வஞ்சித்த செர்னோபில்

This entry is part [part not set] of 29 in the series 20060915_Issue

அசுரன்அலெக்சாண்டர் யுவ்செங்கோ – இவர் 1986ஆம் ஆண்டு ஏப்ரல் 26ஆம் நாள் வெடித்துச் சிதறிய செர்னோபில் அணுஉலையில் நான்காவது பிரிவில் பணியாற்றியவர். அங்கு அந்த இரவில் பணியாற்றியவர்களில் இன்னமும் எஞ்சியிருக்கும் சிலரில் இவரும் ஒருவர். கடும் தீக்காயமடைந்த இவரைக் காப்பாற்ற பலமுறை அறுவைச்சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்றுவரை கதிர்வீச்சின் கோர தாண்டவத்தால் ஏற்பட்ட உடல்நலக்கேட்டுடனேயே அவர் வாழ்ந்துவருகிறார். 2004ஆம் ஆண்டு டிஸ்கவரி தொலைக்காட்சி அலைவரிசையில் ஒளிபரப்பான ஒரு ஆவணப்படத்தில்தான் அவர் முதன்முதலாக தனது மெளனம் கலைந்து பேசியுள்ளார். அந்த இரவில் என்ன நடந்தது என்பது குறித்து நியூ சயின்டிஸ்ட் இதழுக்காக மைக்கேல் பாண்ட்-டிடம் அவர் பேசியவை இவை.

பொறியியலில் அணுஉலைகள் குறித்து சிறப்புப் பாடத்தைப் பயின்ற அலெக்சாண்டர் யுவ்செங்கோ விபத்தின் போது பொறியியல் பிரிவின் முதுநிலை பொறியாளராக இருந்தார். அப்போது அவருக்கு வயது 24. ஒரு பாதுகாப்பு பரிசோதனையின்போதுதான் இந்த விபத்து நடைபெற்றது. பல வேகக் கட்டுப்பாட்டுக்கோல்கள் வெளியே எடுக்கப்பட்டு, பின்னர் உலையை நிறுத்துவதற்காக அவசரமாக உள்ளே செலுத்தப்பட்டபோது அதன் முனையிலிருந்த கிராஃபைட்டானது அணுக்கரு உலையின் வேகத்தை அதிகப்படுத்த- அதன் விளைவாக பேரளவில் உலையில் வெடிப்பு ஏற்பட்டது. இப்போது அலெக்சாண்டர் தனது மனைவி நடாஷாவுடனும் மகன் கிரில் உடனும் மாஸ்கோவில் வாழ்ந்து வருகிறார்.

நீங்கள் எப்படி செர்னோபில் அணுஉலைக்கு வேலைக்குச் சென்றீர்கள்?
அதை நான் தேர்ந்தெடுத்தேன். அது சோவியத் ஒன்றியத்திலிருந்த மிகச்சிறந்த அணுமின் நிலையங்களில் ஒன்றாகும். அந்நகரம் வாழ்வதற்கு சிறந்தவொன்று. அதோடு, நான் படித்துக்கொண்டிருந்தபோது பயிற்சிக்காக அங்குதான் சென்றேன். அங்கு நல்ல ஊதியம் கிடைக்கும். அந்நாட்களில் அணுமின்நிலையப் பொறியாளர் பணி என்பது மரியாதைக்குரிய ஒன்றாக இருந்தது. ஆனால் இன்றோ இரசிய மக்கள் வணிகராகவோ அல்லது வழக்கறிஞராகவோ தான் இருக்க விரும்புகிறார்கள்.

செர்னோபில் உலை வெடித்த அந்த இரவில் நீங்கள் என்ன செய்துகொண்டிருந்தீர்கள்?
அன்று நான் இரவுப்பணியில் இருந்தேன். நான் பணிக்கு வந்தபோது அன்று மேற்கொள்ளப்படுவதாக இருந்த பாதுகாப்பு சோதனை அன்று மாலைவரையிலும் மேற்கொள்ளப்படாமல் நிறுத்திவைக்கப்பட்டிருப்பதைக் கண்டேன். அந்த உலை ஏற்கனவே நிறுத்தப்பட்டிருந்தது. எனவே, அதன் குளிர்தன்மை எப்படியிருக்கிறது என்பதை மேற்பார்வையிடவேண்டியிருந்தது. இது மிகவும் எளிதான பணியாகும். எனவே, அன்று இரவு எனக்கு பெருமளவில் வேலை இருக்காது என்று நினைத்தேன்.

