முள்பாதை 10

This entry is part [part not set] of 29 in the series 20091225_Issue

தெலுங்கில் யத்தனபூடி சுலோசனாராணி தமிழாக்கம் கௌரி கிருபாநந்தன்


email id tkgowri@gmail.com

நான் மெலட்டூரில் தங்கியிருந்தது ஒரு வாரம்தான் என்றாலும், இந்த சொற்ப காலம்தான் என் வாழக்கையின் ஓட்டத்தை திசை திருப்பிவிட்டது.
இருபது வருடங்களாக எங்க அம்மாவின் சொசைட்டியில் நான் கற்றுக் கொள்ளாத, புரிந்து கொள்ளாத பல விஷயங்களை இங்கே கவனிக்க முடிந்தது. அவை ரொம்ப சின்னச் சின்ன விஷயங்களாக இருக்கலாம். சாதாரண வாழ்க்கையில் அவற்றுக்கு முக்கியத்துவம் இல்லாமல் போகலாம். ஆனால் அவற்றின் பாதிப்பு நம்மையும் அறியாமல் நம்மீது பதிந்து விட்டிருக்கும்.
நான் வந்த ஓரிரண்டு நாட்களில் அத்தைக்கும் ராஜேஸ்வரிக்குமிடையே உள்ள பந்தம் எவ்வளவு மென்மையானதோ, எவ்வளவு உயர்வானதோ புரிந்து கொண்டேன். அத்தை சுபாவத்திலேயே குறைவாக பேசுபவள். வீட்டு விஷயங்களைப் பற்றி அவ்வப்பொழுது பெரிய மகனிடம் சொல்வதைத் தவிர மற்ற நேரங்களில் பேசியோ, பேச வேண்டும் என்ற ஆர்வம் இருப்பது போலவோ என் கண்ணில் படவில்லை.
ஆனால் ராஜீ, மதூ, மணீ என்று குழந்தைகளை அழைக்கும் போது அந்தக் குரலில் சுருஷ்டியில் இருக்கும் தாய்மையின் சொரூபம் வெளிப்படுவது போல் எனக்குத் தொன்றும். அவர்களுக்கு இடையில் அனாவசியமான மரியாதைகள் இல்லை. மனதில் ஒன்றை வைத்துக்கொண்டு பெரியவர்களிடம் மதிப்பு பெறுவதற்காக வேறு பேச்சு பேசவேண்டிய தேவை அவர்களுக்கு இல்லை.
அத்தை பெரிய பெரிய படிப்புகள் படித்தவளும் இல்லை. குழந்தைகளின் வளர்ப்பு விஷயத்திலும் ரொம்ப சிரத்தை எடுத்துக்கொண்டு, கட்டுப்பாட்டுடன் வளர்ப்பது போல் தெரியவில்லை. எப்போதும் வீட்டு வேலைகளில் மூழ்கியிருந்தாள். அப்படியும் குழந்தைகள் ரொம்ப சமர்த்தாக இருந்தார்கள். தங்களுடைய வேலைகளை தாங்களே செய்து கொள்வார்கள். எந்த சமயத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டுமோ அவர்களுக்கு நன்றாகவே தெரியும். ஒன்று மட்டும் உண்மை. எங்கள் வீட்டில் எனக்குக் கொடுக்கப்பட்ட செல்லம் இங்கே யாருக்குமே கொடுக்கப்படவில்லை. அம்மா அப்பா என்னை தலைக்குமேல் தூக்கி வைத்துக்கொண்டு கொண்டாடுவார்கள். இங்கே இவர்களுடைய தேவைகளைத் தீர்த்து வைப்பதைத் தவிர மற்ற நேரங்களில் அவர்களை யாரும் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை. ஆனால் இந்த வீட்டில் குழந்தைகளுக்கு உள்ள சுதந்திரமும், உரிமையும் எங்கள் வீட்டில் எனக்கு இருக்கிறதா என்ற சந்தேகம் வந்தது. எந்தக் காரியம் செய்ய நினைத்தாலும் ஆயிரம் தடவை யோசிப்பேன்.
