்கள் கொண்டிருந்த பிரியத்தைக் காட்டிக் கொடுத்தது. அவள் இருந்தவரைக்கும், தன்னை யாருக்கும் பிடிக்காது வாத்தியைத் தவிர என்றுதான்
நினைத்திருந்தாள்’. குரூஸ் அவளது மரணத்தால் எவ்வளவு சோகமுற்றான் என்பது அவளுக்குத் தெரியாது. ‘எனக்கு இந்த மண்ணுல இனிமே என்ன ஒறவு இருக்கு? அவளே போய்ட்டா…’ என்று உண்ணாமல், கடலுக்குப் போகாமல் நிறையக் குடித்து
விட்டு துக்கத்தை மறக்க முயன்றான். ‘அவளைக் கொடுமைக்காரி என்று அவன் ஒரு
நாளும் நினைத்தில்லை. அவளுக்கென்று ஒருஅழகு இருந்தது. அது அவளுடைய உடம்புதான். அவளுடைய மடியில் தலைசாய்த்துக் கிடந்தால் போதும், எந்த புருஷனுக்கும் மனசில் வீரமும் விவேகமும் விளையும். அவள் ஒரு அதிசயமான பறைச்சி’ என்பதுதான் அவனது எண்ணம். பாவம் மரியம்மை! குரூஸ் அவள்மீது உள்ளுர அத்தனை பிரியமாய் இருந்ததை அறியாமலே போய்விட்டாள்.

முக்கிய பாத்திரந்தான் என்றில்லை – மரியம்மையின் சிநேகிதனான வாத்தி,
பிலோமியின் தோழி ரஞ்சி, கடற்கரையில் எது நடந்தாலும் சாட்சியாய் இருக்கிற தையல் வேலைக்காரி பெரிய மாமியா, எல்லோருக்கும் பிரியமான. மணப்பாட்டு
மக்களால் சேசுவுக்கு இணையாய் மதிக்கப்படுகிற கிராமத்தின் மூத்த ஜீவன் பவுலுப்
பாட்டா, கடன் கொடுத்து வாங்கினாலும் அனுசரணையுடன் பரதவர்களின் நல்லது கெட்டதுகளில் பங்கேற்கும் மீன் தரகர் – எல்லோருமே கொஞ்ச நேரமே கதையில் வந்து போனாலும் மறக்க முடியாதவர்கள். வண்ணநிலவனின் பாத்திரப் படைப்புத் திறன் அப்படி.

மனிதர்கள் மட்டுமல்ல – கடலும் அதில் மிதக்கும் வள்ளங்களும், அங்கு
நடக்கும் பண்டிகைகளும்கூட வண்ணநிலவனின் கைவண்ணத்தால் நம்மால் மறக்க முடியாத இடத்தைப் பிடித்து விடுகின்றன. ‘வள்ளம் ஒரு ஜீவனுள்ள சாட்சி. அது
பேசாது. அது சொல்லுகிற கதைகளைக் கேட்டால் பறைக்குடியே தீப்பிடித்துவிடும். எல்லா வள்ளங்களுக்கும் எல்லாம் தெரிந்திருக்கிறது. ஆனால், தங்களுடைய எஜமான் களுடைய நன்மையைக் கருதி பேசாமலிருக்கின்றன’ என்று ஏதோ உயிருள்ள ஜீவனைப் போல வள்ளங்களைக் காட்சிப் படுத்துகிறார்.

