முள்பாதை 34

This entry is part [part not set] of 26 in the series 20100620_Issue

தெலுங்கில் யத்தனபூடி சுலோசனாராணி தமிழாக்கம் கௌரி கிருபாநந்தன்


email id tkgowri@gmail.com

அம்மா, அப்பா மற்றும் சாரதி பதினொன்றரை மணி ஆன பிறகு கிளம்பிப் போனார்கள். கேட்டை சாத்திய சத்தம் கேட்டதும் விருட்டென்று எழுந்துகொண்டு செருப்பை அணிந்து கொண்டேன். மேஜைமீது இருந்த பேக்கை எடுத்துக் கொண்டு மின்னல் வேக்தில் கீழே வந்தேன். வாசற்கதவு பக்கம் போகப் போனவள் ஒரு நிமிடம் யோசித்துவிட்டு சமையலறை பக்கம் போனேன். உள்ளே இருந்த மாமியிடம் “மாமீ! நான் டாக்டர் வீடு வரையிலும் போய்விட்டு வருகிறேன். கதவைச் சாத்திக் கொள்ளுங்கள்” என்று வேகமாக சொல்லிவிட்டு அதே வேகத்தில் வெளியே வந்தேன்.
“டாக்டரே வீட்டுக்கு வரப் போவதாக அம்மா சொன்னாங்களே.” திருநாகம் மாமி சமையலறையிலிருந்து குரல் கொடுத்தாள்.
“ஊஹ¤ம். நானே போய் விடுகிறேன். எனக்கும் பொழுது போகவில்லை.” உரத்தக் குரலில் சொல்லிக் கொண்டே கேட்டைத் தாண்டி விட்டேன்.
கொஞ்ச தூரம் போன பிறகுதான் டாக்ஸி கிடைத்தது. டாக்ஸியை நிறுத்திவிட்டு ஏறிக்கொண்டு “காசினோ தியேட்டர். சீக்கிரமாக போகணும்” என்றேன். மணி பன்னிரெண்டை நெருங்கிக்கொண்டிருந்தது. கிருஷ்ணன் எனக்காகக் காத்திருப்பான் என்ற எதிர்பார்ப்பு அணையப் போகும் அகல் விளக்கு பொல் படபடத்துக் கொண்டிருந்தது.
நான் போய் சேர்ந்தபோது கிருஷ்ணன் தி§ய்டர் வராண்டாவில் இருந்த தூணில் சாய்ந்துகொண்டு இரு கைகளைக் கட்டிய நிலையில் எங்கேயோ பார்த்துக் கொண்டிருந்தான். அவன் முகத்தில் தென்பட்ட சலிப்பைப் பார்த்தால் ரொம்ப நேரமாக அவன் அங்கே நின்று கொண்டிருப்பதுபோல் தோன்றியது.
டாக்ஸி உள்ளே நுழைந்ததும் விருட்டென்று திரும்பிப் பார்த்தான். நான் ஒரு வினாடி கூட தாமதம் செய்யாமல் டாக்ஸியிலிருந்து இறங்கினேன். என்னைப் பார்த்ததும் அவன் கண்கள் பளிசிட்டன. முகத்திலிருந்த எரிச்சலும், சலிப்பும் காணாமல் போய்விட்டன.
வந்துவிட்டாயா என்பது போல் பார்த்துக் கொண்டே முறுவலுடன் என்னை நோக்கி வந்தான்.
பேக்கைத் திறந்து நூறுரூபாய் நோட்டை டாக்ஸி டிரைவரிடம் கொடுத்தேன்.
“சிலல்லறை இல்லை” என்றான் டிரைவர்.
கிருஷ்ணன் பரஸ்ஸை திறந்து மீட்டரை பார்த்துக் கொடுத்து அனுப்பிவிட்டான். நான் நூறுரூபாய் தாளை அவனிடம் நீட்டிய போது மென்மையாக என் கையை விலக்கிவிட்டு “இருக்கட்டும்” என்றான்.
“ரொம்ப லேட் ஆகிவிட்டது இல்லையா?” என்றேன் வாட்சைப் பார்த்துக் கொண்டே.
“ஆமாம். உனக்காக ஆயிரம் வருடங்களாகக் காத்திருப்பதுபோல் இருந்தது எனக்கு.” முறுவலுடன் சொன்னான்.
“நீ இந்நேரம் கிளம்பிவிட்டிருப்பாய் என்று பயந்தேன்.”
“இன்னும் ஐந்து நிமிடங்கள் நீ வருவதற்குத் தாமதமாகியிருந்தால் அந்தக் காரியம்தான் செய்திருப்பேன்.”
“நல்ல வேளை. எங்கே போகலாம் என்று சொல்லு.” சுற்றிலும் பார்த்துக் கொண்டே சொன்னேன். எங்கேயும் மக்கள் நடமாட்டம் இருக்கவில்லை.