என்ன நடந்தது?
என்னுடன் பணிபுரிபவர்களில் ஒருவர் கொஞ்சம் ‘பெயின்ட்’ கேட்டார். அதோடு படிப்பதற்குச் சில ஆவணங்களையும் கேட்டார். நான் அவருடன் பேசிக்கொண்டு எனது அலுவலகத்தில் இருந்தேன்.
அந்த உலை வெடித்த சத்தத்தை கேட்டதும் நீங்கள் என்ன செய்தீர்கள்?
முதலில் நான் வெடிப்பு எதனையும் கேட்கவில்லை. மெத்தென்ற ஒலியையும் ஒரு குலுக்கலையும் உணர்ந்தேன். அதன்பின் இரண்டு அல்லது மூன்று விநாடிகளின் பின்னர் வெடிப்பு ஒலி கேட்டது. எனது அலுவலகக் கதவுகள் உடைந்து வீசப்பட்டன. அச்சூழல் ஒரு பழைய கட்டிடம் இடிந்து விழும்போது புகைமண்டலமும் தூசியும் பறப்பதுபோல இருந்தது. ஆனால், கூடவே பெருமளவு நீராவியும் இருந்தது. மிகுந்த ஈரப்பதமும் நிறைய தூசியும் கொண்ட காற்று மிக வேகமாக வீசியது. நிறைய குலுங்கியது, நிறைய பொருட்கள் கீழே விழுந்தன. விளக்குகள் அணைந்தன. முதலில் நாங்கள் பாதுகாப்பாக இருக்க ஒரு இடத்தைத் தேடவேண்டியிருந்தது. நாங்கள் வெளியே செல்வதற்கான வராந்தாவை நோக்கிச் சென்றோம். மிகவும் தாழ்ந்த கூரையுள்ள சிறிய பாதை அது. நாங்கள் அங்கே சென்றபோது நாங்கள் மட்டும்தான் நின்றுகொண்டிருந்தோம். எங்களைச் சுற்றிலும் எல்லாமே விழுந்துகிடந்தன.

அது என்னவாக இருக்கும் என்று நினைத்தீர்கள்?
மெத்தென்ற ஒலி கேட்டபோது மிகக் கனமான ஏதோவொரு பொருள் கீழே விழுகிறது என்று நினைத்தேன். அதன்பின்னர் எனக்கு எதுவும் தெரியவில்லை. ஒருவேளை ஏதோ போர் தொடங்கிவிட்டதோ என்று நினைத்தேன்.

உலை வெடித்துவிட்டது என்று நினைத்தீர்களா?
உலைக்கு அப்படியேதும் ஏற்படும் என்று நான் நினைக்கவில்லை. அது நடப்பதற்கு முன்பு எந்தவொரு நடுக்கமோ, சத்தமோ அல்லது ஏதும் சிக்கல்கள் இருப்பதான வேறெந்த முன் அறிகுறிகளுமோ இல்லை. எங்களுக்கு பல்வேறு அவசரகால நிலைகளில் பயிற்சிகள் வழங்கப்பட்டிருந்தன. நாங்கள் பொறியாளர்கள். எனவே, உலை என்ன செய்யும் அல்லது செய்யாது, என்னவிதமான தவறு நடக்கும் என்று எங்களுக்குத் தெரியும். நெருப்பு போன்ற பிறவற்றை எதிர்கொள்ள எங்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டிருந்தது. ஆனால் இத்தகைய சூழல் குறித்து எங்களுக்கு பயிற்சியளிக்கப்படவில்லை.

பாதுகாப்பு அளவீடுகள் குறித்து நாங்கள் நம்பகத்தன்மை கொண்டிருந்தோம். அவசரகால பொத்தானை மட்டும் அழுத்தினால் போதும் கட்டுப்பாட்டுக் கோல்கள் உலையினுள் செலுத்தப்படும். அன்று இரவுப்பணியில் கட்டுப்பாட்டு அறையில் இருந்த எனது நண்பன் லியோனிட் டாப்டுனோவ் அதைச் செய்திருப்பான். ஆனால், அது வேலை செய்யவில்லை. மனிதர்கள் தவறு செய்யக்சுடியவர்கள், ஆனால் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதனை ஈடுசெய்துவிடும் என்று நாங்கள் நம்பினோம். எங்கள் பணிக்கான வழிகாட்டிக் கையேட்டில் என்ன சொல்லப்பட்டிருக்கிறதோ அதனை நாங்கள் நம்பினோம்.

