ரஷியாவின் நவீன அறிவியல் மற்றும் கலைத் துறைகளில் பாரதிய மரபின் பங்களிப்பு

This entry is part [part not set] of 44 in the series 20030209_Issue

அரவிந்தன் நீலகண்டன்


‘குர்வந்து விஸ்வம் ஆர்யம் ‘(உலகனைத்தையும் உயர்வடைய செய்யுங்கள்)

வேதம் (கி.மு.4000 )

கடந்த நாற்பது ஆண்டுகளாக இந்தியாவில் நூல்கள் வாசிக்கும் ஆர்வமுடையோருக்கு பல துறைகளை குறித்து குறைந்த விலையிலான நூல்களை சோவியத் நூல்கள் அளித்து வந்தன. அந்நூல்களில் ஒரு விஷயம் திரும்ப திரும்ப அழுத்தமாக கூறப்படும். எவ்வாறு அந்நூல் மார்க்சிய ஒளியால் உத்வேகம் பெற்றது என்பதுதான் அது. அறிவியலாகட்டும் இலக்கியமாகட்டும் அவை மார்க்சியத்தால் உத்வேகம் பெற்று மார்க்சியத்தை நிலை நாட்டுவதாகவே இருக்கும். அணுவியலானாலும் சரி அழகியலானாலும் சரி இதுதான் கதை. சற்றேறக்குறைய ஒரு தலைமுறை இந்தியர்கள் மார்க்ஸும் லெனினும்தான் சோவியத் அறிவியலாளர்களின் ஆதர்ச புருஷர்கள் என்றே நம்பினார்கள்.

ஆனால் க்ளாஸ்னாஸ்ட்டும் பெரிஸ்தோரோக்காவும் சோவியத் மாயா பிம்பத்தை 1980களின் இறுதியில் சிறிது சிறிதாக கிழிக்க ஆரம்பித்தன. அங்கு தெரிய ஆரம்பித்த நிஜங்கள் பிரச்சார பிம்பங்களிலிருந்து பெரிதும் மாறுபட்டன. சோவியத் யூனியனின் அரசு இயந்திரமும் அதன் வேர்கள் பதித்திருந்த சித்தாந்த படுகையும் மானுடத்தினை சிநேகிப்பவை அல்ல என்பது தெளிவாயிற்று. சித்தாந்த எதிர்ப்புடைய அறிவியலாளர்களும் இலக்கிய படைப்பாளிகளும் மிகக் கொடூரமாக களையெடுக்கப்பட்டிருப்பது ஆவண ஆதாரங்களுடன் வெளிப்பட ஆரம்பித்தது. குடும்பங்கள் கொலைச் செய்யப் பட்டிருப்பதுவும், நாசிகளுக்கு இணையான நாசி முகாம்களை விட அதிக எண்ணிக்கையும் திறமையும் வாய்ந்த சைபீரிய அடிமை முகாம்கள் நடத்தப்பட்டிருப்பதுவும், லட்சக் கணக்கான மக்களை துடைதெடுத்த பஞ்சங்கள் உருவாக்கப்பட்டிருப்பதுவும் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த மார்க்சிய காரிருளில் ரஷ்ய கலை மற்றும் அறிவியல் புலங்களைச் சார்ந்த சில மிகச் சிறந்த மிக உயர்ந்த படைப்பாளிகளுக்கு பாரதிய மரபின் தாக்கமும் வழிகாட்டுதலும் இருந்தது என்னும் அதிசயமான உண்மையும் வெளிப்பட்டது. எந்த மரபினை கார்ல் மார்க்ஸ் ‘குரங்கையும் பசுவையும் வணங்கும் காட்டுமிராண்டி நிலைக்கு மனிதர்களை கீழே தள்ளிய பண்பாடு ‘ என குறிப்பிட்டாரோ அந்த மரபின் ஞான ஒளிக் கீற்றுகள் (மார்க்சியம் உருவாக்கிய உயிர் உறிஞ்சும் சோவியத் அரசின் காலத்தில்) ரஷிய அறிவியலாளர்களுள் மிகச்சிறந்தவர்களுக்கு சமய சஞ்சீவினி யாயிற்று.

