வணக்கம் துயரமே! அத்தியாயம் – 7

This entry is part [part not set] of 43 in the series 20061019_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா


அத்தியாயம் – 7

அதற்குப் பிறகு, நடந்தவற்றை இத்தனை தெளிவாக என்னால் ஞாபகப்படுத்தமுடிகிறதை நினைத்தால் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. நல்லது எது கெட்டது எது, என்பதில் மனது தெளிவாக இருந்தது. வேறு யாராவது என்னைப்போல மனதில் இத்தனை விகற்பமின்றி இருந்திருக்கமுடியுமா என்பது கேள்வி, ஏன் நானே கூட இதுவரை அப்படியெல்லாம் இருந்ததில்லையென்றுதான் சொல்லவேண்டும். எதிலும் நான் முந்தியென்கிற மனோபாவமும், வெளிப்படையான எனது சுயநலமும் இயற்கை எனக்களித்த வரம், வாழ்க்கையில் இதுவரை அவற்றைத்தான் கடைபிடித்து வந்திருக்கிறேன். ஆனால் கடந்த சில தினங்களாக என்ன நடந்தது? எனக்கு அதிர்ச்சிதரவேண்டும், அதன்மூலம் நானும் கொஞ்சம் மூளையைக் கசக்கிக்கொள்ளவேண்டும், பிரச்சினைகளை சமாளிக்கவேண்டும் என்பது போலத்தானே காரியங்கள் நடந்தன. ஒருவகையில் எனது சுயபரிசோதனைக்கான வாய்ப்பென்பதால், அத்தனை மன வலிகளையும் சகித்துக்கொண்டேன். “ச்சே…ஆன்(Anne)மீது எனக்கிருக்கும் அபிப்ராயங்கள் மட்டமானவை, அபத்தமானவை, அவளை அப்பாவிடமிருந்து பிரிக்கவேண்டுமென்று கங்கணம் கட்டியிருக்கிறேனே அதைப்போல, மோசமானவை…”, சரி அப்படியென்ன நடந்துவிட்டது? எதற்காக என்னைநானே விமர்சித்துக் கொள்ளவேண்டும், சொல்லுங்கள்.. சராசரி பெண்ணென்கிறவகையில் எனக்கும் நெருக்கடிகளை விருப்பப்படி சந்திக்கிற உரிமை உண்டா, இல்லையா? எனது வாழ்க்கையில், அப்போதுதான் முதன்முதலாக ‘என்னை’ பங்குபோட்டுக்கொள்ளும் இன்னொருத்தியைச் சந்திக்கிறேன், அந்தச் சக்களத்தி சண்டையை இப்போது நினைத்தாலும் அதிசயமாகயிருக்கிறது. என்ன சொன்னேன்? எதற்காக என்னை நானே நிந்தித்துக்கொள்ளவேண்டும் என்றுதானே கேட்டேன். அதற்கான காரணங்களும் இருக்கத்தான் செய்தன. அவற்றை மெல்ல முணுமுணுக்க எனது இன்னொருத்தி சிலுப்பிக்கொண்டு எழுந்தாள், எனக்கெதிரே என்னின் பிரதியாக நின்றபடி, எனது காரணங்களை மறுக்கிறாள், அவைகள் நியாயமானவைபோல தோற்றமளித்தபோதிலும், அதில் உண்மையில்லை என்கிறாள், என்னைநானே குழப்பிக்கொள்கிறேனாம், சத்தமிட்டாள். நீங்களே சொல்லுங்கள் உண்மையில் எங்களிருவரில் யார் ஏமாற்றுவது, யார் குழப்புவது? அந்த இன்னொருத்திதானே? நமது குறைகளை மூடி மறைக்கும் சாமர்த்தியம், நாம் செய்யும் தவறுகளைக்காட்டிலும் மோசமானவை இல்லையா? ஆன்(Anne)மீது எனக்குள்ள இந்த பயமும், பகையும் உண்மையில் நியாயமானதுதானா? நியாயாமானதுபோலத்தான் தோன்றுகிறது அல்லது ஒருவேளை நான்ந்தான் சுதந்திரம் என்ற சொல்லை தவறாக புரிந்துகொண்டிருக்கும், சுயநலமும், அற்பத்தனமும் கொண்ட சின்னப்பெண்ணா? எனது அறையில் அமர்ந்து, மணிக்கணக்கில் யோசித்தும் முடிவுக்குவராமல் குழம்பினேன்.

இந்தநிலையில், எனது உடம்பு ஒவ்வொரு நாளாக மெலிந்துக்கொண்டுப் போனது. தினந்தோறும் கடற்கரைக்குப்போவதும், மணலில் படுத்துக் கிடப்பதுமாக இருக்கிறேன். உணவுண்ணும் நேரங்களில், எனது இயல்பிற்கு மாறான அமைதியைக் கடைபிடிக்க கடைசியில் அவர்களை என்னிடத்தில் கோபம்கொள்ளும் நிலைக்குக் கொண்டுசென்றது. ஆன்னை(Anne) அமைதியாக, உளவுபார்ப்பவ¨ளைப்போல பார்த்துனொண்டிருந்தேன், சாப்பிட்டு முடியும்வரை என்னை வியப்பிலாழ்த்தும் வகையில் ஏதேதோ எண்ணங்கள்: “அப்பாவிடம் அவள் காட்டும் பரிவும் நெருக்கமும், காதலில்லாமல் வேறென்ன? இனியொருபோதும் இப்படியான காதல்கொண்ட ஒருத்தியை அவர் சந்திக்க வாய்ப்பில்லையென்றுதான் சொல்லவேண்டும். சதா என்னைப் பார்த்து புன்னகைத்தபடி இருக்கிறாளே அதனையும், அவளது கண்களுக்குள்ளே தெரியும் என்னைப்பற்றிய கவலைகளையும் மறந்தவளாய், அவள் மீது வருத்தங்கொள்ள எனக்கு நியாயமும் உண்டா?” எனத் தொடர்ந்து மனதிற்குள் வியக்க, சட்டென்று அவள், “ரெமோன்.. நாம எப்போ திரும்பறோம்…” என்று கேட்கிறாள், எஞ்சிய காலத்தை எங்களோடு பகிர்ந்துகொள்ள நினைக்கும் அவளது பெருந்தன்மையை எண்ணி பிரம்மிக்கிறேன். இதுவரை என் மனதில் இடம்பிடித்திருந்த தந்திரமும், உறைபனி தன்மையும் கொண்ட ஆன் இப்போதில்லை. வேறுவகையாய்த் தெரிந்தாள்: அவள் உறைபனியென்றால், அப்பாவும் நானும் வெதுவெதுப்பானவர்கள்; அவள் சர்வாதிகாரியென்றால், நாங்கள் சர்வ சுதந்திரத்திற்கும் உரியவர்கள்; எதிலும் அலட்சியமென பிறர் வெறுப்புக்கு ஆளாகக்கூடிய குணங்களவை, அவற்றைத்தான் நாங்கள் விரும்பினோம்; அவளது அசிரத்தையை, பிறர் வெறுக்கலாம், நாங்கள் விரும்புவோம்; அவள் அழுத்தக்காரி, நாங்களோ சந்தோஷமென்றால் துள்ளிக்குதிப்பவர்கள். அவளை உயிரற்ற ஜடமென்று சொன்னாலும் தப்பில்லை. எங்களிருவருக்குமிடையில் ஊர்ந்து சத்தமிடாமல் ஒளிந்துகொண்டு, தனது மரத்துப்போன சரீரத்திற்கு உயிரூட்டக்கூடும், அப்படியே கொஞ்சகொஞ்சமாக எங்களிடமிருக்கும் உல்லாசம், சந்தோஷம் அனைத்தையும் திருடுவாள், ஒர் அழகானப் பாம்பினைபோல! என்ன? பாம்பென்றா சொன்னேன். ஆமாம் பாம்பு… அழகுப் பாம்பு! ரொட்டித்துண்டொன்றினை அவள் நீட்டினாள், சட்டென்று விழித்துக்கொண்டேன், மனதிற்குள் சத்தம்போட்டேன்: பைத்தியக்காரி.. பைத்தியக்காரி… ஆன்(Anne) எவ்வளவு பெரியவள்? அவள்.. அனுபவமென்ன? அறிவென்ன? உன்னோட அம்மா இடத்தில், அவளிருந்து உன்னைப் பார்த்துக்கொண்டதெல்லாம், இதற்குள் மறந்தாயிற்றா என்ன? எதிலும் அசிரத்தையாக அவள் இருப்பதென்ன புதிதா? அதற்கெல்லாம் உள்நோக்கம் கற்பிக்க முடியுமா? எதிலும் பட்டும்படாமல் இருப்பதால்தானே, கண்ட சாக்கடைகளிலிருந்தும் தன்னை அவளால் காப்பாற்றிக்கொள்ளமுடிகிறது, ஒருவகையில் எதையும் அல்லது எவரையும் அலட்சியம் செய்யும் அக்குணத்தினை அவளது மேட்டிமைகுணத்திற்கான உத்தரவாதமென்று சொல்லலாமா?” அழகுப்பாம்பு…ச்சீ எத்தனைமோசமாக எனது நினைப்பு போகிறது, வெட்கக்கேடு. ஆன்னைப் பார்த்தேன். மனதிற்குள்ளாக அவளிடம் மன்னிக்கவேண்டுமென கெஞ்சினேன். சிலவேளைகளில் ஆச்சரியமும் அலட்சியமும், அவள் முகவழகைக் குலைப்பதும், அவள் உரையாடலைக் கெடுப்பதும் பழகிப்போன காட்சி, என்னை வியப்பிலாழ்த்தியிருக்கிறது. ஆன் கண்களிரண்டும், ஒருவித ஆர்வத்தோடு அப்பாவை சதா தேடிக்கொண்டிருந்தன. அப்பாவும் அதற்கான காரணத்தை அறியாதவராக பிரம்மிப்புடனோ அல்லது காதலுடனோ அவளைப் பார்க்கிற வழக்கத்தைக் கொண்டிருந்தார். காற்றேதுமற்ற வெளியில் என்னை தள்ளி எனது சுவாசத்தை நிறுத்த முற்சிப்பதுபோல உணர்ந்தேன். என்னை நானே வெறுத்தேன். அப்பாவும் தன்பங்கிற்கு அவரது பாணியில் வருந்தியிருக்கக்கூடும், ஆன்(Anne)மீதான அவரது பைத்தியக்காரத்தனமான மோகமும், பெருமையும், சந்தோஷமும் – தனது உயிர்வாழ்க்கையின் நோக்கமே அவற்றுக்காகத்தானென, அவர் நடந்துகொள்வதையும்வைத்து பார்த்தபோது அவர் வருந்துவதற்கான வாய்ப்பேயில்லை. எனினும் ஒருநாள், காலை குளியலுக்குப்பிறகு கடற்கரை மனலில் படுத்திருந்தேன், என் அருகில் வந்து உட்கார்ந்தவர் என்னையே பார்க்கிறார். அவரது பார்வை என்மீது ஏதோ சுமையாக இறங்குவதுபோல உணர்ந்தேன். அதிலிருந்து விடுபடும்விதமாக, முகத்தில் பொய்யாய் மகிழ்ச்சியை வரவழைத்துக்கொண்டேன் – சமீபகாலங்களில் எனக்குப் மிகச்சுலபமாக பழகியிருந்தது. அப்பாவிடத்தில் கடலில் இறங்கி குளியுங்கள் என்று சொல்ல எத்தனிக்க, அவரது கையினை எனது தலைமீது வைத்து பரிதாபமானகுரலில்:

