மொழிபெயர்ப்புலகில் ம.இலெ.தங்கப்பா

This entry is part [part not set] of 33 in the series 20070405_Issue

தேவமைந்தன்



ஆங்கிலத்திலிருந்து தமிழுக்குப் படைப்புகளை மொழிபெயர்ப் பவர்கள் தமிழுலகில் மிகுந்துள்ளனர். ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கும், அதைவிட அதிகமாகத் தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கும் மொழிபெயர்ப்புச் செய்து வருபவர் ம.இலெ. தங்கப்பா.

மொழிபெயர்ப்பு என்று மட்டும் சொல்லிக் கொண்டு வந்தவர்கள் இப்பொழுது மொழியாக்கம் என்ற சொல்லையும் சேர்த்துக்கொண்டு விட்டனர். எல்லாம் ஆங்கிலத்தின் தாக்கத்தால்தான். ‘Translation’ என்பதற்கு ஈடாக மொழிபெயர்ப்பு என்ற சொல்லையும், ‘Transcreation’ என்பதற்கு ஈடாக மொழியாக்கம் என்ற சொல்லையும் இன்று புழங்குகிறார்கள். இதிலும் இன்னொரு வேறுபாட்டைப் படைத்திருக்கிறார்கள். மொழியாக்கம், மொழிபெயர்ப்பை விடவும் தரத்தால் உயர்ந்தது என்பதுவே அது. உண்மையில், இருமொழி அறிந்தவர்கள் செய்வது மொழிபெயர்ப்பு; இரு மொழியிலும் படைப்பாளிகளாக உள்ளவர்கள் ஒருவர் படைப்பை மற்றவர் மொழிபெயர்ப்புச் செய்வது மொழியாக்கம் – என்று இதனைச் செறிவூட்டிக் கொள்ளலாம். சான்றுகளாக ஆந்திரே ழீது 1916இல் தாகூரின் ‘கீதாஞ்சலி’யை ஆங்கிலத்திலிருந்து பிரஞ்சுக்குச் செய்துகொண்ட மொழிபெயர்ப்பையும், தங்கப்பா 1996இல் ஆந்த்ரே ழீதின் ‘மண்ணின் கனிக’ளை ஆங்கிலத்திலிருந்து தமிழுக்குச் செய்துகொண்ட மொழிபெயர்ப்பையும் மொழியாக்கங்கள் என்று கூறலாம்.

தங்கப்பாவின் மொழிபெயர்ப்புகளைப் பட்டியலிடுவதைவிட அவற்றின் செய்நேர்த்தியைப் பார்வையிடுவது உகந்தது. இது தொடர்பாக தங்கப்பா செய்த சங்க இலக்கிய மொழிபெயர்ப்பும்(Hues And Harmonies From An Ancient Land) வள்ளலார் மொழிபெயர்ப்பும்(Songs Of Grace) சாலச் சிறந்தவை. அவற்றுக்கு அடுத்ததாக முத்தொள்ளாயிரம் மொழிபெயர்ப்பு. அதற்கும் அடுத்ததாக பாரதி மொழிபெயர்ப்பைச் சொல்லலாம். அதற்கடுத்தவைதாம் பாரதிதாசன், வாணிதாசன், இரசூல் கம்சுதாவு(சோவியத்து நாட்டின் மொழிகளுள் ஒன்றானதும் மலைவாணர் மொழியானதுமான ‘அவார்’மொழிப் பாவலர்), ஆந்திரே ழீது(நோபல் பரிசு பெற்ற பிரஞ்சு இலக்கியவாணர்), ஆங்கிலப் பாவலர்கள், ஆப்பிரிக்கப் பாவலர்கள், வங்கப் பாவலர் தாகூர், பாம்பாட்டிச் சித்தர், கடைதிறப்பு, பட்டினத்தார், தாயுமானவர், சிவவாக்கியர், வாழ்க்கைக்குப் பயன்படும் நீதிப்பாடல்கள் இவை எனத் தெரிவு செய்த பதினெண் கீழ்க்கணக்கு – குறிப்பாக நாலடியார் பாடல்கள், விவேக சிந்தாமணி மொழிபெயர்ப்புகள் எல்லாம். இவற்றுள் கடைசியாகச் சொல்லப் பெற்றுள்ள – வாழ்க்கைக்குப் பயன்படும் என்று தெரிவு செய்து தங்கப்பாவால் மொழிபெயர்க்கப் பெற்றுவரும் நீதிப்பாடல்கள் ‘Tamil Thoughts’ என்ற தலைப்பில் வெளிவரவுள்ளன.

