முதுமை வயது எல்லோருக்கும் வரும்

This entry is part [part not set] of 29 in the series 20060915_Issue

தேவமைந்தன்


மனிதர்களின் இயற்கைக் குணங்களில் வேடிக்கையானது ஒன்று இருக்கிறது. அது என்ன என்றால், தனக்கு ஆகாதது – பிடிக்காதது – சரிவராதது போன்ற எதிர்மறைகள் எல்லாம் பிறர்க்கு மட்டுமே வரும் என்ற நம்பிக்கை. இதைப் போன்ற நம்பிக்கைகளைத்தான் மூடநம்பிக்கை என்று சொல்ல வேண்டும். ஏதோ தான் மட்டுமே இந்த உலகில் கோலோச்சிக்கொண்டிருப்பது போன்ற பிரமையில், அடுத்தவர்களைப் பற்றிய தீயசெய்திகளை நாள்தோறும் ஒலிபரப்பிக் கொண்டிருத்தல் என்பது இதைவிடவும் தேவையில்லாத நடவடிக்கை. இதைத்தான் அருணகிரிநாதர் தம் கந்தரநுபூதியில் ‘ஜெகமாயை’ என்ற சொல்லால் குறிப்பிட்டார்.

பொதுவாக நாள்தோறும் பேருந்துகளில் செல்லும்பொழுது, “என்ன, பெரிசு! அக்கடா’ன்னு வீட்டில இருக்கலாம்’ல? எதுக்கு இப்படி வெளிய’ல்லாம் போயி ‘லோல்பட்டு லொங்கழியிறே!” என்ற இரக்கத் தொனியில் அமைந்த, ஆனால் இரக்கமே இல்லாத, ஏதோ தான்மட்டும் நிரந்தரமாக இளமை – இனிமை- வலிமை – புதுமைகளுடன் முரட்டுத்தனமான மாநகரப் பேருந்துகளை ஜல்லிக்கட்டில் அடக்கி ஓடவிட்டிருக்கிற ‘வஸ்தாதுகள்’ மாதிரிப் பேசுகிற இளசுகளின் குரலைக் கேட்டிருக்கலாம். அதைவிடவும் பரிதாபம், அப்படியொரு இளசின் பேச்சுகளைக் கேட்டுவிட்டுத் தன் தோழியிடம் பரிகாசம் பண்ணும் ‘காலேஜ் கொண்டாட்ட’த்தின் ‘காமெண்ட்’ – ” ஆமா! இவரே ஒரு ‘குவெஸ்ச்சன் மார்க்’ மாதிரி இருந்திட்டு, அந்தப் பெரியவரை ‘ஒடுக்கு எடுக்கிறத’ப் பாத்தியாடா?[ ‘டீ’ என்று பேசியது, அந்தக் காலம்] – எதிர்வினை – வினை விதைத்த இளசின் காதுகளில் விழாமல் போவதுதான்.

முதுமை வயது என்று பத்திரிக்கைகள் சில நிர்ணயித்துள்ள வயது ஐம்பது. முதியோர் பென்ஷன் பெறும் வயது மாநில அரசுகளால் அறுபத்து ஐந்திலிருந்து ஐம்பத்து ஐந்து வரையிலும் குறைக்கப்பட்டு விட்டது. புதுவை மாநிலத்தில் ஏற்கெனவே முதியோர் பென்ஷன் பெறும் வயது அறுபதாகத்தான் இருந்தது. இப்பொழுது புதுவை மாநில முதல்வர் மாண்புமிகு அரங்கசாமி அதை மீண்டும் ஐந்து குறைத்து, ஐம்பத்து ஐந்து வயது ஆக்கியுள்ளார். புதுவை அரசுக் கல்லூரிகளில் பேராசிரியர்கள் ஓய்வு பெறும் வயது அறுபத்து இரண்டு என்பது தெரிந்ததுதானே.. ஆக. முதுமை முதிர்ந்தபின்னும் ஏழாண்டுகள் பணியில் இருக்கிறார்கள் அவர்கள்.

