மெய்மையின் மயக்கம்-27

This entry is part [part not set] of 53 in the series 20041125_Issue

சோதிப் பிரகாசம்


(சுரேஷின் மடலுக்கு ஜெய மோகனின் பதில் (26-02-2004) குறித்து…)

மனித இயல்பு

மனித இயல்பு என்னும் ஒரு கருத்தமைவினை நாம் உருவாக்கிக் கொள்ள முடியும் என்று நாம் கூறினால், அதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதற்கு உடனடியாக ஜெய மோகன் முன் வருவார் என்பதில் அணுவளவும் ஐயம் இல்லை.

ஆனால், அவரையும் முந்திக் கொண்டு அ. மார்க்ஸ் கூறுவார்—-அது முடியவே முடியாது என்று! ஏன் ? என்று கேட்டால் அவர் விளக்கம் அளிப்பார்—-மனிதர்கள் பன்மைத் தன்மை வாய்ந்தவர்கள்; அவர்கள் இடையே பொதுத் தன்மை என்று எதுவும் இருந்திட முடியாது; என்று!

ஏன், தனி மனிதன் என்பதும் தனி மனிதனின் விடுதலை என்பதும் கூட வெறும் கற்பனைதான் என்று கூறுபவர்களும் சிலர் இருக்கலாம்; தனி ஒரு விடுதலை என்பதனை என்றைக்கும் மனிதன் எய்திடவே முடியாது என்றும் அவர்கள் வாதிடலாம்.

ஆனால், இவர்கள் சொல்பவை அனைத்தும் உண்மை என்பதுதான் இதில் வேடிக்கை! மூளையைக் கொஞ்சம் நோக வைத்துப் பன்மைத் தன்மை என்பதற்குள் சற்றே இவர்கள் உற்றுப் பார்த்தால் போதும், பொதுத் தன்மை என்பதனைக் காண்பதற்கு இவர்களால் முடியாமல் போகாது என்பதுவோ அதனையும் விட வேடிக்கை!

தனி மனிதன்

இயற்கையாகப் பிறக்கின்ற ஒவ்வொரு மனிதனும் ஒரு தனி மனிதனாகத்தான் பிறந்து கொண்டு வருகிறான். அவனுக்கு என்று ஓர் உடல்; அவனுக்கு என்று ஓர் உள்ளம்; என்று அமைவுற்றுப் பிறந்து வந்து இருப்பவன் இவன்!

இயற்கை முறையான இந்தத் தனி மனிதன், சமுதாய முறையாகவும் ஒரு தனி மனிதனாகத்தான் விளங்கிக் கொண்டு வந்து இருக்கிறானா ? என்பதுதான் இங்கே கேள்வி.

ஆணும் பெண்ணும் சமம் என்று கூறிப் பெண்களின் சமன்மை உரிமைக்காகப் போராடிக் கொண்டு வருபவர்கள், ஆண்-பெண்களின் இயற்கைச் சமன்மையை அல்ல, மாறாக, இயற்கையையும் மீறிய ஒரு சமுதாயச் சமன்மையைத்தான் வலியுறுத்திக் கொண்டு வருகிறார்கள் என்பது நாம் அனைவரும் அறிந்தது.

ஒரு சமுதாயச் சூழலில் பிறக்கின்ற தனி ஒரு மனிதன், ஒரு குடும்பத்தின் மனிதனாகவும்—-குடும்பத்தைக் கட்டுப் படுத்துகின்ற ஒரு குலத்தின் மனிதனாகவும்—-நம் நாட்டின் நிலவரங்களைப் பொறுத்த வரை, ஒரு சாதியின் மனிதனாகவும்தான்—-வளர்ந்து கொண்டு வந்து இருக்கிறான்.

அவனது அடையாளம், ஒரு தனி மனித அடையாளம் அல்ல; ஒரு குடும்பத்தின்—-குலத்தின்—-அடையாளம்; ஒரு சாதியின் அடையாளம்! இந்த அடையாளத்தை மீறிய சமுதாய ஒப்பளிப்பு எதுவும் அன்று அவனுக்கு இருந்தது இல்லை.

அவனது சிந்தனைகள், ஆசைகள், உழைப்பு நிலவரங்கள், வாழ்க்கைச் சாதனங்களின் நுகர்ச்சிகள், ஆண்-பெண் உறவுகளின் வரைமுறைகள், முதலிய அனைத்திலும் இந்தச் சாதிய அடையாளத்தை மீறிட முடியாமல் அவன் கட்டுப் படுத்தப் பட்டு இருந்தான்.

