மௌனமாய் மரணிக்கும் கதைகள் ….

This entry is part [part not set] of 43 in the series 20110117_Issue

கலாசுரன்*
மனம் துவண்டுவிடாத
காலமொன்றின் நினைவுகள்
இறுக்கமாக மனதை
அணைத்துக் கொள்கின்றன

அந்த நினைவுகள்
இன்னும் இளமையாகவே
இருக்கின்றன

காலம்
எவ்வளவு வேகமாய்
உருண்டோடியிருக்கிறது
வீசிப்போன ஒரு தென்றலின்
ஸ்பரிசம் போன்றது அது.

அந்த
உயரமான பூவரசு மரத்தின்
வயது
என் இளமையின் இறுதியிலிருந்து
ஆரம்பித்த ஓன்று

இப்பொழுதும்
அதன் மேலான நினைவுகள்
அதன் கிளைகளில்
தாவி விளையாடுகின்றன

நடந்து சென்ற
அந்த ஒற்றையடிப் பாதையை
புற்கள் தின்ன
ஆரம்பித்திருக்கிறது

ஊன்றி நடப்பதற்கான
அந்த தடி
எப்போதும் என்னுடன்
பொடிநடை பழகவே
ஆசைப்படுகின்றது

சுவரோரமாய்க் கிடக்கும்
அந்த சாய்வு நாற்காலி
என்னையும்
என் சிந்தனைகளையும்
தாங்கிக்கொள்வதில்
ஒருபோதும்
மறுப்பு தெரிவித்ததில்லை

இந்தவிதமான
கதைகளைக் கேட்க்க
இந்த காகிதங்கள் தவிர
எவரும் விரும்புவதில்லை

அவைகளை சொல்வதற்கு
இந்தப் பேனாவும்
எந்த தயக்கமும்
இதுவரையிலும் காட்டிக்கொண்டதே இல்லை

என் இதழ்கள் மட்டும்
வெகு காலமாகப்
பேசிக்கொள்வது
மௌனித்த கற்பனைகளுடன் மட்டும்தான்

இனி என் பேனாவும்
ஊமையாகிவிடும்
என்
காகிதங்களும்
செவிடாகிவிடும்

கைகள் நடுங்க
ஆரம்பித்திருக்கின்றன ….!
*
***

கலாசுரன்.

Series Navigation

கலாசுரன்

கலாசுரன்