முள்பாதை 58

This entry is part [part not set] of 34 in the series 20101205_Issue

தெலுங்கில் யத்தனபூடி சுலோசனாராணி தமிழாக்கம் கௌரி கிருபாநந்தன்


email id tkgowri@gmail.com

பொல பொலவென்று விடியும் போது மெல்லிய திரை போல் தூக்கம் என்னைத் தழுவியது. கொஞ்ச நேரம் தூங்கியிருப்பேனோ என்னவோ. பேச்சு சந்தடி கேட்டது.
“அக்கா… அக்கா…” என்ற குரலும், யாரோ ஓடிவரும் சத்தம் கேட்டதும் திடுக்கிட்டு எழுந்து உட்கார்ந்தேன். என் எதிரே வெளளை நிற கௌன் அணிந்துகொண்டு ஸ்வீட்டீ நின்றிருந்தாள். என்னைப் பார்த்ததும் “அக்கா!” என்று ஓடி வந்து என் கழுத்தை கட்டிக் கொண்டாள். ஸ்வீட்டீ என்னுடைய ஒன்று விட்ட சித்தியின் மகள். சித்தப்பா நெய்வேலியில் பெரிய வேலையில் இருந்தார். ஸ்வீட்டீயும் என்னைப் போலவே சித்திக்கு ஒரே மகள். சின்ன வயதில் பரங்கிப் பழம் போல் இருந்ததால் அம்மா அவளை ஸ்வீட்டீ என்று அழைத்தாள். அவள் பெரியவள் ஆன பிறகும் அதே பெயர் நிலைத்துவிட்டது. வசுந்தரா என்ற பெயர் இருப்பது யாருக்குமே தெரியாது. இப்போ அவளைப் பார்க்கும் போது ரொம்ப ஆச்சரியமாக இருந்தது. ஏற்கனவே பூசிய உடல்வாகு. இப்போ காற்றடித்த பலூன்போல் உப்பிவிட்டதோடு கழுத்து இருப்பதே தெரியவில்லை. பெரிய சைஸ் மூக்குக் கண்ணாடி அணிந்திருந்தாள்.
ஸ்வீட்டீயின் பின்னாலேயே அம்மாவும், சித்தியும் உள்ளே வந்தார்கள். சித்தியும் அம்மாவைப் போலதான். பணம் காசை வைத்துக் கொண்டு எதிராளியை எடை போடுவாள்.
சித்தி அருகில் வந்து என் கன்னத்தை வழித்து திருஷ்டி கழித்தாள். “இப்போதே மீனா முகத்தில் கல்யாணக் களை வந்துவிட்டது” என்றாள்.
அம்மா முறுவலித்து விட்டு என் தலையை வருடிவிட்டாள். அந்த ஸ்பரிசத்திற்கு என் உடல் கூசியது. “எழுந்து முகத்தை அலம்பு. சாரதி போன் செய்தான். மறுபடியும் எட்டரை மணிக்கு செய்வதாக சொன்னான்” என்றாள்.
நான் எழுந்து கீழே வந்தேன். அம்மா என்னை எண்ணெய் தெய்த்து குளிக்கச் சொல்லி அழைக்கும் போது மறுபடியும் போன் வந்தது. ஸ்விட்டீயுடன் பேசிக் கொண்டு அங்கேயே இருந்த நான் போனை எடுத்தேன்.
“ஹலோ மீனா!” மறுமுனையில் சாரதி ஏதோ சொல்லப் போனான்.
“நீங்க கேட்டுக் கொண்டபடியே நடக்கும். நிம்மதியாக இருங்கள்” என்று சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டேன்.
ஸ்வீட்டீ நிறுத்தாமல் பேசிக் கொண்டே இருந்தாள். ஸ்கூலில் எல்லோரும் அவளை குண்டு பூசணி என்று அழைப்பார்களாம். அவள் பேசுவதை கேட்டுக் கொண்டிருந்தாலும் என் மனம் முழுவதும் உத்வேகம் பரவியிருந்தது. சீக்கிரம் மாலையாகிவிட்டால் தேவலை என்று தோன்றியது.
அம்மாவும், சித்தியும் என்னை மணையில் உட்கார வைத்து தலைக்கு எண்ணெய் வைத்தார்கள். குளித்து விட்டு புதுப்புடவையை உடுத்திக் கொண்டதும் அம்மாவின் கால்களில் விழுந்து வணங்கினேன். “என்ன அதிசயம்? இன்னிக்கு உலகமே தலைகீழாகப் போகிறது. உங்க அப்பாவை விட்டுவிட்டு முதலில் எனக்கு நமஸ்காரம் பண்ணுகிறாயே?” அம்மா முறுவலுடன் என்னை எழுப்பினாள். நெற்றியின் மீது முத்தம் பதித்திவிட்டு “இன்னிக்கு என் ஜென்மம் சாபல்மாகிவிட்டது போல் இருக்கு. உன்னை இந்தக் கோலத்தில் பார்க்கணும்னு எத்தனை நாளாகக் கனவு காண்கிறேன் தெரியுமா?” என்றாள்.
அம்மாவின் சந்தோஷத்தைப் பார்க்கும் போது தவறு செய்து விட்டது போல் என் மனம் குன்றிவிடது. வேலைக்காரர்களுக்கும், திருநாகம் மாமிக்கும் அம்மா என் கையால் புத்தாடைகளை வழங்கச் செய்தாள். என் அறைக்குப் போவதற்காக மாடிப்படி ஏறப்போனேன். “ஆபீஸ் அறையில் அப்பா இருக்கிறார். போய் நமஸ்காரம் பண்ணு” என்றாள் அம்மா.
