மெய்மையின் மயக்கம்-19

This entry is part [part not set] of 42 in the series 20040930_Issue

சோதிப் பிரகாசம்


(சுரேஷின் மடலுக்கு ஜெய மோகனின் பதில் [26-02-2004] குறித்து…)

தருக்கம்

தருக்கம் என்பது பற்றி எழுதுவதற்கு முன் வந்து இருக்கின்ற ஜெய மோகனுக்குத் தருக்கம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்கின்ற அக்கறை எதுவும் இருப்பதாக நமக்குத் தெரிய வர வில்லை; மாறாக, தருக்கம், தத்துவம், அறிவியல், என்பவை பற்றி எல்லாம் அவருக்குத் தெரியும் என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்கின்ற மா பெரும் அக்கறைதான் அவரிடம் மிகுந்து இருப்பது போல் தோன்றுகிறது.

‘கறுப்பாகக் காக்காய் இருக்கிறது என்பதற்காகக் கறுப்பாக இருப்பது எல்லாம்

காக்காய்தான் என்று நாம் சொல்லி விட முடியாது ‘ என்று நமக்கு ஜெய மோகன் பாடம் நடத்திட வேண்டும் என்று நாம் எதிர் பார்க்க வில்லை; அல்லது, தருக்கம் பற்றி ஏதேனும் ஒரு நூலை எழுதி முடித்ததன் பின்னர்தான் தருக்கம் பற்றி அவர் பேசிட வேண்டும் என்று கூறிடவும் நாம் முற்பட வில்லை.

‘நெருப்பு இல்லாமல் புகையாது ‘; ‘கத்தரிக் காய் காய்த்தால் கடைக்கு வந்துதான்

தீர வேண்டும் ‘; என்பன போன்ற ஏராளமான தருக்கங்களை எல்லோரும்

தெரிந்துதான் வைத்து இருக்கிறார்கள்; வயிறே வாழ்க்கை என்று வயிற்றை நிரப்பிக் கொண்டு வருபவர்களாக ஜெய மோகன் கருதுகின்ற பாமரர்களுக்கும் கூட இவை எல்லாம் தெரிந்துதான் இருக்கின்றன. எனினும், எதுவும் தெரியாதவர்களாகத் தமது

வாசகர்களை ஜெய மோகன் வரித்துக் கொண்டு இருப்பதுதான் நமது சிக்கல்!

ஜெய மோகன் மட்டும்தானா, எல்லாக் கதைஞர்களும் தங்கள் வாசகர்களைப் பற்றி இப்படித்தான் நினைத்துக் கொண்டு இருப்பார்கள் போலும்!

ஒரு பொருளில் ஒரு சொல்லைப் பயன் படுத்தி விட்டதன் பின்னர், வேறு

பொருள்களிலும் அதே சொல்லை ஜெய மோகன் பயன் படுத்திக் கொண்டு வருவது என்ன வகையான எழுத்தாண்மை நாணயம் ? என்பதுதான் நமக்குப் புரிய வில்லை. எல்லாச் சொற்களின் பொருள்களையும் வரையறுத்து விட முடியாது என்று இவர் கருதுவதாக இருந்தால் கூட, அம் மாதிரியான சொற்களைப் பற்றிய ஓர்

எச்சரிக்கையினையாவது நமக்கு இவர் விடுத்திடலாமே! இவரது வாசகர்களாக நாம் இருக்கிறோம் என்பதற்காக நம்மை இவர் முட்டாள்கள் ஆக்கி விடுவது என்றால் எப்படி ?

‘அறிவியல், தர்க்கவியல் அல்லது தத்துவம் ‘ என்று ஜெய மோகன் கூறுகின்ற

பொழுது, ‘அறிவியல் அல்லது தருக்கவியல் அல்லது தத்துவம் ‘ என்று இவர் கூறிட முற்படுகிறாரா ? அல்லது, ‘அறிவியல் மற்றும் தருக்கவியல் மற்றும் தத்துவம் ‘ என்றோ அல்லது ‘அறிவியல் மற்றும் தருக்கவியல், அதாவது, தத்துவம் என்றோ இவர்

குறிப்பிடுகிறாரா ? என்பதை நமக்கு இவர் தெளிவு படுத்திட வேண்டாமா ?

