வசியம்

This entry is part [part not set] of 29 in the series 20020617_Issue

அலர்மேல் மங்கை


இப்ராஹிம் பாய் கடையில் இருந்து படியிறங்கிய போது வானம் லேசாக இருண்டது. பச்சை ப்ளாஸ்டிக் பேப்பர் சுற்றியிருந்த ‘ நியூட்றின் ‘ சாக்லட்டை பேப்பரைப் பிரித்து வாயில் போட்டுக் கொண்டாள் சீதா.

‘ மழை ரொம்ப வர்ரதுக்குள்ள வீட்டுக்குப் போயிரணும் ‘ என்று நினைப்பு ஓடியது. தையல் மிஷின் ஊசி உடைந்து விட்டது. இவள் போய் ஊசியைக் கொடுத்த பின்பு தான் சமையல் அக்கா சிறு பூக்கள் சிதறிய பாம்பே டையிங் துணியில் தலையணை உறைகளைத் தைக்கத் துவங்க வேண்டும். தையல் மிஷின் வாங்கியதற்காக அம்மா மீனா டாச்சரை வைத்துத் தையல் கற்றுக் கொண்டது எதற்காக என்று சீதாவுக்கு புரியவில்லை. தையல் மிஷின் வந்த நாளில் இருந்து, சமையல் வேலை செய்யும் குப்பக்காதான், சமையல் முடிந்த நேரங்களில் தைக்கிறாள். குப்பக்காவுக்கும் அதிகமாகத் தைக்கத் தெரியாது. எதோ தையல் பிரிந்தது, கிழிசல், தலையணை உறை மட்டுமே அவளுக்குத் தைக்கத் தெரிந்திருந்தது. மற்றபடி அக்கா, அம்மா, பாட்டியின் ஜாக்கட்டுகளை அம்மா இன்னும் உமா டெய்லரிடம்தான் தைக்கக் கொடுக்கிறாள். டெய்லர் வீட்டுக்கு வந்து ஜாக்கட் துணிகளை வாங்கும் போதும், தைத்த பின்பு திருப்பித்தர வரும் போதும் தாத்தாவுக்குக் கோபம் வரத்தான் செய்கிறது.

‘வீட்டுலே தையல் மிஷினை வச்சுகிட்டு எதுக்கு இப்படி டெய்லருக்குத் தண்டம் அழுது ? ‘ என்ற கத்தல்களை அம்மா சட்டை செய்வதில்லை. ‘ஆமா, வேற வேலையென்ன ‘, என்ற நினைப்பு அம்மாவின் மனதில் ஓடுமோ என்னவோ! அம்மாவைப் பொறுத்தவரை தையல் மிஷின் தையல் பிரிந்தது, கிழிசல், தலையணை உறைகளை தைக்க மட்டுமே.அம்மாவுக்கு வசதியாக குப்பக்கா சமையல் வேலை முடிந்தவுடன் இந்தத் தையல் வேலைகளையும் எடுத்துக் கொண்டாள். ஆச்சிக்கு உள் பாவாடை தைப்பது மட்டுமே அம்மா செய்தாள். ஆனால் அம்மா தைக்கும் உள் பாவாடைகள் ஆச்சிக்கு அவ்வளவாகத் திருப்தி தராது. ஆச்சிக்கு உள் பாவாடை கரண்டைக் காலுடன் நிற்க வேண்டும். அதற்கு ஒரு விரற் கடை மேலேயும் ஏறக் கூடாது, கீழேயும் இறங்கக் கூடாது. அப்புறம் உள் பாவாடைக் கயிறு ரெம்ப நீளமாக வேண்டும், இடுப்பைச் சுற்றிக் கட்ட. இதில் ஏதேனும் ஒன்றில் அம்மா தவறாமல் கோட்டை விட்டாள். அப்புறம் இரண்டு, மூன்று மணி நேரம் அம்மா தைத்த உள் பாவாடையை ஆச்சி விமர்சிக்கும் போது எல்லோருக்கும்தான் எரிச்சல் வருகிறது.

‘இனிம டெய்லர்கிட்டயே தைக்கக் குடுங்க… ‘

என்பாள் அம்மா எரிச்சலுடன்.

‘அதாஞ் சரி… ‘ என்பாள் ஆச்சி.