“வேறு எங்கே? உளளேதான்.” சட்டைப் பையிலிருந்து டிக்கெட்டுகளை எடுத்துக் காண்பித்தான்.
“சினிமாவுக்கா? தொடங்கி ரொம்ப நேரமாகியிருக்குமே?”
“நாம் சினிமா பார்ப்பதற்காகப் போகவில்லையே?” அவன் குரலில் குறும்புத்தனம் கொப்பளித்தது.
முதல் வகுப்பு என்பதால் கூட்டம் இருக்கவில்லை. ஆங்காங்கே இளம் ஜோடிகள் அமர்ந்திருந்தார்கள். கொஞ்சம் ஒதுக்குப் புறமாக பார்த்து உட்கார்ந்து கொண்டோம். ஏதோ பழைய கறுப்பு வெள்ளைப் படம் போலும். கோடு கேடாகத் தெரிந்தது. அதில் வரும் நடிகை, நடிகர்கள் எல்லோரும் ஏதோ நோய்வாய்ப்பட்டு மீண்டவர்களைப்போல் திராணியற்று காட்சியளித்தார்கள்.
கிருஷ்ணன் அமர்ந்துகொண்டதும், “நின்று நின்று கால்வலி வந்து விட்டது. இப்போ சொல். ஏதோ அவசரமாக பேசவேண்டும் என்றாயே?” என்றான்.
“நீ இப்படி அவசரப்படுத்தினால் என் வாயிலிருந்து வார்த்¨யே வராது.” சீரியஸாக சொன்னேன்.
“அப்படி என்றால் சரி.” கிருஷ்ணன் சினிமாவை பார்க்கத் தொடங்கினான். ஐந்து நிமிடங்கள் கழிந்தன. நான் தலையைத் திருப்பிப் பார்த்தேன். அவன் படம் பார்ப்பதில் ஆழ்ந்து போயிருந்தான்.
“நீ என்னுடன் பேசுவதற்காக வந்தாயா அல்லது சினிமா பார்க்க வந்தாயா?” லேசான கோபத்துடன் கேட்டேன்.
“நீதான் பேசவில்லையே. அதான் டிக்கெட்டுக்குக் கொடுத்த காசையாவது வசூல் செய்வோம் என்று முயற்சி செய்கிறேன்.”
“டிக்கெட்டுக்குச் செலவழித்த பணத்தை நான் கொடுத்து விடுகிறேன். போதுமா?”
“அப்படி என்றால் உன்னையே பார்த்துக் கொண்டிருக்க வேண்டுமா?”
பக்கென்று சிரித்துவிட்டேன்.”ஷ்! அமைதி.” கிருஷ்ணன் சுற்றிலும் பார்த்தான்.
நான் கைக்குட்டையால் வாயை பொத்திக் கொண்டேன். “அதுசரி. நேற்று வீட்டுக்குப் போன் செய்தாயே? உனக்கு எவ்வளவு தைரியம்?”
“இதில் தைரியம் என்ன இருக்கு?” அவன் குரல் சீரியஸாக மாறியது.
“அம்மாவுக்குத் தெரிந்துவிட்டால்?”
“முதலில் உங்க அம்மாவைத்தான் கூப்பிடச் சொன்னேன். வெளியே போயிருப்பதாக சொன்ன பிறகுதான் உன்னை அழைத்தேன்.”
“ஒருக்கால் அம்மா வீட்டில் இருந்திருந்தால்?”
“உங்க அம்மா வருவதற்குள் போனை வைத்து விட்டிருப்பேன்.”
“நல்ல ஆள்தான்.”
“நீ நினைக்கும் அளவுக்குக் கெட்டவன் மட்டும் இல்லை.”
சட்டென்று திரும்பிப் பார்த்தேன். அவன் முகம் ரொம்ப சீரியஸாக இருந்தது.
இதுபோன்ற முட்டாள்தனமான உரையாடலைத் தொடங்கியதற்கு என்னை நானே உள்ளூர கடிந்து கொண்டேன். கையை நீட்டி அவன் கையைப் பற்றிக் கொள்ளப் போனவள் சட்டென்று நின்றுவிட்டு “நான் உன்னை தொட்டால் உன் சுந்தரிக்கு அநியாயம் செய்து விட்டாற்போல் ஆகிவிடுமா?” தயங்குவது போல் கேட்டேன்.
“சுந்தரி விஷயத்தை விட்டுத் தள்ளு. உன் சாரதியைப் பற்றி யோசித்துப் பாரு.”
நான் பதில் சொல்லாமல் அவன் கையை என் இரண்டு கைகளுக்கு நடுவில் பிடித்துக் கொண்டேன். என் உடல் முழுவதும் மின்சாரம் பாய்ந்ததுபோல் இருந்தது.