உதாரணமாக விளாதிமீர் ஐவனோவிச் வெர்னாட்ஸ்கி (1863-1945). இப்புவி அனைத்துமாக ஓர் அதிஉயிர் செயலாக்கமாக செயல்படுவதை முதன்முதலாக புவிவேதியியல் மூலம அவதானித்தவர் இவரே. உயிர் கோளத்தின் புவியியல் தாக்கங்கள் அனைத்து வரையறை கோடுகளையும் தாண்டி இயைந்தியங்குவதை முதன்முதலாக இவரே ஆய்வுகள் மூலம் நிறுவியவர். தன் கால அறிவியலின் சாத்திய கூறுகளை மீறிய தொலை நோக்கு பார்வை அவருக்கு இருந்தது. தெயில் தி சார்டினின் ‘நியூஸ்பியர் ‘ ‘(கூட்டு)மன கோளம் ‘ எனும் கருத்தாக்கத்தை அறிவியலாளரிடையே இவரே பிரபலப் படுத்தினார். பலவிதங்களில் இன்றைய உயிரியல் மற்றும் சுற்றுப்புற சூழலியலின் முன்னோடியாக அவர் விளங்கினார். அக்டோபர் கலகத்துக்கு 3 வருடங்களுக்கு பின் 1920 இல் அவரது நாள் குறிப்பில் பின் வருமாறு எழுதினார், ‘வாஷ்ரோவின் படைப்பில் நான் தெளிவாக (கீவ்வின் ஜில்யாரோவ்ஸ்கியினை வாசிக்கும் போது உணர்வது போலவே) பாரதிய தத்துவ மரபு கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வில்லை என கருதுகிறேன். இறை மற்றும் ஆத்மா குறித்த வினாக்களை பொறுத்தவரையில் யூத கிறிஸ்தவ மரபுகளை ஒட்டிய நம் சிந்தனைகளைக் காட்டிலும் ஹிந்துக்களின் தத்துவ சமய அறிவு நமக்கு அதிக தெளிவு தரும். ‘ மீண்டும் தன் நண்பருக்கு எழுதிய கடிதத்தில் மானுடத்திற்கு வேத உபநிஷதங்களின் முக்கியத்துவம் குறித்து பின்வருமாறு குறிப்பிட்டார், ‘இக்கடிதத்துடன் நான் வியக்கத்தக்க ரிக் வேத ஸ்லோகம் ஒன்றினை அனுப்புகிறேன். டெய்சனின் சந்தத்துடனான மொழிபெயர்ப்பு. மூலத்துடன் அம் மொழிபெயர்ப்பு ஒத்துள்ளதாகவே கருதுகிறேன்.இது ஏசுவுக்கு பல நூறு ஆண்டுகளுக்கு முன், புத்தர் சாக்ரட்டாஸ் மற்றும் அனைத்து கிரேக்க அறிவியல் தத்துவங்களும் தோன்றுவதற்கு வெகு பல காலமுன்னே வாழ்ந்த ஒரு கவியின் வார்த்தைகள். ஆனால் இன்றைக்கும் பொருந்தும் வண்ணம் அவை ஒலிப்பதை பாருங்கள். நித்தியத்துவத்துக்குள் எகிறிப் பாய்வதாகவே இந்த ஸ்லோகத்தை நான் உணர்கிறேன். ஏனெனில் (பிரபஞ்சத்தின்) சிருஷ்டி கர்த்தரின் இருப்பு அல்லது தேவை குறித்து கேள்வி எழுப்புவதை பாருங்கள். (அதே சமயம்) பிரபஞ்ச இருப்பின் வேர்கள் பிறப்பும் இறப்புமற்ற அறிந்து விளக்கவொண்ணாத தன்மையுடன் உணரப்படுகின்றன, இதயத்தின் தேடலில் அன்பின் உணர்வில். ‘ ரஷியவியலாளர் அலெக்சாண்டர் சென்கிவிச்சின் வார்த்தைகளில் உலக மக்கள் தங்கள் தங்கள் கலாச்சாரங்களின் மனிதத்துவத்தை உயர்த்தும் மதிப்பீடுகளை காக்கும் ஆற்றலை பழம் பாரதிய ஞான மரபினை அறிதல் மூலம் பெற முடியும் என வெர்னாட்ஸ்கி குறிப்பிட்டார்.