உண்ணும் போதும் உறங்கும் போதும் சமுதாய உறவு கொள்ளும் போதும் என, எந் நேரமும் ஒரு சாதியின் மனிதன் மட்டும்தான் அவன்; ஒரு தனி மனிதன் அல்லன்!

பண்ணையச் சமுதாயத்து ஆண்டை-அடிமைகளின் உறவு முறைகள் எப்படி இருந்தன என்பது நமக்குத் தெரியும்.

உடலோடும் உள்ளத்தோடும் ஒரு நாளில் இருபத்து நான்கு மணி நேரமும் ஓர் ஆண்டானாக மட்டும்தான் நிலவுடைமைக் காரன் இருந்தான்; ஓர் அடிமையாக மட்டும்தான் உழைப்பாளி இருந்தான்!

அடிமைக்கு—-விரும்பியதை உண்ணுகின்ற உரிமை இருந்தது இல்லை; அவனது உடையும் இருப்பிடமும் ஆண்டானால் மட்டும்தான் தீர்மானிக்கப் பட்டும் இருந்தன!

உழைக்காமல் அவன் உண்டு விட முடியாது; கிடைப்பதை உண்ணாமல் பட்டினி கிடந்து அவன் மடிந்திடவும் முடியாது! ஏனென்றால், ஆண்டானுக்குத் தேவையான ஓர் எந்திரம் அவன்! இயற்கை முறையான சமன்மையினையும் மீறிய ஒரு சமுதாய அடிமைப்பாடு இது!

ஆனால், முதலாண்மைச் சமுதாயத்தின் நிலவரங்களோ முற்றிலும் வேறு ஆனவை; புரட்சிகரம் ஆனவையும் கூட!

தனிமை மனிதன்

இந்த மாபெரும் மண் உலகில் ஒரே ஒரு மனிதப் பிறவி மட்டும் தோன்றி வந்து இருந்ததாக நாம் கற்பனை செய்து கொள்வோம்.

மலைகள், மரங்கள், மிருகங்கள், முதலிய அனைத்தும் இந்த மனிதப் பிறவிக்குதான் சொந்தம்; அனைத்திற்கும் அதுதான் அரசும் ஆகும். ஆனால், சொந்தம் என்றோ அரசு என்றோ அதற்கு எந்த ஒரு வகைப்பாடும் தேவைப் பட்டு இருந்து இருக்காது; இவற்றை எல்லாம் புரிந்து கொண்டும் அது இருந்து இருக்காது!

தன்னைப் பற்றி அதற்கு என்ன தெரிந்து இருக்கும் ? எதுவும் தெரிந்து இருக்காது! பசி என்றோ நுகர்ச்சி என்றோ கூட அதற்கு எதுவும் தெரிந்து இருந்து இருக்குமா ? என்பது கூட கொஞ்சம் ஐயத்திற்கு உரியதுதான்!

தான் ஒரு மனிதப் பிறவி என்பதை இது புரிந்து கொள்ள வேண்டும் என்றால் இதற்கு இன்னும் ஒரு மனிதப் பிறவி தேவை! ஓர் ஆண் என்றோ அல்லது பெண் என்றோ தன்னை இது புரிந்து கொள்வதற்கோ இன்னும் ஒரு பெண்ணோ அல்லது ஆணோ இதற்குத் தேவை!

இதனால்தான், மற்ற மனிதர்களின் மூலமாகத்தான் தனது அடையாளத்தை—-தான் யார் ? என்பதை—-ஒரு மனிதன் புரிந்து கொள்கிறான் என்று கார்ல் மார்க்ஸ் கூறினார் போலும்!

ஆண்டான்-அடிமைச் சமுதாயத்தைப் பொறுத்த வரை, தான் ஓர் ஆண்டான் என்பதை ஆண்டானும் அடிமை என்பதை அடிமையும் தெரிந்துதான் வைத்து இருந்தார்கள். அவர்களின் மொத்த ஆளுமையும் ஆண்டான் ஆளுமை என்றும் அடிமை ஆளுமை என்றும் அடையாளப் படுத்தப் படாமல் இருந்து இருக்க முடியாது.

