யாப்பு உறுப்பு : கூன்

This entry is part [part not set] of 40 in the series 20101114_Issue

மு. இளநங்கை


மு. இளநங்கை
முனைவர்பட்ட ஆய்வாளர்
சென்னைப் பல்கலைக்கழகம்

யாப்பு என்பது தொல்காப்பியக் காலத்தில் பொருண்மை, வடிவம் என்ற இரண்டையும் முதன்மைபடுத்தி நிற்க, பிற்கால இலக்கணிகள் வடிவத்திற்கு மட்டும் வரையறையாக யாப்பினைக் கட்டமைத்தனர். கூன் என்பது பொருண்மைக்கு முக்கியத்துவம் பெற்று செய்யுளில் இடம்பெறுவது. வடிவத்தோடு தொடர்பு இல்லாதது. இதனால் யாப்பு உறுப்பாகக் கூனைக் கொள்ளலாமா என்ற கேள்வி முதலில் எழுகிறது. தொல்காப்பியர் கூன் குறித்து குறிப்பிட்டுள்ளதாலும் வடிவத்தை மட்டும் முன் நிறுத்தாமல் பொருண்மையோடும் வருவது யாப்பு என்ற தொல்காப்பிய வரையறைக்கு உட்பட்டு யாப்பு உறுப்பாகக் கூன் விளங்குகிறது. எனவே இத்தலைப்பு தொல்காப்பிய நெறிப்படி யாப்பு உறுப்பாகக் கூனைக் குறிப்பிடுகிறது.

கூனிற்கான வரையறையாக, “இலக்கணத்தோடு பொருந்தி, யாப்பு வழாஅது அமையும் செய்யுளடிகளின் தொடக்கத்தில், யாப்பொடு பொருந்தாமல் தனித்து நிற்கும் சொல்லைக் Ôகூன்Õ என்பர்; தனித்து நின்றாலும் செய்யுளின் பொருளோடு தொடர்புடையதாகவே அமையும்” என்பார் மருதூர் அரங்கராசன்.

கூன் என்பது தனிச்சொல், இடைநிலை, போன்ற பெயர்களைப் பெற்று விளங்குகிறது. நம்மில் பலருக்குக் கூனிற்கும் தனிச்சொல்லிற்கும் வேறுபாடு தெரியாமல் இரண்டும் ஒன்றே என்று மயங்குகிறோம். இலக்கண நூல்களும் இவற்றைச் சரிவர விளக்கவில்லை. தொல்காப்பியம் கூன் என்ற சொல்லைக் கூறி விளக்க யாப்பருங்கலம் தனிச்சொல் என்று ஒழிபியல் பகுதியில் கூன் குறித்து பேசுகிறது. காலந்தோறும் யாப்பின் பொருண்மைக்கு சிறப்பாக அமையும் கூன் குறித்து இலக்கண நூல்கள் ஒழிபியல் செய்தியாகவே பேசியுள்ளது. இதற்குக் காரணமாகப் பிற்கால இலக்கண நூல்களில் யாப்பு என்பது வடிவத்தை மட்டும் குறிப்பதாக மாற்றம் பெற்றதைக் கூறலாம்.

இலக்கண நூல்களில் கூன் குறித்த பதிவுகள்

தொல்காப்பியம் அடி பற்றிப் பேசும் இடத்தில் கூனைக் குறிப்பிடுகிறது. வஞ்சிப்பாவில் அசைக்கூன் வரும் (செய். நூ. 48) என்றும், சீர்க்கூன் நாற்சீர் கொண்ட நேரடிகளில் வரும் (செய். நூ. 49) என்றும் குறிப்பிடுகிறது. கூன் என்பதற்கான வரையறையோ அந்தக் கூன் அடியில் எங்கு வரும் என்றோ குறிப்பிடவில்லை. ஆனால் உரையின் வாயிலாக அறியப்படும் செய்திகள் அனைத்தும் யாப்பருங்கல விருத்தியுரை எடுத்துரைத்துள்ள சான்றுகளையே பதிவுசெய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. பிற்காலத்தில் தோன்றிய இலக்கண நூல்களிலும் யாப்பருங்கல விருத்தியுரையில் உள்ளவையே எடுத்துக்காட்டப்பட்டுள்ளன.

