யார்தான் துறவி ?

This entry is part [part not set] of 30 in the series 20020909_Issue

கவியோகி வேதம்


தினசரி சேதி படிக்கையிலே

..தேகமே அனலாய்ப் பறக்கிறது!

மனம்தனில் மதித்த ‘மடம் ‘பெருமை

..மணலதன் தூசாய்ச் சிரிக்கிறது!

யாரடா உண்மைத் துறவி ?என

..என்உளம் கேட்டுச் சலிக்கிறது;

சீருடன் விளங்க வேண்டாமோ,

..சிறந்தஓர் ‘துறவி ‘ மனப்பான்மை ?

பட்டறை சுட்ட இரும்பினைப்போல்

.. ‘பதமுடன் ‘ ஒளிர வேண்டாமோ ?

கட்டுகள் போட்டே ‘நா ‘மூலம்

..கருணையைப் பொழிய வேண்டாமோ ?

தவளைபோல் தத்தம் சாதனையை

..தம்பட்டம் அடித்தல் துறவாமோ ?

குவலயம் போற்றும் ஞானிஎன

..குணமதில் விளங்க வேண்டாமோ ?

‘துறவியர் ‘ எனும்சொல் கேட்டாலே

..தூய்மையும் ‘சுடர் ‘போல் ஒளிராதோ ?

அருவிகள் அழுக்கை நீக்குதல்போல்,

. ‘அவர் ‘தொட வினைகள் கழியாதோ ?

தவமதே உயர்ந்த வாழ்வாக,

..தன்-உடல் ‘சிவத் ‘தின் பிரதியாக,

பவவினை போக்கும் ‘வேல் ‘ ஆகப்

..பார்ப்பவன் சிறந்த துறவி-என்பான்;

மற்றவர் பணிந்தால் தான்வணங்கி,

.. ‘மழை ‘எனக் குனிதல் ‘துறவு ‘ஆகும்!

கற்றவை எல்லாம் நெஞ்சிறுத்திக்

.. ‘கனி ‘எனத் தருதல் பணி ஆகும்!

சித்துகள் வரினும், புலனடக்கிச்

.. ‘செக ‘மதை உயர்த்தல் ‘துறவு ‘ஆகும்!

எத்தனைப் போலே ‘துறவி ‘நின்றால்,

..இச்சொ(ல்)லே ‘களங்கம் ‘ என்றாகும்!

*****************(கவியோகி வேதம்)

Series Navigation

கவியோகி வேதம்

கவியோகி வேதம்