மோட்டார் பைக் வீரன்

This entry is part [part not set] of 28 in the series 20050916_Issue

வெங்கட்ராம கிருஷ்ணகுமார்


மோட்டார் பைக்கில் ஒரு கிக் ஸ்டார்ட் செய்து ‘உர் ‘ ரென்று உறும காலைத் தூக்கிப் போட்டு ஜீன்ஸ் பேண்ட், ஷூ சகிதமாக, ஒய்யாரமாக சென்னையில் கடற்கரைச் சாலையில் பவனி வந்தால், அது ஒரு சொர்க்கம் என்று அனைத்து இளைஞர்களுக்கும் தெரியும். ரோட்டில் போகும் வாகனங்களினால் அடித்து தெரிக்கும் சகதித் துளிகளைத் தன்னே தாங்கி, விழுப்புண்கள் போன்று ‘பொட்டு பொட்டாக் ‘த் தெரியும் சட்டை, மற்றும் கால்சட்டை (பேண்ட் தான்) போட்டால் ஒரு ‘கிளேடியேட்டர் ‘ போன்று வீரனாகக் காட்சியளிப்பதாக தன்னை நினைப்பதுண்டு.

ஆனால் நிசமாகவே லாரிகளின் சக்கரங்களுக்கு அருகே – 5 மிமீ இடைவெளியில் ‘விர் ‘ ரென்று நுழைந்து இடது பக்கம் ஒடித்து ‘ஓவர்டேக் ‘ பண்ணி லாரியின் முன்னால் சர்ரென்று பாய்ந்து முன்னிலைப் படும் போது ஆணின் ஈகோவிற்கு, மனதிற்குப் பெருமையாகப் படுகின்றது. பார்ப்பவர்கள் கண்களில் அது சிறுபிள்ளைத்தனமாக இருந்தால் அவர்களுக்கு ஒன்று பயம் அல்லது வயதாகி பிள்ளைக் குட்டிகள் இருக்கலாம்.

அதுவும் பின்னால் முதுகைக் கட்டிகொண்டு முயல் குட்டிகள் பொதிய பெண் நண்பர்கள் இருந்து விட்டால் போதும் ஹோண்டா வேண்டாம், ராஜ்தூத் (அந்த பைக்கெல்லாம் இன்னுமா ஓடுது ?)தைக் கூட முறுக்கி ஒரு கை பார்ப்போமில்லையா ?. இதுவே அமெரிக்காவாக, இருந்தால் வல்து பக்கம் ஒடித்து சீறிப் பாயும் 40 அடி நீள வெள்ளை டிரக்குகளின் முன்னால் டபாய்க்கலாம். சில சிமயம் ஹெல்மெட் போடும் அப்பிராணிகளைப் பார்த்தால் ஏளனம் செய்யத் தூன்றும். பைக் ஓட்டுவதற்குப் பதில் ஹெல்மெட் போட்டு, டிவிஎஸ் 50 ஓட்டி பள்ளிக்குப் படிக்க அல்லது ஆசிரியராகப் போகலாம். வண்டி ஓட்டும் போது வாலிபத்தின் அட்ரீனலின் உடம்பில் சுரக்க, காற்று நம் தலையின் முடியினை வருட, ஓங்கி உதைத்து பைக்கின் கிக் ஸ்டார்டடினை வதைத்து கிளட்சினை விட்டு பிடித்து, ஹேண்டில் பாரினை கையால் வருடி ஆக்சிலிரேட்டரை முறுக்கும் போது மிகுந்த போதை ஏற்படுகின்றது. தனியாக வேறு பீர் இறக்கினால், சென்னை வெயில் தெரியாமல் அனவரையும் முந்தி சொர்க்கலோகம் போகும் அவசரம் வருகின்றது. இதில் பக்கத்தில் பல்லவன் பஸ் (பேருந்து என்று பைக் ஓட்டுபவன் சொல்ல மாட்டான், ஏனென்றால் ‘பைக் ‘ ஓட்டுபவன் ‘கண்ட்ரி ஃபெல்லோ ‘ இல்லையாக்கும்!) வந்தால் போதும் , அதை ஜென்ம வைரியாகவே பாவிப்பான். பல்லவன் எதிரி நம்பர் 1. பல்லவன் டிரைவர்களும் (சேரன், சோழன், பாண்டியன் டிரைவர்களும் தான் – தமிழ் மன்னர்களைப் பற்றி படித்தது உதவியாக இருக்கின்றது) இந்த உதவாக்கரை விடலைகளை ஒரு நாளைக்கு ஆயிரம் தடவை பார்க்கின்றனர். அதில் ஒரு பத்து பேரைச் சாகடித்து எமனுக்கு வழியனுப்பிருக்கின்றனர். அருகே வந்து கவலைப்படாமல் இடது பக்கம் பஸ் ஸ்டாப் இருந்தால், பிரமாண்டமான வண்டியினைத் திருப்பி ஒரு நூறு ஆட்களுடன் பாங்கே ஒடித்து நிறுதிடுவர். அப்போது பின்புறம் சில பல பைக் வீரர்கள் மோதி நெல்லிக் காயகளாக விழும் காட்சிகள் பற்றி கவலையில்லை. முன்னால் பார்த்து மேலுலகம் அனுப்ப வேண்டிய பல வீரர்கள் இன்னும் பாக்கி இருக்கும் கவலை அவர்களுக்கு !