வேறு வழியில்லாமல் ஆபீஸ் அறைக்குப் போனேன். அப்பாவின் அருகில் போகணும் என்றாலே என் கால்கள் நடுங்கத் தொடங்கின. அம்மாவின் முன்னால் என்னால் நடிக்க முடியும். ஆனால் அப்பாவின் முன்னால் சின்ன பொய் கூட என்னால் சொல்ல முடியாது. ராஜேஸ்வரி, கிருஷ்ணன் விஷயத்தில் அப்பாவை நான் தவறாகப் புரிந்து கொண்டு இருக்கிறேன். அப்பாவுக்கு அவர்களிடம் பிரியம் இருந்தது. ஏனோ தெரியவில்லை. அவர்களுடன் நான் நெருக்கமாக பழகுவதை அப்பா விரும்பவில்லை. இது எனக்குப் பெரிய கேள்விக்குறியாக இருந்தது.
ஆபீஸ் அறைக்குள் அடியெடுத்து வைத்தேன். சித்தப்பாவும் அங்கேயே இருந்தார். இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள்.
“அதோ… மீனா வந்து விட்டாள்” என்றார் சித்தப்பா. ஏற்கனவே அப்பா என்னை பார்த்துவிட்டார். நான் முதலில் சித்தப்பாவுக்கு நமஸ்காரம் செய்தேன். பிறகு அப்பாவுக்கு நமஸ்காரம் பண்ணுவதற்காக குனிந்தேன். அப்பா என் தோள்களைப் பற்றி எழுப்பிவிட்டார். என்னையும் அறியாமல் அப்பாவின் முகத்தைப் பார்த்தேன். அவர் முகத்தில் எந்த விதமான கோபமோ வருத்தமோ தென்படவில்லை.
“மீனா! அத்தைக்காக நேற்று மெலட்டூருக்கு ஆளை அனுப்பிவிட்டேன். இன்னும் கொஞ்ச நேரத்தில் அத்தை இங்கே வந்து சேருவாள். கிருஷ்ணனையும் மாலையில் வரச்சொல்லியிருக்கிறேன்” என்றார். என் இதயம் வேகமாக துடித்தது. அப்பா கிருஷ்ணனை சந்தித்தாரா? கிருஷ்ணன் என்ன சொன்னான்? எங்களுடைய விஷயத்தை சொல்லிவிட்டானா?
“கிருஷ்ணனை நீங்க சந்தித்தீங்களா?” பதற்றத்தை அடக்கிக் கொண்டே கேட்டேன்.
“சந்திக்கவில்லை. இரண்டு முறை போன் செய்தேன். கிடைக்கவில்லை. ஹொட்டலுக்குப் போனால் ரூம் பூட்டியிருந்தது. கடிதம் எழுதி ரிசெப்ஷனில் கொடுத்துவிட்டு வந்தேன். கமலா வரும் விஷயத்தைக் குறிப்பிட்டு கட்டாயம் வரச்சொல்லி எழுதியிருக்கிறேன். என் பேச்சைத் தட்ட மாட்டான். கட்டாயம் வருவான். ராஜியிடமும் இந்த விஷயத்தைச் சொல்லியிருக்கிறேன்.” அப்பா சொன்னார்.
அங்கிருந்து சட்டென்று வெளியே வந்து விட்டேன். என் இதயம் பாரமாக இருந்தது. கடைசி நிமிடத்தில் அப்பா சாமர்த்தியமாக ஏதாவது செய்து அம்மாவின் விருப்பத்தின்படி சாரதிக்கும் எனக்கும் கல்யாணத்தை நடத்தி விடுவார்களோ என்ற அச்சம் ஏற்பட்டது.
எல்லோருடனும் சேர்ந்து சாப்பிட்டேன். இதுதான் இந்த வீட்டில் கடைசியாக நான் இருக்கப் போகும் நாள். சாப்பிட்டு முடித்த பிறகு என் அறைக்கு வந்து பேப்பரையும், பேனாவையும் எடுத்துக் கொண்டு அப்பாவுக்குக் கடிதம் எழுதத் தொடங்கினேன். பிறகு அதை கிழித்து போட்டுவிட்டு வேறு பேப்பரை எடுத்துக் கொண்டேன்.
மம்மி!
நான் கிருஷ்ணனைத் திருமணம் செய்து கொள்ளப் போகிறேன். உங்களுக்கு ஏமாற்றம் ஏற்படுத்தி இருந்தால் மன்னித்து விடுங்கள்.
எவ்வளவு யோசித்தாலும் அதற்கு மேல் என்ன எழுதுவதென்று புரியவில்லை. கடைசியில் கீழே கையெழுத்து போட்டுவிட்டு அந்தக் கடிதத்தை என்னிடமே வைத்துக் கொண்டேன். முன்னாடியே யார் கண்ணிலாவத பட்டுவிட்டால், முக்கியமாக திருநாகம் மாமி பார்த்துவிட்டால் என் திட்டம் நிறைவேறாமல் போய்விடலாம்.