எல்லா பாக்களிலும் மொழிமுதலில் கூன் இடம்பெறும். வஞ்சிப்பாவில் மொழி முதலில் மட்டுமின்றி இடையிலும் கடையிலும் கூன் இடம்பெறலாம் என்று இலக்கணம் கூறப்படுகிறது. அதற்கான சான்றுகளும் சங்கஇலக்கியங்களில் காணப்படுகிறது. அடி கூனாக வருவது சிறப்பு இல்லை என்றும் கூறுகின்றனர்.

இலக்கண நூல்களில் கூன் குறித்த விரிவான விளக்கம் என்பது விருத்தியுரையைப் பின்பற்றி இலக்கண நூல்கள் பகர்கின்றன. கூன் வரும் இடம் குறித்து மட்டும் இவை பேசுகின்றன.

பிற்கால நூல்கள் தொல்காப்பியம் கூறிய அசைக்கூன், சீர்க்கூன் என்ற பாகுபாடு இன்றிக் கூனைப் பொதுமையில் சுட்டின. பாடலின் பொருளைத் தழுவி அடியின் முதலில் வரும் என்று கூன் பயிலும் இடத்தை வரையறுத்தனர். காக்கைபாடினியம், அவிநயம், கலம், காரிகை, வீரசோழியம், இலக்கண விளக்கம் ஆகியன வஞ்சியின் முதலில் அன்றி இறுதியிலும் வரும் என்கின்றன. விருத்தியுரை, தொல்காப்பியச் செய்யுளியல் உரைகள் வஞ்சியின் இடையிலும் கூன் வரும் என்றன. இதனைப் பின்பற்றி முத்துவீரியம்,
அடிமுதற் கட்பாப் பொருளைத் தழுவித்
தனியே நிற்பது கூனா மக்கூன்
வஞ்சியு ளிடைகடை முதலினும் வருமே (மு.வீ. நூ. 982)
தனிச்சொல்லும் கூனும்

கூனாக வரும் தனிச்சொல்லிற்கும் பாவுறுப்பாகிய தனிச்சொல்லிற்கும் வேறுபாடுகள் உண்டு. கலிப்பா, வஞ்சிப்பா, வெண்பா போன்ற பாவடிவங்களில் உறுப்பாக இடம்பெறும் தனிச்சொல் என்ற உறுப்பிற்கும் இந்தக் கூனிற்கும் வேறுபாடு உள்ளது என்பதை இலக்கண நூல்கள் எதுவும் இயம்பவில்லை. முதன்முதலில் மருதூர் அரங்கராசன் தான் யாப்பறிந்து பாப்புனைய என்ற நூலில் தனிச்சொல்லிற்கும் கூனிற்கும் உள்ள வேறுபாடுகளை எடுத்துரைக்கிறார்.

செய்யுளில் இடம்பெறும் தனிச்சொல் பாவுறுப்புகளில் மூன்று நிலைகளில் வருகிறது. கலிப்பாவினுள் பொருள் முடிபை அறிவித்தற்காகச் சுரிதகத்திற்கு முன் அமையும் ஒரு கலிப்பா உறுப்பு தனிச்சொல் என்னும் பெயரால் வழங்கப்பெறும்.
வஞ்சிப்பாவின் இறுதிப் பகுதியாகிய ஆசிரியச் சுரிதகத்தின் முன் தனியே நிற்கும் தனிச்சொல் ஒன்றும் உண்டு. நேரிசை வெண்பாவில் முதலிரண்டு அடிகளின் முதற்சீர்களோடு ஒத்த எதுகை உடையதாய் இரண்டாமடியின் ஈற்றுச்சீராய் (நான்காம் சீர்) நிற்பதுவும் தனிச்சொல் என்னும் பெயரால் வழங்கப்படும்.