வெடிப்பு நிகழ்ந்தபின்ன என்ன செய்தீர்கள்?
நான் எனது அலுவலகத்திற்கு திரும்பச் சென்று, நான்காவது உலையின் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு என்ன நடந்தது என்று அறிய முயன்றேன். ஆனால், இணைப்பு கிடைக்கவில்லை. திடீரென்று மூன்றாவது உலையின் கட்டுப்பாட்டு அறையிலிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. உடனடியாக ஸ்ட்ரெச்சரை எடுத்து வருமாறு ஆணையிடப்பட்டேன். நான் அதனைத் தூக்கிக்கொண்டு ஓடினேன். கட்டுப்பாட்டு அறைக்கு வெளியே, வெடிப்பு நடந்த இடத்திற்கு அருகே பணியாற்றிக்கொண்டிருந்த நண்பனைக் கண்டேன். என்னால் அவனை அடையாளம் காண இயலவில்லை.

அவனது உடைகள் கரி படிந்தும், அவனது முகம் கொதிநீக் பட்டு அடையாளந்தெரியாத அளவில் சிதைந்தும் இருந்தது. அவனது குரலைக்கொண்டுதான் நான் அவனை அடையாளம் கண்டேன். அவன் உடனடியாக என்னை வெடிப்பு நிகழ்ந்த இடத்திற்குச் செல்லுமாறும் அங்கே நிறையபேர் காயம்பட்டுக்கிடப்பதாகவும் தெரிவித்தான். அவனை வேறுசிலர் பாதுகாத்துக்கொண்டிருந்ததால் நான் கைவிளக்கை எடுத்துக்கொண்டு பெரிய குளிரூட்டும் தொட்டிக்கு அருகே பணியாற்றிக்கொண்டிருந்த பிறரைத் தேடி ஓடினேன்.

அங்கே என்ன கண்டீர்கள்?
நான் மனிதர்களைத் தேடி ஓடிய இடத்தில் யாரையும் காண இயலவில்லை. அப்பகுதியே சேறாகக் காணப்பட்டது. நான் தேடிச்சென்றவர் மறுபுறம் தவழ்ந்து செல்ல முயற்சிப்பதைக் கண்டேன். அவர் மிக நனைந்து, அழுக்கடைந்து, மிகக் கடுமையான கொதிநீர் காயத்துடன் காணப்பட்டார். அவர் எழுந்தார். ஆனால், கடும் அதிர்ச்சியால் நடுங்கிக்கொண்டிருந்தார். அவர் என்னிடம் வெடிப்பு நடந்த இடத்திற்குச் செல்லுமாறு கைகாட்டி கூறினார். அங்கேதான் எனது நண்பனான வலேரா கொடம்சுக் இருந்தான். ஆனால், அவர் கைகாட்டிய பகுதியில் வெற்றிடம்தான் இருந்தது.

அதன்பின் என்ன நடந்தது?
அப்போது செர்னோபிலின் துணை முதன்மைப் பொறியாளரான அனயோலி டெத்லோவ்-வால் நான்காவது கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பப்பட்ட யூரி டிரிகப்பை நான் கண்டேன். அவசரகால உயர் அழுத்த குளிரூட்டும் நீரை அப்பகுதிக்குத் திறந்துவிடுமாறு அவர் பணிக்கப்பட்டிருந்தார். அவரால் மட்டுமே தனியாக அதனைச் செய்ய இயலாது என்பதை உணர்ந்த நான் உதவிக்கு ஆட்களை அழைத்து வருமாறு எனது நண்பர்களிடம் கூறிவிட்டு, டிரிகப்புடன் தண்ணீரைத் திறந்துவிடச் சென்றேன்.

