முஹம்மது யூனூஸின் “எனது பர்மா குறிப்புகள்”

This entry is part [part not set] of 39 in the series 20101002_Issue

தேவகோட்டை வா. மூர்த்தி


”Life is full of episodes chained together by boredom; in memory the boredom is forgotten and the episodes remain”- Dom Moraes

வாழ்க்கை என்பது ஏராளமான நிகழ்வுகள் அலுப்புணர்வால் பின்னப்பட்ட ஒன்றாகும்; நினைவில் அலுப்புணர்வு மறந்து போய் நிகழ்வுகள் மட்டும் நிலைத்திருக்கின்றன- கவிஞர் டாம் மொரேஸ்

முஹம்மது யூனூஸ் தான் பர்மாவில் வாழ்ந்த நாட்களை நினைவு கூர்ந்து பேசியவற்றை, மு. இராமனாதன் எழுத்தில் வடித்திருக்கிறார் இந்நூலில். ஆயினும் இந்நூலை ஒரு வாழ்க்கைச் சரிதம் என்று வகைப்படுத்த முடியாது. ஏனெனில் சுமார் நாற்பத்திரண்டு ஆண்டுகள் பர்மாவில் வாழ்ந்த இவர் தனது சொந்த வாழ்வைப் பற்றி குறைவாகவும் பர்மாவைப் பற்றி நிறைவாகவும் (நிறைய மட்டும் அல்ல, நிறைவாகவும்!) பேசியிருக்கிறார். எனவே இந்நூல் பர்மா பற்றிய நூலாகவே உருவாகியிருக்கிறது. அதே சமயம் க. ம. தியாகராஜன் “கணையாழி” யில் எழுதிய தொடர் உள்ளடக்கியிருந்த பர்மா பற்றிய ஒரு பாடநூல் (Textbook) தொனியில்லாமல், யூனூஸ் பர்மாவில் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்த (அவரையும் சேர்த்த) மனிதர்களின் வாழ்வைப் பற்றிய அடிப்படை தொனி கொண்டதாக அமைந்திருக்கிறது. இதுவே நூலை சுவைபட ஆக்கியிருக்கிறது.

அது சரி, யார் இந்த முஹம்மது யூனூஸ்? “விடுதலைப் போரில் தான் பெற்ற தியாக வடுக்களை அரசியல் சந்தையில் விலை கூறாதவர் முஹம்மது யூனூஸ்” என்று அறிஞர் அண்ணாவால் பாராட்டப்பட்டவர் (பக். 9). ஆனால் அந்தப் பாராட்டல்ல, மாறாக, அண்ணாவின் பாரட்டை யூனூஸ் ஏற்றுக்கொண்ட விதம்தான் (Response) அவரை இன்னாரென்று அடையாளம் காட்டுகிறது: “அண்ணா பெரிய மனிதர். மற்றவர்களை உயர்த்திச் சொல்வது அவரது பண்பு. அதனால் அந்த புகழ்ச்சிக்கு நாம் தகுதியானவர்கள் என்று எண்ணிக் கொள்ளக் கூடாது” (பக். 15). இவ்வளவு புறவயப் பார்வை (Objectivity) கொண்ட ஒரு மனிதர், தான் நாற்பது ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்த நாட்டைப் பற்றியும் அந்த காலகட்டத்தின் இடையில் நிகழ்ந்த இரண்டாம் உலகப் போர் பற்றியும் அதற்கு முந்தைய பிற்பட்ட அரசியல் பொருளாதார சமூக நிகழ்வுகளையும் இந்நூலில் விவரிக்கிறார். எனவே இந்நூல், யூனூஸின் அடுத்த தலைமுறைக்கு மட்டுமல்ல, அவர் விவரிக்கும் காலத்திற்கு சற்றே பிற்பட்டவர்களுக்குக் கூட ஓர் அற்புதமான வாசிப்பு அனுபவமாக அமைவதில் வியப்பில்லை!