நாஸிகளின் படைகள் சோவியத் யூனியனை தாக்கிய போது ஸ்டாலினோ அல்லது மார்க்சியமோ படையெடுப்பாளனை எதிர்க்க ரஷியர்களுக்கு வலுவூட்டவில்லை. ஸ்டாலின் யதார்த்த நிலைகளை அறியாது செம்படையினை எவ்விதத்திலும் நவீனப்படுத்தவில்லை. மேலும் நாஸிகள் மேற்கத்திய ஏகாதிபத்தியத்துக்கு எதிரான தன் நண்பர்கள் என்றே ஸ்டாலின் நம்பினார். எனவே நாஸி படையெடுப்பின் போது ரஷ்யர்கள் மார்க்சியத்தின் மீது இகழ்ச்சியான வெறுப்படைந்ததில் வியப்பில்லை. அப்போது அவர்களுக்கு வீறு ஊட்டியது ரஷ்ய தேசியவாதம் தான். அதே சமயத்தில்தான் புகழ்பெற்ற ரஷ்ய இந்தியவியலாளரான அலெக்ஸி பாரான்னிக்கோவ் துளசி தாஸ் மகராஜின் புனித ராம சரித மானஸை ரஷிய மொழியில் மொழிபெயர்த்தார். ராம காதையின் ஞானமும் தன் மக்களின் அதர்மத்துக்கு எதிரான போராட்டமும் அவருக்கு எத்தகைய உத்வேகத்தை அளித்திருக்கும் என கூற வேண்டியதில்லை. பல ரஷிய கவிஞர்களும் கலைஞர்களும் பாரதிய ஞான மரபினை தம் போராட்டங்கள் நிறைந்த கடின வாழ்க்கையில் ஆறுதலும் உத்வேகமும் அளிக்கும் தாயாக பார்த்தனர். குறிப்பாக ஸ்டாலினின் களையெடுப்புக் காலத்தில்.

நிகோலாய் குமிலோவ் இருபதாம் நூற்றாண்டின் சிறந்த ரஷிய கவிஞர்களில் ஒருவர். கைது செய்யப்பட்டு மார்க்சிய களையெடுப்பில் 1921 இல் கொல்லப்பட்டவர்.

