ரூமியின் இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம் பற்றி

This entry is part [part not set] of 55 in the series 20041111_Issue

பத்ரி சேஷாத்ரி


பத்ரி சேஷாத்ரி

கடந்த சில வாரங்களில் நேச குமார், சூரியா ஆகியோர் திண்ணையில் எழுதிய கட்டுரைகளுக்கு பதிலாக, நாகூர் ரூமியின் பதிப்பாளராக இதை எழுதுகிறேன்.

1. இஸ்லாத்தை மறுபரிசீலனை செய்வதற்காக எழுதப்பட்ட புத்தகம் அல்ல இது. உண்மையான இஸ்லாம் என்ன என்னும் தன் புரிதலை, தன்னை உண்மையான, விசுவாசமான இஸ்லாமியராக எண்ணும் நாகூர் ரூமி எழுதிய புத்தகம்.

2. இஸ்லாத்தின் ஆதாரமான புனித குர்-ஆன், ஒரு முஸ்லிம் எப்படி இறைவனைக் கண்டுபிடிக்க முடியும் என்பதைப் பற்றி மட்டும் விளக்குவதில்லை; முஸ்லிம் நாடுகள் எப்படி ஆட்சி செய்ய வேண்டும், முஸ்லிம்கள் சமூக வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும், இதற்கான சட்ட திட்டங்கள் என்ன என்பவற்றைப் பற்றியும் விளக்குகிறது.

இதைத்தான் ரூமியின் புத்தகம் அறிமுகம் செய்கிறது. ரூமியின் புத்தகத்தில் உண்மைக்குப் புறம்பான கருத்துகள் கூறப்பட்டிருந்தால், அதை மறுபரிசீலனை செய்து திருத்திக் கொள்வது ரூமியின் பொறுப்பு. அதற்குத் தகுந்த வகையில் ஒத்துழைப்பது பதிப்பாளராகிய எங்களது கடமை. ஆனால் ரூமி, தான் சார்ந்த மதத்தை எதிர்த்து, அதில் தான் காணாத குறைகளை, பிறர் சொல்கிறார்கள் என்பதற்காகவே தன் புத்தகத்தில் எழுத வேண்டும் என்று எதிர்பார்ப்பது சரியல்ல.

3. தன் மதம்தான், அல்லது தான் பின்பற்றும் வழிமுறைதான் சரியானது என்று ஒருவர் நினைக்கும்போது அதை வெளியே சொல்வதில் என்ன தவறு ? அவரது கருத்தை ஒவ்வொருவரும் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பதில்லையே. ரூமி, தன் புத்தகத்தில் எந்த இடத்திலுமே இஸ்லாத்தைப் பின்பற்றுங்கள் என்று பிற மதத்தாரிடம் சொல்லவில்லையே ? இது இஸ்லாத்தைப் பரப்பும் புத்தகம் இல்லை. இஸ்லாத்தை விளக்கும் புத்தகமே.

4. இஸ்லாம் சிலை வணக்கத்தை எதிர்க்கிறது, குர்-ஆன் பிற மதங்களைச் சேர்ந்தவர்களை இழிவுபடுத்துகிறது (யூதர்களைப் பன்றிகள் எனச் சொல்கிறது…) என்பது பற்றி… எல்லா மதங்களுமே தம் மார்க்கம் தவிர பிறவற்றைக் கடுமையாகவே குறை சொல்வனதான். எடுத்துக்காட்டாக தமிழ் வைணவர்கள் வேதமாகப் போற்றும் நாலாயிர திவ்யப் பிரபந்தத்திலிருந்து இரு மேற்கோள்கள்:

