முடிவு

This entry is part [part not set] of 34 in the series 20070816_Issue

தமிழாக்கம் – கெளரிகிருபானந்தன்


டெலிபோன் கணகணவென்று ஒலித்தது. சுநீதா கட்டிலிலிருந்து எழுந்துகொண்டு ஓரே எட்டில் போன் அருகில் சென்றாள். கார்ட்லெஸ் போனை எடுத்து ஆன் செய்தாள். அது அமெரிக்காவிலிருந்து வந்த கால். இரண்டு மாதங்களுக்கு முன் அவளை மணம் புரிந்த ரவீந்திரனிடமிருந்து.
“ஹலோ!” உற்சாகம் பொங்கும் குரலில் சொன்னாள்.
“நான்தான்” ரவீந்திரன் பேசுகிறேன்.”
காலை சுமார் பதினோருமணி. ஜன்னல் வழியாக விழுந்த வெயிலினால் வெக்கையாக இருந்தாலும் அவனுடைய குரலைக் கேட்டதுமே ஏ.சி.யை ஆன் செய்தாற்போல் குளிர்ச்சியாக உணர்ந்தாள் சுநீதா. “தெரியும். இந்த போன் உங்களிடமிருந்துதான் என்று எனக்குத் தெரியும்.”
“அதாவது இருபத்திநாலுமணி நேரமும் என் நினைவாகவே இருக்கிறாய் என்று சொல்லு. தாங்க்யூ சுநீதா … தாங்க்யூ.”
“போன் செய்து ஒரு வாரமாகி விட்டது. அவ்வளவு பிசியா?”
“பிசிதான். உனக்காகத்தான் பிசி. பகல் முழுவதும் ஆபீஸ். அதற்குப் பிறகு உன்னுடைய வேலைக்காக மேலதிகாரிகளை சந்திப்பது. ஓ.கே. ஓ.கே. கஷ்டப்பட்டாலும் பலன் கிடைத்துவிட்டது. யு ஆர் செலக்டெட். இரண்டு மூன்று நாட்களில் போனில் இண்டர்வ்யூ இருக்கும். அது வெறும் ·பார்மாலிடீதான். உடனே எங்க கம்பெனியிலிருந்து உனக்கு ஆர்டர்ஸ் வரும். பெட்டி படுக்கையுடன் ரெடியாக இருக்க வேண்டியதுதான் இனி நீ செய்ய வேண்டியது.”
“அப்படி என்றால் நம் பிரிவுக்கு சீக்கிரமாகவே ஒரு முடிவு வரப்போகிறது என்று சொல்லுங்கள்.”
“அதுதானே என்னுடைய விருப்பமும். உனக்கு ஆர்டர்ஸ் வந்ததும் உங்க அப்பாவுடன் சென்னைக்குப் போக வேண்டியிருக்கும். டிகெட்டும் வாங்கி அனுப்புகிறேன். இப்போ சொல்லு. அய்யாவின் சாமர்த்தியம் உனக்குப் புரிந்ததா இல்லையா? இந்த ரவீந்திரன் பிடிவாதம் பிடித்தால் ஓரே பிடிதான். மகாராணியார் விரும்பினால் வானத்தையே வில்லாக வளைத்து காணிக்கையாக தந்துவிடுவேன்.”
“முதலிரவு அன்றே புரிந்துவிட்டது நீங்க ரொம்ப பிடிவாதம் பிடித்த ஆசாமி என்று.” அவள் கன்னங்கள் சிவந்தன. “நீங்க இன்னொரு காரியமும் காரியமும் செய்திருக்கீங்க. நான் அங்கே வந்தாலும் வேலை பார்க்கப் போவது ஆறுமாதங்கள்தான்.” குறும்புடன் சிரித்தாள்.
“அதென்ன?”
“அது அப்படித்தான்.”
“சரியாக சொல்லேன்.”
“ஐ மிஸ்ட் மை மன்த்லி பிரியட்ஸ்.”
“வ்வாட்!”
“அதேதான் சார்! இன்னும் ஏழுமாதங்களுக்குப் பிறகு நீங்க தந்தை ஆகப் போறீங்க. இன்று காலையில்தான் எங்க ·பாமிலி டாக்டர் கன்·பர்ம் செய்தாள். டாக்டரம்மா சிரித்துக் கொண்டே உங்களையும் ஒரு வார்த்தை சொன்னாள்.” கலகலவென்று நகைத்தாள் சுநீதா.
மறுமுனையில் நிசப்தம்!
“இந்த சந்தர்ப்பத்தில் எனக்கு என்ன பரிசு வாங்கித் தருவது என்று யோசிக்கிறீங்களா?”
“நோ!” ரொம்ப சீரியஸாக சொன்னான் ரவீந்திரன். “உடனே போய் அபார்ஷன் செய்துகொள்.”
அதைக் கேட்டதும் சுநீதா திடுக்கிட்டாள். “என்ன சொல்றீங்க நீங்க?”
“யெஸ். நான் சொல்வதைக் கேள். உடனே அபார்ஷன் செய்துகொண்டுவிடு. நீ இங்கே வருவது குழந்தையைப் பெற்றுக் கொள்வதற்காக இல்லை. வேலை பார்ப்பதற்கு…. பணம் சம்பாதிப்பதற்கு. நான்கு வருடங்கள் உழைத்து முடிந்தவரையில் சேர்த்து வைத்துக்கொண்டு பிறகு இந்தியாவுக்குப் போய் எத்தனை குழந்தைகளை வேண்டுமானாலும் பெற்றுக்கொள். எனக்கு ஆட்சேபணை இல்லை.”
சுநீதாவுக்கு வாயிலிருந்து வார்த்தை வெளிவரவில்லை.
“புரிந்ததா? மூன்று நாட்கள் கழித்து மறுபடியும் போன் செய்கிறேன். அந்நேரத்திற்கு நீ ஆஸ்பத்திரியிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு வந்திருப்பாய். ஓ.கே.”
‘நான் சொல்றதைக் கொஞ்சம் கேட்கிறீங்களா?’ உரத்தக் குரலில் சொல்வதற்காக சுநீதா வாயைத் திறக்கப்போனாள். அதற்குள் போன் கட் ஆகிவிட்டது க்ளிக் என்ற சத்தத்துடன்.
சுநீதாவின் கையில் ரிசீவர் அப்படியே இருந்தது. என்ன மனிதன் இவன்? தாயாகப் போகிறேன் என்று சொன்னால் சந்தோஷப்படுவான் என்று நினைத்தாளே ஒழிய இப்படிப் பேசுவான் என்று எதிர்பார்க்கவில்லை. பணம்தான் அவனுக்கு முக்கியமா? இருக்கும் சொத்து போறாதா? சூனித்தை வெறித்தபடி சிலையாக உட்கார்ந்திருந்தாள் சுநீதா.
சுநீதா உற்சாகமாக போனில் பேசும்போது அந்த அறைக்குள் வந்த அவளுடைய தாய், மகள் யாருடன் பேசுகிறாளென்று புரிந்துகொண்டு முறுவலுடன் அங்கிருந்து போய்விட்டாள். பத்து நிமிடங்களுக்குப் பிறகு மறுபடியும் வந்து “என்ன சொல்கிறார் உன் வீட்டுக்காரர்?” என்று கேட்டாள்.
சுநீதா ஊமையைப் போல் பார்த்தாள்.
“இந்த நல்ல செய்தியை தெரிவித்துவிட்டாய் இல்லையா?” அருகில் வந்து மகளை கணிவுடன் பாரத்தாள். “ஏன் பேசமாட்டேங்கிறாய்? இப்படி மலங்க மலங்க விழிக்கிறாயே ஏன்?”
“உங்க மாப்பிள்ளைக்கு இப்போ உடனே தந்தையாவதில் விருப்பமில்லையாம்.” கண்ணில் தளும்பிய கண்ணீரை அம்மா பாரத்துவிடக் கூடாது என்பது பொல் முகத்தை வேறு பக்கம் திருப்பிக்கொண்டாள்.
“அப்படியென்றால்?” தாயின் முகத்தில் கேள்விக்குறி தென்பட்டது.
“அபார்ஷன் செய்துகொள் என்று சொன்னார்.”
“கடவுளே! இது என்ன பேச்சு?” மகள் சொன்னதைக் கேட்டதும் அந்த தாய்க்கு அதிர்ச்சியாக இருந்தது. “தாயாகப்போகிறேன் என்று நல்ல செய்தியைச் சொன்னால் இந்த வேண்டாத வேலையை செய்ய சொல்வதாவது?”
“நல்லதோ கெட்டதோ, அவருக்கு வேண்டியதெல்லாம் நான் தாயாகாமல் இருப்பது. நான்கு வருடங்கள் அவர் சொன்னது போல் வேலை பார்த்து பணம் சம்பாதித்து அவரிடம் கொடுப்பது.” சுநீதாவின் குரல் கடினமாக ஒலித்தது.
