மேற்கு எவ்வாறு இந்திய அறிவியலை கேவலப்படுத்துகிறது ?

This entry is part [part not set] of 26 in the series 20011015_Issue

ஏ பி ஜே அப்துல் கலாம், ஒய் எஸ் ராஜன் (இந்தியா விஷன் 2020 புத்தகத்திலிருந்து)


எப்போதாவது இந்தியா எந்த விஷயத்திலாவது பாராட்டும்படிக்கு சாதனை செய்துவிட்டால், வளர்ந்த நாடுகள் அந்த சாதனையையும், அந்த அறிவையும், அந்த உபகரணங்களையும், மனித உழைப்பும் மேற்கத்திய நாடுகள் கொடுத்ததிலிருந்துதான் வந்தது என்று தேட முயல்வது ஒரு சுவாரஸ்யமான விஷயம்.

உதாரணமாக, சூலை 1980இல் நமது முதலாவது துணைக்கோள் செலுத்தும் வாகனத்தை பரிசோதனை செய்து ரோஹினி துணைக்கோளை பூமியைச் சுற்றும் பாதையில் அமைத்தபோது, உலகத்திலேயே தனக்கென துணைக்கோள் செலுத்திக்கொள்ளும் நான்கு நாடுகளில் ஒன்றாக இந்தியா ஆனது. ஆனால் ஒரே வாரத்தில், அமெரிக்காவிலிருந்து வெளியான ஒரு செய்திக்குறிப்பு, நான் நாஸா (Nasa) நிறுவனத்தில் சில மாதங்கள் பயிற்சி எடுத்துக்கொண்டதாகவும், அந்த இடத்திலேயே இந்தத் தொழில்நுட்பத்தை நான் கற்றுக்கொண்டதாகவும் கூறியது. இது உடனே மற்ற மேற்கத்திய செய்தித்தொடர்புச் சாதனங்களிலும் பரவலாக வெளியிடப்பட்டது. இதற்கான காற்று குழாய் பரிசோதனை மேற்கு ஜெர்மனியில் நடந்ததாகவும் அதனால் அவர்கள் இதற்கு ஒருவிதத்தில் உதவி செய்ததாகவும் ஒரு செய்தி வெளிவந்தது. மேற்கத்திய அறிவியலாளர்களின். அவர்களது செய்தித்தொடர்புச் சாதனங்களின், அவர்களது பொறியியலாளர்களின் இந்த செய்திகளைக் கேட்ட போது, திருவனந்தபுரத்தில் இருக்கும் எங்களது விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் எங்கள் தோழர்களுக்கு சிரிப்புத் தாளவில்லை. ஆயிரக்கணக்கான அறிவியலாளர்களும், பொறியியலாளர்களும், அலுவலர்களும் இந்த திட்டத்தில் வரைபடத்தாளிலிருந்து உருவாக்கத்திலிருந்து அதனை விண்வெளியில் செலுத்துவது வரை உழைத்திருக்கிறோம் என்பதும், இந்தத் தொழில்நுட்பம் முழுக்க முழுக்க இந்தியாவினது என்பது எங்களுக்குத் தெரியும்.

எஸ் எல் வி (SLV) என்னும் துணைக்கோள் செலுத்தும் வாகனத்துக்கான கட்டுப்பாடு மென்பொருள் பகிரும் அமைப்புக் கொண்டது. இது உலகத்திலேயே முதன் முதலானது. அதே போல, நாங்களும், அந்த நேரத்தில் இருந்த எந்த துணைக்கோள் செலுத்தும் அமைப்பையும் ஒப்பிட்டாலும் இந்திய துணைக்கோள் செலுத்தும் திட்டத்தில் நிறைய புதிய கண்டுபிடிப்புகள் இருந்தன. நமது தொழில்நுட்பம் அமெரிக்க ஸ்கவுட் என்ற தொழில்நுட்பத்திலிருந்து காப்பி அடிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. ஆனால் அமெரிக்காவின் ஸ்கவுட் தனது 5ஆவது துணைக்கோள் செலுத்தத்தில்தான் வெற்றி பெற்றது. ஆனால் நமது இரண்டாவது மூண்றாவது நான்காவது துணைக்கோள் செலுத்தங்கள் எல்லாம் வெற்றியானவை. இதுவும் நம் நாட்டின் தொழில்நுட்ப திறனின் வலிமைக்கு எடுத்துக்காட்டு.

சரியான குறிக்குச் செலுத்தப்படும் ராக்கெட் குண்டுகள் திட்டத்தில் நான் ஈடுபட்டிருந்தேன். நாங்கள் பிருத்வி ராக்கெட் குண்டுகளை பலமுறை வெற்றிகரமாக செலுத்தினோம். ஆயினும், மேற்கத்திய செய்தித்தொடர்பு நிறுவனங்களும், நமது பத்திரிக்கையாளர்களும் இந்தத் தொழில்நுட்பம் ரஷ்யாவின் தொழில்நுட்பம் என்றே தொடர்ந்து எழுதிவந்தார்கள். உண்மையில் பிருத்விக்கு ஒரு தனிச்சிறப்பான வடிவமைப்பு உண்டு. இது ஒரு கைரோ அமைப்பைக் கொண்டு தனி முறையில் எழுதப்பட்ட மென்பொருள் கொண்டு இயங்குகிறது. இது உலகத்தில் யாரும் முய்ற்சி செய்யாதது. ராக்கெட் பறந்து கொண்டிருக்கும்போதே, அது தன் குறியிலிருந்து எந்த அளவுக்கு மாறுபடுகிறது என்பதைக் கூட கணினியில் துல்லியமாக அளவிடும் முறையையும் கொண்டது. இதில் இன்னும் பல புதிய கண்டுபிடிப்புகளும் இணைக்கப்பட்டிருக்கின்றன. இன்று பிருத்வி ஏவுகணை இதே போன்ற மற்ற நாட்டு ஏவுகணைகளை விட பல மடங்கு சிறந்தது.

