மைசூர் செம்மொழித் தமிழ் உயராய்வு மையம் வெளியிட்டுள்ள பழந்தமிழ்ப் பாக்கள் மரபுவழிப் படித்தலும் பாடுதலும் குறுவட்டு அறிமுகம்

This entry is part [part not set] of 33 in the series 20071220_Issue

முனைவர் மு.இளங்கோவன்


மைசூர் செம்மொழித் தமிழ் உயராய்வு மையம் வெளியிட்டுள்ள பழந்தமிழ்ப் பாக்கள் மரபுவழிப் படித்தலும் பாடுதலும் குறுவட்டு அறிமுகம்
முனைவர் மு.இளங்கோவன்

தமிழ்மொழி செம்மொழி என நடுவண் அரசால் அறிவிக்கப்பட்டதும் மைசூரில் உள்ள இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்தில் ‘செம்மொழித் தமிழ் உயராய்வு மையம்’ உருவானது.இம்மையத்தின் சார்பில் தமிழின் சிறப்பினை நிலைநாட்டும் வகையில் தொல்காப்பியம்,சங்க இலக்கியங்கள், சிலப்பதிகாரம், மணிமேகலை, முத்தொள்ளாயிரம்,இறையனார் களவியல் உரை உள்ளிட்ட நூல்களைப் பரப்பும் முயற்சி பலவகையில் மேற்கொள்ளப்பட்டது.

முதற்கண் செம்மொழித் தமிழ் உயராய்வு மையம் செய்யவேண்டிய பணிகள் யாவை என அறிஞர்களை அழைத்து அவர்களிடம் கருத்துக் கேட்கப்பட்டது.இதற்கெனப் பலமுறை கூடிப் பேசிய அறிஞர்குழு பல்வேறு திட்டங்களை முன்வைத்தது.பழந்தமிழ் நூல்களை உலக மொழிகளில் மொழிபெயர்க்க வேண்டும் என்று முடிவு செய்யப்பெற்றது.தமிழின் சிறப்புணர்த்தும் பல கருத்தரங்குகள் நடத்தப்பட்டன.

இன்னவகையில் பல பணிகள் நடந்துவருகையில் பழந்தமிழ் இலக்கியங்களை எவ்வாறு பிழையின்றிப் படிப்பது,பாடுவது என எண்ணிய எண்ணம் அண்மையில் செயல்வடிவம் பெற்றுள்ளது. தொல்காப்பியம்,சங்க இலக்கியங்கள் இவற்றைத் தக்க அறிஞர்கள் வழிப் படிக்கச் செய்தும் தமிழும் இசையும் தெரிந்தவர்களைக் கொண்டு பாடச்செய்தும். அழகிய குறுவட்டாக வெளியிட்டுள்ளனர்.

தமிழிலிருந்து பிரிந்த மொழியாகிய மலையாள மொழியில் கவிதைகளை இன்றும் பாடி மகிழ்வதை வழக்கமாகக் கொண்டிருக்கையில் செப்பலோசை, அகவலோசை, ,துள்ளலோசை, ,தூங்கலோசை கண்ட தமிழர்கள் ஐந்து நிலத்திற்கும் ஐந்திசைப்பண் வகுத்த பழந்தமிழ்க் குடியினர் இசையிலிருந்து விலகி நிற்பதை உணர்ந்த அறிஞர்கள் தமிழை இசைத் தமிழாக வழங்கியிருக்கும் முயற்சியை அனைவரும் பாராட்டக் கடமைப்பட்டுள்ளனர்.
இக் குறுவட்டில் மர்ரே இராசம் பதிப்பில் அமைந்துள்ளவாறு மூலபாடங்களைப் படிக்கச்செய்தும் பாடச்செய்தும் குறுவட்டு உருவாக்கப்பட்டுள்ளது.இக்குறுவட்டில் தொல்காப்பியத்தின் 27 நூற்பாக்களும்,பத்துப்பாட்டின் 149 அடிகளும்,எட்டுத்தொகையின் 20 பாடல்களும் படித்தும் பாடியும் காட்டப்பட்டுள்ளன.இதன் தொடர்ச்சியாகச் சங்கநூல்களின் பிற பாடல்களும் குறிப்பாகச் சிலப்பதிகாரமும் இவ்வாறு பாடப்பட்டு வெளியிடப்பட்டால் தமிழுலகம் மிகுந்த பயன்பெறும்.(இவ்வாறு செய்யும்பொழுது பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப.சுந்தரேசனார் பாடிய சங்க இலக்கியம்,சிலப்பதிகாரம் குறித்த குரல்பதிவுகள் கிடைப்பின் அவற்றையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.)