ஆண்டானின் ஆளுமையாக ஆண்டானின் சுயமையும் (செல்ஃப்), அல்லது தான்மையும் அடிமையின் ஆளுமையாக அடிமையின் சுயமையும், அல்லது தான்மையும் குணவரைப் படுத்தப் பட்டு இருந்தன என்பதுதான் இதற்குப் பொருள்!

இந்தச் சுயமையின், அல்லது தான்மையின் விடுதலையினைத்தான் தனி மனித விடுதலை என்று நாம் அழைக்கிறோம்.

அறிவு, நினைவு, உணர்மை, பான்மை, பண்பாடு, முதலிய வற்றினால் ஆக்கப் பட்டு இருப்பதுதான் ‘சுயமை ‘ என்பது அனைவரும் அறிந்தது. சற்று விரிவு வேண்டுபவர்கள் ‘மனத்தின் விடுதலை ‘யை ஆய்ந்து பார்த்துக் கொள்வது நல்லது.

தனி மனித விடுதலை

விடுதலையான ஒரு தனி மனிதனாக ஒவ்வொரு மனிதனும் வளர்ச்சி அடைவதற்கு உரிய பருமை நிலவரங்களை முதலாண்மை உற்பத்தி முறை உருவாக்கிக் கொண்டு வந்து இருக்கிறது என்பது உண்மைதான். ஆனால், இந்தப் பருமை நிலவரங்களுக்கு ஏற்பத் தங்களது தனி மனித விடுதலையினைச் சாதித்துக் கொள்வதோ மனிதர்களின் பொறுப்புதான் ஆகும்.

அப்படி என்றால், ‘அவன் இன்றி அணுவும் அசையாது ‘ என்று மத வாதிகள் கூறிக் கொண்டு வருவதும் புறமை வயமான ஓர் உண்மைதான் என்பது நமக்குத் தெளிவு ஆகிறது—-ஆனால், தலை-கீழான ஓர் உண்மை! அதே நேரத்தில், நமது மதியையும் நாம் பயன் படுத்திக் கொள்ள வேண்டும் என்று அவர்கள் கூறிக் கொண்டு வருவதோ தலை-மேலான ஓர் உண்மை—-அகமை வயமான ஓர் உண்மை!

‘விதியையும் மதியால் வெல்லலாம் ‘ என்று நம் ஊர்களில் வழங்கிக் கொண்டு வருகின்ற ஒரு பழ மொழியைப் போல் இது இல்லையா ?

இதனால்தான், ‘எதிர் எதிரான கருத்துகளுக்கு இடையே இறுக்கமான பகைமை எதுவும் இல்லை ‘ என்று ஹே:கல் கூறி இருந்தார் போலும்!

எல்லாம் சரிதான்! ஆனால், முதலாண்மை உற்பத்தி முறை வளர்ந்து கொண்டு வருகின்ற இந்தியத் துணைக் கண்டத்தில் இன்னமும் சாதி இழிவுகள் ஒழிந்திட வில்லையே, அப்படி என்றால், தனி மனித விடுதலைக்கு உரிய பருமை நிலவரங்கள் இங்கே பக்குவம் அடைந்து கொண்டு வந்திட வில்லையா ? என்னும் கேள்வி இங்கே எழுகிறது என்பது உன்மைதான்.

ஆனால், இந்தியத் துணைக் கண்டத்தில், முதலாண்மை உற்பத்தி முறையின் வளர்ச்சி தள்ளாடிக் கொண்டு வந்து இருப்பதுதான் இதற்குக் காரணம் ஆகும். இதனால்தான், சாதி இழிவுகளை அழித்து ஒழித்திடத் தக்கப் போர்க் குணத்தின் வளர்ச்சி பாதிக்கப் பட்ட மக்கள் இடையே எழுச்சி கொள்ளாமல் இங்கே தள்ளாடிக் கொண்டு வந்து இருக்கிறது.

நமது ஸ்தாலினிஸ்ட்டுகளோ, தனியார் முதலாண்மையின் விடுதலையான வளர்ச்சிக்கு எதிராக அரசு-முதலாண்மையினை வலியுறுத்திக் கொண்டு வருகிறார்கள். தனி மனித உரிமைகளை விட தனி மனித வயிறுகள்தாம் இவர்களுக்கு முக்கியம்! நாட்டில் தொழிற் சங்க இயக்கங்கள் தொய்வு அடைந்து கொண்டு வந்து இருப்பதற்கும் அரசு-முதலாண்மைதான் காரணம்! எனினும், இப் பொழுது இங்கே நமக்கு இது முக்கியம் அல்ல.

