’ரிஷி’யின் இரு கவிதைகள்

This entry is part [part not set] of 25 in the series 20091002_Issue

’ரிஷி’



• நீர்நிலம்
முப்பதாண்டுகளுக்கு முன்பு கல்லூரிச் சுற்றுலா; கோனை ஃபால்ஸ்.
அருவியின் தோற்றுவாய் காண மலையேற்றம்.
போகும் வழியெங்கும் பொடிக்கற்கள் இடறிவிட, கவ்வும் பேரச்சம்.
மீள இறங்கும் நேரம் காற்று உந்த, சிறு கற்களால்
மேலும் சீர்குலைந்தது பாதங்களின் பிடிமானம்.
ஒருவழியாக அடிவாரம் அடைந்து தரையில் கால் பதித்ததும்
பால் வார்த்தது நெஞ்சில் அதன் திடம்.
நிலத்தை திடமென நம்பியிருந்தோம் ஒரு காலம்……

• நோய்நாடி
மின்ரயில்வண்டி நிலையத்தில், படியேறியிறங்கும் சந்திப்புப் புள்ளியில் படுத்திருந்தாள் ஏழை மூதாட்டி.
இரு மார்பகங்களும் இரண்டறக் கலந்தொரு பெரும்பாறைக்கட்டியாய் உருவெடுத்திருந்தன. போவோர் வருவோர் பார்வைகளெல்லாம் பதறி
அப்பால் திரும்பிக்கொண்டிருந்தன அவசரவசரமாய்.
தன் மூடிய கண்களால் காலங்காலமாய் உலகத்தை இருளச்செய்கிறது பூனை.
ஏழைகளை நோய் தின்றாலென்ன? கொன்றாலும்தான் என்ன?
தெம்புடல் கொண்டிருந்த இன்னருங்காலத்தில்
யாருக்கு வாக்கப்பட்டாளோ? எத்தனை பிள்ளை பெற்றாளோ?
அன்பான மனைவியோ? அடங்காப்பிடாரியோ?
என்னவான மருமகளோ? ஏதான மாமியாரோ?
போங்காலத்தே விடாமல் துரத்திக்கொண்டுவரும் விடையறியாக் கேள்விகள் இன்னும் நூறாயிரமோ, இல்லை, விண்மீன்களின் எண்ணிக்கையாமோ…?
நோயில் வீங்கிப் பெருத்துக்கொண்டே போகும் முலைபாரம்
இல்லாமையிலும் இயலாமையிலும் பன்மடங்காய் வலிசேர்த்து சோர்ந்துபோகச் செய்ய, மின்னும் நிராசைக்கண்களோடு படுத்துக்கிடந்தவளை
யார் சுமந்தாரோ? செல்வனோ? அந்நியனோ?
வண்டியைப் பிடிக்கும் அவசரத்திலும், வாழ்வைப் பிடிக்கும் அவசத்திலுமாய்
அவளைக் கடந்துசென்ற கால்கள் அனேகமனேகம்.
அவற்றிலிரண்டிற்குச் சொந்தக்காரி தான் இந்தக்
கவிதையை எழுதிக்கொண்டிருக்கும் நான்.

ramakrishnanlatha@yahoo.com

Series Navigation

ரிஷி

ரிஷி