ீபாரத பூமி எனும் புனித அற்புதம்

என் மனதெங்கும் ஞான வெள்ளத்தை நிரப்புகிறது ‘

என பாடினார் அவர். தன் ‘தொல் நினைவு ‘ (Protomemory) எனும் பாடலில் அவர் தன்னை தன் முந்தைய பிறவியில் பாரத அன்னையின் புத்திரனாகவே கருதுகிறார்.ரஷிய ஓவிய இயக்கங்களில் ‘அமரவெல்லா ‘ இயக்கம் முக்கியமானது. சோவியத்களால் மிகவும் முயன்றும் இவ்வியக்கத்தின் படைப்பாக்கத்தின் கழுத்தை நெறிக்க முடியவில்லை. அக்டோபர் கலகத்துக்கு முன்பும் சரி பின்பும் சரி இவ்வியக்கம் மிகுந்த ஊக்கத்துடன் செயல்பட்டு வந்தது. எனினும் 1917க்கு பின் ஓவிய கண்காட்சிகள் முழுமையாக தடைப்படுத்தப்பட்டன. ‘அனுமதிக்கப்பட்ட ‘ புலங்களிலேயே ஓவியங்கள் உருவாக்கப்படவேண்டும் என்பது தீட்டப்பட்ட ஓவியங்கள் சூரிய ஒளியையும் பொதுமக்கள் கண்களையும் சந்திக்க முன் நிபந்தனையாக இருந்தது.1960களின் இறுதியில் ஆராய்ச்சி நிறுவனங்களில் சில கண்காட்சிகள் அனுமதிக்கப்பட்டன. 1980 களின் இறுதியில்தான் முழுமையான தடை நீக்கம் இவ்வோவியங்களுக்கு வழங்கப்பட்டது. இந்த ஓவிய இயக்கத்தை உருவாக்கிய பத்தேயேவ் (1891-1971) பிரபஞ்ச வெளியால் மிகவும் கவரப்பட்டவர். உள்ளுணர்வே அனைத்துமாகிறது என கருதிய இவர் ஓவியத்தை பரிபூரணத்துவம் நோக்கி ஓவியனை நகர்த்தும் ஆன்மீக சாதனையாகவே கருதினார்.கியூபிஸத்தை மிகவும் வரவேற்றார் எனினும் தன் தனித்துவத்தை கைவிடவில்லை. 1917 இல் அவர் பின்வருமாறு எழுதினார், ‘ கியூபிஸம், உயர்த்துவம், பாரதிய யோகம், நவீன அறிவியல் தரும் பார்வை இவை அனைத்தும் நம்மை பிரபஞ்சம் தழுவிய ஆன்ம உணர்வு நோக்கி நகர்த்துகின்றன. ‘ பத்தேயேவின் முக்கிய சீடர் தனது பதினேழாவது வயதில் அவருடன் இணைந்த சிம்ர்னோவ். பின்னர் 1920களில் ருனா எனும் புனைப்பெயர் உடைய ப்ஷிசெட்காயா எனும் பெண் ஓவியரும் இணைந்தார். பாரதிய ஞான மரபில் பெரும் ஆர்வம் கொண்டவர் இவர். இச்சிறிய வட்டம் தொடர்பு கொண்ட மற்றொரு ஓவியர் ரோயிரிச்.1926 இல் சிமர்னோவ் ரோயிரிச்சை சந்தித்தார். பாரதத்தின் ஆன்ம ஞான மரபுகளில் தாம் மிகவும் ஆர்வம் கொண்டிருப்பதை ரோயிரிச்சின் மனைவியான எலெனா ரோயிரிச்சிடம் சிமர்னோவ் தெரிவித்தார். இந்த சந்திப்பினை தொடர்ந்து ‘அமரவெல்லா ‘ இயக்கத்தின் வழிகாட்டியாக ‘ஜீவிக்கும் தர்மத்தின் போதனை ‘ எனும் பிரம்ம ஞான நூல் பயன்பட்டது. ஓவியம் மூலம் ‘பிரம்மத்தின் மூச்சியக்கமாக பிரபஞ்சத்தின் இருப்பை உணர்தல் ‘ என்பதே இந்த இயக்கத்தின் அடிநாதமாயிற்று. இச்சிறு வட்டம் தம் ஓவிய நெருப்பினை காப்பாற்ற மிகவும் பாடுபட வேண்டியதாயிற்று. பாட்டாளி வர்க்க சுவர்க்க பூமியில் பத்தேயேவ் கொடுமையான வறுமை வாட்ட இறந்தார். இத்தனைக்கும் அமரவெல்லா ஓவியங்களுக்கு வெளிநாடுகளில் பெரும் மதிப்பு இருந்தது. 1919 இல் ரோயிரிச் 64 கவிதைகள் அடங்கிய தொகுப்பினை , மோர்யாவின் மலர்கள் எனும் தலைப்பில் வெளியிட்டார். ரோயிரிச்சின் ஆன்மிக உட்பயணத்தின் வெளிப்பாடுகளாக அவை அமைந்தன. இரினா கார்ட்டன் ரோயிரிச்சின் ஆன்மிக கருத்தியல் குறித்து பின்வருமாறு கூறுகிறார், ‘ ஆதி அந்தமற்ற பிரபஞ்சமாக கணக்கற்ற சுழற்சிகளில் வெளிப்பட்டு அழியும், பருப்பொருட்களிலும் செயலாக்கங்களிலும் துடிக்கும் இறை சக்தி எனும் ஹிந்து தத்துவமே அவரது ஆன்மீகத்தின் அடிப்படை. ‘ ரோயிரிச் தன் கவிதை ஒன்றில் கூறுகிறார்,

‘சகோதரா நிலையற்ற மாற்றங்களை

கைவிட்டு வா

நேரமிருக்காது பின் நமக்கு

நம் சிந்தனைகள் மாறா பெரும் பொருளை பற்றி நிற்க

நித்தியத்துவத்தை நோக்கி செல்ல. ‘

விரைவில் ஸ்டாலினிய களையெடுப்பு தொடங்கியது. நித்தியத்துவத்தின் அமர தேசமாம் பாரதத்தை ரோயிரிச் கண்டடைந்தார். ரோயிரிச்சின் பெரும் சாதனையில் ஒன்று அமெரிக்காவில் அவரால் உருவாக்கப்பட்டு 1935 இல் அமெரிக்க சார்பு நாடுகளால்

கையெழுத்திடப்பட்ட ரோயிரிச் ஒப்பந்தம். போர் காலங்களில் பகை நாடுகளின் அறிவாலயங்கள் மற்றும் கலாச்சாரச் சின்னங்களை தாக்குவதில்லை எனும் இந்த ஒப்பந்தம் இன்று உலக நாடுகள் அனைத்தாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. பாரதத்தினை தன் நிரந்தர தாயகமாக மாற்றிக் கொண்ட ரோயிரிச் தன்னால் உருவாக்கப்பட்ட யோக முறைக்கு அக்னி யோகம் என பெயரிட்டார்.

