வங்காளப் படம் : மலைகளின் பாடல்

This entry is part [part not set] of 28 in the series 20050916_Issue

சுப்ரபாரதி மணியன்


அறிமுகமான மெற்றிக்குலேசன் பள்ளி நிர்வாகி ஒருவர் ‘ சோக்கர் பாலி ‘யை ஒரு புத்தக அரங்கில் தேர்வு செய்து கையில் வைத்திருந்தார்..அவரின் இள வயது மகள் – கல்லூரியில் படிப்பவளாக இருக்கலாம்- அந்த நாவலை வாங்க ஆசைப்படுவதாக சொன்னார்.

சமீபத்தில் பென்குயின், ரூபா, சிருஸ்டி போன்றவையும் அந் நாவலின் மொழிபெயர்ப்பைக் கொண்டு வந்திருப்பதையும் தாகூர் பற்றின சமீபத்திய விழா கொண்டாட்டங்களில் இதுவும் ஒன்று என்றும் குறிப்பிட்டேன் . அந்த நாவலை வாங்குவதற்கான நியாங்களையும் திருப்தியையும் அவர் பெற்றிருப்பதை புரிந்து கொண்டேன். பிறகு உபரியான ஒரு தகவலை அவரிடம் சொன்னேன்: ‘ இது சமீபத்தில் திரைப்படமாக வெளிவந்திருக்கிறது. ஐஸ்வர்யா ராய் கதாநாயகியாக நடித்திருக்கிறார். ‘ இதைச் சொன்னதும் அவர் சொன்ன பதில் ‘ அப்படியானால் சிடி எங்காவது வாடகைக்கு கிடைக்கும் . இருபத்தைந்து ரூபாய் கொடுத்தால் போதுமே. இருநூற்றைம்பது ரூபாய் கொடுத்து இந்த நாவலை வாங்க வேண்டுமா ‘ . தனது இளவயது மகளிடம் இதை திரும்பத்திரும்பச் சொல்லிக்கொண்டுருந்தார்.

ஐஸ்வர்யா ராய் பற்றிச் சொன்னது இப்படி ஒரு விளைவைக் கொடுக்கும் என்று நினைக்கவில்லை. அவர் புத்தகம் வாங்குகிற எண்ணத்தை இரண்டாம் பட்சமாக்கிவிட்டிருந்தார்

சோக்கர் பாலி திரைப்படத்திற்கு பிறகு பார்த்த வங்காளப் படம் MAHUL BANIR SERENG . கெளதம கோசின் சமீபத்திய படமும் குறிப்பிடத்தக்கது என்றார்கள் நண்பர்கள். அறுபதுகளில் சத்யஜித் ரே ‘ஆரண்யேர் தின் ராத்திரி ‘ என்றொரு படம் எடுத்திருந்தார். விடுமுறை ஒன்றில் மூன்று இளைநர்கள் காட்டிற்குள் சென்று அலையும் அனுபவம் பற்றியது. கெளதமகோசின் புதிய படம் அந்த மூவர் வயதான இந்த காலத்தில் விடுமுறையைக் கழிக்க தங்கள் மனைவி, குழந்தைகளுடன் வோறொருக் காட்டுப்பகுதிக்கு செல்வது குறித்தது. பழைய காட்டுப்பகுதி யாத்தீகர்கள் செல்வதற்கான பாதுகாப்பற்ற இடமாகி விட்டது. இரண்டு தலைமுறைகளின் இடைவெளியைக் காட்டும் பயணங்களாக அவை அமைந்திருக்கின்றன.

சேகர் தாஸ் இயக்கி இருக்கும் ‘ மலைகளின் பாடல் ‘ காடு சார்ந்து வாழும் மக்களைப் பற்றியது.

