லிபரான் அறிக்கை – அரசியல் – நீதி.

This entry is part [part not set] of 25 in the series 20091204_Issue

பி.ஏ.ஷேக் தாவூத்


நீர் தீர்ப்பளித்தால் அவர்களிடையே நீதியான முறையில் தீர்ப்பளிப்பீராக! நீதி செலுத்துவோரை இறைவன் விரும்புகிறான். (திருக்குர்ஆன் 5:42).

ஒட்டு மொத்த இந்திய துணைக்கண்டமும் சர்வதேச அளவில் மூன்றாவது முறையாக தலைகுனிவை சந்தித்த நாள் 1992 – டிசம்பர் திங்கள் 6 ம் தேதி. ஏற்கனவே இந்துத்துவ தீவிரவாதி நாதுராம் கோட்சேவால் சுட்டுக் கொல்லப்பட்ட தேசப்பிதா காந்தியின் படுகொலையின் போதும், இந்திரா காந்தியை கொலை செய்தது சீக்கிய சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்ற ஒற்றை காரணத்திற்காக தில்லியில் ஒட்டு மொத்த சீக்கிய சமுதாய மக்கள் காங்கிரஸ் கயவர்களால் இனப் படுகொலைகளுக்கு உள்ளான போதும் இந்த தேசம் மிகப் பெரிய தலைகுனிவை சர்வதேச அளவில் சந்தித்தது. இந்திய நாட்டின் ஜனநாயக மரபே சர்வதேச சமுதாயத்தினரால் சந்தேகக் கண்கொண்டு பார்க்கப்பட்டது.

கரசேவை மட்டுமே செய்யப்போகின்றோம் என்று சொல்லி உச்ச நீதிமன்றத்தையே நம்ப வைத்து ஏமாற்ற தெரிந்த பா.ஜ.க வின் கல்யான் சிங் உ.பி. மாநிலத்தை ஆட்சி செய்ய, கடப்பாரையால் கரசேவை செய்தாலும் கண்டுகொள்ள மாட்டேன் என்ற மந்தை மனநிலையிலிருந்த நரசிம்மராவ் மத்தியில் ஆட்சி செய்ய, எது நடக்க கூடாது என்று இந்த நாட்டின் நலம் விரும்பிகள் விரும்பினரோ அது திட்டமிட்டு வெறியூட்டப்பட்ட இந்துத்துவா தீவிரவாதிகளால் நடத்தி முடிக்கப்பட்டது. இந்திய துணைக் கண்டம் மூன்றாவது முறையாக தன் பெருமையை இழந்தது. வரலாற்று பாரம்பரியமிக்க சின்னமாகவும் முஸ்லிம்களின் வழிபாட்டுத்தலமாகவும் இருந்து வந்த பாபர் மசூதி இந்துத்துவ சங்பரிவார தீவிரவாதிகளால் தரைமட்டமாக்கப்பட்டது. ஒட்டவே முடியாத பெரும் பிளவை இரு சமூகங்களுக்கிடையே ஏற்படுத்திய நாளது. பாபர் பள்ளிவாசல் இடிப்பின் தொடர்ச்சியாக நாடெங்கும் நடைபெற்ற கலவரங்களில் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவிகளின் இன்னுயிர்கள் இரக்கமின்றி பறிக்கப்பட்டன.

வாய்மூடி மெளனியாகவே முழு ஆட்சிக் காலத்தையும் ஒப்பேற்றிய நரசிம்மராவ் பாபர் மசூதி இடிக்கப்பட்ட பிறகு பாராளுமன்றத்தில் திருவாய் திறந்து இடிக்கப்பட்ட இடத்தினில் மீண்டும் பள்ளிவாசல் எழுப்பப்படும் என்று வாக்குறுதி அளித்தார். அரசியல்வாதிகள் அளிக்கும் வாக்குறுதி என்றுமே நிறைவேற்றப்படாது என்ற இந்திய அரசியல் விதிகளுக்கேற்ப இந்த பள்ளிவாசல் வாக்குறுதியும் காற்றில் பறக்க விடப்பட்டது காங்கிரஸ் அரசினால். நீதியை சாகடிக்க வேண்டுமானால் விசாரணை ஆணையம் அமைத்தால் போதும் என்ற பொது விதிக்கேற்ப பாபர் மசூதி இடிப்பின் சதியை விசாரிக்க மன்மோகன் சிங் லிபரான் என்ற நீதிபதியைக் கொண்ட விசாரணை ஆணையத்தை அமைத்து உத்தரவிட்டார் அன்றைய பிரதமர் நரசிம்மராவ்.