வாசலில் ஷாமியானா போடப்பட்டது. லாரியில் நாற்காலிகள் வந்து இறங்கின. அவற்றை இறக்கி வரிசையாக போட்டுக் கொண்டிருந்தார்கள். மின்விளக்கு தோரணங்களால் முகப்பை, மேடையை அழகுப்படுத்திக் கொண்டிருந்தார்கள். இந்த சந்தடி எல்லாம் பார்த்த போது எவ்வளவுதான் கட்டுப்படுத்திக் கொண்டாலும் என் விழிகள் கசிந்தன. வெறும் நிச்சயதார்த்தத்திற்கே அம்மா இவ்வளவு ஆர்பாட்டம் செய்கிறோளே. திருமணத்தை இன்னும் எவ்வளவு கிராண்டாக நடத்த எண்ணியிருப்பாளோ என்று தோன்றியது. அம்மா பலமுறை மிஸெஸ் ராமன் போன்வர்களிடம் “மீனாவின் திருமணம் என்னுடைய நெடுநாளைய கனவு. எல்லொருடைய மனதிலும் நிற்கும் அளவுக்கு கிராண்டாக, சிறப்பாக அவளுடைய திருமணம் நடத்த வேண்டும். இதுதான் என்னுடைய விருப்பம்” என்று சொல்வதைக் கேட்டிருக்கிறேன். நான் தரப் போகும் இந்த ஏமாற்றத்தை அம்மா எப்படி தாங்கிக் கொள்ளப் போகிறாள்?
மதியம் மூன்று மணியாகும் போது மெதுவாக அம்மாவிடம் சென்றேன். “மம்மி! கோவிலுக்குப் போய்விட்டு வருகிறேன்” என்றேன்.
அதைக் கேட்டதும் அம்மா நாக்கைக் கடித்துக் கொண்டாள். “அடடா! மறந்தே போய்விட்டேன். காலையிலேயே உன்னை கோவில்லுப் போகச் சொல்லணும் என்று நினைத்து இந்த சந்தடியில் மறந்தே போய்விட்டேன்” என்றாள்.
“இப்போ மட்டும் என்னவாம்? காரில்தானே போகப் போகிறாள்? போய்விட்டு வரச்சொல்.” சித்தி சொன்னாள்.
“இப்பொழுதா? நேரம் எங்கே இருக்கு?”
“பரவாயில்லை மம்மீ! சீக்கிரமாகவே வந்து விடுகிறேன்” என்றேன்.
“சரி. சித்தியை அழைத்தப் போ”என்றாள்.
நான் பயந்து போய்விட்டேன்.
“நானா? இரவு முழுவதும் சரியாக தூங்கவில்லை. கால்வலி தாங்க முடியவில்லை. ஸ்வீட்டீயும், மீனாவும் போய் வரட்டும்” என்றாள் சித்தி சோம்பல் முறித்தக் கொண்டே.
கோவிலுக்குக் கிளம்பும் முன் மெலட்டூரில் கிருஷ்ணன் வாங்கிக் கொடுத்த ஜரிகைப் புடவையை கட்டிக் கொண்டேன். நான் எழுதிய கடிதத்தை மேஜைமீது வைக்கப் போனேன். கைகள் நடுங்கின. அம்மா பார்த்துவிட்டால் பாதி வழியிலேயே என்னை இழுத்து வரக்கூடும். அதனால் கடிதத்தைக் கையிலேயே எடுத்துக் கொண்டேன். ரயில் ஓடுவது போல் தடக் தடக் என்ற என் இதயம் துடித்துக் கொண்டிருந்தது.
ஸ்வீட்டீயுடன் கோவிலுக்குப் போனேன். சுவாமியின் முன்னால் கண்களை மூடிக் கொண்டு “கடவுளே! நானாக தேர்ந்தெடுத்துக் கொண்ட வாழ்க்கை இது. எந்த விதமான பிரச்னைகளும் வராமல் பார்த்தக் கொள். அப்படியே வந்தாலும் எதிர்த்து நின்று சமாளிக்கக் கூடிய துணிச்சலை எனக்குக் கொடு” என்று மனப்பூர்வமாக வேண்டிக் கொண்டேன்.
வீட்டுக்குத் திரும்பி வந்து கொண்டிருந்தோம். என் உடல் முழுவதம் மின்சாரம் பாய்வது போல் உத்வேகமாக இருந்தது. சுதந்திரமாக ஒரு முடிவை எடுப்பதில் இவ்வளவு சந்தோஷம் இருக்கும் என்று இதுவரையில் எனக்குத் தெரியவில்லை. தெரிந்திருந்தால் முன்னாடியே என் எதிர்ப்பைத் தெரிவித்திருப்பேன். என் வாழ்க்கையில் மிக முக்கியமான இந்த நாளில் இப்படி ஓடிப்போக வேண்டிய தலையெழுத்து ஏற்பட்டிருக்காது.
மாமி வீட்டு பக்கத்துத் தெருவழியாக காரை போகச் சொன்னேன். தெருமுனை வந்ததும் நிறுத்தச் சொல்லி இறங்கிக் கொண்டேன். “டிரைவர்! இங்கே ஒரு பிரண்டை பார்க்கப் போகிறேன். ஒரு மணி நேரம் கழித்த காரை எடுத்துக் கொண்டு வா. இந்தத் தெருவில் கடைசி வீடு” என்று அடையாளம் சொன்னேன்.
டிரைவர் தலையை அசைத்தான். “அக்கா! நானும் கூட வரட்டுமா?” ஸ்வீட்டீ கேட்டாள்.
“வேண்டாம். நான் மட்டும் வருவதாக சிநேகிதியிடம் சொல்லியிருக்கிறேன். வேண்டுமென்றால் திருப்பி அழைத்துக் கொண்டு போகும் போது காரில் வாயேன்” என்றேன். ஸ்வீட்டீ ஏமாற்றத்துடன் பார்த்துவிட்டு சரி என்றாள்.
