மொழிவது சுகம் : பெண்களின் மகத்தான சக்தியை ஆண்களுக்குணர்த்துவதே எனது எழுத்தின் நோக்கம் – மரி தியய்

This entry is part [part not set] of 37 in the series 20100912_Issue

நாகரத்தினம் கிருஷ்ணாஅரசியலில் சாதாரணமக்கள் உள்ளே நுழைய முடியுமா என்பது கேள்விக்குறி. மன்னராட்சிமுறை மீண்டும் வந்திருக்கிறது. இனி அடுத்தடுத்து வாரிசுகள் எல்லா கட்சிகளிலும் தயார். சாட்சிக்கென்று ஒன்றிரண்டு உதாரணங்கள் உலக அளவிலும் இல்லாமலில்லை. வானளாவ அதிகாரத்தையும், ஏவலுக்கு அடிமைகளையும் பதவி வரமாக தருகிறபோது எந்த அரசியல்தவசி வேண்டாம் என்பான். தொண்டர்களின் பயன்பாடென்பது அநேகமாக தீக்குளிக்கவோ சாலை மறியலுக்கோ உதவக்கூடும். சினிமாவுக்கும் அதுதான் நிலைமை. மேடை நடிகராக இருந்தேன், பஸ் கண்டக்டராக இருந்தேன் என்று சொல்லும் நடிகர்களைக் இனி காண்பரிது. அங்கும் வாரிசுகளின் ஆதிக்கந்தான். பத்துரசிகர்களை படம்பிடித்து, தியேட்டர் நிரம்பிவழிகிறது என்றெழுத அவர்களுக்கான எஜமானர்களும் தயார். இனி ஐஜி பிள்ளை ஐஜி கான்ஸ்டபிள் மகன் கான்ஸ்டபிள், கலெக்டர் பிள்ளை கலெக்டர் என்றொரு சட்டம் கொண்டுவந்தால் சகலவியாதிக்கும் நிவாரணம் தேடியதுபோல ஆகும். இதில் பாதிக்கப்படாதத் துறையென்று எழுத்துலகத்தைச் சார்ந்தவர்கள் பெருமைப்பட்டுக்கொள்ளலாம். இலக்கியத்தை பொறுத்தவரை அது சுதந்திரத்தோடு இயங்குகிறது. அப்படித்தான் நினைக்கிறேன். இக்கட்டுரையின் இறுதி பத்தியைப் படித்துவிட்டு நமது இலக்கியம் முடிவுக்கு வரலாம்.

தமிழ்ச் சூழலில், நேற்றைய உலகைக் காட்டிலும் இன்றைக்கு ஓரளவு பரவலாக எழுத்தாளர்கள் அறியபட்டிருக்கிறார்கள். அதிக எண்ணிக்கையில் எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். நிறைய இளைஞர்களின் நல்ல எழுத்துக்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கின்றன. நம்பிக்கைதரும்விதத்தில் சமூகத்தின் பலபிரிவிலிருந்தும் எழுத்தாளர்கள் வருகிறார்கள். நல்ல எழுத்தை தேடி ஆதரிக்கும் சிற்றிதழ்கள் எண்ணிக்கையும், தரமான பதிப்பகங்களும் அதிகரித்துவருகின்றன. நம்ம சாதி, நம்ம கோத்திரம் லைட்டை போடு மேடைகொடு என்ற சிபாரிசுகளின்றி அவர்களுக்கு முகவரி கிடைக்கிறது. தமிழர்களின் சுவாசம் என்று அறியபட்ட அரசியலும் சினிமாவிலும் நடக்கிற கூத்துகளைப் பார்க்க எழுத்து துறை தேவலாம் என்ற நிலை. இங்கேயும் பெட்டி பெட்டியாய் பணமும் வானளாவிய அதிகாரத்திற்கும் வாய்ப்பிருக்குமென்றால் அரசியல்போல, சினிமா போல அடுத்தவரை நுழையவிடாமல் வாரிசுகளுக்கென்று அறிவித்திருப்பார்கள். எழுத்திற்கு நிறம் தரித்திரமென்று எல்லோருக்குந்தெரியும். ‘ஒக்கல் வாழ்க்கை’ என்பதால் சதிகள் குறைவு; கூட்டணிகள் குறித்த அச்சமில்லை. ஆக எழுத்தாளனை அடையாளப்படுத்த, இருக்கிற தரித்திர சூழல் ஒருவகையில் உதவுகிறது என்று கூறலாம்.