சொல்வதோடு சரி, ஒரு நாளும் டெய்லரிடம் தர மாட்டாள்.

மழை வருமுன் வீட்டுக்குப் போய் விட வேண்டும் என்று வேகமாக நடையை வீசினாள். ‘பெத்தாச்சி ப்ரஸ் ‘க்கு அடுத்திருந்த காய்கறிக் கடை மூடிக் கிடந்தது. இனி சாயங்காலம்தான் கடை திறக்கும். எதிர்ச்சாரியில் மாடியில் இருந்த ‘டைப்பிங் இன்ஸ்டிட்யூட் ‘டில் இன்ஸ்டிட்யுட் மாஸ்டர் யாரிடமோ இரைந்து பேசிக் கொண்டிருந்தார். சாக்லட் வாயில் பாதியாகக் கரைந்திருந்தது. ராமர் கோயில் முன்பாக உள்ள மைதானத்தில் இரண்டு மாட்டு வண்டிகளுக்குள்ளும் வண்டிகாரர்கள் தூங்கிக் கொண்டிருந்தார்கள். மாடுகள் இரண்டும் அசை போட்டுக் கொண்டிருந்தன. சிறிது தள்ளி மைதானத்தில் சிறிய கூட்டம்..

சீதா ஆவலை அடக்க முடியாமல் எட்டிப் பார்த்தாள்.

‘அட…பாம்பாட்டி! ‘

கூட்டத்தில் நெருக்கி அடித்துக் கொண்டு முன்னால் வந்தாள். மேலே வானம் இன்னும் கறுத்தது. மதியம் ஒரு மணி வெயிலைக் கறுத்த வானம் விழுங்கியது.

பாம்பாட்டியுடன் சீதா வயதில் ஒரு பெண்ணும், அதை விடச் சிறிய பையனும்..

பாம்பாட்டி ஏதேதோ கூறி கூட்டத்தின் ஆவலை ஏற்றிக் கொண்டிருந்தான்.

சீதாவுக்குப் பாம்பைப் பார்க்கும் ஆவல் மிகுந்தது. அதுவரை விஷப்பாம்பைப் பார்த்ததில்லை அவள். படங்களிலும், சினிமாக்களிலும் மட்டுமே பாம்பின் தரிசனம் கிடைத்துள்ளது. கரிய நிறத்தில், வழுவழுவென்று கண்களில் ஒரு பளபளப்புடன் அசையாமல் படமெடுத்து நிற்கும் பாம்புகள் ஏதோவொரு வசீகரத்தைக் கொண்டிருப்பதாக அவளுடைய பதினோரு வயது மனம் கூறுகிறது. அது விஷப் பாம்பாக இருப்பதாலேயே, அதைப் பார்க்க ஆவல் கூடுகிறது. ‘சர சர ‘ வென்று, ஊர்ந்து வந்து யாருடைய பாதத்தையாவது கொத்தி விட்டால்…

ஆனால் அந்தப் பாம்பு பாம்பாட்டியை மீறி எதுவும் செய்து விடப் போவதில்லை என்ற நம்பிக்கையில் அந்தக் கூட்டத்தில் உள்ள மற்றவர்கள் நிற்பது போல், சீதாவும் தைரியமாகப் பாம்பாட்டி எப்போது பாம்பு இருக்கும் பெட்டியைத் திறப்பான் என்ற ஆவலில் உந்தப் பட்டவளாக நின்றாள்.

‘கடைக்குப் போனமா, வந்தமான்னு சீக்கிரம் வா. வாய் பாத்துட்டு நிக்காத… ‘

அம்மா கூறியது நினைவுக்கு வந்தாலும் பாம்பைப் பார்த்து விட்டுத்தான் போவது என்ற முடிவுடன் நின்றாள்.