“கால வரிசையோ பொருள் தொடர்ச்சியோ” இல்லாத யூனூஸின் பேச்சை தான் மெய்மறந்து கேட்டுக் கொண்டிருந்ததாக நூலின் பதிவாளர் (பதிப்பாளர் அல்ல!) இராமனாதன் கூறுவது மிகையல்ல என்பது மட்டுமன்றி, வாசகனும் இராமனாதனோடு உட்கார்ந்து யூனூஸ் பாயோடு உரையாடிக் கொண்டிருந்தது போன்ற உணர்வை (பிரமையை?) நூல் எழுப்புகிறது. இது நூலின் அசாதாரண வெற்றி என்றாகிறது.

”யூனூஸின் தமிழில் நேர்ப்பேச்சிற்கும் மேடைப் பேச்சிற்குமான இடைவெளி குறைவு” என்று ’பதிவுகளின் கதை’ என்ற தனது முன்னுரையில் எழுதுகிறார் இராமனாதன். “பேசுவதுபோல் எழுதுவது” என்பது கிட்டத்தட்ட பெரும்பான்மையான (தமிழ்) எழுத்தாளர்கள் செய்வது. ஆனால் எழுதுவது போல் பேசுவது என்பது வியப்பானதும் மகிழ்ச்சியானதுமான செய்தி!

பலர் அறிந்திராத/அறிந்திட முடியாத ஏராளமான செய்திகள் பொதிந்து கிடக்கின்றன நூலில்:

பர்மாவில் இன்ன தொழில்தான் என்றில்லை, எல்லாவற்றிலும் இந்தியர்கள் ஈடுபட்டார்கள். மாடுகளுக்கும், குதிரைகளுக்கும் லாடம் அடிப்பது ஒரு முக்கியத் தொழிலாக இருந்தது. அப்படி லாடம் அடிப்பவர்கள் இந்தியாவில் இருந்து வந்தார்கள். அவர்கள் இன்ஜீனியர்கள் போல் மதிக்கப்பட்டார்கள் (பக். 21)
ஒரு காலத்தில் (ரங்கூனில்) வீதிகளை எல்லாம் தினம் கழுவி விடுவார்கள் (பக். 20)
பர்மாவில் தான் பெட்ரோலை முதலில் கண்டுபிடித்தார்கள் அரபு நாடுகளில் அல்ல (பக். 23)
நாற்பது வயதுள்ள மகனை தாயார் தெருவில் வைத்து அடிப்பார். கேட்டால், அம்மா அடித்தால் நியாயம் இல்லாமல் இருக்காது என்று சொல்வார்கள் (பக். 24)
பர்மீயர்களிடத்தில் ஜாதி இல்லை (பக். 26). இப்பொழுது சமத்துவபுரம் உருவாக்குகிறார்கள் அல்லவா, அன்று இந்தியர்கள் பர்மாவில் வாழ்ந்தமுறை சமத்துவபுரமாகத்தான் இருந்தது (பக். 29)
தரகர்கள் நெல்லை… ஒரு கூடை எண்பது ரூபாய்க்கு வாங்கி எண்பது ரூபாய்க்கே விற்பார்கள். நெல்லை அளப்பதில் தான் லாபம் இருக்கிறது (பாரதி கிருஷ்ணகுமார் அற்புதமாக இயக்கியுள்ள “ராமய்யாவின் குடிசை” என்ற கீழவெண்மணி பற்றிய ஆவணப் படத்தை பார்த்தவர்களுக்கு யூனூஸ் பாய் சொல்வது இன்னதென்று புரியும்!)
கார்மோதி புகைவண்டி மோதி இறந்தவர்களைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், ஒரு விமானம் ஏதோ கோளாறின் காரணமாக திடீரென்று உயரமிழந்து வயலில் வேலை செய்து கொண்டிருந்த ஓர் இளைஞனை மோதிக் கொன்றுவிட்டு; மீண்டும் விமானத்திற்கு உயரம் கிடைத்து பறந்து சென்று விட்ட பரிதாபத்தை நூலில் படிக்கிறபோது வாசகன் கையறு நிலையில் புத்தகத்தை சிறிது நேரம் மூடிவைக்கிற அனுபவம் நிகழ்கிறது.