” – ஆன் இங்கே வா.. இந்த வெட்டுக்கிளியைக் கொஞ்சம்பார். நாள்முழுக்க படிப்பு படிப்புண்ணு ஓய்வில்லாம உழைச்சதால, உடம்பு ஓடாக போயிருக்கும்னா, அதனை உடனே நிறுத்தியாகாணும்.”

பிரச்சினைகளெல்லாம் தீர்ந்துவிட்டனவென்று அப்பா நினைத்திருக்கவேண்டும். உண்மைதான் அப்பா நினைப்பதுபோல பத்து நாட்களுக்குமுன்பே இப்பிரச்சினைகளெல்லாம் தீர்க்கபட்டிருக்கவேண்டும். ஆனால் அவ்வளவு சீக்கிரம் பிரச்சினைகளிலிருந்து நான் விடுபடக்கூடுமென்று நினைக்கவில்லை. பெர்க்சன்(Bergson)னுடைய புத்தகத்தைத் தவிர வேறொன்றை நான் தொட்டதில்லை என்பகிறபோது, மதியவேளைகளில் படிப்புக்கென்று நான் ஒதுக்கிய நேரங்கள், எனக்கு சுமையாக இருந்தனவென்று சொல்லமாட்டேன்.

ஆன் எங்களிடத்தில் வந்தாள். நான் மணலில் கவிழ்ந்தபடி படுத்துக்கொண்டிருக்கிறேன், எனது கவனம் அவளது காலடிச் சத்தத்தில் படிந்திருந்தது. அடுத்தப்பக்கத்தில் அமர்ந்தவள் முணுமுணுப்பது காதில் விழுந்தது. :

” – நாம நினப்பது போல நடக்கப்போறதில்லை. உண்மையில் அவள் தேர்வில் வெற்றிபெறவேண்டுமென்றும் நினத்தால், அறைக்குள்ளே வெறுமனே சுற்றிவருவதை கைவிட்டுவிட்டு ஒழுங்காக படிக்கவேண்டும்…”

படுத்திருந்தவள் திரும்பினேன். அவர்களிருவரையும் பார்த்தேன். நான் அறையிலே படிக்காமலிருந்தேனென்று எப்படி அவளால சொல்ல முடியுது? ஒருவேளை எனமனதில் இருப்பதை அனுமானிக்கிறாளா? அவளால் எதுவும் முடியும். அப்படி நினைத்தவுடனேயே தேவையின்றி ஒருவித பயம் சேர்ந்துகொண்டது:

“- நான் அறையிலே வெறுமனே சுற்றிவல்லே- கோபத்துடன் சொன்னேன்.

– என்ன அந்தப் பையனை பார்க்கமுடியலைங்கிற வருத்தமா?

– இல்லை..இல்லை!”

உறுதியாக அப்பாவை மறுத்தபோதிலும், உண்மையில் சிரிலை(Cyril) நினைத்துப் பார்க்கக்கூட நேரமில்லையென்றுதான் சொல்லவேண்டும்.

” நீ பொய் சொல்ற, உனக்கு அந்தப்பையனை பார்க்க முடியலைங்கிற வருத்தம் இருக்கத்தான் செய்யுது. இல்லைண்ணா, குடலையெல்லாம் எடுத்துட்டு வெயிலில் வாட்டிய உறித்த கோழிபோல நீ இருக்கமாட்டே.

– செசில் செல்லம், கொஞ்சம் கவனமெடுத்துபடி, வேளாவேளைக்கு ஒழுங்கா சாப்பிடு; இந்தப் பரிட்ஷை உனக்கு முக்கியமில்லையா?- ஆன்

– பரிட்ஷை என் மசுருக்குச் சமானம், நான் என்னசொல்றேண்ணு உங்களுக்குப் புரியுதா? பரிட்ஷையைப் பத்தி எனக்கு எந்தக் கவலையுமில்லைண்ணு சொல்றேன்.”

விரக்தியுடன் ஆன்னை(Anne) நேரிட்டுப்பார்க்கிறேன். தேர்வைக் காட்டிலும் நான் கவலைகொள்ள வேறு விடயங்கள் எனக்குள்ளன என்பதை அவள் புரிந்துகொள்வாளென நினைத்தேன். அவள் என்னிடத்தில் பரிவுடன், “உனக்கு என்ன ஆச்சுண்ணு? கேட்டிருக்கலாம், அல்லது அடுத்தடுத்துக் கேள்விகள்கேட்டு, எனமனதிலிருப்பதென்னவென்று சொல்லவைத்திருக்கலாம். எனது தேவைகளென்ன, என்பதை புரிந்துகொண்டு ஆறுதலாக நான்கு வார்த்தைகள்கூறி என்னை அமைதிபடுத்தியிருக்கலாம். அப்படியெல்லாம் நடந்திருந்தால் கசப்புகளையும், வேதனைகளை சுமந்து அழுதுகொண்டிருக்கமாட்டேன். மிகுந்த அக்கறையோடு என்னைப் பார்த்தாள். அதிகப்படியான கரிசனத்தோடும் அதே சமயத்தில் என்னை நிந்திப்பதுபோலவுமிருந்த, அவளிரண்டு கண்களிலும் கருநீலத்தில் வளையம். எனக்குப் புரிந்துவிட்டது, அவள் ஒருபோதும் நான் எதிர்பார்ப்பதுபோல என்னைக் கேள்விக்கணைகளால் துளைக்கப்போவதுமில்லை, எனது வருத்தத்தை தீர்க்கப்போவதுமில்லை, இப்போதைக்கு அவசியமேதுமில்லையென நினைத்தாளோ என்னவோ, அதற்கான அறிகுறிகளும் அவளிடத்திலில்லை. அசிரத்தையாகவும், அலட்சியத்துடனும் நடந்துகொண்டு, என்னை வேதனைப்படுத்தும் அவள் மனதை, கல்நெஞ்சக்காரி! எத்தனை சாதுரியமாக மறைத்துக்கொள்கிறாள். எதற்காக இப்படியெல்லாம் அவளை விமர்சிக்கிறேனென நீங்கள் நினைக்கக்கூடாது. அவளுக்கு நான் சொன்னது தகும். தவிர ஆன்னுக்கு(Anne) எதற்கு எப்படி நடந்துகொள்ளவேண்டுமென்பது? கைவந்த கலை. இந்த ஒரு காரணத்தினாலேயே அவளிடத்தில் எனது பிரச்சினைகள் என்றைக்குமே முடிவுக்கு வராதென நினைக்கிறேன். என்னை நானே மணலில் வீசி எறிந்தைப்போல உணர்வு, சுடுமணலில் அழுந்திய எனது கன்னம் கொதிக்கிறது, இழுத்து மூச்சினை விட்டேன், உடலில் இலேசாக அதிர்வு. ஆன்னுடைய(Anne)கை மெல்ல, ஆனால் எனக்கு நம்பிக்கையூட்டுவதுபோல எனது கழுத்தில் படிகிறது, ஒரு சில நிமிடங்கள், எனது உடலின் நடுக்கம் குறையட்டுமென்பதுபோல காத்திருக்கிறது.