ஒரு முதலாண்மைச் சமுதாயத்தில், புதிய முதலாளிகளாகப் பழைய முதலாளிகளின் பிள்ளைகள்தாம் உருவாகிட முடியும் என்கின்ற கட்டாயம் எதுவும் இல்லை. யார் வேண்டும் என்றாலும் முதலாளிகளாக உருவாகிக் கொள்ளலாம்.

இது போல, உழைப்பாளிகளாகத்தாம் உழைப்பாளிகளின் பிள்ளைகள் உருவாகிட முடியும் என்றும் எந்த ஒரு நிலவரமோ அல்லது கட்டாயமோ முதலாண்மையில் இல்லை.

தனக்கு ஒரு வேலையைத் தேடிக் கொள்ளுகின்ற உரிமை இங்கே ஒவ்வொரு மனிதனுக்கும் உண்டு; ஏதேனும் ஒரு தொழிலில் ஈடு பட்டுப் பணத்தை ஈட்டிக் கொள்ளுகின்ற உரிமையும் ஒவ்வொருவருக்கும் உண்டு!

தான் விரும்புகின்ற உணவினை எந்த ஒரு மனிதனும் இங்கே உண்டு கொள்ளலாம்; உண்ணாமல் பட்டினி கிடந்தும் கொள்ளலாம்!

இப்படியாகவும் இன்ன பிற நிலவரங்களின் காரணமாகவும், ஒரு முதலாண்மைச் சமுதாயத்தில், விடுதலையான ஒரு தனி மனிதனாக ஒவ்வொரு மனிதனும் திகழ்ந்து கொண்டு வருகிறான் என்பது வெளிப்படை! பிறவி விடுதலை என்றும் இதனை நாம் அழைக்கலாம்.

வரலாற்றுத் தொடர்ச்சி

விடுதலையான ஒரு தனி மனிதனாகத்தான் இயற்கையான ஒவ்வொரு மனிதனும் பிறந்து கொண்டு வருகிறான் என்றால்—-இது போல, விடுதலையான தனி மனிதர்களாகத்தாம் முதலாண்மைச் சமுதாயத்திலும் மனிதர்கள் திகழ்ந்து கொண்டு வருகிறார்கள் என்றால்—-தங்கள் பிறப்பு உரிமையினை முதலாண்மைச் சமுதாயத்தில்தான் மனிதர்கள் மீட்டு எடுத்துக் கொண்டு இருக்கிறார்கள் என்று நாம் கூறிட முடியுமா ? என்றால், முடியும்!

முதலாண்மைச் சமுதாயத்தில்தான் மனிதர்களின் இயற்கையான சமன்மைக்கு முதன் முதலில் ஓர் ஒப்பளிப்பு—-ஓர் அங்கிகாரம்—-கிடைத்து இருக்கிறது என்றும் இதனை நாம் கருத்துப் படுத்திக் கொள்ளலாம். சமன்மையான இயற்கை மனிதனின் சமுதாய முறையான சமன்மையின் வளர்ச்சி இது!

ஆனால், வரலாற்றின் நிகழ்ப்பாட்டில் ஒரு தொடர்ச்சி என்பதோ விதிகள் என்பனவோ இருந்திட முடியாது என்று கருதுபவர்கள் இதனை மறுத்திட முன் வருவார்கள் என்பதில் நமக்கு ஐயம் எதுவும் இல்லை.

என்றும் மாறாத—-மாற்றங்கள் எதுவும் இல்லாத—-நிலையான—-சீரான—-புதிய முயற்சிகள் எவையும் தேவைப் படாத—-ஒரு பாது காப்பான வாழ்க்கையைத் தங்களுக்கு என்று அமைத்துக் கொண்டு விட வேண்டும் என்று தவித்துக் கொண்டு வருகின்ற சிற்றுடைமையாளர்களின் சிந்தனை இது!

பண்ணையத்தின் வயிற்றுக்குள் முதலாண்மையின் கரு உற்பத்தி ஆகிக் கொண்டு வந்து இருந்ததே, எப்படி ? முதலாண்மையின் வயிற்றுக்குள் பொதுமைச் சமுதாயத்தின் கரு வளர்ந்து கொண்டு வருகிறதே, எப்படி ? என்று எல்லாம் எண்ணிப் பார்ப்பதற்கு நேரம் கிடைத்திடாத சிந்தனையாளர்களின் முடிவுகள் இவை! இவர்களை விட எவ்வளவோ மத வாதிகள் மேல் எனலாம்.