பொதுவாகவே பொற்கொல்லர்களைப் பற்றி மோசமான கருத்தே உண்டு. ஆனால் யூனூஸ்பாய் கூறுவது: “பர்மாவில் விஸ்வகர்ம சமூகத்தவர்கள் நிறையப் பேர் இருந்தார்கள். (இவர்களில்) பலரும் ஆபரணங்கள் செய்யும்போது தங்கத்தில் விழும் சேதாரத்தை கோயிலுக்குக் கொடுத்து விடுவார்கள்” (பக். 41)
அந்தக் காலத்தில் விமானப் பயணிகளின் உடைமைகளையும் பயணிகளையும் சேர்த்து எடை போடுவார்கள் (பக். 143)
அந்தக் காலத்தில் நாடகமேடைகளில் ஆண்களே பெண் வேடங்களை ஏற்று நடித்தது அனைவரும் அறிந்ததே. சொல்லப் போனால், ‘ஸ்த்ரீபார்ட்’ என்றொரு வழக்கே (usage) புழக்கத்திலிருந்தது. ஆனால் சுந்தராம்பாள் முருகனாகவும் கிட்டப்பா வள்ளியாகவும் நடித்த ‘வள்ளி திருமணம்’ நாடகம் பற்றி இந்நூலில் (பக். 61) அறிய நேர்கிறது. நாடகங்களில் மட்டுமல்ல, திரைப்படங்களிலும் இது நிகழ்ந்திருக்கிறது என்றும் கூறுகிறார்: “சத்தியவான் சாவித்திரி” திரைப்படத்தில் எம். எஸ். சுப்புலட்சுமி நாரதராக நடித்தாராம், 1935ல் வெளிவந்த ‘பக்த நந்தனார்’ திரைப்படத்தில் கே.பி. சுந்தராம்பாள் நந்தனார் வேடத்தில் நடித்தாரம். (பக். 65-66)
”உலகப் போர்” பற்றிய அத்தியாயம் எளிமையாகவும் அதே சமயம் தீவிரமாகவும் இருக்கிறது. இரண்டாம் உலகப் போருக்குக் காரணம் என்பது என்ன என்பதை ஈசாப் கதை ஒன்றின் மூலம் விளக்குகிறார்: ’(கூண்டிலிருந்த) சிங்கம் கர்ஜித்தது. அந்த கர்ஜனையில் தான் கதை இருக்கிறது’ (பக். 71). இந்த ஒரு வரியிலேயே யூனூஸ்பாய் ஓர் அற்புதமான இலக்கியவாதி என்பதும் தெளிவாகிறது.

“நேத்தாஜி” என்று ஒரு தனி அத்தியாயம். அதில் நேத்தாஜியின் உள்மனக் கிடக்கை என்ன என்பதை தெளிவாய் விளக்கி அவர் ஒட்டு மொத்தமாகக் கூறுவது: ‘எல்லாவற்றையும் கூட்டிக் கழித்துப் பார்த்தால், நேத்தாஜியின் அந்தரங்கம் புரியும். ஜப்பானியர்களை கூட்டிக் கொண்டு இந்தியாவிற்குள் நுழைவோம் என்று அவர் ஆடியது ஒரு நாடகம்தான். இது தான் அவரது அந்தரங்கம் என்று எங்களில் பலர் அப்போது கருதினோம். இப்போதும் அது தான் என் கருத்து” (பக். 105). அத்தியாயத்தில் விவரிக்கப் பட்டிருக்கிற விஷயங்களை படிக்கும் போது, இக்கருத்தை உடனே புறந்தள்ள முடியவில்லை. அது மட்டுமல்ல, நேத்தாஜியின் ‘நாடகம்’ ஜப்பானியர்களுக்கும் புரிந்து அவர்களே கமிகாஜே (என்ற தற்கொலைப் படையினர்) மூலம் நேத்தாஜியை விமான விபத்தை நிகழவைத்துக் கொன்றிருக்கலாம் என்ற யூனூஸ்பாயின் கருத்தையும் எளிதில் வாசகனால் புறந்தள்ள முடியவில்லை.
பர்மீயர்களிடத்தில் சாதிகள் இல்லையென்றாலும் அவர்களிடத்திலேயும் பிச்சைக்காரர்கள், வெட்டியான்கள், சவப்பெட்டி செய்கிறவர்கள் ஆகியோர் தீண்டத்தகாதவர்களாகக் கருதப் பட்டார்கள் (பக். 112)