விசாரணை ஆணையம் அமைத்துத் தான் பாபர் மசூதி இடிப்பின் சதியை அறிய வேண்டுமென்பதில்லை. ஒளிவு மறைவின்றி ஊடகங்களின் முன்னிலையில் நடத்தி முடிக்கப்பட்ட வெளிப்படையான செயல் அது. பாபர் மசூதியை இடித்தவர்கள் யார் என்பதும் அதற்கு பின்புலத்தில் இருந்து வெறியூட்டியது யார் யாரென்பதும் நேரடி சாட்சியங்கள் மூலமும் புகைப்பட ஆதாரங்கள் மூலமும் நிரூபிக்க வழிவகை இருந்தும் அவர்கள் மீது இந்திய குற்றவியல் சட்டத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்காமல் எந்த ஒரு பயனுமில்லாத விசாரணை ஆணையத்தை அமைத்ததன் மூலம் நரசிம்மராவும் மசூதி இடிப்பில் பங்குதாரரோ என்ற சந்தேகம் வலுவடைந்ததை யாராலும் மறுக்க முடியாது.

அரை சதத்தை தொட்டு விடுமோ என்று நீதி பரிபாலன முறையில் நம்பிக்கை உள்ள எல்லோரும் அச்சப்பட்ட நிலையில் 48 முறை நீட்டிப்பு பெற்று மக்களின் வரிப்பணத்தில் பல கோடிகளை செலவழித்து 17 வருடங்களுக்குப் பிறகு லிபரான் ஆணையம் தன்னுடைய அறிக்கையை அரசிடம் தாக்கல் செய்திருக்கின்றது. பாபர் மசூதி இடிப்பில் குற்றவாளிகள் என்று 68 நபர்களை அடையாளம் காட்டுகின்றது லிபரான் ஆணையம். இந்த குற்றவாளிகள் பட்டியலில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயி, இந்நாள் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, கல்யான் சிங், உமா பாரதி உள்ளிட்ட அரசியல்வாதிகளும் ஏ.கே.சரண் (பாதுகாப்புப் பிரிவு, ஐ.ஜி) , அகிலேஷ் மெஹ்ரோத்ரா (பைசியாபாத் கூடுதல் எஸ்பி), டி.பி.ராய் (பைசியாபாத் மூத்த எஸ்பி) , திரிபாதி (உபி போலீஸ் டிஜிபி) போன்ற பல அதிகாரிகளும், தங்களை சாதுக்கள் என்றழைத்துக் கொள்கின்ற சுவாமி சின்மயானந்த், சுவாமி சச்சிதானந்த சாக்ஷி, சாத்வி ரிதாம்பரா போன்றவர்களும் அடங்குவர். ஆனால் இவர்களுக்கான தண்டனைகள் என்ன என்பதை ஒரு இடத்திலும் கோடிட்டுக் காட்டவில்லை லிபரான் ஆணையம். இது லிபரான் ஆணையம் செய்திருக்கின்ற ஒரு மோசடியாகும்.

லிபரான் ஆணையம் செய்திருக்கின்ற இன்னொரு மிகப் பெரிய மோசடி பாபர் மசூதி இடிப்பில் அன்றைய காங்கிரஸ் பிரதமர் நரசிம்மராவை புனிதப் பசு போல பாவித்திருப்பது. மசூதியை இடிபடாமல் இந்துத்துவ தீவிரவாதிகளிடமிருந்து காப்பாற்ற வேண்டிய இடத்தினில் இருந்து அதை செய்யத் தவறிய காங்கிரசின் கையாலாகாத்தனத்தை மறைக்க வேண்டியே இந்த மோசடித்தனத்தை அரங்கேற்றியிருக்கின்றது லிபரான் ஆணையம்.

லிபரான் ஆணையம் இனங்காட்டிய குற்றவாளிகளின் மீது நடவடிக்கை எடுத்தால் அத்வானியின் அரசியல் வாழ்வு புத்தெழுச்சி பெறும் என்றும் அதனூடாக பா.ஜ.க வும் பலம் பெற்று விடுமோ என்ற கவலை காங்கிரசை வாட்டலாம். அரசியல் அதிகாரத்தை சுவைத்துக் கொண்டிருக்கும் காங்கிரஸ்காரர்களுக்கும் இந்த கவலை வரலாம். அரசியல்வாதிகளுக்கு இத்தகைய கவலைகள் எழுவது இயற்கை. ஆனால் காலங்கள் பல உருண்டோடினாலும் எப்படியும் நீதி கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில் இந்தியாவில் வாழும் கோடிக்கணக்கான முஸ்லிம்கள் அரசியல்வாதிகள் அல்லவே. பாபர் மசூதியை இடித்த குற்றவாளிகள் தண்டனைப் பெற்று விடுவார்கள் என்ற நம்பிக்கையில் தான் அவர்கள் நீதி துறையை நம்பிக் கொண்டிருக்கின்றனர். காங்கிரஸ் , பா.ஜ.க மற்றும் இன்ன பிற கட்சிகளுக்கு லிபரான் அறிக்கை ஓர் அரசியல் அறிக்கையாக இருக்கலாம். ஆனால் முஸ்லிம்களுக்கு லிபரான் அறிக்கை நீதி சம்பந்தப்பட்டது. நீதி வெல்வதற்கு அரசியல் வழியேற்படுத்தி தர வேண்டும். அது தான் மக்களுக்கான அரசியலாக இருக்க முடியும்.

pasdawood@gmail.com

Series Navigation