வீட்டில் காசுக்குப் பிடித்த கேடு என்று பைக் பெட்ரோல் செலவு பற்ற்றி பெற்றோர்கள் கூறக் கூடும். கனமாக பர்ஸ் வைத்திருக்கும் அப்பாக்களும், பிள்ளைகளுக்காகப் பணத்தைத் தண்ணியாக அள்ளியளிக்கும் செல்ல ‘அம்மா ‘க்களும் இருக்கும் வரைக்கும் கவலையில்லை. சொந்த சம்பாதித்யத்தில் பெட்ரோலை ரொப்பி (நிறப்பி என்று எழுத மன வரவில்லை!), பெட்ரோல் பங்கில் அதிசயமாக வேலை பார்க்கும் பெண்களிடம் ‘ஜொல் ‘ ஒழுக நூல் விட்டு, மகாபலிபுரம் வரைக்கும் ‘சும்மா ‘ ஒரு காலை ‘வாக் ‘ செய்வது போன்று ஓட்டிப் போய் வந்தால் உடம்புக்கு கேரளா சென்று ஆயுர்வேதச் சிகிச்சை செய்தது போல் உடம்பு இருக்கும். பைக்கில் பின்னால் உட்கார்வதற்கென்ற ‘பைக் பேபி ‘ கள் பலர் உண்டு. இவர்களுக்கு பின்னால் உட்கார்ந்து கம்பெனி கொடுத்து பர்ஸில் கை வைப்பது ஒரு வேடிக்கை. வீரர்களும் விழுந்து விழுந்து உபசரிப்பது நல்ல தமாஷாக இருக்கும். காலில் ஜீன்ஸ் போட்டு மேலில் சென்னை வெயிலில் (நவம்பர், டிசம்பரைத் தான் சொல்லுகின்றேன்) லெதர் ஜாக்கெட் போட்டுக் கொண்டு வாங்கிய நூறு சி.சி. பைக்கை ரேஸ் பைக்காக சென்னைத் தார் ரோடுகளில் பொகும் போது கொஞ்சம் பெருமையாக இருக்கின்றது. அருகே பெண்கள் ஸ்கூட்டியை, மற்றும் பைக்குகளை ஓட்டினால் தன் வீரத்தினைக் காண்பிக்க ஒரு சந்தர்ப்பம் வந்ததென்று கருதி நெளிந்து, ஒளிந்து, ஒடித்தது சர்க்கஸ் காட்டி பெண்களை மடக்குவர். பெண்களை மிரட்டுவர். பெண்களைத் துன்புறுத்துவர். வீரர்களுக்கு ஈடாக வீராங்கனைகள் பைக் ஒட்டி கையில் பெப்பர் ஸ்பிரே

இருந்தால் வீரர்கள் இடம் தெரியாமல் போய்விடுவர். உண்மையிலேயே வீரம் எதுவென்றால் சென்னையில் தேங்கிக் கிடக்கும் மழைத் தண்ணீரில் ஓடாமல் நின்று போய்விடும் பைக்குகளை மனிதக் கழிவுகள் மிதக்கும் குட்டைகள் வழியாக, முழங்கால் அளவு தண்ணீரில், தள்ளி காலாற நான்கு கி.மீ. நடப்பது தான்! முதுகு கழன்று விடும் இந்தச் செயலுக்கு சென்னை பைக் வீரர்களுக்கு அர்ஜுனா அவார்டு கொடுக்கலாம் தான்.

