மெட்ரோ பட்டாம்பூச்சி கே ஆர் மணி கவிதைகள் – முன்னுரை

This entry is part [part not set] of 27 in the series 20090604_Issue

ஞானக்கூத்தன்


திரு கே.ஆர்.மணியின் கவிதைத் தொகுப்பு ‘மெட்ரோ பட்டாம்பூச்சி’ என்ற பெயரைத் தாங்கி உள்ளது. பெயரே கவிதைகள் சுட்டிக்காட்டும் உலகின் தன்மையை உணர்த்துகிறது. அதிலும் ‘மெட்ரோ’ என்ற சொல். உலகில் இலக்கியம் உள்ள மொழிகள் எல்லாம் இந்த ‘மெட்ரோ’ என்ற சொல்லை அறிந்திருக்கும் என்று சொல்லலாம். இந்தப் பெயரை கவிஞர் தொகுப்புக்கு வைத்துக்கொண்டதிலிருந்து அவரும் ஓர் உலகியல்பை இந்தச் சொல்லைக்கொண்டே அடையாளப்படுத்த விரும்புகிறார் என்று சொல்லலாம். இந்த அடையாளம் நவீனத்திலிருந்து சற்று மாறுபட்ட நவீனத்துவம் உடையதென்று கூறலாம். பல கவிதைகள் முதல் கவிதையான ‘மெட்ரோ – காக்கை குருவி எங்கள்…’ என்ற கவிதையிலிருந்து ஆங்கிலச் சொற்கள் உடைய பல கவிதைகள் இந்த நவீனத்துவத் தன்மையைப் பறைசாற்றுகின்றன. ஆனால் தொன்றுதொட்டுப் பின்பற்றிவந்த தர்மங்களை, காரியங்களை விட்டுவிட நேருமோ என்ற பயத்துடனும், தொடர்ந்தால் நன்றாயிருக்குமே என்ற ஆவலுடனும் சலனிக்கிற மனதை கே.ஆர்.மணியின் கவிதைகள் வெளிப்படுத்துகின்றன.
பல சமூகங்கள் சேர்ந்து வாழ்கின்ற நகரத்தை நாடுகள் உருவாக்கி வருகின்றன. இப்படிப்பட்ட நகர வாழ்க்கையை நமது தமிழ்க்கவிதை படம்பிடித்துக் காட்டுவது அவசியம். புதிய தமிழ்க்கவிதையின் உலகத்தில் இது புதுமையானது. எதிர்கொள்ள வேண்டிய ஒன்று.
‘பேச்சிலர் ரூம்’ என்ற கவிதை பலசமூகத்துவக் கவிதைக்கு உதாரணமாகிறது.

கழிப்பறையில் நீர்விட்டு
கழுவி விடமாட்டான்
கல்கத்தாக்காரன்
குறி தேய்த்து, ஊர் தெரிய
தூங்கும் உபிக்காரன்
சாப்பிட்ட கையாலே
சோற்றுப்பானையில்
கைவிடும் மல்லுக் ‘கடங்காரன்’
இவ்வளவு ஏன்,
குளிக்காமல் வாசனை
தண்ணியில் மட்டுமே
குளிக்கும் இத்தாலியப்
பெண்ணோடு கூடியிருந்திருக்கிறேன்.
எல்லா வீடுகளிலும்
‘நான்’ இருந்திருக்கிறேன்
பிடித்தும், பிடிக்காமலும்.
எனது வீட்டில் மட்டும்
எப்படித் தொலைந்துபோனேன்
‘நான்’.

இந்திய மாநிலங்கள் மட்டுமல்லாமல் அந்நிய நாடொன்றும் இக்கவிதையில் வருகிறது. எல்லாரைப் பற்றியும் குறைதான் சொல்லப்படுகிறது. கவிதையின் தலைப்பு ஆங்கில மொழியில்தரப்பட்டுள்ளது. ஒரு சின்ன இழப்பு. பிறகு தண்ணீர் என்ற சொல் ‘தண்ணி’யென்ற பேச்சுவழக்கைப் பெற்றுள்ளது. ** ஈறு கெட்டு ஈற்றயல் குறுகியது! பலசமூகத்துவம் ஏற்கப்படும் பொழுது இப்படி சில இழப்புகள் மொழிக்கு நேரலாம்தான். கவிதையில் ‘நான்’ என்ற சொல் சந்தேகாஸ்பதமான நிலையில் அமைந்துள்ளது. பல குறைகள் இருந்தாலும் மற்ற சமூகத்தாரோடு ‘பிடித்தும் பிடிக்காமலும்’ இருந்துவிட முடிகிறது. ஆனால்
எனது வீட்டில் மட்டும்
எப்படித் தொலைந்துபோனேன்
‘நான்’.

