மெய்மையின் மயக்கம்-31

This entry is part [part not set] of 59 in the series 20041223_Issue

சோதிப் பிரகாசம்


(சுரேஷின் மடலுக்கு ஜெய மோகனின் பதில் (26-02-2004) குறித்து…)

புனைவுச் சுவனம்

அழகு என்பதைப் பற்றிய ஓர் ஆய்வுதான் ‘அழகு இயல் ‘ என்பதனை முன்னர் நாம் பார்த்தோம். இது போல, கதை-கவிதைகளைப் பற்றிய ஆய்வினைப் ‘புனைவு இயல் ‘ என்று நாம் அழைக்கலாம். கதை-கவிதைகளின் நுதல் பொருள், மொழிபு, வீச்சு, எனப் பலவற்றையும் இதனுள் நாம் சேர்த்தும் கொள்ளலாம். ஆனால், இங்கே நமக்குப் புனவுச் சுவனம்தான் முக்கியம்!

புறமை வயமான பருப் பொருள்களின் பண்புகள் பற்றிய நமது பான்மைதான் அழகு என்பது நமக்குத் தெரியும். இந்த அழகினைப் பற்றிய நமது சிந்திப்புதான் அழகுச் சுவனம் என்பதும் நாம் அறிந்ததுதான்.

ஆனால், புனைவுச் சுவனம் என்பதோ நமது வாழ்க்கை உறவுகளில் நாம் அனுபவித்துக் கொண்டு வந்து இருக்கின்ற நமது உணர்ச்சிகள் மற்றும் உணர்மங்களின் நேரலடியான சிந்திப்பு ஆகும்; எனவே, அவற்றின் நினைப்பு மட்டும்தான் ஆகும். இந்த நினைப்புச் செயலின் கருவிகள்தாம் கதைப் பாத்திரங்கள்!

அழகான பொருள்களைப் பொறுத்த வரை, அவற்றைப் பார்த்துக் கொண்டு இருக்கின்ற பொழுதே நாம் சுவனித்து விடுகிறோம்; பின்னர் அவற்றை நினைத்துப் பார்த்தும் நாம் சுவனித்துக் கொள்கிறோம். ஆனால், நமது உணர்ச்சிகள் மற்றும் உணர்மங்களின் அனுபவங்களை நேரடியாக நம்மால் சுவனித்து விட முடிவது இல்லை; நேரலடியாகச் சிந்தித்துப் பார்த்து மட்டும்தான் அவற்றை நாம் சுவனித்துக் கொள்கிறோம்!

எனவே, நமது உள்ளத்தின் அனுபவங்களைப் பின்னர் நாம் நினைத்துப் பார்த்துக் கொள்கின்ற நமது ‘நேரலடியான சிந்திப்பு ‘ மட்டும்தான் புனைவுச் சுவனம் என்பது ஆகும்.

ஏனென்றால், நேரடியான நமது சிந்திப்பு என்பது வேறு; நேரலடியான சிந்திப்பு என்பது வேறு!

வெற்றியைப் பற்றிய ‘நேரடியான சிந்திப்பு ‘தான் மகிழ்ச்சி என்பதும் தோல்வியைப் பற்றிய நேரடியான சிந்திப்புதான் துயரம் என்பதும் ஏற்கனவே நாம் அறிந்தவை! இந்தச் சிந்திப்பு ஆற்றலை இழந்து விடுபவர்களால் மகிழ்ச்சியையும் துயரத்தையும் புரிந்து கொள்வதற்கு முடிவதும் இல்லை.

ஆக, நமது உணர்ச்சிகள் மற்றும் உணர்மங்களின் ‘நேரலடியான சிந்திப்பு ‘தான் புனைவுச் சுவனம் என்பது தெளிவு. நமது சொந்த உணர்ச்சிகள் மற்றும் உணர்மங்களுடன் பொருந்தி வருகின்ற புனைவுகளை மட்டும்தான் நம்மால் சுவனித்திடவும் முடியும்.

சுவனிப்பின் அடிப்படைகள்

‘யார் சிரித்தால் என்ன ? யார் அழுதால் என்ன ? ‘ என்று ஒரு பாடல்! இதன் இசையும் இனிமை ஆனதுதான்! ஆனால், இப்படிப் பட்டது ஓர் சுவனிப்புதான் கதை-கவிதைகளின் சுவனிப்பு என்பதும் ஆகும்.