பைக்கில் மழைக்காலத்தில் திருப்பத்தில் சேறு வழுக்கி சென்னை ரோட்டை பதம் பார்த்திருக்கிறீர்களா ?. ஜீன்ஸ் பேண்ட் கிழிந்து, முழுக்கை சட்டை கிழிந்து தொங்கி கந்தர் கோலத்தில் பைக் கடையில் உடைந்த பைக்கை ரிப்பேர் கொடுத்துவிட்டு சத்தம் போடாமல் வீட்டுக்குள் வந்து புது உடை அணிந்து, ரிப்பேர் செய்த பைக்கினை எடுத்துக் கொண்டு கிளம்பும் வீரர்கள் பலர் உண்டு. வீட்டில் கேட்டால் கீழே விழுந்திட்டேன் என்று பொதுவாகச் சொல்லுவார்கள். சென்னை கார்ப்பரேஷனுடன் நடத்திய யுத்தத்தில் விழுப்புண்களை மறைக்கும் இவர் இவர்கள் வீரர்களே ! தாம்பரத்திலிருந்து பாரீஸ் கார்னருக்கு பைக்கில் ஒருருவித டென்ஷனுடன் லாரிகளுடன், பல்லவன்களுடன் முட்டி மோதி வந்து பிறகு பீச்சில் துறைமுகமருகில் பைக்கில் கொரியர் வேலை பார்ப்பது வீரச் செயல் தான் ! அதற்கு பரிசு இரவு வீடு திரும்பியவுடன் தலை முழுவதும் படர்ந்த சென்னை மாநகரத்துப் புழுதி தான். ‘சிக் ‘ ஷாம்பூ இவர்களால் தான் விற்பனையில் அதிகமாயிற்று.

முதல் முதலாக மனைவியாக வரப் போகிறவளுக்கு, காதலிக்கு, பைக்கில் ‘பிக் அப் ‘ பண்ணிய கேர்ல் ஃபிரெண்டுக்கு (இதற்கு ஆங்கிலம் தேவை) பைக்கில் பின்னால் உட்கார்ந்து சென்னையையேச் சுட்டிக் காட்ட ஆர்வம் வரும். அப்படியே மகாபலிபுரத்துக்கு கிழக்குச் சாலையில் ‘சிவ் ‘வென்று பறக்கத் தெரியும். சிலபேர் ஓவராக கியர் போட்டு, கிளட்சினைத் துவம்சம் செய்து விட்டுப் பிடித்து வண்டியைத் தூக்குவார்கள். மண்ணைக் கவ்வவும் செய்வார்கள். பின்னால் உட்காரும் பெண்களோ தலையில் முக்காடு போட்டு, ஹெல்மெட் போட்டுத் தங்கள் முகங்களை மறைத்து வீரருடன் பயணம் செய்வர். வீட்டில் தெரிந்தால் பின்னிடுவார்கள். இந்தப் பெரிசுகள் பைக்கை ஓட்டியிருக்கவே மாட்டார்களா ?.

ஒரு காலத்தில் தமிழர் பலர் குதிரைகள் பல கற்று திறம்பட காஞ்சியிலிருந்து குமரிவரை பவனி வந்ததுண்டு. இப்போது பல குதிரைத் திறன் மிக்க இன்ஜின்களைப் பார்த்து வாங்கி மகிழ்ச்சி அடைகின்றனர். அதில் பளபளக்கும் எக்ஸ்ஹாஸ்ட் (புகைபோக்கி) பைப்களைக் கொண்ட பைக் வீரருக்கு மிகவும் பிடிக்கும். சேலையில் பார்டர் ஜரிகை அதிகம் பார்க்கும் பெண்களைப் போல. போட்டு, துடை துடையென்று பைக்கினைக் கழுவார்கள். போட்டிருக்கும் ஜீன்ஸ் பேண்ட் எப்ப துவைத்ததோ ! காலில் போட்டிருக்கும் ஸாக்ஸ் எப்ப துவைத்ததோ ! வெள்ளை ஷூ இப்போது பழுப்பு நிறத்திலிருக்கும். இந்தியாவில் மட்டும் தான் சாணிக் கரை நல்ல ஷூக்களில் படிந்து இருக்கும். எனவே பச்சைக் கலரும் பழுபோடு மங்கி இருக்கும். ஷூவின் நாடா நைந்து போயிருக்கும். கால் நுனியில் கியர் போட்டு சிதைந்து காணப்படும். ஏன் தான் இப்படி கீழேயிருந்து மேலாக கியர் போடுகிறார்களோ ?. காலுக்கு ஒரு தொல்லை. முழங்கயில் அடிக்கடி காயம் படுவதால் நல்ல லெதர் ஜாக்கெட்டாகப் போடணும். சென்னை வெயிலில் அப்படிப் போடுபவர்களை முட்டாள்கள் எனக் கருதலாம்.

