முள்பாதை 2

This entry is part [part not set] of 31 in the series 20091023_Issue

தெலுங்கில் யத்தனபூடி சுலோசனாராணி தமிழாக்கம் கௌரி கிருபாநந்தன்


எங்கும் சந்தடி அடங்கிவிட்டது. காலை முதல் ஓய்வு இல்லாமல் பரபரவென்று சுற்றியதாலோ என்னவோ, அம்மா களைத்துப் போனவளாக சீக்கிரமாகவே உறங்கிவிட்டாள். திருநாகம் வீட்டை ஒழுங்குப்படுத்திக் கொண்டிருந்தாள். நான் மெதுவாக மாடிக்குப் போய் சத்தப்படுத்தாமல் அப்பாவின் அறையின் கதவைத் தள்ளினேன். அறையில் மேஜை விளக்கு எரிந்து கொண்டிருந்தது. கதவைத் திறந்து நான் உள்ளே எட்டிப் பார்த்ததைக் கவனித்த அப்பா “என்ன மீனா?” என்றார்.
“உள்ளே வரலாமா?”
“வாம்மா.”
உள்ளே போனேன். அப்பா கட்டில் மீது படுத்திருந்தார். தூக்கம் வருவதற்காக போலும் கையில் புத்தகம் ஒன்று இருந்தது. கட்டில் அருகில் இருந்த மேஜை மீது சாய்ந்தபடி நின்றுகொண்டேன். என்ன விஷயம் என்று அவர் உடனே கேட்கவில்லை. நானும் எதற்காக வந்தேன் என்ற சொல்லவும் இல்லை. கொஞ்ச நேரம் கழித்துத் தாழ்ந்த குரலில் அழைத்தேன்.
“அப்பா!”
“என்னம்மா?”
“இன்னிக்கு உங்களுக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்ததா?”
அப்பா உடனே பதில் சொல்லவில்லை. முதலில் மூக்குக்கண்ணாடியைக் கழற்றிவிட்டு தலையை உயர்த்தி என்னைப் பார்த்தார். கண்ணிமைக்காமல் என் முகத்தைப் பார்த்து என் மனதில் இருப்பதைக் கண்டுபிடிக்க முயற்சி செய்தார்.
“அம்மா இன்னிக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தாளே? காரணம் என்னவாக இருக்கும் டாடீ?” மறுபடியும் கேட்டேன்.
“மாப்பிள்ளை வரப்போகிறான் என்பதற்காக இருக்கும்.” அப்பா சிரிக்க முயன்றார். ஆனால் சிரிப்பு வரவில்லை.
“பின்னே உங்களுக்கு இல்லையா? நீங்க சாதாரணமாக இருக்கீங்களே?”
“எனக்கும் சந்தோஷம்தான் மீனா. சிலபேர் மனதில் இருப்பதை அப்படியே வெளிப்படுத்துவார்கள். சிலபேரால் அப்படி வெளிப்படுத்த முடியாது. அதுதான் வித்தியாசம்.”
நான் பெருமூச்சுவிட்டேன். “அப்பா! சாரதியைப் பற்றி உங்களுடைய அபிப்பிராயம் என்ன?”
“ரொம்ப புத்திசாலி. திறமையானவன்.”
நல்லவன் என்ற வார்த்தை அப்பாவின் வாயிலிருந்து வெளிவரவில்லை. அந்த விஷயத்தை நான் உடனே உணர்ந்துகொண்டேன்.
“புத்திசாலித்தனமும், திறமையும் இருப்பவனைக் கணவனாக அடைந்த பெண்ணின் வாழ்க்கை எப்படி இருக்கும்?”
அப்பா என்னை ஒரு முறை பார்த்துவிட்டுப் பிறகு நிதானமான குரலில் சொன்னார். “அந்த இரண்டிற்கும் குணமும், அன்பும் துணையாக இருந்தால் அந்தப் பெண்ணின் வாழ்க்கை சுவர்க்கமாக மாறும்.”
“அப்படி இல்லாமல் போனால்?”