பெண் குழந்தையைக் கடைக்கு அனுப்புவதில் தாத்தாவுக்கு அவ்வளவு சம்மதமில்லை. மேலும் வீட்டில் வெளி வேலைக்கு ஒரு ஆள், சமையலுக்கு ஒரு ஆள் என்று வைத்துக் கொண்டு வீட்டுப் பிள்ளையை ஏன் கடைக்கு அனுப்ப வேண்டும் என்ற முதலாளி மனப்பான்மை வேறு. ஆனால் சீதாவுக்குக் கடைக்குப் போக ரெம்பப் பிடிக்கும். வீட்டின் வெளியே தனியான ஒரு உலகமாகப் படுகிறது. அந்த உலகில் கோபக்கார தாத்தா இல்லை, நச்சரிக்கும் ஆச்சி இல்லை, சிடு சிடுக்கும் அப்பா இல்லை, யார் மீது கோபம் என்றாலும் அதற்குச் சீதாவை அடிக்கும் அம்மா இல்லை, சதா சீண்டிக் கொண்டிருக்கும் அண்ணன் இல்லை,

‘ஐ கனாட் பிலீவ் யு ஆர் ராதா ‘ஸ் சிஸ்டர்.. ‘ என்று சீதாவை எப்போதும் அவளுடைய அக்கா ராதாவுடன் ஒப்பிட்டுப் பேசும் மார்கரெட் மிஸ் இல்லை. அது ஒரு இனிய உலகம். அதில் கடைகளும், அவளுடன் அன்பாகப் பேசும் கடைக்காரர்களும், காவிப் பட்டை அடித்த ராமர் கோயிலும், அதை ஒட்டிய தெப்பக் குளமும், மாட்டு வண்டிகளும், மாடுகளும், மரங்களும், செடிகளும், இன்னும் நிறைய மனிதர்களும் மட்டுமே அங்கு உண்டு. அதையெல்லாம் பார்க்கப் பார்க்க அவளுக்கு சந்தோஷமாக இருக்கிறது. எனிட் ப்ளைட்டன் புத்தகத்தில் வரும் ‘சீக்ரெட் செவன் ‘, ‘பேமஸ் பைவ் ‘ போன்ற அபூர்வ உலகம். ஆனால் எனிட் ப்ளைட்டன் புத்தகத்தில் வருவது போல பெரிய கோட்டைகளும் (castles), பெரிய கடல்களும், அழகான படகுகளும், தோட்டம் சூழ்ந்த அழகிய காட்டேஜ்களும் இங்கு இல்லை. ஆனால் அவற்றையெல்லாம் அவள் கற்பனையில் உருவாக்கிக் கொள்வாள். இது போன்ற உலகங்களுக்குள் நுழையும் போது அவளுக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. அதற்காகவே ஞாயிற்றுக் கிழமைகளில் கடைக்குப் போக வேண்டுமென்றால் ‘ நான் போகிறேன் ‘ என்று அம்மாவிடம் கெஞ்சிக் கூத்தாடி கிளம்பி விடுகிறாள்.

மழை லேசாகத் தூறத் துவங்கியதில் கூட்டத்தில் லேசானதொரு சலசலப்பு..

‘பாம்பும் வேணாம், ஒண்ணும் வேணாம், வீடு போய்ச் சேர்ந்தா போதும் ‘ என்பது போல சிலர் நகரத் துவங்கியதை பார்த்த பாம்பாட்டி,

‘ நாக ராசனப் பாக்காமப் போறதுன்னா, போற வழில, ரத்தம் கக்கிச் சாவு வரும்… ‘

சொல்லி விட்டு, கூட்டத்தைச் சுற்றிலும் பார்த்தான். ரத்தம் கக்கிச் செத்தாலும் சரிதான் என்று நினைத்தவர்கள் கிளம்பினர்.

சீதாவுக்கு சிறிதாகப் பயமேற்பட்டது.

பாம்பைப் பார்க்கும் ஆசைக்கும் மேல், மழை வலுக்கப் போவதும், ஊசி வாங்கப் போனவளை இன்னும் காணவில்லையே என்று ஆச்சி புலம்பத் துவங்கியிருப்பாள் என்ற நினைப்பும் மனதுக்குள் லேசான பயமாக விரிந்தது. பாம்பாட்டியின் ‘ரத்தம் கக்கிச் சாவு வரும் ‘ என்ற பயமுறுத்தல்

வேறு அவளை அந்த இடத்தில் இருந்து நகர விடாமல் செய்தது.

‘வெள்ளிக் கிழமை விரதத்தில் வர்ற பாம்பு என்ன அழகா நடிச்சிது ? அவ சொல்றபடியெல்லாம் கேட்டுச்சே ? பாம்பு எவ்வளவு அழகாவும் இருக்கு ?