சுவனிப்பினைப் பொறுத்த வரை, யார் அழுகிறார்கள் ? என்பது முக்கியம் அல்ல; யாரோ அழுகிறார்கள் என்பது மட்டும்தான் முக்கியம்! யார் சிரிக்கிறார்கள் ? சங்கடங்களுக்குள் யார் மாட்டிக் கொள்கிறார்கள் ? பாசத்தை யார் பொழிகிறார்கள் ? என்பதும் சுவனிப்பிற்கு முக்கியம் அல்ல!

ஏனென்றால், அழுகை மட்டும்தான் அதற்கு முக்கியம்; பாசம் மட்டும்தான் முக்கியம்!

கொடுரர்களை அடித்து வீழ்த்துகிறான் கதை நாயகன்; இதனைப் படிக்கின்ற அல்லது பார்க்கின்ற நமக்கு உள்ளும் ஒரு வீரம் பிறந்து விடுகிறது. ஏனென்றால், நாம் செய்திட விரும்பிய—-ஆனால், செய்வதற்கு நம்மால் முடியாத—-ஒரு காரியத்தைக் கதை நாயகன் நிகழ்த்தி இருக்கிறான்! கூடு விட்டுக் கூடு பாயும் வித்தையைக் கற்றுக் கொண்டு இருப்பவர்களைப் போல, அவனது பாத்திரத்திற்குள் நாமும் நுழைந்து கொண்டு விடுகிறோம்.

கதறி அழுகிறாள் கதை நாயகி! நமது உள்ளத்தின் கதறல்களை நமக்கு அது நினைவு படுத்துகிறது. அவளது பாத்திரத்துக்குள் நுழைந்து கொண்டு நாமும் அழுது தீர்த்துக் கொண்டு விடுகிறோம்.

எனினும், இந்தச் சுவனத்தின் தரங்களில் வேறுபாடுகள் இல்லாமல் இல்லை.

சுவனிப்பின் தரங்கள்

ஏழை, எளிய மக்களைக் கொடுமைப் படுத்தித் தன் வாழ்க்கையை வளப் படுத்திக் கொண்டு வருகிறான் ஒரு கொடுரன்; அவனை எதிர்த்துப் போரிட முடியாமல் மக்கள் தவிக்கிறார்கள்; திடிர் என்று அங்கே ஒரு நாயகன் தோன்றுகிறான்; ஒரு வீரனாகவும் அவன் இருக்கிறான்.

கொடுரர்கள் அழிக்கப் படுகிறார்கள். கடவுளை வேண்டி, வேண்டிக் களைத்துப் போன மக்கள் இந்த நாயகனைத் தங்கள் கடவுளாகப் பாவித்துக் கொண்டாடத் தொடங்கி விடுகிறார்கள்.

இம் மாதிரியான கதைகளை எல்லோரும் சுவனிக்காமல் இருப்பது இல்லை என்ற போதிலும், கையறு நிலையில் கவல் கொண்டு நிற்கின்ற மக்களோ இவற்றைப் பெரிதும் சுவனிக்கிறார்கள்.

அன்றாடம் காய்ச்சிகளாகவும் அரை வயிற்றுக் கஞ்சியில் முழு நிறைவைக் கண்டு ஆக வேண்டியவர்களாகவும் அரை-உழைப்பாளர்களாகவும் அரை-குறையான சிற்றுடைமை யாளர்களாகவும் தங்கள் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு ஆக வேண்டிய சிற்றுடைமை மக்களுக்கு இது போன்ற கதைகள்தாம் மிகவும் பிடித்து இருக்கின்றன.

இந்தக் கலைத் தரத்தினை ஒதுக்குபவர்கள் இருக்கலாம்; கலையின் சுவனிப்பாக இதனை ஏற்றுக் கொள்ள முடியாது என்று வாதிடுபவர்களும் இருக்கலாம்; இவர்களைப் பொறுத்த வரை, கீழ்த் தரமான ஒரு சுவனிப்பு இது; ஆனால், இதுதான் சிற்றுடைமை யாளர்களின் சுவனிப்பு! கீழ்த் தரம் என்று இதனை வரையறுத்திட முயல்வதோ வீண் பெருமையின் சித்தரிப்பு!

இதே கொடுரனை மீண்டும் நாம் எடுத்துக் கொள்வோம். இவனை இன்னொரு கதை நாயகன் எதிர்க்கிறான்; ஆனால், தன்னம் தனியாக அல்ல! அவனால் பாதிக்கப் பட்ட மக்களை அணி திரட்டிக் கொண்டு அவன் வருகிறான்; பாதிக்கப் பட்ட மக்களே அவனை அடித்து வீழ்த்துகிறார்கள்.