கலிப்பா, வஞ்சிப்பா, வெண்பா போன்றவற்றுள் காணப்படும் யாப்பு இலக்கணத்தோடு பொருந்தி நிற்கும் இந்தத் தனிச்சொற்கள் கூன் ஆகாது. இந்தத் தனிச்சொற்களை நீக்கினால் யாப்பில் பிழை ஏற்படும். ஆனால் யாப்பிலக்கணத்தோடு பொருந்தாமல் நிற்கும் தனிச்சொல்லே கூன் என்று கொள்ளப்படும். அதாவது கூனைத் தள்ளிவிட்டுப் பார்த்தால்தான் யாப்பு பிழையின்றி அமையும் ஆனால் யாப்பைக் காப்பதாகக் கருதிக் கொண்டு இந்தக் கூனைத் தள்ளிவிடுதல் கூடாது. காரணம் கூன் செய்யுளின் பொருள் இயைபிற்கும் சிறப்பிற்கும் உறுதுணையாக நிற்பது.

உரையாசிரியர்கள் பார்வையில் கூன்

உரையாசிரியர்களில் கூன் குறித்த செய்திகளில் விருத்தியுரையாசிரியர் கூறும் செய்திகள் இலக்கண நூல்களில் இடம்பெறாத அடிகூன் பற்றியும் ஒரே அடியில் இரண்டு கூன் இடம்பெறுவதைக் குறித்தும் பேசுவது குறிப்பிடத்தக்கது. அசை கூன், சீர் கூன் பற்றி பேசும் இலக்கண நூல்களில் அடி கூன் பற்றி உரையாசிரியர்கள் தான் எடுத்துரைக்கின்றனர். அடி கூனிற்கு எல்லா உரையாசிரியர்களும் கலித்தொகை 39வது பாடலைச் சான்று காட்டுகின்றனர். பொருண்மைக்கு முக்கியத்துவம் அளிக்கும் கூன் குறித்த புரிதலில் அடி கூன் குறித்த சிந்தனை உரையாசிரியர்களுக்கு ஏற்பட்டுருக்கக் கூடும் என்று எண்ணத் தோன்றுகிறது.

அடி கூன்

(எ-டு)
சிறுகுடி யீரே சிறுகுடி யீரே
வள்ளிகீழ் வீழா வரைமிசைத் தேன்றொடா
கொல்லை குரல்வாங்கி ஈனா மலைவாழ்நர்
அல்ல புரிந்தொழுக லான்
(கலித்தொகை 39)

இப்பாடலைச் சான்றுகாட்டி யாப்பருங்கல விருத்தியுரை அடி கூன் குறித்து எடுத்து உரைக்கிறது. ஒரு அடியே கூனாக வரும் என்று இலக்கண நூல்கள் உரைக்காத நிலையில் கூன் குறித்த புரிதல் உரையாசிரியர்கள் அடி கூனை அறிமுகம் செய்கின்றனர். கலித்தொகையில் இடம்பெறும் இப்பாடல் கலிவெண்பா வகையைச் சார்ந்தது. வெண்டளை பிறழாத நிலையில் அமையும் இவ்வடிவத்தில் இந்த அடி மட்டும் வெண்டளையில் அமையாத நிலையில் இதனை அடி கூனாக விருத்தியுரையாசிரியர் கொண்டிருக்கலாம். இவ்வாறு அடி கூனாகக் கொள்வதற்கு எந்த விளக்கமும் தரவில்லை. ஆனால் அடிகூனாக வருவது சிறப்பில்லை என்று கூறுகிறார்.