ஆனா ஏந்தான் விஷமும் இருக்கோ ? மாலதியோட பெரியப்பா பையனை பாம்பு கடிச்சிட்டதா சொன்னாளே! பாம்பு கடிச்சு செத்துல்லா போய்ட்டானாம்! ஊர்லேயும் கூட குத்தகைக்காரன் மகளைப் பாம்பு கடிச்சிட்டதாத்தானே தாத்தா சொன்னார் ? அதுவும் நல்ல பாம்புதானாம்..எல்லாரையும் கடிச்சு சாகடிக்கிர பாம்புக்கு ஏன் நல்ல பாம்புன்னு பேரோ ? தாத்தா குற்றாலத்துல ராஜ நாகம் பார்த்திருக்கேன்னு சொன்னாரே ? அது ரெம்பப் பெரிசால்லா இருக்குமாம் ? நல்ல பாம்பு கடிச்சாவது பிழச்ச ஆட்க இருக்காம். ராஜ நாகம் கடிச்சா அந்த இடத்துலேயே ஆள் க்ளோஸ்தானாம்….. ‘

இதற்குள் பாம்பாட்டி இன்னும் என்னென்னவோ சொல்லி உயிருக்கு பயந்து அங்கு நின்று கொண்டிருப்பவர்களிடம் பாம்பின் அருமை,

பெருமைகளை எடுத்து விட்டுக் கொண்டிருந்தான்.

‘இவன் சீக்கிரம் பாம்பைக் காட்டினால் என்னவாம் ? ‘ என்று மனதுள் அவனை வைது கொண்டே நின்றாள். தூறல் பெரிய மழையாக மாறினால் என்ன செய்வது என்ற நினைப்பில் அவ்வப்போது சிலர் வானத்தைப் பார்ப்பதுவும், பாம்பாட்டியைப் பார்ப்பதுவுமாக நின்றனர்.

‘ஏய்.. நீ இங்கயா நிக்க ? ஊசி வாங்கப் போனவளைக் காணமேன்னு உன்னைத் தேடிக்கிட்டு இருக்கா வீட்டுல.. ‘

சீதாவின் அண்ணன் சைக்கிளை நிறுத்தி விட்டு ஒரு காலைத் தரையில் ஊன்றி நின்றான்.

‘சரி..வா..ஏறு சைக்கிள்ள.. ‘

‘ நீ போ.. நா வரலை… ‘

‘வரல்லியா ? ஏன் ? ‘

அவனிடம் ‘ரத்தம் கக்கிச் சாவதைப் பற்றி வீட்டுக்குப் போனபின் சொல்லிக் கொள்ளலாம் என்று தோன்ற,

‘பாம்பாட்டி வித்தை முடிஞ்ச பிறகுதான் வருவேன். நீ போ ‘ என்றாள்.

‘எனக்கென்ன ? அம்மா கோவமா இருக்கா. வீட்டுக்கு வா, நல்ல உதை வாங்கப் போற.. ‘ கூறி விட்டு அண்ணன் நகன்றான்.

சீதா திரும்பி பாம்பாட்டியைப் பார்த்தாள். அவன் இன்னும் பாம்பு இருந்த பெட்டியைத் திறந்த பாடில்லை. சீதாவுக்கு அண்ணனுடன் போயிருக்கலாமோ என்று தோன்ற, பாம்பாட்டி மீது எரிச்சல் வந்தது. வீட்டில் அம்மா கோபமாக இருக்கிறாள் என்பது அவளை லேசாகப் பதற்றமடைய வைத்தது. அம்மா நல்லவள்தான். ஆனால் அம்மாவின் கோபம் சில சமயங்களில் ரெம்பப் பயமாக இருக்கிறது. அம்மா எவ்வளவு கோபமாக இருந்தாலும் அண்ணனையும், தம்பியையும் ஒன்றும் செய்வதில்லை. அக்கா, மீதும் இவள் மீதும்தான் அம்மாவின் கோபம் பாய்கிறது. அக்கா ரெம்ப அழகாக இருப்பது அம்மாவுக்குப் பிடிக்கவில்லையோ என்றுதான் சீதாவுக்குச் சில சமயங்களில் தோன்றும். சீதாவும் அழகுதான். ஆனால் அக்கா சீதாவை விட அழகு. அக்கா கண்ணாடி முன் நின்றாலே அம்மாவுக்குப் பிடிப்பதில்லை.