கார் கண்மறைவாக ஆனதும் மெயின் ரோட்லிருந்து சந்துக்குள் திரும்பினேன். தொலைவில் மாமியின் வீட்டிற்கு முன்னால் மதுவில் கார் தென்பட்டது. கிருஷ்ணன் வந்து விட்டான் போலும். வேகமாக அடியெடுத்து வைத்தேன். மாமியின் வீடு நெருங்க நெருங்க என் நடையின் வேகம் அதிகரித்தது. கேட்டைத் திறந்த போது எதிரே வராண்டாவில் கிருஷ்ணன் தென்பட்டான். மாமி மாமாவும் அங்கே இருந்தார்கள். என்னைப் பார்த்ததும் கிருஷ்ணன் இரண்டே எட்டில் என்னை நெருங்கினான்.
“நீ வர மாட்டாயோ என்றுதான் நினைத்தேன்” என்றான். என்னைப் பார்த்ததும் அவன் முகத்தில் தென்பட்ட உணர்வு ரொம்ப அபூர்வமானது. வார்த்தைகளில் வர்ணிக்க முடியாதது. அவன் பார்வையின் மகிமை என்னவோ தெரியாது, ஆயிரம் யானைகளின் பலம் எனக்கு வந்துவிட்டது போல் இருந்தது.
“நம்முடன் மாமி, மாமாவும் வருகிறார்கள். மதுவை ஏற்கனவே அவர்களுக்குத் தெரியுமாம். என் சார்பில் மது, உன் சார்பில் மாமி மாமா.” கிருஷ்ணன் முறுவலித்தான்.
மாமி என்னைப் பார்த்ததும் அவசர அவசரமாக வீட்டைப் பூட்டிவிட்டு வந்தாள். மாமியின் கையில் பெரிய பிளாஸ்டிக் கூடையிருந்தது. ஈரத்துணியில் எதையோ சுற்றி கூடையில் வைத்திருந்தாள். காரின் முன் சீடடில் அமர்ந்திருந்த மாமாவிடம் கூடையை நீட்டி “பத்திரமாக வைத்திருங்கள்” என்றாள். பின் சீட்டில் மாமி, நான், கிருஷ்ணன் ஏறிக் கொண்டோம்.
கார் நகர்ந்தது.
*********

நாங்கள் போய்ச் சேர்ந்த போது மது எல்லா ஏற்பாடுகளையும் செய்து வைத்திருந்தான். எங்களைப் பார்த்ததும் எதிரே வந்து “ஏன் இவ்வளவு லேட்?” என்றான் பதற்றத்துடன்.
“மீனா வருவது தாமதமாகிவிட்டது” என்றான் கிருஷ்ணன்.
மது என் பக்கம் திரும்பி முறுவலுடன் சொன்னான். “நீங்க வரும் வரையில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. வருவாள் என்று நானும், மாட்டாள் என்று கிருஷ்ணனும் பந்தயம் வைத்துக் கொண்டோம்.”
பின்னாலேயே வந்த மாமி “தாமதம் ஆனாலும் பரவாயில்லை. எனக்காக ஒரு ஐந்து நிமிடங்கள் ஒதுக்கித் தரணும். கஷ்டப்பட்டு பூ ஜடை தயாரித்துக் கொண்டு வந்திருக்கிறேன். மீனாவின் பின்னலுடன் இணைக்க வேண்டும்” என்றாள்.
“இப்போ அதெல்லாம் எதுக்கு மாமி?” என்றேன்.
“என்னுடைய திருப்திக்காக. நீங்க இருவரும் எங்க வீட்டிலிருந்து கிளம்பி வந்து கல்யாணம் செய்து கொள்ளப் போறீங்க. உங்களுக்கு எந்தக் குறையும் இருக்கக் கூடாது. இப்படி வந்து உட்கார். இரண்டு நிமிடங்களுக்கு மேல் ஆகாது” என்றாள் மாமி.
மாமி என்னை பக்கத்தில் இருக்கும் அறைக்கு அழைத்துப் போய் ஸ்டூலில் உட்கார வைத்தாள். மாமாவை என் பின்னலை உயர்த்தி பிடிக்கச்சொல்லி பூ ஜடையை மளமளவென்று ஊசி நூலால் பின்னலுடன் இணைத்துவிட்டாள். கடைசியில் பூச்சரத்தை என் தலையில் வைத்துவிட்டு “பெண் குழந்தை என்றால் எனக்கு எவ்வளவு பிடிக்குமோ உஙக மாமாவிடம் கேள். சொல்லுவார். பெண் குழந்தையை சீராட்டி வளர்ப்பது, நல்ல வரன் பார்த்து கல்யாணம் செய்து கொடுப்பது, பேரன் பேத்தி பிறந்தால் அவர்களை மடியில் போட்டு கொஞ்சுவது… இதெல்லாம் ஒரு பெண்ணின் வாழ்க்கையில் இனிமையான அனுபவங்கள்” என்றாள். என் நெற்றியில் திலகமிட்டு, கன்னத்தில் திருஷ்டி பொட்டையும் வைத்தாள்.
“நேரமாகிக் கொண்டிருக்கிறது. சீக்கிரம் ஆகட்டும்.” மாமா எச்சரித்தார்.
அடுத்த அரைமணிக்குள் என் வாழ்க்கையில் மிக முக்கியமான திருமண நிகழ்ச்சி நடந்து முடிந்தது. கடவுள் சன்னிதியில், மாமா, மாமி, மது முன்னிலையில் சம்பிரதாய முறையில் திருமணச் சடங்கு நடந்து முடிந்துவிட்டது. மது எங்கிருந்தோ நாதசுவர வாத்தியத்திற்கும் ஏற்பாடு செய்திருந்தான்.
கிருஷ்ணன் தாலி சரட்டை பிடித்துக் கொண்டு என் எதிரே நின்றபோது அவன் கைகள் லேசாக நடுங்கியதை, நெற்றியில் வியர்வை அரும்பியதை நான் கவனிக்காமல் இல்லை. நடப்பதெல்லாம் ஒரு கனவு போல், நம்ப முடியாத விஷயமாக எனக்குத் தோன்றியது.