ஒரே அடியில் இரண்டு கூன்

(எ-டு)
வட, இமயமொடு தென், பொதியிலிடை

என்பதில் வட என்பது தென் என்பதும் அசை கூனாக வஞ்சியடியில் வந்துள்ளதாக விருத்தியுரை எடுத்துக்காட்டுகிறது.

விருத்தியுரையாசிரியர் கூறியுள்ள செய்திகளே தொல்காப்பியச் செய்யுளியலுக்கு உரையெழுதிய உரையாசிரியர்களும், பிற்கால உரையாசிரியர்களும் என அனைவரும் ஒருமித்த கருத்தினையே எடுத்துரைக்கின்றனர்.

பேராசிரியர் தனது உரையில் கூன் குறித்து விளக்க முற்படுகையில் கூனை இனங்காண்பது குறித்து விளக்கியுள்ளார். வாள் வலந்தர என்று தொடங்கும் புறநானூற்று பாடலில் வாள் என்பது அசை கூனாக வந்துள்ளதாக பேராசிரியர் எடுத்துகாட்டுகின்றார். அவர் கூற்றுப்படி வாள்வலந்தர என்று இதனைச் சேர்ந்து கூறினால் வாண்மேற்சென்று என்ற பொருளைத் தருவதால் செய்யுளின் உண்மை பொருள் மாறுபடுகிறது. இவ்வாறு வாள் என்பதை அசை கூனாகக் கொள்ள வேண்டிய காரணத்தை விளக்குகிறார்.

மேலும் இலக்கணச் சூடாமணி உரையாசிரியர் மட்டும் ஆசிரியப்பா, கலிப்பா ஆகிய பாக்களில் செய்யுள் முதலில் மட்டும் கூன் இடம் பெறும் என்று கூறியதற்கு மாறாக இவற்றின் இடையிலும் கூன் இடம் பெறும். அது சீர் கூனாக மட்டும் வரும் என்று கூறுகிறது. ஆனால் அவற்றிற்கான சான்றுகளைக் கூறவில்லை.

கூன் – தனிச்சொல்

தனிச்சொல் கூன் இரண்டையும் ஒன்றாக எண்ணி மயங்கிய நிலை இடைக்காலத்தில் ஏற்பட்டுள்ளது.

தொல்காப்பியம் கூன் என்று தெளிவாகக் குறிப்பிட பிற்கால இலக்கண நூல்கள் தனிச்சொல் என்ற சொல்லைக் கூன் என்ற இலக்கணத்திற்குப் பயன்படுத்தியுள்ளது. காரணம் தொல்காப்பியம் கலிப்பா உறுப்பான தனிச்சொல் பற்றி விளக்கம் அளித்த நிலையில் வஞ்சிப்பா தனிச்சொல் பெற்று சுரிதகத்தால் முடியும் என்று கூறவில்லை. பிற்காலத்தில் தான் வஞ்சிப்பாவிற்கு இந்த இலக்கணம் கூறப்பட்டது. எனவே இங்கு தான் வஞ்சிப்பாவில் தொல்காப்பிய காலத்தில் வழங்கிய கூனும் பிற்காலத்தில் கலிப்பா உறுப்பு போன்று வஞ்சிப்பாவிலும் தனிசொல் இடம்பெறும் என்ற நிலை ஏற்பட்ட போது தனிச்சொல்லும் கூனும் ஒன்று என்ற நிலை ஏற்பட்டிருக்ககூடும் என்று எண்ணத் தோன்றுகிறது. தொல்காப்பிய காலத்தில் வழங்கிய வஞ்சிப்பா வடிவங்களில் இடம்பெறும் கூனைத் தனிச்சொல்லாகக் கொள்வதினால் இந்தச் சிக்கல் ஏற்பட்டிருக்கலாம். யாப்பருங்கலம் ஒழிபியல் பகுதியில் கூனிற்குரிய இலக்கணத்தை எடுத்துரைத்த போதிலும் தனிச்சொல் என்ற சொல்லைத் தான் பயன்படுத்தியுள்ளது.