ரஷிய அறிவியல் புனைகதைகளின் பிதாமகரும் உலகப்புகழ் பெற்ற தொல்லுயிரியலா ளருமான இவான் அந்தோனோவிச் யெஃபிரமோவ் (1907-1972) அதிகார வட்ட மார்க்சிய இலக்கிய விமர்சகர்களின் கண்டனதிற்கு ஆளானவர். வேதகால பாரதமும் கிறித்தவம் வெல்லாத ‘பாகன் ‘ (Pagan) ரஷியாவும் அவரது இரு பெரும் காதல்கள். உலகப்புகழ் பெற்ற ரஷிய அறிவியல் புனை நாவலான ‘அண்ட்ரோமிடா காலக்ஸி ‘யில் மனித குலம் முதன் முதலாக நட்சத்திர மண்டலங்களுக் கிடையேயான விண்கலனை அனுப்புகிறது. அக்கலத்தின் பெயர் ‘தந்த்ரா ‘! அவர் பாரதத்திற்கு ஒருமுறை கூட வந்ததில்லை எனினும் அதன் ஆலயங்கள் குறித்து மிக தெளிவான அறிவுடன் இருந்தார். சமஸ்கிருத புலமையும் பெளத்தம் குறித்த தெளிவான அறிவும் அவர் கடின உழைப்பின் மூலம் சம்பாதித்தவை. ஓடும் நதியில் தோன்றி மறையும் காற்றுக்குமிழை ஒத்தவை மார்க்சிய, பின்நவீனத்துவ சித்தாந்தங்கள் போன்றவை. பாரதத்தின் வேதாந்த ஞான மரபோ வற்றாத ஜீவ நதியாக காலம் காலமாக வாழ்வளிக்கிறது கங்கையையும் வோல்காவையும் போல, சநாதனமாக.

‘உலகம் காக்க ஓங்கும் அவள் சூலம்

அம்மா கலிகாலம் சுகமாக மாறும் ‘

-கிராமத்து முத்தாரம்மன் கோவில் பாடல்

***

பயன்படுத்தப்பட்ட பத்திரிகைகள்:

1. Soviet Literature (No.8 (497),1989) ‘A pilgrimage to the world of immortal images ‘, அலெக்சாண்டர் சென்கிவிச் மூல ரஷிய கட்டுரையின் ஆங்கில மொழி பெயர்ப்பு: அலெக்சாண்டர் மிக்கேய்வ்.

2. Science in the USSR, (No. 2 March-April,1990), ‘The Amaravella Group ‘, பேரா.D.போஸ்பொலோவ்.

3. Science in the USSR, (No.4 July-August,1990), ‘The Yeferemov Phenomenon ‘, ஐ.சோரிச்.

4. http://www.roerich.org

***

அக்டோபர் கலகத்துக்கு முன்னும் கூட பாரதம் குறித்த சமஸ்கிருதம் குறித்த அறிவும் ஆர்வமும் ரஷ்ய அறிவியலாளருக்கும் கலைஞர்களுக்கும் இருந்தது. உதாரணமாக தனிமங்களின் அணு எண் அடிப்படையிலான அட்டவணையினை உருவாக்கிய மெண்டலீப் ஒரு சமஸ்கிருத அறிஞரும் கூட. தன் அட்டவணையில் விட்டுப்போன, கண்டுபிடிக்கப்படாத தனிமங்களுக்கு கண்டுபிடிக்கப்பட்ட தனிமங்களிலிருந்து எத்தனை தூரத்தில் உள்ளனவோ அத்தனை அளவில் பெயர்களை வைத்தார். அதற்கு சமஸ்கிருத அடைமொழிகளை பயன்படுத்தினார். உதாரணமாக ஏக போரான் போன்ற பெயர்கள். ஆனால் இக்கட்டுரை அக்டோபர் கலகம் மற்றும் அதனைத் தொடர்ந்த காலகட்டத்தை மாத்திரமே எடுத்துக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.

***

infidel_hindu@rediffmail.com

Series Navigation