“ஒரு விஷயம் கேட்கிறேன். பதில் சொல்கிறாயா?”
“கேளேன்?”
“நம் இரு குடும்பங்களுக்கு நடுவில் இந்த பகைமை எதற்காக வந்தது? பரஸ்பரம் குசலம் கூட விசாரித்துக் கொள்ளாத அளவுக்கு என்னதான் நடந்தது?”
நாற்காலியின் பின்னால் சாய்ந்தாற்போல் உட்கார்ந்திருந்த கிருஷ்ணன் கையை விடுவித்துக் கொண்டு சரியாக உட்கார்ந்தான். “நீ உங்க அம்மாவிடமோ அப்பாவிடமோ கேட்கவில்லையா?”
“அப்பாவிடம் கேட்டேன். ஆனால் எனக்கு உன் வாயால் கேட்கணும் போலிருக்கு.”
“புதிதாக என்ன இருக்கும்? பணம் இருப்பவர்களுக்கும் இல்லாதவர்களுக்கும் இடையே இருக்கும் பகைமைதான்.”
“அப்படி என்றால்?”
“இருப்பவர்கள் இல்லாதவர்களை இழிவாகப் பார்ப்பார்கள். இல்லாதவர்கள் இருப்பவர்களை அகம்பாவம் பிடித்தவர்களாக, தங்களைவிட உயர்ந்தவர்களாக நினைத்து பொறாமைப் படுவார்கள்.”
“அதாவது இந்த உலகில் ஏழைகள் எல்லோரும் பணக்காரர்களைப் பார்த்தால் பொறாமைப் படுவார்கள் என்று சொல்கிறாயா?”
“நூற்றுக்குத் தொண்ணூறுபேர் அப்படித்தான்.”
“மீதி பத்து பேரில் நீங்க ஒருத்தராக இருக்கலாம் இல்லையா?”
“அந்த விஷயத்தை உங்க அம்மா ஒப்புக்கொள்ள மாட்டாள்.”
“அதாவது இதற்கெல்லாம் காரணம் அம்மாதான் என்கிறாயா?”
கிருஷ்ணன் பதில் சொல்லவில்லை.
“நீ ஏன் எங்கள் வீட்டுக்கு வருவதே இல்லை?”
“மாமாவிடம் கேள். சொல்லுவார்.”
நட்பு கலந்த குரலில் உரிமையுடன் சொன்னேன். “கிருஷ்ணா! ரொம்ப நாட்களுக்கு முன் நடந்தது ஏதோ நடந்து விட்டது. அதை அப்படியே மறந்துவிட்டு நம் இருவரின் குடும்பங்களும் நெருங்க வேண்டும் என்பது என் எண்ணம். ஒருத்தர் வீட்டுக்கு ஒருத்தர் வந்து போய்க் கொண்டிருந்தால்தானே உறவு நீடிக்கும்?”
“உன் எண்ணம் நன்றாகத்தான் இருக்கு. ஆனால் நடக்காத காரியம்.”
“ஏன் நடக்காது?”
“விரிசல் விழுந்துவிட்ட உறவுகளை மறுபடியும் ஒட்ட வைப்பது கஷ்டம் மீனா.”
“குறைந்த பட்சம் அதற்கான முயற்சி செய்ய வேண்டியது நம்முடைய கடமை இல்லையா?”
“நாம் என்றால்?”
“நீயும் நானும் என்று வைத்துக்கொள்.”
அவன் உடனே பதில் சொல்லவில்¨ல். யோசிப்பது போல் உட்கார்ந்திருந்தான்.
“பதில் சொல்லு கிருஷ்ணா!”
“நம் இருவரின் குடும்பங்களும் இணைவதால் ஏற்படும் லாபமோ, இணையாமல் இருப்பதால் ஏற்படக்கூடிய நஷ்டமோ என் கண்ணுக்கு எதுவும் தெரியவில்லை.”
“நீ ரொம்ப கடின இதயம் படைத்தவன். இந்தப் பகை இப்படி நீத்துக் கொண்டே போவதற்கு உன்னுடைய பிடிவாதமும் ஒரு காரணமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.”
“இவ்வளவு அநியாயமான குற்றச்சாட்டை நான் எங்கேயும் கேட்டதில்லை.”