மறு பிறவி எடுத்தல்—-உயிர்த்து எழுதல்—-துறக்கம் அடைதல்—-என்பன போன்ற கனவுகளை அவர்கள் வளர்த்துக் கொண்டு வந்து இருந்ததற்கு, இயற்கை முறையான மனிதச் சமன்மையினைச் சமுதாய முறையாகவும் என்றேனும் ஒரு நாள் மனிதர்கள் அடைந்துதான் தீருவார்கள்—-தீர வேண்டும்—-என்னும் அவர்களின் ஆசையும் நம்பிக்கையும்தாம் காரணம்! இன்றோ, பயங்கர வாதிகளாக—-கொலை வெறியர்களாக—-வெறுப்புப் பிடித்தவர்களாக—-அவர்கள் சீரழிந்து கொண்டு வருகிறார்கள்.

மனிதர்களின் பொதுவான இயல்புகள்

மனிதர்களுக்கு இடையே பொதுத் தன்மை என்று எதுவும் இருந்திட முடியாது என்று வாதாடுபவர்களின் சிந்தனைச் சிதறல்களைக் கேட்பதற்கு நேர்கின்ற பொழுதுகளில் எல்லாம் நமக்குச் சிரிப்பு வருகிறது. மெத்தப் படித்து விட்டு இருக்கின்ற மேதாவிகளோ இவற்றைத் தலையின் மேல் தூக்கி வைத்துக் கொண்டு கூத்தடித்துக் கொண்டும் வருகிறார்கள்! நுனி புல் சிந்தனைகளின் தெருக் கூத்து போலும் இது!

மனிதர்களுக்குப் பசி எடுக்கிறதே, இது ஒரு பொதுத் தன்மை இல்லையா ? காதல் கொண்டு காமத்தில் அவர்கள் களித்துக் கொண்டு வருகிறார்களே, இது ஒரு பொதுத் தன்மை இல்லையா ? மற்ற மனிதர்களுடன் உறவு கொண்டு இருப்பதை ஒவ்வொரு மனிதனும் விரும்புகிறானே, இது பொதுத் தன்மை இல்லையா ?

உழைத்து, உற்பத்தி செய்து நுகர்வதன் மூலம் மீண்டும் மீண்டும் தங்கள் உடலையும் உயிரையும் மனிதர்கள் புதுப்பித்துக் கொண்டு வருகிறார்களே, இது பொதுத் தன்மை இல்லையா ?

ஒவ்வொரு மனிதனும் சிந்திக்கிறானே, தனக்கு என்று ஒரு நோக்கத்தினை வகுத்துக் கொண்டும் செயல் படுகிறானே, இது பொதுத் தன்மை இல்லையா ?

அப்படி என்றால், சிந்திப்பது—-உழைப்பது—-உற்பத்தி செய்வது—-சமுதாயமாகக் கூடி வாழ்வது—-ஒரு நோக்கத்தை முன்னிறுத்திச் செயல் படுவது—-என, மனித இயல்பு என்பதனை நாம் வரையறுத்துக் கொள்ள முடியாதா ?

இந்தப் பொதுவான இயல்பினால் ஒவ்வொரு மனிதனுக்கு உள்ளும் உருவாகிக் கொண்டு வந்து இருக்கின்ற சுயமையினை ‘மனித இயல்பான சுயமை ‘ என்று நாம் அழைக்கலாம்.

இந்தச் சுயமை என்பதுதான் ஒவ்வொரு மனிதனதும் அடையாளம்! இந்த அடையாளத்தைதான் ஒவ்வொரு பிற மனிதனிலும் ஒவ்வொரு மனிதனும் தேடிக் கொண்டும் வருகிறான்.

எனவே, சுயமைகளின் மெய்மைப்பாடுகள்தாம் உறவுகள் என்று பொருள்! ஒருவரது நோக்கத்தைப் பிறிது ஒருவரது நோக்கத்தில் இருவர் மெய்மைப் படுத்திக் கொள்ளுகின்ற பொழுதுதான் அவர்களின் உறவுகள் பலப் படவும் செய்கின்றன.