‘என்ன சும்மா சும்மா கண்ணாடி முன்னால நின்னுட்டு ? போதும் அழகு பார்த்தது ‘ என்று அக்காவை கண்டிக்கிறாள். ஆனால் அம்மா மட்டும் கண்ணாடி முன் நிற்காமலா இருக்கிறாள் ? ஆச்சியே இன்னும் கல்யாண வீட்டுக்கோ அல்லது ஏதேனும் விசேஷ வீடுக்கோ போகும் போது கண்ணாடி முன் நின்று கொஞ்சமா அலங்காரம் செய்கிறாள் ? பட்டுச் சேலையை கட்டிக் கொண்டு இப்படியும் அப்படியும் பார்த்துக் கொள்வது சிரிப்பாகத்தான் இருக்கிறது.

‘ஆனாலும் இவா வயசுக்கு ரெம்பத்தான் நாகரிகம் ‘ என்று தாத்தாவும் பெருமையுடன் சொல்லிக் கொள்கிறார். ஆச்சியுடைய தங்கை கமலத்தாச்சி கூட இங்கு வரும் நேரங்களில் அக்காவுடைய ரோஸ் பவுடரை எடுத்துப் போட்டுக் கொள்கிறாளே! அம்மாவுக்கு மாமியாரிடத்திலும், மகளிடத்திலும் நாகரிகத்தில் போட்டி போடுவது அலுப்பாக இருக்கிறதோ என்னவோ, அதனால்தான் அக்கா கண்ணாடி முன் நிற்பது அவளுக்கு எரிச்சலாக இருக்கிறதோ என்னவோ!

அம்மா இது போல் பேசும் நேரங்கள் அக்கா ‘டிறஸ்ஸிங் ரூமில் ‘ போய் கதவை மூடிக் கொண்டு அழுவது சீதாவுக்குத் தெரியும். அப்போது அக்காவைப் பார்க்கப் பாவமாக இருக்கும். ஆனால் அம்மா ஏன் அண்ணனையும், தம்பியையும் என்ன கோபம் வந்தாலும் ஒன்றும் கூறவோ, கண்டிக்கவோ மாட்டேன் என்கிறாள் ? அவர்கள் இருவரையும் ஏதோ ‘ஏஞ்சல்ஸ் ‘ போல அல்லவா நடத்துகிறாள் ? அண்ணன் கூட ஒரு தடவை சீதாவிடம் சொன்னானே, ‘உன்னைத் தவிட்டுக்கு வாங்கிருக்கு..அதான் அம்மா உன்னை அடிச்சுட்டே இருக்கா.. ‘ என்று. அன்று சீதா பயந்து போய் எவ்வளவு அழுதாள் ? அம்மாவிடம் போய்க் கேட்கவும் பயமாக இருந்தது. அம்மா எப்போது நல்ல மூடில் இருப்பாள் என்றே சொல்ல முடியாது. அவள் கோபமாக இருக்கும் நேரம் அக்காவைப் பேசிப் பேசி கொல்லுகிறாள், சீதாவை அடித்துக் கொல்லுகிறாள். அவள் கோபம் தணிந்த பின்புதான் பேச்சோ, அடியோ நிற்கும். அன்று சீதா ‘டிறஸ்ஸிங் ரூமை ‘ மூடிக் கொண்டு அழுதாள். அவளுக்கு எப்போதுமே தான் அந்த வீட்டுக் குழந்தை அல்ல என்று தோன்றிக் கொண்டே இருந்தது. இப்போது அது உறுதி ஆகி விட்டது. ஏனோ அன்று கண்ணாடியைப் பார்த்துக் கொண்டே அழுதாள். தான் அம்மா அல்லது அப்பா போல இருக்கிறோமா என்று ஆராய்ந்தாள். கொஞ்சம் அப்பா போலத்தான் இருப்பது போல இருந்தது. அண்ணன் பொய் சொல்லுகிறான்…ஆனால் அம்மா ஏன் இவ்வளவு அடிக்கிறாள் ? தாத்தா, ஆச்சி, அப்பா யார் மேல் கோபம் வந்தாலும் சீதாவை ஏன் அடிக்கிறாள் ? அக்கா பெரியவள் ஆகும் வரை அவளை அடித்தாளாம். இப்போது இவள்…சீதாவுக்குத் தானும் சீக்கிரம் பெரிய பெண்ணாகி விட்டால் நல்லது என்று தோன்றும். ஆனால் அப்போது அடிகள் நின்று விடும், திட்டுவது ஜாஸ்தியாகி விடும்..