காடுகள் வியாபார ஸ்தலங்களாகி விட்டன. கடந்த முப்பதண்டுகளில் 10 லட்சம் எக்டார் காட்டு நிலங்கள் அழிக்கப்பட்டிருகிறது. பன்னாட்டு நிறுவனங்கள் , பெரும் முதலாளிகள் காட்டுப்பகுதிகளில் தங்கள் முதலீட்டை அதிகரித்து வருகின்றனர். இது காடு சார்ந்த சுற்றுச்சுழல் பிரச்சினைகளை விசுவருபிக்க வைத்துள்ளது.

சேகர் தாஸ் பல வங்காளப் படங்களில் நடித்திருப்பவர். அவரின் முதல் பட இயக்கம் இது. காடு சார்ந்த ஆதிவாசிகளின் வாழ்நிலையை சொல்லும் படம். வங்காள ஒரியா எல்லையில் வாழும் சாந்தால் ஆதிவவாசிகளின் சிக்கல்களை ஒரளவு பிரதிபலிக்கும் படம். ஆதிவாசிகள் காட்டையே தங்களின் வாழ்வு ஆதாரமாக்க் கொண்டு வாழ்ந்து வாருகிறார்கள். தமயந்தி பாசு என்ற் அரசாங்க அலுவலரின் இரு பணிக்காலங்களாய் இத்திரைப்படம் அமைந்திருக்கிறது. முதல் முறை அவள் காட்டிற்குள் வரும் போது அப்பகுதி மக்களின் வாழ்வும் போராட்டமும் அவளுக்கு புதிய அனுபவங்களாய் அமைகின்றன. ஆதிவாசிகளின் நிராதரவான நிலை மற்றும் அதிகாரவர்க்கத்தின் செயல்பாடுகளுக்கு மத்தியில் திணறுபவளாக இருக்கிறாள். விதவை என்ற வகையில் தனிமை அவளுக்கு குரூரமாக அமைகிறது. தன்னார்வகுழு ஒன்றை நடத்தி வரும் ஒரு இளைஞன் அவளைக் கவர்கிறான். ஆதிவாசிக்குழந்தைகளுக்கு இலவசமாய் கல்வி தரும் வேலையை செய்கிறான். ஆனால் சாதி அமைப்பும், அதிகார நிலையும் அவனின் பணிகளை உறுத்தலாகவே பார்கின்றன. அந்த காட்டுப்பிரதேசத்திற்கு மருத்துவர் ஒருவர் வந்து சேர்கிறார். மூடப் பழக்கங்களில் மூழ்கிப்போயிருக்கும் ஆதிவாசிகள் அவரை முதலில் ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள். ஆனால் மருத்துவ உதவிகள் அவரது அணுகுமுறை மக்களிடம் நெருங்கி வரச் செய்கிறது. ப்டித்து வேலை இல்லாமல் இருக்கும் ஒரு இலாநன் மருத்துவருக்கு உதவி செய்கிறான். அவனுக்குள் ஆதிவாசிகளுக்கான தனி பிரதேசம், அதன் சுயாட்சி பற்றின போராட்டக் கனவு இருக்கிறது. இளைஞனின் மனைவி சவெலிக்கு கல்வி கற்றுக் கொடுப்பவளாகவும் மருத்துவர் இருக்கிறார். இளைநன் வேலை தேடி நகரத்திற்குச் செல்கிறான். சவேலிக்கும் மருத்துவருக்கும் ஏற்படும் நெருக்கம் காரணமாக சவெலி கற்பமுறு கிறாள். குழந்தைப் பேறு இல்லாத காரணத்தினால் ஆதிவாசிகளால் சபிக்கப்பட்டவள் அவள். ஆதிவாசிகளின் சாதீயக் குழு சவெலியின் கர்ப்ப்த்தை கேள்விக்குறியாக்குகிறது. சவேலி தற்கொலை செய்து கொள்கிறாள். மருத்துவர் ஆதிவாசிகளின் தலைவர்களால் துன்புற்த்தப்படுகிறார். அந்தக் காட்டுப்பிரதேசத்தை விட்டுப் போவதால் அவர் உயிர் தப்புவார் என தமயந்தி பாசு உதவி செய்து காட்டை விட்டு வெளியேற்றுகிறாள்.