மேல் தரமான கதை என்று இதனைப் புரட்சி வாதிகள் பாராட்டுகிறார்கள். உழைப்பாளர் வருக்கத்தினரையும் இந்தக் கதை கவர்கிறது. ஆனால் இதுவோ, உழைப்பாளர் வருக்கத்தின் சுவனிப்பு!

ஆண்களின் ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடுகின்ற புரட்சிப் பெண்—-கற்பு என்னும் பழைய கருத்தமைவினைத் தகர்த்து எறிந்து, மனம் ஒத்த உறவுகளில் மட்டும் அதனைக் காண்கின்ற புதுமைப் பெண்—-அதனை ஏற்றுக் கொள்கின்ற ஒரு புதுமையான ஆண்—-பழைய கற்பின் கரசியமான கவடத் தனங்களைத் தகர்த்து எறிகின்ற கதைகள்—-என்று புது வகையான வாழ்க்கைச் சூழல்களுக்கு ஏற்ப வடிவமைக்கப் படுகின்ற புதிய கதைகளோ ‘புதிய அலை ‘களாகச் சுவனர்களுக்குத் தெரிகின்றன.

ஆக, அவரவர் வாழ்க்கைச் சூழல்களைப் பொறுத்ததுதான் அவரவர்களின் சுவனிப்பே ஒழிய, மேல்-கீழ் என்னும் தற் பெருமையான தரங்களைப் பொறுத்தது அல்ல!

ஜெய சாந்தியின் பரணி

ஜெய சாந்தி எழுதி இருக்கின்ற ‘பரணி ‘ கதையை நாம் எடுத்துக் கொள்வோம்.

கற்பழிக்கப் பட்டுக் கை விடப் பட்ட ஒரு பஞ்சமர் பெண்ணை மணந்து கொண்டு இருக்கின்ற ஒரு சூத்திரரின் கதை இது! இவர்களின் மகள்தான் பரணி! ஒரு தலித்தாக மட்டும் தன்னை இவள் வரித்தும் கொள்கிறாள்.

கிறிஸ்தவர்கள் இடையே நிலவிக் கொண்டு வருகின்ற சாதிப் பான்மைகளை இதில் கடுமையாக ஜெய சாந்தி தாக்கி இருக்கிறார்; தேசிய உரிமைக்காகப் போராடிக் கொண்டு வருகின்ற ஈழத்து மக்களின் துயரங்களும் சிறப்பாக இதில் சித்தரிக்கப் பட்டு இருக்கின்றன.

ஒரு மருத்துவக் கல்லூரியில் பரணி பயின்று கொண்டு இருக்கிறாள். அவளைக் காதலிக்க முற் படுகின்ற ஒரு சூத்திர இளைஞனிடம் ஒரு நாள் அவள் கூறுகிறாள்—-என்னை நீ காதலிப்பதாக இருந்தால் இரண்டு கொலைகளை நீ செய்ய வேண்டியது இருக்கும் என்று!

கொல்லப் பட வேண்டியவர்களில் ஒருவன் அவளது தாயைக் கற்பழித்து இருந்த சூத்திரன்; இன்னொருவனோ ஒரு சிறுமியைப் பலவந்தப் படுத்தி இருந்த ஒரு காட்டு மிராண்டி!

ஒரு நாள், அவளது தாயைக் கற்பழிக்க உதவிய பஞ்சமன் ஒரு சந்தையில் வெட்டி வீழ்த்தப் படுகிறான்.

செய்தி கேட்டுப் பரணியின் தாய் மகிழ்ச்சி அடைகிறாள்; தானே அவனை வெட்டி விட்டது போன்ற ஒரு வெறியில் அவள் திளைக்கிறாள். இதனைப் பார்க்கின்ற பரணியும் மகிழ்ச்சி அடைகிறாள்.

தனது தாய்க்கு நேர்ந்து இருந்த கொடுமையைச் சித்தரித்துப் பரணி எழுதியதாக ஒரு சிறு கதையும் ‘பரணி ‘ கதையில் உண்டு. இந்தச் சிறு கதையின் பெருங் கதைதான் ‘பரணி ‘யும் கூட! இந்தக் கதையின் முன்னுரையை எழுதி இருப்பவளோ பரணியின் தாய்! நல்ல முயற்சிதான்!