பாரதி மொழிபெயர்ப்பு தங்கப்பாவுக்கு எளிதானதாக இருந்தது. காரணம், பாட்டு வாழ்க்கையைப் பேசியவரல்லவா அவர்! அந்த உரைநடை நூல் உணர்த்தும் பாட்டுணர்வு இயல்பாகவே தங்கப்பாவுக்கு வாய்த்திருந்ததால் அது எளிதானது. இன்னொரு காரணம், பாரதி பாடல்களை விடுதலையாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டு மொழிபெயர்த்ததுமாகும். புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தின் திறனாளர் குழுவிலிருந்து கொண்டு பாரதிதாசன், வாணிதாசன் பாடல்களைத் தங்கப்பா மொழிபெயர்த்ததால், தெரிவு சரியாக அமையாமல் போயிருக்கலாம். பாரதி பாடல்கள் மொழிபெயர்ப்பு புதுச்சேரியில் நிகழ்ந்த பாரதி நூற்றாண்டு விழாவின் மலரிலும் எம்.பி. ஜான் நடத்திவந்த ‘நியூ டைம்ஸ் அப்சர்வர்’ என்ற இதழிலும் வெளிவந்தன. பாரதியின் “நிலாவும் வான்மீனும் காற்றும்” என்ற ‘மனத்தை வாழ்த்தும்’ பாட்டு, “The Moon, Stars and the Wind( A Hymn To The Spirit)” என்ற தலைப்பில் பாரதி நூற்றாண்டு விழா மலரில் வந்தது. இதில் மனம் என்ற சொல்லுக்கு ஈடாக spirit என்ற ஆங்கிலச் சொல்லைத் தங்கப்பா பயன்படுத்தி இருப்பது நுட்பமானது. நண்பருக்குச் சொல்லும்பொழுது கூட, “பேயரசு செய்தால் பிணந்தின்னும் சாத்திரங்கள்” என்ற பாரதி வரியில் வரும் ‘பேய்’ என்பதற்குத் ‘தெசாரஸ்’ என்ற ஆங்கிலச் சொற்களஞ்சியத்தில் தரப்பட்டுள்ள spectre, phantom, apparition, visitant, spirit, wraith, soul, shade, shadow, presence, spook[colloquial] ஆகிய ஆங்கிலச் சொற்களில் எந்த ஒன்றையும் ஏற்காமல் அரேபிய மொழியிலிருந்து ஆங்கிலத்துக்குச் சென்ற ghoul என்ற சொல்லையே இடம் பொருளறிந்து பயன்படுத்தியுள்ளார். அவ்வரியில் இடம்பெறும் ‘பிணந்தின்னும்’ என்ற தொடரில் வரும் ‘பிணம்’ என்ற சொல்லுக்கும் இலத்தீன் மொழியிலிருந்து ஆங்கிலத்துக்குச் சென்ற cadaver என்ற சொல்லையே பயன்படுத்தியுள்ளார்.

