ர்ர்.. கீச்..கீச்…

This entry is part [part not set] of 31 in the series 20030406_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா


ர்ர்.. கீச்..கீச்…

வரவேற்பறையில் அந்தக் கிளி தொடர்ந்து சத்தம் போட்டுக் கொண்டிருந்தது. ரஞ்சனி மூன்றாவது முறையாக அதனை அடக்கிவிட்டுவந்தாள். அவளின் குரல்போக்கில் ஏற்பட்டிருந்த இந்த திடார்மாற்றத்தைக் கிளி உணர்ந்திருக்கவேண்டும். சத்தம் போடுவதை நிறுத்திக் கொண்டது. இதுவரை இப்படியில்லை. இன்றைக்குத்தான் இப்படி. ஏன்.. ? விடை தேட நேரமில்லை. சமயலறைக்குள் நுழைந்துவிட்டாள். காலையில் வேலைக்குச் சென்ற முரளிக்குக் காபியை கலந்து கொடுத்தவள், மறுபடியும் படுக்கைக்குச் சென்று, எழுந்திருக்க மனமில்லாமல், அந்தக் கிளியப் போலவே பிரான்சு வாழ்க்கையில் சோர்ந்தது நிஜம். ஆனால் கிளியைப் போல கிரீச்சிட முடியுமா என்ன ?

ர்ர்.. கீச் மறுபடியும் கிளியின் சத்தம். அவளுக்கு அது பரிச்சயமான குரல்தான். முரளிக்குப் பிறகு தினமும் கேட்டு கேட்டு அட்சரம் பிசகாமல் அவளோடு ஒட்டிக்கொண்ட குரல். இன்றைக்கு மட்டும் ஏன் இப்படி உடைந்து உருமாறி, சன்னமாய் அவளைச் சுற்றிவந்து அபயம் கேட்கிறது.

‘பசியோ ?.. ‘

வழக்கமாக இந்த நேரத்தில் எதுவும் கொடுத்துப் பழக்கமில்லை. வறவேற்பறையின் விளக்கைப் போட்டுவிட்டுக் கூண்டைப் பாரத்தாள். இவளைப் பார்த்ததும் என்ன நினைத்துக் கொண்டதோ ? இருமுறை சிறகை உயர்த்திப் படபடவென உதறிக் கொண்டது. தலையை வளைத்து அலகினால் பாந்தமாக அடிவயிற்றைச் சொறிந்துவிட்டு இவளைப் பார்த்தது. இரண்டு கைகளையும் குவித்துக் கைகளில் வாங்கிக் கொண்டாள்.

சமயலறையில் இருந்த வாழைப்பழத்தின் சரிபாதியை உரித்து விள்ளலாக எடுத்து அலகைப் பிரித்துத் திணித்திடமுயல, கிளி முகத்தைத் திருப்பிக் கொண்டது, வேண்டாம் என்பது போல.

‘இங்க பாரு.. என்னால ஒங்கிட்ட மல்லு கட்ட முடியாது நாகமணி! சொன்னாக் கேட்டுக்கணும். இன்றைக்கு என்ன வந்தது உனக்கு ? சொல்லுடா.. ‘

உண்மையிலே நாகமணி-அவளது அந்தக் கிளி என்ன நினைத்ததோ ? ரஞ்சனியின் கைகளைவிட்டு இறங்கமாட்டேன் என்று அடம் பிடிக்க, அவள் வலுக்கட்டாயமாகக் கூண்டினுள் திணித்துவிட்டு மூடிவிட்டு வந்தாள்.

‘ர்ர்.. கீச் ‘ மறுபடியும் முனகல். அவளது உள்ளத்தை ரணப்படுத்துகின்றவகையில். அப்படியும் இருக்குமோ ? இந்தியாவிலிருந்து நிறையக் கனவுகளுடனும், எதிர்பார்ப்புகளுடனும் விமானித்து இறங்கியவளுக்கு அனைத்துமே இவ்வளவு சீக்கிரம் கோடை மழையாய்ச் சோவென்று அடித்து ஓய்ந்துவிட்டது குறித்து அதிருப்தி. இந்த இரண்டு மாதத்தில் நாகமணியைப் போன்று அவளும் அந்த அப்பார்ட்மெண்டில் குறுக்கும் நெடுக்குமாக வலம் வரப் பழகிக் கொண்டாள்.

ஜனவரிமாதம் என்பதால் வீட்டில் ஹீட்டரால் கதகதப்பு அதிகமாக்கப்பட்டிருந்தது. அவளது மனநிலையில் ஜன்னல்களைத் திறந்துவைத்து அப்படியே உறைந்துபோக நினைத்தாள்.

மார்கழி மாதத்தில், காலையில் எழுந்து வாசலில் தண்ணீர் தெளிக்க, தளும்பத் தளும்ப வாளியிற் தண்ணீரை எடுத்து, நைட்டியை நனைத்துக்கொண்டு வாசலுக்குக் வரும்போது,

‘ஏண்டி..! இன்னும் கொஞ்சம் விடியட்டும்னு காத்திருக்கக்கூடாதா ? என்ன அவசரம் ? அம்மா கேட்பாள். அவளுக்கு அவ்சரந்தான். பின்னே அவளது எதிர் வீட்டுத் தோழி நாகமணிக்கு முன்னால், எழுந்து கோலம் போட வேண்டாமா ? அதைபற்றிக் கல்லூரியில் அவளிடம் வன்பு செய்ய வேண்டாமா ?

எல்லாமே மளமளவென்று முடிந்தது. என்றைக்கும் போல அன்றைக்குப் புதுவை சென்று திரும்பிய அப்பா, காலைக் கழுவிக் கொண்டு கூடத்தில் உட்கார்ந்தவர், ஏதோ முகங்கொள்ளா சந்தோஷத்தில் இருப்பதாகப் பட்டது.