ஏனென்றால், இந்தியச் சிந்தனை மரபினைப் பற்றிப் பேசுகின்ற பொழுது, ‘தர்க்கம் [அறிவியல், தத்துவம்] ‘ என்று குறிப்பிட்டு, அறிவியலும் தத்துவமும் தருக்கத்திற்குள் அடக்கம் என்று நம்மிடம் இவர் கூறுகிறார்; அதே நேரத்தில், உலகச் சிந்தனை மரபினைப் பற்றிப் பேசுகின்ற பொழுது, அறிவியல், தருக்கம், தத்துவம் ஆகிய மூன்றும் வெவ் வேறு துறைகளைச் சேர்ந்தவை என்றோ, அல்லது அறிவியல் ஒரு துறையும் தருக்கமும் தத்துவமும் இன்னொரு துறையும் ஆகும் என்றோ நம்மிடம் கூறுவதற்கு இவர் முற்படுகிறார்.

ஆனால், இவரது கருத்துகளை எப்படிப் புரிந்து கொண்டு இவரை எப்படி நாம் எதிர் கொள்வது என்பதுதான் நமது சிக்கல்!

ஷெர்லாக் ஹோம்ஸ் இருக்கிறாரே, எப்படி அவர் கதை எழுதுகிறாராம், தெரியுமா ? ‘நடந்த குற்றத்தைக் கிடைத்த தகவல்களின் படி உண்மை போல கற்பனையில்

நிகழ்த்தி ‘ அவர் பார்த்துக் கொள்கிறாராம்; ‘அதன் பின் அதையே தர்க்கப் பூர்வமாக அடுக்க ஆரம்பிக்கிறா ‘ராம்!

இங்கே ‘தருக்கத்தின் அடுக்கு ‘ என்பதன் மூலம் எதனைக் குறிப்பிடுவதற்கு ஜெய மோகன் முற்படுகிறார் ? தத்துவத்தையா ? அறிவியலையா ? கற்பனையையா ? அல்லது, அறிவின் அடுக்குகளையா ?

கதை வாசிப்பவர்களுக்கு இந்த விளக்கங்கள் எல்லாம் தேவை இல்லை என்று ஒரு வேளை ஜெய மோகன் நினைக்கலாம்; கதை எழுத்தாளர்களுக்கு இவை எல்லாம் தேவை இல்லாமலும் இருக்கலாம். ஆனால், வெறுமனே கதைகளை மட்டும்

வாசகர்கள் வாசித்துக் கொண்டு இருப்பது இல்லை; தங்கள் அறிவுத் தேடலுக்கு ஏற்ப எல்லாவற்றையும் அவர்கள் வாசிக்கிறார்கள். எனவே, எழுதுபவர்கள்தாம்

கொஞ்சம் எச்சரிக்கையாக எழுதிட வேண்டும்—-தங்கள் வாசகர்களை

மதிப்பவர்களாக அவர்கள் இருந்தால்!

‘:த ஹிண்டு ‘ முதல் எத்தனையோ தமிழ்ப் பத்தரிகைகள் நாட்டில் இருக்கின்றன; மதிப்பீட்டிற்கு என்று எல்லா நூல்களையும் அவை பெற்றும் கொள்கின்றன. ஆனால், பாவம், கதை-கவிதைகளுக்கு அப்பால் தங்கள் மதிப்பீடுகளை நீட்டிப் பார்ப்பதற்கு இவற்றினால் முடிவது இல்லை. அவற்றின் ‘மூலவர்கள் ‘ அப்படி! அதே நேரத்தில், கதை-கவிதைகளைத் தவிர வேறு நூல்களை மதிப்பீட்டிற்கு என்று யாரும் அனுப்ப வேண்டாம் என்று இவர்கள் அறிவிப்பதும் இல்லை.

‘தினத் தந்தி ‘, ‘தினகரன் ‘ போன்ற தினசரிகளையும் ‘செம்மலர் ‘, ‘யாதும் ஊரே ‘, ‘தமிழ் நேயம் ‘ போன்ற சில சிறு பத்தரிகைகளையும் இதற்கு விதி விலக்குகளாக நாம் எடுத்துக் கொள்ளலாம். இது பற்றிக் கூறுவதற்கு எழுத்தாளர் வாஸந்தி அவர்களிடம் நிறைய விசயங்களும் இருக்கலாம்.