“சொல்ல முடியாது. அவனுடன் வாழ்க்கையைப் பகிர்ந்துகொண்ட பெண்ணின் சுபாவத்தைப் பொறுத்து அவர்களுடைய தாம்பத்தியம் இருக்கும். மனைவியும் புத்திசாலியாக, திறமை மிகுந்தவளாக இருந்தால், இருவரும் ஒருவருக்கொருவர் எதிரிகளாக இருப்பார்கள். அவர்களுடைய வாழ்க்கை போர்க்களமாகிவிடும். அப்படி இல்லாமல் மனைவி கொஞ்சம் அடக்கவொடுக்கமாகவும், பண்பு நிறைந்தவளாகவும் இருந்தால் கணவன் மனைவிக்கிடையே யஜமான் சேவகன் போன்ற பந்தம் நிலவியிருக்கும். இதை எல்லாம் இப்போ எதற்காகக் கேட்கிறாய்?”
“சாரதியுடன் எனக்குத் திருமணம் ஆனால் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று யோசித்துப் பார்க்கிறேன்.”
அப்பா என்னை கனிவுடன் பார்த்தார். ஒரு நிமிடம் எங்கள் இருவரின் பார்வையும் சந்தித்துக் கொண்டன. என் கண்களில் நன்றி உணர்வு வெளிப்பட்டது.
அப்பா மெதுவாக என் கையைப் பற்றிக் கொண்டார். “இதோ பார் மீனா! இது வரையில் நான் உன்னிடம் கேட்டதே இல்லை. இப்படிக் கேட்க வேண்டிய அவசியம் வரும் என்று என்றுமே நினைத்ததும் இல்லை. இது போன்ற விஷயங்களில் உன்னுடைய அபிப்பிராயத்தைத் தெரிந்துக்கொள்ளும் பொறுமையோ, திறமையோ உங்க அம்மாவுக்கு இல்லை. அது எனக்குத் தெரியும். அது போகட்டும். உன் வருங்காலக் கணவன் எப்படி இருக்க வேண்டும் என்று என்றாவது யோசித்துப் பார்த்திருக்கிறாயா? என்னிடம் சொல்லு மீனா?”
எதிர்பாராமல் திடீரென்று கேட்கப்பட்ட இந்தக் கேள்விக்கு என்னால் உடனே பதில் சொல்ல முடியவில்லை.
“சொல்லும்மா. தயங்காதே.”
“இதுவரையிலும் நான் அதைப் பற்றி யொசித்தது கூட இல்லை டாடீ.”
எங்க இருவருக்கும் நடுவில் நிசப்தம் நிலவியது.
“சாரதியைப் பற்றி உன்னுடைய அபிப்பிராயம் என்னம்மா?” மென்மையான குரலில் கேட்டார்.
“நீங்கள் சொன்னது போல் அவன் ரொம்ப புத்திசாலி. எந்த விஷயமாக இருந்தாலும் அவன் அனாயாசமாகப் பேசுவதைக் கேட்கும்போது அவற்றைப் பற்றி எதுவும் தெரியாமல் இருப்பது என்னைத் தாழ்வாக உணரச் செய்தது. அது மட்டுமே இல்லை. அவன் பேச்சில், நடத்தையில் தென்படும் அந்தப் பண்பு, பணிவு இதெல்லாம் சுபாவத்தில் இருப்பவை இல்லை. வேண்டுமென்றே வரவழைத்துக் கொள்ளப்பட்டவை என்று உணர முடிந்தது. ஒரே வார்த்தையில் சொல்லணும் என்றால் அவை எல்லாம் அம்மாவின் குணநலன்கள். அம்மாவைப் போன்ற குணம் படைத்தவனை செத்தாலும் சரி, என்னால் கணவனாக ஏற்றுக் கொள்ள முடியாது. என் வாழ்க்கைக்கு ஒரு சர்வாதிகாரி போதும்.”
“மீனா!”
