முன்னாள் சிநேகிதிகள்

This entry is part [part not set] of 31 in the series 20091023_Issue

நாவிஷ் செந்தில்குமார்


போன வருடம்
பூங்கொத்துடன் வாழ்த்துச் சொன்ன
தோழி ஒருத்திக்கு
இந்தப் பிறந்தநாளில்
இருக்கேனா? செத்தேனா?
எனத் தெரியவில்லை…

அடுத்த கவிதைத் தொகுப்பின்
முதல் பிரதி தனக்கே
வேண்டுமெனச் சொன்ன
முப்பது தோழிகளும்
முகவரியைத் தொலைத்திருந்தார்கள்…

மூன்று வேளைகளும்
‘சாப்பிட்டாயா?’ என
குறுந்தகவலில் குடைச்சல் தந்த
தோழியின் அலைபேசிக்கு
அழைக்கிற போதெல்லாம்
அணைத்துவைக்கப்பட்டிருப்பதாகச்
சொல்லப்படுகிறது…

என் மகளை தன் மகனுக்குக்
கேட்பேன் எனச் சொன்ன
தோழியொருத்தி
அவள் திருமணத்திற்கே என்னை
அழைக்கவில்லை!

திருமணத்திற்குப் பிறகு
தற்செயலாகச் சந்தித்த
தருணமொன்றில் தோழியொருத்தியிடம்
கோபித்துக் கொண்டேன்…
அவளோ
‘அவர் சரி, அத்தை மாமாவிடம்
சிநேகிதனொருவன் இருந்தானென
எப்படிச் சொல்வது?’ என்றாள்…
இருந்தானில் இறந்து போயிருந்தது
எங்கள் நட்பு!

இரு மனங்களை இணைப்பதாகச்
சொல்கிற திருமணம்
எத்தனை எத்தனை
நட்பின் இதயங்களைப்
பிரிக்கிறதோ?

பெண்களை நம்புகிற
நட்பையும் நம்புகிற என்னால்
இப்போதெல்லாம்
இன்னொரு ஆணால்
தீர்மானிக்கப்படுகிற
பெண்களுடைய நட்பை
நம்ப முடியவில்லை!

ஏதோ உறுத்த முதன்முதலாக
மனைவியிடம் கேட்டேன்…
‘நீயாவது சிநேகிதர்களுடன்
தொடர்பில் இருக்கிறாயா?’
அவள் விடுத்த பெருமூச்சு
தன் கொடிய வெப்பத்தால்
நானறிந்த மொழியொன்றில்
பெண்களின் வாழ்க்கையை
எழுத முயன்று
மூலையைத் தேடி முடங்கியது…
–நாவிஷ் செந்தில்குமார்

Series Navigation

நாவிஷ் செந்தில்குமார்

நாவிஷ் செந்தில்குமார்