” – எதைஎதையோ நினைச்சு மனசை கெடுத்துகிற, எப்படி இருந்த? சந்தோஷமா, எந்த நேரமும் துறுதுறுண்ணு.. இப்ப என்ன ஆச்சு. பழைய நிலைமையில் உன் மனசு இல்லை, எதையாவது தலையில இழுத்துப்போட்டுக்கொண்டு புலம்ப ஆரம்பிச்சுடற. இது நீ பழைய செஸில்(Cecil) இல்லை.”- ஆன்

” – நான் மறுக்கலை. என்னைச்சுற்றி என்ன நடக்கிறதென்று புரிந்துகொள்ளாத பெண்ணென்றாலும், ஓரளவு தெம்பும் இருக்கிறது, எல்லையில்லாத சதோஷமும் இருக்கிறது, அசடாக இருக்கிறோமே என்கிற கவலையுமிருக்கிறது.

– சரி எழுந்திரு, சாப்பிடப்போகலாம்”, அவள்.

நானும் ஆன்னும்(Anne) பேசிக்கொண்டிருக்க, அந்தநேரம் அப்பா தள்ளியிருந்தார். அவருக்கு இம்மாதிரியான உரையாடல்களில் ஆர்வமிருந்ததில்லை. வில்லாவுக்கு மூவருமாக திரும்பியபொழுது, எனது கரத்தினை அப்பா விடாமல் பிடித்தபடி வந்தார். அவரது கைகள் கனத்தன, எனினும் மனதிற்கு ஆறுதலாக இருந்தது: எப்படியெல்லாம் அந்தக் கைகள் என்னைச் சுற்றிவந்திருக்கின்றன; முதன்முதலாக காதற் துயரில் என்னைதள்ளியதும், எனது இன்ப துன்பங்களில் பங்கெடுத்ததும், நெருக்கடியான நேரங்களிலும், பைத்தியக்காரிபோல சிரித்து கும்மாளம்போட்டபோது பக்கத்திலிருந்ததும் அந்தக் கைகள்தான். ஆனால் அதே கைகள்தான் இன்றைக்கு காரின் ஸ்டீயரிங்கில், கார்ச் சாவிகளில், மாலையில், சாவியினை வைத்துக்கொண்டு திறப்பினைத் தேடி அவதிபடவும், பெண்மணியொருத்தியின் தோளில் விழவும், சிகரெட் பிடிக்கவும் செய்வதன்றி, எனக்கென்று எதையும் செய்வதில்லை. அவரது கையை இறுகப் பற்றினேன், எனக்காய்த் திரும்பிய அப்பா, புன்னகைத்தார்.

————————————————————————————–

Series Navigation

நாகரத்தினம் கிருஷ்ணா

நாகரத்தினம் கிருஷ்ணா

வணக்கம் துயரமே! அத்தியாயம் – 6

This entry is part [part not set] of 35 in the series 20061012_Issue

பிரான்சுவாஸ் சகன் பிரெஞ்சிலிருந்து தமிழில் நாகரத்தினம் கிருஷ்ணாஅத்தியாயம் – 6

மறுநாள்காலை உடலில் அத்தனை அசதி, தாளமுடியாதவலி, நேற்றைய இரவு குடித்திருந்த விஸ்கிதான் காரணமென்று உணர்ந்தேன். கண்விழித்தபோது கட்டிலிலில் குறுக்காகக் கிடக்கிறேன், சுற்றிலிலும் மையிருட்டு, வாய் கனத்திருந்தது, கைகளும் கால்களும் ஏதோ ஓதம்கண்டதுபோல கசகசவென்று சகிக்கமுடியாதவாறிருந்தன. சன்னற்கதவு ஊடாக சூரியனின் ஒற்றைக்கதிரொன்று உள்ளே பிரவேசித்திருந்தது, அதில் அடர்த்தியாய்த் தூசுகள் வரிசைக்கிரமத்தில் மேல்நோக்கிக் பயணிக்கின்றன. கட்டிலைவிட்டு எழுந்திருக்கவும் விருப்பம், கட்டிலிலேயே கிடக்கவும் எண்ணம். ‘எல்ஸா’ ஒருவேளை காலையில் திரும்பவும் வருவாளா? அப்படி வருவாளென்றால், காலையில் அப்பாவின் முகமும், ‘ஆன்’னின் முகமும் பார்க்க எப்படியிருக்கும்? கட்டிலிலிருந்து சிரமமில்லாமல் எழுந்திருக்க வேண்டுமென்பதற்காக, கஷ்டபட்டு அவர்கள் இருவரையும் மனதில் நினைத்தேன். அதில் வெற்றியும் பெற்று, ஒருவழியாக சில்லென்றிருந்த சலைவக்கற்களிட்ட தரையில் எழுந்து நின்றேன், மனத்தில் இன்னதென்று விவரிக்கவியலாதவகையில் ஒருவிதத் தடுமாற்றம், சஞ்சலம். எதிரிலிருந்த கண்ணாடி என்சோகத்தை தெளிவாய் பிரதிபலித்தது, உற்றுபார்த்தேன்: கண்களிரண்டும் வீங்கிப் பெரிதாகத் தெரிந்தன, உதடுகள் தடித்திருந்தன, நான் இதுவரையிலும் அறிந்திராதமுகம், எனது முகம். இந்த உதடுகளும், வடிவமும், அலங்கோலமும், வரையரைக்குட்பட்ட உரிமையுந்தான் நான் கோழையாகவும், திராணியற்றவளாகவும் இருக்கக் காரணமோ? அப்படி வரையரைக்குட்பட்ட உரிமைகொண்டவள் எதற்காக இத்தனை ஆர்பாட்டம் செய்யவேண்டும்? இத்தனை எதிர்ப்புடன் அதுவும் எனக்கெதிராக, எதற்காக? என்னை நானே வெறுக்கவும், எனது ஓநாய் முகத்தை – குடியால் குலைந்தும் சோர்ந்துமிருந்த முகத்தை – உதாசீனப்படுத்தவும் முடிந்ததில் ஒரு வித சந்தோஷம். ‘குடிகாரி’ என்ற வார்த்தையை ஒருமுறைக்கு இருமுறை உச்சரித்தபடி கண்களைக் கண்ணாடியில் பார்த்தவள் சட்டென்று சிரித்தேன். உண்மையில் எப்படிபட்ட குடிகாரி: ஏதோ குடித்ததாக பேர்பண்ணிகொண்டு இரண்டொரு கோப்பை மது, கன்னத்தில் வாங்கிய அறை, பிறகு தேம்பி அழுதது எல்லாம் சுலபத்தில் மறக்கக்கூடியதா என்ன? பல் துலக்கிக்கொண்டு, கீழே இறங்கிவந்தேன்.

அப்பாவும் ஆன்னும்(Anne) எனக்கும் முன்பாக, காலை உணவுடன், மேற்தள முற்றத்தில் அருகருகே உட்கார்ந்திருந்தார்கள். வணக்கம் தெரிவித்துவிட்டு, அவர்களெதிரே உட்கார்ந்தேன். நேற்று நடந்தை நினைக்க வெட்கமாகவிருந்தது, அவர்களை நேரிட்டுப் பார்க்க தைரியமில்லை. அவர்களிருவரும் அமைதியாயிருக்க வேறுவழியின்றி தலையை நிமிர்த்தினேன். கடந்த இரவின், காதல் சேட்டைகள் ஆன்(Anne)முகத்தில் ஒட்டிக்கிடந்தன. இருவரும், மகிழ்ச்சியிலிருப்பதன் அடையாளமாக புன்னகைக்க. அவர்களின் அந்தச் செய்கை என்னைக் பெரிதும் கவர்ந்தது. என்னைப் பொறுத்தவரையில் மகிழ்ச்சியாய் இருப்பதென்பது, வெற்றியை பிரகடனபடுத்தும் காரியம் அல்லது நடந்த தவற்றுக்கு பிராயசித்தம் தேடும் முயற்சி.

” – என்ன நன்கு தூங்கினாயா? – அப்பா.

– ஏதோ தூங்கினேன். நேற்றிரவு விஸ்கியை கொஞ்சம் அதிகமாக குடிச்சுட்டேன்.” என்றவள், கோப்பையில் காப்பியை ஊற்றி சுவைத்தபிறகு, மேசையில் கோப்பையை வைத்தேன். அவர்கள் காட்டிய அமைதிஎனது பொறுமையை அதிகமாகச் சோதித்தது, நிலைகொள்ளாமல் தவித்தேன்.

” – என்ன நடக்கிறது? இரண்டுபேரும் எதையோ என்னிடத்தில் மறைக்கிறீங்கண்ணு நினைக்கிறேன்.”