“நீங்க அம்மாவிடம் சொல்லி விடுங்கள். முதல் பார்வையிலேயே எனக்கு சாரதியைப் பிடிக்கவில்லை. அவன் அருகாமையில் நான் ஒரு கம்பளிப்பூச்சியாக சுருண்டு போய் விடுகிறேன். அவன் முன்னிலையில் என்னால் வாய்விட்டு சிரிக்க முடியாது. மனதுக்குப் பிடித்தாற்போல் பேச முடியாது. நான் தாழ்வானவள் என்ற எண்ணம் என்னை விட்டுப் போகாது” என்று சொல்லி விட்டு வேகமாக திரும்பி வாசல் வரையிலும் வந்துவிட்டேன்.
“மீனா!” அப்பா பின்னாலிருந்து அழைத்தார்.
வாசற்படி அருகில் நின்றவள் திரும்பி அப்பாவின் பக்கம் பார்த்துக் கொண்டே சொன்னேன்.
“என்னைக் கல்யாணம் செய்துகொண்டு இந்த வீட்டில் இடம் பெறவேண்டும் என்று நினைப்பவன் எனக்குத் தேவையில்லை. என்னுடைய ஸ்டேட்டஸ் மற்றும் சொத்துக்காக தவிப்பவன் எனக்கு வேண்டவே வேண்டாம். அவனுக்குப் பணம் இல்லாவிட்டாலும் பரவாயில்லை. என்னை அன்பாக பார்த்துக் கொண்டால் அதுவே போதும். உங்களுடைய வயோதிகத்தில், என் வீட்டில் கணவன் குழந்தைகளுக்கு நடுவில் அமைதியான சூழ்நிலையை உருவாக்கித் தர வேண்டும் என்று கனவு கண்டு கொண்டிருக்கும் எனக்குத் துணையாக நின்று என் எண்ணங்களை செயல்படுத்த உதவி செய்பவன் எனக்கு வேண்டும். அழகை ஆராதிப்பவன், என்னுடைய அம்மாவின் குணநலனைப் புகழ்பாடுபவன் எனக்குத் தேவையில்லை. என்னைப் பெற்றவளை என்னுடைய தாயாக மட்டுமே மதித்து, கௌரவமாக நடத்துபவன் எனக்கு வேண்டும். அம்மாவிடம் இதைச் சொல்லி விடுங்கள்.”
“மீனா! மீனா!” அப்பா எழுந்து உட்கார்ந்து கொண்டு பதற்றத்துடன் அழைத்தார்.
நான் வேகமாக என்னையை அறைக்கு வந்துவிட்டேன். இதயம் லேசாகி விட்டது போல் இருந்தது எனக்கு. அப்பா என்னைக் கட்டாயம் புரிந்துகொளவார். நாங்கள் இருவரும் ஒன்று சேர்ந்தால் அம்மாவால் எதுவும் செய்யமுடியாது என்ற எண்ணம் என்னுள் குருட்டு நம்பிக்கையாக வலுப்பெற்று தைரியத்தைக் கொடுத்தது.
சாரதி ஊருக்குப் போனதிலிருந்து அவனிடமிருந்து அடிக்கடி கடிதங்கள் வந்து கொண்டிருந்தன. எல்லாவற்றுக்கும் அம்மாதான் பதில் எழுதிக் கொண்டிருந்தாள். ஓரிரு முறை தபால் கவரை எடுத்து வந்து என்னை எழுதச் சொன்னாள். “எனக்கு எழுத வராது. நீங்களே எழுதிவிடுங்கள்” என்றேன்.