“பின்னே நீ சொன்னதுதான் என்ன? நெருங்கிய உறவினர்கள் கலந்து பழகுவதில் லாபநஷ்ட கணக்கு எதுக்கு வரப் போகிறது? அப்பா உங்களிடம் எவ்வளவு அன்பு வைத்திருக்கிறார் தெரியுமா? அவருடைய மனம் எப்போதும் உங்களையே சுற்றிக் கொண்டிருக்கும். இத்தனை நாட்களும் உங்களைப் பற்றி எனக்கு அதிகம் தெரியாது. நான் மெலட்டூருக்கு வராமல் இருந்தால் என்ன ஆகியிருக்குமோ? ஆனால் அங்கே போய் விட்டு வந்த பிறகு என் மனதில் ரொம்ப உறுத்தலாக இருக்கிறது. நான் உங்க வீட்டிற்கு வந்து தங்கியிருந்த போது அன்புடன் ஆதரித்து வேண்டிய உபசாரங்களைச் செய்தீங்க. நீ இந்த ஊருக்கு வந்திருக்கிறாய். வாய் வார்த்தைக்காகவாவது உன்னை எங்க வீட்டுக்கு வரச்சொல்லி அழைக்கும் தைரியம் எனக்கு இல்லை. இப்படி ஏன் இருக்க வேண்டும்? அம்மா உங்களை தவறாகப் புரிந்து கொண்டிருப்பதால்தானே? எப்படியாவது அந்தத் தவறான கருத்தைப் போக்கிவிட்டு உங்களுடைய உண்மையான சுபாவத்தை அம்மா புரிந்து கொள்ளும் விதமாகச் செய்ய வேண்டும். இதுதான் என் லட்சியம்.”
“தாங்க்ஸ் மீனா!”
“வெறும் தாங்க்ஸ் சொன்னால் மட்டும் போறாது.”
“இன்னும் என்ன செய்ய வேண்டும்?”
“எனக்கு உதவி செய்ய வேண்டும். இரு குடும்பங்களையும் இணைக்கும் விஷயத்தில் எனக்கு சமமாக பொறுப்பை மேற்கொள்ள வேண்டும்.”
“இவ்வளவு சிரமம் உனக்கு ஏன்?”
நான் அவனுடைய தோளில் வெடுக்கென்று கிள்ளினேன்.
வீலென்று கத்தப் போனவன் எப்படியோ கட்டுப்படுத்திக் கொண்டான்.
“இனி ஒருநாளும் இப்படி ஏளனமாக பேசாதே.”
“நான் ஏளனமாகப் பேசினேனா?”
“எனக்கு அப்படித்தான் தோன்றியது.”
“உன்னுடன் சமாளிப்பது ரொம்ப கஷ்டம். பாவம் … சாரதி…”
நான் மறுபடியும் கிள்ளப் போனேன். இந்த முறை அவன் மின்னல் போல் என் கையைப் பற்றி தடுத்து விடான். அவன் பிடியில் சிக்கிக் கொண்டு விட்ட என் கையிலிருந்து மின்சாரம் என் இதயத்திற்குப் பாய்வது போல் இருந்தது.
“என்னை சினிமாவுக்கு அழைத்துப் போனாய் என்றும், கையை பிடித்துக் கொண்டாய் என்றும், உன் நடத்தை சரியில்லை என்றும் சுந்தரிக்குக் கடிதம் எழுதுவேன்.” மிரட்டுவது போல் சொன்னேன்.
“தாராளமாக எழுது.”
“இப்போ இல்லை. உன் மீது இன்னும் கொஞ்சம் கோபம் வரட்டும். அப்போ எழுதுகிறேன்.”
“நானும் சாரதிக்கு எழுதுகிறேன், உண்மை விளம்பி கடிதம்.”
“என்னவென்று?”
“உங்க வருங்கால மனைவிக்கு பக்கத்தில் இருப்பவர்களைக் கிள்ளும் பழக்கம் இருக்கு என்றும், ஜாக்கிரதையாக இருக்கச் சொல்லியும் கடிதம் எழுதுவேன்.”
நான் கோபமாகப் பார்த்துவிட்டு கையை விடுவித்துக் கொண்டேன். திடீரென்று விளக்குகள் எரியத் தொடங்கின. இடைவேளை வந்துவிட்டது. விளக்கு வெளிச்சத்தில் கன்றி சிவந்துவிட்ட கிருஷ்ணனின் முகத்தைப் பார்த்தேன்.
கிருஷ்ணன் கைக்குட்டையால் முகத்தை அழுத்தித் துடைத்துக் கொண்டான். “இதோ வருகிறேன்” என்று சொல்லிவிட்டு வெளியே சென்று விட்டான்.
அழகான கனவிலிருந்து சட்டென்று விழித்துக் கொண்டாற்போல் இருந்தது எனக்கு. கிருஷ்ணன் எதிரே இருந்தால் என் பேச்சு ஏன் இப்படி கண்ட்ரோல் இல்லாமல் போகிறது? அவனை கலாட்டா செய்து டீஸ் செய்ய வெண்டும் என்று என் மனம் தவிப்பானேன்? நான் இப்படி உரிமையுடன் பழகுவதை, கிண்டலடிப்பதை அவன் தவறாக எடுத்துக் கொள்ள மாட்டான் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. இவ்வளவு சுதந்திரமாக மனம் விட்டுப் பேசி சிரித்து யாருடனும் பழகிய நினைவு இல்லை. கிருஷ்ணன் விஷயத்தில் மட்டும் ஏன் இப்படி நிகழ்கிறது?