அப்பா பதட்டப்படாமல் சிகரெட்டொன்றை எடுத்து பற்றவைத்தார். ஆன் என்னைப் பார்த்தபார்வையிலிருந்து அவள் சங்கடப்படுகிறாள் என்பதைப் புரிந்துகொண்டேன்.

” – நான் உன்னிடத்தில் சில விடயங்கள் கேட்கணும்- ஆன்.

எனக்கு உள்ளூர பயம், நேற்றைய தினத்தைப்போல இன்றும் அசம்பாவிதமாக ஏதாவது நடக்குமென்று எதிர்பார்த்தேன்:

“- என்ன மறுபடியும் எல்ஸா(Elsa)விடத்தில் தூதுபோகணுமா?

எனது கேள்வியைத் தவிர்க்க நினைத்தவள்போல அப்பாவைப் பார்க்கிறாள்:

“- உன்னோட அப்பாவும் நானும் மணம் செய்துகொள்ளாமென்று நினைக்கிறோம் – அவள்.

நான் நேராக அவளைப் பார்த்தேன், பிறகு அப்பாவைப் பார்த்தேன். ஒரு நிமிடமிருக்கும், அவரிடமிருந்து சின்னதாய் ஒரு குறிப்பு, ஒரு கண் சாடை எனக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் அல்லது கோபமூட்டினாற்கூட பரவாயில்லை என்பதுபோல எதிர்பார்த்தேன். அவரது கைகளைப் பார்த்தபடி இருந்தார். “உண்மையாகவா?” கேட்டது நான், எனினும் இப்படி நடக்குமென்று முன்னமேயே தெரியும்..

நேரத்தை மிச்சப்படுத்த நினைத்தவள்போல, “நல்ல யோசனை”- என்றேன்.

அப்பாவை நன்கு அறிந்தவளென்ற வகையில், நம்புவதற்குக் கடினமாகவே இருந்தது. அவர் திருமணம், பந்தம் போன்ற சொற்களில் நம்பிக்கையற்றவர். அதிலும் ஓர் இரவுக்குள் அவரால் அப்படியொரு முடிவை எடுக்கக் சாத்தியமா? எடுத்த முடிவு எங்கள் வாழ்க்கையைப் புரட்டிப்போடக் கூடியது. எங்களது சுதந்திர வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டுவரக்கூடியது. இனி எங்கள் குடும்ப உறுப்பினர்கள் மூன்றுபேர். எங்கள் வாழ்க்கையில் ஆன்னுடைய பிரத்தியேக கவனத்தினால் புத்திசாலித்தனத்திற்கும் இடமுண்டு, அப்படியான வாழ்க்கையைத்தான் அவளிடத்திலிருந்து நானும் எதிர்பார்த்தேன். அறிவு ஜீவிகளும், கன்னியமானவர்களும் நண்பர்களாகக் கிடைக்கக்கூடும், வரவிருக்கிற இரவுகள் சந்தோஷமான அமையும். பிறகு வாழ்க்கையில் நிம்மதியன்றி வேறு சொல்லுக்கு இடமில்லை, இப்படியெல்லாம் எனது கற்பனையை வளர்த்துக்கொண்டு செல்ல, அதனைக் குலைப்பதுபோன்று, நான் கலந்துகொண்ட கூச்சலும் குழப்பமுமான விருந்துகளும், தென் அமெரிக்கர்களும், எல்ஸாக்களும் நினைவுக்கு வந்தார்கள். இறுதியில் சட்டென்று ஒருவித கர்வம் என்னை அணைத்துகொள்கிறது சிவ்வென்று உயர்ந்து நிற்பதுபோல பிரமை.

“ரொம்ப ரொம்ப நல்ல யோசனை,” புன்னகை செய்தபடி அவர்களிடத்தில் மறுபடியும் கூறினேன்.

– செல்லப் பூனை! இதைக்கேட்டதும் நீ சந்தோஷப் படுவேண்ணு எனக்கு நல்லாவே தெரியும்,”- அப்பா.

அப்பாவுடைய முகத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் தெரிந்தன. ஆன் முகத்தில், இரவு நடந்த காதல் விளையாட்டு அலுப்பினை காணமுடிந்தாலும், கூடவே இதுவரை நான் காணாத அன்பும், எவரையும் வசீகரிக்கும் தன்மையுங்கூட பளிச்சிட்டன.

“- எனது அன்பு பூனையே! இப்படி பக்கத்தில் வாயேன்”, மீண்டும் அப்பா.

இரண்டுகைகளையும் நீட்டியவர், என்னை இருவருக்குமிடையில் இழுத்துக்கொண்டார். அவர்கள் முன்னே முழந்தாளிட்டு அமருகிறேன். இருவரின் பார்வையிலும் அன்பின்பெருக்கு, சேர்ந்தார்போல தலையில் மெல்ல வருடினர். அந்தச் கணத்திலிருந்து எனதுவாழ்க்கை ஒருவேளை முற்றிலும் வேறுபாதையில் திரும்பலாம் என்கிற கனவில நானிருக்க அவர்களைப் பொறுத்தவரையில் நானொரு செல்ல பூனை, பிரியத்திற்குரிய வீட்டுப் பிராணி. இருவரும் எனது தலைக்குமேலே தொடமுடியாத உயரத்தில் இருந்தார்கள், கடந்த காலமோ, எதிர்காலமோ அல்லது நான் அறிந்திராத அல்லது என்னால் நினைவுபடுத்த முடியாத ஏதோவொன்றோ, அவர்களைச் சேர்த்துவைத்திருந்தது. விருப்பதுடன் கண்களை மூடினேன், எனது தலை அவர்களது மடியில், பின்னர் அவர்களோடு சேர்ந்து நானும் சிரிக்கிறேன், வழக்கமான எனது நாடகங்களை அரங்கேற்றுகிறேன். தவிர எனக்கதில் மகிழ்ச்சியில்லையென்றும் சொல்ல முடியாது. ஆன்னை(Anne) மிகவும் பிடித்திருந்தது. அவளிடத்தில் குற்றங்காண எனக்குக் காரணங்களில்லை. எனக்கு வழிநடத்தக்கூடியவள், எனது வாழ்க்கை சுமைகளை இறக்கிவைக்கவும், இக்கட்டான நேரங்களில், நான் தேர்வுசெய்யவேண்டிய பாதையைக் கைகாட்டவும் கூடியவள். இனி அவளது காரியங்களுக்குத் நான் ஒத்துழைக்கக்கூடும், என்னோடு அப்பாவும் இணைந்துகொள்வார்.

அப்பா எழுந்துகொண்டார், மகிழ்ச்சியைக் கொண்டாட ஷாம்பெய்ன் போத்தலொன்றை எடுத்துவரச் சென்றார். அவரிடத்தில் ஏற்பட்டிருந்த இந்த மகிழ்ச்சி முக்கியம், நான் மறுக்கவில்லை, ஆனாலும் அவரை நன்கு அறிந்தவளென்பதால் மனதிற்குள் ஒருவித நெருடல், சின்னதாய் ஒரு கசப்பு, காரணம் என்வரையில், பெண்ணொருத்திக்காக அவர் சந்தோஷத்தில் மிதப்பதென்பது, புளித்துப்போன காட்சி.

” – உன்னை நினைத்தால்தான் பயமாயிருக்கு, -ஆன்.

– ஏன்?”,- நான். இரண்டு பெரியவர்களின் திருமணத்திற்கு எதிராக எனது விருப்பம் இருக்குமென்று அவள் நினைக்கிறாளோ, என்கிற ஐயம்.

” – என்னிடத்தில் உனக்கு அச்சமிருக்குமென்று, நினைத்தேன்”, சொன்னவள் சிரித்தாள்.

நானும் சிரித்தேன், உண்மையில் எனக்கு அவளிடம் பயமிருந்தது. அவ்வச்சம் அவசியமற்றதென்பதோடு, அதனை அவள் அறிந்துமிருந்தாளென்பதைக் குறிப்பால் உணர்த்தியிருக்கிறாள்.

” – இரண்டு வயதுபோனதுகள் திருமணம் செய்துகொள்வதென்பது உனக்கு வேடிக்கையாகத் தோன்றவில்லையா?

– அப்படியென்ன வயசாயிட்டுது”, எனது வார்த்தையில் முடிந்த அளவு அழுத்தங் கொடுத்தேன், ஷாம்பெய்ன் போத்தலுடன் ஆட்டம் போட்டபடி அப்பா திரும்பி வந்துகொண்டிருந்தார்.