போற்றத்தகுந்த இந்தப் பணிக்குப் பின்புலமாக இந்திய மொழிகளின் நடுவண் நிறுவன இயக்குநர் உதயநாராயணசிங்,துணை இயக்குநர் க.இராமசாமி,முனைவர் அரிமளம் சு.பத்மநாபன் முதலானவர்கள் இருந்துள்ளனர்.ஒருங்கிணைப்பாளராக முனைவர் அரிமளம் சு.பத்மநாபன் அவர்கள் செயல்பட்டுள்ளார். அரிமளம் அவர்கள் பாடுதுறையில் வல்லவர் என்பதால் இசையறிஞர்களைத் தேர்ந்தெடுத்துப் பாடச் செய்தும் ,தக்க தமிழறிஞர்களைப் படிக்கச் செய்தும் இப்பணியைத் திறம்படச் செய்துள்ளார்.

புதுச்சேரித் தமிழறிஞர் முனைவர் இரா.திருமுருகன் அவர்களும்,பாரதிதாசன் பல்கலைக்கழகப் பேராசிரியர் த.கனகசபை அவர்களும் தொல்காப்பியம், சங்க இலக்கியங்களின் மூலபாடப் பகுதிகளைப் படிக்க, அப்பகுதிகளை இசையறிஞர்கள் மா.வயித்தியலிங்கம்,அரிமளம் சு.பத்மநாபன், பிரமிளா குருமூர்த்தி,மார்கரெட்பாஸ்டின்,மா.கோடிலிங்கம் சிறப்பாகப் பாடியுள்ளனர். மூலபாடப் பகுதியைப் படித்த இரா.திருமுருகனாரும், த.கனகசபையும் இசையறிவு மிக்கவர்கள் என்பதால் அவர்களும் சில பாடல்களைப் பாடியுள்ளனர். இப்பணியைத் திருச்சிராப்பள்ளி கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரி ஒலிப்பதிவுக் கூடத்தில் பதிவுசெய்துள்ளனர்.

அரிமளம் சு.பத்மநாபன் அவர்கள் முன்னுரையாகச் சில செய்திகளைச் சொல்ல குறுவட்டில் தொல்காப்பியத்தின் முதன்மையான சில பகுதிகளை இரா.திருமுருகனார் படிக்கின்றார்.அதனைத் தொடர்ந்து மா.வைத்தியலிங்கம் தம் இனிய குரலால் தொல்காப்பியத்தை இசையோடு பாட இசைத்தமிழில் இயல் தமிழ் பொலிவுபெறுகிறது. இவ்வாறு பாடப்பட்டுள்ள தொல்காப்பிய நூற்பாக்கள் பின்வருமாறு :

எழுத்ததிகாரம் 1.நூல்மரபு 1,33 ; 2.பிறப்பியல். 1
சொல்லதிகாரம் : 1.உரியியல் 1,56-69, 2.எச்சவியல் 67 ; 3.
பொருளதிகாரம் அகத்திணையியல். 5,20,21,56 கற்பியல் 1,2,4,,51 ;செய்யுளியல் 1.

இந் நூற்பாக்களைத் தக்காங்கு படிக்கும் பொழுதும் இசையுடன் கேட்கும் பொழுதும் இவை தமிழ் மாணவர்களுக்கும் ,தமிழ்ப்பற்றாளர்களுக்கும் கிடைக்கவேண்டும் என்ற வேட்கை எழுகின்றது. தொல்காப்பியப் பகுதியை மா.வயித்தியலிங்கமும் அரிமளமும் நன்கு பாடியுள்ளனர்.

பேராசிரியர் மா.வயித்தியலிங்கம் தொல்காப்பியப் பகுதியைப் பாடியுள்ளதுடன் திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, குறிஞ்சிப்பாட்டு,பட்டினப்பாலை முதலானவற்றின் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளை இனிமையுறப் பாடியுள்ளார்.