ஒரு தடவை நான் கடைத் தெருவுக்குப் போகும் போது அம்மா சாரதிக்கு தான் எழுதிய கடிதத்தை போஸ்ட் செய்யச் சொல்லி என்னிடம் தந்தாள். தெருவில் இறங்கியதுமே கவரைப் பிரித்துப் பார்த்தேன். பெரிய கடிதம்தான். இங்கே லேடீஸ் கிளப் சார்பில் தான் செய்யும் வேலைகளைப் பற்றி விவரமாக எழுதியிருந்தாள். அம்மாவுக்கு இவ்வளவு நல்ல மொழிவளம் இருப்பது எனக்கு அதுவரையிலும் தெரியாது. கடைசியில் என்னைப் பற்றியும் சிலவரிகள் இருந்தன. நான் சாரதிக்குக் கடிதம் எழுதாமல் இருந்ததற்கு என் சார்பில் மன்னிப்பு கேட்டுக் கொண்டு எழுதியிருந்தாள். மேலும் “சாரதீ! மீனா என்னுடைய ஒரே மகள். அவள் என் வாழ்க்கையின் ஒளிவிளக்கு என்றால் அது மிகையில்லை. சிறுவயது முதல் அவளுக்கு செல்லம் கொடுத்து வளர்த்து வந்தோம். உடல்ரீதியாக வளர்ந்துவிட்டாலும் மனதளவில் அவள் இன்னும் சின்னக் குழந்தைதான். அவள் எவ்வளவு முட்டாளாக இருக்கிறாள் என்றால் உனக்கு எப்படி கடிதம் எழுதுவது என்றுகூடத் தெரியவில்லை. அவளை உன் கையில் ஒப்படைத்துவிட்டால் எனக்கு திருப்தியும், சந்தோஷமும் கிடைக்கும். அவள் எதிர்காலத்தைப் பற்றிக் கவலைப்படாமல் நிம்மதியாக இருக்க முடியும். உன்னைப் போன்ற மாப்பிள்ளை கிடைப்பது என்னுடைய அதிர்ஷ்டம். அவளுக்கு வரப்போகும் கணவனைப் பற்றி நான் எவ்வளவு கவலைப்பட்டேனோ அந்தக் கடவுளுக்குத்தான் தெரியும்.
கடவுள் உண்மையிலேயே கருணையுள்ளவர். எங்கள் வீட்டு மாப்பிள்ளையாக உன்னை அனுப்பி அருள்பாலித்திருக்கிறார்.”
என் கண்ணங்களில் சூடாக ரத்தம் பரவியது. அம்மா எனக்குச் செல்லம் கொடுத்தாளா? நான் வெறும் முட்டாளா? சாரதிக்குக் கடிதம் எழுதவேண்டும் என்ற விஷயம்கூட எனக்குத் தெரியாததால் எழுதவில்லையாமா? உண்மையிலேயே அந்தக் கடிதத்தைப் படித்ததும் உடல் பற்றி எரிவது போல் எரிச்சல் ஏற்பட்டது. அந்தக் கடிதத்தைக் கிழித்து தெருக்கோடியில் இருந்த குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு என் ஜோலியைப் பார்க்கப் போய்விட்டேன். ஆவேசத்தில் அப்படிச் செய்து விட்டேனே தவிர என் இதயம் பயத்தினால் வேகமாக துடித்துக் கொண்டிருந்தது.
சாரதிக்குக் கடிதம் போய் சேர்ந்ததோ இல்லையா என்ற சந்தேகம் அம்மாவுக்கு வந்ததோ இல்லையோ தெரியாது. நான் செய்த காரியம் மட்டும் வெளியில் வரவில்லை.
சாரதியை மாப்பிள்ளையாக்கிக் கொள்ள வேண்டும் என்ற அம்மாவின் தவிப்பை கவனித்த பிறகு வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் அவனைக் கேலி செய்யத் தொடங்கினேன். அவனுக்கு மாறுக் கண் என்றேன். அவனால் ஒரு இடத்தில் நிலையாக நிற்க முடியாது என்றும், கால்களை மாற்றி மாற்றி உடல் கனத்தைத் தாங்குவான் என்றேன். தலைமுடி ரொம்ப குறைவாக இருக்கு, இரண்டே வருடங்களில் சொட்டை விழுவது நிச்சயம் என்றேன். வழுக்கைத் தலையர்களைக் கண்டால் எனக்கு வெறுப்பு இல்லை. ஆனால் வழுக்கைத் தலையுடன் சாரதி ரொம்ப விகாரமாகத் தென்படுவான் என்று குறை கூறி வந்தேன்.