மூன்றாவது, முக்கிய மைல்கல்லுக்கு வருவோம். அதாவது அக்னி. 1989இல் அக்னியை வெற்றிகரமாகச் செலுத்தினோம். இதுவரை மூன்று முறை செலுத்தியிருக்கிறோம். ஆச்சரியமாக, இதற்கும், இரண்டு பேர் இதன் வெற்றியை தனதாக்கிக் கொள்ள வந்துவிட்டார்கள். ஜெர்மனி தனது வழிகாட்டு இயந்திரங்களைக் கொண்டுதான் இதை இந்தியா செய்ததாகக் குறிப்பிட்டது. அமெரிக்காவும் தான் கொடுத்த பயிற்சியால்தான் அக்னி ஏவுகணைக்கான அறிவு எனக்குக் கிட்டியது என்று கூறியது. உண்மையில் அதன் வழிகாட்டும் இயந்திரங்கள் முழுக்க முழுக்க இந்தியாவில் செய்யப்பட்டவை. அதில் பல புதிய கண்டுபிடிப்புகள் இருக்கின்றன. நாங்களே உருவாக்கிய கணினியில் நாங்களே உருவாக்கிய மென்பொருள் கொண்டு இதன் வடிவமைப்பு செய்யப்பட்டது. இந்த ஏவுகணை மீண்டும் காற்றுவெளிக்குள் நுழையும் போது ஏற்படும் 3500டிகிரி செல்ஸியஸைத் தாங்குபடிக்கு இதன் பொருள்களும் வடிவமைப்பும் எங்களால் கட்டப்பட்டன. அமெரிக்கர்கள் அவர்களது தொழில்நுட்பம் மூலமாக மட்டுமே இந்தியா வெற்றி பெற முடியும் என்று நினைப்பது நகைப்புக்கிடமானது.

சமீபத்தில், அணு சக்தி நிறுவனமும், டிஆர்டிவோ அமைப்பும் இணைந்து பல அணு குண்டுகளை போக்ரானில் வெடித்தன. ஒரே நேரத்தில் மூன்று கருவிகள் பரிசோதிக்கப்பட்டன. அதன் பின்னர் இரண்டு பரிசோதனைகளும் செய்யப்பட்டன. எதிர்பார்த்த விளைவுகள் எங்களுக்குக் கிட்டின. 125 பூமிமானி நிலையங்களில் இவற்றின் விளைவுகள் பதிவு செய்யப்பட்டன. அணுசக்தியை ஆயுதமாக்கும் தொழில்நுட்பத்திறனை இந்தியா எட்டியதன் குறிப்பீடு இது. எங்களது சாதனையைப் பற்றி எங்களுக்கு மிகவும் பெருமை. ஆனால், அடுத்த நாள் நாங்கள் மேற்கத்திய பத்திரிக்கைகளைப் பார்த்தால், இஸ்ரேல் கொடுத்த வெடிப்பான்கள் மூலமே நாங்கள் இதனைச் செய்தோம் என்ற அறிவிப்புகள் இருந்தன. அமெரிக்காவுக்கு விஜயம் செய்த அறிவியலறிஞர்களும் பொறியியலாளர்களாலுமே இந்த சாதனையை இந்தியா செய்ய முடிந்தது என்ற பழக்கமான குற்றச்சாட்டும் இருந்தது. நாங்கள் உபயோகித்த வெடிப்பான் தொழில்நுட்பம் இதுவரை உலகத்தில் யாருமே உபயோகப்படுத்தாத தொழில்நுட்பம் என்பதை கணக்கில் எடுத்துக்கொண்டு பார்த்தால், இந்தக் குற்றச்சாட்டுகளின் புதிர் புரியும். இன்னும் பல புதிய தொழில்நுட்பங்களும் சாதனைகளும் இந்த அணுகுண்டு வெடிப்புகளில் இந்திய அறிவியலறிஞர்களால் செய்யப்பட்டிருக்கின்றன. ஐஎஸ்ஆர்ஓ, டிஏஈ, டிஆர்டிஓ போன்ற நிறுவனங்களில் வேலை செய்யும் மிகவும் திறமை வாய்ந்த இந்திய பொறியியலாளர்களோடு இணைந்து பணியாற்றியது என் பாக்கியம்.

மேற்கு நாடுகளைத் தவிர வேறு யாராலும் அவர்கள் துணை இல்லாமல் ஒரு தொழில்நுட்பச் சாதனை செய்ய முடியாது என்ற கருத்தை ஏன் பரப்பி வருகின்றன என்பது எனக்குப் புரியாத புதிர். நமது உலக வரலாற்றில் இனவாதம் எப்படி ஒரு முக்கியமான பங்கு வகிக்கிறதோ அது போல தொழில்நுட்பத் துறையிலும் இருக்கிறது என்று தெரிகிறது. வளர்ந்த நாடுகள் அவர்கள் மட்டுமே வானவியல், அணுகுண்டு, ஏவுகணை தொழில்நுட்பத்தில் எந்த சாதனையையும் நிகழ்த்த முடியும் என்று கருதி வருகிறார்கள். நாம் இதை உதாசீனம் செய்துவிட்டு நாம் நமது தொழில்நுட்பத்திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

(இந்தியா 2020 என்ற புத்தகத்திலிருந்து)

Series Navigation