மொட்டை போட தடை – ஜெயலலிதா திடார் உத்தரவு

This entry is part [part not set] of 43 in the series 20030918_Issue

தினகப்ஸா சிறப்பிதழ் – வழங்குபவர் சொதப்பப்பா


அழகைக் கெடுக்கிறது மொட்டை – போட வருகிறது தடை

இன்று காலை கண்விழித்த ஜெயலலிதா தன் மாளிகையில் பணிபுரியும் ஒருவர் சமயபுரத்தில் மொட்டை போட்டுக்கொண்டு வந்திருந்ததை கண்டு பெரும் கோபம் கொண்டதாக நம்பத்தகாத வட்டாரங்களிலிருந்து தகவல் வந்தது.

அதனால், இன்று காலை முதல்வேலையாக எல்லா தமிழகக் கோவில்களிலும், மொட்டை போடும் வழக்கத்தை நிறுத்த தமிழக போலீசுக்கு ஆணை பிறப்பித்தார். இந்த அவசரச் சட்டத்தின் படி, கோவில்களில் மொட்டை போடும் வழக்கம் உடனடியாய் நிறுத்தப் படும் என்று தெரிகிறது. இதனால் நாவிதர்கள் சங்கம் பெரும் கோபம் கொண்டிருப்பதாய் நம்பத்தகாத வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சமீபத்தில் ஜெயலலிதா நன்றாக இருக்கவேண்டும் என்று கோவில்களில் மொட்டை போடும் எம்எல்ஏக்கள் இதில் விலக்கு என்றும் சட்டம் திருத்தப்பட்டிருப்பதாக நம்பத்தகாத செய்தி வட்டாரங்களிலிருந்து செய்தி வந்திருக்கிறது.

***

தமிழக மக்களை மொட்டையடிக்கும் உரிமையை தி மு க விட்டுக் கொடுக்காது : கருணாநிதி கர்ஜனை

இன்று வெளியிட்ட அறிக்கையில் கருணாநிதி கூறியிருப்பது :

‘உடன் பிறப்பே! தமிழக மக்களை மொட்டையடிக்கும் உரிமையை தி மு க என்றுமே கைவிடாது. தமிழ் மக்களின் தலையில் கை வைத்த ஜெயலலிதாவின் அராஜக ஆட்சியை அரியணையிலிருந்து இறக்க உங்கள் முடியை அல்ல, முடிவில்லாத பணக் குவியலை வழங்குங்கள் ‘ இவ்வாறு கருணாநிதியின் அறிக்கை கூறியது.

***

பெரியார் வழியில் ஆட்சி செய்யும் ஜெயலலிதா : கி வீரமஇணி பாராட்டு

இன்று எடைக்கு எடை பழைய பேப்பர் வாங்கும் விழாவில் பேசிய வீரமணி ஜெயலலிதாவைப் பாராட்டிப் பேசியதாய் நம்பத் தகாத வட்டாரங்கள் தெரிவித்தன.

‘கண் மூடப் பழக்கமெல்லாம் மண் மூடிப்போகவேண்டும் என்று தந்தை பெரியார் விருப்பத்தை நிறைவேற்றும் வீராங்கனை ஜெயலலிதாவின் இந்தச் சட்டம் பெரியாரின் விருப்பத்தை அடியொற்றி இயற்றப் பட்டது. அய்யா அவர்களின் கனவு நிறைவேறும் காலம் வந்து விட்டது. மூடப் பழக்கங்களில் சகதியிலே முக்கி முக்கிக் குளிக்கும் மக்களைக் கரையேற்ற வந்த கலங்கரை விளக்கம் ஜெயலலிதா. ஜெயலலிதாவிற்கு முன்பு சமூகநீதிக் காவலர் என்று பட்டம் வழங்கினோ. இஇனிமேல் மொட்டையை முறித்த மூதாட்டி என்ற பட்டம் வழங்குவோம். ‘

இவ்வாறு வீரமணி பேசியதாய் நம்பத்தகாத வட்டாரங்கள் தெரிவித்தன.