இந்தக் காரியம் அப்பாவுக்குப் பிடிக்குமா? அம்மா வருத்தப்பட மாட்டாள் இல்லையா? திருநாகம் மாமி எதாவது சொல்லுவாளோ? இப்படி பலவிதமாக யோசித்து கடைசியில் அந்தக் காரித்தைச் செய்யாமலேயே காலம் கடந்து போனதும் உண்டு.
ஒரே வார்த்¨துயில் சொல்லணும் என்றால் நான் ஊகித்துக் கொண்ட, அம்மா என்றால் இப்படித்தான் இருக்கணும் என்று கனவு கண்ட உருவத்திற்கு மறுபெயராக அத்தை இருந்தாள்.
ராஜேஸ்வரியைப் பார்த்தால் தன்னுடைய மகள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று அம்மாவுக்குத் தோன்றுமோ என்னவோ.
ராஜேஸ்வரியும், மற்ற குழந்தைகளும் என்னை உறவு முறையை வைத்து அண்ணீ என்று அழைப்பார்கள். பட்டணத்தில் எப்போதும் “மிஸ் மீனா!” என்ற அழைப்பைக் கேட்ட எனக்கு இந்த அழைப்பு காதுகளுக்க இனிமையாக இருந்தது.
கிருஷ்ணனின் கட்டிலை கொண்டு வந்து எனக்குத் தனியாக படுக்கையைப் போடுவதற்காக ஏற்பாடு செய்து கொண்டிருந்த போது வேண்டாமென்று மறுத்துவிட்டேன். பிறகு குழந்தைகளுடன், ராஜேஸ்வரிக்குப் பக்கத்தில் பாயில் படுத்துக் கொண்டேன். கிருஷ்ணன் தன்னுடைய அறையில் படுத்துக் கொண்டான்.
அத்தை குழந்தைகளுக்கு அடுத்ததாக வாசலுக்குப் பக்கத்தில் பாயைப் போட்டுக் கொண்டாள். வெளியே மழை பெய்து கொண்டிருந்த சத்தம் கேட்டது. நானும் ராஜேஸ்வரியும் இருட்டிலேயே குரலை தாழ்த்திக்கொண்டு, மற்றவர்களின் தூக்கத்திற்கு இடைஞ்சல் இல்லாத வகையில் ரொம்ப நேரம் பேசிக் கொண்டோம். ராஜேஸ்வரி எங்க அம்மா அப்பாவைப் பற்றி, என் கல்லூரி வாழ்க்கையைப் பற்றி, சிநேகிதிகளைப் பற்றி கேள்விகளை கேட்டுக் கொண்டிருந்தாள். எனக்கு நெருங்கிய சிநேகிதிகள் யாரும் இல்லை என்று சொன்ன போது அவளால் நம்ப முடியவில்லை.
சற்று நேரத்திற்குப் பிறகு ராஜேஸ்வரி உறங்கிவிட்டாள். நான் ரொம்ப நேரம் விழித்துக் கொண்ருந்தேன். எங்களுடன் ஒப்பட்டுப் பார்த்தால் இவர்கள் ரொம்ப ஏழ்மையில் இருப்பதாகத்தான் சொல்ல வேண்டும். ஆனால் அந்த ஏழ்மை இவர்களை எந்த விதமாகவும் பாதித்ததாகத் தெரியவில்லை. இந்த வீட்டில் விலை உயர்ந்த பொருட்கள் இல்லை என்பது உண்மைதான். ஆனால் இவர்கள் முகத்தில் திருப்தியும், மகிழ்ச்சியும் தாண்டவமாடிக் கொண்டிருந்தன. ஏழ்மையை இவர்கள் தங்களுடைய கைப்பிடிக்குள் அடக்கி வைத்துவிட்டது போல் தோன்றியது.

Series Navigation

கௌரிகிருபானந்தன்

கௌரிகிருபானந்தன்