நண்பர்களாகவும் காதலர்களாகவும் மற்றவர்களுடன் மனிதர்கள் உறவு கொண்டு வந்து இருப்பது இப்படித்தானே! இந்த உறவுகளில், எதிர் எதிரான நோக்கங்களை—-சுயமைகளை—-வகுத்துக் கொண்டு வந்து இருப்பவர்களோ எதிரிகளாக மாறி விடுகிறார்கள், அவ்வளவுதான்!

மனித இயல்பின் அயன்மைப்பாடு

‘தேசிய உற்பத்தியைப் பெருக்குவது எப்படி ? ‘ என்னும் ஒரு தலைப்பில் ஒரு கூட்டத்திற்குக் சென்னைப் பல்கலைக் கழகத்தில் ஒரு நாள் ஏற்பாடு செய்யப் பட்டு இருந்தது—-1979 வாக்கில்! கூட்டத்தில் ஒரு சில தொழிற் சங்கத் தலைவர்களும் பொருளாதார வல்லுனர்களும் மாணவர்களும் கலந்து கொண்டு இருந்தனர்.

கூட்டத்திற்குத் தலைமை தாங்கிக் கொண்டு இருந்தவர் வழக்கறிஞர் சந்தரு; என். ராமின் பின்னால் அவர் சுற்றிக் கொண்டு இருந்த காலத்தில் இருந்தே—-சுமார் 10 ஆண்டுகளாக—-அவரை எனக்குத் தெரியும்! இடது கம்யூனிஸ்ட் கட்சிக் காரர் அவர்! அவசர நிலைக் காலம் முடிந்து ஜனதாக் கட்சியின் கூட்டணிக் கட்சிகள் ஆட்சி செலுத்திக் கொண்டு வந்து இருந்த நேரம் அது!

தேசிய உற்பத்தியைப் பெருக்கிட வேண்டும் என்று எல்லோரும் பேசினார்கள்; அதனை வலியுறுத்திதான் தோழர் வி.பி.சிந்தனும் பேசி முடித்தார்; அவசர வேலைகளின் காரணமாகப் பேசி முடித்ததும் அவர் கிளம்பியும் விட்டார்.

‘தேசிய உற்பத்தி என்பது ஒரு கற்பனை; அப்படி ஒன்று உலகத்தில் எங்கும் இல்லை! ஆனால், ஒரு மார்க்சிய வாதியான தோழர் வி.பி.சிந்தன் அவர்களோ தேசிய உற்பத்தியைப் பெருக்கிட வேண்டும் என்று பேசுகிறார். அப்படி என்றால், கற்பனைகளை நாம் பெருக்கிக் கொள்ள வேண்டும் என்றுதான் பொருள்! ‘ என்று நான் பேசினேன்.

தலைமை தாங்கிக் கொண்டு இருந்த சந்துருவுக்குக் கோவம் வந்து விட்டது. அவையில் இல்லாத ஒருவரைப் பற்றி இங்குப் பேசக் கூடாது என்று கூறி நான் பேசுவதற்கு அவர் தடை விதித்தார்.

‘இங்கே என்ன, அவசர நிலை மீண்டும் பிரகடனப் படுத்தப் பட்டு இருக்கிறதா ? அவையை மதிப்பவர் அவையில் இருக்க வேண்டும்; மாற்றுக் கருத்துகளுக்குப் பதில் கூறி விட்டுச் செல்ல வேண்டும்!

வி.பி.சிந்தன் அவர்களைப் பற்றி இங்கே நான் பேச வில்லை. தேசிய உற்பத்தி என்பது ஒரு கற்பனை என்பதைப் பற்றிதான் நான் பேசிக் கொண்டு இருக்கிறேன்.

ஏனென்றால், முதலாளியின் ஆதாயம் என்பதுதான் இங்கே உண்மை; உழைப்பாளியின் கூலி என்பதுவும் அந்த அளவுக்கு உண்மை!

இந்த இரண்டும் முரண் பட்ட நோக்கங்கள்! இந்த முரண்களின் ஒன்றிப்பில்தான் உற்பத்தி என்பது இங்கே நடைபெற்றுக் கொண்டு வருகிறது.

எனவே, முதலாளிகளின் ஆதாயத்தைப் பெருக்குவது எப்படி ? உழைப்பாளிகளின் கூலியை உயர்த்துவது எப்படி ? என்பதுதான் உண்மையான கேள்வி.