******

மொட்டை போட்டதற்காக சோ கைது

போலீஸ்காரர்கள் நேற்று சோவின் வீட்டைத் தட்டி மொட்டை போட்டதற்காக அவரை கைது செய்தார்கள் என்று நம்பத்தகாத வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த மொட்டை எனக்கு கடவுளே போட்ட மொட்டை. நானாகப் போட்ட மொட்டை இல்லை என்று சோ அவர்கள் கூறியதைக் கேட்ட போலீஸ்காரர்கள், ‘இதே காரணத்தைத்தான் எல்லா மொட்டைகளும் கூறுகிறார்கள் ‘ என்று பதில் கூறினார்கள் என்று நம்பத்தகாத வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. என்னுடைய மொட்டைக்கு என்ன காரணம் என்று எனக்கே தெரியாது, அந்தக் கடவுளுக்கும் தெரியாது, குருமூர்த்திக்குத் தான் தெரியும். இந்திய பாரம்பரியத்தில் மொட்டையின் இடம் பற்றி பத்து வாரத்துக்கு ஒரு தொடர் குருமூர்த்தி எழுதுவார். அத பின் என்னைக் கைது செய்யுங்கள் என்று சோ கேட்டுக் கொண்டதாக நம்பத்தகாத வட்டாரங்கள் தெரிவித்தன.

***

சிறைகள் நிரம்பி வழிகின்றன : மொட்டையா ? சொட்டையா ?

மொட்டையா , வழுக்கையா என்று தீர்மானிக்கமுடியாதபடி பலபேருடைய தலை இருப்பதால் காவல் துறையினர் பலரையும் சிறையில் நிரப்பி வருகின்றனர். மொட்டையல்ல சொட்டையே என்று தலை வழுக்கையர்கள் எப்போதும் பையில் மருத்துவச் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என்று காவல் துறை உத்தரவு வெளியாகியுள்ளது. இந்த மருத்துவச் சான்றிதழ் பெறுவதற்கு மருத்துவ மனைகளில் பெரும் வரிசை நிற்பதால், அத்தியாவசிய அறுவை சிகிச்சைகள் எல்லாம் ஒரு மாதத்திற்குத் தள்ளி வைத்திருப்பதாக நம்பத் தகாத வட்டாரங்கள் தெரிவித்தன.

*******

மொட்டை தடுப்புக்கு காஞ்சி சங்கராச்சாரியார் ஆதரவு.

மொட்டை போடுவது எந்த வேதத்திலும் , உபநிடதத்திலும் கோரப்படவில்லை என்று தாம் அத்தாட்சி கூறுவதாக காஞ்சி சங்கராச்சாரியார் கூறினார். நம் உடலில் இருக்கும் ஒவ்வொரு செல்லும் ஒரு உயிர் உள்ளது என்று நவீன விஞ்ஞானம் கூறுகிறது. இதனால், மொட்டை போடும்போது அந்த செல்களுக்கு வலிக்கும் என்றும் நவீன விஞ்ஞானம் கூறுகிறது என்று காஞ்சி சங்கராச்சாரியார் தெரிவித்தார். ஆகையால், அஹிம்சையை ஆதாரமாகக் கொண்ட நம் தேசம் மொட்டை போடுவதை உடனே தடுக்க வேண்டும் என்று தான் பிரார்த்தித்து வந்ததாக கூறினார். ‘என்னோட பக்தி உண்மையா இருந்தா, மொட்டை போடரதை தடை செய்ய ஒரு நல்ல தலைவரை அனுப்பி வையுண்ணு வேண்டிண்டேன். அதான் பகவானாப் பாத்து இந்த முதலமைச்சரை அனுப்பியிருக்கர். ‘ என்று உரைத்ததாகவும் நம்பத்தகாத வட்டாரங்களிலிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.

***

மொட்டை தடுப்புக்கு இராமகோபாலன் ஆதரவு

மொட்டை தடுப்புக்கு ஆதரவாக இராமகோபாலன் பத்திரிக்கையாளர்களிடம் இன்று பேசினார். முஸ்லீம்கள்தான் முடிவெட்டும் தொழிலில் இருக்கிறார்கள். அவர்களது தொழிலை நசுக்குவது ஒவ்வொரு இந்துவின் கடமை. ஆகவே மொட்டை தடுப்புக்கு என் ஆதரவு என்று கூறினார்.