ஒன்று மட்டும் உண்மை. நான் எந்த விஷயத்தை வேண்டுமானாலும் தயக்கமில்லாமல் பேசக்கூடிய நபர் இந்த உலகில் கிருஷ்ணன் ஒருத்தன்தான். எனக்கு மிகவும் பிரியமான அத்தையின் குடும்பத்திற்கு என் மூலமாக எதாவது உபகாரம் நடக்க வேண்டும் என்ற தவிப்பை என்னால் அடக்கிக் கொள்ள முடியவில்லை. கிருஷ்ணன் இப்போ என்னுடன் பழகும் விதத்தைப் பார்த்தால் நான் நினைத்த காரியம் சுலபமாக நிறைவேறக்கூடும் என்ற நம்பிக்கை வந்தது. விளக்குகள் அணைந்துவிட்டன. மறுபடியும் சினிமா தொடங்கிவிட்டது. இடைவெளியின் போது அவன் வேண்டுமென்றே வெளியில் சென்று விட்டதுபோல் எனக்குத் தோன்றியது. உள்ளே வந்தவன் பக்கத்து இருக்கையில் அமர்ந்து கொண்டே “சொல்ல வேண்டிய விஷயங்கள் முடிந்து விட்டதா ? இன்னும் இருக்கா?” என்றான்.”
“இன்னும் இரண்டு விஷயங்களைச் சொல்லணும்.”
“சீக்கிரமாக சொல்லு.”
“முதலில் இந்தக் கேள்விக்கு பதில் சொல்லு. நான் இப்படி உரிமை எடுத்துக் கொண்டு பேசுவதை நீ தவறாக நினைக்க வில்லையே?”
கிருஷ்ணன் என் பக்கம் திரும்பினான். “நான் ஏன் தவறாக நினைக்கப்போகிறேன்? தவறாக நினைக்க இதில் என்ன இருக்கு?”
“அப்பாடா!” நிம்மதியாக மூச்சை விட்டுக்கொண்டேன்.
கிருஷ்ணன் என்னை பரிசீலிப்பது போல் பார்த்தான். “உண்மையிலேயே நீ எதாவது ஆபத்தில் சிக்கிக் கொண்டால் நான் வந்த உன்னைக் காப்பாற்ற வேண்டும் என்று துடிப்பாக இருக்கிறேன்” என்றான்.
“தாங்க்ஸ். அப்படிப்பட்ட ஆபத்து ஏதாவது வந்தால் முதலில் உன்னிடம் வருகிறேன்.”
“ச்செ.. ச்செ.. சும்மா ஒரு பேச்சுக்கு சொன்னேன். உனக்கு எந்த ஆபத்தும் வரக்கூடாது. நீ எப்போதும் இதேபோல் கலகலவென்று பேசிக் கொண்டும், சிரித்துக் கொண்டும் சந்தோஷமாக இருக்க வேண்டும்.”
“நான் கேட்க நினைத்ததில் இரண்டாவது விஷயம் சொல்லட்டுமா?”
“ஊம்… சொல்லு.”
“ராஜேஸ்வரியின் திருமணத்தை உடனே நிறுத்திவிடு.”
கிருஷ்ணன் நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டான். “ஆணையா இது?”
ஒரு வினாடி யோசித்துவிட்டு “இல்லை. வேண்டுகோள்தான்” என்றேன்.
“அப்படி என்றால் பரவாயில்லை. மறுத்துவிடலாம்” என்றான் முறுவலுடன்.
“இந்தத் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று ராஜி எதிர்த்தால் என்ன செய்வாய்?”
“என்ன செய்யணும் என்று அப்போ யோசிப்பேன். நடக்காத விஷயங்களை நடந்து விடுமோ என்று கவலைபட்டுக் கொண்டு உட்காருவது எனக்குப் பிடிக்காத விஷயம்.”
என்னால் பதில்சொல்ல முடியவில்லை.
“மூன்றாவது விஷயத்தையும் சொல்லிவிட்டால்…”
என் வாயிலிருந்து வார்த்தை வெளி வரவில்லை.
“சொல்லு மீனா!” நயமான குரலில் §க்டான்.
“நான் கேட்டதற்குக் கட்டாயம் சம்மதிப்பேன் என்று முதலில் வாக்குக் கொடுக்கணும்.”
“விஷயம் என்னவென்று தெரிந்து கொள்ளாமல் வாக்குக் கொடுக்கும் பழக்கம் எனக்கு இல்லையே?”
“என்மீது அவ்வளவுகூட நம்பிக்கை இல்லையா?”