தொழிற் சங்கங்களைப் பொறுத்த வரை, கூலி உயர்த்தப் படும் என்றால் உற்பத்தியை உழைப்பாளர்கள் நிச்சயம் உயர்த்துவார்கள் ‘ என்று நான் பேசி முடித்தேன்.

ஆக, மனித இயல்பான உற்பத்தி நோக்கமோ, ஆதாய நோக்கமாகவும் கூலி நோக்கமாகவும் பிளவு பட்டு—-முரண் பட்டு—-இன்று அயன்மைப் பட்டுக் கிடக்கிறது என்பது தெளிவு.

இதனால்தான், அவ் வப்போது ஆதாயமும் கூலியும் மோதிக் கொள்கின்றன; முதலாளி வருக்கமும் உழைப்பாளி வருக்கமும் மோதிக் கொள்கின்றன! இதுதான் வருக்கப் போராட்டம் என்பதும் ஆகும்.

ஒரு வருக்கமாக முதலாளிகள் ஒன்று பட்டு நிற்கிறார்கள் என்றால், அதற்கு அவர்களது சுயமைகளின் ஒற்றுமைதான் காரணம். இது போல, ஒரு வருக்கமாக உழைப்பாளர்கள் ஒன்று பட்டு நிற்பதற்கும், தங்கள் சுயமைகளின் அடையாளங்களை மற்ற உழைப்பாளர்களில் அவர்கள் காண்பதுதான் காரணம்.

நானும் மனிதன்தான்

‘நானும் மனிதன்தான் ‘ என்று வாழ்க்கையின் ஏதேனும் ஒரு கட்டத்தில் கூறிக் கொள்ளாத, அல்லது, தனக்குள் முனகிக் கொள்ளாத மனிதர் யாரும் உலகில் இருந்து இருப்பதற்கு வாய்ப்பு எதுவும் இல்லை.

ஆனால், மக்களிடம் இருந்து வேறு பட்ட ஒரு கலைஞரான கவிஞர் இன்குலாப்போ, ‘நாங்க மனுசங்கடா ‘ என்று கவிதை எழுதி விட்டதற்காகப் பெருமைப் பட்டுக் கொண்டு வருகிறார்.

மக்களிடம் இருந்து கற்றுக் கொண்டு அதனை மக்களுக்குக் கற்றுக் கொடுப்பது என்பது இலசுப் பட்ட விசயமா, என்ன! பெருமிதத்திற்கு உரிய ஒரு கலைத் தனமான ‘படைப்பு ‘ச் செயல் அல்லவா, அது!

எப்படியும், மக்களிடம் இருந்து கற்றுக் கொண்டு மக்களுக்குக் கற்றுக் கொடுப்பது என்பது தற் பெருமைத் தனமான ஒரு கூற்றுதான் என்ற போதிலும், அதன் உன்மையான பொருள் அது வல்ல!

ஏனென்றால், அனுபவ அறிவு நிலையில் நாம் தெரிந்து கொள்கின்ற நிகழ்வுகளைக் காரண அறிவு நிலையில் நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்பதுதான் இதன் உண்மையான பொருள் ஆகும். காரண அறிவு நிலையில் எதையும் புரிந்து கொள்ள விரும்புபவர்கள், நம்மிடம் இருந்தும் சிலவற்றைக் கற்றுக் கொள்ளலாம், அவ்வளவுதான்!

எங்கள் தொழிற் சாலையில் மோகன் என்று ஒருவர் பணியாற்றிக் கொண்டு வந்து இருந்தார். என்னை விட அப் பொழுது அவருக்குச் சுமார் 5 வயது அதிகம் இருக்கும்.

காதல் என்றாலும் சரி, களிப்பு என்றாலும் சரி, எதையும் எளிதாக எடுத்துக் கொண்டு பேசிடக் கூடியவர் அவர்; மிகவும் மகிழ்ச்சியாகவும் காணப் படுபவர்! மதிய உணவு இடை வேளையில் அவர் தாயம் ஆடுவதைச் சில சமயங்களில் பார்த்து நான் வியந்து இருக்கிறேன்.

கோரிக்கைகளை எழுப்பி உழைப்பாளர்கள் போராடிடக் கூடிய சூழ் நிலைகளில், தொழிற் கூடத்தின் வாசலில் நின்று கொண்டு அலுவலகத்தை நோக்கி அவர் குரல் கொடுப்பார்; எப் பொழுதும் ஒரே மாதிரியாகத்தான் அவரது கருத்துகள் இருக்கும். அடிக்கடி அவற்றை நான் கேட்டும் இருக்கிறேன்.