ஒரு தமிழ்ப் பேராசிரியரான ஜெய சாந்தியைச் சந்தித்துப் பேசுகின்ற வாய்ப்பு எனக்கு ஒரு நாள் கிடைத்தது.

ஒரு சாதிப் போர்க் களத்தையே உங்கள் கதையின் இறுதியில் நீங்கள் சித்தரித்து இருக்கிறீர்கள்; முடிவு என்ன ஆயிற்று ? என்று நீங்கள் கூற வில்லை; ஆனால், தீராத கோபத்தை நெஞ்சில் வளர்த்துக் கொண்டு வந்து இருக்கின்ற பரணியின் கையில் ஓர் அரிவாளையாவது நீங்கள் கொடுத்து இருக்கக் கூடாதா ? குறைந்தது, பரணி எழுதி இருப்பதாக நீங்கள் எழுதி இருக்கின்ற சிறு கதையிலாவது அவளிடம் ஓர் அரிவாளை நீங்கள் கொடுத்து இருக்கலாமே! என்று அவரை நான் கேட்டேன்.

அந்தக் காலம் இன்னும் வர வில்லை என்று ஏசுவின் பாணியில் அவர் பதில் உரைத்தார்.

ஒரு கிறிஸ்தவர் அவர்! தலித்துகளைப் பற்றித் தலித்துகள்தாம் எழுதிட வேண்டும் என்று ஒரு சில தலித் எழுத்தாளர்கள் கூறிக் கொண்டு வருவதையும் எனக்கு அவர் சுட்டிக் காட்டினார். இதனால்தான், ஓர் ஆண் சூத்திரருக்கும் பெண் பஞ்சமருக்கும் பிறந்தவளாகப் பரணியை அவர் சித்தரித்து இருந்தார் போலும்!

எனினும், ஜெய சாந்தியின் கருத்துகளை நாம் புறக்கணித்து விட முடியும் போல் நமக்குத் தோன்றிட வில்லை.

ஒருத்தி

‘ஒருத்தி ‘ என்று ஒரு திரைப் படம்; அண்மையில் இது சென்னையில் திரையிடப் பட்டு இருந்தது; தனது அடையாளத்தைத் தேடுகின்ற ஒரு பெண்ணின் கதை என்று இது விளம்பரப் படுத்தப் பட்டும் இருந்தது.

நூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட ஒரு கதைதான் இதன் நுதல் பொருள்! அழகான ஓர் ஓவியம் போல் எடுக்கப் பட்டு இருக்கின்ற இந்தத் திரைப் படத்தில் உணர்ச்சிகளின் கொந்தளிப்பு இல்லை; எனவே, போதை இல்லை; எனவேதான் கூட்டமும் இல்லை! காட்டாமல் எப்படிக் கூட்டம் வரும் ?

சுற்று வட்டாரத்துக் கிராமங்களில் இருந்து சற்று ஒதுங்கிய வண்ணம்தான் இந்தக் கிராமத்துச் சூத்திர மக்கள் வாழ்ந்து கொண்டு வருகிறார்கள்; ஏனென்றால், சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்னர்தான் இங்கு வந்து அவர்களின் மூதாதையர்கள் குடியேறி இருந்தார்கள்! எனவேதான், தாழ்த்தப் பட்ட மக்களை மிகவும் கொடுமையாக நடத்துவதற்கு அவர்கள் முற்பட வில்லை. எனினும், ஒரு சாதிய மரியாதையை அவர்கள் எதிர் பார்க்காமலும் இல்லை.

தமக்கு நேர் எதிரில் நடந்து வருகின்ற ஒரு தாழ்த்தப் பட்ட சிறுவனை ஒரு சூத்திரர் அடித்து விரட்ட, அதனைத் தனது தாயாரிடம் அவன் எடுத்துக் கூற, அவர்களுக்கு எதிரில் நிற்காமல் ஒதுங்கி நின்று கொள்ள வேண்டும் என்று அவனது தாயார் அவனுக்கு அறிவுரை வழங்க, கோமணத்தை அவிழ்த்து விட்டுக் கொல்லைக்கு இருந்து கொண்டு இருக்கின்ற சில சிறுவர்கள், அந்த வழியாகச் சென்று கொண்டு இருக்கின்ற ஒரு சூத்திரரைக் கண்டதும் எழுந்து தங்கள் குண்டிகளை அவருக்குக் காட்டிக் கொண்டு நிற்க, சிரிப்பால் அரங்கமே அதிர்ந்து போகிறது.