தாலிகட்டி முடிந்ததும் மது பூமாலைகளை கொடுத்து எங்களை மாற்றிக் கொள்ள சொன்னான். மாமி சிவனும் பார்வதியும் இணைந்திருந்த சந்தன பொம்மையை பரிசாகத் தந்தாள். என் கன்னத்தில் கிள்ளிவிட்டு “நான் ஏன் இந்த பரிசை கொடுக்கிறேன் தெரியுமா? பார்வதி சிவனைத் தேர்ந்தெடுத்தது போல் நீ உன் அத்தானை தேர்ந்தெடுத்தாய். அதற்காகத்தான்” என்றாள்.
மது காபிக்காக ஏற்பாடு செய்திருந்தான். நானும் மாமியும் உள்ளே அறையில் உட்கார்ந்து கொண்டோம். நான் இன்னும் நம்பிக்கை வராதது போல் திருமாங்கல்யத்தை தொட்டுப் பார்த்துக் கொண்டேன். மது எங்க இருவருக்கும் காபி கொண்டு வந்து கொடுத்தான். நாங்கள் காபி குடித்துக் கொண்டிருந்த போது கிருஷ்ணன் உள்ளே வந்தான். மாமி அவனைப் பார்த்ததும், “காபியில் சர்க்கரை குறைவாக இருக்கு” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து போய்விட்டாள்.
நானும் கிருஷ்ணனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு நின்று விட்டோம்.
கிருஷ்ணனின் பார்வை என் கழுத்திலிருந்த திருமாங்கல்யத்தின்மீது நிலைத்துவிட்டது. “மீனா!” என்று ஏதோ சொல்ல வந்தான். அதற்குள் மது காபி டம்ளரை எடுத்து வந்து கிருஷ்ணனிடம் கொடுத்தான். காபியைக் குடிக்கப் போன கிருஷ்ணன் ஏதோ நினைவுக்கு வந்தது போல் சட்டைப் பையிலிருந்து கடிதத்தை எடுத்து “ஊரிலிருந்து ஆள் வந்து கொடுத்தான். அம்மா வரவில்லை. கடிதம் எழுதி அனுப்பியிருக்கிறாள்” என்றான்.
“என்ன எழுதியிருக்கிறாள்?”
“நீயே படித்துப் பார்” என்றான்.
கடிதத்தை பிரித்து படித்தேன்.
சிரஞ்சீவி கிருஷ்ணனுக்கு,
ஆசிகள் பல. உன் கடிதம் கிடைத்தது. பல தடவை படித்த பிறகும் எனக்கு விஷயம் விளங்கவில்லை. ஏன் என்றால் இன்று மதியம் சென்னையிலிருந்து மாமா ஆள் மூலமாகக் கடிதம் அனுப்பியிருந்தார். ‘நாளை மாலை சாரதியுடன் மீனாவுக்கு நிச்சியதார்த்தம் நடக்கவிருக்கிறது. நீ கட்டாயம் வர வேண்டும். கிருஷ்ணனும், ராஜேஸ்வரியும் இங்கே இருக்கிறார்கள். நீயும் வந்தால் எனக்குத் திருப்தியாக இருக்கும். நானே சுயமாக வந்து உன்னை அழைத்து வரவேண்டும் என்று நினைத்ததால் முன்கூட்டி கடிதம் எழுதவில்லை. கடைசி நிமிடத்தில் தவிர்க்க முடியாத வேலைகள் வந்து விட்டதால் என்னால் வர முடியவில்லை. நீ உடனே கிளம்பி வரவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கேட்டுக் கொள்கிறேன். இங்கே எனக்குத் தெரிந்தவர்கள் குடும்பத்தில் நாலைந்து பையன்கள் இருக்கிறார்கள். நீ இங்கே வந்து, உனக்குப் பிடித்த வரனைப் பார்த்து ராஜேஸ்வரிக்கு முடிவு செய்தால் அடுத்த மாதம் ஐந்தாம் தேதி அன்று இரண்டு திருமணங்களையும் ஒன்றாக நடத்தி விடலாம் என்பது என்னுடைய சங்கல்பம். நீ வரவில்லை என்றால் எனக்கு ரொம்ப வருத்தமாக இருக்கும்’ என்று எழுதியிருந்தார்.
அந்தக் கடிதத்தைப் பார்த்த பிறகு கிளம்புவதா வேண்டாமா என்ற நான் குழம்பிக் கொண்டிருந்த போது நீ அனுப்பிய ஆள் வந்தான். உன் கடிதத்தைப் பார்த்த பிறகு எனக்கு மூளையே கலங்கிவிட்டது. மாமா மாமிக்குத் தெரியாமல் நீ மீனாவை திருமணம் செய்த கொள்ள வேண்டிய சூழ்நிலை அப்படி என்ன வந்திருக்குமோ எனக்குப் புரியவில்லை. மாமி நம்மை எவ்வளவு தாழ்வாக மதிக்கிறாளோ உனக்கு தெரியாதது இல்லை. நல்லது கெட்டது தெரிந்தவன். அவசரப்பட்டு ஒரு முடிவுக்கு வந்திருக்க மாட்டாய் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. ஒருக்கால் நீ கட்டாயம் மீனாவைக் கல்யாணம் செய்து கொள்ளத்தான் வேண்டும் என்றால் கல்யாணம் ஆனதும் நேராக திருப்பதிக்குப் போய் ஏழுமலையானை தரிசனம் செய்து கொண்ட பிறகு இங்கே வரவேண்டும். இது என்னுடைய வேணடுகோள். இந்தக் கடிதம் முன்னாடியே உனக்கு கிடைத்துவிட்டால் திருமண விஷயத்தில் இன்னொரு தடவை யோசித்துவிட்டு முடிவு செய்ய வேண்டும். குடும்பச் சுமை சிறுவயதிலேயே உன் தலையில் விழுந்து விட்டது. உன் திருமண வாழ்க்கை நல்லபடியாக அமைந்து நீ சந்தோஷமாக வாழ்வதைப் பார்க்க வேண்டும். அதைவிட நான் விரும்புவது வேறொன்றுமில்லை.