தமயந்தி பாசு பல ஆண்டுகளுக்குப் பிறகு பதவி உயர்வு பெற்ற அரசாங்க ஆதிகாரியாக அப்பகுதிக்குத் திரும்பி வருகிறாள். தொலைக்காட்சிகளும் நவீன எலக்ற்றானிக் சாமான்களும் ஆதிசவாசிகளின் வாழ்க்கைக்குள் புகுந்து விட்டன. அவர்களில் மத ரீதியான சடங்குகளும் அவற்றின் வெளிப் பாடுகளும் மாறவில்லை. ஆனால் காலம் பல விடயங்களை புரட்டிப் போட்டிருக்கிறது. தமயந்தி பாசுவிற்கு இந்த மாற்றங்களும் மகிழ்ச்சி தருகின்றன.

ஆனால் காட்டின் சீவனும் உயிர்ப்பும் , ஆதிவாசிகளின் வாழ்க்கையோடு இணைந்த ஆட்லும் பாடலும் சடங்குகளும் சீக்கிரம் ஒழிந்து போகும் என்ற கவலையும் எழுகிறது. ஆதிவாசிகளின் தலைவன் ஒரு சிறுவனுக்கு கதை சொல்வதோடு படம் முடிகிறது. மலைகளின் , காடுகளின் வளமை, மூத்தையரின் தொன்மங்கள் , கதைகள் பற்றிச் சொல்கிறான். மலைகளின், காடுகளின் எல்லா திக்குகளிலும் அவை எதிரொலிக்கின்ற்ன். இயற்கை பற்றின அபரிதமான வியப்பை எழுப்புகின்றன, காடு சார்ந்த வாழ்க்கை நழுவிக் கொண்டிருப்பது பற்றின ஏக்கமாக மாறுகிறது. கற்பனையில் இயற்கை சூழ்ந்து கொள்கிற்து.

ஆதிவாசிகளின் இயல்பான பாட்ல்களும் அவர்களின் மரபு ரீதியான இசையும் படத்திற்கு உயிர்ப்பூட்டுபவை. ஆனால் வெளிப்பாட்டு முறையில் கதா பாத்திரங்களின் வகையும் சற்று மிகையாக சில இடங்களில் தென்பட்டுவிடுகிறது. நாடகத்துறை சார்ந்தவர்களின் பங்கு ஆதிவாசிகளின் கதாபாத்திரங்களுக்கு மிகவும் பொருந்துகிறது. சாந்தல் ஆதிவாசிகளின் பிரதேசங்கள் படத்திற்கு மெருகு சேர்ப்பவை. ரூபா கங்குலி தமயந்தி பாசுவாக நடித்திருக்கிறார்.

இயற்கை சார்ந்த பிரமிப்புகளையும் ஆதிவாசிகளின் மரபு சார்ந்த வாழ்க்கையையும் ஒரு புறம் இப்படம் காட்டுகிறது. இன்னொரு புறம் அவர்களின் கசடான மரபு சார்ந்த மூடப் பழக்கங்களின் புதைகுழியை சுட்டுகிறது. நவீன வாழ்க்கையில் அவர்களுக்குள் ஊடுருவி நிற்கும் நகர மனிதர்களும் நுகர்வுபொருட்களும் அவர்களுக்கு ஏற்படுத்தும் வியப்பையும் தடம் மாறும் வாழ்க்கையையும் காட்டுகிறது. மலைகள் சார்ந்த நினையுகளை மீட்டெடுக்கக் கூடியதாக படம் இருக்கிறது. ஆதிவசிகளை காட்டிற்குள் இருக்க வைத்து அவர்களின் சுயாட்சி உலகத்திந் கனவிற்குள் புதுத்தலைமுறை இருப்பதும் அதற்கானப் போராட்டங்களும் வெளிப்படுகின்றன.

சுப்ரபாரதிமணியன்

srimuki@sancharnet.in

Series Navigation

சுப்ரபாரதிமணியன்

சுப்ரபாரதிமணியன்