இது கோவிலில் மொட்டை போடுவது பற்றியது என்றும், கோவிலில் மொட்டை போடுபவர்கள் எல்லோரும் இந்துக்களே என்றும் பத்திரிக்கையாளர்கள் ஞாபகப்படுத்தினார்கள்.

நீ கருணாநிதிகிட்ட போய் கேளேன். கடவுளே கருணாநிதிக்கு மொட்டை போட்டுட்டார். கருணாநிதியைத் தூக்கி ஜெயில்ல போடணும் என்று இராமகோபாலன் கூறினார்.

கேட்ட கேள்விக்கு பதில் இல்லை என்று பத்திரிக்கையாளர்கள் மீண்டும் கேட்டார்கள்.

மொட்டை போடுண்ணு கடவுள் கேட்டாரா. ஆட்டை வெட்டு கோழி வெட்டுன்னு கடவுள் கேட்டாரா என்று இராம கோபாலன் கூறினார்.

பாலாபிஷேகம் பண்ணனும்னு மட்டும் கடவுள் கேட்டாரா என்று ஒரு நிருபர் கேட்டார். நீ இந்து எதிர்ப்பாளன், முஸ்லீம்களின் அடிவருடி என்று அந்த நிருபரைத் திட்ட்விட்டு , இராம கோபாலன் கோபத்துடன் எழுந்து அத்துடன் பேட்டியை முடித்துக்கொண்டார் என்று நம்பத்தகாத வட்டாரங்கள் தெரிவித்தன.

***

கோவிலில் மொட்டை போடுவதை மட்டும் தடை செய்யக்கூடாது மழிக்கும் தொழிலையே தடை செய்தால் நான் ஒப்புக்கொள்வேன் – கருணாநிதி அறிக்கை.

பசுவதைமட்டுமல்ல, எல்லா மிருகவதைகளையும் தடை செய்ய வேண்டும் என்று கருணாநிதி கோரியிருந்தது போலவே , இப்போது கோவில்களில் மட்டுமல்ல, சலூன் களிலும் மொட்டையைத் தடை செய்ய வேண்டும் என்று கருணாநிதி அறிக்கை விடுத்திருப்பதாக நம்பத் தகாத வட்டாரங்கள் தெரிவித்தன. உடன் பிறப்புக்கு எழுதிய கடிதத்தில் கருணாநிதி கீழ்க்கண்டவாறு எழுதியதாய் நம்பத் தகாத வட்டராங்கள் தெரிவித்தது இது.

‘மொட்டை போடுவதை தடுக்க சட்டம் போட்டிருக்கிறார்கள் கெடுமதியினர். மொட்டை போடுவதை தடுப்பது நல்லதுதான். ஆனால், இன்று பாரபட்சமான ஒரு சூழ்நிலை நிலவுகிறது. மொட்டை போடுவது கோவில்களிலே மட்டுமல்ல, குளக்கரைகளில் நடக்கிறது. ஆற்றங்கரைகளில் நடக்கிறது. கடைவீதிகளில் நடக்கிரது. கோவில்களில் போடும் மொட்டையை மட்டுமல்ல , எல்லா இடங்களில் போடும் மொட்டையையும் தடை செய்தால் நாம் வரவேற்கலாம். ‘ என்று கருணாநிதியின் அறிக்கையில் இடம் பெற்றதாக இன்று நம்பத்தகாத வட்டாரங்கள் தெரிவித்தன.

***

சவரத்தொழில் இன்று முதல் தடை- ஜெயலலிதா உத்தரவு

மொட்டை போடுவதை மட்டும் தடை செய்தால் அதனை ஆதரிக்க மாட்டேன் என்று கருணாநிதி கூறியதாலும், சவரத்தொழில் முழுக்க தடை செய்தால் தான் ஆதரிபேன் என்றும் கூறியதாலும், இன்று ஜெயலலிதா சவரத்தொழில் மொத்தத்தையும் தடை செய்தார்.