அவள் கண்கள் கோபத்தால் சிவந்துவிட்டன. அவனுடன் கழித்த முதலிரவு நினைவுக்கு வந்தது. அவனுடைய பிடிவாதம் நினைவுக்கு வந்தது.
டம்ளரில் இருந்த பாலை பாதி குடித்துவிட்டு மீதியை குடிக்கச் சொல்லி அவளிடம் நீட்டினான்.
“வேண்டாம்” என்றாள்.
“நான் எச்சில் பண்ணி குடித்தேன் என்பதாலா?”
“இல்லை.”
“பின்னே?”
“வெறும் பால் நான் குடிக்கமாட்டேன். பிடிக்காது.”
“நான்தான் அதில் இனிப்பு கலந்துவிட்டேனே?” முறுவலுடன் அவளை அணைத்தபடி பக்கத்தில் உட்காரவைத்தான்.
“சின்ன வயதிலிருந்தே எனக்கு பாலை குடித்தால் வயிற்றை பிரட்டிக்கொண்டு வரும். அம்மாவும் என்னை வற்புறுத்தமாட்டாள்.”
“இப்போ நீ கேட்க வேண்டியது அம்மாவின் பேச்சை இல்லை, கணவனின் பேச்சை. கணவன் எதை விரும்புகிறானோ அதைத்தான் நீ செய்யவேண்டும்” என்றான்.
“எனக்கு விருப்பம் இல்லாத காரியமாக இருந்தால் கூடவா?” கெஞ்சுவது போல் சொன்னாள், அவனுடைய சட்டையின் பித்தானை திருகிக்கொண்டே..
“ஆமாம்.”
விருட்டென்று நிமிர்ந்தாள்.”பால் குடிக்காமல் இருக்கக்கூடிய சுதந்திரம் கூட எனக்கு இல்லையா?” அன்பு ததும்பும் பார்வையுடன் கேட்டாள்.
“அந்த சுதந்திரமெல்லாம் திருமணம் முடியும் வரையில்தான். அம்மாவிடம் கெஞ்சியோ மிரட்டியோ உன் விருப்பங்களை நிறைவேற்றிக்கொள்வது எல்லாமே அத்துடன் சரி. திருமணம் ஆன பிறகு கணவனின் விருப்பம்தான் உன்னுடைய விருப்பமாக மாறவேண்டும்.”
“அப்படி எல்லாம் எந்த சட்டத்திலேயும் இல்லை.” உரிமையுடன் அவனுடைய தோளில் சாய்ந்துகொண்டாள்.
“ஆமாம். நான் சொல்வதுதான் உண்மை. மாட்டேன் என்று சொல்வதற்கு யாருக்குமே உரிமையில்லை.” ரவீந்திரன் எழுந்துகொண்டு நிலைக்கண்ணாடியில் தன் அழகை ரசித்துக்கொண்டே மீசையை நீவி விட்டுக்கொண்டான்.
சுநீதா திகைத்துப் போய்விட்டாள். அழுகை பொங்கி வந்தது. கோபத்தில் உடல் தகிப்பதுபோல் இருந்தது. அந்த கோபத்தில் டம்ளரில் இருந்த பாலை அப்படியே வாயில் ஊற்றிக்கொண்டாள். மூச்சு திணறியது. வாந்தி வரும்போல் இருந்தது. சட்டென்று பக்கத்திலேயே இருந்த வெள்ளித் தட்டிலிருந்து மீடாபானை எடுத்து வாயில் போட்டுக் கொண்டாள். அவன் மீது ஏற்பட்ட ஆத்திரத்தைத் தீர்த்துக்கொள்வது போல் கடக் முடக் என்று மெல்லத் தொடங்கினாள்.
ரவீந்திரன் சிரித்துக்கொண்டே அருகில் வந்தான். “சாரி கண்ணம்மா! கணவன் சொன்ன பேச்சைக் கேட்கும் மனைவியாக இப்படித்தான் இருக்கவேண்டும். ஐ லைக் யூ” என்று மார்போடு அணைத்துக்கொண்டு முத்தங்கள் பதித்தபோது அவளுக்கு உடல் முழுவதும் கம்பளிப்பூச்சி ஊர்வதுபோல் அருவெறுப்பாக இருந்தது.
“இனி இந்த விஷயத்தை நீ மறந்துபோய் விடவேண்டும். உனக்கு பால் பிடிக்காது என்று முன்பே தெரிந்தால் உன்னைக் குடிக்கச் சொல்லி சொல்லியிருக்க மாட்டேன். நான் சொன்ன பிறகு அந்த காரியத்தை செய்யவில்லை என்றால் என் கோபம் தலைக்கேறிவிடும். சுநீதா! வாழ்க்கையில் இனி ஒரு நாளும் உன்னை பாலை குடிக்க சொல்லி வற்புறுத்தமாட்டடேன். ஓ.கே. தானா? நான் வாக்குக் கொடுத்தால் கொடுத்ததுதான்.”
அவன் சொன்னதைக் கேட்டபிறகு அந்த நிமிடம் நிம்மதியாக உணர்ந்தாள்.
தான் எவ்வளவு அற்ப சந்தோஷி என்று இப்போ புரிகிறது.
“மாப்பிள்ளை அப்படி சொன்னதற்கு நீ என்ன பதில் சோன்னாய்?” தாயின் குரலில் பதட்டமும், கவலையும் வெளிப்பட்டன.
“நான் எதைச் சொல்லவும் அவகாசமே தரவில்லை. அந்த ஒரு வார்த்தையைச் சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டார். மூன்று நாட்களுக்குள் அந்த வேலை முடிந்துவிட வேண்டுமாம்.”
“அவ்வளவு பிடிவாதம் பிடித்த மனுஷனா? சாமிநாதன் மாமாவை கூப்பிட்டு கேட்போம். அவர்தானே அண்ணன் மகன் என்று இந்த வரனை கொண்டு வந்தது? அவனுடைய அப்பா அம்மாவையும் கூப்பிட்டு கேட்போம்.”
“பாவம். அவர் மட்டும் என்ன செய்வார்? கூட வேலை பார்க்கிறவனுக்கு நல்லது செய்வோம் என்று அப்பாவிடம் வரனைப் பற்றி சொல்லியிருக்கிறார். நெருங்கி பழகினால்தானே ஒருத்தருடைய குணநலனை புரிந்துகொள்ள முடியும்?”
“அப்போ அப்பாவையே அவர்களிடம் போய் பேச சொல்வோம்.”
சுநீதா உயிரற்ற முறுவலை உதிர்த்தாள். “சிறு பிள்ளை என்றால் அதட்டியோ மிரட்டியோ வழிக்குக் கொண்டு வரமுடியும். தோளுக்கு மேல் வளர்ந்துவிட்ட மகனை அவர்களால் என்ன சொல்ல முடியும்? அப்படியே அவர்கள் சொன்னாலும் அவர் கேட்டுக் கொள்வார் என்ற நம்பிக்கை என்ன இருக்கு?”
“அப்படி என்றால் என்ன செய்யப் போகிறாய்? அபார்ஷன்தானா?” எரிச்சலுடன் கேட்டாள் அந்த தாய்.
ஒரு நிமிடம் அங்கே மெளனம் நிலவியது. சுநீதாவின் கழுத்து நரம்புகள் புடைத்துக்கொண்டன. இதயம் வேகமாக துடிக்கத் தொடங்கியது.”
“இல்லை. நான் அபார்ஷன் செய்துகொள்ள மாட்டேன்.”

*************************************************************************************
மூன்றாவது நாள் காலை நேரம். தூங்கி எழுந்தது முதல் ரவீந்திரனிடமிருந்துபோன் வரும் என்று சுநீதா எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள். தான் ஒரு முடிவுக்கு வந்துவிட்டது உண்மைதான் என்றாலும், அதற்கு அவனுடைய ரியாக்ஷன் எப்படியிருக்குமோ என்று பயமாக இருந்தது. எதையும் அவ்வளவு சுலபமாக ஏற்றுக்கொள்ளும் சுபாவம் இல்லை அவனுக்கு. அவன் ஒப்புக்கொண்டாலும், ஒப்புக்கொள்ளாவிட்டாலும் தன்னால் சிசுக்கொலையைச் செய்யமுடியாது. ரொம்ப மிஞ்சிப்போனால் குழந்தை பிறந்த பிறகு அமெரிக்காவுக்கு போய்க் கொள்ளலாம். அவ்வளவுதானே தவிர வயிற்றில் உருவாகியிருக்கும் கருவை தன் கையாலேயே சிதைந்து போக விடமாட்டாள்.
காலை முதல் அவள் மனம் ஒரு நிலையில் இருக்கவில்லை. சரியாக பதினோருமணிக்கு போன் மணி ஒலித்தது. விரல்கள் நடுங்க போனை எடுத்தாள். “ஹலோ!”
