யமேய்க்கனுடன் சில கணங்கள்!

This entry is part [part not set] of 45 in the series 20060120_Issue

வ.ந.கிரிதரன்


வெகு சாதாரணமாக நிகழ்ந்து விடும் சில சந்தர்ப்பங்களில் வெகு அசாதாரணமான நிகழ்வுகள் சில வேளைகளில் நடந்து விடுகின்றன என்பதைப் பலர் உங்களது நிஜ வாழ்வில் பலமுறை அவதானித்திருப்பீர்கள். நான் அவனைச் சந்தித்ததும் அத்தகையதொரு சாதாரண சந்தர்ப்பத்தில் ஏற்பட்ட தற்செயலான நிகழ்வுகளிலொன்றே. வானமிருண்டு, இடியும் மின்னலுமாய்க் காலநிலை குதியாட்டம் போட்டபடியிருந்ததொரு சந்தர்ப்பத்தில், தற்செயலாகப் பொத்துக் கொண்டு பெய்யத்தொடங்கிய மழையிலிருந்து தப்புவதற்காகத் தற்செயலாக மழைக்கு ஒதுங்கியதொரு நகரின் கட்டத்தின் முகப்பொன்றின் கீழ் தான் தற்செயலாக அவனைச் சந்தித்தேன். அந்தச் சாதாரண சந்திப்பு எவ்வளவு மகத்தானதென்பதைப் பின்னர் தான் புரிந்து கொண்டேன். கறுப்பர்கள் என்று வெகு இளக்காரத்துடன் உரையாடல்களில் அடிக்கடி குறிப்பிட்டுக் கொண்டே மனித உரிமைக்காக நடைபெறும் ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்டு கண்ணீர் வடிக்கும் பலரில் அடியேனும் ஒருவன். அதன் விளைவாகக் கறுப்பினத்தவர்களில் யாரைக் கண்டாலும் ஒரு இளக்காரமான சிந்தனை கலந்த உணர்வு ஏற்பட்டு விடுவது வழக்கம். பகுத்தறிவினை மீறிச் செயற்படும் ஆழ்மனதின் சித்து விளையாட்டுகளில் இதுவுமொன்று.

அந்த யமேய்க்கன் மிகவும் நேர்த்தியாக ஆடை அணிந்திருந்தான். கறுப்புக் கால்சட்டையும், மெல்லிய வெளிர் நீல நிறத்தில் மேற்சட்டையும் அணிந்திருந்தான். சவரம் செய்யப்பட்ட சுத்தமான முகம். மழைக்கு ஒதுங்கிய என்னைப் பார்த்ததும் அவன் கீழ்க்கண்டவாறு வினா தொடுத்து வரவேற்றான்:

‘நல்வரவு நண்பனே! நீயும் என்னைப் போல் தான் போதிய ஆயத்தமில்லாமல் புறப்பட்டு விட்டவர்களில் ஒருவன் தான் போலும். இந்த விடயத்தில் நாங்களிருவருமே ஒரே படகில் பயணிப்பவர்கள் தான். ‘

‘உண்மைதான் நண்பனே! கனடாவைப் பொறுத்தவரையில் இந்தக் காலநிலையினை உறுதியாக எதிர்வு கூறுவது அண்மைக்காலமாகவே கடினமாகிக் கொண்டு வருவதை நீ அவதானித்தாயா ? ‘ என்று அவனுடனான எனது சம்பாஷனையினைத் தொடர்ந்திட அடி போட்டு வைத்தேன். அதை எதிர்பார்த்திருந்தவன் போல் உடனடியாகவே அவன் தொடர்ந்து பேச ஆரம்பித்தான்.

‘எல்லாம் மனிதர்களாகிய நாம் இந்தச் சூழலுக்கு இழைக்கும் அநியாயம் தான். இல்லையா ? இப்படியே போனால் விரைவிலேயே நாமும் டைனசோர் போன் வழியில் போய் விட வேண்டியது தான். என்ன சொல்லுகிறாய் ? ‘

‘உனது கூற்றினைப் பார்த்தால் நீ சூழலில் மிகவும் அக்கறையுள்ளவனைப் போல் தென்படுகிறாய் ? ‘ என்றேன்.

‘அதிலென்ன சந்தேகம். நான் மட்டுமல்ல, இந்தப் பூவுலகில் உள்ள ஒவ்வொருவருமே இந்த விடயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் தான். அதிலென்ன சந்தேகம் ? ‘ என்று பதிலிறுத்துச் சிறிது சிந்தனையில் மூழ்கினான். மேலும் எனது பதிலெதனையும் எதிர்பார்க்காமல் அவனே தொடர்ந்தான்.