ஏராளமான சவரத்தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர். இப்படியெல்லாம் நடக்கும்போது, பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் ஜெயலலிதா ஒழிக என்றுதான் கத்திச் செல்வார்கள். இந்த முறை வித்தியாசமாக ‘எங்களை நடுத்தெருவுக்கு கொண்டுவந்த கருணாநிதி ஒழிக ‘ என்று கோஷம் எழுப்பியவாறு சென்றதாக நம்பத்தகாத வட்டாரங்கள் தெரிவித்தன.

சிறைக்குச் சென்ற ஒரு சவரத்தொழிலாளியை நிறுத்தி பத்திரிக்கையாளர் பேட்டி கண்டபோது, ‘அந்தம்மாவுக்குத்தான் புத்தி பேதலிச்சிருக்குன்னு தெரியுமே. இந்தாளு ஏன் எங்க தொழிலை கை காட்டி உடணும். அந்தம்மா ஒருதரம் ஒழியணும்னா இந்தாளு ரெண்டுதரம் ஒழியணும் ‘ என்று வீராவேசமாகப் பேட்டி தந்ததாகவும் நம்பத்தகாத வட்டாரங்கள் தெரிவித்தன.

***

சவரத்தொழில் தடை செய்தால் போதுமா ? சவரம் செய்ய உதவும் பிளேடு கத்தி போன்றவற்றை தடை செய்யவேண்டாமா – கருணாநிதி கேள்வி.

சவரத்தொழிலை தடை செய்துவிட்டதை கண்டித்து கருணாநிதி இன்று சன் டிவியில் பேசியபோது சவரத்தொழில் செய்ய உதவும் பிளேடு போன்றவற்றையும் தடை செய்யவேண்டியதுதானே என்று கேட்டார். அன்றே அண்ணா சொன்னார். ‘கத்தியைத் தீட்டாதே புத்தியைத் தீட்டு ‘ என்று உரைத்திட்டார் அண்ணா. கத்தியை தீட்டுவதற்கு அண்ணா பெரும் எதிரி என்பது இதன் மூலம் விளங்கும். புத்தியைத் தீட்டவும் வழியில்லாதவர்கள் இன்று கத்தியை தீட்டி விற்பனை செய்ய அனுமதி கொடுத்திருக்கிறார்கள். இவர்கள் அண்ணாவழியில் செல்லவில்லை என்பதற்கு இதனை விட என்ன ஆதாரம் வேண்டும். என்று அவர் கூறியதாக நம்பத்தகாத வட்டாரங்கள் தெரிவித்தன.

***

பிளேடு கத்தி சவரத்தொழில் உபகரணங்கள் தடை – ஜெயலலிதா உத்தரவு

ஏற்கெனவே சவரத்தொழிலாளிகள் சிறைபட்டதனால் நசிந்து கொண்டிருந்த பிளேடு சவர உபகரணங்கள் விற்பனை இன்று அடியோடு சரிந்தது. இந்தக்கடையில் பிளேடு சவரத்தொழில் உபகரணங்கள் விற்கப்படாது என்று அனைத்து தமிழ்நாடு கடைகளும் அட்டை தொங்கவிட்டிருந்தது கண்கொள்ளாக் காட்சியாக அம்மாவின் மகத்துவத்தை உலகுக்குப் பறைசாற்றும் விதமாக இருந்தது என்று அதிமுகவின் தலைமை நாளேடு தெரிவித்ததாக நம்பத்தகாத வட்டாரங்கள் தெரிவித்தன.

***

திண்ணையில் இந்தவாரம் திடுக்கிடும் கவிதை ஒன்று வெளியானதாக நம்பத்தகாத வட்டாரங்கள் தெரிவித்தன.

அமோக விளைச்சல்

***

இன்று

தமிழகத்தில் விளையும்

ஒரே பயிர்

மயிர்

***

Series Navigation

சொதப்பப்பா

சொதப்பப்பா