முந்தைப் பெருநகர்

This entry is part [part not set] of 31 in the series 20020330_Issue

பா அகிலன்


(பதுங்குகுழி நாட்கள் : பா அகிலன் : குருத்து வெளியீடு , தாய்த் தமிழ் பள்ளி வளாகம், கோபி செட்டிப் பாளையம் வட்டம் ஈரோடு மாவட்டம் 638476. விலை ரூ 45 மின் அஞ்சல் sundarprs@hotmail.com)

இழந்து போன
அற்புதமான கனவின்
நினைவுத் துயரென படர்கிறது நிலவு.

பகலில் புறாக்கள் பாடி
சிறகடித்துப் பறந்த
வெள்ளைக் கட்டிடங்களுடைய
முந்தைப் பெருநகர்
இடிபாடுகளோடு குந்தியிருக்கிறது யுத்த வடுப்பட்டு

பாசி அடர்ந்த பழஞ்சுவர்களின்
பூர்வ மாடங்களில்
கர்வ நாட்களின்
முன்னைச் சாயல் இன்றும்

பண்டையொரு ஞானி,
சித்தாடித் திரிந்த
அதன் அங்காடித் தெருக்களில்
சொல்லொண்ணா இருளை இறக்கியது யார் ?

பாடியின் தந்திகளிலோ தோய்கிறது துக்கம்
விழாவடங்கிய சதுக்கங்கள்
காலமிறந்த ஆங்கிலக் கடிகாரக் கோபுரம்
ஊடே
புடைத்தெழுகிற பீதியிடை
கடல் முகத்தில்
விழித்திருக்கும் காவலரண்கள் ஓயாது,

தானே தனக்குச் சாட்சியாய்
யாவற்றையும் பார்த்தபடிக்கு
மாநகரோ மெளனத்துள்

ஓங்கி
இன்னும் இன்னும் முரசுகள் முழங்கவும்
சத்தியத்தின் சுவாலை நெருப்பு உள்ளேந்தி
மாநகரோ மோனத்துள் அமரும்.

(மார்கழி -1993)

1. கடையிற்சுவாமி – ஈழத்துச் சித்தர் பரம்பரையின் மூலவர்களுள் ஒருவராகக் கருதப்படுபவர். யாழ்ப்பாணக் கடைத்தெருவில் எப்போதும் சுற்றித் திரிவாராம்.

2. யாழ்பாடி: அந்தகனான ஒரு யாழ்பாடிக்கு பரிசாக முன்னொருகால் வழங்கப்பட்ட நகரமே யாழ்ப்பாணம் என்றொரு ஐதீகம் உண்டு.

*************

Series Navigation