கடல் அவர்களுக்கு தாய். கடலன்னையை அவர்களுடைய சேசுவுக்கும்
மரியாளுக்கும் சமமாகச் சேவிக்கிறார்கள். பரதவக்குடி முழுதும் அவளது பிரியத்துக்
குரியவர்கள். ‘அந்தக் கடல்புரத்தில் எந்தக் குழந்தை பிறந்தாலும், எவ்வளவு பெரிய
வீட்டில் பிறந்திருந்தாலும் அது முதலில் தன் அம்மையினுடைய முலையைச் சப்புவது
கிடையாது. பூமியில் விழுந்ததும் அதனுடைய வாயில் உவர்ப்பான கடல் தண்ணீரைத்
தான் ஊற்றுகிறார்கள். அந்தத் தண்ணீரானது ஆண் பிள்ளையானால், அவனுக்கு வலிய காற்றோடும் அலைகளோடும் போராட உரமளிக்கிறது; பெண் பிள்ளைகளுக்கு,
வாழ்க்கையில் எதிர்ப்படுகிற ஏமாற்றங்களையும் துக்கங்களையும் தாங்குவதற்கான மன தைரியத்தைக் கொடுக்கிறது. அவர்கள் ஒழுக்கங்கள் சீரானதில்லைதான். ஆனால் கடலம்மை அவற்றையெல்லாம் சகித்துக் கொண்டிருக்கிறாள். ஏனென்றால் அவளுடைய பிள்ளைகளின் மீது கொள்ளைப் பிரியம் அவளுக்கு’. கடல் பற்றிய இத்தகைய
சித்திரத்தினூடே பரதவர் வாழ்க்கைமுறைகளையும் நம்பிக்கைகளையும் நமக்குச்
சொல்லுகிறார்.

இன்னும் ‘நீர்க்காக்கைகள் கூட்டமாய் வலமிருந்து இடமாகப் பறந்து
போனால் கெட்ட சகுனம் என்ற நம்பிக்கை, மணப்பாடுக் கிராமத்துக் கோயில் மணி யாராவது இறந்து போனால் அவரது வயதின் எண்ணிகைக்கேற்ப அத்தனை முறை
ஒலிப்பது போன்ற எத்தனையோ தகவல்கள்! எல்லாமும் நமக்கு அலுக்க வில்லை.

தல வருணனைகளும், இயற்கை வருணனைகளும் நெஞ்சுக்கு இதமாய்
வாசிக்கச் சுகமாய் உள்ளன. உதாரணத்துக்கு: ‘கடலிலிருந்து கூட்டங்கூட்டமாக
மேகங்கள் மேற்கே சென்று கொண்டிருந்தன. யாரோ எய்த வர்ண அம்பைப் போல
வானவில் மேகங்களைக் கிழித்துப் புறப்பட்டிருந்தது’; ‘இப்போது வெயிலைக் கண்டு மஞ்சு விலக ஆரம்பித்திருந்தது. குச்சியால் கலக்கி விட்டது போல, திட்டுத்திட்டாய்
கலங்கிப் போய்க் கொண்டிருந்தது மஞ்சு’; ‘வானத்தைப் பார்த்தாள். நிலவுத் துண்டு
மேகங்களினூடே நடந்து கொண்டிருந்தது.’

வண்ணநிலவனின் வெற்றிக்கு அவரது லகுவான, சிக்கலில்லாத எழுத்து
நடையும் ஒரு காரணம். மென்மையும் குளுமையும் உயிர்த்துடிப்பும் கொண்டது அவரது மொழிநடை. கடல்புரத்து ரசமான வட்டார மொழியும் வெகு இயல்பாக, நமக்கு முன்பே பரிச்சயமானது போல அமைந்துள்ளது. ‘குரலை உயர்த்தாமல் கதை சொல்லும் பாங்கும், துல்லியமான விவரணைகளும் கச்சிதமான கதை வடிவமும் அவருக்கென்றே அமைந்தவை. அவர் எழுதியது குறைவுதான். ஆனால் அவை காட்டும் உலகம் மிகப் பெரியதும் மாறுபட்ட மனவெழுச்சிகளும் நுட்பங்களும் கொண்டவை. தான் வாழும்
காலத்தின் கலாச்சார மாற்றங்களுக்கான எதிர்க் குரலைப் பதிவு செய்துள்ள பெருங்கலைஞன் அவர்’ என்பார் எஸ்.ராமகிருஷ்ணன்.

இந்த நாவல் எழுதப்பட்டு பல ஆண்டுகள் ஆனபோதிலும், அவரது மற்ற படைப்புகளைப் போலவே இன்றைக்கும் வாசகர்களோடு அந்தரங்கமாய்ப் பேசிக்
கொண்டும் வாழ்வின் நுட்பங்களைப் பகிர்ந்து கொண்டும் இருப்பதுதான் வண்ண
நிலவனின் சிறப்பு. இன்னும் பலகாலத்துக்கும் சிறந்த நாவலாகப் பேசப்படுவதாக
இது நிலைத்து நிற்கும்.


Series Navigation