நான் சிரித்துப் பேசிக்கொண்டே கொஞ்சம் கொஞ்சமாக வெளிப்படுத்தி வந்த விருப்பமின்மையை அம்மா விளையாட்டாக எடுத்துக் கொண்டிருக்கிறாள் என்று ரொம்ப நாள் வரையில் நான் உணரவில்லை. தெரிந்து கொண்ட போது எனக்கு மயக்கம் வரும்போல் இருந்தது. உடல் முழுவதும் வியர்த்துக் கொட்டியது. அம்மாவிடம் எப்படி இந்த விஷயத்தைச் சொல்லுவது என்று வழிகளைத் தேட ஆரம்பித்தேன்.
கடைசியில் ஒரு நாள் துணிச்சலை வரவழைத்துக் கொண்டு இரவில் அம்மா உறங்குவதற்கு முன்னால் அறைக்குள் நுழைந்தேன். அம்மா கட்டில் மீது அமர்ந்திருந்தாள். கை நிறைய ரசீதுகளை வைத்துக் கொண்டு திருநாகம் நின்று கொண்டிருந்தாள். அன்று சனிக்கிழமை என்ற விஷயம் திடீரென்று எனக்கு நினைவு வந்தது. சனிக்கிழமை இரவில் அம்மா அந்த வாரம் முழுவதும் வீட்டில் நடந்த செலவுகளுக்குக் கணக்கு வழக்குகளைப் பார்ப்பாள். அந்த வேலை முடிவதற்குப் பதினோரு மணியாகிவிடும். இனி பிரயோஜனமில்லை என்று நினைத்தவளாய் அறைக்குத் திரும்பிவிட்டேன்.
இரவு முழுவதும் விழித்துக் கொண்டு ஒரு முடிவுக்கு வந்தேன். ஒரு பேப்பரை எடுத்து அதில் “மம்மீ! எனக்கு சாரதியைப் பிடிக்கவில்லை. வெறுப்பாகவும் இருக்கிறது” என்று எழுதினேன்.
காலையில் திருநாகம் அம்மாவுக்குக் காபி கொண்டு போகும் போது கடிதத்தைக் கொடுக்கச் சொல்லி ட்ரேயில் வைத்தேன். திருநாகம் அம்மாவின் அறைக்குள் போனாள்.
சமையலறையில் நின்றிருந்த எனக்கு இதயம் வேகமாக துடிக்கத் தொடங்கியது. அந்தச் சின்னக் கடிதம் அம்மாவின் இதயத்தில் வெடிகுண்டாக வெடிக்கும். அம்மா ஆவேசமடைந்து கோபத்துடன் “எங்கே அவள்?” என்று என்னைத் தேடிக்கொண்டு வருவாள். அப்போ நான் அம்மாவிடம் சாரதியிடம் என் மனதில் ஏற்பட்ட வெறுப்பைச் சொல்லி விடுவேன்.
ரொம்ப நேரமாகியும் அந்த தூங்கு மூஞ்சி திருநாகம் வரவே இல்லை. தாமதம் ஆக ஆக என்னுள் பரபரப்பு அதிகரித்தது. கடைசியில் வந்து சேர்ந்தாள் திருநாகம்.
அருகில் சென்று அவசரமாக கேட்டேன். “அம்மாவிடம் கொடுத்தீங்களா?”
“கொடுத்தேன்.”
“என்ன சொன்னாள்?”
“ஒன்றும் சொல்லவில்லை. இதைக் கொடுக்கச் சொன்னாங்க” என்று சொல்லிவிட்டு கசங்கியிருந்த காகிதத்தைக் கையில் கொடுத்தாள்.
“இதென்ன? திருப்பிக் கொண்டு வந்து விட்டீங்களே? அம்மா படிக்கவே இல்லையா?”
“எனக்குத் தெரியாது.” திருநாகம் சமையலறைக்குள் சென்று விட்டாள்.
நான் அந்தக் காகிதத்தை அப்படியே தூக்கிப் போட்டு விடலாம்னு நினைத்தேன். பிறகு ஏனோ என்னையும் அறியாமல் பிரித்துப் பார்த்தேன். நான் எழுதியதற்குக் கீழே அம்மா எழுதியிருந்தாள்.
“சாரதியை நீ விரும்பியாக வேண்டும். அவன் உன் வருங்காலக் கணவன் என்பதை மறந்து விடாதே.”