மேலே சுட்டிக் காட்டப்பட்டது போன்ற ஏராளமான விஷயங்களை உள்ளடக்கியிருக்கிற தகவல் களஞ்சியமாகவே நூல் தொடர்ந்து தொனிக்கிறது. வேறு வாசகர்களுக்கு நூலில் வேறு விஷயங்கள் முக்கியமானதாகவும் சுவையானதாகவும் படக்கூடும்.

யூனூஸ்பாயின் இலக்கிய ஈடுபாட்டைப் பற்றி பதிவுரையின் இரண்டாவது பத்தியிலேயே குறிப்பிடுகிறார் இராமனாதன். ஆனால் இது வெளிப்படையாவது நூலின் பத்தாவது அத்தியாயத்தில்தான் (பக். 126-134). வை. மு. கோதைநாயகி அம்மாளின் எழுத்தை ஒரே வரியில் இவர் விவரிப்பதில், படிப்பதை கச்சிதமாக உள்வாங்குவதில் இவருக்கு இருக்கும் திறமை அனாயாசமாய் வெளிப்படுகிறது (பக். 127). பி.ஸ்ரீ., ராஜாஜி, சோ ஆகிய மூவருமே மகாபாரத்தை ஆழக் கற்று சிறப்பாக எழுதியிருக்கிறார்கள் – என்ற இவரது வரி இவரது படிப்பின் எல்லைகளை சுட்டிக் காட்டுகிறது. உ. வே. சா. வின் ‘என் சரித்திரம்’ வாழ்க்கை வரலாறையும்; த. நா. குமாரஸ்வாமி, கா. ஸ்ரீ. ஸ்ரீ., சுத்தானந்த பாரதியார் – ஆகியோரின் மொழிபெயர்ப்புகளையும் படித்திருக்கிறார். அதே சமயம், ‘ஹனுமான்’ பத்திரிக்கையில் வெளியான ’குண்டூசி’யின் சினிமா சம்பந்தமான கேள்வி-பதில் பகுதியையும் படித்திருப்பது பற்றி எவ்விதக் காழ்ப்புணர்வுமின்றி ‘உள்ளது-உள்ளபடி’ (Matter of fact) தொனியில் குறிப்பிடுகிறார். அசராத வாசகன் என்பவன் உன்னதம் முதல் அபத்தம் வரை (Sublime to the ridiculous) எல்லாவற்றையும் படிப்பவனாகவே இருப்பான் என்பதை நூலின் பத்தாம் அத்தியாயம் தெளிவாக்குகிறது.

”சாய்வுநாற்காலிச் சுற்றுலா” (Armchair travelogue) என்று ரீடர்ஸ்-டைஜஸ்டில் உலகின் பல சுற்றுலா தலங்களைப் பற்றி அருமையான கட்டுரைகள் அவ்வப்போது பிரசுரமாகும். அஞ்சலகம், பேருந்து நிலையம், பள்ளிவாசல், நீதிமன்றம், அரசு மருத்துவமனை, தேனீர்க்கடை, முருகன் கோவில்- என்று (பர்மாவில்) சவுட்டான் என்ற தான் வாழ்ந்த ஊரைப் பற்றி யூனூஸ்பாய் விவரிக்கிறபோது ஏதோ அந்த ஊரை வாசகனும் நேரில் பார்த்துவிட்டது போன்ற உணர்வு வெகு இயல்பாய் மேலிடுகிறது.