“வையகம் ஆள்பவரேனும் – சிறு
வாழைப்பழக்கடை வைப்பவரேனும்”

என்ற பாட்டின் இரண்டாம் அடியை Keeper of a petty banana shop என்றுதான் முதலில் பெயர்த்திருந்தார். ஆயினும் அடுத்த முறை பார்க்கையில் அதைக் கொஞ்சம் பொதுத்தன்மையோடு மாற்றி அமைக்கலாமோ என்று தோன்றியதால், Petty vendor by the street என்று மாற்றினார். “எத்தனைக் கோடி இன்பம் வைத்தாய்!” என்று தொடங்கும் பாடலில் வரும் ‘இன்பம்’ என்ற சொல்லை முதலில் joys என்று பெயர்த்தவர், அப்பாட்டில் அடுத்து வரும் செய்திகளைப் பார்த்தால் அவை இன்பம் தருவதைவிட உள்ளத்தை வியப்புறுத்தும் செய்திகளாக இருப்பதால் wonders என்று மாற்றினார்.

‘சென்றதினி மீளாது’ எனத் தொடங்கும் பாட்டின் இறுதியடி “தீமையெலாம் அழிந்துபோம் திரும்பி வாரா” என்பது.
All the ills will wither away
And will not come back
என்று முதலில் பெயர்த்திருந்தார். ஆயினும் மீளப் பார்க்கையில் ஈற்று முதலடியே போதுமெனத் தோன்றியதால் இறுதியடியை நீக்கிவிட்டார்.

‘ஜெயபேரிகை கொட்டடா,’ ‘காணி நிலம் வேண்டும்’ என்ற இரு பாடல்களையும் சென்ற நூற்றாண்டின் அறுபதுகளின் பின் பகுதியில் மொழிபெயர்த்ததால் மரபுசார் ஆங்கில யாப்பு முறையில் (அன்றைய அறிவுநிலைக்கேற்ப) இயைபுத் தொடை(Rhyme) அமையுமாறு பெயர்த்திருந்தார். பல்லாண்டுகளுக்குப்பின்(1985 அளவில்) அவற்றை மீண்டும் பார்க்கையில் விடுதலைப் பாட்டாக(Free Verse) மொழிபெயர்த்தால் நன்றாயிருக்குமே என்று தோன்றியதால் அவ்வாறே அவ்விரண்டு பாடல்களையும் விடுதலைப் பா வடிவில் முற்றும் புதிதாக மொழிபெயர்த்தார்.
பாரதி பாடல்களின் மொழிபெயர்ப்பில் தனக்கேற்பட்டுள்ள பட்டறிவிலிருந்து எழுந்து நிற்கும் உணர்வு,”அடடா, பாரதி பாடல்கள் ஆங்கில மொழிபெயர்ப்பில் நன்றாக எடுபடுகின்றனவே, இன்னும் பல பாடல்களைத் தேர்ந்தெடுத்து மொழிபெயர்க்கலாமே” என்பதுதான் எனவும் மொழிந்துள்ளார். (காலச்சுவடு 84, திசம்பர் 2006. பக்கம் 19.)

தன் கல்லூரிக் காலத்திலேயே முழுக்க முழுக்கத் தன்னை ஆட்கொண்டிருந்த பாரதிதாசன் பாடல்களை மிகவும் விழிப்புடன் மொழிபெயர்த்துள்ளார் தங்கப்பா. பாவேந்தரின் ‘அதிகாலை’ப் பாட்டு மொழிபெயர்ப்பைச் சான்று காட்டலாம்.

கொக்கோ கோகோஎன இனிமையில்
குரல்மிகுத்திடக் கூவல் – செவிக்
குளிர்தரும் அதிகாலை என்பதைக்
குறித்திடும் மணிச் சேவல்

என்பதை,

“Cock -a- doodle – do!”
The crowing of a cock
Flows sweetly into our ears
We know it is dawn

என்று மொழிபெயர்த்துள்ளமை தமிழ் – ஆங்கிலம் என்ற இருமொழிகளின் கட்டமைப்புக்கும் பொருந்தியுள்ளது.