அதை வெற்றிகரமாகச் செய்தீர்களா?
நாங்கள் குழாய்க்கு அருகில் செல்ல இயலவில்லை. அந்த வராந்தாவிலிருந்த குளிர்நீர் கலன்கள் உலைக்கு அருகே இருந்தன. அவற்றுக்கு இரண்டு வாசல்கள் இருந்தன. சுவர்கள் உடைந்து கிடந்ததால் முதல் வாசலில் செல்ல இயலவில்லை. எனவே, இரு தளங்கள் கீழே இறங்கி அடுத்த கதவு வழியாக செல்ல முயன்றோம். அங்கே எங்கள் முட்டளவு தண்ணீர் தேங்கியிருந்தது. நாங்கள் கதவைத் திறக்க முடியவில்லை. ஆனால், குறுக்கே இருந்த ஒரு ஓட்டை வழியே இடிபாடுகளைப் பார்க்க முடிந்தது. மிகப் பெரிய தண்ணீர் தொட்டிகள் உடைந்து சிதறிக்கிடந்தன. ஒரு கதவும் ஒரு சுவரும் மட்டுமே அங்கே எஞ்சியிருந்தது. நாங்கள் திறந்த வெளியையே கண்டோம்.

உண்மையாகவா?
அங்கு நடந்தது என்ன என்பதைத் தெளிவாக அறிவதற்காக நாங்கள் வெளியே நடந்தோம். அங்கே நாங்கள் கண்டது எங்களை திகிலடையச் செய்வதாக இருந்தது. அங்கே எல்லாமே அழிக்கப்பட்டுகிடந்தன. குளிரூட்டும் அமைப்பின் அடையாளமே இல்லாமல் போய்விட்டது. உலையின் வலப்புறம் இருந்த அறை முற்றிலும் தகர்ந்துபோய்விட்டன. இடப்புறமோ குழாய்கள் எல்லாம் தொங்கிக்கொண்டிருந்தன. அப்போதுதான் நிச்சயமாக கோடெம்சுக் இறந்துபோயிருப்பான் என்று நான் உணர்ந்தேன். அவன் பணியாற்றிக்கொண்டிருந்த இடம் இடிந்துகிடந்தது. பெரிய சுழலிகள் இன்னமும் நின்றுகொண்டிருந்தன, ஆனால் அவற்றைச் சுற்றிலும் அனைத்தும் தகர்ந்துபோய்கிடந்தன. அவன் நிச்சயம் அதற்குள் புதைக்கப்பட்டிருப்பான்.

நான் நின்ற இடத்திலிருந்து பார்க்கும்போது உலையின் மையப்பகுதியில் இருந்து ஒளிக்கற்றைகள் வெளியே வீசப்படுவதைக் கண்டேன். கதிர்வீச்சு காற்றில் கலந்ததால் ஏற்பட்ட அந்த ஒளிவீச்சைப் பார்ப்பதற்கு லேசர் ஒளிக்கதிர்போல் தெரிந்தது. அது வெளிர் நீல நிறத்துடனும் மிக அழகாகவும் காட்சியளித்தது. நான் பல நொடிகள் அதனைப் பார்த்தவாறு நின்றேன். அங்கு எங்கு நோக்கினாலும் வெளியேறிக்கொண்டிருக்கும் காமா கதிர்வீச்சுக்கும் மற்றும் நியூட்ரான்களுக்கும் இடையே அந்த இடத்தில் நின்றுகொண்டிருந்தால் நான் கொல்லப்படுவேன் என்பதை உணரவே சில நிமிடங்களாயின. ஆனால் டிரெகுப் வெளியே செல்லும் வாயிலை நோக்கி என்னைப் பிடித்து இழுத்துச்சென்றான். அவன் என்னைவிட வயதானவனாகவும் அனுபவமிக்கவனாகவும் இருந்தான்.

அதன்பின் என்ன செய்தீர்கள்?
நாங்கள் நான்காம் எண் கட்டுப்பாட்டு அறையை நோக்கி சென்றோம். ஆனால், உலையிருக்கும் பகுதிக்குச் சென்று உலையின் கட்டுப்பாட்டுக் கோல்களை கைகளாலாவது இயக்குமாறு டெத்லோவால் அனுப்பப்பட்ட 3 பேரை வழியிலேயே சந்தித்தோம். டிரெகுப் நாங்கள் கண்ட காட்சியைப் பற்றி அறிக்கை செய்வதற்காக கட்டுப்பாட்டு அறையை நோக்கித் திரும்பி ஓடினான். நான் அந்த மூவருடனும் உதவி செய்வதற்காகச் சென்றேன். நான் அவர்களிடம் அவர்களுக்கு இடப்பட்ட கட்டளை முட்டாள்தனமானது என்றும், ஏனென்றால், அங்கே உலை இருந்த இடமே இல்லை என்றும் அங்கே கட்டுப்பாட்டுக் கோல்கள் இருப்பதற்கான வாய்ப்புகளே இல்லை என்றும் கூறினேன். ஆனால், அவர்களோ நான் கீழ்மட்டத்திலிருந்தே அதனைப் பார்த்ததாகவும் அவர்கள் மேலேயிருந்து அதனைப் பார்த்ததாகவும் தெரிவித்தனர்.