“சுநீதா! நான்தான் ரவீந்திரன். உடம்புக்கு ஒன்றுமில்லையே? எப்போ வந்தாய் ஆஸ்பத்திரியிலிருந்து?”
“நீங்க எப்படி இருக்கீங்க?”
“ஐ யாம் ·பைன் சுநீதா! ஆஸ்பத்திரியில் எந்த பிரச்னையும் வரவில்லையே?”
“நான் ஆஸ்பத்திரிக்கு போகவில்லை.” இதயத்தை திடப்படுத்திக் கொண்டு சொன்னாள்.
“ஏன் போகவில்லை?”
“அபார்ஷன் செய்துகொள்வதில் எனக்கு விருப்பம் இல்லை.”
“வ்வாட்!உனக்கு விருப்பம் இல்லையா? நான் அத்தனை சொன்ன பிறகும் நீ ஆஸ்பத்திரிக்கு போகவில்லை என்றால் நான் சொன்னது உனக்குப் புரியவில்லையா?” அவன் குரலில் மென்மை காணாமல் போய்க்கொண்டிருந்தது.
“அதான் சொன்னேனே? எனக்கு விருப்பம் இல்லை. அதனால் அபாரஷன் செய்துகொள்ளவில்லை.” முணுமுணுப்பது போல் சொன்னாள்.
“நான்சென்ஸ்! உன் விருப்பத்தை யார் கேட்டார்கள்? நான் சொன்னேன். நீ செய்துகொள்ள வேண்டும். தட்ஸால்! வயிற்றில் சுமையுடன் நீ இங்கே வந்து செய்யப் போகும் வேலை என்ன இருக்க முடியும்? தண்டச்சோறு சாப்பிடுவதைத் தவிர.”
அவன் பேசிய தோரணைக்கு சுநீதாவால் பதில் சொல்லமுடியவில்லை.
“என்ன? பேச்சையே காணும்? கொஞ்சமாவது மூளையிருக்கா? கணவன் சொன்ன பேச்சை கேட்கணும் என்ற இங்கிதம் கூட இல்லையா? இவ்வளவு படித்து என்ன பிரயோஜனம்?”
சுநீதா பதில் சொல்லவில்லை.
“அப்படி என்றால் நீ குழந்தையைப் பெற்றுக்கொள்ளத்தான் இங்கே வரப்போகிறாயாக்கும். நான் இங்கே உன் வேலைக்காக செய்த முயற்சி எல்லாம் வியர்த்தம்தானா? நோ! நீ அபார்ஷன் செய்துகொண்டுதான் ஆகணும். மூன்று நாட்கள் கழித்து மறுபடியும் போன் செய்கிறேன். அதற்குள் காரியத்தை முடித்திருக்கவில்லை என்றால் மரியாதையாக இருக்காது. நான் என்ன செய்வேனோ எனக்கே தெரியாது.”
“உங்களுக்கு தெரியாமலேயே இந்த காரியத்தை செய்தீங்களா?”
“நாம் சேர்ந்து இருந்தது ரொம்ப மிஞ்சிப் போனால் பத்துநாட்கள். அதுவும் ஹனிமூன் என்பதால் ஜாலியாக இருந்தோம். இந்த பத்து நாட்களுக்குள் நீ இப்படி செய்வாய் என்று நான் கனவு கண்டேனா என்ன?” சீரியஸாக ஒலித்தது அவன் குரல்.
“அதற்குக் காரணம் யாரு? நீங்களா இல்லை நானா?”
“ஓஹோ! இப்போ யார் காரணம் என்று முடிவு செய்யும் நிலைக்கு உயர்ந்துவிட்டாயாக்கும். நான் முன்னாடியே
உன்னிடம் சொன்னேன். நாம் அமெரிக்காவுக்குப் போகிறோம் என்றும், இருவரும் வேலை பார்க்கப் போகிறோம் என்றும், நான்கு வருடங்கள் எந்த பிக்குப் பிடுங்கலும் இல்லாமல் பணத்தை சேர்த்து வைத்துக்கொண்டு இந்தியாவுக்கு திரும்புவோம் என்றும், அப்பாவுக்கு வயதாகிவிட்டதால் சொத்து விவகாரங்களை நாம்தான் பார்த்துக்கொள்ளணும் என்றும்……. இதை விட விளக்கமாக சொல்லணுமா?”
“அதாவது இதில் தவறு முழுவதும் என்னுடையதுதான் என்று சொல்றீங்களா?” இதயத்தின் ஆழத்திலிருந்து துக்கம் பொங்கி வந்தது சுநீதாவுக்கு. ஆண்கள் எந்த விஷயத்தையும் தங்களுக்கு சாதகமாக திருப்பிக்கொள்ளும் திறமை படைத்தவர்கள்.
“சுநீதா! இப்போ நான் அந்த வார்த்தையைச் சொன்னேனா? தவறு யாருடையது என் பேச்சை எடுத்தேனா? எதிர்பாராமல் நடந்துவிட்டது. தெரியாமல் ஒருதவறு நடந்துவிட்டால் அதை சரி செய்யணும் என்றேன். உன்னை சரிப்படுத்தச் சொன்னேன். இவ்வளவு சின்ன விஷயத்தில் கூட கணவனின் பேச்சை கேட்காவிட்டால் எப்படி?இன்னும் நாம் எத்தனையோ வருடங்கள் சேர்ந்து வாழணும். நம்மால் வாழ முடியும் என்று நீ நினைக்கிறாயா?”
“இருவரும் பரஸ்பரம் எதிராளியின் பேச்சுக்கு மதிப்பு கொடுத்தால் கட்டாயம் சந்தோஷமாக வாழ முடியும்.”
“அதாவது மனைவின் பேச்சை கணவன் கேட்டுத்தான் ஆக வேண்டும் என்பது உன்னுடைய உத்தேசமா?”
“இருவரும் சமம் என்ற விஷயத்தை உணரவேண்டும் என்று சொல்கிறேன். அவ்வளவுதான்.”
“வாயை மூடு! நான் சொன்னது போல் உடனே ஆஸ்பத்திருக்குக் கிளம்பு. இன்னொரு வார்த்தை சொன்னாய் என்றால் பல்லைத் தட்டி கையில் கொடுப்பேன்.” பெரிய சத்தத்துடன் மறுமுனையில் போன் வைக்கபட்டுவிட்டது.
இதுபோன்ற ஆசாமிக்கா அப்பா ஒரு லட்சம் வரதட்சிணை கொடுத்து தன்னை ஒப்படைத்து? சுநீதாவும் ரிசீவரை வேகமாக வைத்தாள். செத்தாலும் சரி, தான் அந்த காரியத்தை செய்யமாட்டாள்.
இரவு எட்டு மணி. உணவு மேஜை அருகில் சாப்பிட்டுக்கொண்டு இருந்த போது “டாடீ! நாம் ஒரு தடவை எங்க மாமனார் வீட்டுக்கு போய்வரணும். உங்களுக்கு எப்போ வசதிப் படுமோ சொல்லுங்கள்” என்றாள் சுநீதா.
ராஜாராமனுக்கு மூன்று நாட்க்கு மன்பு மாப்பிள்ளையிடமிருந்து போன் வந்த விஷயத்தை மனைவி தெரிவித்திருந்தாள். அதனால் புகுந்த வீட்டுக்கு போகணும் என்று மகள் சொன்னதும், எதற்காக என்று அவருக்குப் புரிந்துவிட்டது.மனைவி அந்த விஷயத்தைச் சொன்னபோது அவர் ரொம்ப சாதாரணமாக எடுத்துக்கொண்டார். “காலம் எப்படி மாறிக்கொண்டிருக்கிறது தெரியுமா? இதற்கு முன் சீமைக்கு போவது என்றாலே ரொம்ப பெரிய சமாசாரம். இப்போ படித்தவன் படிக்காதவன் என்று பாகுபாடு இல்லாமல் யார் வேண்டுமானாலும், எப்போ நினைத்தாலும் போய் விடலாம், நாம் டில்லிக்குப் போவது போல். மனிதர்களின் பழக்கவழக்க்கள், எண்ணங்கள் எல்லாமே மாறிக்கொண்டு இருக்கும் இந்த காலத்தில் நீயும் நானும் என்ன செய்ய முடியும்? உனக்குத் தெரிந்த டாக்டர் இருக்கிறாள் இல்லையா? அழைத்துப்போய் காரியத்தை முடித்துவிடு. மாப்பிள்ளைக்குக் கோபம் வந்தால் பின்னால் பிரச்னை வரும்” என்றார்.
“கருவைக் கலைப்பதில் அவளுக்கு விருப்பம் இல்லை.”