‘யாருக்கு ஐயா கஷ்டம் இல்லை ? முதலாளிக்கும் கஷ்டம்தான்; உழைப்பாளிக்கும் கஷ்டம்தான்! ஆனால், உங்கள் கஷ்டம் வேறு; எங்கள் கஷ்டம் வேறு!

உனக்குப் பாலுக்குச் சர்க்கரை இல்லை; எனக்குக் கஞ்சிக்கு உப்பு இல்லை! என் கஞ்சிக்கு உப்பைப் போட்டு விட்டு உன் பாலுக்குச் சர்க்கரையை நீ போட்டுக் கொள்! யார் வேண்டாம் என்றது ? நானும் மனுசன்தான்! ‘

இவர் மனிதர் இல்லை என்று இவரிடம் யார் கூறியது ? என்று இவரது பேச்சை கேட்கின்ற பொழுதுகளில் எல்லாம் நான் நினைத்துக் கொள்வேன். ‘பாலுக்குச் சர்க்கரை; கஞ்சிக்கு உப்பு! ‘ என்னும் அவரது கூற்றுகள் கவிதை வரிகளாக எனக்குத் தோன்றும்.

‘வாழ்க்கையின் கேள்விக ‘ளை எழுதிக் கொண்டு இருந்த பொழுது அடிக்கடி இவரைத்தான் நான் நினைத்துக் கொண்டேன்.

‘நான் ஒரு மனிதன்தான்; ஆனால், ஒரு மனிதனாக நான் இல்லை! வேறு என்னவோவாக நான் இருக்கிறேன் ‘ என்று கூறுவதற்குதான் அவர் விரும்பி இருந்தார் என்றும் அவரை நான் புரிந்து கொண்டேன்.

எல்லோரையும் போல அவரும் ஒரு மனிதர்தாம்; ஆனாலும், அவர் ஓர் உழைப்பாளி! அவரை வேலைக்கு அமர்த்திக் கொண்டு இருந்தவரும் ஒரு மனிதர்தாம்; ஆனால், அவரோ ஒரு முதலாளி!

ஓர் உழைப்பாளி என்னும் தமது அடையாளத்தில்—-ஒரு மனிதன் என்னும் தமது அடையாளத்தை—-அவர் இழந்து விட்டு இருந்தார் என்னும் உண்மையைத்தான் அனுபவ நிலையில் அவர் கூறிக் கொண்டு வந்து இருந்தார், அவ்வளவுதான்!

அடிமையில் தன்னை மனிதன் இழந்து விடுகிறான் என்று ஹே:கலும் உழைப்பாளியில் தன்னை மனிதன் இழந்து விடுகிறான் என்று கார்ல் மார்க்சும் தெரிவித்து இருந்த கருத்துகள், ‘நானும் மனிதன்தான் ‘ என்னும் அனுபவக் கூற்றுகளின் விளக்கங்கள்தாம் ஆகும்.

இங்கே, மனித இயல்பு என்பது பிளவு பட்டு நிற்பதை நாம் காண்கிறோம்.

ஏனென்றால், ‘திண்மை நிலை ‘யில் (கான்க்ரீட்லி), ஒரு வணிகனாகவோ, தொழிலாளியாகவோ, முதலாளியாகவோ, உழைப்பாளியாகவோ இருக்கின்ற மனிதர்கள், ‘நுண்மை நிலை ‘யில் (அ:ப்ஸ்ட்ராக்ட்லி) மட்டும்தான் மனிதர்களாக இருந்து கொண்டு வருகிறார்கள்!

அதாவது, திண்மையான மனிதர்களின் பன்மை தன்மைகளுக்கு அடியில் நுண்மையாக அவர்களின் பொதுத் தன்மை புதைந்து கிடந்து கொண்டு வருகிறது!

மனிதனின் இந்தத் திண்மையான நிலையில்தான் அவனுக்குக் கலைகள் தேவைப் படுகின்றன; நுண்மையான நிலையில் அவனுக்குத் தேவைப் படுவதோ மதம்!

எனினும், மனிதனின் பன்மைத் தன்மைக்கு நாம் வருவோம்.

29-10-2004

(தொடரும்)

Series Navigation