மு.வ. ஒரு படைப்பாளியா ?

This entry is part [part not set] of 34 in the series 20030427_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா


திரு. சுந்தர ராமசாமி அவர்களின் எழுத்துக்களில் பரிச்சயமுண்டு. மரியாதையும் இருக்கின்றது. அப்படியான மரியாதைகள் சென்றவாரம் பிரசுரித்திருந்த உரைபோன்றவற்றில் தடம் புரள்வதை தவிக்க இயலவில்லை.

தமிழ்நாட்டின் சாபக்கேடு இலக்கியவாதிகள் எனத் தம்பட்டம் அடித்து கொள்கின்றவர்களில் முடிந்தவர்கள் கள்ளுக்கடைகளில் குடுமிப்பிடி சண்டை நடத்துவார்கள். முடியாதவர்கள் கட்டுரைகள், மேடைகளை களமாகக் கொண்டு அங்கலாய்ப்பார்கள். எதிரி இறந்திருந்தால் இன்னும் விசேடம். என்ன வேண்டுமானாலும் பேசலாம். எப்படி வேண்டுமானாலும் எழுதலாம். இவருக்குக் மு.வ. கிடைத்திருக்கிறார். மு.வ. உயிரோடு இருந்திருந்தால் கூட இப்படியெல்லாம் இறங்கி வருகின்ற குணமுடையவரல்ல. அவரெப்போதும் தன்னை படைப்பாளியென நெற்றியில் ஒட்டிக் கொண்டு அலைந்தவரும் அல்ல. பெரியவர் சுந்தரராமசாமி புதுமைப்பித்தன், பாரதி வரிசையில் தன்னையும் சேர்த்துக்கொள்ளட்டும். அந்த ஆசை அவர் மனதில் நிறையவே இருக்கின்றது. அதற்காக மு.வ. வின் படைப்பின் தன்மை குறித்து ‘உரை தலைப்பு ‘ க்குச் சம்பந்தமில்லாமல் அந்த இடத்தில் விமர்சித்திருக்க வேண்டாம். ஒருவன் படைப்பாளியா ? இல்லையா ? என்பதனைத் தீர்மானிப்பது விமர்சகர்கள், வாசகர்கள், காலம் என எல்லோரின் பங்களிப்பும் அதற்குண்டு. மற்றொரு படைப்பாளி( ?) மட்டும் அல்ல. சுந்தர ராமசாமி அவர்களை படைப்பாளி என்பதற்கு ஆயிரம்பேர்கள் உண்டெனில், மு.வ. வுக்கும் ஆயிரம்பேர்களிருப்பார்கள்.

படைப்பாளிக்கான இலக்கணத்தை யார் வகுப்பது ?

திரு. சுந்தர ராமசாமி அவர்களின் கருத்துபடி ‘இதற்கு முன்னால் இல்லாமல் இருக்கக்கூடிய ஒன்றைச் செய்து காட்டக் கூடியதுதான் படைப்பு ‘ என்று சாதித்திருக்கிறார். அதாவது ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை என்பது இவரது கண்டுபிடிப்பு. உண்மையில் எந்தப் படைப்புமே முதல் படைப்பல்ல. இரண்டாவது மூன்றாவது படைப்பென்றே கொள்ளவேண்டும். முதல் படைப்பு எங்கோ எதிலோ முந்திக் கொண்டுதான் உள்ளது. அந்த முதற் படைப்பினின்றும் இரண்டாவது, படைத்த விதத்திலோ கட்டமைப்பிலோ, உத்தியிலோ மாறுபட்டிருக்கலாம். முவ. வின் ‘கள்ளோ காவியமோ அல்லது கரித்துண்டு புதிது அல்லவென்கிறார். ஏன் இவரது ‘ஜே.ஜே. சில குறிப்புகள் ‘ கூட தமிழ் மட்டுமே அறிந்த சமுதாயத்திற்கு வேண்டுமானால் புதியதாக இருக்கலாம். மேற்கத்திய படைப்புகளை அறிந்த தமிழ் சமுதாயத்திற்குப் புதிது அல்ல. தீவிர இலக்கியவாதிகள் பேசும் கட்டுடைத்தல், பின் நவீனத்துவம் இத்யாதி.. இத்யாதிகள் எங்கிருந்து வந்தது ? மேலை நாட்டு படைப்புகளின் அப்பட்டமான சாயல் இல்லையா ? ‘இதற்கு முன்னால் இல்லாமல் இருக்கக்கூடியது ஒன்றைச் செய்து காட்டக் கூடியதுதான் படைப்பென்றால். படைப்பாளிகள் படைப்பதெல்லாம் படைப்பில்லையென்று ஆகிவிடுகிறது.