திரு.வி.க. அவர்கள் ‘முதுமை உளறல்’ என்ற நெடுங்கவிதை படைத்திருக்கிறார். அதில் அவர் தன் முதுமை குறித்தும் அந்த நூல் அந்த வயதில் வருவது குறித்தும் சொல்வது, கண்களைக் குளமாக்குகிறது.
அறுபத் தாறினில் சிறுபரல் ஆணிப்
படலம் கண்ணைப் படர்ந்து மறைத்தது;
பழைய வண்ணம் விழிகள் நோக்க
எழுதும் பேற்றை இழந்தனன் பாவி!
உளத்தெழும் கருத்தை உளறு கின்றனன்
உளறலும் நூலாய் வெளிவரு கின்றது;
ஒற்றைக் கண்ணிடர் உற்ற வேளையில்
‘பரம்பொருள்’ நூலைப் பகர்ந்தனன் உரையால்;
இரண்டு கண்ணொளி வறண்டஇந் நாளினில்
‘இருளில் ஒளி’யைக் குறள்வெண்பாவால்
‘இருமையும் ஒருமையும்’, ‘அருகன் அருகே’
‘பொருளும் அருளும் – மார்க்கிஸ் காந்தி”
‘சித்தந் திருந்தல் – செத்துப் பிறத்தல்’
என்னும் நூல்கலைப் பன்னினன் அகவலால்;
…………. ……………… …………….. ……………..
பகலில் பல்பணி மிகமிகச் செய்து
நிசியில் எழுத்துப் பசியைத் தீர்ப்பன்;
தூக்கத் தேவி தாக்கினள் என்னைக்
கடந்தன ஆண்டுகள்; படர்ந்தது படலம்;
எனதே குற்றம் எனதே குறையும்
இயற்கை ஒறுத்தலைச் செயற்கை என்செயும்?
படுக்கையில் கிடந்து விடுக்கும் சொல்லால்
ஆகும் நூலில் ஏகும் பிழைகள்;
பொறுக்க புலவர் பொறுத்தே அருள்க.”
[தடிமனான எழுத்துகள், ‘முதுமை உளறல்’ முதற்பதிப்பில் உள்ளவாறே இங்கும் இடப்பெற்றுள்ளன.]

நூல் வெளியான 1951ஆம் ஆண்டில் ‘காடரேக்ட்’ என்னும் கண்விழிப் புரைநோய், பிரம்மாண்டமானதாக பலரை அச்சுறுத்திக் கொண்டிருந்தது; தவிர, நெடுநேரம் கண்விழிப்பதால்தான் படலம் தோன்றி வளர்கிறது என்ற நம்பிக்கையும் இருந்து வந்திருக்கிறது. இன்றோ நீரிழிவுதான் அதற்கு முக்கிய காரணம் என்று அறிவுறுத்துவதுடன், மிகச் சிறந்த அறுவை மருத்துவமும் தரப்படுகிறது. அதிக நேரம் கண்விழிப்பது அல்லது போதுமான தூக்கம் தூங்காமல், தொடர்ந்து கெடுத்துக் கொள்வதால் மனத்தின் சமநிலை தாக்கப் படுகிறது என்று கண்டறிந்துள்ளார்கள்.

இன்னொரு வேடிக்கை தெரியுமா? இதை நானும் என் நண்பரும் கண்டறிந்தோம். முறையாக பிஹெச்.டி செய்து முடிப்பவர்களுக்கும் இந்த முதுமைநிலை[senility]யின் தாக்குதல்கள், அவர்கள் சிறிய வயதினராயிருந்தாலும், ஏற்படுகின்றனவாம். அவை:
1. மறதி அதிகமாதல். குறிப்பாக, எதையாவது எங்காவது எப்பொழுதும் தொலைத்துவிட்டு அது பற்றியே சிந்தித்தவாறு இருத்தல். அப்படிச் சிந்தித்துக் கொண்டே இருக்கும்பொழுது மேலும் புதிய பலவற்றை ஒவ்வொன்றாகத் தொலைத்தல். பிறகு, எங்கே எதைத் தொலைத்திருக்க வாய்ப்பில்லையோ அங்கே சென்று அதைத் தேடுவதோடு அங்குள்ளவர்களை விசாரித்து அவர்களையும் ஒருவழி பண்ணுதல்.
2. அஞ்சல் பெட்டிக்குள் அஞ்சலைப் போட்டுவிட்டு, வெளியே தப்பி விழுந்திருக்கிறதா என்று, பிறருக்குத் தெரியாமல் நோட்டம் விடுதல். உண்மையிலேயே வயது அதிகமானவர்கள் இதற்கெல்லாம் கவலையே பட மாட்டார்கள்.
3. தன்னிடம் பேசுபவர்கள் பேச்சைக் காதிலேயே போட்டுக்கொள்ளாமல், நிறைய அடிக்குறிப்புகள்(footnotes) மற்றும் அதிகமான – அல்லது, ஒவ்வொன்றுக்கும் “இதைப்போலத்தான்..” என்று தொடங்கி அதிகமான ஒப்புநோக்குதல்கள்(references) தருதல். மேலும் அதைப்பற்றி அலட்டிக் கொள்ளாமல் இருத்தல்.

“பெரிசா சொல்லவந்துடாருடா மாமே!…” என்று எவர் என்னை ‘நொட்டை எடுத்தாலும்’ பரவாயில்லை.. அவர்களுக்குப் பணிவன்புடன் ஒன்றைச் சொல்லிக் கொள்ள விழைகிறேன்.

எனக்கே மேற்படி வயணங்கள் பொருந்தும் என்பதால்தானே, இப்படி ஆகப் பட்டவற்றை செவ்வனே மொழியவும் வரிசைப்படுத்தவும் ஆச்சுது?

****
karuppannan.pasupathy@gmail.com

Series Navigation