பாரீஸ் நகரில் த்ரூவான் என்ற பெயர்கொண்ட உணவுவிடுதிக்கு முன்பாக உள்ள லா பிளாஸ் கையோன் திடலில் தொலைகாட்சி நிறுவனங்களுக்குச் சொந்தமான வாகனங்கள் குவிந்திருந்தன. புகைப்படக்காரர்களும், காமிராமேன்களும் திபுதிபுவென்று குவிந்தனர். கூடியவர்களில் ஒருசில பொலிஸாரும், இலக்கிய ஆர்வலர்களும் அடக்கம். வந்திருந்தவர்களில் சிலர் வழக்கமாக அந்த நேரத்தில் கூடுகின்ற மக்கள் இல்லையே முனுமுனுக்கவும் செய்தனர். அவர்கள் முனுமுனுத்ததுபோல மிகக்குறைவான மக்களே அங்கு கூடியதாகச் செய்தி. அதற்குக் தூறலிட்டுக்கொண்டிருந்த வானம் காரணமாக இருக்கலாமென்று ஒரு சிலர் சமாதானம் சொல்லிக்கொண்டார்கள். பகல் பன்னிரண்டு நாற்பத்தைத்துக்கு கொன்க்கூர் இலக்கிய பரிசுக்குழுவின் காரியதரிசி திதியே தெக்கோன் என்பவர் 2009ம் ஆண்டுக்கான கொன்க்கூர் இலக்கிய பரிசு மரி தியய்( Marie NDiaye)க்கு வழங்கப்படுவதாக அறிவித்தார். பரிசுக்குரியதாகத் தேர்ந்தெடுக்கபட்ட நாவல் ‘சக்திவாய்ந்த பெண்மணிகள் மூவர்'(Trois femmes puissantes).

தேர்வுக்குழுவி¢ல், இன்றையதேதியில் பிரெஞ்சு இலக்கியபிரமுகர்களில் முக்கியமானவர்கள் எனசொல்லப்டுகின்றவர்கள் இடம் பெற்றிருந்தனர். வழக்கம்போல இந்த ஆண்டும் இறுதிச் சுற்றில் இடம்பெற்றிருந்த நான்கு நாவல்களுக்குள்ளும் போட்டி கடுமையாக இருந்திருக்கிறது. எனினும் எழுத்தாளர் மரி தியய் முதல் சுற்றிலேயே தேர்வுக்குழுவினரின் பெரும்பான்மையான வாக்குகளைப் பெற்றிருக்கிறார். இந்தியாவில் பரிசுக்குரிய நாவலை அல்லது படைப்பை தேர்வுசெய்யும் நீதிபதிகள், தேர்வு முடிவை அறிவிக்கிறபோது, பத்திரிகையாளரிடம் அந்நாவலுக்கு வாக்களிக்க தம்மைத் தூண்டியது எது என்பதை பகிர்ந்துகொள்வார்களா என்று தெரியாது. ஆனால் கீழ்க்கண்ட அவர்களது அபிப்ராயங்களை படிக்கிற எவருக்கும் பரிசுக்குரிய படைப்பின் தேர்வு ஒரு சம்பிரதாய சடங்கல்ல என்பதையும், துலாக்கோலைப் பிடிக்கிறபோது அவர்கள் கைகள் நடுங்குவதில்லை என்பதையும் விளங்கிக்கொள்கிறோம்.

நீதிபதிகளுள் ஒருவரான பெர்னார் பிவோ, நாவலில் தன்னை கவர்ந்த அம்சம், ஆசிரியர்(மரி தியய்) பெயருரிச்சொற்ளையும் வினையுரிச்சொற்களையும் கையாண்டுள்ள திறனென்றார். பிரான்சுவாஸ் சந்திரநாகூர் (பெயரை கவனியுங்கள்- சந்திரநாகூர் பிரெஞ்சிந்திய காலணியின் கீழிருந்த பகுதி) என்கிற பெண்ஜூரி கடைசிசுற்றில் இடம்பெற்ற நான்கு நூலாசிரியர்களுமே பரிசுக்குரியவர்களென்றும், மரி தியய்யின் நாவலை மாத்திரம் பட்டியலிலிருந்து நீக்கியிருந்தால் அநேகமாக எனது வாக்கு எழுத்தாளர் ஜான்-பிலிப் தூஸ்ஸென் (Jean-Philippe Toussaint)னுக்கே விழுந்திருக்கும் என்றார். உண்மையில் எனக்கு மரி தியய் படைப்புகள் எதையும் விரும்பியதில்லை. ஆனால் இநாவலில் ஆரம்பம்முதல் கடைசிவரை நூலாசியர் இருப்பை எழுத்தில் உணரமுடிந்தது. தவிர நாவலின் வருகிற பெண்களின் கதைகள் தம்மை நெகிழச் செய்தனவென்றும், தகப்பனாக வருபவன் ஆதிக்க மனோபாவம் தமது தந்தையை நினைவூட்டும் வகையிலில் இருந்ததென்கிறார். மற்றொரு ஜூரியான திதியே தெக்குவான், மரி தியய்யின் எழுத்து உன்னதமானது. போட்டிக்கு வந்திருந்த நூல்களை வாசித்த உடனேயே, பரிசுக்குரியவர் மரியென்று தீர்மானித்துவிட்டேன். எல்லா தரப்பு வாசகர்களுக்கும் உரியது. சொல்லபட்டிருக்கிற கதை வாசகரில் அநேகரின் விருப்பங்களுக்கு எதிரானதாக இருக்கலாம், கதைசொல்லப்படிருக்கும் உத்திக்காக அவசியம் வாசிப்பார்கள். “மார்க்கிஸ் உடுத்திக்கொண்டு வெளியில் புறப்பட்டபோது மாலை ஐந்து மணி” என்று வாசித்து எனக்கு அலுத்துவிட்டது. எனக்கு அவள் போட்டிருக்கிற வாசனைதலைத்தின் மணம் முக்கியம், மரி தியய்யின் கதைமாந்தர்கள் வாசத்துடன் உலவுகிறார்கள். மருத்துவமனையிலிருக்கும் தந்தையிடம் வீசும் வாசனை, சிறையிலிருக்கும் சகோதரனின் உடலுக்குள்ள மணம் சட்டென்று பக்கங்களை புரட்டுகிறபோது என்மீது படிகிறது. சொல்லப்போனால் ஓர் எழுத்தாளனாக மரி தியய் எழுத்துகளின் மீது பொறாமைப் படுகிறேன், என்கிறார்.