இது போல, தத்துவம், தருக்கம், என்று எல்லாம் வார்த்தைகளை வடித்தால் மட்டும் போதும், அக்கறையுடன் எதையும் விளக்கிட வேண்டிய தேவை இல்லை என்றுதான் ஜெய மோகனும் கருதுகிறாரா ?

ஆனால், விசயம் அது வல்ல!

சாத்தானும் ஏசுவும்

நல்ல கொள்கையான அஹுர மஜ்ஸ்தாவுக்கும் கெட்ட கொள்கையான அங்க்ர மைன்யுவுக்கும் இடையே நடை பெற்றுக் கொண்டு வருகின்ற மோதல்கள்தாம்

வாழ்க்கையின் நல்லது-கெட்டதுகளுக்குக் காரணம் என்று ஜ்ஸார தூஸ்த்ரர்

கூறினாராம்; இது போல, தருக்கத்திற்கும் அதருக்கத்திற்கும் இடையே நடை பெற்றுக் கொண்டு வருகின்ற மோதல்கள்தாம் நமது வாழ்க்கையின் சிக்கல்களுக்குக் காரணமாம்!

இதில், தருக்கம் என்பதுதான் சாத்தானாம்; அதருக்கம் என்பதுதான் குமரக்

கடவுளான ஏசுவாம்!

பாவம், ஜெய மோகன், எவ்வளவு சிக்கலான ஒரு முரண் இயக்கத்தின் சுழற்சிக்குள் நின்று கொண்டு தமது புனைவுகளை அவர் நெய்திட வேண்டியது இருக்கிறது! வேறு ஒருவராக இருந்து இருந்தால் தலை சுழன்று மயக்கம் போட்டு அவர் வீழ்ந்து விட்டு இருந்து இருக்கவும் கூடும்!

பின் தொடரும் ‘நிழலின் குரலை ‘ப் படித்துக் கொண்டு வந்து 567-ஆம் பக்கத்தில் நின்று கொண்டு இருந்த பொழுது, அதன் வெளியீட்டாளர் வசந்த குமாருக்கு ஒரு மடலினை நான் எழுதினேன்—- ‘நிழலின் குரலில் மார்க்சியம் வருமா ? கீரிக்கும்

பாம்புக்கும் சண்டை நடக்குமா ? ‘ என்று கேட்டு!

கூடவே, பின் வருமாறும் நான் எழுதி இருந்தேன்:

‘பிணக் குவியல்களுக்கு இடையே சோகக் கடலில் ஜெ. எம். தத்தளித்துக்

கொண்டு இருப்பதைப் பார்க்க எனக்குப் பரிதாபமாக இருக்கிறது. சாத்தான்தான் அவரைக் கரையேற்ற முடியும் என்ற போதிலும், தமது தேவ தூதர்களை அனுப்பி ஏசு அவரை வேவு பார்த்துக் கொண்டு இருக்கிறாரே! அவர் கரை ஏறுவாராக! ‘

இதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. சாத்தானைத் தருக்கமாகவும் ஏசுவை அதருக்கமாகவும் கொண்டு புனையப் பட்டு இருப்பதுதான் ‘நிழலின் குரல் ‘!

‘விஷ்ணு புரத்தினுள் ‘ ஊடாடி நிற்பதும் இந்தத் தருக்கம் மற்றும் அதருக்கங்களின் சித்து விளையாட்டுதான் ஆகும்.

அதருக்கத்தின் வெற்றியினை விஷ்ணு புரத்தில் நிலை நாட்டுபவன் சுடு காட்டுச்

சித்தன்; நிழலின் குரலிலோ சிவலிங்கத்தின் வடிவத்தில் ஏசு! தருக்கத்தின்

வீழ்ச்சியினை நிழலின் குரலில் மறு நிகர்ப்பவர் ஸ்தாலின்; விஷ்ணு புரத்திலோ ஒரு வேதாந்தி! இந்த வேதாந்தியின் மகன்தான் சுடு காட்டுச் சித்தன்!

எனினும், பிள்ளைப் பாசம் என்னும் அதருக்கம் வேதாந்தம் என்னும் தருக்கத்தினை வீழ்த்தி முடிக்க, இறுதியில் அங்கு முடி சூட்டி முடிக்கப் படுவதோ புத்தத்

தருக்கத்திற்கு!