“அப்போ கணவனிடம் பேசி ஒரு முடிவுக்கு வரச்சொல்லு. குடும்ப வாழ்க்கையின் நல்லது கெட்டதை அவள்தான் பார்த்துக்கொள்ளணும்” என்று சொல்லிவிட்டு அந்த பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
இப்போ மகள் சொன்னதைக் கேட்டு நிமிர்ந்து பார்த்தா¡ர். “சுநீதா! அவர்களுடன் பேசுவது அவ்வளவு அவசியமா? உனக்கு இவ்வவு பிடிவாதம் ஏன்? மாப்பிள்ளை சொன்னது போல் கேட்டால் விஷயம் முடிந்துவடுமே?” மகளின் குடித்தனம் எந்த பிரச்னையும் இல்லாமல் நல்ல படியாக தொடரவேண்டும் என்பது அவருடைய எண்ணம்.
அப்பா சொன்னதைக் கேட்டதும் சுநீதாவுக்கு வாயிலிருந்து வார்த்தை வெளிவரவில்லை.
கணவன் தன்னிடம் பேசியதை அந்த தாய் மகளிடம் தெரிவிக்காததால், தந்தை சொன்ன வார்த்தைகள் சுநீதாவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தின. ஆண்கள் எல்லோருமே இப்படித்தானா?
“என் விருப்பு வெறுப்புகளுக்கு மதிப்பு இல்லையா டாடீ?” பேதைப் பெண்போல் கேட்டாள்.
“கணவனின் இஷ்டம்தான் மனைவியின் விருப்பமாக இருக்கவேண்டும். நம் குடும்பத்தில் பிரச்னைகள் வந்து நீ பார்த்து இருக்கிறாயா? நான் சொன்னது உங்க அம்மாவுக்கு வேதவாக்கு.”
“பெண்களுக்கு சுதந்திரம் இருக்கக்கூடாது என்பதுதான் உங்கள் எண்ணமா டாடீ?”
ராஜாராமன் சிரித்தார். “அதெல்லாம் புத்தகங்களில் படிப்பதற்கு நன்றாக இருக்கும். நாம சுகமாக வாழ்வதற்கு எந்த வழியைக் கடைபிடிக்கணும் என்று நாம்தான் முடிவு செய்யவேண்டும்.”
“கணவன் மனைவி ஒரே கருத்தாக இருந்தால் அந்த குடும்பம் சுவர்க்கம்தான்.” சுநீதா சொன்னாள்.
“நான் சொல்ல வந்ததும் அதுதான். கருத்து வேற்றுமைகள் வந்தால் ஆண் சொன்னபடி நடந்துகொள்வதுதான் நல்லது. பிறகு பிரச்னையே இருக்காது.”
சுநீதாவின் இதயத்தில் ஈட்டியால் குத்தியதுபோல் வலித்தது. முகம் வாடிவிட்டது. “பரவாயில்லை டாடீ! கூட வருவதில் உங்களுக்கு விருப்பம் இல்லை என்றால் தனியாகவே போய் வருகிறேன். அவர்கள் புது மனிதர்கள்தானே தவிர வேற்று மனிதர்கள் இல்லையே? என்னுடைய மாமனார் மாமியார்தானே?”
மகளுக்குக் கோபம் வந்துவட்டது ராஜாராமன் புரிந்துகொண்டார். “அது இல்லைம்மா”என்று சமாதானப்படுத்த முயன்றார்.
“இனி அந்த விஷயத்தை விட்டு விடுவோம் டாடீ! உங்க அபிப்பிராயம் தெரிந்துகொண்ட பிறகு இன்னும் அதைப் பற்றி பேசுவதில் அர்த்தம் இல்லை.” சுநீதா பாதி சாப்பாட்டிலேயே எழுந்துகொண்டுவிட்டாள்.
*************************************************************************************
“வாம்மா! வீட்டில் எல்லோரும் நலம்தானே. ஒரே ஊரில் இருக்கிறோம் என்ற பெயர்தானே தவிர நீங்க ஒரு இடம் நாங்க ஒரு இடம். நேற்றிரவு உங்க மாமனார் சொல்லிக்கொண்டிருந்தார், மருமகளை அழைத்து வந்து அமெரிக்கா போகும் வரையில் இங்கேயே வைத்துக்கொள்வோம் என்று. நாளைக்கோ அடுத்தநாளோ உங்க வீட்டுக்கு வந்து உங்க அம்மா அப்பாவுடன் பேசுவதாக இருக்கிறோம்” என்றாள் மாமியார்.
சுநீதா முறுவலித்துவிட்டு பேசாமல் இருந்தாள். ஒரு நிமிடம் கழித்து மெதுவாக கேட்டாள். “அவரிடமிருந்து உங்களுக்கு போன் ஏதாவது வந்ததா?”
“இல்லையே? ஏதாவது விசேஷம் இருக்கா? உனக்கு ஆர்டர்ஸ் வரப்போகிறதா என்ன?” என்றார் மாமனார்.
மாமனாரிடம் விஷயத்தைச் சொல்வதற்கு சுநீதாவுக்குக் கூச்சமாக இருந்தது.
மாமியார் எழுந்துகொண்டே ” உட்கார்ந்துகொள் சுநீதா! குடிக்க தண்ணீர் கொண்டுவருகிறேன். எப்படி வந்தாய்? ஆட்டோவில்தானே?” என்றாள்.
“நீங்க உட்காருங்கள் அத்தை! நீங்க கொண்டு வருவானேன்? நானே போய் எடுத்துக் கொள்கிறேன். டீ கலக்கட்டுமா?மூன்று பேரும் பேசிக்கொண்டே குடிக்கலாம்” என்று உரிமையுடன் சமையலறைக்குள் சென்றாள்.
பின்னாலேயே வந்த மாமியாருக்கு மணையை போட்டு உட்காரவைத்து, தண்ணீரை மோண்டு குடித்தாள். பிறகு ஸ்டவ் மீது பாலை சிம்மில் வைத்துவிட்டு மாமியாருக்கு பக்கத்தில் அமர்ந்துகொண்டாள். சுற்றிவளைக்காமல் நேராக விஷயத்தை சொல்லிவிட்டாள். பால் காய்ந்திருக்கும் என்று தோன்றியதும் எழுந்துகொண்டாள்.
“இதுதான் விஷயம். அவருடைய அபிப்பிராயம் அது. என்னுடைய அபிப்பிராயம் இது. நீங்களும், மாமாவும் என்ன சொல்லப் போறீங்க என்று தெரிந்துகொள்ளத்தான் வந்தேன். அது போகட்டும். சமையல் முடிந்துவிட்டதா? இல்லை மூன்று பேருக்கும் சேர்த்து சமைக்கட்டுமா?” என்றாள் டீயை கலந்துகொண்டே.
மருமகள் சொன்னதைக் கேட்டதும் அந்தம்மாளுக்கு வாய் அடைத்துவிட்டது போல் இருந்தது. ஒரே ஒரு மகன். மகனை அமெரிக்காவுக்கு போக வேண்டாம் என்றுதான் சொன்னார்கள். ‘மூன்று தலைமுறைக்கு வேண்டிய சொத்து இருக்கும் போது அமெரிக்காவுக்கு போய் வேறு சம்பாதிக்கவேண்டுமா?’ என்று சொன்னபோது மகன் காதில் போட்டுக் கொள்ளவில்லை.
“நீங்க செலவழித்தது போல் பார்த்துப் பார்த்து செலவழித்தால் இனி வாழ்ந்தார்போல்தான். எனக்கு மனைவி குழந்தை என்று வந்துவிட்டால் நீங்க சேர்த்து வைத்த சொத்து எத்தனை நாட்களுக்கு வரும்? எந்த நோய்நொடி இல்லாமல் நீங்க போய் சேர்ந்தால் எங்களுக்கு ஏதோ சில லட்சங்கள் மிச்சப் படலாம். அப்படி இல்லாமல் கடைசி காலத்தில் உங்களை ஆஸ்பத்திரியில் சேர்க்க வேண்டியிருந்தால் எங்கள் கைக்கு திருவோடுதான் மிஞ்சும். என் விஷயத்தில் நீங்கள் தலையிடவேண்டாம்” என்று முகத்தில் அடித்தார்போல் சொல்லிவிட்டு அமெரிக்காவுக்குக் கிளம்பிப் போய்விட்டான்.
“அவன் ரொம்ப பிடிவாதக்காரன். யாருடைய பேச்சையும் கேட்ப்பான் என்று எனக்கு நம்பிக்கை இல்லை. தந்தையாகப் போகும் இந்த நேரத்தில் சந்தோஷப்படுவதை விட்டுவிட்டு கருவை கலைக்க சொல்கிறானே? கொஞ்சமாவது மூளையிருந்துதான் பேசுகிறானா? மிஞ்சிப்போனால் பிரசவம் ஆன பிறகு உன்னையும், குழந்தையையும் அழைத்துக்கொண்டு போகட்டுமே. அதையாவது சொல்லிப் பார்த்தாயா?” என்றாளே தவிர மகனை கண்டிப்பதாக மாமியார் சொல்லவில்லை.
