யாழ் நகரம்

This entry is part [part not set] of 24 in the series 20070719_Issue

தீபச்செல்வன்


ஒரு கொத்துரொட்டிக்கடை
இனந்தெரியாத பிணம்
நீளும் அமைதி:யாழ்.நகரம்.

01
எனது சைக்கிள்
சந்தியில்
குருதி வழிய வழிய
உடைந்து கிடக்கிறது
நாட்குறிப்புக்களை
காற்று வலிமையாக
கிழித்து போகின்றன
எனது பேனா
சிவப்பாகி கரைகிறது.

மதிய உணவிற்கு
வாங்கப்பட்ட
அரை ராத்தல் பாணை
நாய்கள் அடிபட்டு
பிய்த்து தின்னுகின்றன
வாழைப்பழங்களை
காகங்கள்
கொத்தி தின்னுகின்றன.

எனது பிணம்
உரிமை கோரப்படாமல்
குருதியால் போர்க்கப்பட்டிருக்கிறது.

வீட்டின் கூரை
உக்கியிருக்கிறது
சுவர்கள் கரைந்து
சரிந்திருக்கின்றன
அம்மா.அக்கா.தம்பி.தங்கைகள்
அழுகையில்
கூடியிருக்கிறார்கள்.

வீதி மயானமாகிறது
சீருடைகள் சவப்பெட்டியாகின்றன
மின் தூன்கள்
உயிரை குடிக்கின்றன.

யாரோ சாப்பிட வருகிறார்கள்
கொத்துரொட்டிக்கடை திறந்திருக்கிறது.

02

நான் யாரென்பதை
நீங்கள் அறியாதிருப்பீர்கள்
ஆவலற்றிருப்பீர்கள்
நீங்கள் சாப்பிடும்
கொத்துரெட்டி
மேசையில் பரவியிருக்க
எனது பிணம்
பின்னணியாய் தெரியும்.

இவன் ஏன் சுடப்பட்டான்
என்பது பற்றிக்கூட
நீங்கள் சிந்திக்கமாட்டமடீர்கள்
உங்களால்
தொடர்ந்து அமைதியாய்
சாப்பிட முடியும்
நாளைக்கு வெடிக்கப்போகிற
வன்முறைகளுக்கு
ஊரடங்கு அமுலுக்கு
நீங்கள் தயாராகுவீர்கள்.

03

கடையில் இருக்கும்
பொருட்களில்
சிலவற்றை முண்டியடித்து
வாங்கிவிட்டு
குறைந்த பொருட்களோடு
கூடிய பாரத்தோடு
வீட்டிற்கு வருவீர்கள்
பூட்டிய வீட்டுக்கதவை தட்டி
கூப்பிட்டு
அவதானமாக கதவை திறந்து
உள் நுழைவீர்கள்
கதவுகள ஜன்னல்களை
இறுக சாத்திக்கொள்வீர்கள்.

அவன் என்ன செய்திருப்பான்
என்ற கேள்வி
நீர் தீர்ந்து காற்று வரும்
குழாயை உலுப்புகையிலும்
எழாமலிருக்கும்.

ஒரு பக்கத்துடன் வெளிவரும்
நாளைய தினஇதழ்
அதில் அவன் சாவு
இனங்காணப்பட்டிருக்கும்
என்றுகூட எதிர்பார்க்கமாட்டீர்கள்
மின்சாரம் துண்டிக்கப்பட்டு
ஏழு மணியுடன்
கண்னை மூடிக்கொள்கையில்
இரவு பெரிதாக விரிகையில்
எதுவும் நினைவு வராது.

நாளை அந்த கொத்துரொட்டிக்கடை
பூட்டியிருக்கலாம்
வேறு எங்கேனும்
ஒரு கொத்துரொட்டிக்கடை
கொஞ்சரொட்டிகளுடன் திறந்நிருக்கும்.
கொஞ்ச பொருட்களுடன்
ஓரு பலசரக்குகடையும் திறந்திருக்கும்.

04

நான் என்ன செய்தேன்
எதை விரும்பினேன்
யாரை நேசித்தேன்
யாரை எதிர்த்தேன்?

எனது வீடு எந்த
கிராமத்திலிருக்கிறது
எனது பேஸில்
யாருடைய படம் இருந்தது
எந்த பிரதேச வாடையுடைய
உடைகளை
நான் அணிந்திருந்தேன்
எனது தலைமுடி
எப்படி சீவப்பட்டிருந்தது?

யார் என்ன கவனித்தார்கள்
எந்த முகாங்கள்
அமைந்திருக்கும் வீதியால்
நான் பயணிக்காதிருந்தேன்?

எந்த சீருடைகளுக்கு
நான் அச்சமாயிருந்தேன்
ஏன் பொது உடைகளுடன்
வந்தவர்களால்
நான் சுடப்பட்டேன்?

எனது பிணத்தில்
எத்தனை கேள்வியிருக்கிறது
எப்பொழுது நான்
இனங்காணப்படுவேன்?

05

நான் எந்தவகை அமைதியாயிருக்கிறேன்?
நீங்கள் எந்தவகை அமைதியாயிருக்கிறீர்கள்?
குறிப்பிட்ட நேரங்களுக்குள்
என்ன இருக்கிறது?
இயல்பு குழைந்த யாழ்.நகரத்தில்
என்ன நடக்கிறது?


05.09.2006.யாழ்.நகரம்.

deebachelvan@gmail.com

Series Navigation

author

தீபச்செல்வன்

தீபச்செல்வன்

Similar Posts