ஆன் அருகில் தோளில் கைபோட்டபடி அமர்ந்தார். அப்பாவின் நெருக்கத்தினால் அவள் உடல் சிலிர்த்துக்கொள்வதைச் சாடையாகக் கவனித்தேன். அவருடைய சிரிப்பு; திடமும், நெருக்கடியான சந்தர்ப்பங்களில் பாதுகாக்கும் வல்லமையுங்கொண்ட அவரது கைகள்; அவரது வீரியம்; அவரது வெப்புவென, ஆன் அவரை திருமணம் முடிக்க காரணங்கள் நிறைய இருந்தன. அப்பாவுடைய நாற்பத்தெட்டுவயதும், தனிமையினால் ஏற்பட்ட அச்சமும், ஏன்? உணர்ச்சிகளின் கடைசிமுயற்சியாகக்கூட இருக்கலாம், யார்கண்டது? ஆன்னை ஒருபோதும் நான் சாதாரணப் பெண்மணியாக நினைத்ததில்லை. சர்வவல்லமையுங்கொண்ட தேவதையாகத்தான் பார்த்தேன்: அச்சமொழித்து அடைக்கலம் தருபவள், ஞானமும், சௌந்தர்யமும் ஒருங்கிணைந்தவள், தைரியசாலி, உணர்ச்சிக்கு இடம்கொடாதவள் என நிறைய சொல்லலாம். ஒருவித செருக்கும், எதற்கும் அலட்டிக்கொள்ளாத மனப்பான்மையும் கொண்ட ஆன் லார்சனை மணப்பதில் அப்பாவுக்குள்ள கர்வத்தையும் புரிந்துகொண்டேன். உண்மையில் அவளை விரும்பினாரா? அவரது நேசம் உண்மையிற் தொடரக்கூடியதா? அப்பாவுடைய இந்தக் காதலுக்கும், நேற்றுவரை எல்சாவின் மீதுகொண்டிருந்த காதலுக்குமிருந்த வித்தியாசங்கள்தான் என்ன? கண்களை மூடினேன். வெயிலில் உறைந்துபோனேன். மேற் தளத்தில் மூவருமாக அமர்ந்திருந்தோம். அவரவர்மனதிலும் சொல்வதற்குத் தயங்கும் விருப்புகள், வெறுப்புகள், பயங்கள், சந்தோஷங்கள்…

அந்த சமயத்தில் எல்சா(Elsa)வும் திரும்பிவரக்காணோம். ஒருவார காலம் வெகு சீக்கிரமாக கழிந்திருந்தது. ஏழு நாட்களும் உல்லாசம், இனிமை, அவற்றைத்தவிர உலகில் வேறெதுவும் இல்லை என்பதுபோல கழிந்தன. எந்தெந்த இடத்தில் என்னென்ன தளவாடங்களை வைத்தல் பற்றியும் அதற்கான நேரங்கள் குறித்தும் முடிவு செய்தோம். அப்பாவும் நானுமாக சந்தோஷத்துடன் ஓய்வில்லாமல், சிக்கலானதும் இதற்குமுன்பு அவற்றையெல்லாம் எப்போதேனும் அறிந்திருப்போமா என்கிற நினைவுமின்றி பல காரியங்களைச் செய்தோம். இதற்குமுன்பு நாங்கள் அறிந்தவையா இல்லையா என்பது ஒருபுறமிருந்தாலும், அந்த செயல்பாடுகளில் உண்மையில், எப்போதேனும் நம்பிக்கையோடு பங்கெடுத்திருப்போமா என்பது மற்றொரு கேள்வி? ஓரிடத்திலும் தம்மை நிலை நிறுத்திக்கொள்ளாத அப்பாவோட வாழ்க்கை முறைக்குத் தற்காலிகமாக முற்றுப்புள்ளிவைக்கபட்டது. அனைத்தும் நெறிபடுத்தப்பட்டன, நடை உடை, பாவனைகளில் மேட்டிமைத்தனம் சேர்ந்துகொண்டது. அப்பாவின் இந்த மாறுதல்கள் அனைத்துமே, என்னைபோலவே அவரது மனதின் புதிய கட்டுமானத்திற்கு உதவியதென்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

இதோ இன்றைக்கும் அவ்வனுபவத்தை மீண்டும் ருசித்திட, அந்த ஏழுநாட்களில் நடந்தவற்றை மனதிற் புதைத்து அவ்வப்போது தோண்டிப் பார்க்கிறேன். அப்பாவின் பிரியத்துகந்த ஆன்னுக்கு(Anne), இறுக்கமற்ற முகம், நம்பிக்கைக்குறியவள், பழகுவதற்கு மிகவும் இனியவள். ஒவ்வொருநாளும், அணைத்தபடி, மிக நெருக்கமாய் சிரித்தவண்ணம், கருவளையங்களிட்ட கண்களோடு அவர்கள் இறங்குவதைப் பார்ப்பேன். வாழ்க்கை முழுதும் அக்காட்சி தொடர்ந்திருக்குமெனில், சத்தியமாகச் சொல்கிறேன், நான் அதனை பெரிதும் விருப்பியிருப்பேன். மாலையில் பெரும்பாலும் கடற்கரைக்குச் சென்றுவருவதும், மேற்தளத்தில் அமர்ந்து சப்பிடுமுன் கொஞ்சம் மதுகுடிப்பதும் வழக்கம். பார்க்கிறவர்கள் எல்லோரும் எங்களை ஏதோ, ஒற்றுமையான குடும்பமென்று எண்ணிக்கொண்டதை, சரியென்றே சொல்லவேண்டும், எனக்கு அப்பாவோடு வெளியிற்செல்வதும், எதிர்ப்படும் மனிதர்களின் புன்னகை, பொறாமை மற்றும் பரிதாபத்தைச் சம்பாதிப்பதும் வழக்கமாகிப்போனது. சொல்லப்போனால் மீண்டும் என்வயதுக்குறியவளாக நான் மாறிப்போனதில், மகிழ்ச்சி. திருமணத்தை கோடை விடுமுறைக்குப் பிறகு பாரீஸில் நடத்துவதென்று தீர்மானிக்கபட்டிருந்தது.

பாவம் சிரில், அவனுக்கு எங்கள் மனதிலேற்பட்டிருந்த திடீர் மாற்றங்களை ஏற்றுக்கொள்வதற்குக் கடினமாக இருந்தது, எனினும் நாங்கள் எடுத்திருந்த முடிவினால் அவனுக்கு மகிழ்ச்சி. நாங்களிருவரும் கூட்டாக மீண்டும் படகு விளையாட்டினைத் தொடர்ந்தோம். ஆசைவந்தபோதெல்லாம், கட்டித் தழுவினோம். சிலவேளைகளில் அவன் உதடுகள் என்னுடையவற்றோடு பதிகின்றபோது, அவனது முகம் ஆன்னை(Anne)நினைவூட்டியது. அந்த முகம்: காலைநேரத்தினால் சூறையாடபட்ட முகம், நிதானத்துடன் இயங்கும் முகம், ஆர்வமற்று சுகிக்கும் முகம், காதல் தனது சமிக்ஞைகளை ஆன்னூடாக(Anne) வெளிப்படுத்த உதவிய முகம், அந்தமுகத்தின்மீது எனக்கும் கொள்ளை ஆசை. சிரில்மாத்திரம் என்னை உண்மையாக நேசித்திருக்கும் பட்ஷத்தில் அந்த ஏழுநாட்களிலும் ஒருவேளை அவனது ஆசைநாயகியாக, நான் இருந்திருக்கக்கூடும்.

மணி ஆறிருக்கும், தீவிலிருந்து திரும்பியிருந்தோம். சிரில் படகை தண்ணீரிலிருந்து இழுத்துவந்து கரைக்குக் கொண்டுவந்தான். அடர்ந்திருந்த ஊசியிலை மரங்கள் வழியாக வீட்டிற்குத் திரும்பினோம். எங்கள் உடம்பிற்குக் கொஞ்சம் கதகதப்பு தேவைப்பட்டது, ஒருவகையான சிவப்பிந்தியர் விளையாட்டொன்றை நாங்களாக உருவாக்கினோம். வீட்டினை அடைவதற்கு முன்பாக எப்படியும் பலமுறை என்னைப் பிடித்திருப்பான். ஒவ்வொருமுறையும் என்மீது விழுந்து, கெலித்துவிட்டேனென்று கத்துவான், என்னை ஊசிமர இலைகளில்வைத்து கட்டிப் புரளுவான், எனது கைகளையும் கால்களையும் கட்டிப்போடுவான், முத்தமிடுவான். அசுவாசமாயும், பலவீனமாயும் வெளிப்படும் அவனது முத்தங்களுக்குள்ள ருசியை இன்றைக்கும் என்னால் நினைத்து பார்க்க முடிகிறது. எனது இதயத்தோடு அவனது இதயம், இரண்டின் துடிப்பும், தூரத்தில் கரையினைத் தழுவும் அலைகளின் ஓசையோடு இணங்கிப்போகும் ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு இதயத்தின் துடிப்புகள், தொடர்ந்து கடற்கரைமணல்மீது விழுகின்ற அலைகளெழுப்பும் சன்னமானை ஓசை, ஒன்று, இரண்டு, மூண்று… ஒன்று: மீண்டும் மூச்சினை உள்வாங்கி சுவாசிக்கத் தொடங்குவான், அளவெடுத்ததுபோல அழுந்த முத்தமிடுவான். இதுவரை கேட்ட, கடலோசை சட்டென்று அடங்கிப்போக, செவிகளில் வேகமாய் அடியெடுத்துவைத்து பின்னர் தொடர்ந்து ஓடும் எனது குருதி எழுப்பும் ஓசை.