உன்னுடைய நலனை எப்போதும் விரும்பும்,
உன் அம்மா
அந்தக் கடிதத்தில் மகனின் நலமான வாழ்க்கைக்காக அத்தை படும் கவலை, ஆதங்கம் ஒவ்வொரு எழுத்திலேயும் வெளிப்பட்டுக் கொண்டிருந்தது. கிருஷ்ணன் என்னை திருமணம் செய்து கொள்வதில் அத்தைக்கு விருப்பமில்லை என்று புரிந்த போது எனக்கு ஏமாற்றமாக இருந்தது.
கடிதத்தைப் படித்து முடித்த பிறகும் நான் நிமிர்ந்து பார்க்காததால் கிருஷணன் என் பக்கத்தில் அமர்ந்து கொண்டான். “அம்மாவை என்னால் சமாதானப் படுத்த முடியும். அந்த தைரியம் எனக்கு இருக்கிறது” என்றான். கீழே வைத்த காபி டம்ளரை எடுத்து நீட்டிக் கொண்டே “எடுத்துக்கொள். சூடு ஆறிவிடும்” என்று பேச்சை மாற்றினான்.
ஏனோ தெரியவில்லை. என்னையும் அறியாமல் என் கண்களில் நீர் தளும்பியது. அதை அவன் பார்த்து விடாமல் இருப்பதற்காக தலையை குனிந்து கொண்டேன். கிருஷ்ணனுக்கு எங்க அம்மாவின் சுபாவம் தெரியும். அந்தப் பக்கம் அத்தையின் மென்மையான மனதைப் பற்றியும் தெரியும். அப்படி இருந்தும் அந்த இருவரின் அபிப்பிராயங்களுக்கு எதிராக, என் வார்த்தைக்கு மதிப்பு தந்து நான் விரும்பியது போல் என்னை திருமணம் செய்து கொண்டான். அப்பாவின் முன்னால் என் பிடிவாதம் ஜெயிப்பதற்கு உறுதுணையாக இருந்தான். அத்தையின் கடிதம் திருமணத்திற்கு முன்னாடியே கைக்குக் கிடைத்தாலும் அவன் பின் வாங்கவில்லை. அத்தையின் மனதை நோகச் செய்யும் எந்த வேலையும் அவன் செய்ய மாட்டான் என்று எனக்குத் தெரியும். அவனுக்கு நினைவு தெரிந்த பிறகு தாயின் பேச்சுக்கு மாறாக நடந்து கொண்டது இந்த விஷயத்தில் மட்டும்தானோ.
மது உள்ளே வந்தான். “என் வேலை முடிந்த விட்டது. சாட்சியாக என் கடமையைச் செய்து விட்டேன். அடுத்தது என்ன?” என்றான்.
“வேறு என்ன? நேராக மாமாவிடம் போகணும். அவர்களுடைய வெசவுளையோ ஆசிகளையோ பெற்றுக் கொண்டு திருப்பதிக்குக் கிளம்பணும்.” கிருஷ்ணன் சொன்னான்.
“எங்க வீட்டுக்கா? இப்பொழுதா?” பயந்து போனவளாக பார்த்தேன்.
“ஆமாம் மீனா! இன்று இரவே மெலட்டூருக்குப் போய் விடலாம் என்று நினைத்தேன். அம்மா நம்மை திருப்பதிக்கு போகச் சொல்லி எழுதியிருக்கிறாள். மதூவையும் நம்முடன் ஊருக்கு வரச்சொல்லி கேட்டிருக்கிறேன்.”
“இங்கிருந்தே ஊருக்குப் போய்விடலாம். எங்க வீட்டுக்கு போக வேண்டாம்.”
“கோழைகளை போல் ஓடிப் போகலாம் என்கிறாயா? திருமணம் ஆவதற்கு முன் மறுக்கக்கூடும் என்று பயப்படலாம். ஆனபிறகு பயப்படுவானேன்?”
“இப்போ போனால் வேறு வினையே வேண்டாம். அம்மாவின் சுபாவம் உனக்குத் தெரியாது. அங்கே போனால் அவமானப்பட வேண்டியிருக்கும்.”
“தெரியும். அதனால்தான் போகணும் என்று சொல்கிறேன். என்னிக்கு இருந்தாலும் நாம் அவர்களைச் சந்திக்காமல் இருக்க முடியாது. அது எவ்வளவு சீக்கிரம் நடந்தால் அவ்வளவு நல்லது. நாலுபேர் நாலு விதமாக நினைத்துக் கொண்டாலும், தேவையில்லாத வதந்திகள் பரவாது. நாம் இருவரும் கல்யாணம் செய்து கொண்டு விட்டோம் என்ற விஷயம் மாமி, மாமாவுக்குத் தெரியவேண்டும். இப்போ நாம் அவமானப்பட்டாலும் வெளிஉலகத்தாரிடமிருந்து வரும் ஏச்சு பேச்சுகளிலிருந்து அவர்களை நம்மால் காப்பாற்ற முடியும்.”