செக்காடுவார் திடுதிடு கிறு
கீச்சென வரும் சத்தம்! – நல்ல
சேரியின் துணைகோரி அங்குள
ஊர் முழுமையும் கத்தும்!

என்ற பாவேந்தர் பாடலில் வரும் “நல்ல சேரியின் துணைகோரி அங்குள ஊர் முழுமையும் கத்தும்!” என்ற பகுதியை சமூகப் பொருள் முரண்படாமல் பொருத்தமாக மொழிபெயர்த்துள்ளார்:

The Screeching of an oil press
Comes floating through the air;
And the whole village shouts
For the help of the labouring hands.

‘எக்காளக் குயில்’ என்ற பாவேந்தர் பாட்டு பின்வருமாறு:

நின்றசெங் காந்தள்பூ நேரில்கை ஏந்தநெடும்
கொன்றை மலர்ப்பொன்னைக் கொட்டுகின்றாள் – என்றே
அடைகுயில்கள் எக்காளம் ஆர்த்தனவே மண்ணில்
கொடைவாழ்க என்று குறித்து

பாட்டின் பொருண்மை குன்றாமல், அதேபொழுது பாட்டின் கட்டமைப்பின் ஒழுங்கு குறையாமல் இதை மொழிபெயர்ப்பது மெத்தவும் கடினம். ஆயினும் தங்கப்பாவின் மொழிபெயர்ப்பில் இது சாத்தியமாகிறது:

The Joyous Cuckoo

The Kanthal, blooming red
Was an open palm,
The Konrai poured into it
The gold of her blossoms.
The Koels, watching,
Played their trumpets
Acclaiming
The giving.

வாணிதாசன் மொழிபெயர்ப்பு தங்கப்பாவுக்கு இயல்பானதாக வந்திருக்கிறது என்பதற்குச் சான்றுகள் பல உள்ளன. ஒன்றை இங்கே காணலாம். வாணிதாசன் பாடலின் பகுதி::

சேவல் அழைப்பினிலே – அழகு
சிந்தையை அள்ளுதடி – மன
ஆவல் அழிந்துவிட்டால் – அழகு
ஆனது நம்முடைமை!

இதன் பின்னிரு வரிகளைத் தங்கப்பா மொழிபெயர்த்திருப்பதில், வாணிதாசனின் சிந்தனை – உள்ளது உள்ளவாறே, ஆங்கில மொழிக்குப் போயிருப்பதை இவ்விரு மொழிகளிலும் புலமை பெற்றோர் உணர்வர்:

A chanticleer crows
Enrapturing my heart.
If we could but
quell our desires
Beauty will be ours.

தங்கப்பாவின் – வள்ளலார் மொழிபெயர்ப்பு(Songs Of Grace) சாலச் சிறந்தது என்று முதலிலேயே குறிப்பிட்டேன். இது ‘Action’ என்ற இதழில் 1982 பிப்ரவரிக்கும் 1983 ஆகஸ்டுக்கும் இடையில் தொடர்ந்து வெளியிடப்பெற்றது. தலைப்புப் பக்கத்தில் Songs of Grace என்பதன் கீழ் Selections From St. Ramalingam’s Poetry With A Short Biography Of The Savite Saint என்ற குறிப்பும் உள்ளது. மொழிபெயர்ப்புக் குறித்து Translated into English prose by M.L. Thangappa என்றும் குறிப்புள்ளது. புத்தக வடிவத்தில் இம்மொழிபெயர்ப்பு 1985இல் All India Books(a unit of Sri Aurobindo’s Action, Pondicherry 605 002) என்ற அரவிந்தாசிரம வெளியீடாக வந்தது. இதில், தமிழறியாத வெளி மாநிலத்தாரும் அயல் நாட்டாரும் நேரடியாக வள்ளலாரையும் அவர் பாடல்களையும் புரிந்து கொள்ளும் வண்ணம், வள்ளலாரின் தமிழ் மூலப்பகுதிகள் தரப் பெறாமல் அனைத்தும் ஆங்கிலத்திலேயே உள்ளன.(‘கனவுகள்’ என்ற தமிழாக்க நூலுள் ஆங்கில மூலப்பகுதிகள் தரப்பெறவில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. ‘மலைநாட்டு மலர்கள்’ ‘மண்ணின் கனிகள்’ ஆகியவற்றிலும் இவ்வாறே ஆங்கில மூலப்பகுதிகள் தவிர்க்கப்பட்டன.)