தருக்கம் x அதருக்கத்தின் இந்தச் சித்து விளையாட்டினை ஜெய மோகனும் அவரது ஆதரவாளர்களும் எப்படிப் புரிந்து கொண்டு இருக்கிறார்கள் என்பது

நமக்குத் தெரிய வில்லை. எனினும், ஜெய மோகனின் எழுத்துகளில் காணக்

கிடக்கின்ற மாய்மைகளுக்கு இந்தச் சித்து விளையாட்டுதான் காரணம்! ஆனால் இதுவோ, மேல் தட்டுச் சிற்றுடைமை வாழ்க்கையின்—-சிந்தனையின்—-மாய்மை!

தருக்கமும் அதருக்கமும்

மேல் தட்டுச் சிற்றுடைமைச் சிந்தனையாளர்களுக்குப் பிடிக்காத ஒரு விசயம் உலகத்தில் உண்டு என்றால், அதுதான் தருக்கம்! ஏனென்றால், எதிலும் ஓர் ஒழுங்கு முறை—-விதி முறையான ஓர் இயக்கம்—-என்பன வற்றை எல்லாம் மீறி, உடல்

நோகாத உழைப்புடனும் மூளை நோகாத ஞானத்துடனும் விடுதலையாக வாழ்ந்திட வேண்டும் என்று துடித்துக் கொண்டு இருப்பவர்கள் இவர்கள்!

ஆனால், உறவுகளினால் ஆனதுதான் வாழ்க்கை என்பதையும் இந்த உறவுகளின்

ஊடாகத்தான் எந்த ஒரு விடுதலையையும் எந்த ஒரு மனிதனும் அடைந்திட முடியும் என்பதனையும் எண்ணிப் பார்ப்பதற்கு மட்டும் இவர்கள் மறந்து விடுகிறார்கள். ‘உறவு ‘ என்று வந்து விட்டதன் பின்னர், அந்த உறவின் இயக்கத்தில் ஓர் ஒழுங்கு முறை—-ஒரு விதி—-இருந்துதான் ஆக வேண்டும் என்பதை ஏற்றுக் கொள்வதற்கும் இவர்கள் தயங்குகிறார்கள்.

இந்த மேல் தட்டுச் சிற்றுடைமையாளர்களின் கதையே மிகவும் அலாதி ஆனது!

கட்டுப் பாட்டிற்குள் நின்று கொண்டு ‘கட்டு அற்ற தன்மை ‘ பற்றி இவர்கள்

பேசுவார்கள்; ‘அத்து மீறல் ‘களுக்குள் அடி எடுத்து வைத்து விட்டு அத்துகளுக்குள் இவர்கள் தஞ்சம் புகுந்து விடுவார்கள்! பணம், பதவி, முதலிய எதிலும் எப் பொழுதும் இவர்களுக்கு ஒரு பாது காப்புத் தேவை!

இப்படி, தருக்கத்தினுள் அதருக்கம் என்றும் அதருக்கத்தினுள் தருக்கம் என்றும்

வாழ்ந்து கொண்டு வருகின்ற இவர்களுக்கு, அதருக்கத்தில் திளைத்துக்

கொண்டே இருந்திட வேண்டும் என்பதுதான் ஆசை என்ற போதிலும்,

தருக்கத்தினை மீறிச் செயல் முறையில் இவர்களால் வாழ்ந்து விட முடிவது இல்லை. எனவேதான், சிந்தனையிலேனும் அதருக்கத்தை நிலை நிறுத்தி விடுவதற்கு இவர்கள் முற்பட்டு விடுகிறார்கள்.

எனினும், சட்டத்தினை மீறி—-அதருக்கமாக—-பிறர் பொருளைத் திருடி விட்டு, சட்ட முறையாக—-தருக்கமாக—-அதனைச் செலவிட்டு வாழ்ந்து காட்டி விடுகின்ற திருடர்களுடன்—-ஊழல் காரர்களுடன்—-இவர்களை ஒப்பிட்டு நாம் பார்த்திட முடியுமா ? என்பது நமக்குத் தெரிய வில்லை.