“சொல்பவர்கள் எப்போதும் சொல்லுவார்கள். நம்மால் யாரையும் தடுக்க முடியாது.”
“பாதியாவது தடுக்க முடியும். நீ கல்யாணம் செய்து கொண்டு விட்டாய் என்று உடனே செய்தி தெரிவது வேறு. யாருடனோ நீ ஓடிப் போய்விட்டாய் என்று வதந்தி பரவுவது வேறு. எல்லாவற்றையும் தாங்கிக் கொள்ள நான் இருக்கும் போது உனக்கு இந்த பயம் ஏன்?”
ஏனோ தெரியவில்லை. இங்கிருந்து நேராக வீட்டுக்கு போய் அம்மா அப்பாவைப் பார்த்துதான் ஆகணும் என்று கிருஷணன் தீவிரமாக இருந்தான்.
“அம்மா என்னை உன்னுடன் திரும்பி வரவிடாமல் தடுத்துவிட்டால்? என்னை கட்டிப் போட்டு வீட்டில் சிறைப்படுத்தி விட்டால்?”
“உங்க அம்மா உன்னைப் போல் முட்டாள் ஒன்றுமில்லை. நம் இருவருக்கும் சாஸ்திரபடி திருமணம் முடிந்துவிட்டது. நீ என்னுடைய மனைவி. என்னிடமிருந்து உன்னை யாராலும் பறிக்க முடியாது.”
‘நீ என்னுடைய மனைவி’ என்று அவன் சொன்னது என் காதில் தேன் வந்து பாய்ந்தது போல் இருந்தது.”சரி, கிளம்புவோம். வசவுகளை வாங்கிக் கட்டிக் கொள்ளணும் என்ற உவகை உனக்கு இருக்கும்போது நான் மறுப்பானேன்?” என்றேன்.
நானும் கிருஷ்ணனும் காரில் புறப்பட்டோம். வேறொரு காரில் மாமி, மாமா, மது ஏறிக் கொண்டார்கள். மாமி எங்களை இரவு சாப்பிட வரச்சொல்லி திரும்பத் திரும்ப சொன்னாள். இப்போ வேண்டாம் என்றும், இன்னொரு தடவை கட்டாயம் வருகிறோம் என்றும் கிருஷ்ணன் சொன்னான். மாமி கிளம்பும் முன் “மீனா! தற்சமயம் உன் கணவனுக்குப் பண வசதி இல்லை என்று உங்க அம்மா எரிந்து விழுந்தாலும், அவனுடைய திறமையை, சாமர்த்தியத்தைப் புரிந்து கொண்ட பிறகு சமாதானத்திற்கு வராமல் போக மாட்டாள். உன் பக்கத்தில் மன்மதன் போல் காட்சி தருகிறான். இவ்வளவு நல்ல பையனை நான் எங்கேயும் பார்த்ததில்லை. சீக்கிரமாக பேரனையோ பேத்தியையோ பெற்றுக் கொடு. உங்க அம்மா தானே வழிக்கு வருவாள்” என்றாள்.
“போங்க மாமி” என்றேன்.
“பார்த்துக் கொண்டே இரு. நான் சொன்னது உண்மையாகிவிட்டது என்று நீயாகவே வந்து ஒருநாள் என்னிடம் சொல்லத்தான் போகிறாய். ஊருக்குப் போகும் முன் கட்டாயம் நம் வீட்டுக்கு வரணும்.” மாமி என்னிடம் உறுதிமொழி வாங்கிக் கொண்டாள்.
கார் எங்கள் வீட்டை நெருங்கும் போதே பயத்தினால் என் இதயம் வேகமாக துடிக்கத் தொடங்கியது. கிருஷ்ணன் என் கையைத் தன் கையில் எடுத்துக் கொண்டான். என் உள்ளங்கை ஈரமாக பட்டதும் கையை உயர்த்தி “திடீரென்று இப்படி வியர்த்துக் கொட்டுவானேன்? அவ்வளவு பயமா?” போலி வியப்பைக் காட்டினான்.
நான் சிரிக்க முயன்றேன். ஆனால் சிரிப்பு வரவில்லை. உண்மையிலேயே அம்மாவிடம் எவ்வளவு பயம் இருக்கிறதோ முதல் முறையாக உணர்ந்துகொண்டேன்.
வாசல் கேட் முன்னால் நிறைய கார்கள் இருந்தன. வரவேற்பு அலங்கார வளைவில் மின்விளக்குகள் சிவப்பு, பச்சை நிறத்தில் மாறி மாறி “வெல்கம்” என்று ஒளி வீசிக்கொண்டிருந்தன. நிறைய பேர் வந்திருப்பது போல் அந்த இடம் முழுவதும் சந்தடியாக, கோலாகலமாக இருந்தது.
கிருஷ்ணன் காரை விடு இறங்கினான். நான் உடனே இறங்கவில்லை. கிருஷ்ணன் கையை நீட்டினான். நான் இறங்குவதற்கு பயப்படுவது போல் தயங்கிக்கொண்டே பார்த்தேன். கிருஷ்ணன் உள் பக்கமாக குனிந்த “அனாவசியமாக பயப்படுபவர்களைக் கண்டால் எனக்கு எரிச்சல்” என்றான். அந்த வார்த்தைகள் மந்திரம் போல் வேலை செய்தன. ரோஷம் பொத்துக் கொண்டு வந்தது. அவன் கையை விலக்கிவிட்டு சட்டென்று இறங்கினேன். கிருஷ்ணன் என் சுண்டுவிரலை பிடித்துக் கொண்டான். பேண்ட் வாசிப்பவர்கள், குளிர்பானங்களை வினியோகித்துக் கொண்டிருந்தவர்கள் எங்களை வேடிக்கையாக பார்த்தார்கள். முதல் முதலில் எங்களைப் பார்த்த நபர் ஸ்வீட்டீ! பிறகு டிரைவர், அதற்கு பிறகு திருநாகம் மாமி. மூவரும் ஒருவருக்கு பின்னால் ஒருவராக பேயோ பிசாசோ துரத்துவது போல் உள்ளே ஓடினார்கள்.