நேருஜி, முத்துராமலிங்கத் தேவர், பெரியார், எம்.ஜி.ஆர். என்று பர்மாவிற்கு வந்த பல தலைவர்களை அருகேயிருந்து வரவேற்ற இவர், ரங்கூனிற்கு வராத அண்ணாவை வரவேற்க விமானநிலையத்தில் திரண்டிருந்த கூட்டத்தை விவரிப்பது வாசிப்பை சுவையாக்குகிறது. அதேபோல், முத்துராமலிங்கத் தேவரை ரங்கூனிலிருந்து மோல்மேன் என்ற இன்னொரு பர்மீய நகரத்திற்கு ஒரு சிறிய விமானத்தில் கூட்டிச் சென்றபோது கூடவந்த 26 நபர்களில் அநேகர் பெயர்களையும் இவர் நினைவு கூர்வது இவர் நினைவாற்றலை வியக்க வைக்கிறது. அந்த நினைவாற்றலே இந்நூலின் அடித்தளம். ஆயின் அந்நினவாற்றல் சுமையாக வெளியாகாமல் சுவையாக வெளிப்பட்டிருப்பது இந்நூலின் கவர்ச்சி.

”பர்மாவில் தமிழர்களின் வாழ்வும் வீழ்ச்சியும்” என்ற உபதலைப்பு கொள்ளாத இந்நூலில், இவர் 153ஆம் பக்கத்தில் கூறுகிற ஒரு வரி (சொல்லப்பட்ட களம் வேறொன்று என்றபோதும்!) தமிழர்களின் வீழ்ச்சியைக் கச்சிதமாக விவரிக்கிறது. “எல்லோரும் நல்ல பிள்ளைகள் தான்… (ஆனால்) ஒரு வெளிநாட்டில்… வாழுகிற நாட்டின் பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் மனதில் கொண்டு இயங்கவேண்டும் என்பதையும் தமிழர்களின் மொத்த நலனையும் கருத்தில் கொள்ளவேண்டுமென்பதையும் அவர்கள் உணர்ந்திருக்கவில்லை”. இனத்தால் தமிழர்கள் நாட்டால் பர்மீயர்கள் என்று இயங்கியிருந்தால் இன்றும் தமிழர்கள் அங்கு நிலைத்திருந்திருப்பார்களோ என்று ஏங்கவைக்கிறது இந்நூல். சீனர்கள் அப்படித்தான் அங்கு செழிக்க நேர்ந்தது என்பதை முன் அத்தியாயங்கள் ஒன்றில் இவர் விவரிப்பது என் ஏக்கம் சரிதான் என்று எண்ண வைக்கிறது.

நூலில் நான் எதிர்பார்த்து கிடைக்காத இரண்டு விஷயங்கள்: பர்மா என்பது மியன்மார் என்று ஆனதற்கு பொருள் என்ன, பின்னணியென்ன? இரண்டாவது, பர்மா தேக்கு பற்றி ஒரு சிறு குறிப்பு கூட இல்லையே, ஏன்?

நூலில் சில பிழைகளும் கண்ணில்பட்டு கருத்தில் உறுத்தத் தான் செய்கின்றன:
சி.ஆர்.தாஸ்,சித்தரஞ்ஜன் ஆகியோர் நூலில் குறிப்பிடப்படுவது போல் வெவ்வேறு நபர்களல்ல(பக்.93). சித்தரஞ்ஜன் தாஸ் தான் சி.ஆர்.தாஸ்.
நெருக்கடி நிலை இந்தியாவில் கொண்டு வரப்பட்டது 1975ல். 1976ல் என்று நூலில் தவறாகக் குறிக்கப் படுகிறது.
நேருஜி மறைந்த நாள் 27.05.1964. ஆனால் நூலில் 1964ம் ஆண்டு ஜூன் 26ம் நாள் என்று குறிப்பிடப்படுகிறது. அதிலும் அந்நாளை ஒட்டித்தான் யூனூஸ்பாயின் தகப்பனாரும் நெஞ்சுவலி வந்து இறந்தார் என்கிறபோது, தேதி மாறுபடுமா?
“கிருஷ்ணா ராவ் என்று எனக்கு இரண்டு நண்பர்கள்” என்று பக்கம் 191ல் குறிப்பிடப்படுகிறது. பக். 192இல் கிருஷ்ணா ராவ் ஒரு நபராக வருணிக்கப் படுகிறார். அந்த இரண்டாவது நபரின் பெயர் என்ன என்று அறிய ஆவலாயிருக்கிறது.