அராஜக வாதிகள் (அதாவது, அ + ராஜக + வாதிகள் = அரசுக்கு எதிரான

வாதிகள்) என்று தமிழ் நாட்டு ஸ்தாலினிஸ்ட்டுகளால் குறிப்பிடப் பட்டு வந்து இருக்கின்ற ‘கட்டறு வாதிகள் ‘ (அனார்க்கிஸ்ட்ஸ்), உண்மையில் விடுதலை

வாதிகள்தாம் ஆவர். இவர்களுள், மார்க்சியத்தின் அடிப்படையில் விடுதலை என்பதனை விளக்கி இருக்கின்ற கட்டறு வாதிகளோ சிறப்புக்கு உரியவர்கள்!

எனினும், இந்தக் கட்டறு வாதம் என்பது ஒன்றும் தமிழுக்குப் புதியது அல்ல.

வேறு மொழிகளில் எப்படியோ, ஆனால், தமிழ்ச் சிந்தனை மரபில் இறைவனுடன் மனிதன் ஒன்றி விடுகின்ற ‘வீடு-பேற்று நிலை ‘தான்—-விடுதலை நிலைதான் —- ‘கட்டறு நிலை ‘!

பாசமாகிய கட்டினை—-பந்தங்களை—-அறுத்து, பதியாகிய இறைவனுடன்,

பசுவாகிய ஆன்மா ஒன்றி விடுகிறது என்பதுதான் கட்டறு வாதத்தின் உள்ளடக்கமும் ஆகும். அந்தக் காலத்தில் இருந்தே தமிழ்ச் சிந்தனை மரபில் நீடித்துக் கொண்டு வந்து இருக்கின்ற இந்தச் சிந்தனையினை ஈரோப்பில் இருந்து இன்று இறக்குமதி செய்து கொண்டு வருபவர்களைப் பார்த்தால் நமக்குச் சிரிப்புதான் வருகிறது.

வாசகர்களை இப்படி எல்லாம் இவர்கள் ஏமாற்றி விடுகிறார்களாம்; பெயரும் புகழும் பெற்று வெற்றியினையும் பெற்று விடுகிறார்களாம்! இதுதான் இன்றைய ‘தமிழ்ச்

சிந்தனை சூழல் ‘ எனலாம்.

தமிழ்ச் சிந்தனை மரபினைப் பொறுத்த வரை, கட்டுக்குள் உட்பட்டதுதான் கட்டு அறு நிலை; அதாவது, கட்டற்ற நிலை! பதி-பசு-பாசம் என்னும் உறவின் கட்டிற்கு உள்ளேயே தனது விடுதலையினைப் பசு எய்தி விடுகிறது. தீவிரமான சிந்தனை

யாளர்களாகத் தங்களைப் பற்றிக் கருதிக் கொண்டு இருக்கின்ற ஜெய மோகனைப்

போன்றவர்கள் இந்தச் சிந்தனை மரபினைப் புரிந்து கொள்வதற்கு முன் வந்திட

வில்லை என்றால், மூளை நோகாத ஞானத்தைத் தேடிக் கற்பனைகளுக்குள் அவர்கள் மூழ்கிக் கொண்டு வருவதுதான் காரணம்!

சிற்றுடைமைச் சிந்தனைகள் நிறைந்து வழிகின்ற ஃப்ரான்ஸுக்கு இல்லை என்ற போதிலும், முதலாண்மைச் சிந்தனைகள் செழித்து வளர்ந்து கொண்டு வருகின்ற பிற ஈரோப்பிய நாடுகளுக்கு இந்தச் சிந்தனையை ஏற்றுமதி செய்து வெற்றிகளை இவர்கள் குவித்துக் கொண்டு வந்திடலாமே! இதற்கு என்று, தமிழ்ச் சிந்தனை மரபுகளையும் மார்க்சியச் சிந்தனைகளையும் ஒப்பிட்டு இவர்கள் பார்த்திட வேண்டியது இருக்கும். ஆனால், எதை எதையோ அள்ளிக் குவித்திட வேண்டும் என்கின்ற ஆசை மேலிட, அவசரமாகப் பயணப் பட்டுக் கொண்டு இருக்கின்ற

நேரத்தில், இவற்றிற்கு எல்லாம் தங்கள் நேரத்தைச் செலவிட்டுக் கொண்டு இவர்களால் இருந்திட முடியுமா, என்ன!