துப்பாக்கிக் குண்டு போல் பதில் வந்துவிட்டது. ராணுவத்தில் மேலதிகாரி தனக்குக் கீழே இருக்கும் ஆபீசருக்குக் கொடுக்கும் ஆணையைப் போல் இருந்தது. கோபத்தில் என் முகம் சிவந்துவிட்டது. என் விருப்பு வெறுப்புகளுக்கு முக்கியத்துவமே இல்லையா? நான் கல்யாணம் செய்து கொள்ளப் போகிறவன் எனக்குப் பிடிக்க வேண்டாமா? அம்மாவின் சர்வாதிகாரம் இந்த வீட்டில் என்றுதான் முடிவுக்கு வருமோ? அம்மா போன்றவர்கள் உயிருள்ளவரையில் தங்கள் அதிகாரத்தை விடவே மாட்டார்கள். இதிலிருந்து தப்பிக்க ஒரே வழி நான் இந்த விட்டை விட்டுப் போவதுதான்.
அன்று மாலை அப்பாவிடம் நடந்ததை எல்லாம் சொன்னேன். “சாரதியை உனக்குப் பிடிக்கவில்லை என்றால் அவனைக் கல்யாணம் பண்ணிக்கொள்ளத் தேவையில்லை. வலுக்கட்டாயமாக அதை நடத்தி வைக்க உங்க அம்மாவுக்கு எந்த அதிகாரமும் இல்லை.” கம்பீரமான குரலில் சொன்னார் அப்பா.
லேடீஸ் கிளப் மெம்பர்களை இந்த முறை டார்ஜிலிங், நைனிடால் அழைத்துப் போவதற்காக அம்மா ஏற்பாடு செய்திருந்தாள். தங்களுடைய பயணத்தைப் பற்றி அம்மா சாரதிக்குக் கடிதம் எழுதியிருந்தாள். அந்தக் கடிதம் கிடைத்ததோ இல்லையோ தெரியவில்லை. ஆனால் சரியாக அவர்கள் பயணம் மறுநாள் இரவு என்றால் சாரதியிடமிருந்து கடிதம் வந்தது. கம்பெனி வேலை விஷயமாக இங்கே வரப் போவதாகவும், ஒரு வாரம் இருக்கப் போவதாகவும் எழுதியிருந்தான். அடுத்த நாள்தான் அவன் கிளம்பப் போகிறான். அம்மாவுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை.
மிஸெஸ் ராமன் தன்னுடைய பயணத்தை கான்சல் செய்து கொள்வதாகச் சொன்னாள். அம்மா போகவில்லை என்றால் எல்லோருடைய பயணமும் நின்று போய்விடும். இத்தனை பேரையும் கிளப்பிவிட்டு, எல்லா ஏற்பாடுகளையும் செய்துவிட்டுப் போகாமல் இருந்தால் நன்றாக இருக்காது. வேறு வழியில்லாமல் அம்மா கிளம்பினாள். மிஸெஸ் ராமனையும் தன்னுடைன் கிளம்பச் செய்தாள். சாரதி இங்கே இருக்கும் ஒரு வாரமும் எங்கள் வீட்டில் தங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்துவிட்டாள். திருநாகத்தை அழைத்து எதை, எப்போ, எப்படி செய்யணுமோ ஒரு தடவைக்கு இரண்டு தடவை சொல்லிக் கொடுத்தாள்.
பொறுப்பை திருநாகத்திடம் ஒப்படைத்துவிட்டால் இம்மி பிசகாமல் அப்படியே அமலுபடுத்துவாள் என்று அம்மாவுக்குத் தெரியும்.
அம்மா இல்லாமல் இங்கே சாரதியுடன் கழிக்கணும் என்றால் எனக்கு இப்பொழுதே மனதில் கிலி பிடித்துக் கொண்டது. அது போதாது என்று அம்மா இரவு சாப்பிடும் போது “சாரதி வரப் போகிறான். நம் வீட்டில்தான் தங்குவான். அவனையும் மீனாவையும் ஜாலியாக வெளியே போய் வரச்சொல்லுங்க. அவர்களைக் கொஞ்சம் தனியாக விடுங்க. அடிக்கடி அரசியல் விவகாரங்களை பேசி போரடிக்காதீங்க அவனை” என்று அம்மா பலமாக எச்சரித்தாள்.