ஆடுகளை மேய்த்துக் கொண்டு தங்கள் வாழ்க்கையை மக்கள் ஓட்டிக் கொண்டு வருகின்ற ஒரு கிராமத்தின் வரலாறு இது; இதனால்தான், ஒரு வரலாற்றுப் படமாக இது எடுக்கப் பட்டும் இருக்கிறது எனலாம்.

கூலிக்கு ஆடுகளை மேய்த்துக் கொண்டு வருகின்ற ஒரு தாழ்த்தப் பட்ட பெண்ணாக இதில் செவனி வருகிறாள்; சிவப்பாகவும் இருக்கிறாள்; எனினும், கொஞ்சம் அதிகமான சிகப்பு! தனது குடும்பத்தின் ஆட்டைத் தானே மேய்த்துக் கொண்டு வருகின்ற ஒரு சூத்திரனைக் காதலித்து அவனுடன் களவு ஒழுக்கத்திலும் அவள் ஈடு படுகிறாள். தனது இரண்டாம் தாரமாக அவளைக் கட்டிக் கொள்வதாக அவளுக்கு அவன் வாக்குறுதியும் அளிக்கிறான்.

ஊருக்குப் பொதுவான ஒரு ‘கிடை ‘யில்தான் அவ் ஊரின் மொத்த ஆடுகளும் அடைத்து வைக்கப் படுகின்றன. அந்தக் கிடைதான் அந்த ஊரின் பொருளாதார அடிப்படை! எனவே, அந்தக் கிராமத்தின் சட்டமும் ஒழுங்கும் நீதியும் அந்தக் கிடையினைச் சுற்றித்தான் சுழன்று ஆக வேண்டும் என்பது வெளிப்படை! இப்படித்தான் திரையில் இந்தக் கிராமத்தின் வரலாறும் சித்தரிக்கப் பட்டு இருக்கிறது. மக்களின் வேளாண்மை முயற்சிகளோ மிக மிகக் குறைவு!

நீதி வேண்டி முறையீடு செய்பவர்கள் இந்தக் கிடையை மறிக்கிறார்கள்; விசாரணை நடத்தப் படுகிறது; தீர்ப்பும் வழங்கப் பட்டு விடுகிறது.

ஒரு தண்டல் காரராக இந்தக் கிராமத்திற்கு வருகின்ற ஆங்கிலேயரைத் துணிச்சலுடன் செவனி சந்திக்கிறாள்; மக்கள் செலுத்துகின்ற வரிப் பணத்தை ஒழுங்காகக் கட்டாமல் அரசாங்கத்தை ஜமின்தார் ஏமாற்றிக் கொண்டு வருவதை எடுத்து உரைக்கிறாள். அரசாங்கத்திற்குப் பரிந்துரைகளை எழுதிக் கொண்டு இருக்கின்ற ஆங்கிலேயரின் தூவலை வியப்பாகவும் அவள் கவனிக்கிறாள்.

படிப்பதற்கும் எழுதுவதற்கும் தானும் கற்றுக் கொள்ள வேண்டும் என்னும் எண்ணம் செவனிக்குள் முளை விடுகிறது. ஊரை விட்டு அவர் செல்கின்ற பொழுது அவரது தூவலை அவள் எடுத்து வைத்தும் கொள்கிறாள்.

விளைவாக, வரிப் பணத்தை நேரடியாக அரசாங்கத்திற்கே அக் கிராமத்து மக்கள் செலுத்திக் கொள்ளலாம் என்றும் அவர்கள் வரி செலுத்திக் கொண்டு வருகின்ற நிலங்கள் அவர்களுக்கே சொந்தம் என்றும், ஓர் உத்தரவினை அரசாங்கம் பிறப்பிக்கிறது. மக்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள்; செவனியைப் பாராட்டுகிறார்கள்.

ஒரு நாள், தன்னைக் காதலித்த சூத்திரனுக்குக் கலியாண ஏற்பாடுகள் நடை பெற்றுக் கொண்டு இருப்பதை அறிந்த செவனி கிடையை மறிக்கிறாள்; அவை கூடுகிறது!

செவனியின் துணிச்சலால் நிலச் சொந்தக் காரர்களாக மாறி இருந்த அவையினர் அவளுக்கு நன்றி செலுத்துகிறார்கள்; அவளுக்காகச் சாதி மரபுகளை விட்டுக் கொடுப்பதற்கும் நன்றியுடன் அவர்கள் முன் வருகிறார்கள்; கூடவே, ஒரு நிபந்தனையையும் அவர்கள் விதிக்கிறார்கள்—-தான் காதலித்த சூத்திரனை அவள் கைப் பிடித்துக் கொள்ளலாம்; ஆனால், ஊரை விட்டே அவர்கள் இருவரும் ஓடிப் போய் விட வேண்டும் என்று!