‘ பார். இந்த மேற்குலகே கட்டடங்களால் நிறைந்திருப்பதை. எங்கு பார்த்தாலும் காங்ரீட் வனங்கள். வீதிகளெங்கும் மில்லியன் கணக்கில் வாகனங்கள் புகை கக்கியபடி. ஆனால் வறிய மூன்றாவதுலக நாடுகள் காடுகளை அழித்தால் சூழலுக்கு ஆபத்தென்று பெரிய கூப்பாடு. மேற்கு நாடுகள் சூழலுக்கு விளைவிக்கும் அசுத்தம் இருக்கிறதே. யார் அதைக் கேட்பது. இங்கிருந்து சூழலை அழித்துக் கொண்டே வறிய நாடுகளின் காடுகளைப் பேணிட வேண்டுமாம். மூன்றாம் உலக நாடுகள் மேல் தொடுக்கப்படும் யுத்தங்களில் பாவிக்கபப்டும் நவீனரக ஆயுதங்களால், அழிவுகளால் சூழல் எவ்வளவு தூரம் பாதிக்கப்படுகிறது. யார் இதைத் தட்டிக் கேட்பது ? ‘

யார் இதைத் தட்டிக் கேட்பது ? இந்த அவனது கேள்வி என்னைப் பெரிதும் சிறிது நேரம் ஆட்கொண்டது. ஒவ்வொரு சிறிய மனித உரிமை மீறலுக்கும் பொங்கியெழுந்த மனது, புதிய சூழலின் அநீதிகளுக்கெல்லாம் இசைந்து போனால் போகிறதென்று ஆகி விட்டது போல் தெரிகிறது. வந்த இடம் சொந்தமில்லாதவிடத்தில் இந்த இடத்தில் எது நடந்தாலென்ன என்று நரம்புகள் தளர்ந்து போய் விட்டனவா ? அல்லது இதெல்லாம் நானே வலிந்து வரவழைத்துக் கொண்டது தானேயென்ற எண்ணத்தின் ஆதிக்கமா ?

‘நண்பனே! போகிற போக்கினைப் பார்த்தால் இஸ்லாமுக்கும் , கிறித்துவத்துக்குமிடையில் நடைபெறும் யுத்தமாக யுத்தங்கள் விரிவடைந்து போவதை நீ உணர்கின்றாயா ? யுத்தங்களுக்கெல்லாம் தாயான யுத்தத்தினை நீ இனிமேல் தான் பார்க்கப் போகின்றாய். எதற்கும் நாமெல்லாரும் இங்கு கவனமாகத் தானிருக்க வேண்டும் ‘ என்றான்.

‘நண்பனே! நீ நன்கு சிந்திக்கின்றாய். இந்த உலகில் யுத்தம் இல்லாவிட்டால் எவ்வளவு நன்றாகவிருக்கும். யுத்தமில்லாத பூமி வேண்டும் நண்பனே! ‘

‘உனக்குத் தெரியாது….நீ இங்கு எவ்வளவு காலம் இருக்கிறாயோ தெரியாது. ஆனால் நான் இங்கு வந்து சரியாக முப்பது வருசங்களைத் தாண்டி விட்டது. பலவற்றை நான் அறிந்து கொண்டுள்ளேன். அவற்றின் அடிப்படையில் நான் என் சிந்தனையினை வளர்த்துக் கொண்டிருக்கின்றேன். அது தவிரப் பெரிதாகப் பள்ளிப் படிப்பேதுமில்லை. இன்னும் என்னைப் பார்த்து ‘எங்கிருந்து வந்திருக்கிறாய் ? ‘ என்று தான் கேட்கிறார்கள். நேற்றுப் பிறந்த பயல்களிருவர் அவ்விதம் தான் நேற்று என்னிடம் கேட்டார்கள். அவர்களுக்கு நான் என்ன சொன்னேன் தெரியுமா ? ‘ என்று நிறுத்தினான்.

‘என்ன சொன்னாய் ? ‘ என் குரலில் விடை ஓரளவு தெரிந்திருந்தும் ஒருவித ஆவல் தொனித்தது. எப்பொழுதுமே புதிர் ஒன்றினை எதிர்நோக்கும் போது எழும் வழக்கமான ஆவல் தான்.

