மொய்

This entry is part [part not set] of 42 in the series 20030802_Issue

ஆதர்ஷ் ராவ்


எவ்வளவு கொடுக்க வேண்டும் சாதாரணமாக
ஏதாவது வரைமுறை இருந்தால் என்ன ?

எதிர்வீட்டு வயதானவரின் அறுபதாம் கல்யாணத்திற்கு ?
பக்கத்துத்தெரு மாணிக்கம் பெண் காதுகுத்துக்கு ?

சங்கடச் சிரிப்போடு பந்தியில் அமர்ந்து
சங்கோஜ மிகுதியில் பாதியில் நிமிர்ந்து

‘இவர் எங்க தெரு.. ‘ என அறிமுகப்படுத்தப்பட்டு
இணக்கமாய் தலையசைத்து, கைகுவித்து

போனால் ‘ஏண்டா போனோம் ‘ என்றும்
போகாவிட்டால் ‘ஏங்க வரவேயில்லை ? ‘ என்றும்

நமதும் பிறரதுமான கேள்விகளுக்கு பதிலின்றி
ஒரு இலைக்கு இவ்வளவு எனக்கணக்குப்போட்டு

நம்வீட்டு பண்டிகைக்கு எத்தனை வைத்தார்
என விஸ்தாரமாய் விவாதம் செய்து

வியர்த்து விறுவிறுத்து மொய் எழுதி
வீட்டுக்கு வருகையில்தான் நன்றாகப் பசிக்கிறது!

itsaadharsh@hotmail.com

Series Navigation