என்மீது அவனுக்கு நம்பிக்கை இருக்கோ இல்லையோ அவன் கொஞ்சம்கூட வெளிப்படுத்தவில்லை. சீரியஸாக என்னைப் பார்த்தான். நானும் இரு மடங்கு சீரியஸாக பார்த்தேன். இருவரும் ஒரே சமயத்தில் சிரித்துவிட்டோம். அவன் சட்டென்று சுற்றிலும் பார்வையிட்டான். திரையில் ஹீரோ ஹீரோயின் டூயட் பாட்டு சத்தத்தில் இந்தச் சத்தம் யாருடைய காதிலும் விழுந்திருக்க நியாயம் இல்லை.
கிருஷ்ணன் முறுவலுடன் சொன்னான். “பிரயோஜனம் இல்லை மீனா! உன்னிடம் என்னால் சீரியஸாக இருக்கமுடியாது. தயவு செய்து விஷயத்தைச் சொல்லு. எனக்கு சரி என்று பட்டால் உன் விருப்பத்தை அப்படியே ஏற்றுக் கொள்கிறேன்.”
எனக்கு நம்பிக்கை வந்தது. “நான் சொல்ல வந்தது உன்னுடைய நிலத்தைப் பற்றி” என்றேன்.
“நிலத்தைப் பற்றியா?”
“ஆமாம். அந்த நிலத்தை நீயே வாங்கிக் கொள். பணம் நான் தருகிறேன். உன்னால் முடிந்த போது திருப்பித் தந்து விடலாம். அந்தத் தோட்டம் என்றால் உனக்கு எவ்வளவு உயிர் என்று எனக்குத் தெரியும். அதை சுந்தரியின் பெயரில் ரிஜிஸ்டர் செய்வதில் எனக்குக் கொஞ்சம்கூட விருப்பமில்லை.”
கிருஷ்ணன் திகைத்துப் போனவனாக எதிர்பார்க்காத விஷயத்தைக் கேட்டுவிட்டது போல் வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தான்.
அவன் கையை என் கைகளில் எடுத்துக் கொண்டு மென்மையான குரலில் சொன்னேன். “கிருஷ்ணா! உன் சுய அபிமானம் எக்குத் தெரியும். இந்த விஷயத்தல் நீ கொஞ்சம்கூட தயங்க வேண்டியதில்லை. நீ கடனுக்காக முயற்சி செய்கிறாய் என்றும், இதுவரையிலும் கிடைத்ததாகத் தெரியவில்லை என்றும் அப்பா சொன்னார். அந்தக் கடன் ஏதோ என்னிடம் வாங்கிக் கொள். உன்னால் முடிந்தபோது கொஞ்சம் கொஞ்சமாகத் திருப்பிவிடலாம்.”
என் பேச்சை முழுவதுமாக கேட்ட பிறகு அவன் தன் கையை விடுவித்துக் கொள்ளப் போனான். நான் விடவில்லை. முகத்தைத் திருப்பிக் கொண்டு சினிமா பார்க்கத் தொடங்கிவிட்டான்.
“நான் சொன்னதைக் கேட்டாய் இல்லையா?”
“கேட்டேன்.”
“இன்று ஒருநாள் தங்கிவிட்டு நன்றாக யோசித்து பிறகு நாளைக்கு பதில் சொல்கிறாயா?”
“இல்லை. இன்று இரவே நான் கிளம்பி விடவேண்டும்.”
“பணம் வாங்கிக் கொள்வதற்கு சம்மதித்து விட்டாற்போல் தானே. எப்போ எங்கே கொண்டு வந்து தரணுமோ சொல்லு.”
“மீனா! உன் அறிவுரைக்கும், நல்ல மனதிற்கும் நன்றி. உண்மையைச் சொல்லு. இப்படி கேட்கச் சொல்லி மாமா உன்னை அனுப்பி வைத்தாரா?”
“ஊஹ¤ம். அப்பாவுக்கு இந்த விஷயமே தெரியாது. நானாகத்தான் வந்தேன்.”
அவன் என் பேச்சை நம்பியதுபோல் தெரியவில்லை. “இனி கிளம்புவோமா?” என்றான்.
“என் கேள்விக்கு இன்னும் பதில் சொல்லவே இல்லையே?”
“உண்மையிலேயே பதில் வேண்டுமா?”
“பதில் தெரிந்து கொள்ளணும் என்றுதானே இவ்வளவு தூரம் பேசுகிறேன்.”
“அப்படி என்றால் கேட்டுக்கொள். எனக்கு எங்கேயும் கடன் கிடைக்காத பட்சத்தில் அந்த நிலத்தை வேண்டுமானாலும் இழக்க விரும்புவேனே தவிர உன்னிடமிருந்து மட்டும் வாங்கிக் கொள்ள மாட்டேன்.” அவன் குரல் திடமாக, கடிமாக ஒலித்தது. அவன் சொன்ன தோரணையைப் பார்த்தால் அந்த அபிப்பிராயத்திலிருந்த அவனை மாற்றுவது கஷ்டம் என்று தோன்றியது.