நாங்க ஷாமியானாவுக்கு நடுவில் நடந்து உள்ளே போனோம். பந்தலில் இருந்தவர்கள் திகைப்புடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள். சிலர் புரியாதது போல் கேள்விக்குறியுடன் பக்கத்தில் இருந்தவர்களைப் பார்த்தார்கள். இன்னும் சிலர் ஆர்வத்துடன் ‘பார்… பார்..’ என்பது போல் பக்கத்தில் இருப்பவர்களின் தோள்களை, கைகளைக் கிள்ளினார்கள்.
நான் வேண்டுமென்றே அவர்களை எல்லாம் தைரியமாக நேருக்கு நேர் பார்த்துக் கொண்டே நடந்தேன். நானும் கிருஷ்ணனும் படிகளில் ஏறி ஹாலுக்குள் வந்தோம்.
ஏற்கனவே சித்தி, திருநாகம் மாமி, ஸ்வீட்டீ பின் தொடர வேகமாக வந்து கொண்டிருந்த அம்மா எங்களைப் பார்த்ததும் பாம்பைக் கண்டவள் போல் அப்படியே நின்றுவிட்டாள். மாலையும் கழுத்துமாக திருமணக் கோலத்தில் கைகளை பிணைத்தபடி வந்து நின்று எங்களைப் பார்த்ததும் மூளை கலங்கிவிட்டவள் போல் பார்த்தாள். அம்மாவின் பார்வை கிருஷ்ணன் மீது நிலைத்து விட்டது. “நீயா! நீ… நீ…” அதற்கு மேல் பேச முடியாதவள் போல் வேக வேகமாக மூச்சை எடுத்துக் கொண்டாள்.
அதற்குள் செய்தி தெரிந்துவிட்டது போலும். உள்ளே இருந்து அப்பா, அவருக்கு பின்னால் சித்தப்பா, சாரதி இன்னும் யார் யாரோ வேகமாக அங்கே வந்தார்கள்.
கிருஷ்ணன் அப்பாவைப் பார்த்ததும் சொன்னான். “மாமா! நான் மீனாவைத் திருமணம் செய்து கொண்டு விட்டேன்.”
அப்பா தன் கண்களைதேய நம்ப முடியாதவர் போல் திகைப்புடன் பார்த்துக் கொண்டிருந்தார். அங்கே அத்தனை பேர் இருந்தாலும் வித்தியாசமான நிசப்தம் நிலவியது.
அந்த நிசப்தத்தைச் சிதறடித்தபடி, எந்த விதமான தயக்கமோ, தடுமாற்றமோ இல்லாமல் கிருஷ்ணனின் குரல் கம்பீரமாக ஒலித்தது. “மாமா! நாங்க இருவரும் திருமணம் செய்து கொண்டு விட்டோம். இன்று இரவே ஊருக்குப் போகிறோம். உங்களுடைய ஆசிகளுக்காக வந்திருக்கிறோம். அம்மாவுக்கோ, உங்களுக்கோ முன்னாடி தெரிந்தால் இந்தத் திருமணத்தை நடக்க விடமாட்டீங்க என்பதால் இப்படி செய்ய வேண்டியதாயிற்று.”
கிருஷ்ணனின் துணிச்சல் எனக்கு வியப்பை ஏற்படுத்தியது.
“பொய்!” திடீரென்று அம்மா உரத்தக் குரலில் கத்தினாள். சட்டென்று இரண்டடி முன்னால் வைத்து என் கையைப் பிடித்து தன் அருகில் இழுத்துக் கொண்டாள். என் கழுத்தில் இருந்த மாலையை இரண்டு கைகளாலேயும் அறுக்க முயன்றுகொண்டே “பச்சை பொய்! எனக்குத் தெரியாமல் நடந்த கல்யாணம் கல்யாணமே இல்லை. இது ஏமாற்று வேலை” என்று கூச்சலிட்டபடி பூமாலையை இழுக்கப் போனாள். ஆனால் ஜரிகை நூல் சுற்றியிருந்ததால் இதழ்கள் உதிர்ந்து கீழே விழுந்ததே தவிர மாலை அறுந்து போகவில்லை. ஜரிகை நூல் என் கழுத்தில் கீறியது. அம்மாவின் விரல்களிலிருந்து ரத்தம் ஒழுகியது.
“மாமி!” கிருஷ்ணன் ஒரு அடி முன்னால் வைத்தான்.
“ஒரு அடி முன்னால் வைத்தாய் என்றால் உன் உயிரையே எடுத்து விடுவேன் ஜாக்கிரதை!” பெண்புலி போல் கர்ஜித்தாள் அம்மா. “என் மகள் நின்ற இடத்தில் நிற்கக் கூட தகுதியில்லாத அற்பப் புழு நீ.”
“அம்மா!” தடுப்பது போல் பார்த்தேன்.
அடுத்த வினாடி என் கன்னம் அதிர்ந்தது.
“வெட்கம் கெட்டவளே! அம்மா என்று ஒருத்தி உயிருடன் இருப்பது நினைவில் இருந்தால் இந்தக் காரியத்தைச் செய்திருப்பாயா?” என் கன்னத்தில் மாறி மாறி அறைகள் விழுந்தன.

Series Navigation