பின் தொடரும் ‘நிழலின் குரலில் ‘ வருகின்ற இராமசாமி என்னும் கதைப் பாத்திரம், எழுத்தாளர் சுந்தர ராமசாமி அவர்கள்தாமாம்! மேல் தட்டுச் சிற்றுடைமைச்

சிந்தனைக்குச் சிறந்த ஓர் எடுத்துக் காட்டாகத் தமது கதையில் இவரை ஜெய

மோகன் நகல் ஆக்கி இருக்கிறார்.

பின்-புதின வாதத்தைப் பின் பற்றிக் கதை எழுதுவதாகச் சொல்லிக் கொள்பவர்கள் எல்லாம், எந்த அடிப்படையில் இப்படிச் சொல்லிக் கொள்கிறார்கள் என்று நமக்கும் தெரிவது இல்லை; அவர்களுக்கும் தெரிவது இல்லை. ஆனால், உண்மையில் அவர்கள் எடுத்துக் கொண்டு இருக்கின்ற பொருளோ தருக்கம் x அதருக்கம் என்பதுதான் ஆகும்.

சமுதாயத்தில் மேல் தட்டுச் சிற்றுடைமையாளர்கள் பெருகிக் கொண்டு

வருவதைத்தான் இது காட்டுகிறது; அவர்கள் இடையே இருந்து உருவாகிக்

கொண்டு வந்து இருக்கின்ற எழுத்தாளர்களின் பெருக்கத்தினையும் இது

காட்டுகிறது எனலாம். நடிகர்கள், கதைஞர்கள், கவிஞர்கள், என்று யாராக

இருந்தாலும், சமுதாயத்தின் அடி மட்டத்தில் இருந்து அவர்கள் உருவாகிக்

கொண்டு வந்து இருந்த காலம் இப் பொழுது காலாவதி ஆகிக் கொண்டு

இருக்கிறது என்றும் இதற்குப் பொருள்.

அதே நேரத்தில், முதலாண்மைச் சந்தையின் வீச்சு, இவர்களது சிந்தனையினைத் தொடத் தொடங்கி இருக்கிறது என்பதுதான் உண்மை! அதருக்கத்திற்கு நாம் வருவோம்.

அதருக்கத்தையும் தருக்கத்தையும் புரிந்து கொள்வதற்குப் ஃப்ரான்ஸுக்கு உள்ளோ, சமயச் சிந்தனைகளுக்கு உள்ளோ அல்லது மார்க்சியத்திற்கு உள்ளோ யாரும் நுழைந்திடத் தேவை இல்லை; காய்-கறிச் சந்தைக்குச் செல்கின்ற பாமரப் பெண்கள், விலை-வாசிகளைப் பற்றிப் பேசிக் கொண்டு வருகின்ற

உரையாடல்களைக் கொஞ்சம் கவனித்துப் பார்த்தாலே போதும்! விலைகளின்

ஏற்ற-இறக்கங்களில் அதருக்கத்தையும் அவற்றை ஏற்றுக் கொள்ளுகின்ற

வாடிக்கையாளர்களின் பொறுமையில் தருக்கத்தையும் யாரும் காணவும் முடியும்.

ஆனால், இதற்கு எல்லாம் நேரம் இல்லை இந்த எழுத்தாளர்களுக்கு! அவர்களுக்கு ஏற்ற வாசகர்களாக நாம் வந்து வாய்த்திருக்கிறோமே, இது போதாதா அவர்களுக்கு!

ஆக, கதை-கவிதைகள் தருகின்ற ‘போதைப் பயன் ‘ பற்றிய விவாதத்திற்குள் இப்

பொழுது நாம் அடி எடுத்து வைத்துக் கொண்டு இருக்கிறோம் என்பதில் ஐயம் இல்லை. புனைவுச் சுவனம் என்பதும் இதுதான் ஆகும். இந்தப் பயணத்தை விஷ்ணு புரத்தில் இருந்து நாம் தொடங்குவோம்.

அதற்கு முன்னர், தத்துவம் பற்றி எதை எதையோ சொல்லி நம்மை ஜெய மோகன் மிரட்டிக் கொண்டு வருகின்ற மிரட்சியில் இருந்து நாம் மீளுகின்ற வகையில், அவரது தத்துவத்திற்கு உள்ளும் சற்று நாம் நுழைந்து பார்த்து விடுவோம்.

20-8-2004

(தொடரும்)

Series Navigation