‘பார்வதி.. நம்ம ரஞ்சனிக்கு மாப்பிள்ளை பார்த்துட்டேன். நாைளைக்கு வீட்டுக்கு மாப்பிள்ளை வீட்டார் வர்ராங்க. பையன் பிரான்சுல இருக்கான். ஏர் பிரான்சுல, ட்ராஃபிக் அஸிஸ்டெண்ட்டாம். நல்ல சம்பளம் அவங்க பெருசா எதுவும் எதிர்பார்க்கலை. பொண்ணு லட்சணமா, படிச்சவளா இருந்தாப் போதுமாம் ‘. அவர் சொல்லிக் கொண்டே போனார்.

வீட்டில் எவரும் எதுவும் பேசவில்லை, ரஞ்சனி உட்பட. பேசுவதற்கு என்ன இருக்கிறது ? இதோ இதோ.. என்று அந்த இதோவும் வந்துவிட்டது. இருபத்து நான்கு மணி நேரமும் இவளுக்கு வந்த வாழ்வுபற்றிதான் வீடு முழுக்கப் பேச்சு. தம்பி சரவணனில் தொடங்கி .. அப்பாவரை ஆளாளுக்கு உசுப்பேத்தி அப்போதே விமானத்தில் ஏற்றி அவளைப் பறக்க விட்டார்கள். அம்மா, அப்பா தம்பி சரவணன், தோழி நாகமணி, மொட்டை மாடி, முக்குட்டுப் பிள்ளையார், செவலைப்பசு, உறித் தயிர் என எல்லாவற்றையும் விட்டுவிட்டுச் செல்லனும்ணா.. அவளை என்னவோ செய்தது. இவளை வழி அனுப்புவதற்கு எல்லோருமே தயார் நிலையில். இதுதான் ‘நிஜம் ‘ என்று அறிய வந்தபோது, முதன் முறையாக ரஞ்சனி கதவை அடைத்துக் கொண்டு அழுதாள்.

மறுநாள் தோழி நாகமணி அவளைத் தேடிவந்தபோது, கையோடு அவள் வளர்த்தக் கிளியையும் கூண்டோடு கொண்டுவந்தாள்.

‘ரஞ்சனி என்னை மறந்துடாதடி. உனக்காகத்தான் இதனைக் கொண்டுவந்தேன். இதுக்குப் பேர் என்ன தெரியுமா ? நாமணின்னு வச்சுக்கோ. அப்பத்தான் என்னை மறக்கமாட்ட.. ‘

ரஞ்சனி ஆச்சரியம் கலந்த சந்தோஷத்தில் தன் தோழியைக் கட்டிக் கொண்டாள். கூண்டினைப் பார்த்தாள். உள்ளே பவள மூக்கும், குறுகுறு கண்களுமாய் அவளைப் பார்த்து கிளி சந்தோஷப்பட்டது.

அதற்குப் பிறகு சிரமமெல்லாம் அவளது புதிய கணவன் முரளிக்குத்தான். டிராவல் ஏஜென்சியைப்பார்த்துக் கிளிக்கும் பயண ஏற்பாடுகள் செய்வதற்குள் போதும் போதுமென்றாகிவிட்டது.

இதோ பிரான்சுக்கு வந்து இரண்டு மாதங்கள் கரைந்து போயிருந்தன. கேட்ட, சொல்லப்பட்ட, வளர்த்துக் கொண்ட கனவுகள் அனைத்தும் அரிதாரத்தைக் கலைத்துக் கொண்டன. காலை ஆறுமணிக்குச் சென்று மாலை ஆறு மணிக்குத் திரும்பும் முரளியைத் தவிர்த்து, கிளியைப் போலவே சுகங்கள் ஊட்டபட்டு, சிறகினை வெட்டி என்ன வாழ்விது ? அலுப்பாகத்தானிருந்தது. வண்ண வண்ணமாயுடுத்தி இந்தியாவில் வலம் வந்ததுபோக, ஓவர் கோட்டில், எப்போதாவது இந்தியக்க்கடைகளுக்கும், சூப்பர் மார்க்கட்டுகளுக்கும் காரில் போய் வருவதும், அழைப்பின் பேரில் முரளியின் நண்பர்கள் வீடுகளுக்குச் செல்வதையும் தவிர்த்து வேறு என்ன கண்டாள் ? முரளியின் அன்பைக்கூட வாழைப்பழ விள்ளல்களாக அங்கீகரித்து, கொஞ்ச கொஞ்சமாக கூண்டு வாழ்க்கையை மனம் ஏற்றுக் கொண்டது.

ர்ர்..கீச்.கீச்..

நாகமணி மற்படியும் கீச்சிட்டது. அந்த அபயக் குரலின் பொருள் ரஞ்சனிக்குப் புரிந்தது. தீர்மானித்துவிட்டாள். ‘முரளி வரட்டும் ‘ அவள் சொல்வதை மறுக்கமாட்டான் என்பதால் மனதில் சந்தோஷம்.

‘நாகமணி.. ! நீயாவது கூடிய சீக்கிரம் நம்ம காத்த சுவாசிச்சு, நம்ம தண்ணிய குடிடா..! ‘

நாகமணிக்கு என்ன புரிந்ததோ, சந்தோஷமாக சிறகினைத் தூக்கி மறுபடியும் ‘ர்ர்ர்ர்…கீச்..கீச் ‘

***

Na.Krishna@wanadoo.fr

Series Navigation

author

நாகரத்தினம் கிருஷ்ணா

நாகரத்தினம் கிருஷ்ணா

Similar Posts