மாமியார் பேசியதிலிருந்து அவ்ர்களுடைய இயலாமையைப் புரிந்துகொண்டாள் சுநீதா. மாலை வரையிலும் இருந்துவிட்டு வீட்டுக்குக் கிளம்பினாள். “போய் வருகிறேன். அவர் உங்களுக்கு போன் செய்தால் எடுத்துச் சொல்லிப் பாருங்கள். உங்களுயை அபிபிபிராயத்தை, என்னுடைய எண்ணத்தை விளக்கிச் சொல்லுங்கள். மாட்டேன் என்று சொன்னால் என்ன செய்வது என்று அப்போ முடிவு செய்து கொள்ளலாம்” எனறாள் சுநீதா.
“இங்கே வந்து சில நாட்கள் இரும்மா” என்றார் மாமனார்.
“பார்ப்போம். நான் உடனே அமெரிக்காவுக்கு போக முடியாமல் இருக்கலாம் இல்லையா. முடிந்தபோது வருகிறேன்” என்றாள் தன் மனதில் இருப்பதை அவர்களுக்கு மற்றொருமுறை நினைவுப் படுத்துவதுபோல்.
*************************************************************************************

ஐந்து நாட்கள் கழித்து ரவீந்திரன் போன் செய்தான். சுநீதாவின் குரல் கேட்டதும் “இப்பொழுதாவது காரியத்தை முடித்தாயா இல்லையா?” என்றான் எரிச்சலுடன்.
“எனக்கு உடம்பு சரியாக இல்லை.”
“என்ன கேடு வந்தது?”
“காலை எழுந்தது முதல் தலைச்சுற்றலும், வாந்தியும்.”
“சரிதான். நான் சொன்னபடி செய்தால் இந்த பிரச்னைகளே இருக்காது இல்லையா? உனக்கு அப்பாயிண்ட்மெண்ட ஆர்டர்ஸ் தயாராகிக் கொண்டிருக்கிறது.”
“என்னால் உடனே அங்கே வர முடியாமல் போகலாம்.”
“நீ வருவதாக சொல்லும்போது வேலை வாய்ப்பை தங்கத்தட்டில் வைத்து நீட்டுவார்கள் இன்று எண்ணமா உனக்கு?”
ஏளனமாக கேட்டான்.
“என்னை புரிந்துகொள்ள மாட்டீங்களா?”
“நீ என்னை புரிந்துகொண்டுதான் பேசுகிறாயா?” கோபமாக கேட்டான்.
“தயவு செய்து நான் சொல்வதை கொஞ்சம் பொறுமையுடன் கேளுங்களேன்.”
“கேட்பதற்காகத்தானே இவ்வளவு பணம் செலவழித்து போன் செய்கிறேன்.”
“நான் அபார்ஷன் செய்துகொள்ளமாட்டேன்.”
“இன்னொரு தடவை அந்த வார்த்தையைச் சொன்னால் செருப்பால் அடிப்பேன்.”
“என்னை செருப்பால் அடிக்கணும் என்றால் நிறைய டாலர் செலவழிக்க வேண்டியிருக்கும்.”
“பழித்துக் காட்டுகிறாயா? வாயை மூடிக்கொண்டு சொன்னதை செய். ஏர்டிக்கெட் வாங்கி வேண்டிய பேப்பர்களுடன் அனுப்பிவைக்கிறேன். சென்னைக்கு போய் விசா வாங்கிக்கொண்டு இங்கே வந்து சேரு. என் ஆத்திரத்தைக் கிளப்பாதே.”
“நான் ஒன்றும் கிளப்பவில்லை. நீங்கதான் வாய்க்கு வந்தபடி பேசுறீங்க. அபார்ஷன் பண்ணும் போது விபரீதமாக ஏதாவது நடந்துவிட்டால் என்ன செய்வீங்க?” வேண்டுமென்றே அவனை தாக்குவது போல் அம்பு வீசினாள்.
“பட்டிக்காட்டு மருத்துவச்சியிடம் போனால் வேண்டாததுதான் ஆகும். நல்ல டாக்டராக பார்த்து வேலையை முடி.
கொஞ்சம் காசு செலவழித்தால் உங்க அப்பாவின் சொத்து ஒன்றும் குறைந்து போய்விடாது.”
“பின்னால் நமக்குக் குழந்தையே பிறக்காமல் போனால்?”
“அப்படி எதுவும் நடக்காது.”
“இந்த ஒரு தடவைக்கு சம்மதம் கொடுங்கள். அடுத்தமுறை இப்படி நடக்காமல் ஜாக்கிரதையாக இருப்போம்.”
“நோ …நோ.”
“போகட்டும். குழந்தை பிறந்த பிறகு எங்க அம்மாவிடமோ உங்க அம்மாவிடமோ விட்டுவிட்டு வருகிறேன், அங்கே நமக்கு இடைஞ்சல் என்று நீங்க நினைத்தால்”
“என் குழந்தை அநாதையாக இன்னொருத்தரிடம் வளருவதில் எனக்கு விருப்பம் இல்லை.” அதைவிட மனைவி தான் சொன்னதை கேட்கவில்லை என்ற எரிச்சல் இருந்தது அவனுக்கு.
“குழந்தை வயிற்றில் வளரும் போதே அழிப்பது மட்டும் உங்களுக்கு விருப்பமா?” பெரிய குரலில் கத்தினாள். அந்த குரலில் கோபம், ஆத்திரம், துக்கம் எல்லாம் கலந்திருந்தன. “நோ! நான் அந்த காரியத்தை செய்ய மாட்டேன்.”
“இதுதான் உன்னுடைய முடிவா?”
“ஆமாம்.” போனை வேகமாக வைத்தாள். கட்டில் மீது குப்புறப்படுத்தபடி கதறத் தொடங்கினாள்.
திருமணம் முடிந்ததும் எத்தனை கனவுகளைக் கண்டாள்? சுவர்க்கத்தில் காலடி எடுத்து வைக்கப்போவதாக நினைத்து எப்படியெல்லாம் பூரித்துப்போனாள்? இவ்வளவு சீக்கிரத்தில் இப்படி ஒரு பிரச்னையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று நினைக்கவே இல்லை. தான் எடுத்த முடிவு சரியானதுதானா?
“நோ! நோ! இதை என்னால் சகித்துக் கொள்ள முடியாது. எனக்கு உடன்பாடு இல்லை.” கையிலிருந்த பேப்பரை டீபாய் மீது வீசிஎரிந்தாள். கணவன் சொன்னபடி கேட்டுத்தான் ஆகவேண்டுமா? தனக்கு என்று தனித்தன்மை எதுவும் இல்லையா? அவன் சொன்து நல்ல விஷயமாக இருந்தால் கட்டாயமாக கேட்டிருப்பாள். ஆனால் இது என்ன அராஜகம்? கணவன் சொன்னதற்குக் கீழ்படிந்தாலும் அபார்ஷன் சமயத்தில் ஏதாவது நடந்து உடல்நலம் பாதிக்கப்பட்டால் என்ன செய்வது?
தன்னால் வேலைக்கு போய் பணம் சம்பதிக்க முடியாமல் போய்விட்டால்?
அது போகட்டும். நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு அவனுடைய பணதாகம் தீர்ந்துவிடும் என்ற நம்பிக்கைதான் என்ன?
நமக்குக் குழந்தைகளே வேண்டாம் என்று சொன்னால்? குழந்தைகளை வளர்த்து ஆளாக்குவது தண்டச்செலவு என்று
நினைத்தால்? பெற்ற தாய்தந்தையின் பேச்சையே கேட்காதவன் நேற்று வந்த மனைவின் பேச்சுக்கு மதிப்பு கொடுப்பான் என்று என்ன நிச்சயம்?
மதிய உணவு சாப்பிடும் போது சுநீதா தாயிடம் சொன்னாள். “அம்மா! நான் எம்.சி.ஏ.வில் சேரலாம்னு இருக்கேன்.”
“என்ன ஆச்சு? அமெரிக்காவுக்கு போகப் போவதில்லையா?” தாய் கேட்டாள்.