அடிமுதற் பொருள்பெற வருவது தனிச்சொல் அஃ
திறுதியும் வஞ்சியுள் இயலும் என்ப

யாப்பருங்கலம் தனிச்சொல் என்று கூற காரணம் இடைக்காலத்தில் உருவான காக்கைபாடினியம் முதலான இலக்கண நூல்கள் தொல்காப்பியத்தில் இருந்து பல கூறுகளில் விலகியிருப்பது போல இந்த கூன் குறித்த சிந்தனையிலும் தொல்காப்பியம் கூறும் அதே பொருளை எடுத்துரைத்த போதிலும் தனிச்சொல் என்ற பெயரைச் சூட்டுகின்றனர்.

உறுப்பிற் குறைந்தவும் பாக்கண் மயங்கியும்
மறுக்கப் படாத மரபின வாகியும்
எழுவாய் இடமாய் அடிப்பொருள் எல்லாம்
தழுவ நடப்பது தான்றனிச் சொல்லே

என்று காக்கைபாடினியமும்

தனிச்சொல் என்ப தடிமுதற் பொருளோடு
தனித்தனி நடக்கும் வஞ்சியுள் ஈறே

என்று சிறுகாக்கைபாடினியமும் இலக்கணம் கூறி தனிச்சொல்லைப் பயன்படுத்துவதன் மூலம் இடைக்காலத்தில் தான் தனிச்சொல், கூன் இரண்டும் ஒரே பொருளில் வழங்கும் நிலை ஏற்பட்டுள்ளது என்பது தெளிவாகிறது. கூனையும் தனிச்சொல்லையும் ஒரு பெயராலேயே வழங்கும் இம்முறை இரண்டிற்குமான பொருள் மயக்கத்தைத் தோற்றுவிப்பதையும் பொருளோடு தொடர்புடையதற்குக் கூன் என்ற சொல்லாட்சியே பொருத்தமானதாக இருக்கும் என்பதையும் விசு. பழனியப்பன்,
பின் வந்தோர் கூன் எனக் குறிக்காது தனிச்சொல் என ஏன் குறித்தனர். நால்வகைப் பாக்களிலுமே ஓரடியுள் அமையும் சீர்களுக்கு மேலே தனியாக வருவது கூன். யாப்பமைப்புட்பட்டு ? வாராமையின் அஃது அசையா, சீரா எனத் தேவையற்ற விளக்கம் கூறாமல் தனியே ஒரு சொல் நீர்மையில் நிற்பதனால் தனிச்சொல் எனக் குறித்தனர். அச்சொல்லினுடைய பகுதிகள் அடுத்த சீரில் வகையுளியாகக் கூட வாராமல் அமைதலே கூன் என்பதாகும். எனவே அதனைத் தனிச்சொல் என்றனர். தனிசொல் எனப் பின்னையோர் குறியிட்டமை காரணக் குறியாய்ப் பொருந்துமெனினும், வெண்பா, கலிப்பா, என்றிவற்றில் வரும் தனிச்சொல் என்னும் உறுப்பினின்றும் வேறுபடுவதால் பொருள் மயக்கந் தருமாதலால் Ôகூன்Õ என்பதனையே குறியீடாகக் கொள்வது ஏற்புடையதாகும்.
என்று விளக்குகிறார்.
பாக்களில் கூன்

நான்கு பாக்களிலும் இடம்பெறும் கூனின் இடம் குறித்தும், வரும் முறை குறித்தும் பின்வருமாறு காணலாம்.