பாம்பாட்டி ஒரு வழியாகப் பெட்டியைத் திறந்தான். கூட்டத்தில் அனைவரும் ஆவல் மேலிட எட்டிப் பார்த்தனர். பாம்பு சுருண்டு கிடந்தது. சீதாவுக்கு லேசாக உடம்பு சிலிர்த்துக் கொண்டது. பாம்பாட்டி ஏதோதோ பேசிக் கொண்டே பாம்பை எழுப்ப முயற்சி செய்தான். தன்னைப் பார்க்க இத்தனை மக்கள் அந்த மழையிலும் காத்துக் கிடக்கிறார்கள் என்று தெரியாததாலோ என்னவோ, பாம்பு சோம்பேறித்தனமாகக் கிடந்து சீதாவின் பொறுமையை ரெம்பவே சோதித்தது. சீதாவின் பதற்றம் கூடிக்கொண்டிருந்தது. வயிற்றில் பசி வேறு!

‘இவ்வளவு அலட்டலா இந்தப் பாம்புக்கு ? ‘ என்று மனதுள் நொந்து கொண்டாள்.

ஒரு வழியாக பாம்பாட்டி பாம்பை எழுப்பி விட்டான். பாம்பு மெதுவாக ஊர்ந்து அதன் பெட்டியை விட்டு வெளியே வந்தது. கூட்டம் மூச்சை அடக்கிக் கொண்டு காத்திருந்தது. பாம்பாட்டி மகுடியைக் கையில் எடுத்து ஊதத் துவங்கினான். பாம்பு ஒரு கணத்தில் படத்தை விரித்துக் கொண்டு நின்றது. பாம்பாட்டி மகுடியை ஊதிக் கொண்டே இடமும், வலமுமாக ஆடி அசைந்தான். பாம்பும் ஆடியது.

படத்தை விரித்துக் கொண்டு கம்பீரமாக நின்ற பாம்பின் வசீகரம் அவளைப் பல கணங்கள் ஈர்த்தது. வயிற்றில் இருந்த பசி, மனதில் ‘வீட்டுக்குப் போனதும் அம்மாவிடம் கிடைக்கப் போகும் வசவுகளைப் பற்றிய பயம், மழை தூறிக் கொண்டிருந்ததால் எழும்பிய எரிச்சல் எல்லாம் மறைந்தது. லேசாகத் தூறிக் கொண்டிருந்த மழை தூறிக் கொண்டுதான் இருந்தது. ஆனால் அப்போது யாரும் மழையைப் பொருட்படுத்தவில்லை. பாம்பின் வசீகரமும், பாம்பாட்டியின் மகுடியின் ஓசைக்கோ , அசைவுக்கோ கட்டுண்டு இயங்கிக் கொண்டிருந்த பாம்பின் அசைவுகளும் அந்தக் கூட்டத்தை ஆட்கொண்டது. அந்த வசியத்தில் இருந்து அவள் வெளி வந்த போது,

மழை வலுத்திருந்தது…..

பசி தீயாகத் தகித்தது….

பயமும், பதற்றமும் வதைத்தது….

கையில் ஊசி இருந்த சிறிய பொட்டலத்தை இறுக்கப் பற்றிக் கொண்டு வேகமாக வீட்டை நோக்கி நடந்தாள். அவள் போய் ஊசியைக் கொடுத்த பின்புதான் குப்பக்கா தலையணை உறைகளைத் தைக்கத் துவங்க வேண்டும். அம்மாவுக்கும் கோபம் அதிகமாகாமல் இருக்க வேண்டும்….

***

alamu_perumal@yahoo.com

Series Navigation