‘நான் இத்தகைய கேள்விகளை எதிர்நோக்கும் போது இப்பொழுதெல்லாம் முன்பு போல் உடனடியாக ஆத்திரப்படுவதில்லை. இந்த விடயத்தில் என் மனது மிகவும் பக்குவமடைந்து விட்டது. நான் கேட்டேன்: ‘பையன்களா உங்களுக்கென்ன வயது ? ‘. அதற்கு அவர்களிலொருவன் கூறினான்: ‘ஏன் கேட்கிறாய் ? இருந்தாலும் அதனை அறிவது எமது கேள்விக்குரிய விடையினை அறிவதற்குதவுமென்றால் கூறுகின்றேன்… வருகிற நவம்பரில் எனக்கு இருபது முடிகிறது. அவனது வயதினை நீ அவனிடமே கேட்டுக் கொள் ‘. அதற்கு நான் கூறினேன்: ‘ அது போதுமெனக்கு. ‘ பின்னர் கேட்டேன்: ‘ உங்களுக்கு இந்த மண்ணுடன் இருக்கும் சொந்தத்தினை விட எனக்கு பத்து வருடம் அதிகமான சொந்தமுண்டு. இந்த நிலையில் என்னை விட உங்களுக்கு அப்படியென்ன அதிகமான உரிமை இருக்க முடியுமென்று இவ்விதமொரு கேள்வியினை நீங்கள் கேட்கலாம். நான் கேட்கிறேன். பையன்களே நீங்களிருவரும் எங்கிருந்து வருகிறீர்கள் ? ‘. இருவருமே எவ்விதம் ஆடிப்போய் விட்டார்கள் தெரியுமா ? ‘ இவ்விதம் கூறி விட்டு அந்த யமேய்க்கன் பெரிதாகச் சத்தம் போட்டுச் சிரிக்க ஆரம்பித்தான். பொதுவாகவே அதிகமான கறுப்பினத்தவர் இவ்விதமாக உரையாடல்களின் போது பெருங்குரலில் சிரித்து ஆனந்தமாக உரையாடலினை வளர்த்துச் செல்வார்கள். இவனும் இதற்கு விதிவிலக்கானவல்லன்.

பிறகு கூறினான்: ‘உன்னைப் பார்த்தால் கிழக்கு இந்தியனைப் போன்றிருக்கிறாய். நான் வந்திருந்த பொழுது இருந்த நிலைமையே வேறு….காக்ஸ்வெல்/ஜெராட்டிலிருக்கும் சின்ன இந்தியாவிலுள்ள பழைய கடைக்காரர்களைக் கேட்டால் அறிந்து கொள்வாய். கடைகளுக்கெல்லாம் கல்லாலெறிவார்கள். கீழத்தரமாக எழுதி வைப்பார்கள். பத்திரிகைகளில் ஒவ்வொரு முறை யமேய்க்கர்கள் பற்றிய செய்திகள் வரும் பொழுது எவ்வளவு சிரமமாக இருக்கிறது தெரியுமா ? முழு யமேய்க்கச் சமூகமுமே சமுக விரோதக் கும்பல் போல் பலரும் நினைத்து விடுகிறார்கள். ஆனால் அதே சமயம் என்னை எடுத்துக் கொள். இத்தனை வருடத்தில் நான் எந்த விதமான தப்பும் இந்த மண்ணில் செய்ததில்லை. கடுமையாக உழைத்து வாழ்ந்து வருகிறேன். ஆனால் பலர் எவ்விதம் நினைத்து விடுகிறார்கள் ‘

அவன் குரலில் தொனித்த கவலை எனக்குப் புரிந்தது. நெஞ்சில் ஆழமாக உறைத்தது. என் இயல்பு கூட இதற்கு விதிவிலக்கல்ல என்று கூறிவிட நினைத்துக் கூறாமல் அவனது பேச்சினைச் செவிமடுத்திருந்தேன். இந்தக் கணத்தில் கூட நான் ஏன் அவனிடம் உண்மையாக நடந்து கொள்ள முயலவில்லை என்று என்னை ஒருமுறை கேட்டுக் கொண்டேன். என் குற்றத்தினை ஒப்புக் கொண்டு நானென்ன மகாத்மாவாகவா ஆகி விடப் போகின்றேன். உணர்ந்து கொண்டேன். அதனை முரசடித்து அறிவிக்க வேண்டுமாயென்ன ? இப்பொழுது உங்களுக்கு விளங்கியிருக்கும் வெகு சாதாரணமாக நிகழ்ந்து விடும் சில சந்தர்ப்பங்களில் வெகு அசாதாரணமான நிகழ்வுகள் சில வேளைகளில் நடந்து விடுகின்றன என்பது. நான் அவனைச் சந்தித்ததும் அத்தகையதொரு சாதாரண சந்தர்ப்பத்தில் ஏற்பட்ட தற்செயலான நிகழ்வுகளிலொன்றே. வானமிருண்டு, இடியும் மின்னலுமாய்க் காலநிலை குதியாட்டம் போட்டபடியிருந்ததொரு சந்தர்ப்பத்தில், தற்செயலாகப் பொத்துக் கொண்டு பெய்யத்தொடங்கிய மழையிலிருந்து தப்புவதற்காகத் தற்செயலாக மழைக்கு ஒதுங்கியதொரு நகரின் கட்டத்தின் முகப்பொன்றின் கீழ் தான் தற்செயலாக அவனைச் சந்தித்தேன். அந்தச் சாதாரண சந்திப்பு எவ்வளவு மகத்தானதென்பதைப் பின்னர் தான் புரிந்து கொண்டேன்.

ngiri270$@rogers.com

Series Navigation