நிபந்தனையைச் செவனி எதிர்க்கிறாள்; இரண்டு பெண்களுடன் அவளது காதலனுக்குக் கலியாணம் நடை பெறுகிறது; செவனியின் கனவாய் இறுதியில் விரிவதோ ஆங்கிலேயரின் அந்தத் தூவல்!

கதைகளும் காலமும்

அந்தக் காலத்தின் இந்தச் செவனி இந்தக் காலத்தில் என்ன செய்து இருப்பாள் ?

அந்த ஊரையே ஒரு கலக்குக் கலக்கி இருப்பாள்; காரியம் கை கூடிட வில்லை என்றால் காவல் துறையையும் அணுகி இருப்பாள்!

சூத்திரர்கள் பணிந்து இருக்கலாம்; தனது தவற்றினை உணர்ந்து காதலன் திருந்தி இருக்கலாம்; அல்லது, செவனியின் குடிசையைக் குடும்பத்துடன் நெருப்புக்குச் சூத்திரர்கள் இரையாக்கியும் இருக்கலாம்.

‘பழையன கழிதலும் ‘ கவுரியை நாம் எடுத்துக் கொள்வோம். 1980களின் கவுரி இவள்!

தனது தோழியின் வீடு என்று எண்ணிப் பாத்திரக் கடைக் காரரின் வீட்டுக்குள் நுழைந்த அவளைச் சாதியின் பெயரைச் சொல்லித் தோழியின் தந்தை இழிவு படுத்துகிறான். எந்த எதிர்ப்பும் இல்லாமல் அந்த இழிவினைக் கவுரி ஏற்றுக் கொள்கிறாளே, எப்படி ? காலம் கனிந்து இருக்க வில்லை என்பதனால்தானா ?

ஒரு வேளை, இன்று அப்படி நடந்து இருந்தால் அவள் என்ன செய்து இருப்பாள் ? தெரிய வில்லை நமக்கு!

எப்படியும், படித்து அப் பொழுதே பட்டம் பெற்று இருந்த கவுரி, இன்று ஏதேனும் ஒரு பதவியில் அமர்ந்து கொண்டு இருக்கலாம்; அத் தகைய இழிவுகளைச் சந்திக்கின்ற வாய்ப்பு எதுவும் அவளுக்கு இன்று நேராமலும் இருக்கலாம்.

எனினும், இன்றும் நடை பெற்றுக் கொண்டு வருகின்ற சாதிக் கொடுமைகளுக்கு எதிராக அவள் என்ன செய்து இருப்பாள் ?

தலித் ஒருவரின் வாயில் திண்ணியத்தில் மலம் திணிக்கப் பட்டதே, அதற்கு எந்த வகையில் தனது எதிர்ப்பினை இவள் தெரிவித்து இருந்து இருப்பாள் ? தெரிய வில்லை; தெரியும் படியாகவும் எதுவும் இல்லை!

எப்படியும், ‘ஒரு பருப் பொருளாய் வாயில் மலம் இறங்குகின்ற பொழுது ‘ என்று இவள் கவிதை பாடி இருக்கலாம்; வேறு எதையும் செய்து விட முடியாத எவனோ ஒருவன், எல்லோருடைய வாயிலும் அந்த மலத்தைத் திணித்து விட்டுச் சாதி மலம் என்று அதற்கு விளக்கமும் அளித்து இருக்கலாம்.

நாக்பூரில் கோவில் நுழைவுப் போராட்டத்தில் மிகவும் தீவிரமாக ஈடு பட்டுக் கொண்டு வந்து இருந்த தாழ்த்தப் பட்ட மக்களுக்கு, ‘போராட்டத்தைக் கைவிடுங்கள் ‘ என்று அம்பேத்கர் அறிவுரை வழங்கினாரே, அதையும் அந்தப் போராளிகள் ஏற்றுக் கொண்டு இருந்தார்களே, அப்படி என்றால், ஜெய சாந்தி கூறுவது போல, காலம் கனிந்திட வில்லை என்பதுதான் உண்மையா ?