திருமணமாகாதவர்களின் அறையைப் பற்றிப் பேசவந்த கவிதை உலகத்தையே பேசி விடுகிறது. ஆங்கிலத் தலைப்பே நாம் பிரிடிஷ் ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்று ஒரு நூற்றாண்டு கூட ஆகவில்லை என்பதை ஞாபகப்படுத்துகிறது. திருமணமாகாதாவர்கள்தாம் என்றாலும் அவர்களைப் பற்றிய குறிப்பு அவர்கள் தங்கள் ஆடை களையும் சந்தர்ப்பத்தையே சொல்கிறது. போதாக்குறைக்கு ஓர் இத்தாலியப் பெண்ணோடு கூடலும் நிகழ்ந்து விட்டிருக்கிறது. ஆனாலும் ‘பேச்சிலர் ரூம்’ தான். ஆனால் வீடு அப்படியில்லை. வெளியில் இருக்கும்போது வீடும், வீடடில் இருக்கும்போது வெளியும் இடம்மாற முயல்கின்றன. அதனால் ஒரு சிக்கல். வீடு நினைக்கப்படுவதும் அதனடிப்படையில் ஒரு எக்சிஸ்டென்சியல் விசாரம் ஏற்படுவதும் அக்கவிதையின் சிறப்பாக அமைகிறது. தமிழின் உரைநடை இலக்கியம் தொடக்கத்திலேயே பலசமூகங்களைத் தன் உலகில் குடி அமர்த்தி விட்டது. கவிதை இந்த விஷயத்தில் சற்றுத் தாமதம்தான். ஆனால் வந்த வரைக்கும் சந்தோஷம்தான்.
ஒருபக்கத்தில் அது நவீனத்துவப் பாரம்பரிய உலகை உடைத்துத் தூளாக்கிவிடுவது போல் தோற்றம் காட்டினாலும் அகற்ற முடியாத உறதியுடன்அந்த உலகம் எதிர்த்து நிற்கிறது மணியின் கவிதைகளில்.
உம்மாச்சி கண்குத்தவில்லை
படையலுக்கு முன் சாப்பிட்டபோதும்
-அது ஒரு கனாக்காலம்

பத்தாம்நாள் படையல்
ஒரு புத்தகம் போட வேண்டும்

எனக்குள் ஒரு குழந்தை
அடைமழைக்காய் தவம்.

அங்கங்கே சில குறிப்புகள், சில உணர்வுகள் இவையெல்லாம் மணியின் கவிதைகளில் நவீன மனிதன் தனது பாரம்பரியத்தை அப்படி ஒன்றும் இழந்துவிடப் போவதில்லை என்று காட்டுகின்றன.

நான் நகரத்தான்

குளத்தில் குளித்ததில்லை.
அதிக தூரம் நடந்ததில்லை.
மாட்டுவண்டிப் பயணமில்லை.
ஒரு மரம்கூட நட்டதில்லை.
விசாலமான வீடுகளில்லை.

பறவைகள், கோழிகள், ஆடுகள், காக்கைகள்
உயிருடன் தென்படுவதில்லை.

விவசாய உழு நிலம் பார்த்ததில்லை.
கூழ் குடித்ததில்லை.

ஆடு வெட்டி, காடா சமைத்து
சாமி கும்பிட்டதில்லை.

திறந்தவெளிப் பொங்கலில்லை.

ஆயினும் வாழ்க்கை அதன்
வெள்ளைத்தாள்களைப்
புரட்டிக் கொண்டுதா னிருக்கிறது.

நானும் வாழ்ந்துகொண்டுதா னிருக்கிறேன்.

எதை எதை இல்லை என்று கவிதாபாத்திரம் சொல்கிறதோ அவை அதற்குத் தெரியும் என்பதையும், அவற்றைக் குறித்த கழிவிரக்கம் பாத்திரம் உணர்வதையும் நவீன மனிதனைச் சான்றாக உணர்த்துகிறது.
கே,ஆர்,மணியின் பல கவிதைகள் சிறப்பாக அமைந்துள்ளன. உதாரணமாக ‘பூங்காக்களை எனக்குப் பிடிப்பதில்லை’, ‘எலெக்ட்ரிக் ட்ரெயினும் சில எருமை மாடுகளும்’, பாட்டி, நாற்காலி, ஒரு ரொட்டித்துண்டு, எதைத் தேடி, அவசரப்படும் வேசி – என்பவற்றைக் கூறலாம். ‘பிடிக்காமல் எழுதிய கவிதைகள்’ என்ற கவிதையின் கடைசி வரி,

எப்போதும் கவிதை
என்னை எழுதியதேயில்லை.

என்று முடிகிறது. ஆனால் கவிதை அதைத்தான் செய்யும் என்றாலும் அப்படி அது செய்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் சிலர் சொல்கிறார்கள். ஒருவேளை கே.ஆர்.மணி இந்த வரியைக் கொஞ்சலாகக் கூறியிருக்கிறாரோ என்னவோ.

————
** ‘சத்திரம்’ என்ற கவிதையிலும் தண்ணிதான். ‘என்ன செய்ய’ என்ற கவிதையில் மதுவை ‘தண்ணி’ என்றே க.நா.சு. குறிப்பிடுகிறார்.

மெட்ரோ பட்டாம்பூச்சி – கவிதைகள் கே.ஆர்.மணி
வெளியீடு அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம் 41 கல்யாணசந்தரம் தெரு பெரம்பூர் சென்னை 600 011
வெளியீடு மே 2009 – விலை ரூ. 45/

Series Navigation

ஞானக்கூத்தன்

ஞானக்கூத்தன்