ஒருநாள் மாலை எங்களிருவரையும் ஆன்னுடைய குரல் பிரித்தது. சிரில் என்மீது படிந்திருந்தான், அந்திசாயும் நேரம், சிவந்தும் இருண்டும் இருந்த பொழுது, இருவருமே அரை நிர்வாணமாகவிருந்தோம். எங்களை தவறாக நினைக்க ஆன்னுக்கு(Anne) வேறென்ன ஆதாரம் வேண்டும்? மிகச்சுருக்கமான குரலில் என் பெயரைச் சொல்லிக் கூப்பிட்டாள்.

சிரில் துள்ளிக் குதித்து எழுந்தான், நடந்த சம்பவத்திற்கு வெட்கப்படுவதுபோல நடந்துகொண்டான். பிறகு என்னுடைய முறை, நானும் ஆன்னை(Anne) பார்த்தபடி மெதுவாக எழுந்தேன். சிரில் பக்கம் திரும்பியவள், மென்மையான குரலில் அவனிடத்தில் பேசினாள், ஏதோ அவனைப் பார்க்காமலேயே பேசுவதுபோல.

” – இனி உன்னை நான் பார்க்கக்கூடாது”, – என்றாள்.

அவனிடத்தில் பதிலேதுமில்லை. என்மீது சாய்ந்தவன், தோளில் முத்தமிட்டுவிட்டு போய்விட்டான். அவனது செய்கை என்னை வியப்பிலாழ்த்தியது, ஏதோ எங்களிருவருக்கிடையேயான திருமண ஒப்பந்தமாக அச்செய்கையை கருத்திற்கொண்டு நெகிழ்ந்துபோனேன். சிறிதுநேரம் என்னையே கவலையுடன் பார்த்துக்கொண்டிருந்த ஆன், அடுத்த கணம் தனது பார்வையை வேறுதிசைக்காய் மாற்றிக்கொண்டாள், ஏதோ இதைக்காட்டிலும் வேறு முக்கிய அலுவல்கள் அவளுக்கு இருப்பதுபோல. எனக்கு கோபம் வந்தது. அவளுக்கு நினைக்க வேறு விடயங்கள் இருப்பின், இப்படியெல்லாம் பேசியிருக்ககூடாது. ஒரு நாகரீகங்கருதி, நடந்தவற்றுக்கு நானும் பொறுப்பு என்பதைப்போல அவளை நோக்கி நடந்து சென்றேன். என் கழுத்தில் தைத்திருந்த ஊசியிலை யொன்றை எந்திரம்போல எடுத்தெறிந்தவள் பார்வை, என் மீது படிந்திருந்தது. அலட்சியம், அலுப்பு, மறுப்பென்கிற முகமூடியை கழட்டுவதைப் பார்த்தேன், அடுத்த கணம் அவளது முகத்தில் இதுவரை நான் காணாத அழகு. அதனைக் கண்டதும் எனக்கு ஒருவித பயம்:

” – இம்மாதிரியான விளையாட்டெல்லாம் கடைசியில் மருத்துவமனையில்தான் கொண்டுபோய் நிறுத்திவிடுமென்பது உங்களுக்குத் தெரிந்திருக்கவேண்டும்”, ஆன்.

கண்கள் ஏறிட்டு என்னைப் பார்க்க, நின்றபடி என்னிடம் பேசினாள். எனக்கு மிகவும் எரிச்சலாக இருந்தது. அவள், நேரிட்டும், அசைந்துகொடுக்காமலும் பேசும் பெண்களினத்தை சார்ந்தவள். எனக்கோ ஒரு நாற்காலி தேவை, நான் விழுந்துவிடாமலிருக்க, பிடிப்பதற்கு கைக்கெட்டும் தூரத்தில் ஏதேனும் வேண்டும், குறைந்த பட்சம் ஒரேயொரு சிகரட், எனது கால்களின் ஆட்டத்தை தவிர்க்க, அல்லது அந்த ஆட்டத்தைப் பார்க்க…

” – எதையாவது கற்பனை பண்ணிக்காதீங்க, மெல்ல சிரித்தபடி கூறினேன். சிரிலை வெறுமனே முத்தமிட்டேன் அவ்வளவுதான். அதற்கெல்லாம் மருத்துவமனைக்கு போகவேண்டியிருக்குமென்று நான் நினைக்கவில்லை…

– தயவு செய்து நான் சொல்வதைக் காதில் வாங்கு. இனி அவனை நீ பார்க்கக்கூடாது. அவளுக்கு நான் பொய் சொலவதாக நினைப்பு. எதிர்த்து எதுவும் பேசாதே: உனக்கு பதினேழுவயசு, இப்போதைக்கு ஒருவகையில் நானும் உனது நல்லது கெட்டதுக்குப் பொறுப்பு. உன்னோட வாழ்க்கை வீணாகிப்போவதை என்னால் அனுமதிக்க முடியாது. தவிர உனக்கு நிறைய வேலைகள் இருக்கு. இனி மதியத்துக்குப் பிறகு அந்த வேலைகளை கவனிக்கவே உனக்கு நேரம் சரியாயிருக்கும். ”

சொன்னவள் சட்டென்று திரும்பினாள், முதுகை எனக்குக் காட்டியபடி, வீட்டின் திசைக்காய் எப்போதும்போல மந்தகதியில் நடந்து சென்றாள். அதிர்ச்சியிலிருந்து மீளமுடியாமல் காலில் வேர்விட்டதுபோல அசையாமல் நின்றேன். வேறென்ன, மனதிலிருப்பதை போட்டு உடைத்திருக்கிறாள்: எனது வாதங்களில், எனது மறுப்புகளில் அக்கறையற்ற மனோபாவம், இதைக்காட்டிலும் என்னிடத்தில் அவள் அலட்சியமாக இருந்திருக்கலாம். அவளுக்கு எனது இருப்பென்பது ஒரு பொய், அப்படி ஏதேனும் உண்டென்றாலும், வளரவிடக்கூடாது, அதற்கான வழிகள் என்னென்ன உண்டோ அதனைச் செய்தாகவேண்டும். ஆனால் முடியுமா? நான் அனுமதிப்பேனா? செசில் என்ற என்னை இன்று நேற்றல்ல, எத்தனை காலமாக அறிவாள். என்னை இப்படி தண்டித்து அவளையும் வருத்திக்கொண்டிருக்கவேண்டும். நடந்து முடிந்த சம்பவத்தில் எனக்கான ஒரே ஆறுதல் அப்பா. அவரோ வழக்கம்போல நடந்துகொண்டார்: “செல்ல பூனை, சொல்லு.. யாரந்த பையன்? குறைந்த பட்ஷம் கண்ணுக்கு லட்சணமா இருப்பானில்லையா? நோய்நொடிண்ணு இல்லாம உடம்பை பத்திரமா வச்சிருக்கானில்லையா? மோசமான பையன்களும் இருக்காங்கங்கிறதை மறந்திடக்கூடாது செல்லம்.. கவனமா இருக்கத் தெரியணும். நல்லவேளை வேறுவிதமாக அவர் நடந்துகொள்ளவில்லை. இல்லையென்றால் எனது விடுமுறை அன்றைக்கே முடிந்திருக்கும்.

அன்றைய தினம் இரவு உணவு நரகம்போல கழிந்தது. ஆன் என்னிடத்தில் சதா, “உன்னுடைய அப்பாவிடத்தில் மூச்சுவிடமாட்டேன், கோள்மூட்டுபவளென்று என்னை நினச்சுடாதே, ஆனால் இந்த முறை நன்றாக படித்து தேர்வில் வெற்றிபெற்றாகணுங்கிற விடயத்தில் உறுதியா நிற்கணும்”, என்று சொல்லிக்கொண்டிருந்தாள். இப்படியான கணக்குகளுக்கு அவள் புதியவள். அவள்மீது வருத்தமென்றாலும், அந்த யோசனையை வரவேற்றேன், அவளை அலட்சியப்படுத்த நானெடுத்த முடிவு. பிறரைப்போலவே, பேசுகிறபோது தவறுதலாக எதையும் சொல்லிவிடக்கூடாதென்பதுபோல ஆரம்பத்தில் கவனமாக இருந்தாள். ஆனால் சூப்பினைக் சாப்பிட்டு முடித்ததும், நடந்த சம்பவம் நினைவுக்கு வந்ததுபோல பேச ஆரம்பித்தாள். “ரெமோன்.. உங்கப் பெண்ணுக்கு நல்ல சிலபுத்திமதிகள் தேவைப்படுதுண்ணு நினைக்கிறேன். ஊசிமரங்கள் தோப்பிலே சிரிலோட சாயந்திரம் அவளைப் பார்த்தேன். இதுதான் முதலும் கடைசியுமா இருக்குமென்றும் நினைக்கிறேன்.

அப்பா, பாவம் அதனை வேடிக்கையாகயாக எடுத்துக்கொண்டார்.

” – என்ன சொல்ற? அவங்க என்ன செஞ்சாங்க?

– என்ன செஞ்சேன்? அவனை முத்தமிட்டேன்.. ஆனா, ஆன்(Anne) நினைக்கிறாங்க…

– நான் எதையும் நினைக்கிலை, ஆன் குறுக்கிட்டாள். கொஞ்ச நாளைக்கு அவனைப் பார்க்காமலிருந்தால், வரவிருக்கும் தேர்வுக்காக தத்துவப் பாடத்தில் கவனம் செலுத்தமுடியுமென்று சொல்கிறேன்.