வள்ளலாரின் பாடல்களுள் சுருக்கமானதும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க மிகவும் இடர்ப்பாடு உண்டாக்கும் மெய்ப்பொருளியற் செய்திகள் கொண்டதுமான பாடல்:

இன்றுவரு மோநாளைக் கேவருமோ அல்லதுமற்
றென்றுவரு மோஅறியேன் எங்கோவே – துன்றுமல
வெம்மாயை அற்று வெளிக்குள் வெளிகடந்து
சும்மா இருக்கும் சுகம்.

இப்பாடலின் மொழிபெயர்ப்பு பின்வருமாறு:

Will it be today, or will it be tomorrow?
When will it be at all, the one event of my life —
my discarding of all this ignorance and reaching beyond
the immeasurable within the immeasurable —
to come at last into the quiet bliss of inaction?

மேலே கண்டுள்ள மொழியாக்கம் ஆங்கில உரைநடையில் அமைந்துள்ளது. இம்மொழிபெயர்ப்பிலுள்ள பிறவும் அவ்வாறே. மரபு அடிப்படையிலான இறுகிய ஆங்கில யாப்பைத் தங்கப்பாவால் பின்பற்றியிருக்க முடியும். அவ்வாறு அவர் பின்பற்றியிருந்தால், வள்ளலாருக்கும் இப்பொழுதுள்ள ஆங்கிலவாணருக்குமிடையில் பெர்லின் சுவர் விழுந்திருக்கும்.

இரசூல் கம்சுதாவு(Rasul Gamzatov) பாடல்கள் அவார் மொழியில் அமைந்தவை. தெரிவு செய்யப்பெற்ற அவர்தம் பாடல்களை அவாரிலிருந்து உருசிய மொழிக்கு நோம் கிரெப்நெவ்வும் யகோவ் கொஸ்லோவ்ஸ்கியும் மொழிபெயர்த்தனர். உருசிய மொழியிலிருந்து ஆங்கிலத்துக்குப் பெயர்த்தவர் பீட்டர் டெம்பெஸ்ட். அவற்றிலும் ஆகக் கூர்மையாக – இரசூல் கம்சுதாவின் தாய்மொழிப் பற்றையும் மலைநாட்டு வாழ்வையும் முதன்மைப்படுத்தித் தெரிவு செய்யப்பெற்ற பாடல்களைத் தங்கப்பா தமிழாக்கியுள்ளார். இந்நூலிலும் ஆங்கில மூலம் தரப்படவில்லை. நானாக இங்கு சான்று ஒன்றுடன் ஆங்கில மூலத்தைத் தருகிறேன்:

வருந்தி இங்கே நான்சாவைத் தழுவும் நேரம்,
வழிப்போக்கர் அங்கிருவர் பேசிச் சென்றார்.
இருந்துயரில் நான்அருந்து துன்பம் தீர
என்னினிய தாய்மொழியைக் காதிற் கேட்டேன்.

அவார்மொழியின் ஒலிஎன்றன் செவியிற் பாய
அக்கணமே உயிர்தழைத்தேன் வலிமை பெற்றேன்
எவரேனும் மருத்துவரால் அறிஞர் தம்மால்
இவ்வாறோர் நோய்தீர்க்கல் ஆமோ சொல்வீர்.

Yet just as I prepare to die
Unnoticed and unsung,
I hear two men go passing by
Who speak my native tongue.