வஞ்சிப்பாவில் அசை கூன்

அடி, அதர்சேறலின் அகஞ்சிவந்தன (வஞ்சியடி)

மா, வேயெறிபதத்தா னிடங்காட்ட (வஞ்சியடி)

மண்கொண்ட குழிக் குவளைபூக்குந்தண் (வஞ்சியடி)
சோணாட்டுப் பொருநன்

கலங்கழாலிற் றுறை கலக்கானா (வஞ்சியடி)

மாவழங்கலின் மயக்குற்றன வழி (வஞ்சியடி)

தேனாறுபூந் தெரிகுவளை மிசை (வஞ்சியடி)

இவற்றில் அடி, மா என்பவை முதற்கண் கூனாகவும் குழி, துறை என்பவை இடைக்கண் கூனாகவும் வழி, மிசை என்பவை கடைக்கண் கூனாகவும் வந்தள்ளன.

வஞ்சிப்பாவில் சீர் கூன்

அதற்கொண்டு, கலங்கொண்டன கள்ளென்கோ
காழ்கோத்தன சூட்டென்கோ

வேந்து, வேல்வாங்கி வியந்துருத்தலின்

தெருவு, தேரோடத் தேய்ந்தகன்றன

இவற்றில் அதற்கொண்டு, வேந்து, தெருவு என்பவை சீர்கூனாக வந்துள்ளன.
வேந்து, தெருவு நேரபசை, நிரைபசை என்ற தொல்காப்பிய அசை வகைகளைக் கொண்டு பொருத்தி பார்ப்போமாயின் இவை இரண்டையும் அசை கூன் என்று கூறலாம்.

வெண்பாவில் சீர் கூன்

உதுக்காண், சுரந்தானா வண்கைச் சுவரன்மாப் பூதன்
பரந்தானாப் பல்புகழ் பாடி – இரந்தார்மாட்
டின்மை அகல்வது போல இருணீங்க
மின்னும் அளித்தோ மழை

என்ற இவ்வெண்பாவில் உதுக்காண் என்பது சீர் கூன் பயின்றுவந்துள்ளது.

ஆசிரியத்தில் சீர் கூன்

அவரே, கேடில் விழுப்பொருள் தருமார் பாசிலை
வாடா வள்ளியங் காடிறந் தோரே
யானே, தோடார் எல்வளை நெகிழ நாளும்
பாடமை சேக்கையிற் படர்கூர்ந் திசினே
அன்னள் அளியள் என்னாது மாமழை
இன்னும் பெய்ய முழங்கி
மின்னும் தோழி என்னுயிர் குறித்தே

என்ற குறுந்தொகை பாடலில் அவரே, யானே என்பவை சீர்கூனாக வந்துள்ளன.

வடாஅது, பனிபடு நெடுவரை வடக்கும் தெனாஅது
துருகெழு குமரியின் தெற்கும், குணாஅது
கரைபொரு தொடுகடற் குணக்கும், குடாஅது
தொன்றுமுதிர் பௌவத்தின் குடக்கும், கீழது
முப்புணர் அடுக்கிய முறைமுதற் கட்டின்
நீர்நிலை நிவப்பின் கீழும் மேல
(புறம் 6. 1-6)
ஆசிரியப்பாவில் வடாஅது என்பது உகர ஈறாய் நேரீற்று இயற்சீர்க் கூனாக வந்துள்ளது. ஆசிரியப்பாவில் இவ்வகையில் அமைந்த கூன் அருகியே நிலையிலே காணப்படுகிறது.

கலிப்பாவில் சீர் கூன்

உலகினுள், பெருந்தகையார் பெருந்தகைமை பிறழாவே பிறழினும்
இருந்தைய இறுவரைமேல் எரிபோலச் சுடர்விடுமே
சிறுதகையார் சிறுதகைய சிறப்பெனினும் பிறழ்வின்றி
உறுதகைமை உலகினுக்கோர் ஒப்பாகித் தோன்றாதே

என்ற இக்கலியடி முதற்கண் உலகினுள் என்ற சீர் கூன் வந்துள்ளது.

