மே நாள்

This entry is part [part not set] of 48 in the series 20040506_Issue

சி.கருணாகரசு, சிங்கப்பூர்


ஆதிக்க வர்க்கத்தின்
அதிகாரச் சாட்டையால்
தோல் கிழிந்து
இரத்தம் சொட்டய
அன்றைய
அடிமை மனிதர்களின்
விடுதலைத் திருநாள்!

பிணைக்கப்பட்ட
அடிமைச் சங்கிலியை
வியர்வையின்
வெப்பச் சூட்டால்
உடைத்தெறிந்து
சுதந்திரக் காற்றை
சுவாசித்தச் சுகநாள்!

மனிதனையே சந்தையில்
மந்தையென வாங்கி
கொத்தடிமைகளாய்
கசக்கிப் பிழிந்த
அரக்க மனத்தோரை
அடியோடு எதிர்த்து
செங்கொடி ஏந்திய
புரட்சிப்படை
வென்றநாள் இது!
வெற்றிநாள் இது!

ஏகாதிபத்தியத்தின்
இரும்புக் கோட்டையை
எழுச்சிக் கரங்கள்
தகர்த்த நாள்!
தன்மானத் தாகம்
தணிந்த நாள்!

சாமான்ய மனிதனும்
சர்வாதிகார மனிதனும்
சமாதானமாகி
சமதர்மம் கண்ட
சந்தோஷத் திருநாள்!

இன்றைய
உழைப்புக்கும், உழைப்பவனுக்கும்
உரிய மரியாதையை
ஒப்பந்தம் செய்த
உயரிய நன்னாள்!
உழைப்பாளர் பொன்னாள்!!

Series Navigation