“சரி சரி” என்றார் அப்பா உடனே தலையை அசைத்துக்கொண்டே. இங்கே இருந்து கொண்டு சாரதியுடன் ஊர் சுற்றுவதில் எனக்குக் கொஞ்சம்கூட விருப்பமில்லை. அதுதான் எப்படியோ தைரியத்தை வரவழைத்துக்கொண்டு அம்மாவிடம் நானும் கூட வருவதாக கேட்டுப் பார்த்தேன். அது நடக்காது என்றும், என் முயற்சி வீண்போவது நிச்சயம் என்று மனதில் ஒரு மூலையில் சந்தேகம் இருந்து வந்தது. இருந்தாலும் என் மனதில் ஏற்பட்ட கலவரத்தை அம்மா ஓரளவுக்காவது புரிந்து கொள்ள மாட்டாளா என்ற எதிர்பார்ப்புடன் சென்று ஏமாற்றத்துடன் திரும்பி வந்தேன். அம்மா என்னை அழைத்துப் போகப் போவதில்லை. அந்த சாரதி வரும்போது இங்கே நான் இருப்பதைத் தவிர்க்க முடியாது. இந்த எண்ணம் வந்ததுமே என் விழிகளில் நீர் சுழன்றது. என் சுபாவமே அப்படித்தான். எந்த விஷயமாக இருந்தாலும் பிடிவாதமாக சாதிக்க முயற்சி செய்வேன். கடைசியில் பலன் கிடைக்கவில்லை என்றால் வேதனையில் மூழ்கிவிடுவேன். ரோஷமும், துக்கமும் சேர்ந்து கோபாக்னியில் தள்ளிவிட்டதுபோல் என் உடலையும், உள்ளத்தையும் தகிக்கச் செய்தன.
அம்மாவிடமிருந்து வந்த பிறகு கதவைச் சாத்திக்கொண்டு எவ்வளவு நேரம் அப்படி உட்கார்ந்திருந்தேனோ எனக்கே தெரியாது. ரொம்ப நேரம் கழித்து அம்மா வந்து என் அறையின் கதவைத் தட்டி “மீனா… மீனா” என்று அழைத்ததும் இந்த உலகிற்கு வந்தேன்.
“மீனா! கதவைத் திற.”
நான் பதில் சொல்லவில்லை. கதவையும் திறக்கவில்லை.
“என்னுடன் பேச மாட்டாயா?” பொறுமையற்றவளாய் கேட்டாள் அம்மா. காதில் விழாதது போல் சும்மா இருந்துவிட்டேன்.
“சரி, போகட்டும். உன் கோபத்தை எல்லாம் சாரதி வந்து தீர்த்து வைப்பான்” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டாள். எந்த தாயாவது பெற்ற மகளுடன் இப்படிப் பரிகாசம் செய்வாளா?
அம்மா கிளம்பிப் போய்விட்டது போல் காலடிச் சத்தம் கேட்டது. கால் மணிநேரம் கழிந்தது. அம்மா மறுபடியும் வருவாள் என்ற எதிர்பார்ப்புடன் எழுந்து போய் கதவைத் திறந்து வைத்துவிட்டு கட்டிலில் வந்து அமர்ந்தேன். ஆனால் ரொம்ப நேரம் ஆனபிறகும் அம்மா வரவேயில்லை. கீழே காரை வெளியே எடுக்கும் சத்தம் கேட்டது. ஜன்னல் அருகில் சென்று நகத்தைக் கடித்தபடி கீழே பார்த்துக் கொண்டிருந்தேன். டிரைவரும் திருநாகமும் சேர்ந்து காரில் சாமான்களை எடுத்து வைத்துக் கொண்டிருந்தார்கள். அம்மா நீல வண்ணப் புடவையில் அதற்கு ஏற்ற பிளவுஸில் அழகான சிகையலங்காரத்துடன் கண்ணில் கூலிங்க் கிளாஸ் அணிந்து கொண்டு வெளியே வந்தாள். அந்த சமயத்தில் அம்மாவைப் பார்த்தால் என் அளவுக்கு பெரிய மகள் இருக்கிறாள் என்று கற்பூரம் கொளுத்தி சத்தியம் செய்தாலும் சரி, யாரும் நம்ப மாட்டார்கள். அம்மா மனிதர்களை தன் பிடிக்குள் வைத்திருப்பது போல், வயதையும் தன் கைப்பிடிக்குள் வைத்திருக்கிறாளோ என்று சில சமயம் தோன்றும்.