“வயிற்றில் சுமையோடு இப்போ போனாலும், கையில் குழந்தையுடன் பத்து மாதங்களுக்கு பிறகு போனாலும் என் வீட்டுக்காரர் என்னை சுட்டுத் தள்ளிவிடுவார். அதனால் அமெரிக்காவுக்கு போக வேண்டாம்னு முடிவு செய்துவிட்டேன். நீங்க லட்ச ரூபாய் கொடுத்து வாங்கி வந்த அமெரிக்கா மாப்பிள்ளையின் பேச்சை கேட்காமல் அபார்ஷன் செய்துகொள்ளாமல் இருப்பது, பிறகு குழந்தையைப் பெற்றுக்கொள்வது இதெல்லாம் உங்களுக்கு விருப்பம் இல்லை என்றால் சொல்லிவடுங்கள். கையில் எப்படியும் ஒரு பி.ஜி. டிக்ரி சர்டி·பிக்கெட் இருக்கு. என் பசியை தீர்த்துக்கொள்ள ஏதாவது ஒரு வேலை கிடைக்காமல் போகாது. வேலை பார்த்துக்கொண்டே பிரைவேட்டாகவோ, மாலை கல்லூரியில் சேர்ந்தோ படித்துக்கொள்கிறேன். என் காரணமாக உங்களுக்கு பிரச்னையோ, மனஸ்தாபமோ வர வேண்டாம்.”
மகள் சொன்னதைக் கேட்டு தாய் கல்லாகச் சமைந்துவிட்டாள்.
*************************************************************************************
பதினைந்து நாட்கள் கழிந்து விட்டன. அன்று காலையில் சுநீதா யூனிவர்ஸிட்டீக்குப் போய் எம்.சி.ஏ. அப்ளிகேஷன் ·பாரம் வாங்கி வருவதற்காக புறப்பட்டபோது போன் வந்தது.
அதற்கு நான்கு நாட்கள் முன்புதான் ரவீந்திரன் வேலை செய்யும் கம்பெனியிலிருந்து அவளுக்கு வேலை தருவதாக ஆர்டர்ஸ் வந்தன. சுநீதா அநத கவரைப் பார்த்ததுமே அலமாரியில் ஒரு மூலையில் போட்டாள். போனை எடுத்த சுநீதா கணவனின் குரலை கேட்டதும் “சொல்லுங்கள்” என்றாள்.
“உன் பிடிவாதத்தினால் நான் எந்த முடிவுக்கு வரவேண்டியிருக்கிறதோ உனக்குத் தெரியுமா?” மிரட்டுவது போல் சொன்னான் ரவீந்திரன்.
“சொல்லுங்கள். எதையோ கற்பனை செய்துகொண்டு ஏன் மூளையை குழப்பிக்கொள்வதில் எனக்கு விருப்பம் இல்லை.”
“உனக்கு டைவோர்ஸ் கொடுப்பதாக முடிவு செய்து விட்டேன்.”
அவன் சொன்ன வார்த்தைகளுக்கு இதயத்தின் ஆழத்திலிருந்து துக்கம் பொங்கி வந்தாலும் இதழ்களை இறுக்கி கட்டுப் படுத்திய சுநீதா கலகலவென்று நகைத்தாள். “ரொம்ப வேடிக்கைத்தான். லட்ச ரூபாய் கொடுத்து உங்களை வாங்கியிருக்கிறேன். டைவோர்ஸ் கொடுக்கணும் என்றால் நான்தான் கொடுக்கணும். நீங்க தரமுடியாது.”
அந்த பதிலைக் கேட்டதும் ரவீந்திரனால் ஆவேசத்தை அடக்கிக்கொள்ள முடியவில்லை. “கேடுகெட்ட சிறுக்கி! என் வாழ்க்கையை நாசமாக்கியதோடு அல்லாமல் வாய்க்கிழிய பேசுகிறாயா?” ரோஷம் தாங்கமாட்டாமல் கத்திவிட்டான்.
மற்றொருமுறை சிரித்தாள். “நான் நாசமாக்கவில்லை. உங்களுடைய வாழ்க்கையை நீங்களே நாசமாக்கிக்கொண்டு என் வாழ்க்கையையும் நாசமாக்குறீங்க. சொல்ல வேண்டியது முடிந்து விட்டதா? இன்னும் பாக்கி ஏதாவது இருக்கா? வெளியில் கிளம்பிக்ககொண்டிருக்கிறேன்.”
“அவ்வளவு திமிர் பிடித்தவள் எங்க வீட்டுக்குப் போய் அழுவானேன்? எங்க அம்மா அப்பாவின் ரிகமென்டேஷனுக்காகவா?”
“காசு கொடுத்து வாங்கிய கணவனின் வீடு எனக்குச் சொந்தம் என்பதால் போனேன். அழுது ஆறுதல் தேடும் எண்ணத்தில் போகவில்லை. பெற்றவர்களாவது நல்லது கெட்டதை எடுத்துச் சொல்லி உங்களை சரியான வழிக்குக் கொண்டு வருவார்களோ என்ற எதிர்பார்ப்பில் போனேன். அது பொகட்டும். இனிமேல் என்னுடன் ஏதாவது பேசவேண்டும் என்றால் ஞாயிறு அன்று போன் செய்யுங்கள். அன்றுதான் எனக்கு தோதுபடும்.” என்று சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டாள். யூனிவர்ஸிட்டீக்கும் போகும் மூட் இருக்கவில்லை. கண்கள் குளமாக அப்படியே கட்டிலில் சரிந்தாள்.
நள்ளிரவு தாண்டிய பின்பும் தூக்கம் வரவில்லை. இந்த பிரச்னைக்கு தீர்வுதான் என்ன? கணவன் சொன்னது போல் அபார்ஷன் செய்துகொண்டு அமேரிக்காவுக்குப் போய் வேலையில் சேர்ந்து பணம் சம்பாதித்து அவர் மடியில் கொட்டுவதா? இல்லை எதிர்ப்பு தெரிவத்துவிட்டு ஆணோ பெண்ணோ ஒரு குழந்தையைப் பெற்றுக்கொண்டு கணவனால் கைவிடப்பட்டவளாக இந்தியாவிலேயே இருப்பதா? அவளுக்கு தலையைச் சுற்றிக்கொண்டு வந்தது. எப்படிப் பட்ட விஷவளையத்தில் மாட்டிக்கொண்டுவிட்டாள்? அவன் பேசுவதைப் பார்த்தால் டைவோர்ஸ் என்ற பெயரில் திருமண வாழ்க்கையைத் துண்டித்து விடுவதாக மிரட்டுகிறான். அப்படிச் செய்யக் கூடிய ஆள்தான்.
திடீரென்று அவளுக்கு ஒரு யோசனை வந்தது. திரும்பத் திரும்ப அதைப்பற்றி யோசித்துக்கொண்டே கண்களை மூடிக்கொண்டாள். அரைகுறை தூக்கத்திலேயே விடிந்து விட்டது. காலையில் எழுந்ததுமே புகுந்தவீட்டுக்குப் போன் செய்தாள். மாமனார்தான் எடுத்தார்.
“மாமா! நான்தான் சுநீதா என்றாள்.
“சொல்லும்மா.”
“நான் உங்களுடன் வந்து இருக்கலாம்னு நினைக்கிறேன்.”
“இந்த வயதில் எங்களுக்கு அதைவிட வேறு என்ன வேண்டும்? நீ இங்கே வருவது எங்களுக்கு ரொம்ப சந்தோஷம்.”
குடித்தனத்திற்கு வரவில்லை என்று காரணம் சொல்லி கணவனால் தன்னை டைவோர்ஸ் செய்ய முடியாது.
*************************************************************************************

இரண்டுநாட்கள் கழித்து நள்ளிரவில் போன் வந்த போது மாமணார் அழைத்தார். “ரவி உன்னிடம் பேசணுமாம்.”
சுநீதா விருப்பம் இல்லாமலேயே போனிடம் சென்றாள்.
“என்ன? இங்கே வந்து டேரா போட்டுவிட்டாயாமே? உங்க வீட்டில் உனக்கு சாப்பாடுக் கூட போட மாட்டேன்னு சொல்லி விட்டார்களா?” ரவீந்திரனின் குரல் ஏளனமாக ஒலித்தது.
“மகனால் கைவிடப்பட்ட வயதான தாய்தந்தையருக்கு மருமகள் என்ற முறையில் துணையிருப்போம் என்றுதான் இங்கே வந்தேன். எனக்குத் தெரியாமல்தான் கேட்கிறேன். நீங்க லட்ச ரூபாய் வரதட்சணையாக எங்க அப்பாவிடமிருந்து வாங்கிக்கொண்டது வாழ்நாள் முழுவதும் எனக்கு சாப்பாடு போடுவதற்காக இல்லையா?”
“வாயை மூடு! பீற்றல் லட்ச ரூபாய் கொடுத்துவிட்டான் உங்கப்பன்! இங்கே இருக்கும் என் நண்பர்கள் ஒவ்வொருத்தனும் ஐந்தாறு லட்சங்களுக்குக் குறைவாக வாங்கவில்லை. உன்னைப் போல் உன் மனமும் அழகாக இருக்கும்னு நம்பி ஏமாந்து போய்விட்டேன்.”
“என் மனசுக்கு என்ன வந்தது?”