“நான் சொன்னதைக் கேட்க மாட்டாயா?” நிஷ்டூரமாக சொன்னேன்.
“வேறு ஏதாவது சொல்லு. கேட்டுக் கொள்கிறேன்.”
அதுவரையிலும் கலகலவென்று இருந்த சூழ்நிலை திடீரென்று கம்பீரமாக மாறிவிட்டது. சீரியஸாக படத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுபோல் உட்கார்ந்திருந்தாலும் தோற்று விட்டதுபோல் உணர்ந்தேன்.
“என் பேச்சுக்கு மதிப்புக் கொடுப்பாய் என்ற நம்பிக்கைதான் என்னை இவ்வளவு தூரத்திற்கு அழைத்து வந்தது.” என் குரலில் வருத்தம் கலந்திருந்தது.
“உன் பேச்சுக்கு மதிப்புக் கொடுக்காதவனாக இருந்தால் என் பயணத்தைத் தள்ளிப் போட்டிருக்கவும் மாட்டேன். இந்த சினிமா ஹாலில் இத்தனை நேரம் உனக்காகக் காத்திருக்கவும் மாட்டேன்.”
“என்னிடமிருந்து பணம் ஏன் வாங்கிக் கொள்ளக் கூடாது? காரணம்தான் என்ன? நேராக சொல்லு.” ரோஷத்துடன் கேட்டேன்.
“இப்போ வேண்டாம். இன்னொரு நாள் சொல்கிறேன். இந்த விஷயத்தைப் பற்றி மறந்து விடுவோம்.”
‘அவனைப் போன்ற பிடிவாதமான ஆசாமியை நான் எங்கேயும் பார்த்ததில்லை.’ அப்பா சொன்னது நினைவுக்கு வந்தது.
சாரதிக்கும் எனக்கும் நிச்சயம் ஆகாமல் இருந்திருந்தால், அம்மா என்மீது இவ்வளவு ஆசைகளை வளர்த்துக் கொள்ளமல் இருந்தால், இப்பொழுதே கிருஷ்ணனின் கையைப் பிடித்து இழுத்துச் சென்று ரிஜிஸ்டர் மேரேஜ் செய்து கொண்டிருப்பேன். கல்யாணம் ஆனபிறகு அவனுடைய இஷ்டத்தை யார் கேட்கப் போகிறார்கள்? எல்லாமே என்னுடைய ராஜ்ஜியம்தான். அத்தையின் குடும்ப நலனுக்காக நானும் அப்பாவும் எவ்வளவு தூரம்யோசிக்கிறோமோ கல்மனம் படைத்த இவனுக்கு எப்படி புரியப் போகிறது?
கடைசியில் சொன்னேன். “நான் சொன்ன பேச்சைக் கேட்க மாட்டாய் இல்லையா? என் விருப்பம்போல் செய்யப் போகிறேன்.”
“என்ன செய்யப் போகிறாய்?” ஆர்வத்துடன் கேட்டான்.
“உன்னிடம் எதற்காக சொல்லணும்?”
“எனக்குத் தெரியும்.”
“என்ன தெரியும் உனக்கு?” கோபமாக கேட்டேன்.
“இந்த ஜென்மத்தில் என் முகத்தைப் பார்க்க மாட்டாய். எங்களைப் பற்றி விசாரிக்கவும் மாட்டாய். அப்படித்தானே.”
“பார்த்துக்கொண்டே இரு. என்ன நடக்கப் போகிறதோ?”
“கோபம் வந்தபோது உன் முகத்தை எப்பொழுதாவது கண்ணாடியில் பார்த்துக் கொண்டாயா? ரொம்ப அழகாக இருப்பாய்.”
“தாங்க்ஸ். உன்னுடைய காம்ப்ளிமெண்ட்ஸ் எனக்குத் தேவையில்லை.”
“அப்படியே சத்யபாமாவின் அவதாரம்.”
“ஆமாம். என் கோபத்தைத் தீர்த்து வைக்கப் போகும் ஸ்ரீகிருஷ்ணன் நீதானோ?”
“பேச்சால் ஏன் இப்படித் தூண்டி விடுகிறாய்?”
ஏதோ சொல்லப் போனேன். திடீரென்று விளக்குகள் எரிந்தன. திடுக்கிட்டவர்கள் போல் எழுந்து நின்று கொண்டோம். படம் எப்போ முடிந்ததோ இருவரும் உணரவில்லை. எல்லோரும் போனபிறகு வெளியே வந்தோம். வெளியே டாக்ஸி காலியாக தென்பட்டது. கிருஷ்ணன் டாக்ஸியை அழைத்து, அருகில் வந்ததும் கதவைத் திறந்து பிடித்துக் கொண்டான். நான் ஏறி உட்கார்ந்துகொண்டேன்.
