யானையப் பற்றிய ஆய்வுக்கட்டுரையும் அதன் எதிர் வினைகளும்!

This entry is part [part not set] of 50 in the series 20040812_Issue

பாமர முஸ்லிம்


திருவாளர் ஜெர்ரி டாமுக்கு மாலைக்குருடு. அதாவது மாலை ஆறு மணிக்கு மேல் கண் தெரியாது. அன்னாருக்கு ரொம்ப நாளாக ஒரு ஆசை, இந்த யானை, யானை, என்று சொல்கிறார்களே அந்த மிருகத்தை ஒரு தரமாகவாவது நேரில் பார்த்துவிட வேண்டும் என்று. அவரது ஆசையை அறிந்த அவரது நண்பர் ஒருவர் ஜெர்ரியை ஒரு மிருகக் காட்சி சாலைக்கு அழைத்துச் சென்றார். துரதிருஷ்டவசமாக ஜெர்ரி யானை இருக்குமிடத்தை அடைந்தபோது ஆறு மணிக்கு மேலாகி விட்டது! அதற்காக மனம் தளர்ந்து விடாத ஜெர்ரி தன்னை யானைக்கு அருகே அழைத்துச் செல்லும்படி கேட்டுக்கொண்டார். நண்பரும் அவரது விருப்பத்தை நிறைவேற்றினார்.

கண்ணுக்கு எட்டாதது கைக்காவது எட்டியதே என்ற சந்தோஷத்தில் யானையை நன்றாக தடவிப்பார்த்தார் ஜெர்ரி. அவருக்கு அது ஒரு கடினமான தூணைப்போல் தெரிந்தது. காரணம், அவர் தடவிப்பார்த்தது யானயின் பின்னங்கால்களை! அவ்வாறு அவர் செய்த போது, யானை தனது வாலை சிறிது அசைக்க, அது ஜெர்ரியின் முகத்தில் வந்து மோதி விட்டது. ஜெர்ரிக்கு யானை ஒரு விளக்கு மாற்றால் தனது முகத்தில் மொத்தி விட்டதைப்போல் தோன்ற, மிக அதிர்ச்சி அடைந்தவராக அந்த இடத்தை விட்டு நகர்ந்து விட்டார்.

தான் பெற்ற இந்த அனுபவத்தை உலகத்தாரோடு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற பேராவலில், அடுத்த நாள் கண் நன்றாக தெரிந்து கொண்டிருந்த சமயத்தில், யானையைப் பற்றிய தனது ஆய்வுக் கட்டுரையை இணையத்தின் முலம் உலகத்தாருக்கு சமர்ப்பித்தார் திருவாளர் ஜெர்ரி. அந்த கட்டுரையின் சுருக்கம் இதுதான், “யானை என்பது ஒரு தூணப்போல உருளையான ஒரு வஸ்து. அது விளக்குமாற்றைப்போல ஒரு ஆயுதத்தையும் வைத்திருக்கிறது”.

இந்த கட்டுரையை இணையத்தில் படித்த திருவாளர் கோண புத்தியார் தமிழகத்தில் உள்ள பாமரர்களும் இதனால் பயன் பெறட்டுமே என்ற எண்ணத்தில் அதை உடனே தமிழாக்கம் செய்து ‘தாழ்வாரம்.காம்’-ல் வெளியிட்டார். கட்டுரையாளரை அவர் இவ்வாறு அறிமுகம் செய்து வைத்தார்: ‘திருவாளர் ஜெர்ரி டாம் ஒரு சிறந்த அறிஞர். அறிவியல் கண்டுபிடிப்பாளர். அகில உலக சமாதான நிறுவனத்தில் அரும்பணி ஆற்றியவர் (அந்நிறுவனத்தில் செடிகளுக்கு நீர் ஊற்றும் சேவையை சுமார் முப்பது நாட்களுக்கு மேலாக செய்துள்ளார்). பேரிக்க நாட்டு அதிபருக்கு நெருக்கமான ஆலோசகராகவும் பணி புரிந்துள்ளார் (அதிபர் ஒன்றாம் வகுப்பு படித்தபோது எந்த உணவகத்தில் பர்கர் சுவையாக இருக்கும் என்று அவருக்கு ஆலோசனை கூறியதாக தெரிய வந்துள்ளது). அதிபர் தேர்தல் பிரச்சாரத்தின் போது திருவாளர் ஜெர்ரியை பார்த்து கையசைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தக்கட்டுரை வெளியானதைத் தொடர்ந்து வந்த விமர்சனங்களும், எதிர் வினைகளும்:

வாசகர் 1: “இது முட்டாள் தனமான கருத்தை கொண்டிருக்கிறது. கோண புத்தியார் இதை தமிழாக்க வேண்டிய அவசியம் என்ன ? இவர் கரடியை வளர்த்து அதை மற்றவர்கள் மீது ஏவும் கூட்டத்தை ஆதரிப்பவர் போல் தெரிகிறது”

கோண புத்தியாரின் பதில்: “யானை அபாயகரமான ஆயுதங்களை கொண்ட ஒரு மிருகம் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. யானை ஆதரவாளர்களுக்கு இதை சொன்னால் பிடிப்பதில்லை. நான் எதையுமே குதர்க்க புத்தியுடன் பார்ப்பவன் என்பதை குறிக்கும் வகையில் ‘கோண புத்தியார்’ என்று புனை பெயர் வைத்திருந்தும் என்னை ‘கரடி ஆதரவாளர்’ என்று சொல்கிறார்களே!”

வாசகர் 2: “எதையுமே குதர்க்க புத்தியுடன் பார்க்கும் கோண புத்தியாருக்கு, அவருக்கு மிக அருகில் நிற்கும் கரடி தெரியாமல் போனதேன் ?”

வாசகர் 3: “கரடிக்கு கோரமான பற்களும் கூரிய நகங்களும் இருப்பது உண்மைதான். இதிலென்ன தவறு இருக்கிறது ? யானையப்பற்றி கோண புத்தியார் சொல்வது அவ்வளவும் உண்மைதான். இதற்கு மேல் யாராவது கரடியைப் பற்றி கேள்வி மேல் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தால்.. நான் ஆய்வுக்கட்டுரை எழுதப் போய்விடுவேன். அப்புறம் ஆறு மாதத்திற்கு யாருக்கும் எதற்கும் பதில் சொல்ல மாட்டேன்”

கோண புத்தியாரின் பதில்: “யானையப் பற்றிய ஆராய்ச்சி உண்மைகளை ஒப்புக்கொள்ளும் மனப்பக்குவம் யானை ஆதரவாளர்களுக்கு இல்லை. இருந்தாலும் நான் விடப்போவதில்லை. ஜெர்ரியைப் போன்ற இன்னொரு ஆய்வாளர், யானையைப் பற்றி ஆய்வு மேற்கொண்டிருந்த போது அந்த யானை அவரை காலால் எத்தி விட்டது. அதைப்பற்றி அவர் வெளியிட்ட ஆய்வுக்கட்டுரையை விரைவில் தமிழாக்கம் செய்ய உள்ளேன்!”

இதையெல்லாம் தொடர்ந்து படித்து வந்த ‘தாழ்வாரம்.காம்-ன் ஆசிரியர், தன் இணையப் பக்கத்தின் பெயரை மாற்றி விட்டு இனி ரஷ்ய மொழியில் இணையப்பத்திரிக்கை நடத்தலாமா என்று யோசித்துக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

paamara_muslim@yahoo.com.sg

Series Navigation

பாமர முஸ்லிம்

பாமர முஸ்லிம்