‘ஒருத்தி ‘யின் செவனிக்கோ கல்வியின் அவசியம் தெரிந்து இருந்த அளவுக்கு நிலத்தின் அவசியம் தெரிந்து இருக்க வில்லை. ஆங்கிலேயரின் தூவலை எடுத்துக் கொண்டு இருந்த அவளுக்கு, தனக்கும் நிலம் வேண்டும் என்று அவரிடம் கேட்பதற்குத் தோன்றிட வில்லை!

எப்படியும், படித்த தலித்துகளைப் போல நிலவுடைமைத் தலித்துகள் ஒதுங்கிச் சென்றிட மாட்டார்கள் என்பது மட்டும் உறுதி! கல்வியை விட அதிகமாக அவர்களுக்கு நிலம்தான் தேவை என்பதும் உறுதி!

சரி, இப்படி எல்லாம் சிந்திக்கின்ற இன்னொரு திரைப்பட இயக்குனர் என்ன செய்வார் ? ‘வீர லட்சுமி ‘ என்று ஒரு படத்தை எடுத்துப் புதுமைப் புனைவினை அறிமுகப் படுத்துவார், அவ்வளவுதான்!

ஆக, காலத்திற்கு ஏற்ற கதைகள் புனைந்திடப் படாமல் போகின்ற நேரங்களில்தான், புதிய விள்ளனங்கள் விண்ணைப் பிளக்கத் தொடங்குகின்றன என்பது தெளிவு.

எனினும், இங்கே ஒரு கேள்வி எழுகிறது—-போதை ஒன்றுதான் கதை-கவிதைகளின் பயனா ? என்று!

புனைவின் வேறு பயன்கள்

ஒரு சில கதைகளை மட்டும் எடுத்துக் கொண்டு, சமுதாயச் சிக்கல்களைப் பற்றிய விவாதங்களை இப்படி நாம் நடத்திட முடியும் என்றால், கதை-கவிதைகளின் வாசிப்பினால் அறிவுப் பயன் எதுவும் விளைவது இல்லை என்று எப்படி நாம் கூறிட முடியும் ? காரண அறிவு நிலையில் இல்லை என்ற போதிலும், அனுபவ அறிவு நிலையில்

—-பகுத்தறிவு நிலையில்—-ஒரு வகையான அறிவுப் பயனைக் கதை-கவிதைகள் தராமல் இல்லை என்று நாம் எடுத்துக் கொள்ள முடியாதா ? என்று இங்கே கேள்விகள் எழுப்பப் படலாம்.

வெறுமனே ஊதித் தள்ளி விட முடியாத ஒரு கேள்விதான் இது என்பதில் நமக்கு ஐயம் இல்லை. ஆனால், நமது அனுபவ வாழ்க்கையில் இருந்து எழுகின்ற சிக்கல்கள்தாமே, இவை!

மு. வரதராசனாரின் கதைகளில் எப் பொழுதும் ஒரு பெரியவர் வருவார்; அற நெறிகளைப் போதித்துக் கொண்டும் அவர் இருப்பார்!

ஆனால், இந்த அற நெறி உரைகளைத் திருக் குறளில் நாம் காண முடியும்; வேறு நூல்களிலும் நாம் காண முடியும். எந்தக் கதைக்கும் தேவை இல்லாமல், தங்கள் பிள்ளைகளுக்குப் பெற்றோர்கள் அற நெறி உரைகளை வழங்கிக் கொண்டுதான் வரவும் செய்கிறார்கள்.

வீட்டுப் பணியாளர் சட்டம் பற்றிய ஒரு விவாதக் கூட்டத்தினை நடத்துகின்ற வாய்ப்பு ஒரு நாள் எனக்குக் கிடைத்தது. வீட்டு வேலைக்குச் செல்கின்ற பெண்களிடம் அவ் வீட்டு ஆண்கள் தப்பாக நடந்து கொள்கிறார்கள் என்றும் இப்படி எல்லாம் நடக்கக் கூடாது என்று அச் சட்டத்தில் ஒரு பிரிவு சேர்க்கப் பட வேண்டும் என்றும், பல பெண்கள் வாதிட்டார்கள்.

வழக்கறிஞர் அருண் மொழி, பேராசிரியர் சரசுவதி, முதலியோரும் பிற சமுதாயப் பணியாளர்களும் கலந்து கொண்டு இருந்த ஒரு கூட்டம் அது!

சட்டம் என்பது திருக் குறள் அல்ல என்று நான் கூறியதும் எனக்கு ஏராளமான எதிர்ப்புகள் கிளம்பி வரத் தொடங்கின. வழக்கறிஞர் அருண் மொழி, பேராசிரியர் சரசுவதி, ஆகியோருக்கும் கூட எனது கூற்றுச் சரியானதாகத் தெரிய வில்லை.