– விடு.. அவள் சின்னப் பெண், தவிர சிரிலும்(Cyri) நல்ல பையன். வீண் கவலைகள் எதற்கு?

– அவன் மட்டுமில்லை, செஸில்(Cecil)கூட நல்லப் பெண்தான். அதற்காகத்தான் பயப்படுகிறேன். இங்கு அவளுக்கு எல்லா சுதந்திரமும் இருக்கிறது, அந்தப் பையனும் எந்த நேரமும் அவள் பின்னாலேயே சுற்றி வருகிறான், இருவருக்கும் வேறு வேலைகளும் இருப்பதாகத் தெரியவில்லை, அப்படியிருக்கிறபோது நடக்கக்கூடாதது எதுவும் நடந்துவிடுமோ என்று அஞ்சுகிறேன். ஏன் உங்களுக்கு அந்த அச்சமில்லையா?”

‘ ஏன் உங்களுக்கு அந்த அச்சமில்லையா?’ என்ற குரலின் தொனி, என்னை நிமிர்ந்து பார்க்கவைக்கவும், அப்பா தனது தலையை குனிந்துகொள்ளவும் காரணமாயிற்று. அப்பாவை அந்தச் தொனி சீண்டியுமிருந்தது.

” நீ சொல்வதும் ஒருவிதத்தில் நியாயந்தான். செசில் நீ படிப்பில் கவனம் செலுத்தியாகணும், தத்துவப் பாடத்தை மறுபடியும் செய்யணுங்கிற எண்ணமில்லையா?

– சொல்லுங்க இப்போ அதை மறுபடியும் எழுதி என்னை சாதிக்கபோகிறேன்- எனது பதில் சுருக்கமாக வெளிப்பட்டது.

ஒரு சில நொடிகள் என்னைப் பார்த்த அப்பா, என்ன நினைத்தாரோ முகத்தைத் திருப்பிக்கொண்டார். எனக்கு மிகவும் குழப்பமாக இருந்தது. உண்மையில் என்னைக் காப்பாற்றிக்கொள்ள தேவையற்ற விவாதத்தில் இறங்குவதைக்காட்டிலும், ஒதுங்கிக்கொள்வதே வாழ்க்கைக்கு உதவக்கூடுமென்று தீர்மானித்தேன்.

” – செஸில்(Cecile) யோசுத்துபார், ஆன் மேசைமீதிருந்த எனது கையினைப் பிடித்துகொண்டவள் தொடர்ந்தாள், நல்ல பள்ளிகூட சிறுமியாய் இருப்பதை விட ஒரு மாதகாலம் ஊசியிலை மரங்களிடையே விளையாடும் விளையாட்டுப் பெரிதா என்ன? ம்..”

ஆன் பார்வை என் மீதிருந்தது. அப்பாவும் சிரித்தபடி என்னைப் பார்த்தார்: அன்றைய தினம் எங்களுக்குள் தொடங்கிய விவாதத்தினை மிகவும் அற்பமானதென்றுதான் சொல்லவேண்டும். எனது கையினை மெல்ல அவளிடமிருந்து இழுத்துக்கொண்டேன்.

” – ஆமாம் எனக்கு அந்த விளையாட்டுப் பெருசு”

எனது பதில் சன்னமாகத்தான் ஒலித்தது, அவர்கள் காதில் விழக்கூடாது என்பதுபோல. ஒருவேளை அவர்களுக்கும் நான் சொன்ன பதிலில் ஏதும் ஆர்வமில்லையோ என்னவோ? மறுநாள்காலை தத்துவவாதி பெர்க்சனுடைய(Bergson) வாக்கியமொன்றை புரிந்துகொள்ள போராடினேன், அதன் சாரத்தை உணர ஒரு சில நிமிடங்கள் தேவையாகயிருந்தன: “முதலாவதாக காரியத்திற்கும் காரணத்திற்குமிடையே, ஒரு சில தனித்துவமற்ற காரணிகளிருக்கின்றன என்பதை நாம் அறியமுடிகிறது, தவிர ‘இது’ ‘இதனால்’தானென தீர்மானிப்பதற்கு குறிப்பிட்ட விதிமுறையேதுமில்லையென்கிறபோதிலும், ஒரு மனித உயிரின் மூல உந்துசக்தியோடு கொள்கிற நமது தொடர்பு எதுவாயினும், அது மானுடத்தை நேசிக்கும் பலத்தினை நமக்கு அளிக்கவல்லது”. இந்த வாக்கியத்தை முதலில் நிதானமாக, மெல்லிய குரலில் வாசித்தேன், பிறகு சற்று உரத்தகுரலெடுத்து வாசித்து பார்த்தேன். கடைசியாக, புரிந்துகொண்டபோதும் முதல் வாசிப்பின் முடிவில் எப்படியிருந்தேனோ அதே குழப்பத்துடன், நிராதரவற்ற மனநிலையிலும் இருந்தேன். இதே மனநிலையில் தொடர்ந்துவாசிக்க விருப்பமில்லாதவளாய், அதீதக் கவனமெடுத்துக்கொண்டு, அக்கறையுடன் அடுத்தவரிகளை தொடர்ந்து வாசித்தேன், சட்டென்று என்னுள் எழுந்த ஏதோவென்று காற்றுக்குண்டான வேகத்துடன் கட்டிலில் எறிந்தது. முதலில் சிரிலை(Cyril)நினைத்துக்கொண்டேன், வளைகுடாவின் பொன்னிற நீரில், தாலாட்டும் படகுடன், நிற்கிறான். அடுத்து அவனது முத்தங்களை நினைத்து மகிழ்கிறேன், பிறகு நினைப்பு ஆன்மீது தாவுகிறது. தொடர்ந்து கட்டில் மீது, மார்பு வேகமாய்த் துடிக்க அமர்ந்திருப்பதுபோலவும், ‘ச்சீ இத்தனை அருவருப்பான, மோசமான நினைப்பெல்லாம் தேவையா? சோம்பேறி! உருப்படாதவள்! இப்படியெல்லாம் கற்பனை செய்ய எனக்கு என்ன உரிமையிருக்கிறது’, என்றும் என்னை நானே கேட்டுக்கொண்டேன். நான் கூடாதென்று நினைத்தபோதும், ஆன்னையே(Anne) மனம் சுற்றிவந்தது. அவள் பாதகி, ஆபத்தானவள், எனது பாதையிலிருந்து கட்டாயம் அவளை விலக்கியாகவேண்டும். நறநறவென்று பற்களை கடித்தவளாக, மதிய உணவு உட்கொண்டதை நினைத்துக்கொண்டேன். ஏமாற்றமும் கோபமும் சேர்ந்துகொள்ள, எரிச்சலை வெளிப்படுத்திய உணர்வு: நான் நிந்திக்கும் உணர்வு, என்னை நெருக்கடியில் சிக்கவைத்து கைகொட்டி சிரிக்கும் உணர்வு, ஆம் ஆன்னைக்(Anne) குறைசொல்ல அவைகள்தான் காரணம், ஏன்? என்னை நானே வெறுக்கவும் அவளே காரணம். உண்மையில் எனது உலகம் தனி உலகம், அங்கே நான் மகிழ்ச்சியானவள், பிரியத்துகந்தந்தவள், கவலைகளற்றவள். ராட்சஷி! மனதில் என்ன வன்மமோ, பிறர் நிந்திக்கக்கூடிய, கெடுமதிகொண்ட, சுயபரிசோதனைக்கு தன்னை உட்படுத்திக்கொள்ள போதாத அவிவேகமான ஓர் உலகத்தில் என்னைத் தள்ளி கதவடைத்துவிட்டாள், நான் நானாக இல்லை அதுதான் உண்மை. அவள் எனக்கென்று என்ன கொண்டுவந்தாள்? கூட்டிக் கழித்துப்பார்த்தேன்: அவளுக்கு என் தகப்பனார் வேண்டியிருந்தது, எடுத்துக்கொண்டாள். ஒரு சில நாட்களில் எங்களிருவரையும் முறையே ஆன்லார்சனுடைய கணவன், ஆன்லார்சனுடைய மகள் என்று மாற்றவிருந்தாள். அதாவது இனி அவளது காவலில் நாங்கள். இனி நான் நல்லபெண்ணாக மாத்திரமல்ல வாழ்க்கையைச் சந்தோஷமாகவும் பார்க்கக்கூடும். ஒருவகையில் ஆறுதலாலவும் இருந்தது, எதிலும் பிடிப்பற்றிருந்த அப்பாவும் நானும் இனி அவளது விரலசைவுக்கு, பொறுப்புகளேதுமற்று அடங்கிப்போகக்கூடும். அவள் மிகவும் சாமர்த்தியக்காரி. இல்லையெனில் அப்பாவை அதற்குள் கைக்குள்போட்டிருப்பாளா? அவர் முன்பு போல இல்லை, கொஞ்சகொஞ்சமாக என்னிடத்திலிருந்து விலகிக்கொள்ளும் மனோபாவத்துடனிருந்தார், முகத்தில் ஒருவித கலவரம், நேரான பார்வையை தவிர்ப்பது தெரிந்தது. புரிந்துகொண்டபோது ஒருவித மன ஆக்ரமிப்புக்குள்ளாகி, வேதனையிற் துடித்தேன். பழசையெல்லாம் கிளறிப்பார்த்து அழவேண்டும்போலிருந்தது. அப்பாவும் நானுமாக சேர்ந்துகொண்டு ஆடிய ஆட்டமும்; அதிகாலை நேரங்களில், வெறிச்சோடிகிடக்கும் பாரீஸ் வீதிகளில் காரில் போட்ட கும்மாளமும் எத்தனையெத்தனை. எல்லாம் முடிந்தது. இனி என்பங்கிற்கு நானும் ஆன் சொல்கின்றபடி கேட்கவேண்டும், அவள் ஆட்டுவிக்கிறபடி ஆடவேண்டும், அவள் கைகாட்டும் திசையில் செல்லவேண்டும். எனது முயற்சிகளென்று ஏதுமில்லையென்பதால், எனக்குள்ள சிரமங்கள் இனி குறையலாம். எதையும் சாதுரியமாகவும், வேடிக்கையாகவும், பக்குவமாகவும் கையாளக்கூடிய வல்லமை அவளுக்குண்டு, அதை எதிர்க்கின்ற திராணியோ எனக்கில்லை; அடுத்த ஆறுமாதங்களில் திராணியென்ன, அவளை எதிர்க்கவேண்டுமென்கிற எண்ணமேகூட தோன்றாமற் போகலாம்.