தொல்காப்பியம் சீர் கூன் பற்றி குறிப்பிடுகையில் சீர் கூன் நேரடிக் குரித்தே என்று கூறுகிறது. இதனால் வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா ஆகிய மூன்று பாக்களில் மட்டும் சீர்கூன் வரப்பெறும் என்பது பெறப்படுகிறது. ஆனால் பிற்கால இலக்கணிகள் வஞ்சிப்பாவிலும் சீர் கூன் வரப்பெறும் என்பதாக இலக்கணம் கூறி சான்று காட்டியுள்ளனர்.

வஞ்சிப்பாவில் கூனும் தனிச்சொல்லும்

உலகே, முற்கொடுத்தார் பிற்கொளவும்
பிற்கொடுத்தார் முற்கொளவும்
உறுதிவழி ஒழுகுமென்ப
அதனால்
நற்றிறம் நாடுதல் நன்மை
பற்றிய யாவையும் பரிவறத் துறந்தே

இவ்வஞ்சிப்பாவில் உலகே என்பது சீர்கூனாகவும் அதனால் என்பது தனிச்சொல்லாகவும் இடம்பெறுவதைக் காணலாம். தனிச்சொல் பெற்று நேரிசை ஆசிரிய சுரிதகத்தால் அமைந்த வஞ்சிப்பா.

இலக்கியங்களில் கூன் பெறும் இடம்

பக்தி இலக்கியங்களில் தோற்றம் பெற்று பிற்காலத்தில் தனி இலக்கிய வகையாக வளர்ச்சி பெற்ற அடிமுதல் முடிவரை அல்லது முடிமுதல் அடிவரை உடல் உறுப்புகளை வருணித்துக் கூறும் பொருண்மையுடன் அமைந்த இலக்கியங்கள் பாதாதிகேசம், கேசாதிபாதம் என்பன. உறுப்பு நலன்களை விரித்துக் கூறும் பொருண்மையில் அமைந்த இவ்விலக்கியங்களில் உறுப்புகள் முறையாக வருவதற்குக் கூன் பயன்படுகிறது என்பதை ந.வீ.செயராமன் கூறுகின்றார். இது குறித்து வேறு எந்தத் தகவலும் இல்லாத நிலையில் இதனை ஆய்வுக்குரிய பகுதியாகக் கொள்ளலாம்.

இலக்கியங்களில் கூன் குறித்த ஆராய்ச்சிகள்

மா.இளையபெருமாள் புறநானூற்றில் கூன் என்ற ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அவர் புறநானூற்று பாடல்களில் 81இடங்களில் கூன் வருவதாக ஆராய்ந்து குறிப்பிடுகிறார். சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கியத்துறையில் புறநானூற்று யாப்பியல் குறித்த ஆய்வை மேற்கொள்ளும் அ.சதீஷ் அவர் கூறியதில் இருந்து மாறுபட்டு 82இடங்களில் கூன் வருவதாகக் குறிப்பிடுகிறார். இலக்கியங்களில் கூன் குறித்த ஆய்வுகள் வேறு எதுவும் நடந்ததாகத் தெரியவில்லை.

கூனைச் சரியாக இனங்காண முடியுமா என்ற கேள்வி எழுகிறது. பொருண்மையோடு சம்பந்தப்பட்ட இந்த கூன் தனிச்சொல்லாக வருமிடத்திலும், புணர்ச்சி விதியால் சேரும் போது பொருண்மை மாறுபட்டு நிற்கும் போதும் கூனாகக் கொள்ளப்படுகிறது. கூன் குறித்த முழுமையான ஆய்வுகள் இன்னும் சரிவர நிகழவில்லை. இவ்வாறு இலக்கண நூல்களில் இடம்பெறும் ஒழிபியல் செய்திகள் பல கவனம்பெறாமலே இருப்பது குறிப்பிடத்தக்கது.

Series Navigation