தீர்ப்புமட்டுமல்ல, தீர்ப்பிற்கான காரணிகளும் வாசிப்பு அனுபவத்தில் பகிர்ந்துகொள்ளும் சொற்களும் பெற்ற பரிசைக்காட்டிலும் எழுத்தாளனை முன்நிறுத்த உதவுபவை. பாராட்டு என்பது இயல்பாக வரவேண்டும், நிர்ப்பந்தப்படுத்தியோ, வேண்டியோ பெறுவதால் எப் பயனுமில்லை. பொய்யாய் எழுதப்படும் மதிப்புரைகள் விளம்பரத்துக்கு உதவலாம், எழுத்தாளனின் வளர்ச்சிக்கு ஒருபோதும் உதவாது.

மரிதியய் குறித்து சில கூடுதல் தகவல்கள்: எழுத்தாளருக்கு 43 வயது. தந்தை செனெகல் நாட்டைசேர்ந்தவர், இவரது அன்னை தாவரவியல் பேராசிரியை. கணவரும் ஒரு எழுத்தாளர். கட்டுரையின் ஆரம்பத்தில் சொல்லியதுபோன்று, பிரான்சு நாட்டின் அதிபராக சர்க்கோசி பொறுப்பேற்றதிலிருந்து பெர்லினில் இருவரும் வசிக்கிறார்கள். ஏற்கனவே 2001ம் ஆண்டு Rosie Carpe நாவலுக்காக Femina பரிசினை வென்றிருக்கிறார். எழுத்துக்கான ஆரம்பம் பதினேழு வயது. முதல் நாவலே விமர்சர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றது. Papa doit Manger (அப்பாவுக்குப் பசி) என்ற படைப்பு பாரீஸின் புகழ்பெற்ற நாடக அரங்கமான COMEDIE FRANCAISE மேடையேற்றப்பட்டிருக்கிறது. 1799லிருந்து இருந்து வருகிற இத்தியேட்டர் அரங்கில் வாழும் காலத்தில் ஒரு எழுத்தாளரின் படைப்பு மேடையேற்றப்பட்டதாக சரித்திரமில்லை. நாவல்கள் சிறுகதைகள் தொகுப்பென்று பன்னிரண்டும், நாடகங்கள் ஏழும் இதுவரை எழுத்தில் பிரசுரமாகியிருக்கின்றன.

2007ம் ஆண்டு பிரான்சுநாட்டு அதிபர் தேர்தலில் நிக்கோலாஸ் சர்க்கோசி வெற்றிபெற்று, அதிபரென அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டவுடன், “அந்த ஆள் ஒரு மிருகம், இனவாதி. அவரது ஆட்சியின் கீழ் பிரான்சில் வசிக்க எனக்கு விருப்பமில்லை”, என்று கூறி பிரான்சு நாட்டைவிட்டு வெளியேறி கடந்த மூன்று ஆண்டுகளாக பெர்லினில் கணவருடன் வசித்து வரும் பெண்மணி என்பதும் முக்கியமானதொரு தகவல். அதிபரை இப்படிக் கிழித்துப்போட்ட பெண்பணிக்குப் பரிசளித்து இலக்கியம் வேறு அரசியல்வேறு என்றிருக்கிற பிரெஞ்சு இலக்கிய உலகத்தையும் போற்றவேண்டும்.

———————————————————————
http://www.lexpress.fr/culture/livre/la-folle-journee-de-marie-ndiaye-prix-goncourt-2009_826036.html

Series Navigation

நாகரத்தினம் கிருஷ்ணா

நாகரத்தினம் கிருஷ்ணா