“கணவன் சொன்ன பெச்சைக் கெட்காத மனைவிக்கு நரகம்தான் கிடைக்கும். அதை நினைவில் வைத்துக்கொள்.”
“சிசுக்கொலை செய்யச் சொல்லும் ஆண்களுக்கும் அதே கதிதான். இதை நீங்களும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.”
“ராட்சசீ! என் வாழ்க்கையில் நெருப்பை அள்ளிக் கொட்டியிருக்கிறாய். இதை என்னால் சகித்துக் கொள்ள முடியாது. டைவேர்ஸ் பேப்பர்களில் கையெழுத்துப் போட்டு அனுப்புகிறேன். நீயும் கையெழுத்துப் போடு. இருவருக்கும் சம்மதம் என்பதால் கோர்ட் சீக்கிரமாக டைவோர்ஸ் வழங்கிவிடும். எனக்கு விடுதலை கிடைத்துவிடும்.”
“கையெழுத்துப் போடவில்லை என்றால்?”
“நான் இங்கே இருந்துகொண்டே உன்னை அங்கே சுட்டு சாம்பலாக்க ஏற்பாடு செய்து விடுவன்.” படீரென்று போன் வைக்கபட்ட சத்தம்.
சுநீதாவும் போனை வேகமாக வைத்துவிட்டு பின்னால் திரும்பினாள். சற்று தொலைவில் மாமனார் மாமியார் நின்றிருந்தார்கள். அவர்களின் கண்கள் குளமாக காட்சி தந்தன.
அடுத்தநாள் மாலையில் தாய்தந்தை அவளைப் பார்க்க வந்தார்கள். சுநீதா புகுந்தவீட்டுக்கு வந்து மூன்று மாதங்களாகிவிட்டன. மகளைப் பார்த்ததுமே அந்த தாய் ஹோவென்று அழுதாள். ரவீந்திரனின் தாய் தந்தையை இந்த விஷயத்தில் குறை சொல்லமுடியவில்லை. இதைப்பற்றி பேச்சு வந்தாலே கண் கலங்கி நின்றார்கள்.
ரவீந்திரனிடமிருந்து டைவேர்ஸ் பேப்பர்கள் வந்து ஏற்கனவே பதினைந்து தாட்களாகிவிட்டன. சுநீதா அவற்றைப் பார்த்ததும் பழைய உடைகள் இருந்த அலமாரியில் வீசியெறிந்தாள். ரவீந்திரன் எத்தனே முறை போன் செய்த போதும் சுநீதா பேசவில்லை. மாமனாரிடம் முன் கூட்டியே சொல்லியிருந்தாள, போனில் தன்னைக் கூப்பிட்டால் தான் வீட்டில் இல்லை என்று சொல்லச் சொல்லி.
ஒருநாள் ரவீந்திரன் நள்ளிரவு பன்னிரெண்டுமணிக்கு போன் செய்தான். தந்தை எடுத்தார். “சுநீதாவைக் கூப்பிடுங்கள் டாடீ! இந்த நேரத்திலாவது வீட்டில் இருக்கிறாளா? இல்லை வெளியே ஊர் சுற்ற போய் விட்டாளா?”
வேறு வழியில்லாமல் மாமனார் வந்து சுநீதாவிடம் சொன்னார். சுநீதா தூக்கம் வராமல் கட்டிலின் மீது புரண்டபடி படுத்திருந்தாள். வேகமாக எழுந்து போன் அருகில் வந்தாள். “சொல்ல வந்ததை சீக்கிரமாக சொல்லி முடித்தால் நிம்மதியாக தூங்கப் போவேன்.”
“என்ன பேசுகிறோம் என்று புரிந்துதான் பேசுகிறாயா?”
“இன்னும் பைத்தியம் பிடிக்கவில்லை. பிடித்தாலும் செய்வதற்கு ஒன்றும் இல்லை.”
“பேப்பர்களை ஏன் இன்னும் அனுப்பவில்லை? நான் லாயருக்கு அனுப்பணும். அவரையே வந்து உன்னிடம் பேப்பர்களை வாங்கிக்கொள்ளச் சொல்லட்டுமா?”
“நான் கையேழுத்து போடப் போவதில்லை. உங்க லாயரிடமே கேட்டுக் கொள்ளுங்கள். என் சம்மதம் இல்லாவிட்டாலும் டைவோர்ஸ் வாங்கிக் கொள்வதற்கு நூறு வழிகளை சொல்லிக் கொடுப்பார். அவற்றில் ஏதோ ஒன்றை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். டைவோர்ஸ் கொடுப்பதற்கு முன் ஒரு விஷயம் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். எனக்கு ஜீவனாம்சம் கொடுத்தாகணும். அதோடு இங்கே இருக்கும் சொத்து எதுவும் நீங்க சம்பாதித்தது இல்லை. அதெல்லாம் எனக்குப் பிறக்கப் போகும் குழந்தைக்குத்தான் சேரும். இனி நீங்க என்ன செய்தாலும் சரி. சில நாள்தான் என்றாலும் மனைவியாக உங்களுடன் குடித்தனம் செய்தேன் இல்லையா? அதான் சொல்கிறேன். குட் லக்!”
“யூ பிட்ச்!”
“என்ன சொன்னீங்க? கணவனுடன் சில நாட்கள் படுக்கையைப் பகிர்ந்துகொண்ட குற்றத்திற்கு நான் பிட்ச் என்றால் உங்களைப் போன்ற ஆண்மகனை என்னவென்று சொல்வது? தாங்க்யூ வெரிமச்!” எரிச்சலுடன் போனை வைத்துவிட்டு தன்னுடைய அறைக்கு வந்து விட்டாள்.
அடுத்தநாள் அவளைப் பார்க்க தாய் மட்டும் வந்திருந்தாள். சம்பந்தியம்மாளை குசலம் விசாரித்துவிட்டு, மகள் மட்டும்
தனியாக இருக்கும் போது “மாப்பிள்ளை போன் செய்து பேசுகிறாரா?” என்று கேட்டாள்.
“பேசுகிறாரே குரலில் தேன் கலந்து பேசுகிறார்” என்றாள் சுநீதா.
“இந்த திமிரு அடங்கினால் தவிர உன் குடித்தனம் உருப்படப்போவதில்லை” என்றாள் தாய் கோபமாக.
“அவர் சொன்ன பேச்சுக்கு நான் டான்ஸ் செய்யாமல் இருப்பது திமிரா?”
“பின்னே?”
“பெற்ற தாய் தந்தையை விட நேற்று வந்த மாமனார் மாமியார் என்னைப் புரிந்துகொண்டிருக்கிறார்கள்.” வருத்தத்துடன்
சிரித்தாள் சுநீதா.
“உன் குடித்தனம் நாசமானால் அவர்களுக்கு என்ன கவலை? நீ இல்லாவிட்டால் வேறு ஒருத்தி மருமகளாக வருவாள்.”
“அம்மா! ஒரு விஷயம் சொல்லட்டுமா? நீயோ அப்பாவோ உங்க மாப்பிள்ளையைப் பற்றி பேச்சை எடுக்காமல் என்னைப் பார்க்க வருவதாக இருந்தால் மட்டும் இங்கே வாங்க. ஏற்கனவே பாதி செத்த நிலையில் இருக்கிறேன். முழுவதுமாக கொன்று விடாதீர்கள்.” இரண்டு கைகளையும் கூப்பி வேண்டுவது போல் சொன்னாள் சுநீதா.
அந்த தாயால் பதில் சொல்ல முடியவில்லை. ‘குடித்தனத்தைச் சரி செய்துகொள்ளாமல் பைத்தியம் போல் பேசுகிறாளே?’ என்று உள்ளூர நொன்துகொண்டாள்.
மாமனாருக்கு ஜுரம் வந்ததால் டாக்டரிடம் அழைத்துச் சென்றாள் சுநீதா. கிளினிக்கில் கூட்டம் அதிகமாக இருந்தது.
ஒருமணி நேரத்திற்கு மேல் காத்திருந்த பிறகுதான் டாக்டரைப் பார்க்க முடிந்தது.
வீட்டுக்கு வந்து சாப்பிடும் போது மணி பத்தாகிவிட்டது. எல்லாவற்றையும் ஒழித்துப் போட்டுவிட்டு படுத்துக் கொள்ளும் போது மணி பதினொன்று. கட்டிலில் படுத்தாளே தவிர இருப்பு கொள்ளவில்லை. அப்படியும் இப்படியும் புரண்டு
படுத்தாள். வயிற்றில் வலியாக இருப்பது போல உணர்ந்தாள். தாமதமாக சாப்பிட்டதால் இருக்கும் என்று சற்று நேரம் பொறுத்துக்கொண்டாள். வலி குறையாததோடு அதிகரித்ததும் மாமியாரை எழுப்பி விஷயத்தைச் சொன்னாள்.