சரியான முடிவுக்கு வராமலேயே எங்களுடைய உரையாடல் பாதியிலேயே நின்றுவிட்டது. எத்தனையோ நம்பிக்கையுடன் வந்த எனக்கு ஏமாற்றமாக இருந்தது. அவன் என் விருப்பத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. என்னால் அவனை சம்மதிக்க வைக்க முடியவில்லை.
கிருஷ்ணன் கதவைச் சாத்திவிட்டு அதன்மீது கையை வைத்தபடி குனிந்து உள்ளே பார்த்துக் கொண்டே சொன்னான். “தாங்க்ஸ் மீனா! நான் இந்த ஊருக்கு எத்தனையோ தடவை வந்திருக்கிறேன். ஆனால் இந்த முறை வந்த போது ஏற்பட்ட உணர்வு இதற்கு முன் எப்போதும் ஏற்பட்டதில்லை. இந்த அனுபவத்தை என்னால் மறக்கவே முடியாது. ராஜியிடம் ஏதாவது சொல்லணுமா?”
“தேவையில்லை. என்னால் கடிதம் எழுத முடியும்.”
அவன் இன்னும் கொஞ்சம் குனிந்து என் கண்களில் எதையோ தேடுவது போல் பார்த்தான். பிறகு கனிவான குரலில் “மீனா! நீ சொன்ன பேச்சை நான் கேட்கவில்லை என்றோ, என்னை உங்க வீட்டுக்கு அழைக்க முடியாத நிலையில் இருக்கிறோமே என்றோ வருத்தப்பட்டுக் கொள்ளாதே. இது போன்ற முட்டாள்தனமான எண்ணங்களை மனதிலிருந்து நீக்கிவிடு. நமக்கு இடையே எந்த விதமான ஒளிவு மறைவுகளும் இருக்கக் கூடாது. நான் இன்று இரவே ஊருக்குப் போகிறேன். அடுத்தத் தடவை எப்பொழுதாவது வந்தால் உனக்கு போன் செய்யட்டுமா?”
“உன் விருப்பம்.” வேறு திசையில் பார்த்துக் கொண்டே சொன்னேன்.
“என்மீது கோபம் வந்து விட்டதா மீனா?”
ஆமாம் என்றோ இல்லை என்றோ சொல்லாமல் மௌனமாக இருந்தேன்.
“மாமாவை நான் கேட்டதாக சொல்லு.”
கிருஷ்ணன் டிரைவரிடம் நான் போக வேண்டிய முகவரியைச் சொன்னான். டாக்ஸி முனையில் திரும்பும்போது பின்னால் திரும்பிப் பார்த்தேன். அவன் அதே இடத்தில் நின்று கொண்டிருந்தான். பிரியமான நபரை விடை கொடுத்து அனுப்பும்போது ஏற்படும் மெல்லிய சோகம் அவன் முகத்தில் ஸ்பஷ்டமாக தென்பட்டது. நான் திரும்பிப் பார்த்ததும் அவன் கையை உயர்த்தி அசைத்தான். நான் கையை ஆட்டுவதற்குள் டாக்ஸி தெருமுனையில் திரும்பிவிட்டது. அவன் என் கண்ணில் படவில்லை.
டாக்ஸியில் வீட்டுக்கு வந்து சேர்ந்தேன். டாக்ஸிக்காரனுக்கு பணம் கொடுத்துவிட்டு உள்ளே வந்தேன். ஹால் சோபாவில் பேப்பரைப் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்த டாக்டரைப் பார்த்ததும் நின்று விட்டேன். என் காலடிச் சத்தம் கேட்டதும் பேப்பரை நகர்த்திவிட்டு பார்த்த டாக்டர் “எங்கே போயிருந்தாய் மீனா? நான் உனக்காக வருவது இதோடு மூன்றாவது தடவை. இரண்டு முறை வந்துவிட்டு திரும்பிப் போனேன்” என்றார்.
அவர் சொல்லிக் கொண்டிருந்தபோதே திருநாகம் மாமி வந்தாள். “எங்கேம்மா போயிருந்தீங்க? க்ளினிகிற்கு வரவில்லை என்று டாக்டர் வந்து சொன்னது முதல் பயந்து நடுங்கிக் கொண்டிருக்கிறோம். பெண்களை கடத்திப் போவதாக பேப்பரில் தினமும் செய்திகள் வேறு. எனக்கு நெஞ்சுவலியே வந்து விட்டது” என்றாள்.
பதில் சொல்ல முடியாதவள்போல் சோர்வுடன் டாக்டருக்கு எதிரே இருந்த சோபாவில் சரிந்தேன்.

முதல் பாகம் முற்றும்

Series Navigation