அங்கே செல்வது எவ்வளவு ஆபத்தானது என்று நீங்கள் உணர்ந்தீர்களா?
ஆம். நாங்கள் உணர்ந்தோம்.

நீங்கள் உலையிருந்த இடத்திற்குச் சென்றபோது என்ன நடந்தது?
நாங்கள் ஒரு முனையையப் பிடித்து தொங்கியபடி ஏறினோம். ஆனால் அங்கே சிறிய இடமே இருந்தது. ஏனென்றால் நான் ஏற்கனவே அந்த தளத்தில் ஏறி கதவைத் திறக்க முயன்றிருந்தேன். அவர்கள் என்னிடமிருந்து கைவிளக்கை வாங்கிக்கொண்டு உள்ளே சென்றார்கள். அவர்கள் அங்கே என்ன உணர்ந்தார்கள் என்பதை அறிந்துகொள்வதற்காக நான் அவர்களின் குரலை எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன். அது ஒரு எரிமலை வாய் போலத் தோன்றியது. தம்மால் அங்கே ஏதும் செய்ய இயலாது என்று சொல்லியவாறு அவர்கள் வெளியே வந்தார்கள்.

அந்த 3 பேருக்கும் என்ன நடந்தது?
அவர்கள் மூவரும் அதன்பின் விரைவிலேயே இறந்துவிட்டார்கள். அந்த சுவரும் கதவும்தான் உண்மையில் எனது உயிரைக் காத்தன. நான் அந்தக் கதவைத் திறந்திருந்தால் மிக அதிகபட்ச கதிர்வீச்சால் தாக்கப்பட்டிருப்பேன். நாங்கள் எங்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்தோம். அங்கே நாங்கள் செய்வதற்கு ஏதும் இல்லை. அது மிக மோசமான உணர்வாக இருந்தது.
எப்போது உங்கள் உடல்நிலை பாதிக்கப்பட்டதாக நீங்கள் உணர்ந்தீர்கள்?
காலை 3 மணிவாக்கில்- அதாவது, வெடிப்பு நடந்ததன் ஒன்றரை மணி நேரத்தின் பின்னர்.

நீங்கள் எவ்வாறு உணர்ந்தீர்கள்?
நான் மிகச் சோர்வடைந்தேன். கதிர்வீச்சு பாதிப்பின் முதல் அறிகுறிகளில் ஒன்றாக வாந்தி எடுத்தேன். ஆனால், அதை உடனடியாக உணராமல் உணவில் ஏதம் கோளாறோ என்றே சிந்தித்தேன். வெடிப்பு நிகழ்ந்த அரைமணி நேரத்திற்கு பின்னர் கையில் டோசிமீட்டர் வைத்திருந்த ஒருவரை சந்தித்தேன். அவர் உடலை முழுமையாக மூடியிருந்தார். எனவே, அது யாரென்று அடையாளம் தெரியவில்லை. நான் அவரிடம் அளவு எவ்வளவு என்று கேட்டேன். அவர் அம்மானியைக் காட்டினார். அதன் முள் அளவையின் முடிவுப்பகுதியைத் தொட்டிருந்தது. அது மிக அச்சமூட்டும் நேரமாக இருந்தது. அப்போது நாங்கள் எவ்வளவு கதிரடி வாங்கியிருந்தோம் என்று சொல்வது இயலாதவொன்று. ஆனால், அது மிக அதிகபட்ச அளவு என்பது மட்டும் உண்மை. நான் மிகவும் சோர்வடைந்து நடக்க முடியாத நிலைக்கு ஆளானதால் காலை 5 மணிக்கு உள்ளூர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டேன். அன்று மாலையே மாஸ்கோவிற்கு அழைத்துச் செல்லப்பட்டேன்.