யூனூஸின் தமிழ் இயல்பாகவும் செறிவாகவும் உள்ளதாக இராமனாதன் குறிப்பிட்டுள்ளார். நூலின் தமிழ் அடர்த்தியைக் காணும் போது நூலின் தொடக்கத்தில் உள்ள “பதிவுகளின் கதை” எனும் இராமனாதனின் முன்னுரையில் இருக்கும் மொழி அடர்த்தி நினைவுக்கு வருகிறது. எனவே நூலின் பாசங்கற்ற அதே சமயம் பொறாமைப் படத்தக்க இயல்பான தமிழ் இராமனாதனது தமிழா யூனூஸுடையதா என்பது தெளிவாகவில்லை. யூனூஸுடைய தமிழ் தானென்றால் அதை சிதைக்காமல் பதிவாக்கியிருப்பதற்காகவும்; இராமனாதனுடைய தமிழ் தானென்றால் அவரது மொழி வளத்திற்காகவும்- எப்படியாயினும் பதிவாசிரியர் இராமனாதன் பாராட்டிற்குரியவராகிறார். அதுவும் போக, யூனூஸ்பாயின் பேச்சை எழுத்தில் வடித்ததில் பல நண்பர்களும் உதவியதாக இராமனாதன் குறிப்பிடுகிறார். பதிவாசிரியரின் நண்பர்கள் குழாத்தில் நரசிம்மன், ஸ்ரீதரன் போன்ற இலக்கிய ஈடுபாடும் எழுத்தாற்றலும் கொண்ட ஓரிருவரை நானே அறிவேன். இது இப்படி இருந்தாலும் நூலின் இறுதி வடிவம், ‘ஒற்றைப் பேனா’ வாகவே (Unitary pen) உருவாகியிருக்கிறது. இதற்காகவும் பதிவாசிரியர் பாராட்டிற்குரியவராகிறார்.

இறுதியாக, என் விழைவு ஒன்றையும் என் நம்பிக்கை ஒன்றையும் இங்கு சொல்ல விரும்புகிறேன். நூலின் இரண்டாவது பகுதியைக் கொண்டுவர விருப்பம் இருப்பதாக முன்னுரையில் பதிவாசிரியரும், ‘ஆண்டவன் அருள் இருந்தால் அதையும் எழுதலாம்” என்று 199ஆம் பக்கத்தில் யூனூஸ்பாயும் குறிப்பிடுகிறார்கள். அந்த இரண்டாம் பகுதி – அதே 199ஆம் பக்கத்தில் யூனூஸ்பாய் சொல்வது போல் – 1966 முதல் இன்னொரு நாற்பது ஆண்டுகளுக்கு மேல் இன்னொரு நாட்டில் வாழ்ந்தவர் என்ற முறையில்- முஹம்மது யூனூஸின் ’ஹாங்காங் குறிப்பு’ களாக அமையவேண்டும் என்பதுதான் என் விழைவு. அப்படி ஒரு நூல் வெளி வந்தால், அதுவும் இந்நூல் போலவே தமிழ் வாசகர்களுக்கு இன்னொரு நூதன வாசக அனுபவமாக அமையும் என்பது என் நம்பிக்கை.

[நூல்: செ. முஹம்மது யூனூஸின் “எனது பர்மா குறிப்புகள்”, பதிவாசிரியர்: மு. இராமனாதன், பிரசுரம்: காலச்சுவடு பதிப்பகம், 669, கே. பி. சாலை, நாகர்கோவில் 629 001, தொலைபேசி: 91-4652-278525, தொலைநகல்: 91-4652-231160, மின்னஞ்சல்: kalachuvadu@sancharnet.in பக்கங்கள்: 220, விலை: ரூ. 165/=]

நன்றி: உயிர் எழுத்து, ஏப்ரல் 2010

Series Navigation