ஒரு படைப்பாளி தனிமனிதனல்ல. அவன் சார்ந்த சமூகத்தின் அங்கம். அவனின் தனித் தன்மை என நம்புவதும்- நம்பப்படுவதும் கூட ஏதோவொன்றின் நகல் மற்றும் உள் வாங்கலே. அவன் வேறு படைப்பு வேறு அல்ல. ஏதோவொரு வகையில் படைப்பில் புதைந்துகொண்டு சமுக நிகழ்வுகளை விமர்சிப்பதோடு நின்றுவிடாமல் தன் சுயத்தைக் கூண்டில் நிறுத்தி தண்டனையோ பாராட்டோ வழங்கிக் கொள்ள வாசகனைத் துணைக்கழைக்கிறான். அந்த வகையில் மு.வ. மிகச் சிறந்த படைப்பாளி.

தமிழ்க் கவிதைகளைப் பற்றி சுந்தர ராமசாமியைக் காட்டிலும் மு.வ. கொஞ்சம் அதிகப் படியாகவே அறிந்தவர். ‘இலக்கியத் திறன் ‘ நூலின் நோக்கம் கவிதைப்பற்றிய கோட்பாட்டை விளக்குவது அல்ல, அவரறிந்த அவர் காலத்திய நிலையில் இலக்கிய திறன் பற்றி சொல்லவருவது. நூலில் ஆங்கிலக் கவிஞர்கள் மேற்கோள் காட்டியதன் நோக்கம் அந்த நேரத்திலே புதுக் கவிதைகளில் புதுமை என்ற பெயரிலே வசனம் மட்டுமே இருந்தது கவிதைகளில்லை. ஆங்கிலக்கவிஞர்களை மேற்கோள் காட்டியதாலேயேஅவருக்குத் தாழ்வுமனப்பான்மை – என்று முடிவுக்குவருவதில் உடன்பாடில்லை. இன்றைக்கு இருக்கின்ற எந்தப் படைப்பாளியாவது பெரியவர் சுந்தர ராமாசாமி உட்பட மேற்கத்திய நாடுகளை, அவற்றின் இலக்கியங்களை, படைப்பாளிகளை உதாரணபடுத்தாமலிருக்க இருக்க முடிகின்றதா ? தமிழ் நாட்டுக் கல்லூரியொன்றில் தமிழரான இவருக்கு ஈ.வெ. ரா பெயரை உச்சரிக்க மறதி. ஈ.எம்.எஸ் பெயர்மட்டுமே ஞாபகத்திற்கு வருகின்றது. இதற்குப் பெயர் தாழ்வு மனப்பான்மையல்ல ஊருக்கு உபதேசம்.

மு. வ. வின் நாவல்களைபற்றி நூல் எழுதிய இரா.மோகன் என்பவர் சொல்கிறார். ‘எதிர்காலம் இன்னும் எத்தனையோ எழுத்தாளர்ளை, பேராசிரியர்களை, துணைவேந்தர்களைப் பெறலாம். ஆனால் மலர்போன்ற இரக்க நெஞ்சமும் மலை போன்ற கொள்கை உறுதியும் கொண்ட ஒரு பண்பாளரை – அறிவுத் தந்தையாய், அன்புத் தாயாய்ப் பலருக்கு விளங்கிய ஒரு நல்லவரை- இறுதி வரையில் கொள்கைப் பிடிவாதம் கொண்டு, அளவோடு நெறி வகுத்து வாழ்ந்து காட்டிய ஒரு பெருந்தகையாளரை – எதிர்காலத்தில் இனிப் பார்க்கமுடியுமா ? ‘

இறுதியாக தமிழ்ப் படைப்பாளிகளுக்கு பணிவான வேண்டுகோள்.

மேடைகளையோ எழுத்தையோ சகப் படைப்பாளியை விமர்சிப்பதில் செலவிடவேண்டாம், தமிழுக்காக செலவிடுங்கள்

***

Na.Krishna@wanadoo.fr

Series Navigation

நாகரத்தினம் கிருஷ்ணா

நாகரத்தினம் கிருஷ்ணா