மாமியார் பதட்டமடைந்து “வீட்டு வேலைகளை எல்லாம் ஒண்டி ஆளாக செய்கிறாய். வாயும் வயிருமாக இருப்பவள். கொஞ்சம் கவனமாக இரும்மா என்றால் கேட்க மாட்டேங்கிறாய். சூட்டு வலியாக இருக்கும். வெந்நீரில் நெய்யை போட்டுத் தருகிறேன்” என்று கையோடு கொண்டுவந்து கொடுத்தாள்.
“பிள்ளைப் பெறு முடுயும் வரையில் இது போன்ற சின்ன சின்ன உபாதைகள் வரத்தான் செய்யும். நீ ஓய்வு எடுத்துக் கொள்ளணும். என் பேச்சை கேள். சமையல்காரியை போட்டுக்கொள்வோம்.”
அத்தனை வேதனையிலும் சுநீதா முறுவலித்துவிட்டு பேசாமல் இருந்தாள். அரைமணி நேரம் போன பிறகும் வலி குறையவில்லை.
“எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து சர்க்கரைப் போட்டு ஜூஸ் தருகிறேன். உங்க அம்மாவுக்கும் போன் செய்கிறேன்.”
மாமியார் எழுந்துகொண்டாள். அந்தம்மாளுக்குக் கவலை வந்துவிட்டது.
“வேண்டாம் அத்தை! அனாவசியமாக அவர்களை பதட்டப்பட வைப்பானேன்? கொஞ்ச நேரத்தில் தானே சரியாகிவிடும்.”
“மாடி வீட்டு ஆண்டீயை எழுப்பட்டுமா? டாக்டரிடம் காட்டினால் தேவலை” என்று சொல்லிவிட்டு வெளியில் போய் மாடியில் வாடகைக்கு இருக்கும் ஆண்டீயை பெல் அடித்து கூப்பிட்டாள். அந்தம்மாவும் கீழே வந்து பார்த்ததும் நிலைமையைப் புரிந்துகொண்டு கணவனை எழுப்பி காரை எடுக்கச் செய்தாள்.
எல்லோரும் சேர்ந்த அருகில் இருந்த நர்ஸிங் ஹோமுக்குச் சென்றார்கள். கிளினிக் பக்கத்திலேயே டாக்டரின் வீடு. அவருடைய மனைவி கைனகாலஜிஸ்ட். டாக்டரம்மா வந்து சுநீதா படும் வேதனையைப் பார்த்தும் லேபர் ரூமுக்கு அழைத்துச் சென்றாள்.
எல்லோரும் பதட்டத்துடன் வெளியே பெஞ்சியில் காத்திருந்தார்கள்.
அரைமணி நேரம் கழித்து டாக்ரம்மா வெளியே வந்தாள். “சாரி! அபார்ஷன் ஆகிவிட்டது.”
*************************************************************************************
“நோ……” உரத்தக் குரலில் கத்தினாள் சுநீதா. அவள் தலைமுடி அவிந்து முதுகில் படர்ந்திருந்தது. மின்விசிறி சுற்றிக் கொண்டிருந்தாலும் உடல் முழுவதும் வியர்வையால் தொப்பலாக இருந்தது.
“இப்படி நடக்க நான் அனுமதிக்கமாட்டேன். ஐ வாண்ட் மை சைல்ட்!” ஆவேசத்தில் அவள் உடல் தள்ளாடியது.
டாக்டர் சுநீதாவின் தோளில் லேசாக தட்டிவிட்டு சிஸ்டரை அழைத்து தூக்கத்திற்கு ஊசி போடச் சொன்னாள். பிறகு
மாமியாரைப் பார்த்துவிட்டு “இந்தப் பெண்ணுக்கு வாழ்க்கையில் ஏதாவது பிரச்னையா?” என்று கேட்டாள்.
மாமியாரால் பதில் சொல்ல முடியவில்லை. என்னவென்று சொல்லுவாள்? டாக்டர் ஒரு நிமிடம் பார்த்துவிட்டு அங்கிருந்து போய்விட்டாள்.
“பாழாய்ப் போன குழந்தை! போனதே நல்லதாகிவிட்டது. அவள் குடித்தனமாவது நல்லபடியாக இருக்கும்.”
விடிந்ததுமே சுநீதாவின் மாமியார் அவளுடைய தாய்க்கு போன் செய்து விஷயத்தைச் சொன்னபோது அந்த அம்மாள் சொன்ன பதில் இது.
அந்த பதிலைக் கேட்டதும் சுநீதாவின் மாமியாரால் மேற்கொண்டு எதுவும் பேச முடியவில்லை. மயக்கம் தெளிந்த பிறகு மருமகள் என்ன ரகளை செய்வாளோ என்று பயமாக இருந்தது. ஏற்கனவே பலவீனமாக இருக்கிறாள். ஆவேசத்தில் ரகளை செய்தால் தன்னால் தனியாக சமாளிக்க முடியாது. “முதலில் நீங்க வாங்க” என்று சொல்லிவிட்டு நர்ஸிங்ஹோம் முகவரியைச் சொன்னாள். இந்த சமயத்தில் பெற்ற தாய் அருகில் இருப்பது நல்லது என்பது அந்த அம்மாளின் எண்ணம்.
காலை எட்டு மணியாகும் போது சுநீதாவுக்கு மயக்கம் தெளிந்தது. கண்களைத் திறந்து எதிரில் இருந்த தாயைப்
பார்த்ததும் ஹோவென்று கதறினாள். “அம்மா! நான் தோற்றுப் போய்விட்டேன். கடவுள் கூட எனக்கு துணை இருக்கவில்லை. இருந்தாலும் பரவாயில்லை” என்றாள். ஆவேசத்தில் அவள் மார்பு வேகமாக துடித்துக்கொண்டிருந்தது.
*************************************************************************************
சுநீதாவின் தாய் மகளை சில நாட்கள் தங்களுடன் வைத்துக் கொள்வதற்காக பிறந்தவீட்டுக்கு அழைத்து வந்தாள்.
ஐந்து நாட்கள் கழித்து சுநீதாவுக்கு ரவீந்திரனிடமிருந்து போன் வந்தது.
“தேடிப் போன மூலிகை காலில் தட்டுப்பட்டது போல் காரியம் தானாக நடந்துவிட்டது பார்த்தாயா? இப்போ நீயும் நானும் கணவன் மனைவி மட்டுமே இல்லை. பிடிவாதத்திலேயும் சரி சமம். உன் பிடிவாதத்தை நீயும் விடவில்லை. என் பிடிவாதத்தை நானும் தளர்த்தவில்லை. இந்த வாரம் எங்க டைரக்டரின் காலைப் பிடித்து உன்னுடைய வேலைக்கான ஆர்டர்ஸை மறுபடியும் அனுப்பி வைக்கிறேன். ஏர் டிக்கெட்டும் வந்து சேர்ந்துவிடும். உடனே வந்துவிடு. நான்தான் சொன்னேனே. தெரிந்து நான் தவறு செய்யமாட்டேன். எதிர்பாராமல் உன் விஷயத்தில் இரண்டுமுறை தவறு நடந்து விட்டது. சாரி கண்ணம்மா! மற்றொரு முறை அந்த தவறு நேர்ந்துவிடாமல் கவனமாக இருக்கும் பொறுப்பு என்னுடையது. இப்போ நான் ரொம்ப சந்தோஷமாக இருக்கிறேன். என் இதயம்கனிந்த வாழ்த்துக்களை ஏற்றுக்கொள்.”
சுநீதாவால் இரண்டு நிமிடங்கள் வரையில் பேசவே முடியவில்லை அவன் பேசிய தோரணைக்கு.
“சொல்லு சுநீதா! பதினைந்து நாட்கள் நன்றாக ஓய்வு எடுத்துக்கொள். சீக்கிரமாக நீ உடம்பு தேறி நம் எதிர்காலத்தை பணத்தால் மூழ்கடித்து விடணும் ஓ.கே.வா?”
சுநீதா வாயைத் திறந்தாள். “மனைவிக்கு அபார்ஷன் ஆனால் சந்தோஷப்பட்டுக்கொண்டு வாழ்த்துக்களை தெரிவிக்கும் ஆண்மகனை கணவனாக சகித்துக்கொள்ளும் சக்தி எனக்கு இல்லை. நீங்க அனுப்பிய டைவேர்ஸ் பேப்பர்களில் கையேழுத்து போட்டு அனுப்பி வைக்கிறேன். இதுதான் என் முடிவு.” மறுப்பேச்சு பேசுவதற்கு வாய்ப்பு தராமல் சுநீதா போனை வைத்துவிட்டாள்.


தெலுங்கு மூலம் பி.யெஸ்.நாராயணா
தமிழாக்கம் கெளரிகிருபானந்தன்
மின் அஞ்சல் tkgowri@gmail.com

Series Navigation