நீங்கள் இறந்துவிடுவீர்கள் என்று நினைத்தீர்களா?
ஒருவர் பின் ஒருவராக பிறர் எவ்வாறு சாகிறார்கள் என்பதை அங்கே படுக்கையில் படுத்தபடி கேட்டுக்கொண்டிருப்பதுதான் மிகத்துயரமான நிமிடங்கள். எனது முறை எப்போது வருமோ என்று நான் நினைக்கொண்டிருந்தேன். நான் கடவுள் நம்பிக்கை இல்லாதவன், எனவே எனக்கு எந்தவொரு வழிபாட்டுப் பாடலும் தெரியாது. ஆனால், மறுநாள் காலை நான் உயிருடனிருக்க வேண்டும் என்று ஒவ்வொரு நாள் மாலையும் நான் பிரார்த்தனை செய்தேன்.

அவர்கள் உங்களை எப்படி நடத்தினார்கள்?
அது மிகத் தீவிரமான, விரைவான சிகிச்சை முறையாகும். அதனைச் சமாளிக்க மிகுந்த வலு வேண்டும். எனக்கு தொடர்ச்சியாக இரத்தமும் பிளாஸ்மாவும் செலுத்தப்பட்டுக்கொண்டிருந்தது. சில மாதங்கள் நான் பிறருடைய இரத்தத்திலேயே வாழ்ந்தேன். அதன்பின் கதிரடி வாங்கிய இடங்களில் புண்கள் ஏற்படலாயின. எனக்கு நிறைய தீக்காயங்கள் ஏற்பட்டன. இரு மாதங்களின் பின்னர் அவை மறையத்தொங்கிய பின்னர்தான் பிழைப்போம் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. அதன்பின்னர் எனது உடல் தானாகவே செயல்படத்தொடங்கியது. அதன்பின் எனக்கு இரத்தம் செலுத்தப்படத் தேவையில்லாதுபோயிற்று. என்றாலும் எனக்கு தொடர்ச்சியாக மயக்க மருந்து குழாய்மூலம் செலுத்தப்பட்டுக்கொண்டிருந்தது. நான் மிகவும் உடல் மெலிந்து இறந்துகொண்டிருக்கும் மனிதனைப்போல காணப்படுவதாக எனது மனைவி நடாஷா கூறினாள். நான் மிக மெதுவாகவும் மெல்லிய குரலிலும் பேசுவதாகவும் கூறினாள். ஆனால், நான் குழப்பமில்லாது, தெளிவான மனநிலையுடன் இருந்தேன். என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதை நான் புரிந்துகொண்டேன்.

என்ன புரிந்துகொண்டீர்கள்?
எனக்கு முறையாக சிகிச்சையளிக்கப்படுவதாக உணர்ந்தேன். அதோடு நான் இயற்கையாகவே உறுதியும் உடல்நலமும் மிக்கவன். அப்போது 24 வயது இளைஞனாக இருந்தேன்.

இப்போதும் உடல்ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கிறீர்களா?
எனக்கு இப்போதும் தொடர்ச்சியாக தோல் மாற்று அறுவைச் சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இன்னமும் சீழ் புண்கள் ஏற்படுகின்றன.

இரசிய மக்கள் உங்களை எப்படி நடத்துகிறார்கள்?
நான் அதைப்பற்றி பேசாமலிருக்க முயற்சிக்கிறேன். நான் அதைப்பற்றி மக்கள் அறிந்துகொள்வதை விரும்பவில்லை. எனக்கு இரண்டு பதக்கங்கள் அளிக்கப்பட்டன. அன்று இரவு நான் மேற்கொண்ட நடவடிக்கைகளைப் பாராட்டி ஒன்றும் அதன் 10 ஆண்டுகளின் பின்னர் மற்றொன்றும் அளிக்கப்பட்டது. நான் யாரென்று எனது அண்டை வீட்டாருக்குத் தெரியாது. அதோடு ஒரு களங்கம் சேர்ந்திருக்கிறது.

நீங்கள் செர்னோபிலுக்குத் திரும்பச் சென்றீர்களா?
ஒருமுறை, டிசம்பர் 2000ல் அந்த உலை மூடப்பட்டபோது நான் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டிருந்தேன். நான் மூன்றாவது உலை கட்டிடத்தை சுற்றிப் பார்த்ததில் அது வெடித்துச் சிதறிய நான்காவது உலையின் அப்பட்டமான நகலாக இருப்பதைக் கண்டேன். அது எனக்கு மகிழ்ச்சியளிக்கவில்லை. அந்த உலைக்கு மேல் ஏறியபோது எனது கால்கள் தள்ளாடின.

( இது விழிப்புணாவு இதழில் வெளியான கட்டுரை )


Series Navigation