அரிமளம் பத்மநாபன் அவர்கள் தொல்காப்பியப் பகுதியைப் பாடியுள்ளதுடன் நற்றிணை 172, புறநானூறு 192 பாடல்களைப் பாடக்கேட்கும்பொழுதும்,முல்லைப்பாட்டின் இனிய பகுதிகளைக்கேட்கும் பொழுதும் தமிழ்ச்சுவையை முழுமையாகக் கேட்க முடிகின்றது.

பேராசிரியர் பிரமிளா குருமூர்த்தி அவர்கள் ஐங்குறு நூறு 40,108 ; பரிபாடல் 18: 15-21 ; கலித்தொகை பாடல் 51, அகநானூறு பாடல் 46,நெடுநல்வாடையின் சிலபகுதிகளைப் பாடும் பொழுது இனிமை ததும்புகிறது. சங்க இலக்கியப் பெண்களின் காதல் உணர்வுகளை உருக்கமுடன் பாடியுள்ளார்.

பேராசிரியர் த.கனகசபை அவர்கள் குறுந்தொகை (பாடல் 2,) புறம்,(பாடல் 187),சிறுபாணாற்றுப்படையின் சில பகுதிகளைப்பாடும்பொழுது சிறப்பாக உள்ளது.

முனைவர் மார்கரெட் பாஸ்டின் அவர்கள் நற்றிணை(பாடல்.1),குறுந்தொகை (பாடல் 4),ஐங்குறுநூறு (பாடல் 1),பரிபாடல் :17 : 9-21,கலித்தொகை(பாடல் 9),அகநானூறு( பாடல் 82) பாட சங்கத் தலைவியரின் அக உணர்வு நன்கு வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

மா.கோடிலிங்கம் அவர்கள் பதிற்றுப்பத்து(பாடல் 29),பரிபாடல் பாடல் 20 : 8-11,
புறம் (பாடல் 182),மதுரைக்காஞ்சியின் சில பகுதிகளை நன்கு பாடியுள்ளார்.

உலகெங்கும் பரவியுள்ள தமிழ்மக்கள் தங்கள் முன்னோர்களின் இலக்கியச் செழுமையையும் இசை நுட்பத்தையும் அறிய இவ்வொலி வட்டு துணைசெய்யும்.. இக் குறுவட்டினைப்போல் இன்னும் பல குறுவட்டுகளை வெளியிட வேண்டும் என்பதே தமிழ் ஆர்வலர்களின் விருப்பமாக இருக்கமுடியும், பயணத்திலும்,அலுவலகப்பணிகளுக்கு இடையிலும் தமிழ் இலக்கிய உணர்வினைப் பெற இக்குறுவட்டுகள் இணையத்திலும் உள்ளமை பாராட்டிற்கு உரிய ஒன்றாகும்..தேவையானவர்கள் இணையத்திற்குச்சென்று பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

செம்மொழி நிறுவனம் அறிஞர்களின் துணையுடன் இயங்கும் நிறுவனம் என்பதால் சங்க இலக்கியங்களை நன்கு பாடம்சொல்லும் அறிஞர்களை அழைத்துப்பாடம் நடத்தச் செய்து அவற்றைக் காண்பொளியில் (வீடியோ) பதிவுசெய்வதையும் தம் கடமையாகக் கொள்வது நன்று. தமிழிலக்கியங்களை ஆழமாகப் படித்தோரும்,படிப்போரும் அருகிவரும் காலத்தில் இப்பணி எப்பணிக்கும் முதற்பணியாகச் செய்தல் நலம்..தமிழ்மொழியை, இலக்கியங்களைத் தெரிந்துகொள்ள நினைப்போருக்கும் வெளிநாட்டினருக்கும் இப்பணி மிகுந்த பயன்தரும்.

செம்மொழி உயராய்வுமையத்தின் பணிகளைப் பார்வையிடவும் குறுவட்டு பற்றி அறியவும் பின்வரும் முகவரியைப் பயன்படுத்தலாம்.

http://www.ciil-classicaltamil.org/

முனைவர் மு.இளங்கோவன்
புதுச்சேரி,இந்தியா


மின்னஞ்சல் : muelangovan@gmail.com

இணையம் : www.muelangovan.blogspot.com

Series Navigation

முனைவர் மு.இளங்கோவன்

முனைவர் மு.இளங்கோவன்