And as I hear the Avar speech
My strength comes flowing back —
This is a cure no doctors teach,
Nor any village quack.

மேலே வேண்டுமென்றுதான் நான் முதலில் தங்கப்பாவின் மொழிபெயர்ப்பை முன்னதாகவும் ஆங்கில மூலத்தைப் பின்னதாகவும் தந்துள்ளேன். மொழியாக்கம், தமிழோசை மரபுக் கட்டமைப்புடன் விருத்த வடிவில் விளங்குவதோடு, தொல்லைப்படாமல் புரிந்து கொள்ளும்படி உள்ளது. தவிர, This is a cure no doctors teach, Nor any village quack என்பதன் தமிழாக்கம் மிகுந்த நுட்பத்தோடும் திகழ்கிறது. நாம் நமது சிற்றூர் மருத்துவரைப் போலி மருத்துவர்(village quack) என்று சொல்வதில்லை அல்லவா?

தங்கப்பாவின் மொழியாக்கங்களுள்(transcreations) குறிப்பிடத்தக்கது நோபல் பரிசு பெற்ற பிரஞ்சு இலக்கியவாணர் ஆந்திரே ழீதின் ‘மண்ணின் கனிகள்’ மொழியாக்கமே. பி.ஏ. லென்ஸ்கி’யால் பிரஞ்சிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்ப்புச் செய்யப்பெற்றது அது. 1996இல் சென்னை நந்தம்பாக்கம் – உலக இலக்கியக் கழகத்தால் இந்திய விடுதலை நாளன்று வெளியிடப்பட்டது. ஆந்திரே ழீது(1869-1957), 1916இல் தாகூரின் கீதாஞ்சலியை ஆங்கிலத்திலிருந்து பிரஞ்சுக்கு மொழிபெயர்த்தவர். அவர் ‘மண்ணின் கனிக’ளை 1896ஆம் ஆண்டின் இலையுதிர்காலத்தில் எழுதி முடித்தார். இதன் ஒரு பகுதியின் தமிழாக்கம்:

“அழகிய இல்லங்களைப் பாருங்கள்! அவற்றுள் எதிலும் என்னால் நெடுநேரம் தங்க முடிவதில்லை. அவை என்னை உள்ளே வைத்து அடைத்துவிடக் கூடுமோ, பொறிகள் போல் என்னைப் பிடித்துக் கொள்ளுமோ? ஆன்மாவை அடைத்து வைக்கும் புழுக்கறையாகிவிடக் கூடுமோ என்ற அச்சம் என்னைத் தடுக்கின்றது.”

“வாழ்க்கையைச் சுவை நுகர்ந்து வாழ்தல் எப்படி என்பதை இந்த நூல் வியத்தக்க வண்ணம் எடுத்தியம்புகிறது” என்பதைத் தன் இருபத்து மூன்று பக்க முகவுரையில்(‘மண்ணின் கனிகள் ஒரு பார்வை’) தங்கப்பா சொல்கிறார்.