வெறுப்பொடு சமணர் முண்டர் விதி-இல் சாக்கியர்கள் நின்பால்

பொறுப்பரியனகள் பேசிப் போவதே நோயதாகி

குறிப்பெனக் கடையுமாகில் கூடுமேல் தலையை ஆங்கே

அறுப்பதே கருமம் கண்டாய் அரங்கமா நகர் உளானே

– தொண்டரடிப்பொடி ஆழ்வார், திருமாலை 8

தர்க்கச் சமணரும் சாக்கியப் பேய்களும் தாழ்சடையோன்

சொற்கற்ற சோம்பரும் சூனிய வாதரும் நான்மறையும்

நிற்கக் குறும்புசெய் நீசரும் மாண்டனர் நீநிலத்தே

பொற்கற்பகம் எம் இராமானுசமுனி போந்தபின்னே

– திருவரங்கத்தமுதனார், இராமானுச நூற்றந்தாதி 99

5. ரூமியை லஷ்கார்-இ-தொய்பா, அல்-கெய்தா, அவர் எழுதியது சீனி தடவிய தாலிபனிசம் என்றெல்லாம் குறை கூறுவது சற்றும் நியாயமானதல்ல. சல்மான் ருஷ்டியின் நாவல் ‘The Satanic Verses ‘ தடை செய்யப்பட்டிருந்த நேரம், இம்மாதிரியான தடைகள் கூடாது என்று The Indian Express செய்தித்தாளில் ஒரு கடிதம் எழுதியவர் ரூமி. அது வெளியானதும், அவர் வேலை செய்யும் கல்லூரியிலிருந்து அவரை உடனடியாக நீக்க வேண்டும் என்று அந்த ஊரில் பெரும் ஆர்ப்பாட்டம் எழுந்தது. பள்ளிகள் இழுத்து மூடப்பட்டன. பின் ஒருமாதிரியாக அந்த பிரச்னை அடங்கியது. ரூமி அந்தக் கதையைப் படித்தபின் அதில் ருஷ்டி எழுதியுள்ள சில ஏற்புடையதாக இல்லாததால் ருஷ்டியை போகிறபோக்கில், வேறொரு விஷயத்தைப் பற்றி எழுதுகிறபோது, கண்டித்துத் தன் புத்தகத்தில் எழுதுகிறார்.

அந்த மேற்கோளை அப்படியே தருகிறேன்:

‘பெருமானாருக்கு மொத்தம் பதினோரு மனைவியர். இன்னொரு கணக்கின்படி பன்னிரண்டு மனைவியர். நம்பிக்கையாளர்களின் அன்னையர் ‘ (உம்முஹாத்தில் மு ‘மினீன்) என்று அவர்கள் அழைக்கப்படுகிறார்கள். இஸ்லாமிய உலகம் தன் பெற்றோரைவிட மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கும் இந்த அன்னையரின் பெயரில் விபச்சாரிகள் இருந்ததாக வேண்டுமென்றே சல்மான் ரஷ்டி தனது சாத்தானின் கவிதைகள் என்ற நூலில் எழுதியதால்தான், அந்த சாத்தான் அவன்தான் என்பதும், அவனுடைய உள் நோக்கமும் வெளிச்சமானபோது, அவன் தலைக்கு ஆபத்து வந்தது. ஆனால் மேற்கின் எழுதுகோல்கள், அல்லது மேற்கின் மனநிலை கொண்ட எழுதுகோல்களும் நாக்குகளும் சொல்வதுபோல, காம உணர்ச்சி மிகுந்ததன் காரணமாகப் பெருமானார் பல பெண்களை மணந்து கொண்டார்கள் என்று நினைப்பது உண்மைக்கு முற்றிலும் புறம்பானது என்பதை இன்னும் கொஞ்ச நேரத்தில் புரிந்து கொள்ளலாம். ‘

ஆக, ரூமி ‘சல்மான் ருஷ்டி மீது இடப்பட்ட பத்வாவை நியாயப் படுத்துகிறார் ‘ என்று ரூமியே பத்வாவை ஏற்று ருஷ்டியை கொலை செய்யப் புறப்படப்போவது போல நேச குமார் சித்தரிப்பது நியாயமல்ல. இங்கு ருஷ்டி மீது இடப்பட்ட பத்வா பற்றிய தகவலை மட்டும்தான் சொல்கிறார்.

6. லஷ்கார்-இ-தொய்பா, அல்-கெய்தா, பிற இஸ்லாமியத் தீவிரவாத அமைப்புகள் செய்பவற்றை ரூமி தன் புத்தகத்தில் மிகக் கடுமையாகக் கண்டிக்கிறார். மேற்கோள் இதோ:

‘அதோடு, இது சம்பந்தமான இன்னொரு முக்கியமான விஷயம், இப்படி பிரகடனம் செய்யப்பட்டு அரசால் நடத்தப்படுகின்ற இஸ்லாமியத் தற்காப்புப் போர்களில், தனி மனிதர்கள் தற்கொலைப் படையாக செயல்படுவதற்கெல்லாம் இஸ்லாத்தில் அனுமதியில்லை. குண்டுகளை உடம்பில் கட்டிக் கொண்டு சாவதற்கும், மற்றவர்களின் உயிருக்கும் உடமைக்கும் அழிவு ஏற்படுத்துவதற்கெல்லாம் இஸ்லாத்தில் இடமில்லை. இத்தகைய செயல்கள் இஸ்லாத்திற்கு எதிரானவையும் அப்பாற்பட்டவையுமாகும். இப்படிப்பட்ட துர்மரணங்களை ஷஹீது (உயிர்த்தியாகம்) என்ற அந்தஸ்து கொடுத்து இஸ்லாம் கெளரவிக்காது. ‘

7. இதுவரை அச்சிட்ட புத்தகங்கள் அனைத்தும் முழுமையாக விற்றுவிட்டன. அடுத்த பதிப்பு, படிக்க வசதியான சில மாற்றங்களுடனும், எழுத்துப்பிழைகள் இல்லாமலும் மிக விரைவில் வெளிவரும்.

Series Navigation

author

பத்ரி சேஷாத்ரி

பத்ரி சேஷாத்ரி

Similar Posts