இப்படி எத்தனை நாட்களுக்கு? கூடாது. ஏதேனும் செய்தாகவேண்டும். எனது இறந்த கால தந்தையை எழுப்பியாகவேண்டும், எங்கள் கடந்தகால வாழ்க்கையை மீட்டாகவேண்டும். முரண்பாடுகளும் சந்தோஷமும் கொண்ட எனது அண்மைக்கால வாழ்க்கையில் அல்லது அன்றைக்கொருநாள் அத்தனை சீக்கிரம் துறக்கத் துணிந்த எனது கடந்த இரண்டாண்டுகால வாழ்க்கையில்மாத்திரம் வசீகரங்களுக்கு குறைவா என்ன? சிந்தனையிற் சுதந்திரமிருந்தது: அது அற்பமானதாகவும் இருக்கலாம், சொற்பமானதாகவும் இருக்கலாம். பிறகு எனது வாழ்க்கையை நானே தீர்மானிக்கும் சுதந்திரம், என்னை நானே தீர்மானிக்கும் சுதந்திரம். என்னை நானே தீர்மானிக்கும் சுதந்திரமென்பது, எனது ‘இருப்பு சுதந்திரம்’ பற்றியதல்ல. ஏனெனில் நான் களிமண், என்ன பொம்மை? என்பதை நான் தீர்மானிப்பதில்லை, பிடிக்கின்ற கைகளைச் சார்ந்தது. இதில் அபத்தம் என்னவென்றால், பிடிக்கிற கைகளும் என்னை உதாசீனபடுத்தின.

இந்த எனது மனப்போராட்டத்திற்கு எத்தனையோ குழப்பமான காரணிகள். ஒரு சிலர் என்னிடமுள்ள சிக்கல் நிறைந்த குணங்கள் அதற்குப் பொறுப்பென்று சொல்லக்கூடும். ஒரு தந்தையிடத்தில் மகளுக்குள்ள முறையான அன்பு ஒரு பக்கம், ஆன்னிடத்திலுள்ள(Anne) முறையற்ற தவறான அன்பு இன்னொரு பக்கம். இரண்டுக்குமான காரணங்களை அறிந்தே இருக்கிறேன். அக்காரணங்களில் முதலாவதாக இருப்பது தகிக்கும் எனது உடல், இரண்டாவதாக வருவது தத்துவவாதி பெர்க்ஸன்(Bergson), மூன்றாவதாக சிரில்(Cyril). ஆனால் சிரில் பற்றி சொல்லும்போது, அவன் அருகில் இல்லாதது என்று பொருள் கொள்ளவேண்டும். பின்னேரம் முழுதும் எனது நினைவில் வரிசையாக ஏதேதோ கசப்பான விடயங்கள், அதன் முடிவில் புரிந்துகொண்டது இனி எங்கள் எதிர்காலம் ஆன்னுடைய(Anne) தயவில் இருக்கிறது என்பதை. மூளையை யோசிப்பதற்கு செலவிடுவதென்றால் அவ்வளவாக நான் விரும்புவதில்லை, காரணம் எனக்கது எரிச்சலூட்டும் வேலை. மீண்டும் உணவருந்த நாங்கள் அமர்ந்தபோது, காலையில் நடந்துகொண்டதுபோலவே வாய் திறவாமலிருந்தேன். அப்பாவுக்கோ, இறுக்கத்தைக் குறைக்க நகைச்சுவையாய் ஏதேனும் பேசியாகவேண்டும்.

“இளமையில் எனக்கு பிடித்ததென்று சொன்னால், அவளோட பேச்சும், உற்சாகமும்…”

அவரைக் கடுமையாகப் பார்த்தேன், கோபமும் இருந்தது. உண்மை, அவருக்கு இளமை மீது ஒருவித அவாவிருந்தது. நான் மறுக்கவில்லை. என்னோட உரையாடல்பற்றி பேசுகிறார், இவரிடத்திலில்லாமல் யாரிடத்தில் நான் பேசியிருக்க முடியும்?ம். எதைப் பேசவில்லை? காதல், இறப்பு, இசை எல்லாவற்றையும் பேசியதுண்டுதான். எனது ஆயுதங்களைப் பறித்துவிட்டு, நிராதரவான நிலையில் நிறுத்தியிருக்கிறார். மனதிற்குள்ளாக, “அப்பா, நீங்கள் முன்னமாதிரி என்னை விரும்பறதில்லை, என்னை ஏமாற்றிவிட்டீர்கள்” என கூறினேன். வாய்விட்டு எதையும் சொல்லாமலேயே என்னை அவர் புரிந்துகொள்ளவேண்டுமென்று முயற்சித்தேன். மனதிற்குள் பெரிய போராட்டம், வெடித்து அழுதுவிடும் நிலையில் நான். அப்பா என்னைப் பார்க்கிறார், சட்டென்று சுதாகரித்துக்கொண்டார், நடப்பதெதுவும், வேடிக்கைக்கானதல்ல என்பது உறுத்தியிருக்கவேண்டும், எங்களது பரஸ்பர உறவில் ஏற்பட்டுள்ள விரிசலை உணர்ந்திருக்க வேண்டும். உறைந்துபோனவர்போல பேசாமலிருந்தார், முகத்தில் கேள்விக்குறி. ஆன் எனது பக்கம் திரும்பியவள்:

” உனக்கு என்ன ஆச்சு? ஏன் ஒரு மாதிரியாய் இருக்கிற. உன்னைக் கொஞ்சம் கடுமையாக உழைக்கச் சொன்னதுலே எனக்கும் வருத்தமிருக்கு.”

நான் பதில் சொல்லவில்லை. இப்படியொரு நாடகத்தை அரங்கேற்றத் தெரிந்த எனக்கு, எப்படி முடிக்கப்போகிறேன் என்பது தெரியாமலிருந்தது. என்னை நானே நிந்தித்துக்கொண்டேன். ஒருவழியாகச் சாப்பிட்டு முடித்தோம். அங்கிருந்து பார்க்க முற்றத்தில், உணவு அறை சன்னல் ஏற்படுத்தியிருந்த செவ்வக ஒளித்துண்டொன்று தெரிந்தது. அதிலே உயிர்ப்புடன் நீண்ட கரம் – ஆன்னுடையது – முன்னும் பின்னுமாய் அசைந்தது, பின்னர் அப்பாவுடைய கரத்தினைத் தேடிப் பிடித்தது. சிரிலை நினைத்துக்கொண்டேன். சில்வண்டுகள் ரீங்காரமிட, நிலவொளியின் கீழ், முற்றத்தில், அவனுடைய கைகளில் கட்டுண்டு கிடக்க ஆசை. தழுவப்படவும், அரவணைக்கப்படவும் மனம் அலைந்தது, என்னை நானே தேற்றிக்கொண்டேன். அப்பாவும், ஆன்னும்(Anne) அமைதியாக இருந்தார்கள்: அவர்கள் காதல்விளையாட்டை எதிர்பார்த்து இரவொன்று காத்திருந்தது, என்னை எதிர்பார்த்து காத்திருப்பதோ பெர்க்சன்(Bergson). மனமுடைந்து கதறவேண்டும், ஓவென்று அழவேண்டும் போலிருக்கிறது, முயற்சித்தேன், பலனில்லை. ஆன்னை(Anne) ஒருநாள் வெல்லமுடியுமென்கிற நம்பிக்கையில், அவளுக்காக ஏற்கனவே மனமுடைந்து கதறியிருக்கிறேன் என்கிறபோது மீண்டுமொருமுறை எனக்காகக்கூட அழுவதென்பது எப்படி சாத்தியம்?


nakrish2003@yahoo.fr

Series Navigation

நாகரத்தினம் கிருஷ்ணா

நாகரத்தினம் கிருஷ்ணா