இறுதியாக, ‘கனவுகள்’ என்ற தங்கப்பாவின் மொழிபெயர்ப்பு நூலுக்கு வருவோம். இதில் உள்ள ஆப்பிரிக்கப் பாடல்களின் ஆங்கில மூலப்பாடல்கள் தரப்பெறாததுடன், அவற்றின் தலைப்பும் குறிக்கப் படவில்லை. “இவற்றைப் படைத்தவர் யார் என்று குறிக்கவும் வழியில்லை” என்கிறார் தங்கப்பா.(ப.vii) தாகூர் பாடல்கள் சிலவற்றில் மூலப்பாடல் எது என்றும் குறிப்பில்லை.(ப.vi) “இந்த நூலில் எந்த வரன் முறையையும் நான் பின்பற்றவில்லை. ஆங்கிலப் பாடல்களை ஒரு பகுதியாகவும் தாகூர் படைப்புகளை ஒரு பகுதியாகவும் தந்துள்ளேன். அவ்வளவே”(ப.vi) என்று முன்னுரையில் குறிப்பிடுகிறார் தங்கப்பா. “ஆனால் சுவைக்காக மட்டுமே பாடல்களைப் படிப்போர், மூலப்பாடல் எது என்று தெரிந்துதான் மொழிபெயர்ப்பைச் சுவைக்க வேண்டும் என்பதில்லையே. ஒரு மலர் அல்லது பறவையின் அழகைச் சுவைக்க அதன் பெயர் தெரிந்திருக்க வேண்டுவது கட்டாயமா?” என்று வினவ இவரால் மட்டுமே முடியும். இந்நூலிறுதியில் வரும் தாகூர் கதையின் தழுவலான செய்யுள் நாடகமாகிய ‘வெற்றி ஓசை’யின் பதினொரு காட்சிகளும் அருமை. போலிக்கல்வி பயின்றுழல் பித்தர்களையும் பேடிக்கல்விக்கு வழிவகுக்கும் அரசினையும் இதைவிடவும் சிறப்பாக ‘நக்க’லடித்துவிட முடியாது. தாகூரின் இந்தக் கதைக்கு இதைவிடவும் மேம்பட்ட வடிவமாற்றைத் தூயதமிழில் தமிழாக்க நிலையில் எவரும் தந்துவிட முடியாது. காட்டில் விடுதலையாகப் பறந்து திரிந்த கிளியைப் பிடித்துத் தங்கக் கூண்டில் அடைத்துக் கொடுமைப் படுத்துவதோடு மட்டும் நில்லாமல், மேலதிகமாக நூலறி புலவர் ஒருவரைக் கொண்டு கல்வி கற்பிக்கவும் ஆணையிடுகிறான் ஓர் அரசன். பதினொராம் காட்சியின் கடைசியில் அந்தக் கிளி என்னாகிறது?

அரசன்: ஆமாம். சிறகை அடிக்கக் காணோம்
நிற்கவும் காணோம்; நிமிரவும் காணோம்!
என்ன அடக்கம்! என்ன அமைதி!
கல்வி கிளியைக் கடைத்தேற்றி விட்டதே!
…………………………………………………………..
அறிஞரே, கிளியை அசைத்துப் பார்க்கிறேன்.
உள்ளிருந்து ஏதோ ஓசை வருகுதே
என்ன அது புலவரே, சர சர என்று?

புலவர்: மன்னா, அது நம் கிளியின்
நெஞ்சு முழுதும் நிரம்பியிருக்கும்
நூல்களின் ஓசை!
செருக்கில் நிமிர்ந்து நின்ற பறவையின்
கழுத்தை வணக்கிய கல்வியின் ஓசை!
அறிவின் ஓசை! அமைதியின் ஓசை!
நம் கல்வி முறைகளின் வெற்றி ஓசை!

(நான்கு புறங்களிலுமிருந்து குரல் எழுகின்றது)

குரல்கள்: வெற்றி ஓசை! வெற்றி ஓசை!
முற்றிய அறிவின் முடிந்த ஓசை!
வாழ்க நம் கல்வி முறைகள்!
வாழ்க வாழ்க கல்வி அறிஞரே!

மொழிபெயர்ப்புடன் தாகூரின் கதையைச் சுவைமிக்க தமிழ்ச் செய்யுள் நாடக வடிவிலும் ஆக்கிய தங்கப்பாவின் திறம், மொழியாக்கம்(transcreation) என்பதையும் விஞ்சிவிட்டது.


(கடலூர் கூத்தப்பாக்கம் இலக்கியப் பேரவை 18.03.2007 ஞாயிறன்று நிகழ்த்திய ‘ம.இலெ.தங்கப்பாவின் படைப்புலகம்’ என்ற கருத்தரங்கத்தில் வாசித்தளித்த கட்டுரை)
****
karuppannan.pasupathy@gmail.com

Series Navigation