பைக்கில் போய் தி,நகரில் பார்க் பண்ண முடியாத ஜன சமுத்திரத்தில், ஒரு சந்தாகப் பார்த்து, நல்ல அழகாகக் கட்டப்பட்டிருக்கும் வீட்டின் காம்பவுண்டில் அனுமதியிலாமல் ‘பார்க் ‘ செய்யும் சுகம் இவ்வீரர்களுக்கே உரித்தானது. வெயிலில் சுட்டுப் போன பெட்ரோல் டாங்கின் மீது கைவைத்து கை வெந்து போனாலும் அதை அலட்சியம் செய்யும் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு மிக்க வீரர்கள் நம்ம பைக் வீரர்கள். தவறுதலாக ஹவாய் செப்பல்களோடு ஓட்டும் கால்களை சைலன்ஸ்ர்/எக்ஸ்ஹாஸ்ட் பைப்களில் தேய்த்து சுட்டுக் கொள்வதுண்டு. தோல் கருகி, காய்ந்து, உதிர்ந்து மீண்டும் சரி செய்ய நாட்களாகும். ஆனால் ‘கண்டுக்காம ‘ ஓட்டும் நம்ம மெக்கானிக் பையன்கள் இதில் பழுத்து வெதும்பிப் போன வீரர்கள். அப்படி ஸ்டைலாக ஹவாய் செப்பலோடு சாய்ந்து ஓட்டினால் தான் ‘காதல் ‘ பட ஹீரோக்களை ‘நாலு பேர் ‘ நல்லா கவனிப்பாங்க !

பிரேக் கம்பி அறுந்து போய் பைக்கை நிறுத்தும் கலை நம்மவர்களுக்கு கை, கால் வந்தது. ஒடிந்து போன கிளட்சுகள், சைலன்ஸர் இல்லாத ‘டப டப ‘ வண்டிகள், நெளிந்த சக்கரங்கள் உள்ள வண்டிகள், இந்த மாதிரி வண்டிகளை பிளாட்பாரம், சகதிகள், மேடு பள்ளங்கள், பல்வேறு தரைகள் போன்றவற்றில் ஓட்டும் பைக் வீரர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். சிலர் பைக் பின்னால் இரண்டு பேர் அளவுள்ள ஒரே மனைவி, ஒரு நண்டு, ஒரு சிண்டு மற்றும் முன்னால் மற்றொரு பாலகன் என்று ஐந்து பேர் குடும்பமாக ஜாலியாக சனி, ஞாயிறு என்று ஜாலியாகப் போய் வருவர். குடும்பமே கவலைப் பாடாமல் அரட்டையடிக்க குடும்பத் தலைவர் கடுமையாக பைக்குடன் போராடி நம்மூர் டிராபிக்கில் இடம் விட்டு இடம் பெயர்வார். இவரல்லவோ வீரர் ?

முகம் முழுவதும் துணி கட்டி தூசியை வடி கட்டி வெப்ப மூச்சுக் காற்றை விட்டு, வியர்வை வழிய நண்பகலில் பிட்சாவினை வீட்டுக்கு வீடு கொண்டு செல்லும் நண்பர்கள், நமது பைக் வீரர்கள். நேரத்தில் உணவினைக் கொடுத்துவிட காற்றிலும் கடுகி விரைந்து சென்று ஆட்டோ மன்னர்களுக்கு கடுக்காய் கொடுத்து அனைத்து வாகனங்களுக்கிடையே புகுந்து புறப்பட்டு, எப்படியோ சிக்னல் விழும் போது அனைவரையும் முந்தி முன்னுக்கு வரும் நமது வீரர்கள், வாழ்க்கையில் எல்லாவற்றிலும் முந்தி வந்தால் செயல் வீரர்கள் தான் !

—-

Krishnakumar_Venkatrama@CSX.com

Series Navigation

வெங்கட்ராம கிருஷ்ணகுமார்

வெங்கட்ராம கிருஷ்ணகுமார்