கொலை செய்யக் கூடாது என்று சட்டம் எதுவும் இருக்கிறதா ? என்று அவர்களை நான் கேட்டேன். ஆனால், இதுவும் அவர்களுக்கு அதிர்ச்சியாகத்தான் இருந்தது.

ஏன், இல்லையா ? என்று என்னைச் சிலர் கேட்டார்கள்.

கொலை செய்யக் கூடாது என்று எந்தச் சட்டமும் கூறிட முடியாது; கொலை செய்தால் என்ன தண்டனை என்று மட்டும்தான் அது கூறிட முடியும். ஏனென்றால், ஒரு குடி மகனை இன்னொரு குடி மகன் கொலை செய்வதைச் சட்டத்தால் தடுத்து நிறுத்தி விட முடியாது என்று நான் விளக்கம் அளித்தேன்.

சட்டத்தால் இப்படிக் கூறிட முடியாத அறிவுரைகளைத் தாராளமாகக் கதை-கவிஞர்கள் கூறிக் கொண்டு வரலாம். ஆனால், எல்லோருக்கும் தெரிந்து இருக்கின்ற அற நெறி உரைகள்தாம் இவை! காலத்திற்குக் காலம் இவை மாறிக் கொண்டும் வந்து இருக்கின்றன.

‘கோகிலா அப்படி என்ன சொல்லி விட்டாள் ? ‘ என்றோ, அல்லது, கொஞ்சம் வேற்றுமையான ஒரு பெயரிலோ ஜெய காந்தன் ஒரு கதை எழுதி இருந்தார். மிகவும் உணர்ச்சி கரமான இந்தக் கதையைக் கலைக் கதை என்று நாம் அழைக்கலாம். தாஸ்தா வெஸ்கியின் ‘:ப்ரதர்ஸ் கரமஸ்ஜோவ் ‘ கதை கூட உணர்ச்சி கரமான ஒரு கதைதான்!

ஆனால், முற்றிலும் உணர்ச்சி கரமான கதைகள் என்று ஜெய மோகனின் கதைகளை நாம் வரையறுத்திடவே முடியாது. ஏனென்றால், அவரது கதைகளில் விவாதங்கள் இருக்கும். ஒரு வேளை, இந்த விவாதங்களுக்காகத்தான் அவரது கதைகளைப் பலரும் விரும்பிப் படித்துக் கொண்டும் வருகிறார்கள், போலும்!

ஜெய மோகனின் ‘நிழலின் குரலி ‘னை நாம் எடுத்துக் கொள்வோம். உண்மையில் அதில் அவர் விவாதிப்பது ஸ்தாலினிசத்தின் கேடுகளைத்தாம்! ஆனால், மார்க்சியத்தின் கேடுகள்தாம் அவை என்னும் ஒரு தவறான கருத்தினைத்தான் அதில் அவர் பறை சாற்றுகிறார்.

திரித்துக் கூறி மார்க்சியத்தைச் சிதைப்பது எப்படி நேர்மையான ஒரு விவாதம் ஆகிட முடியும் ? இப் பொழுதோ, ‘மார்க்சியம் காலாவதி ஆகி விட்டது ‘ என்று வாதிடுவதற்கு அவர் தொடங்கி இருக்கிறார்.

எனவேதான், கதை-கவிஞர்களின் விவாதங்களை வினயமாக யாரும் எடுத்துக் கொள்வதில் எந்தப் பொருளும் இல்லை. மாறாக, அவ் அவற்றிற்கு உரிய நூல்களில்தாம் அவ்வவ் விவாதங்களை நாம் தேடியாக வேண்டும்.

கதை-கவிதைகளில் விவாதங்கள் தேவை இல்லை என்று கலைப் பற்றாளர்கள் கூறிக் கொண்டு வருவதும் இதனால்தானோ ?

ஆக, கதை-கவிதைகளின் வாசிப்பினால் அறிவுப் பயன் எதுவும் ஏற்பட்டு விடுவது இல்லை என்பது தெளிவு.

இனி, இறுதியாக, புனைவு இலக்கியம் பற்றிய ஜெய மோகனின் கருத்தமைவிற்கு நாம் வருவோம்—-ஆழ் மனத்துடன் உரையாடல் என்னும் அவரது கருத்தமைவிற்கு!

09-11-2004

தொடரும்

Series Navigation

சோதிப் பிரகாசம்

சோதிப் பிரகாசம்