என்னையும் அறியாமல் பெருமூச்சு ஒன்று என் இதயத்தைக் கிழித்துக் கொண்டு வெளியேறியது. அம்மா அங்கே ஜாலியாக சிநேகிதிகளுடன் இயற்கைக் காட்சிகளை ரசித்துக் கொண்டிருக்கும் போது, இங்கே நான் சாரதியிடமிருந்து தப்பித்துக் கொள்வது எப்படி என்று யோசித்தபடி பொழுதைத் தள்ள வேண்டும் போலும்.
அம்மா தீடீரென்று நிமிர்ந்து பார்த்தாள். ஜன்னல் அருகில் நின்று கொண்டிருந்த என்னைப் பார்த்துச் சிரித்தாள். கையை உயர்த்தி விடைகொடுப்பது போல் காற்றில் அசைத்தாள்.
சட்டென்று உள்பக்கமாக நகர்ந்தேன். கார் கிளம்பிப் போன சத்தம் கேட்டது. ஜன்னல் கம்பியில் தலையைச் சாய்த்துக்கொண்டு இதழ்களை இறுக்கி துக்கத்தைக் கட்டுப்படுத்த முயன்றேன்.
என்ன செய்வெதென்று தெரியாமல் கட்டில் மீது அமர்ந்து தலையணையை எடுத்து முகத்தை அதற்குள் புதைத்துக் கொள்ளப் போனேன். திடீரென்று நினைவு வந்தது. அந்த தலையணையின் உறை அம்மா வாங்கியதுதான். அந்த கலர் எனக்குப் பிடிக்கவில்லை என்று சொன்ன போது அம்மா மென்மையாகச் சிரித்துவிட்டு “உன் மூஞ்சி, உனக்கென்ன தெரியும் வண்ணங்களைப் பற்றி?” என்று சொல்லிக் கொண்டே அதையே மாட்டிவிட்டாள்.
தலையணையை வெறுப்புடன் பார்த்துக்கொண்டே இரண்டு கையாலேயும் தூக்கி எறிந்தேன். எனக்கு மூச்சு முட்டுவது போல் இருந்தது. அருகில் இருந்த டீபாயைக் காலால் உதைத்துவிட்டு மறுபடியும் ஜன்னல் அருகில் வந்து நின்றுகொண்டேன்.
“கிருஷ்ணவேணி! நீ என்னுடைய அம்மாவே இல்லை. உனக்கு எவ்வளவு பிடிவாதம் இருக்கோ அதற்கு ஆயிரம் மடங்கு பிடிவாதம் என்னிடம் இருக்கு. சாரதியைக் கவரும் விதமாக நடந்து கொள்ளச் சொல்லிவிட்டுப் போனாய் இல்லையா? செத்தாலும் அப்படிச் செய்யமாட்டேன். நீ என்னை அழைத்துக் கொண்டு போகாமல் இருந்துவிட்டால் மட்டும் அவனிடமிருந்து தப்பித்துக் கொள்ளும் வழி எனக்குத் தெரியாது என்று நினைத்து விடாதே. லாயர் ஆனந்தராவின் மகள் நான். அதை மறந்துவிடாதே.”
என் முன்னாடி இல்லாத அம்மாவை நினைத்து மனதிலேயே சபதம் செய்தேன்.

email id tkgowri@gmail.com

Series Navigation

கௌரிகிருபானந்தன்

கௌரிகிருபானந்தன்